பனைமரச் சாலை (16)


திருவடிவம்

கர்ஜத்தை தாண்டி நவண்டே எனும் இடத்தில் நான்  இறுதியாக பனை மரங்களைப் பார்த்தது. அதன் பின்பு சுமார் 500 கி மீ அப்பாலே நான் அவைகளைப்   பார்த்தேன். பனை மரங்கள் வளருவதற்கு நல்ல வெப்ப பிரதேசம் தேவைப்படும். பூனே டெகு ரோடு பகுதிகளில் நான் பனை மரங்களைக் கண்டதில்லை. தலேகாவுன் , லோனா வாலா இவ்விடங்களிலும் பனை மரங்கள் இல்லை.அவ்விதமாகவே குளிர் மற்றும் வெப்பம் மிகுதியாக காணப்படுகிற  பகுதிகளில் அரிதாகவும்  ஆங்காங்கே பனை மரங்கள் வளருவதையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் மிகுதியான மரங்கள் என அகமதாபாத்திலோ பரோடாவிலோ சூரத்திலோ நான் பார்த்தது இல்லை. அப்படியே பெங்களூரு பகுதியில் பனை மரங்கள் கிடையாது. ஓசூர் செல்லும் வழியில் குறுகி நிற்கும் மரங்கள் அதற்கு அப்பால் தங்களால் வளர முடியாது எனபது போல ஒடுங்கி நிற்கும். ஆகவே தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ற இடங்களில் மட்டுமே அவைகள் திரளாக வளருகின்றன. தமிழகம் அவ்விதத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட இடம். குறிப்பிட்ட இடங்களிலேயே நாம் பனைகளை பெரும் பொருட்செலவின்றி பாதுகாக்க முடியுமாகையால், நம்முடைய ஊரிலுள்ள மரங்கள் அழியாமல் பாதுகாப்பது நம்முடைய கடமையாகிறது.

முதன் முதலாக பலநூறு மைல்களுக்கு அப்பால் தூரத்தில் பனைமரத்தை கண்டபோது என்னுடைய மனம் குளிர்ந்தது. தாயைக் கண்ட சேயைப்போல. சொந்த மண்ணிற்கு மீண்டு வந்த ஒரு உணர்வு எனக்குள் வந்தது. நான் முதன் முதலாக பார்த்தது ஒரே ஒரு பனை மரம் தான். ஆனால் எனக்கு மிக நன்றாக தெரியும், இனிமேல் பனை மரங்கள் தொடர்ந்து கண்ணில் படும் என்று. என்றாலும் நான் வண்டியை நிறுத்தினேன். அந்த மரம் எனக்கு அளித்த உவகை சொல்லி மாளாது.

மிகவும் உயர்ந்த கெம்பீரமான மரம். சாலையிலிருந்து சுமார் 100 மீட்டருக்கும் அதிக தூரத்தில் அந்த மரம்  நின்றுகொண்டிருந்தது. சுற்றுமுற்றும் அதிக மரங்கள் இல்லாதபடி வெட்ட வெளியாக இருந்தது. எஞ்சிய மரமா என தெரிய வில்லை, ஆனால் என்னை மிகவும் குதூகலிக்க வைத்தது அந்த மரம்.

பொதுவாக ஒத்தை பனைமரம் ஆகாது என ஒரு எண்ணம் உண்டு. அதற்கு காரணம் என்னவென்று சரியாக தெரியாவிட்டாலும் நாம் ஊகிக்கத்தக்க ஒரு காரணம் உண்டு. பனையில் ஆண் பெண் என இரண்டு வகைகள் உள்ளன. மூன்றாம் பாலினர் போல் இரண்டும் அல்லாத வகைமையும் உண்டு. அதை உம்மங்காளி பனை என குறிப்பிடுவர். உம்மங்காளி பனையிலிருந்து பெறப்படும் கள் சிறப்பு வாய்ந்தது.

பனை மரத்தை பத்திரகாளி எனவும் கள்ளை பத்திரகாளியின் பால் எனவும் குறிப்பிடுவதை அறிந்திருக்கிறேன். பனம் பால் என கருதப்படும் கள் அருந்தினால் கண்கள் சிவந்து காளியின் கண்களைப்போல் ஆகுமானபடியால் தயைப் போல பிள்ளை என கருதி இவ்வழக்கசொல் வந்திருக்கலாம். சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை பின்பற்றுவோர் தங்களை பத்திரகாளியின் பிள்ளைகள் என குறிப்பிடுவது வழக்கம்.

பனையுடன் காளியை ஒப்பிடுவது ஒரு ருசிகரமான கற்பனையாகவே எனக்குப்படுகிறது. விரிந்த கைகளை நீட்டி நிற்பது போன்றே அதன் ஓலைகள் நிற்கின்றன. கரிய உடல் உள்ளே மென்மையையும் வெளியே முரட்டுத்தனத்தையும் கொண்டிருக்கின்றன. சுவை மிகுந்த பதனீர் வழங்குவதோடு வெறியேற்றும் கள்ளையும் வழங்குவதால் மென்மையும் உக்கிரமும் ஒருங்கே கொண்ட ஒன்றாக திரண்டு நிற்கின்றது.

 "கூந்தல்"

மண்டைஓடு போல் தோற்றமளிக்கும் நுங்கு எடுக்கப்பட்ட “கூந்தல்”(http://sunshineforpangaea.blogspot.in/2014/02/friendly-nuts.html)

தனது கரமே கூரிய அளிவளால் செய்தது போன்ற கருக்கு மட்டை. எவரும் எளிதில் வெற்றிகொள்ள முடியாத ஆனால் தன் பிள்ளைகளுக்கு இரங்கும் தாயுள்ளம், என விரிவுபடுத்தும் அளவிற்கு விரிந்தெழும் தன்மை கொண்டது. தனது கால்களின் அடியில் தான் அனைத்து மரங்களும் எனும் அளவிற்கு உயர்ந்து நிற்பது போன்றவைகள் அடிப்படையாக ஒருவர் பொருத்திப் பார்க்க இயல்வதே. பனை மரம் அவ்விதமாக காளியின் திருவடிவமாக அதோடு ஈடுபடும் மக்களின் மனதில் நிலைகொண்டிருக்கிறாள்.

வங்காளத்திலிருந்து பனைமரச் சாலை வழியாக தென்னகத்திற்கு காளி படையெடுத்திருப்பாளா? இல்லை கருங்காளி அம்மன் வங்காளத்திற்குச் சென்றபோது சிவந்துவிட்டாளா? பனை சார்ந்த ஒரு தொன்மம் இருக்கும்போது அதை விரிவுபடுத்தவேண்டிய கடமை நமக்கு உண்டு. ஏனென்றால் உண்மையான பனை மரச்சாலை என்பது கிழக்கு கடற்கரையோரம் என்பது தான். மேற்கு வங்காளம், ஓரிஸ்ஸா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு என ஒரே வரிசையில் இடைவிடாது காணப்படும் பனைமரங்கள் இந்தியாவில் வேறெங்கும்  காண முடியாது. பனை சார்ந்த ஒரு  பண்பாட்டு பறிமாற்றம் இந்த பனை மரச் சாலையில் நடந்திருக்கும் அவைகளை மீட்டெடுத்து ஆவணப்படுத்தும் ஒரு தலைமுறை எழுந்து வரவேண்டும். அவை இந்திய ஒருமைப்பாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும்.

பனை மரங்கள் வளருகின்ற இடங்களை நாம் பார்த்தோமென்றால் அவைகள் வேலிகளிலும் ஆற்றோரங்களிலும் மற்றும் ஏரிக்கரையோரங்களிலும் வரிசையாக நிற்பதை காண முடியும். அவ்விதமாக நெறிப்படுத்தப்படாத இடங்களில் நாய் நரி போன்றவை பனம் பழத்தை உண்டுவிட்டு அவற்றை பரப்புவது வழக்கம். ஆகவே பனை மரங்கள் ஆங்காங்கே வளருவதை ஒருவர் கண்டுகொள்ளலாம்.

பனை மரத்தினைக் குறித்து குறிப்பிடத்தகுந்த ஆய்வு செய்த டி. ஏ. டேவிஸ் எனும் நாகர்கோவில்காரர் இவ்விதமாக கூறுகிறார். பனம் பழத்தில் ஒன்று இரண்டு மற்றும் முன்று கொட்டைகள் காணப்படும். ஒன்று என காணப்படும் விதை ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். இரண்டு விதைகள் காணப்பட்டால் அவைகள் ஒன்று ஆணும் மற்றொன்று பெண்ணும் என உறுதி கொள்ளலாம். மூன்று விதைகள் இருக்குமாயின் ஏதேனும் ஒன்று ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். இவ்விதமாக மனிதனைப்போன்றே ஒரு சமநிலையை பனை பேணிவருவது இறைவனின் படைப்பின் மேன்மையே.

முக்கண் விளைவு (உதவி: இணையம்)

முக்கண் விளைவு (உதவி: இணையம்)

இதை அவர் விவரிக்கும்போது. ஒரே “மூட்டிலிருந்து” அல்லது ஒரே அடிபாகத்திலிருந்து இரண்டு பனைமரங்கள் விரிந்து சென்றால் அவை ஒரு பனம்பழத்தில் உள்ள இரண்டு விதைகளைக் கொண்டது. அவைகள் ஒன்று ஆணும் பிறிதொன்று பெண்ணுமாக இருப்பதை கண்டுகொள்ளலாம். அவ்விதமாகவே முன்று பனைமரங்கள் ஒரு மூட்டிலிருந்து கிளைத்தெழுமாயின் அவற்றில் பால் வேறுபாடு கண்டிப்பாக காணப்படும்.

ஏனிப்படி என ஆராய்ந்து பார்க்கும்போது மகரந்த சேர்க்கை இல்லாமல் பெண் பனை பூத்து காய்க்காது. ஆகவே ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருக்கவேண்டும் என இயற்கை வகுத்த விதியாக இருக்கிறது.  ஆகவே தான் தனித்த மரங்கள் இணைவை விரும்பும் மனித மனங்களுக்கு ஒவ்வாதவைகளாக கானப்படுகின்றன போலும். “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்”.(தொடக்க நூல் 2:24)  எனும் கடவுளின் வாக்கை உறுதிசெய்வதுபோல் பனை மர வாழ்வும் இருப்பது ஆச்சரியமானது.

இருகண் விளைவு (உதவி: இணையம்)

இருகண் விளைவு (உதவி: இணையம்)

என்றாலும் தனித்து நிற்கின்ற பனை மரங்கள் சாமியாக எண்ணப்பட்டு வணங்கப்படுவதையும் பல்வேறு இடங்களில் நான் கண்டிருக்கிறேன். குறிப்பாக மதுரை காளவாசல் பகுதியில் நிற்கும் ஒற்றைப் பனையைக் குறிப்பிடலாம். எப்படி இந்த எண்னம் தோன்றியிருக்கும்? ஊர் எல்லைகளில் ஒரு மரம் தனித்து எந்த உதவியுமின்றி உயர்ந்து நிற்பது கடவுளுக்கு நிகரான ஒன்றாக கருதப்பட்டிருக்கலாம். எல்லைச் சாமியாகவும், காக்கும் கடவுளாகவும் பனை மரங்கள் பல்வேறு நாட்டார் கதைகளில் உலாவி வருகிறது.

எப்படியானாலும் பனை மரத்தை காக்கும் ஒரு கதையை நமது முன்னோர்கள் சொல்லி வைத்து போயிருக்கிறார்கள். அவற்றின் பயனை முழுவதுமாக அவர்கள் அனுபவித்ததாலும், அவற்றின் பயன்பாடு மிகவும் முக்கியமாக கருதப்படுவதாலும் பனை மரங்கள் அழியாமல் பாதுகாக்கும்படி அவர்கள் பல்வேறு வழிகளை கையாண்டிருக்கின்றனர் என்பதும் தெளிவாகின்றது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: