Archive for ஜூலை, 2016

பனைமரச் சாலை (44)

ஜூலை 23, 2016

நெருங்கும் உறவுகள்

நுங்கு சாப்பிட்ட இடம்

நுங்கு சாப்பிட்ட இடம்

நுங்கு சூட்டினால் உண்டாகும் பால்வேறு நோய்களுக்கு அருமருந்து. எனது பயணத்தின் ஆரம்பநாள் அன்று எனது கண்கள் எரிச்சலடைந்து இருக்கும்போது கர்ஜத்திலிருந்து நுங்கு வாங்கி கண்களில் விட்டதாலேயே தப்பித்தேன். கண்களில் விழுந்த தூசிகள் போன்றவற்றை எடுக்கவும் நுங்குநீரை கண்கணில் சொட்டு சொட்டாக ஊற்றுவார்கள்.

 

பதனீரில் போட்டு நுங்கை சாப்பிடுவது ஒரு வழக்கம். எனக்கு அவ்வைதமான ஒரு அனுபவம் இதுவரை வாய்க்கவில்லை. திருநெல்வேலியில் மாம்பழத்தை பதநீரில் பிசைந்து சாப்பிடுகிற வழக்கமும் உண்டு என்று கேள்விபட்டிருக்கிறேன்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும்  நுங்கில் சர்பத் ஊற்றி சாப்பிடுவது பிரபலாமானது. கொட்டாரம் முதல் வில்லுக்குறி வரை வழியெங்கும் நுங்கு விற்பவர்களை சாலையோரங்களில் பார்க்கலாம்.

மலைபோல் குவித்துப் போடப்பட்டிருக்கும் நுங்கு

மலைபோல் குவித்துப் போடப்பட்டிருக்கும் நுங்கு

 

சிறுவயது நுங்கு சாப்பிடும் அனுபவம் என்பது வேறானது. வீட்டிற்கு நுங்கு குலைகுலையாக வந்துவிடும். வெட்டி தந்த நுங்கில்  பெருவிரலை நகத்தை மெதுவாக நுழைத்து நுங்கின் மேல்பகுதியை கவனத்துடன் உடைக்கவேண்டும். இல்லாவிட்டால் நுங்கில் இருக்கும் சுவையான துய நீர் சிந்திவிடும், மேல்பகுதியை மெல்ல நீக்கிவிட்டால் அதனுள் நீர் தழும்பிக்கொண்டிருக்கும். அதில் வாயை அப்படியே வைத்து உறிஞ்சுவது தான் சிறந்த வழி. இல்லாவிட்டால் முழுமையாக நுங்கு நீரை சுவைக்க முடியாது உடலெங்கும் சிந்திவிடும். நுங்கு சாப்பிட்டு முடிக்கும் தருணமும் நாங்கள் அறிந்ததே. உள் நுழைத்து எடுக்கும் பெருவிரல் நகக்கண்ணில் தோல் உரிந்து வேதனை எடுக்க ஆரம்பிக்கும் அப்போது நுங்கு சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். “நகம் நோவாம நெங்கெடுக்க வந்திருக்கியான்” என்று உழைக்காமல் பலன் எதிர்னோக்குபவர்களை சொல்லுவார்கள்.

நுங்கு விற்பனையாளர்

நுங்கு விற்பனையாளர்

நுங்கு சாப்பிட்டபின்பு அதை சுற்றியிருக்கும் கூந்தல் வீணாகிவிடாது.  கால்நடை தீவனத்தில்  கூந்தலின் பங்கு என்ன என எனக்குத் தெரியாது ஆனால் சிறிது சிறிதாக வெட்டி இட்டால் கண்டிப்பாக கூந்தல் ஒரு சிறப்பான உணவாக மாடுகளுக்கு இருக்கும். ஆனால் கூந்தலின் சிறப்பம்சம் என்பது சிறுவர்களுக்கு அது விளையாட்டுப் பொருள் ஆவதுதான். ஒரு நுங்கில் ஒற்றைக் கம்பைக் கொடுத்து  அதிலிருந்து ஒற்றை சக்கர வண்டி செய்வார்கள், இரன்டு சக்கர வண்டி, மூன்று சக்கர வண்டி, என பல்வற்றை செய்வார்கள். இரண்டு சக்கர வண்டியே பிரபலமானது. ஒரு குச்சியில் இரண்டு பக்கமும் கூந்தலின் உட்புறங்களை நுழைத்து ஒரு கவட்டை கம்பியால் வண்டி ஓட்டி சிறுவர்கள் மகிழுவார்கள். இவ்விதமான வண்டிகள் இருசக்கர வாகனத்தின் வேகம் என்று சொன்னால், நான்கு சக்கரம் ஆறு சக்கரம் போன்றவை தம்பி தங்கைகளை இழுத்துச் செல்லும் கனரக வண்டிகளாக  தயாரிப்பார்கள். கோடை விடுமுறை நுங்கின் காலம் என்று சொன்னால் அது மிகையாகாது.

 

பிங்க் நிறத்தில் காணப்படும் நுங்கு

பிங்க் நிறத்தில் காணப்படும் நுங்கு

வெட்டிப்போட்ட கூந்தல்களின் மேல் விரித்த சாக்கிலிருந்து நான் எழுந்தேன். அவர்களிடம் விடைபெற்றபோது மீண்டும் ஒருமுறை என்னிடம் உணவருந்தச் சொன்னார்கள். நான் நன்றி கூறினேன். நுங்கு என்னை முழுவதும் நிறைத்திருந்தது. அவர்கள் அந்த குறுகிய நேரத்திற்குள் மிகவும் நெருங்கியவர்கள் ஆகிவிட்டார்கள்.  மற்ற வாடிக்கையாளர்களுக்கும் அவர்களுக்கும்  ஒரு தொலைவு இருந்ததை கண்கூடாக கண்டேன். பனை மரமே எங்களை இணைக்கும் பாலம் என எண்ணிக்கொண்டேன். அதன் பின்பு எனது பயணம் மிகவும் இனிதாக அமைந்தது.

என்னால் இயன்ற உதவி

என்னால் இயன்ற உதவி

நான் ஓங்கோலைத் தாண்டியபோது ஒரு காவலர் எனது வாகனத்தை நிறுத்தினார் அவர் டானும் என்னுடன் வருவதாக கூறினார். அவரை வண்டியில் ஏற்றிய பின்பு  பெட்ரோல் நிரப்பும்படி சென்றேன். சுமார் எழுபது கிமீ அவரை அழைத்துச் சென்றேன். அவரும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். நான் தங்குவதற்கு ஏற்ற இடம் எது என பார்த்தபொழுது இன்னும் எழுபது கிமீ தூரத்தில் கவாலிக்கு அருகில் எனக்கு தாபா இருக்கிறது என்று சொன்னார்கள்.  எப்படியோ இரண்டு மணிக்கு தாபா வந்துவிட்டேன். எனக்கு உணவளிக்க வந்த வாலிபன் என்னோடு நன்றாக பழகிவிட்டான். எனது மொபைலை சார்ஜில் போடும்படியாக அவனிடத்தில் கொடுத்தேன்.  நான்கு மணிக்கு என்னை கட்டாயம் எழுப்பிவிடு என்றும் கூறினேன். அதன்பின்பு எனக்கு அவன் அமைத்துத்தந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டேன்.  அந்த கொடும் வெயிலின் பின்மதிய வெம்மையையும் பொருட்படுத்தாது அனைத்தையும் மறந்து தூங்கினேன்.

 

தாபாவில் என்னைக் கவனித்துக்கொண்ட நல்ல உள்ளம்

தாபாவில் என்னைக் கவனித்துக்கொண்ட நல்ல உள்ளம்

என்னை அவன் எழுப்பியபோது கரத்தில் எனது மொபைலை வைத்துக்கொண்டு என்னை படமெடுத்துக்கொண்டிருந்தான். என்னோடு ஒரு செல்ஃபியும் எடுத்தான். துயில் எழுகின்ற நேரம் அவன் செய்கைகள் என்னை மிகவும் எளிதாக்கியது.

 

 

வருகின்ற வழியில் மீண்டும் ஒரு இடத்தில் கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். சென்னை நெருங்குகையில் நான் பார்த்த கடைசி கள் விற்பனை நிலையம். இங்கும் ஒரு பெண்மணி மட்டுமே இருந்தார். அங்கே நான் மீண்டும் பனைமரத்தில் ஏறும் ஏணியை வைத்திருப்பதைப் பார்த்தேன். பனைத் தொழிலாளி அங்கே இல்லை தனது பணிக்காக வேறு எங்கோ சென்றுவிட்டிருந்தார். சுற்றிலும் பனை மரங்களாகவே தெரிந்தது.

கள் விற்பனை செய்யும் இடம். முன்னால் பனையில் ஏறுவதற்கு ஏணி வைக்கப்பட்டுள்ளது.

கள் விற்பனை செய்யும் இடம். முன்னால் பனையில் ஏறுவதற்கு ஏணி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை வர அறுபது கிமீ தொலைவு இருக்கும்போது சாலையுன் மத்தியில் பனைமரங்கள் வரிசையாக நடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அந்த சாலை இருவழி பாதையாக மாறியபோது ஏதோ ஒரு பொறியாளர் சாலையின் மத்தியில் பனைமரங்கள் வரும்படி அமைத்திருக்கிறார். காவியத்தன்மை பெற்ற சாலையாக அது காணப்பட்டது. மும்பையில் பாம் பீச் ரோடு என்று ஒரு சாலை உண்டு. அந்த சாலையின் நடுவில் அழகுக்காக பயன் தரா பாட்டில் பாம் என்ற பனை வகையை நட்டிருப்பார்கள். பயன் தருவன பயனற்றவைகளாகவும் பயனற்றவை நடுநாயகமாகவும் இருக்கின்ற காலகட்டத்தை எண்ணி தலையிலடித்துக்கொண்டேன். இந்திய அளவில் ஒரு மாபெரும் முயற்சியை பனைக்காக எடுக்க வேண்டும். அதற்கான காலம் கனிவது வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும்.

கொல்கத்தா சென்னை நெடுஞ்சாலையின் மத்தியில் பனைமரம்.

கொல்கத்தா சென்னை நெடுஞ்சாலையின் மத்தியில் பனைமரம்.

ஏலூரு முதல் சென்னை வரும் வழியெங்கிலும் பனைமரம் இருந்ததை காணமுடிந்தது. ஒரு ஐந்து நிமிடங்கள் பனைமரம் நமது கண்களை விட்டு அகன்று போனால் அது ஆச்சரியமே. மாலை ஆறுமணிக்கு நான் சென்னையை  நெருங்கிவிட்டேன்.  இன்னும்  சுமார் 50 கி மீ தொலைவை சென்னை என புரிந்து கொண்டபோது அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. வியர்வையில் குளித்தபடி ஒரு கடையில் சென்று தண்ணீர் வங்கிக்குடித்தேன். என்னைக்குறித்து விசாரித்தவர் எனது பயணத்தைக் குறித்து அறிந்ததும் என்னிடம் தண்ணீருக்கு பணம் வாங்கவில்லை. மிகவும் வற்புறுத்தியும் வேண்டியும் கெஞ்சியும் அவர் என்னிடம் பணம் வாங்க மறுத்துவிட்டார்.  “மனசுல ஒரு வெறி இருந்ததா தான் சார் இதெல்லாம் செய்யமுடியும் பனை மரத்தயெல்லாம் இப்போ யார் சார் மதிக்கிறா” என்றார்.

 

 

சென்னைக்குள்ளும் ஒரு நபருக்கு எனது பைக்கில் இடம் கொடுத்தேன். சென்னையின்  நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி ஒருவழியாக சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்பு நான் சிறு வயதில் பார்த்த ஜானகி ஆன்டி வீட்டிற்கு சென்றேன்.

 

பல்வேறு உறவுகளை எனது பயணம் எனது இரு சக்கர வாகனத்திலேயே சந்தித்திருக்கிறது. 500 கி மீட்டருக்கும் மேல் பயணம் செய்வது என்பது தொடர்ந்து வாகனத்தில் செல்பவர்களுக்கே சாத்தியமானது. தங்கள் ஓய்வு நேரம் உட்பட அவர்கள் 12 மணி நேரமே ஓட்டுவார்கள். நான் கூடவே அனேகரை சந்திக்கவும் இந்த பயணம் பேருதவியாக இருந்தது. நம்ப இயலாத ஆச்சரியங்களையும் உறவுகளையும் அள்ளித்தந்திருக்கிறது. பனை உறவுகளைப் பேணும் ஒரு குறியீடு தான் சந்தேகமே இல்லை.

 

அந்த இரவு அவர்கள் வீட்டில் எனது நன்றியின் மன்றாட்டு இவ்விதம் அமைந்தது.

 

காக்கும் கடவுளே

இஸ்ரவேலரின் நெடும் பயணத்தில் அவர்களோடு கூட இருந்தது போல நீர் என்னை உமது கரத்தால் மூடி பாதுகாத்து இம்மண்ணுக்கு அழைத்து வந்ததற்கு நன்றி.

விடுவிக்கும் கிறிஸ்துவே

சிலுவையை சுமக்கின்ற பொறுப்பை உமது அடியவர்களுக்கு நீர் கொடுத்திருக்கிறீர்.  நான் சுமப்பதோ எளிய ஓலை சிலுவை,  என்றாலும் உம்மையே தொடருகிறேன். எனக்கு வழிகாட்டியாய் இரும்.

தேற்றும் துய ஆவியே

வானளாவ உயர்ந்து நிற்கும் பனைபோல, பனைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் உமது பிள்ளைகள் உயர்ந்து நிற்க அருள் கூறும்.

ஆமென்

(பனைமரச் சாலையை 18 நாள் பயணத்தில் எழுதி முடிக்கவே உத்தேசித்திருந்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. அதை நான் எழுத துவங்கியபோது விரிந்துகொண்டே சென்றது. இனிமேல் ஒரு 10 நாள் பயணத்தில் பெங்களூர், சென்னை, பண்ருட்டி, கோவை, பொள்ளாச்சி, வேம்பார், திருநெல்வேலி, அபிஷேகப்பட்டி சென்று நாகர்கோவிலில் பயணத்தை முடிப்பதாக திட்டம். அங்கே நண்பர்களை பார்த்துவிட்டு 3ஆம் தேதிக்குள் மும்பை வந்தடையவேண்டும். ஆகவே ஆகஸ்ட் 4 அன்று பனைமரச்சாலை  தொடர்ச்சி வெளிவரும்)

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (43)

ஜூலை 22, 2016

முக்கண்ணின் சுவை

சென்னை எப்பொழுது சென்று சேருவேன் எனத் தெரியாது ஆனால் வேகமாகவே போகத்தக்க கொல்கத்தா சென்னை சாலை. எழுபது  எண்பதுக்கு கீழ் வராதபடி இயல்பாக செல்ல முடிந்தது. ஏலூருவிலிருந்து புறப்பட்டு  கிட்டத்தட்ட 15 நிமிடத்தில் நாய் ஒன்று குறுக்கே வந்தது. எனது பயணத்தில் பெரும்பாலும் நாய்களை நெடுஞ்சாலைகளில் நான் பார்க்கவில்லை. கிராம சாலைகளில் நாய்கள் உண்டு என அறிந்து கவனமாகவே செல்வேன். இது நான் முற்றிலும் எதிர்பாராதது. எனக்கு இடப்பக்கத்திலிருந்து அது வலதுபுறமாக சென்றது. ஆகவே நான் வேகத்தைக் குறைக்காமல் எனது வண்டியை இன்னும் சற்று இடப்புறமாக வளைத்து சென்றுவிடலாம் என நினைத்தேன். நாய் என்ன யோசித்ததோ தெரியவில்லை மீண்டும் இடப்புறமாகவே வந்தது. இப்போது நான் எனது வேகத்தைக் கட்டுப்படுத்தினேன். ஆகையினால் என்னால் வாகனத்தை திருப்பமுடியாது. இன்னும் இடப்புறமாக வண்டியை ஒதுக்கினேன். எனக்கு போதாத வேளை நாய் மிகச்சரியாக எனது வண்டியின் முன் சக்கரத்தி முன்பு வந்து விட்டது.

 

நான் இனி எதுவும் செய்வதற்கு இல்லை என்பது நன்றாகவே எனக்குத் தெரியும். 10 வருடங்களுக்கு முன்பு நான் பேயன்குழி எனும் பகுதியில் இவ்விதமாக ஒரு நாயால் பைக்கிலிருந்து கீழே விழுந்தேன். எனது வாழ்வில் விபத்தே கிடையாது என்று அதன் பின்பு ஒருநாளும் என்னால் பெருமை பேச இயலவில்லை. அன்று எனது லேப்டாப் இருந்ததால் எனக்கு நெஞ்சில் அடி படவில்லை ஆனால் ஏகப்பட்ட சிராய்ப்புகள். வண்டிக்கு மட்டும் மூவாயிரத்திற்கு அதிகமாக செலவு செய்யப்பட்டது. தாரில் உராய்ந்ததால் காயங்கள் ஆறுவதற்கு நாட்கள் பிடித்தன.

 

நான் நினைத்துக்கொண்டேன் பின்னால் வாகனங்கள் எதுவும் வரக்கூடாதென. ஆனால் எனக்கு போதாத காலம் எனக்குப் பின்னாலேயே ஒரு அரசு பேருந்து வந்துகொண்டிருந்தது. எனது வேகம் மட்டுப்படவே அது என்னை கடந்து செல்லும் பாவனையில்   இருக்கிற வேளையில் தான் நாய் திரும்பிவந்து எனது டயருக்குள் தலையை விட்டது. தூக்கி வீசப்பட்டால் கண்டிப்பாக பேருந்தில் அடிபடுவதற்கும் வாய்ப்பு உண்டு. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. பயனத்தில் ஒருமுறையாவது விழுந்து எழும்பினால் தான் வீர பயணமாயிருக்கும் போல. எனது வண்டி நாயின் மேல் ஏறி இறங்கியது. அது அத்துணை பெரிய சலனத்தை வண்டியில் ஏற்படுத்தவில்லை. கடந்து சென்ற பேருந்திலிருந்து என்னை அனைவரும் ஒருவிதமாக பார்த்துக்கொண்டே சென்றார்கள். எனது வண்டியை சாலையை விட்டு கீழிறக்கி மண் சறுக்க நிறுத்தினேன்.

 

அப்பொழுதுதான் எனக்கு உறைத்தது நான் நன்றாக இருக்கிறேன் ஆனால் நாய்க்கு என்ன ஆயிற்று?  சுற்றுமுற்றும்  பார்த்தபொது நாய் எங்கும் இல்லை. வண்டியிலிருன்ட்து இறங்கி எங்காவது அடிபட்டு கிடக்கிறதா எனப் பார்த்தேன். இல்லை. ஆனால் என் ஆழ்மனது சொன்னது. “கொன்னுட்டியே பாவி”. படபடப்பாக இருந்தது. என்னைக் கடந்து சென்ற விழிகள் அனைத்தும் என்னை கொலைகாரனை பார்ப்பது போல் பார்ப்பதாக உணர்ந்தேன். என்ன செய்வதென்றரியாமல் தலை கவிழ்ந்து நின்றேன். நாய் மேலும் கோபம் வந்தது. “அந்தால போயிருக்கவேண்டியதுதானே”. சற்று படபடப்பு அடங்கிய பின்னர் மீண்டும் பயணித்தேன் விஜயவாடா வந்தது.

 

விஜயவாடா மிக அழகான நகரமாக இருந்தது எவ்விதம் செல்லவேண்டும் எனக் கேட்டு வழி தேர்ந்து சென்றுகொண்டிருந்தேன். மணி சுமார் 9 இருக்கும். வாகனங்களின் நெருக்கத்தால் மெதுவாகவே நகர முடிந்தது. ஒரு சிக்னல் வந்தபோது நான் மாட்டிக்கொண்டதை உணர்ந்தேன். எனக்கு இருபுறமும் வாகனங்கள். இடதுபுறம் எடுத்திருந்தாலாவது கொஞ்சமேனும் முன்னேறியிருக்க முடியும். என்னையே நொந்துகொண்டேன். சிக்னல் விழுந்தவுடன் உடனடியாக வண்டியை எடுத்து இடப்புறம் சென்று விடவேண்டும் என நினைத்துக்கொண்டேன். ஆனால் நானும் எனக்கு இடப்புறம் இருந்த பேருந்தும் வலப்புறம் இருந்த மாருதி காரும் ஒரு சேர வண்டியை எடுத்தோம். பேருந்து சற்றே வலப்புறம் திரும்ப நான் நிலைதடுமாறி மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்குள் எனது வண்டியின் கண்ணாடியும் காரின் கண்ணாடியும் ஒன்றை ஒன்று முத்தமிட்டு பற்களை உடைத்துக்கொண்டன. நல்ல வேளை தெலுங்கு தெரியாததால் அவன் பேசிய கெட்டவார்த்தைகள் ஒன்றும் எனக்குப் புரியவில்லை. வாகனங்களின் திரள். அங்கே நிற்பது சரியாகது என வண்டியை எடுத்தேன், வேகமாக பிற வாகனங்களை தொடர்ந்தேன்.

 

மீண்டும் அடுத்த சிக்னலில் வண்டிகள் நின்றபோது எனது வண்டியை இடதுபுறமாக ஒதுக்கி நிறுத்தினேன். வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு நெரிசலில் நின்றிருந்த அந்த மாருதி வண்டி நோக்கிப் போனேன். மீண்டும் அந்த வாகனத்தை ஓட்டுகிறவர் என்னை வசைபாட துவங்கினார். அதற்குள் வேறு ஒரு குடும்பம் இருந்தது. வாடகை வண்டி போல. ஜன்னால் வழியாக டிரைவைப் பார்த்து கேட்டேன் இந்த கண்ணாடி என்னவிலை. கோபத்துடன் எண்ணூரு  ரூபாய் என்று சொன்னார். நான் ஒரு ஐநூறு ரூபாயை நீட்டினேன். வேண்டுமென்று நான் செய்யவில்லை, நான் நெருக்குண்டதால் இவ்விதம் ஆகிவிட்டது. எனது பிழையை மன்னியுங்கள் என கேட்டுக்கொண்டேன். அவர் ஆளே மாறிவிட்டார். இல்லை சார் நீங்கள் போங்கள் என என்னை சமாதானம் செய்ய ஆரம்பித்தார். சிக்னல் விழும் நேரம். தயவுசெய்து ஒரு சிறு உதவியாக இதை எடுத்துக்கொள்ளுங்கள் என கூறி அவர் கையில் கொடுத்தேன். பெற்றுக்கொண்டார். திருப்தியோடு எனது வண்டிக்குத் திரும்பினேன். ஐனூறு ரூபாய் எனக்குப் பெரிய தொகை தான் என்றாலும் அவருக்கான இழப்பீட்டில் முழுவதும் பங்கெடுக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது செய்ய முடிந்ததே சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

 

 

காலை முதல் இரண்டு மணி நேரத்திற்குள்ளே இரண்டு விபத்துக்கள், இன்னும் கண்டிப்பாக 10 மணி நேரமாவது இருக்கிறது சென்னை செல்ல. எப்படி பயணத்தை  முன்னெடுப்பது என்று யோசித்தேன். முதலில் ஒரு இடத்தில் நின்று வண்டியை பரிசோதிக்கவேண்டும். சற்று நேரத்திலேயே அங்கே ஒரு திருப்பம் வந்தது. எங்களை போலீசார் நிறுத்தினர். முதலில் ஒரு போலீஸ் ஜீப் அதைத் தொடர்ந்து இரண்டு பெரிய குளிர்சதனம் செய்யப்பட்ட பேருந்துகள் சென்றன இறுதியாக மேலும் ஒன்றிரண்டு காவலர் வாகனக்கள் சென்றன. அவற்றின் வேகம் மிதமாக இருத்தது. ஒன்றை ஒன்று முந்தாமல் அவைகள் சீராக சென்றன. உள்ளே மங்கோலிய முகங்கள் இருப்பதுபோல் தோன்றியது. இத்துணை நேர்த்தியாக வாகனங்கள் சென்று நான் பார்த்ததில்லை. அவைகளைக் கடந்து ஒரு இடத்தில் உணவருந்த நிறுத்தினேன்.

 

காலை உணவுக்குப்பின்  சுமார் ஒரு மணி நேரம் பயணித்தபொழுது சாலை ஓரம் இரண்டு சிறுவர்கள் நுங்கு விற்றுக்கொண்டிருந்தனர். எப்படி தோவாளையில் பூக்களை நீட்டி வாகனங்களில் செல்பவர்களிடம் விற்பார்களோ அதுபோலவே ஆனால் நுங்கை விற்றுக்கொண்டிருந்தனர். 12 சிறிய கண்களை 20 ரூபாய்க்கு ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். எனது பயணத்தில் நான் இதுவரை நுங்கு சாப்பிடவில்லை ஆகையால் நிறுத்தினேன். கண்கள் அவற்றின் பாடையோடு எடுத்து வைகப்பட்டிருந்தன. நான் 20 ரூபாய்க்கு வாங்கினேன். இதே ராசாயனி என்றால் முன்று கண்கள் மாத்திரம் 20 ரூபாய் இருக்கும். குமரி மாவட்டம் என்றால் கண்டிப்பாக 35 ரூபாய் இருக்கும்.

 

அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த பாட்டி ஒருவர் என்னிடம் ஏதோ கூறினார்கள். எனக்கு அவர்கள் மொழி புரியவில்லை ஆனால் உடல்மொழி புரிந்தது. அவர்கள் என்னோடு வண்டியில் வர விரும்புகிறார்கள் அவர்களை நான் வழியில் இறக்கிவிடவேண்டும். நான் எனது முதுகில் இருந்த சுமையை முன்பகுதிக்கு மாற்றிவிட்டு அவர்களை சேர்த்துக்கொண்டேன். எனக்கே அது ஒரு இன்ப அதிர்ச்சி தான். பாட்டி உண்மையிலேயே ஒரு தைரியசாலி அந்த தைரியம் எனக்கு பிடித்திருந்தது. இரு சக்கர வாகனத்தின் பின்புறம் அமருவது எளிதானதல்ல. மிக அழகாக அமர்ந்து கொண்டார்கள். சுமார் 20 கிமீ தூரம் வந்திருப்பார்கள். பிற்பாடு ஒரு கிராம சாலை பிரியும் இடத்தில் இறங்கிக்கொண்டார், நான் ஒரு புகைப்படம் எடுத்தேன். கொள்ளைகொள்ளும் சிரிப்பு அவர்களுடையது.

என்னோடு பயணித்த பாட்டி

என்னோடு பயணித்த பாட்டி

அங்கிருந்து நான் புறப்படும் போது கையிலிருந்த நுங்கு ஞாபகம் வந்தது. இதை எங்கிருந்து சாப்பிடுவது? பனைமரத்திடியில் இருந்து பால் தான் குடிக்கக் கூடாது நுங்குமா சாப்பிடக்கூடாது? எங்காவது ஒரு பனைமர நிழல் கிடைக்குமா என பார்த்துக்கொண்டே வந்தேன் வழியில் நுங்கு விற்றுக்கொண்டிருந்த ஒரு இடத்தைப் பார்த்து வண்டியை நிறுத்தினேன். எனது கரத்தில் நுங்கு இருக்க அவர்களிடம் நான் நுங்குடன் சென்று அமர்வது சரியாயிருக்குமா? ஆனாலும் சென்றேன் அவர்கள் இருந்த இடத்தில் சற்றே பனை மரங்களின் நிழலே இருந்தது.

 

இவர்களின் நுங்கு விற்பனை சற்று வித்தியாசமாக இருந்தது. நுங்கை குவித்துப்போட்டிருந்தனர். வேண்டும் என்று சொன்னால் வெட்டி பாலிதீன் பையில் போட்டுக்கொடுக்கிறார்கள். மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். நான் சென்றபோது அவர்கள் காலையுணவை சாப்பிட ஆயத்தமானார்கள். என்றாலும் என்னிடம் சாப்பிடுங்கள் என ஒரு வார்த்தை கேட்டார்கள். நான் நுங்கைக் காட்டி இதையே சாப்பிடப்போகிறேன் என்றேன்.

நுங்கு நேரம்

நுங்கு நேரம்

நுங்கு, நீர் அதிகம் உள்ள ஒரு உணவு. ஆகவே தண்ணீர் குடிப்பதற்கு இணையாக அதை கருதி சாப்பிட ஆரம்பித்தேன்.  முதல் முறையாக வாழ்வில் நுங்கை அப்படி சாப்பிட ஆரம்பித்தேன். என்னிடமுள்ளவைகள் தீர்ந்த பின்பு அங்கிருந்த நுங்குகளில் சிலவற்றை வெட்டித்தரக் கேட்டு அன்று நுங்கிலேயே திளைத்தேன். அங்கே தான் முதன் முறையாக நுங்கில் சில “பிங்க்” நிறத்தில் இருப்பதைப் பார்த்தேன். வேறு இனமா அல்லது இளங்காயா என தெரியவில்லை. ஆனால் அத்தனையும் சுவை மிகுந்திருந்தன.

நுங்கை எப்படி பேறுகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் சில மரங்களுக்கு 25 முதல் 40 ரூபாய் வரைக் கொடுத்து பனைதொழிலாளியை அழைத்துக்கொண்டுபோய் வெட்டி வாகனத்தில் எடுத்து வருகிறோம் என்றார்கள். பெரிய லாபம் இருக்காது ஆனால் நஷ்டம் இருக்க வாய்ப்பு இல்லை. என்னைத்தொடர்ந்து அனேகர் அங்கே வந்து வாங்கிச்சென்றார்கள். விற்பனை அமோகமாக இருந்தது.

 

நுங்கில் ஒரு கண் உள்ளதும் உண்டு, இரண்டு கண் உள்ளதும் உண்டு மூன்று கண் உள்ளது உண்டு. ஆனால் பெரும்பாலும் மூன்று கண் உள்ளவைகளே அதிகம். முக்கண் என்பது இந்து மதத்தில் ஒரு முக்கிய குறியீடு. தேங்காய்க்கும் முக்கண் உண்டு என்பதையும் அவைகள் சடங்குகளில் முக்கிய இடம் பிடிப்பதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.

மும்மைக் கடவுள் எனும் கருத்தாக்கமும் என்னுள் கடந்தோடிச் சென்றது. என்னைப்பொறுத்தவரையில் பல்வேறு மடிப்புகள் கொண்ட பனைவரிகளிலிருந்து நாம் கடவுள் குறித்த புரிதலையும் வாழ்வின் உண்மையையும் அறிந்து கொள்ள முடியும். அது ஒரு அட்சய பாத்திரமாக, அமுத சுரபியாக, பாலூட்டும் அன்னையாக, கற்பக தருவாக, ஜீவ விருட்சமாக விண்ணளக்கும் கடவுளாக உயர்ந்து நிற்கிறது.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (42)

ஜூலை 21, 2016

பனைமர ஓடம்

மாலை வேளையில் அலுவலகம் முடியும் முன்பதாக சாம்சன் ராஜு என்னை அங்கே அழைத்துக்கொண்டு போய்   தனது உடன் பணியாளர்களுக்கு  என்னை அறிமுகம் செய்தார். நான் சற்றும் நினைக்காத ஒரு நிகழ்வு. அனைவரும் என்னை உற்சாகப்படுத்தினர். மேலும் அவர்கள் கூறிய காரியங்கள் சாம்சன் ராஜு அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தும்படியாக அமைந்தது. ஒருவர் சொன்னார், நீங்கள் ஆந்திராவில் எப்பகுதிக்குச் சென்றாலும் சாம்சன் ராஜுவிற்கு ஒரு நண்பர் இருப்பார் என்று. நான் அதையே திருப்பி கூறினேன். குமரியில் கூட அவருக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று. கலகலப்பான நேரமாக இருந்தது, அலுவலகம்  மேல்மாடியில் இருந்தது அனைவரும் எனது வண்டியைப் பார்க்க கீழிறங்கி வந்தார்கள். ஒருவர் வண்டிக்கு ஒரு இன்சூரன்ஸ் போட்டிருவோமா என்று கேட்டார்கள். வண்டி பார்பதற்கு அப்படி இருந்தது.

சாம்சன் ராஜுவின் அலுவலக நண்பர்களுடன்

சாம்சன் ராஜுவின் அலுவலக நண்பர்களுடன்

அலுவலக பணிகள் முடிந்த பிற்பாடு அவர் என்னை அழைத்துக்கொண்டு கோள்ளேறு எனும் ஏரிக்கு செல்லுகிறோம் என்றார். கோள்ளேறு ஆசியாவிலே மிகப்பெரிய நன்னீர் ஏரி. உலகம் முழுவதும் இங்கிருந்து மீன்கள் ஏற்றுமதி ஆகின்றன என்றார். அந்த இடத்தைப் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது அந்த இடதைக் கடக்கவே  கிட்டத்தட்ட அரை மணி நேரமாகிவிட்டது.  மெதுவாகவே சென்றோம்,  வழியில்  அவரது உறவினர்களைப் பார்த்தோம். உதவிக்கு அவரது சகோதரரின் மகன் வந்தார்கள். நாங்கள் பார்க்க இருப்பது தாட்டி தோணி என்றார்கள். அதாவது பனை மரத்தில் செய்யப்பட்ட தோணி.

கோள்ளேறு செல்லும் பாதை

கோள்ளேறு செல்லும் பாதை

செல்லும் வழியெங்கும் வயல் பாத்திகளைப்போல் சிறு சிறு குளங்களாக கொள்ளேறு ஏரி பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்குச் சொந்தமான மீன் வளர்ப்பு பண்ணை. இந்த பண்ணைகளில் நவீன கருவிகள் பொருத்தி மீன் வளர்ப்பதை கண்காணிக்கிறார்கள். மீன் மலியும்போதே உள்ளூர் சந்தையில் வரும் என்றும், சில மீன்கள் உள்ளூரில் கிடைக்கவே கிடைக்காது என்றும் சொன்னார். ஏரியைக் கடந்து ஒரு பெரிய பாலம் இருந்தது. இந்திராகாந்தி பிரதமராக இருக்கும்போது அவர் இதை திறந்து வைத்திருக்கிறார். இல்லாவிட்டால் மக்கள் 60 கி மீ தூரம் கடந்து தான் ஏலூரு வந்தடைய முடியும் என்று சொன்னார். அந்த பாலத்தின் கீழ் தண்ணீர் மிக குறைவாகவே இருந்தது. ஆனால் நாங்கள் பார்க்கும்படியாக அங்காங்கே தாட்டி தோணி கவனிப்பாரற்று கிடந்தன. கோடையின் உக்கிரத்தில் தண்ணீர் இல்லாது அந்த பெரிய ஏரி வறண்டு கிடந்தது.

கோள்ளேறு ஏரியில் நானும் சாம்சன் ராஜுவும்

கோள்ளேறு ஏரியில் நானும் சாம்சன் ராஜுவும்

பாலத்தைக் கடந்து ஒரு செக்போஸ்டைத் தாண்டி நாங்கள் ஏரிக்குள் செல்லும் பாதையை எடுத்தோம் பல தோணிகளைப் பார்க்க முடிந்தது ஆனால் எங்களால் படங்களை எடுக்க முடியாதபடி ஒளி மங்கிவிட்டது. எனக்கு ஒரு படகின் அருகில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பனைமரத்தின் அடிப்பாகத்திலிருந்து சுமார் 10 – 12 அடி நீளம் கவனமாக எடுத்து அதன் மேல்பகுதியை வெட்டி எடுக்கிறார்கள். அதன் பின்பு உள்ளிருக்கும் சதைப்பற்றை நீக்குகிறார்கள். பின்பு அதன் முற்பகுதியில் நீர் புகாதவாறு அடைத்து கீல் பூசுகிறார்கள். நான் பார்த்த வரைக்கும் அனைத்து படகுகளுமே நீர் அரித்து மிகவும் பழையனவாகி இருந்தன.

தாட்டி தோணி அருகில்

தாட்டி தோணி அருகில்

இத்த சிறிய படகின் காலத்தின் எச்சமாக நம்மிடம் தங்கியிருக்கிறது. ஒற்றை மரம் அதன் உட்புறங்கள் மட்கிபோகின்ற நேரத்தில் அவைகளை சுத்தம் செய்தால் கிடைப்பது இந்த படகு. ஒற்றை மனிதராய் இயக்க வல்லது. ஆகவே தொன்மையானதும் கூட.  எனது வாழ்நாளில் பனை மரத்தின் பின் நான் பல ஆண்டுகள் அலைந்தும் கூட இப்படி ஒரு படகு இருப்பது என்பது குறித்து நான் கேள்விகூட பட்டிருக்கவில்லை. கண்களில் நீர் நிரம்ப சாம்சன் ராஜுவைப் பார்த்தேன். அவர் தனது உறவிருடன்  சிரித்து பேசிக்கொண்டிருந்தார். கைமாறு கருதாத அன்பு நிறைந்த மனிதர். நான் அவரைப் பார்க்க வேண்டும் என நினைத்த உடனடியாக எனக்காக களப்பணியில் இறங்கியிருக்கிறார். எத்துணை பெரிய உள்ளம்?

 

ஒற்றை மனிதன் நின்று இயக்கும் தோணி இது என்று சாம்சன் ராஜு கூறினார்கள். மேலும் அதை அவர் ஆச்சரியத்துடன் விவரித்தார். தனியாக இதில் நின்று தோணியை ஓட்டுவது மிகவும் திறமையான ஒன்றாகவே நான் கருதுகிறேன் என்றார். கற்பனையில் அந்த தோணியை ஓட்டிச்செல்லும் அந்த மனிதனை எண்ணிப்பார்த்தேன். ஆம் தனது வாழ்வை தண்ணீரில் அமைத்திருந்தாலும் தரையில் அமைத்திருந்தாலும் பனை சார் வாழ்வைக் கொண்டிருக்கும் அவர்கள் வாழ்வு தத்தளிக்கவே செய்கிறது. என்றாலும் பனைமரத்தின் உறுதி அவர்களிடம் காணப்படுகிறது. கடந்துவரும் சவால்களை தனித்தே எதிர்கொள்ளுகிறார்கள்.

 

 

நாங்கள் திரும்பி வருகிற வழியில் தொடுகைக்கு அருகில் இருக்கும் ஒரு தாட்டி தோணியைக் கண்டு அதன் அருகில் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வரும் வழியில் ஏலூரு சந்தைக்கும் சென்றோம்.

சுப்பிரமாணியம் குடும்பத்தாருடன் கலந்துரையாடல்

சுப்பிரமாணியம் குடும்பத்தாருடன் கலந்துரையாடல்

வீட்டிற்கு வந்தபோது நான் உண்மையிலேயே களைபுற்று இருந்தேன். மீண்டும் ஒரு குளியல் போட்டுவிட்டு நான் வந்தபோது சாம்சன் ராஜுவின் நண்பர் சுப்பிரமணியம்  அவரது மனைவி கிரிஜா இரண்டு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வேறு ஒருவரும் வந்திருந்தார்கள்.  எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் அவர்களோ மிகவும் ஆவலுடன் எனக்காக காத்திருந்தார்கள். சரி, களைப்பை ஆற்றிவிடலாம் ஆனால் நண்பர்களை இழப்பது சரியாகாது என்பதை உணர்ந்து அவர்களோடு பேசத்துவங்கினேன். அது இன்னும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தருணம். நான் போதகர் என்பதால்   சற்று விலக்கத்துடனேயே  பேசிக்கொண்டிருந்தனர்.

ஓலையில் படம் வரையும் போது

ஓலையில் படம் வரையும் போது

நான் எனது ஓலைகளையும் கருவியையும் எடுத்துக்கொண்டு வந்தேன். பிள்ளைகளை ஒவ்வொன்றாக வரைய ஆரம்பித்தேன். மகிழ்ச்சி அந்த இடத்தில் கரைபுரண்டோட ஆரம்பித்தது. நான் நீ என்று ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் சத்யநாராயணாவும் தனது வீட்டில் உள்ளவர்களை வரையும்படி கூப்பிட்டார். ஒவ்வொருவரை வரையும்போதும் அவர்கள் முகங்களில் காணப்படுகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாதது. பலவாறு பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் சென்றார்கள். முடியும்போது என்னை பார்த்தது மகிழ்ச்சி என்பதை மீண்டும் மீண்டும் கூறினார்கள். எனது திறமை அற்பணிப்பு அவர்கள் குழந்தைகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக திருமதி கவுரி சுப்பிரமாணியம் கூறினார்கள். மணி 10.30 ஆகிவிட்டிருந்தது.

ஓலையில் செய்த நிழல் உருவம்

ஓலையில் செய்த நிழல் உருவம்

உணவு உண்ணும்பொழுது எனது பயண திட்டங்களைப் பற்றி சாம்சன் ராஜு என்னிடம் கேட்டார். வேறு உதவிகள் தேவையா என மீண்டும் மீண்டும் கேட்டார். ஒருநாள் கூட இங்கு தங்கினால் வேறு இடங்களையும் நாம் பார்க்கலாம் என்றார். நான் மீண்டும் இங்கு வருவேண் என்று கூறினேன். காலை உணவுக்காக எதுவும் ஆயத்தம் செய்ய வேண்டாம் என கூறினேன்.

 

மேலே வந்தபோது எனது துணிகள் யாவும் துவைத்து நன்றாக அடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றாக எடுத்து பைக்குள் அடுக்கிகொண்டிருந்தேன். எனது நினைவுகளில் சாம்சன் ராஜுவே வியாபித்து இருந்தார். முகநூல் நட்பு. எனது வாழ்வில் நான் அவரை மறக்க இயலாதபடி ஒவ்வொன்றாக எனக்காக தேடி பார்த்து செய்திருக்கிறார். நான் தூங்கும் முன்பதாக எனது அறைக்கு  வந்து உங்கள் பயண செலவுக்காக என ஒரு உரையைக் கொடுத்தார். நன்றியுடன் பெற்றுக்கொண்டேன்.

விடைபெறும் நேரம்

விடைபெறும் நேரம்

மாறுநாள் காலை 7 மணிக்கு அவர்கள் வீட்டிலிருந்து  ஜெபித்துவிட்டு கிளம்பினேன். சாம்சன் ராஜு அவரது  மனைவி மகன் சத்ய நாராயணா அவரது குடும்பம் என இணைந்து என்னை வாழ்த்தி அனுப்பினர். மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. மீண்டும் சந்திபோம் எனும் மன உறுதியோடு அங்கிருந்து கிளம்பினேன். சாம்சன் ராஜு எனக்கு முக்கிய சாலை செல்லும் வரை வழிகாட்டினார்கள். சென்னை 500கிமீ என்று எங்கே இருந்தது. அது எனக்கு சவாலா என்ன என எண்ணிக்கொண்டேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (41)

ஜூலை 20, 2016

உண்மையான பனைமரம் நானே

 

மீண்டும் மண்வழிச் சாலைப் பயணம். இம்முறை நாங்கள் தனியாக. ஆனால் எங்களுக்கு முன்பு ஒரு ஷேர் ஆட்டோ சென்றது. அதனுடைய வேகம் ராக்கெட்டை ஒத்திருந்தது. ஓட்டுனர் மிகவும் பயிற்சி பெற்றவர் போல. அங்கிருந்து நிடதவோலு என்னும் இடத்தில் இருந்த பனைத் தொழிலாளர் கூட்டமைப்புக்குச் செல்லவேண்டும் என்பது திட்டம். சாம்சன் ராஜு என்னை அழைத்தார். மதியம் உணவு தயாராக இருக்கிறது என்று. வந்துவிடுவோம் என்று கூறினேன். ஆனால் சூழல்கள் வேறு விதமாய் இருந்தன.

ஆந்திர மாநில பனைத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் முசலையா கவுட் அவர்களுக்கு நான் ஓலை சிலுவை பரிசளித்தபோது

ஆந்திர மாநில பனைத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் முசலையா கவுட் அவர்களுக்கு நான் ஓலை சிலுவை பரிசளித்தபோது

நாங்கள் பனிரெண்டரைக்கு ஃபெடரேஷன் சென்றபோது அங்கே ஒரே ஒருவர் மட்டும் இருந்து எழுதிக்கொண்டிருந்தார் வேறு ஒருவரும் இல்லை. அது ஒரு பாழடைந்த  பங்களா பொலவே இருந்தது. தூசி சேர்ந்து ஒருவிதத்தில் அது தனது பழைமையை பறைசாற்றிக்கொண்டிருந்தது. அந்த சுற்றுவட்டாரத்திலேயே மிகவும் பழைமையான  உறுதியான மற்றும் பொருட்படுத்ததக்க கட்டிடமாக அது இருந்திருக்கக்கூடும். என்றாலும் தீடீரென முளைத்த கடைகளுக்குள் இன்று மங்கிபோய் கேட்பாரற்று கிடக்கிறது.

1950களில் காதி கதர்கிராம தொழில் மையத்துக்குக் கீழ் 1959 முதல் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு. சுமார் 3000 டன் கருப்பட்டிஒவ்வொரு வருடமும் இவர்களால் பெறப்பட்டு செயப்பட்டு வந்துள்ளது. இவ்விதமாக சுமார் 20 வருடங்கள் தன்னிகரற்ற ஒரு துறையாக அவர்கள் எழுந்து நின்றிருக்கிறார்கள். என்றாலும் எண்பதுகளுகுப் பின்பு இந்த தொழில் நலிவடையும்போது இதை மீட்டெடுக்கும் எவ்விதமான சூழலும் இல்லை. மத்திய மாநில அரசுகளின் தொடர் ஊக்கத்தொகைகள் பெற்று நடைபெற்ற இவையனைத்தும் அவைகள் நிறுத்தப்பட்ட பின்பு உறை நிலைக்கு வந்துவிட்டன. வேகமான உலகமயமாக்கலுக்கு முன் நிற்க இயலாதபடி அதற்கு எவ்விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்  எடுக்காதபடி அதிகாரிகள் செயல்பட்டிருக்கின்றனர் என்பதே உண்மை. விதிவிலக்குகள் உண்டு. இந்த நாட்களிலேயே கருப்பட்டி காய்க்கும் தகர டப்பாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

நாங்கள் சத்ய நாராயணாவின் உயரதிகாரியைப் பார்க்க காத்திருந்தோம். நான் கிட்டத்தட்ட இதே சுழலை 1998ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாம் கூர் ஃபெடரேஷன் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன். அன்றே பனைத் தொழில் தனது வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருந்தாலும் ஏதோ நடந்துகொண்டிருந்தது. அன்றையதினம் எங்களுக்கு பாம் கோலா மற்றும் பாம் சாக்லேட் கிடைத்தது. அதிக தகவல்களோ கூ. சம்பந்தம் எழுதிய புத்தகமோ கிடைக்கவில்லை.

உணர்ச்சி வேகத்தில் நான் பேசியபொழுது

உணர்ச்சி வேகத்தில் நான் பேசியபொழுது

சற்று நேரத்தில் முசலையா கவுட் அங்கே வந்தார். அவர் தான் ஒருங்கிணைந்த ஆந்திரா முழுவதற்கும் தலைவர். சத்ய நாராயண இருந்ததாலேயே இந்த சந்திப்பு சாத்தியமாயிற்று. அவருக்கு ஆங்கிலம் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது ஆனால் அவர் என்னோடு ஆங்கிலத்தில் பேசவில்லை. எனக்கு மொழிபெயர்க்க மற்றுமொரு நபரை ஏற்பாடு செய்தார்கள். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. மொழி பெயர்ப்பாளர் வரும் வரை நான் எதற்காக வந்திருக்கிறேன் என சத்ய நாராயணா விளக்கிக்கொண்டிருந்தார். முசலையா கவுட் அரசு அதிகாரியாகவே இருந்தார், நான் அவரிடம் எதையும் கேட்டு பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் நாங்கள் கேட்கிறோம் என்ற பாவனை அவரிடம் இருந்தது.

மொழிபெயர்பாளர் ஒரு வயதானவர், அவர் வந்த பின்பு நான் பேசத் துவங்கினேன். எனது பயணத்தில் நான் கண்டவைகள் குறிப்பாக ஓலைகள் வீணடிக்கப்படுவதை  குறித்துச் சொல்லி ஓலைகளை எப்படி பயன்படுத்த முடியும் என வேகமாக ஒருசில எடுத்துக்காட்டுகள் அதன் வாய்ப்புகள் கூறி நிறைவு செய்தேன். எனது பேச்சு எதையாவது செய்ய முடியாதா என்ற ஆற்றாமையிலிருந்து புறப்பட்டு வந்தது. நம்பிக்கை குறைவிலிருந்து சற்றே என்னை நம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பித்தார்கள். நான் சொன்னேன், எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நீங்கள் மக்களைக் கூட்டிச் சேர்த்தால் மட்டும் போதும், நான் மும்பையிலிருந்து வந்து உங்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். எனக்காக நீங்கள் எதுவும் செலவு செய்யவேண்டாம். எனது பயணம் அனைத்தும் உட்பட நானே பார்த்துக்கொள்ளுகிறேன் என்றேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். தலைவர் எனது விலாசத்தை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.  நான் அவர் முன்பு செய்த ஒரு ஓலைச் சிலுவையை அவருக்கு பரிசளித்தேன்.

மேலும் நான் சொன்னேன், ஏதாவது ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுப்போம், உபகரணங்களைக் கூட நானே எவ்விதமாவது ஏற்பாடு செய்கிறேன். ஒரு வருடம் மக்களின் வாழ்வில் ஏதேனும் மாறுதல் இருக்கிறதா என்று பார்ப்போம். இருந்தால் நாம் இதையே பரவலாக்கலாம். ஒருவேளை முற்காலத்தில் நீங்கள் அனேக முயற்சிகளை எடுத்தும் உங்களால் நீங்கள் விரும்பிய பலனைக் கண்டடையாமல் போயிருக்கலாம் ஆனால் இன்று காலம் கனிந்திருக்கிறது என நம்பிக்கையோடு செயல்படுங்கள் என்றேன். மிகவும் இலகுவாகிவிட்டார்கள்.

கலகலப்பாக நான் பேசியபொழுது

கலகலப்பாக நான் பேசியபொழுது

நாங்களும் எதையாவது செய்ய வேண்டும் என நினைக்கிறோம் ஆனால் போதிய நிதிஆதாரம் இல்லை என்பதையே கூறிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் திட்டமிட்டு செயலாற்றினால் ஒரே வருடத்தில் உங்கள் நிதி சுமையைக் குறைக்க நாம் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்றேன். அவர்களுக்கு அத்துணை நம்பிக்கை வரவில்லை. எனக்கு தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமிருந்த ஒரு சிறு புத்தகத்தின் நகலைக் கொடுத்தார்கள். சிறப்பாக பேக் செய்யப்பட்ட கருப்பட்டியையும் கொடுத்தார்கள்.

மும்பையில் ஒவ்வொரு விழாக்களின் பொழுதும் மக்கள் எதையெல்லாம் விற்க முடியுமோ அவைகளை விற்றுக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். குறிப்பாக மாலை செய்பவர்கள் இணைக்கின்ற மலர்கள் ஏன் இலைகள் கூட விலை அற்றவை என கருதப்படுபவை தான். சந்தையை நாம் தான் கூட்டவேண்டும் நம்மிடம் பொருள் இல்லையென்று சொன்னால் எவரும் வாங்க வரமாட்டார்கள். இருக்கிற பொருட்களையே தான் வாங்குவார்கள்.

தலைவர் முசலையா கவுட் எனக்கு இரண்டு விலாசங்களைக் கொடுத்தார். ஒன்று மும்பையின் அருகிலேயே  தஹானு எனும் இடத்தைக் குறிப்பிட்டார். இந்திய அளவில் முதன் முதலாக அங்கே தான் பனை ஓலையில் கைவினைப் பயிற்சிகள் ஆரப்பிக்கப்பட்டன எனும் நான் அறியாத ஒரு தகவலைக் கூறினார், இரண்டாவதாக சென்னையில் உள்ள பயிற்சி மையத்தின் விலாசத்தையும் கொடுத்தார். சென்னையே நான் தொடர்பு கொள்ள ஏற்ற இடம். நான் கண்டிப்பாக அங்கே செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  நான் ஏன் அங்கே சென்றேன் என்கிற சந்தேகம் அவருக்குள்  இன்னும் இருந்துகொண்டிருக்கிறது  என எண்ணிக்கொண்டேன்.

அங்கிருந்து வெளியே வந்தபோது மணி இரண்டைத் தாண்டியிருந்தது. மீண்டும் சாம்சன் ராஜு அழைத்தார். உங்களுக்காக உணவு ஆயத்தமாக இருக்கிறது நீங்கள் வீட்டிற்கு வந்து உணவு அருந்தலாம் ஆனால் சத்ய நாராயணாவிடம் ஒரு வார்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள் அவருக்கு சர்கரை வியாதி உண்டு. நான் சொன்னேன் நாங்கள் இங்கேயே உணவை முடித்துவிடுகிறோம் என்று. உணவை முடித்துவிட்டு நான் சத்யநாராயணவைப் பார்த்தேன்.  மிகவும் களைப்பாக இருந்தார். உடனடியாக வீட்டிற்குச் செல்லலாம் என முடிவு செய்தோம். அவருக்கு சற்றேனும் ஓய்வுவேண்டும் என்பதை அவரது முகம் உணர்த்தியது. அவர் ஒன்றும் சொல்லவில்லை. சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை வெயில் கொளுக்த்திக்கொண்டிருந்தது. எனக்கு கையில் கிளவுஸ் இல்லை ஆகவே மிக அதிகமாக எனது விரல் நுனிகளில் வெம்மை தாக்கியது. எதையும் சிந்திக்காமல் எனது வாகனம் நூறைத் தொட்டது.

கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்குள் 64 கி மீ கடந்து வீடு வந்து சேர்ந்து விட்டோம். வழியில் ஒரே ஒருமுறை நின்று பெட்ரோல் நிரப்பிக்கொண்டோம். நான் சத்யநாராயணாவிற்கு நன்றி கூறினேன். அவர் மட்டும் இல்லாதிருந்திருந்தால் நான் ஆந்திரா கள்ளின் மாநிலம் எனக் கூறி எனது பயணத்தை முடித்திருப்பேன். மொழியால் நாங்கள் பேசிக்கொள்ள இயலாவிட்டாலும் மனதால் என்னை தொட்டெடுத்த மனிதர் அவர். சற்று நேரம் ஓய்வெடுங்கள் என்ச் சொல்லி அவரை அனுப்பினேன்.

நான் வீட்டுற்குள் நுழைந்த போது ராபின்சன், அப்பா இப்பொழுது வருவார்கள் நீங்கள் ஆயத்தமாக இருக்கவேண்டும் எனச் சொன்னான். நான் குளித்து ஆயத்தமானேன் அப்பொழுது ராபின்சன் எனது அறைக்குள் வந்தான். எனது இலக்கணப்படி ஓலையில் செய்வதற்கு வாகான முகம். நான் சொல்லுவது போல் அமர்ந்திரு எனச் சொல்லி அவனை அப்படியே ஓலையில் வரைந்தேன். ஒரு நிழல் உருவமாகத்தான். அப்படியே மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனான். நானே நினைக்கவில்லை. அப்போது சாம்சன் ராஜு அவர்கள் வந்தார்கள் மாலை தேனீர் அனுந்திவிட்டுச் செல்லலாம் என சொன்னார்கள். நான் அவருக்காக எடுத்து வந்திருந்த திராட்சை குலை படத்தை எடுத்துக் கொடுத்தேன். கிறிஸ்தவர்களுக்கு திராட்சை ஒரு முக்கிய உருவகம். நானே மெய்யான திராட்சை என்ற இயேசுவின் கூற்றிலிருந்து வருவது அது. மாத்திரமல்ல நிறைந்த கனி கொடுக்கும் வாழ்வையும் அது சுட்டி நிற்கின்றது. ஆகவே அதை அவருக்கு பரிசளிப்பது மிகவும் பொருத்தமாக உணர்ந்தேன்.

உண்மையான திராட்சை செடி நானே

உண்மையான திராட்சை செடி நானே

இயேசு “உண்மையான பனைமரம் நானே” என கூறியிருந்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்தேன். ஒருவேளை இயேசு அப்படி கூறியிருந்தால் கிறிஸ்தவம் பனையை காப்பாற்றியிருக்குமோ? இங்கே தான் நமது புரிதல்களை இயேசு கோருவதாக படுகிறது. திராட்சையில் காணும் இயேசுவை நாம் நுங்கிலும் பனை மரத்திலும் அதை சார்ந்து வாழும் ஏழைகளிலும் காணவுமே நமக்கான அழைப்பு விடுக்கப்படுகிறது.

திராட்சையின் சுவையை வித்தந்தோதி பனை மரத்தை காவு கொடுத்துவிட்டிருக்கிறோம். கிறிஸ்துவின் வார்த்தைகளை யோவான் நமது சூழலை எண்ணி கீழ்கண்டவாறு கொடுத்திருந்தால் பனைத்தொழிலாளிகள் இன்று சந்தித்திருக்கும் அவல நிலையை அடைந்திருக்க மாட்டார்காளோ? எனக்கு முன்னும் எவரும் செய்ய முன்வராத இக்காரியத்தை நான் சொல்வதால் திருமறையைத் திரித்த பாவத்திற்கு குற்றவாளிக்கூண்டில் நிற்கப்போகும் நாள் தொலைவில் இல்லை.

 

1 “உண்மையான பனைமரம் நானே. என் தந்தையே பனை தொழிலாளி.

2 என்னிடமுள்ள பதனீர் கொடாத அத்தனை பாளைகளையும் அவர் தறித்துவிடுவார். பதனீர் கொடுக்கின்ற அத்தனை பாளைகளையுமோ  மிகுந்த பதனீர் தருமாறு  சீவி விடுவார். 3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். 4 நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். பாளை பனையுடன் இணைந்து இருந்தாலன்றித் தானாக பத்னீர் தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் சுவைதர இயலாது. 5 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் பாளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. 6 என்னோடு இணைந்து இராதவர் பயனில்லா பாளையைப்போல்  தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார்.

அப்பாளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.

யோவான் 15: 1- 6 (வார்த்தைகள்  மாற்றப்பட்டுள்ளது)

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (40)

ஜூலை 19, 2016

கதாநாயகன்

எனது கதாநாயகன் வெங்கண்ணா

எனது கதாநாயகன் வெங்கண்ணா

பனை ஏறுகின்ற தொழிலாளியை அப்போது எனக்கு அறிமுகப்படுத்தினார்கள், அவர் பெயர் வெங்கண்ணா. எனது பயணத்தில் நான் பார்த்ததிலேயே மிகவும் இளவயது உடையவர். மிகவும் வசீகரமான புன்னைகை, அழகிய நிறம், கட்டுமஸ்தான உடல். நான் எனக்குள் நினைத்திருக்கும் ஒரு கனவு நாயகனுக்கு உரிய சாயல். கிட்டத்தட்ட ஆறடி உயரம். இத்துணை முரட்டு வேலை செய்யும் ஒருவரில் எப்படி அருள் கூடிவந்திருக்கிறது என ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தேன். அத்துணை கனிவான முகம். பலநாள் பார்த்துப் பழகிய ஒரு உணர்வு வந்தது.

 

நான் ஒரு முறை பார்வதிபுரத்தின் அருகிலுள்ள ஆலம்பாறை எனும் இடத்திற்கு பனை ஓலைகள் பெறுவதற்காக சென்றிருந்தேன். அங்கே ஒரு முதியவர் பனை ஏறிக்கொண்டிருந்தார். அங்கே அவரது பேரனும் தனது விடுமுறைக்காக  வந்திருந்தான். என்ன படிக்கிறாய் எனக் கேட்டேன், பி. இ என்றான். சற்று நேரத்தில் அங்கே ஒரு குடும்பத்தினர் வந்து நுங்கு வேண்டும் என்று கேட்டார்கள். தாத்தா பேரனைப் பார்த்துச் சொன்னார் “மக்களே அத ஒண்ணு வெட்டி குடு”. என் வாழ்வில் பனை ஏறும் முதல் பி இ பட்டதாரியை பார்த்துக்கொண்டிருந்தேன்.

வெங்கண்ணா தனது முழு அணிகளோடு

வெங்கண்ணா தனது முழு அணிகளோடு

 

ஐக்கிய இறையியல் கல்லூரியில் நான் என்னை ஒரு பனையேறி என்றே என் நண்பர்களுக்குள் அறிமுகப்படுத்தியிருந்தேன். பனைத்தோழில் குறித்து அதிகம் தெரியாத அவர்களுள் ஒரு சினேகிதி ஒருநாள் எனக்கு பனை ஏறத்தெரியாது என்பதை அறிந்துகொண்டாள். அதன் பின்பு என்றும் என்னை கிண்டலடிப்பது தான் அவளது வாடிக்கை. எனக்கே கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தது. முயற்சித்தேன் எனது தயக்கங்கள் பயங்கள் ஏற முயற்சித்து பெற்றுக்கொண்ட சிறாய்ப்புகள் என்னால் அதை தொடர்ந்து செய்ய முடியும் எனும் மன உறுதியைத் தரவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்த முனைவர் பட்டம் பெற்ற கிறிஸ்டொபர் அவர்களும், முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் திரு சாந்தப்பன் அவர்களும் பனை மரம் ஏறுவார்கள் என்பது நான் அறிந்த செய்தி. இழிவு எதுவும் இல்லை. தினமும் பணிக்குமுன் 10 பனை ஏறினால் உடலும் திடகாத்திரமாக இருக்கும் வீட்டிற்கு தேவையான கருப்பட்டியும் காய்ச்சி எடுக்கலாம்.

குமரிமாவட்ட பனைத்தொழிலாளி, தெரிசனங்கோப்பு

குமரிமாவட்ட பனைத்தொழிலாளி, தெரிசனங்கோப்பு

இவ்விதமான ஒரு தலைமுறையை நாம் முன்னெடுக்கவேண்டும். நமது மரத்தை நாமே பயன்படுத்துவது அதன் அத்தனை சாத்தியங்களையும் கண்டடைவது. சிறு வயதில் பனை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டால் கற்றுக்கொள்வது எளிதாக இருக்கும். நமது முன்னோர்கள் அதற்கென்றே வழுக்குமரம் போன்ற விளையாட்டுக்களை வைத்திருக்கின்றனர். ஒருமுறை பூவார் பகுதியில் ஓணத்தை முன்னிட்டு நடைபெற்ற வழுக்கு மர போட்டியைக் காண முடிந்தது.

 

சுமார் 20 அடி உயர கமுகு மரத்தை மிக வழுவழுப்பாக்கி நட்டிருந்தார்கள். சுற்றிலும் திரளான மக்கள் நிற்க உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசுப்பணத்தை எடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் உடலெங்கும் சேறு அப்பி கிடந்தது வியர்வை, மரத்தில் வழிந்தோடும் கிரீஸ் அதை மாற்ற கரங்களை மண்ணில் தேய்த்து அவைகள் உடலெங்கும் அப்பியபடி இருந்தன. ஆனால் எவரும் முகம் சுழிக்கவில்லை, அதை உற்சாகப்படுத்தினர் அதுவெற்றியின் இலக்கிற்கான அடையாளமாக அமைந்தது. இன்று அவ்விதமான ஒரு மனநிலை மக்களுக்குள் வந்தால் அது ஒரு பெரிய மாறுதலாக இருக்கும். நமக்காக மற்றொருவரை பனைமரம் ஏறச்சொல்வதைவிட நாமே நமது மரத்தில் ஏறுவதே அதை பாதுகாப்பதற்கான சிறந்தவழி.

 

இதற்கு ஒப்பான மற்றுமொரு விளையாட்டை மும்பை சென்றபோது பார்க்கமுடிந்தது. உயரத்தில் கட்டியிருக்கும் உறியை திரள் கூட்டமான மக்கள் ஒன்றிணைந்து எழுப்பிய மலைமுகடுகளின் வழியாக ஏறி உடைப்பார்கள். அவர்கள் மீதும் வர்ணங்கள் வீசப்படும் அவர்கள் மீதும் தண்ணீர் வீசப்படும். வியர்வையிலும் மழையிலும் நனைந்தே அவர்கள் அந்த விளையாட்டை விளையாடுவார்கள். ஒருவர் தோளில் ஒருவர் மிதித்து ஏறுவதும் தன் தோழ்மேல் ஒருவரை தான்கிப்பிடிப்பதும் என அந்த விளையாட்டு ஒரு கூட்டமாக இணைந்து குறித்தது. ஆயர்களின் வாழ்வில் பத்திரமாக வைக்கவேண்டிய வெண்ணையை நினைவுறுத்தும் ஒரு விளையாட்டு. அதுபோலதான் வழுக்கு மரமும், பனை மரத்தில் பற்றிபிடித்தபடி ஏறும் திறமையை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைகிறது. ஆயர்களுக்கான விளையாட்டு போல் பனைத்தொழிலாளர்களுகான விளையாட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்று இவைகளை வாழ்வியலோடு நடைமுறைப்படுத்த நாம் முயற்சிக்கவேண்டும்.

வெங்கண்ணா ஏணிவைத்து பனைமரம் ஏறியபோது

வெங்கண்ணா ஏணிவைத்து பனைமரம் ஏறியபோது

வெங்கண்ணா எங்களுக்காக மீண்டும் ஒருமுறை பனை ஏற  கிளம்பினார், நான் எவ்வளவோ தடுத்தும் சத்ய நாராயணா விடவில்லை.  எப்படியாவது எனக்கு அத்தனை விஷயங்களையும் காட்டிவிடுவது என்ற உறுதியில் இருந்தார். வெங்கண்ணா ஒன்றுவிடாமல்  தன்னிடமிருந்த அத்தனை உபகரணங்களையும் எடுத்துக்கொண்டார். தோளில் மோகு சுற்றப்பட்டிருந்தது, நீண்ட மிருக்குதடியின் ஓரத்தில் பதனீர் இறக்கும் அலுமினைய பானை தொங்கவிடப்பட்டிருந்தது, மற்றுமொரு தோழில் நீண்ட ஏணி ஒன்றை எடுத்து வைட்திருந்தார். இடுப்பில் பெல்ட் அதிலே முதுகுபுறமாக இணைக்கப்பட்ட தொழிற்கருவி பெட்டி. அத்துடனே சுண்ணாம்பு எடுத்துச் செல்லும் ஒரு சிறிய பெட்டியையும் தொங்கவிட்டிருந்தார். போருக்கு ஆயத்தமான வீரனைப்போலவும், வேட்டைக்கு ஆயத்தமான வேடனையும் போல இருந்தார்.

கள் இறக்குபவர்கள், சென்னை (உதவி: இணையம்)

கள் இறக்குபவர்கள், சென்னை (உதவி: இணையம்)

அவர் வைத்திருந்த ஏணி தான் மற்ற எல்லா இடத்தைலேயும் பார்த்த பனையேற்றைவிட சற்று வித்தியாசமாக இருந்தது. பொதுவாக கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் பனை ஏறுபவர் மிருக்குதடி என ஒன்றை வைத்திருப்பார். மிருக்குதடி என்பது நீளமான ஒரு மரத்துண்டின் ஒரு ஓரத்தில் பனைமரத்தில் பற்றியிருக்கத்தக்க வளைவு கொண்ட மரத்துண்டை இணைத்து செய்த கருவி.  பல்வேறு பயன்பாடுகள் கொண்ட இக்கருவி முதன்மையாக மண்ணில் ஊன்றி பனைமரத்தில் சாய்த்து வைக்கப்படும். பனைமரத்தின் அடிப்பாகம் பெரிதாயிருக்கும் பொழுது அதைப் பற்றி ஏறும்போது ஏற்படும் சிரமம் தவிர்க்கப்படும். இதன் நடுப்பாகத்தில் பாளையருவாளைச் சீவும் அரிவாளை பொடி தூவி தீட்டுவார்கள். மேலும் ஒவ்வொரு பனையிலிருந்து வேறொரு பனைக்குச் செல்லும்போதும் குடுவைகளை அல்லது மண் கலசங்களை இதில் தொங்கவிட்டபடி நடப்பார்கள்.  இதையே பெரும்பாலும் பனைத் தொழிலாளர்கள் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்.

 

அந்த ஏணியைக்கொண்டு வெங்கண்ணா பாதி மரம் வரை ஏறினார். பிற்பாடு ஆந்திராவில் நான் பார்த்த மற்ற பனைத்தொழிலாளர்களைப்போல் மரம் ஏறத் துவங்கினார். குமரி மாவட்டத்தில் பனை ஏறுபவர் தனது இரண்டு கரங்களையும் மரத்தைச் சுற்றி கட்டி அணைத்துக்கொள்வார். பிற்பாடு அந்த கரத்தின் பற்றுதலினால் தனது தளானார் பொருத்திய கால்களை மேலெடுப்பார். கரங்களும் உடலின் மேற்பகுதியும் ஒருசேர மேலெழும்புவதை நாம் பார்க்க முடியும். இது களரிப்பயிற்றின் ஒரு உடற்பயிற்சியை ஒத்திருக்கிறதை நான் கவனித்திருக்கிறேன். ஒருவிதமான புல் அப்ஸ் போல. நாம் இன்று ஜிம் சென்று உடலை வளர்க்கும் தலைமுறைக்குள் நுழைந்திருக்கிறோம். குளிரூட்டப்பட்ட அறைக்குள் செய்வதே உடற்பயிற்சி என்றான பிறகு எதிர்காலம் குறித்த நம்பிக்கை மங்கலாகவே உள்ளது.

 

அப்போதுதான் யோசித்தேன் ஆந்திரா முழுவதும் நான் இதுவரை கள் இறக்குவதைத் தான் பார்த்திருக்கிறேன். இங்கோ கருப்பட்டி செய்கிறார்கள் அப்படியானால் இவர் பதனீர் இறக்கும் பனைத் தொழிலாளர்.  ஆம் ஆச்சரியமான உண்மைதான் அவர் கூட சுண்ணாம்பு குடுவை வத்திருக்கிறாரே, நான் அடுத்திருந்த அந்த குடிசைக்குள் நுழைந்தேன். நான் நினைத்தது சரிதான் சுண்ணாம்பு வைக்கப்பட்டிருந்தது, தாயாரித்த கருப்பட்டிகள் ஓலையில் ஊற்றப்பட்டு உறைந்து கட்டியாகி இருந்தன. கருப்பட்டி அங்கே தானே கருமைக்கொள்ள துவங்கியிருந்தது. அதற்கு காரணம் பதனீரை சற்று அதிகமாகவே தீய்ந்துவிட அனுமதிக்கிறார்கள். அது சிறப்பான ஒரு மணத்தை அளிக்கிறது. ஆகவே காப்பியின் வாசனை அதற்குள் வந்துவிடுகிறது.

ஓலை கருப்பட்டி (தாட்டி பெல்லம்) ஆந்திரா

ஓலை கருப்பட்டி (தாட்டி பெல்லம்) ஆந்திரா

நாங்கள் புறப்படும்போது வெங்கண்ணாவை கட்டிப்பிடித்தபடி நின்றேன். பிரிவதற்கு மனதில்லை ஆனால் நேரமாகிக்கொண்டிருந்ததாக சத்ய நாராயணா கூறினார்கள். அங்கிருந்து புறப்பட்டோம். வாழ்வில் மீண்டும் ஒரு தருணம் அமையுமென்று சொன்னால் இங்கு வந்து ஒரு இரவு  தங்கவேண்டும், இவர்களோடு ஒரு முழு நாளை செலவளிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (39)

ஜூலை 19, 2016

பனைத்தொழில் கூலி

நான் ஐந்து அல்லது ஆறு வயது சிறுவனாக இருக்கும்போது எனது தந்தை மார்த்தாண்டம் சி ஏஸ் ஐ தேவாலயத்தில் போதகராக பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது எங்கள் வீட்டிற்கு அருகில் நின்ற சில பனைகளில் ஏறுவதற்கு ஒரு “பனயாறி” வருவார். எங்கள் வீட்டின் உணவு மேஜையில் தினமும் ஒரு பெரிய பாத்திரத்தில் பதனீர் இருக்கும். சில வேளைகளில் நான் கூட சென்று பனயாரியிடம் அக்கானி வாங்கி வருவேன். அப்பா எல்லாரும் அக்கானி குடியுங்க என்று சொல்லுவார்கள், நாங்கள் திசைக்கொன்றாய் பறப்போம். அன்றையதினம் எங்களுக்கு பதனீர் ஒரு பெரிய பொருட்டான காரியமல்ல. ஆனால் அப்பா சொல்லுவார்கள் நாங்கள் எல்லாம் கருப்பட்டி வைத்து கஞ்சி குடித்து வளர்ந்தவர்கள். திடகாத்திரமான உணவு இது என்று. ஏனோ அன்று அதன் சுவையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பனைத்தொழிலாளி - தெரிசனங்கோப்பு, குமரி மாவட்டம் (1997)

பனைத்தொழிலாளி – தெரிசனங்கோப்பு, குமரி மாவட்டம் (1997)

 

இன்னுமொரு காரியம், அந்த பனைத்தொழிலாளியின் உடை அமைப்பும். ஆலயத்திற்கு வருகின்றவர்களின் நேர்த்தியான உடைகளையே பார்த்துப் பழகிய எனக்கு கோவணம் கட்டி வருகிற பனயாரியின் உடையமைப்பும் நகைப்புக்குரியதாகவே காணப்பட்டது.  பின்னாளில் அதே உடையோடு தான் நான் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் எனது பயிற்சி இறைச் செய்தியை வழங்குவேன் என அப்போது எனக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.

 

ஒருநாள் அம்மா “அக்கானி காய்க்கப் போறாங்க” என்று எனது அக்கா சொன்னார்கள். அம்மா அதற்கென்றே ஒரு தகர டப்பா வாங்கியிருந்தார்கள். நீள்சதுரமான அந்த பாத்திரத்தில் நிரம்ப பதனீர் விட்டு காய்ச்சினார்கள். நான் அடுப்படியிலேயே இருந்தேன். அக்கானி காய்ந்த பாடில்லை. மிகவும் சோர்பளிக்கக்கூடிய நாளாக இருந்தது. அம்மா விறகை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் எந்த வகையிலும் பதனீர் சற்றும் காயவில்லை. அடுப்பின் அருகில் செல்லமுடியாதபடி வெக்கை. வெயில் வேறு ஏறிக்கொண்டு செல்லுகிறது பொறுமையின் எல்லைகள் எல்லாருக்கும் கடந்துவிட்டது. அந்தவேளையில் பதனீர் சற்று திளைக்க ஆரம்பித்தது மெதுவாக காய்ந்து ஒருவாராக பதத்திற்கு வந்தது.

 

“எல்லாரும் ஆளுக்கொரு பிலா இலைய எடுட்துட்டு வாங்க” என்று அம்மா சொன்னார்கள். ஓடிப்போய் பலா இலையை எடுத்துக்கொண்டு வந்து யாசகம் கேட்பதுபோல் இலையை நீட்டிக்கொண்டு நின்றோம். பனந்துடுப்பிலிருந்து வழியும் சாக்லேட்டை எண்ணி நாவில் நீர் ஊறிவிட்டது. ஆனால் வழிந்த அந்த கெட்டியான பாகு அத்தனை சூடாக இருந்தது. இலையைத் தாண்டி உள்ளங் கையில் சுடு தாக்கியது. பதறி கீழே வைத்து விட்டாலும் ஆசை யாரை விட்டது, சுட்டுவிரலால் ஊறுகாயைத்  தொடுவதுபோல் தொட்டு வாய்க்குள் ஸ்லோ மோஷனில் வைக்க எண்ணினது நான் தான். ஆனால் மின்னல்வேகத்தில் கை வாய்க்குள் போய்விட்டது. அத்தனைச் வெம்மை. கை விரல் கொப்பளித்து விட்டது.

 

ஆனால் இதற்குள் வேறு சில முக்கிய காரியங்கள் இருப்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. பொதுவாக குமரி மாவட்டத்தில் அக்கானி எடுக்க வருபவருக்கும் தோட்ட முதலாளிக்கும் ஒரே ஒப்பந்தம் தான். அது என்னவென்றால் முறை வைத்து பதனீரை பகிர்ந்துகொள்வார்கள். நேற்று பதனீர் எங்களுக்கு என்று சொன்னால் இன்று கிடைக்கும் பதனீர் பனைத்தொழிலாளிக்கு. நாளை கிடைக்கும் பதனீர் எங்களுக்கு அதன் மறுநாள்  கிடைப்பதை பனைத்தொழிலாளி எடுத்துச் செல்வார். இப்படியே இது தொடரும். இது அதிசயமான காரியம் ஒன்றும் இல்லை. வழக்கமாக நடைபெறும் இயல்பான நிகழ்ச்சிதான்.

இதையே ஏன் ஒரு மாதம் பனைத் தொழிலாளிக்கும் இன்னொரு மாதம் உரிமையாளருக்கும் என பிரிக்கவில்லை? பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீரின் அளவு துவக்கத்தில் மிக கொஞ்சமாகவும் பிற்பாடு படிப்படியாக உயர்ந்து அதன் உச்சக்கட்டத்தை அடைந்து பிற்பாடு படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் அம்மா தொடர்ந்து பதனீர் காய்த்ததாக எனக்கு நியாபகம் இல்லை என்றாலும் இந்த ஒப்பந்தத்தின்படி கிடைத்த பதநீரில் தான் அம்மா அன்று முயற்சித்திருக்கிறார்கள். அவர்களது ஆசிரியப்பணியில் அவர்களாக தொடர்ந்து பதனீர்  காய்த்திருக்க இயலாது.

பனைத்தொழிலாளி மரம் ஏறுகின்ற காட்சி - வரையப்பட்டது (இடம்: பாட்னா 1805) நன்றி: இணையம்

பனைத்தொழிலாளி மரம் ஏறுகின்ற காட்சி – வரையப்பட்டது (இடம்: பாட்னா 1805) நன்றி: இணையம்

ஐக்கிய இறையியல் கல்லூரியில் எனக்கு சீனியராக படித்த முத்துராஜ் சுவாமி தற்போது பூனேயிலுள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார், அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது  மேலும் ஒரு முக்கிய திறப்பு கிடைத்தது. அவர் தனது ஐரோப்பிய நண்பரிடம் பனைத் தொழிலாளிக்கும் பனை உரிமையாளருக்கும் இடையில் நடைபெறும் லாபப் பங்கிடுதல் முறை குறித்து சொல்லியிருக்கிறார். ஐரோப்பிய நண்பரால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றார். எனக்கு அவர் எதை சொல்ல வருகிறார் எனப் புரியவில்லை. ஏன் என்று கேட்டேன். லாபம் மட்டுமே குறிகோளாக கொண்ட ஐரோப்பிய முதலாளி வர்க்க மனம் தொழிலாளியும் முதலாளியும் ஒன்றுபோல் லாபத்தை பங்கிடுவதை எப்படி ஒப்பும் என்றார். ஆடிப்போய்விட்டேன். எவ்வளவு முக்கியமான அவதானிப்பு. இந்த உரையாடல் என்னை வேறு கோணங்களில் சிந்திக்க வைத்தது.

 

ஒன்று நமது சமூக அமைப்பில் உழைப்பவருக்கும் உரிமையாளருக்கும் சம பங்கு என்னும் ஒரு கருத்டோட்டம் இதன் மூலம் பெறப்படுகிறது. அப்படியானால் இந்திய சமூகத்தில் உழைப்பவருக்கும் உரிமையாளருக்கும் உள்ள இடைவெளி இலாபத்தால் அல்ல வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அது சமூக கட்டமைப்பில் இருவரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. அந்த வேற்றுமை சமன் செய்யப்படமுடியாதது. ஆனால் உழைப்பு என வரும்போது உழைப்பவர் பெறுவது உரிமையாளருக்கு சற்றும் குறைவானதல்ல. இது உபரியை ஒரே இடத்தில் தேங்க விடாத பொருளாதாரம்.

 

மேலும் இவ்விதமான பொருளாதாரத்தில் சூழியல் பாதுகாக்கப்படுகிறது.  தொழிலாளியாகவும் உரிமையாளராகவும் இருக்கும் இருவர் இணைந்து மரத்தை பாதுகாப்பவர் எனும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுகின்றனர். ஒருவர் தமது நிலத்தை அற்பணிக்கிறார் வேறொருவர் அதற்கு தமது உழைப்பைச் செலுத்துகிறார். கூலியாக  இருவருக்கும் கிடைப்பதை பகிர்ந்துகொள்ளவேண்டும் எனும் புரிதல், அது தங்கு தடையின்றி ஏற்றுக்கொள்ளப்படல் போன்றவை இன்றைய நோக்கில் மிகவும் ஆச்சரியமான காரியம். நான் 10 வருடங்களுக்கு முன் பணியாற்றிய பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தினருக்குச் சொந்தமான மரங்களில் ஏறிய ராகவன் எனும் எனது அன்புக்குரிய பனைத்தொழிலாளி கூட இந்த முறை ஒப்பந்தத்தில் தான் வந்தார்.

 

அதற்கான காரணம் என்ன? இந்திய அளவில் ஒப்புநோக்க இதற்கு வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? இல்லை உலக அளவில் வேறு எங்கேனும் இதை ஒத்த கூலி பங்கீடுகள் இருந்திருக்கின்றனவா? இது தொன்மையான பழங்குடி சமூக அமைப்பிலிருந்து பெறப்படும் விழுமியமா? அல்லது புரட்சியின் விளைவாய் பெற்ற உரிமையா? எங்கிருந்து இந்த சமநோக்கு கூலி பங்கீடு வருகிறது? இதன் ஊற்றுமூலம் என்ன,  யார் அல்லது எதற்காக? இவைகளுக்கு என்னால் விடைகளைக் கூற முடியாது. இவைகள் புதிதாய் பதில் தேடவேண்டிய கேள்விகள்.

 

காலம் காலமாக நம்மிடம் இப்படியான ஒரு முறை இருந்திருக்கிறதா?  இந்த தொழில் சூட்சுமத்தை  கண்டுபிடித்தது யார்? அல்லது இவ்விதமாக ஒரு சமன்பாட்டை பனைத் தொழிலாளர் கேட்டுப்பெறுவதற்கு காரணமாக ஏதும் நிகழ்ந்ததா? அப்படி நிகழ்ந்தது  என்று சொன்னால் எப்போது? தேடினால் கண்டுபிடிக்கத்தக்க தொலைவிலேயே  விடைகள் இருக்கும் என நான் நம்புகிறேன்.

 

குமரிமாவட்டத்தில் பனைத் தொழிலில் ஈடுபட்டவர்கள் அடைந்த தொல்லைகளை அகிலத்திரட்டு எடுத்துக் கூறும். சம கூலி இல்லாமை மாத்திரம் அல்ல அடிமைத்தனத்தில் இருந்தே “ஊழியம்” செய்திருக்கிறார்கள். எவ்வித சமன்பாடுகளும் இல்லாத கடும் அடிமை முறை இருந்திருக்கிறது. அப்படியானால் சம லாப பங்கீடு என்பது மிக சமீபத்திய வளர்ச்சியாகத்தானிருக்கவேண்டும். அப்படி சமீபத்தில் ஒரு கூலி பங்கீட்டிற்கு இரு தரப்பும் ஒத்திருந்தால் அது ஆவணங்களில் கண்டிப்பாக இருக்கும். அதை கண்டுபிடிப்பதும் அதன் மூலம் சம கூலி ஒப்பந்தத்தை  ஏற்படுத்தியது யார் அதன் பின்னணி என்ன என்பதும் திருவிதாங்கூர் ஆய்வாளர்கள் முன்னெடுப்பது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும். இன்றைய சூழலில் தமிழகத்திலேயே மிக அதிகமாக தினக்கூலி பெறுபவர் குமரிமாவட்டத்தினர் தான் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

 

அப்படியாயின் 150 வருடங்களுக்குள் ஏற்பட்ட ஒரு மாபெரும் புரட்சி நமது கண்களுக்கு தெரியாமல் மறைந்திருக்கிறது. பனை தொழிலாளர்களுள் ஒருவர் இந்த சமன்பாட்டை எண்ணியிருக்கிறார் என்பதே யூகிக்கத்தக்க விடை. தனது உழைப்பு சுரண்டப்படுகிறது, தனது உழைப்பினை பெறுகின்ற ஒரு சமூகம் தன்னை அடிமைப்படுத்திவைத்திருக்கிறது என்னும் எண்ணத்திலிருந்து அந்த சமூகத்தோடு போராடி ஒரு அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தவர் ஒரு முன்னோடி. யார் அவர் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. சாதாரணமாக அவ்விதம் ஒரு சமன்பாட்டை நிலைக்கும்படியாக எவரும் எளிதில் எதுவும் செய்ய முடியாது. அதுவும் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து எழுகின்ற வேளையில் ஒன்றாய் அதைக் கூடிச் செய்திருக்கின்றனர் என்றால் அது ஒரு சமூக மாற்றம். அந்த மாற்றத்தின் வேர்களை கண்டடைய வேண்டும். அதற்கான காரணிகளை ஆய்வுக்குட்படுத்தவேண்டும்.

 

ஆம் அந்த எண்ணம் தோன்றிய மனிதன் நம்முள் தோன்றிய ஒரு மகான். அவர் ஒரு புது உலகுக்கான முறைமையை நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார். உபரி ஒரே இடத்தில் சேருவதல்ல நல்ல பொருளாதாரம் என்பதை உணர்ந்திருக்கிறார் மேலும் தாம் செய்யும் செய்யும் சமன்பாடு இரு தரப்புக்கும் நீதி பெற்றுக்கொடுக்கின்ற ஒன்றாக அமையவேண்டும் என்பதையும் கணித்திருக்கிறார். பல்வேறு காரணிகளை பரிசீலித்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் இவைகளை முன்னெடுக்கும் ஆன்ம வல்லமை, அதற்கான முயற்சி, செயல்பாட்டு முறைகள், பெற்றடைந்த முதல் வெற்றி, பரவலாக்கிய விதம் போன்றவை நாம் அறிந்து கொள்ளவேண்டிய இரகசியங்களாகவே இருக்கின்றன.

 

தென் திருவிதாங்கூர் குறித்த ஆய்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்ற விதமாக இங்கு அனேக ஆவணங்கள் கிடைக்கின்றன. பல்வேறு நோக்குகளில் ஆய்வுகள் இன்றும் நடைபெற்றுகொண்டிருக்கின்றன. அவர்களில் எவரேனும் ஒருவர் இதற்கான ஆரம்பச் சரடை பிடித்துவிட்டாரென்று சொன்னால் பிற்பாடு உலகத்திற்கு வழங்க நமக்கு ஒரு மாபெரும் முன்னுதாரணம் கிடைக்கும்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (38)

ஜூலை 18, 2016

வியர்வைத் துளிகளின் நிறை

 

பனை மரங்கள் என்னை கவருவதற்கு இன்னுமொரு காரணம் அது எந்த நிலத்திலும் முளைக்கும் நல்ல விதையை ஒத்தது என்பதுதான். வகுத்தவன் வல்லவனானால் வறுத்த முத்தும் முளைக்கும் என்பது பழமொழி. பனம் பழத்தை அவித்தோ தீயில் சுட்டு வாட்டியோ உண்ட பின்பும் கூட அதை முளைக்க வைக்கலாம் எனும் பொருளில் கூறப்பட்டது.  உயரத்திலிருந்து விழும் பனம்பழத்தின் ஓசை சுமார் 100 மீட்டர் துரம்வரை கேட்கும். ஒரு குண்டு பாயும் சத்தம் போல. ஆனால் அப்படி அந்த பனம் பழம் கீழே விழும்போது பனை விதை எவ்வித அதிர்ச்சிக்கும் ஆளாகாதபடி அதன் சதைபற்று மிக்க வெளிப்பகுதி பாதுகாத்துக்கொள்ளுகிறது. மாத்திரம் அல்ல விதையின் ஓடும் மிகவும் கடினமானது. எளிதில் வெப்பம் தாக்காத வண்ணம் மூடிய உறுதியான ஓடு உடையது. ஈரப்பதத்தை தன்னுள் தக்கவைத்து விதையை முளைக்கச் செய்யும் அதிசய தன்மை வாய்ந்தது.

 

பனை மரங்கள் வளர்ந்து நிற்கும் இடங்கள் பரந்துபட்டவை. அவைகள் கடற்கரை ஓரங்கள், பாறைகள் நிறந்த மலைப்பகுதிகள், மணற்பாங்கான தேரிக்காடுகள், வயல்வெளிகள் நிறைந்த சதுப்புநிலங்கள், பொட்டல் வெளிகள், உடைமரக் காடுகள், செம்மண் நிலங்கள், சில இடங்களில் நீர் தேங்கி நிற்கும் குளங்கள், ஏரிகள் மற்றும் அணைகள். இது மாத்திரம் அல்ல நகர்புரங்களிலும் இவை அழகுற கெம்பீரமாக நிற்பதை நாம் காணமுடியும். தமிழகத்தின் ஐந்திணைகளில் குறிஞ்சியைத் தவிர்த்து மற்ற எல்லா நிலங்களிலும் முளைத்த தாவரமானபடியால்  இலக்கியங்களிலும்  இவற்றைக் குறித்து அதிகம் பதிவுகள் இருக்கும் என்றே நான் நம்புகிறேன். எனக்கு மிகவும் அறிமுகமான திருக்குறளிலேயே…

 

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்றெரி வார்.

 

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.

 

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்

காமம் நிறைய வரின்.

 

பெரிது, அதிகம், திரளான, அளவிடமுடியாத போன்ற பதங்களுக்கு திருவள்ளுவர் பனை மரத்தையே அளவீடாக கொண்டுள்ளார் போலும்.

 

செம்மண் சாலை

செம்மண் சாலை

எங்களுக்கு முன் சென்ற அந்த இருசக்கர வாகனம் ஒரு மாற்றுப்பாதையை தெரிவு செய்தது. எனது பயணம் இதுவரையில் தார் சாலைகளையே கண்டிருந்தது. இப்போதோ எனது வாகனம் அங்கிருந்த  ஒரு செம்மண் சாலையைப் பிடித்தது. அது போன்ற சாலையை நான் அதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன். குமரி மாவட்டத்தின் முட்டம் கடற்கரை செல்லும் வழியில் காணப்படுகின்ற அதே செம்மண் நிறம். சுற்றிலும் புதர்கள் அதை கடந்து தனியாருக்கான விளைநிலங்கள். ஆனால் காட்டுப்பகுதிக்குள் செல்வதுபோல இருந்தது. எங்களுக்கு முன்னால் சென்றவர்களின் வேகம் மிகவும் சாகசம் மிக்கது. அதிகம் இல்லை 40 கிமீ வேகத்தில் தான் சென்றிருப்பார்கள் ஆனால் எங்களால் அவர்களை எளிதில் தொடரமுடியவில்லை, சாலையின் சரியான பகுதிகளில் பயணிக்காவிட்டால் வண்டி மண்ணில் பதிந்துவிடும். வளைந்து செல்லும் அந்த பாதை எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. நான் பொதுவாக வண்டியில் சாகசம் செய்பவனல்ல. ஆனால் அன்றைய பயணம் ஒரு சாகசத்தை ஒத்திருந்தது.

செம்மண் சாலை வளைவுகள்

செம்மண் சாலை வளைவுகள்

பாதை நீள நீள ஒரு சினிமா படத்தின் துரத்தல் காட்சி போலவே இருந்தது திடீர் வளைவுகள், எதிரே இன்னும் வேகமாக  வருகின்ற மோட்டார் வாகனங்கள் என நான் ஒரு வீடியோ கேமிற்குள் நுழைந்தது போல அட்டகாசமான ஒரு அனுபவம். பின்னால் சத்ய நாராயணா பதறிக்கொண்டிருந்தார். சுமார் ஐந்து கிலோமீட்டர் தான் சென்றிருப்போம் ஆனால் அதுவே மொத்த பயணத்திலும் பரவசமான வாகன செலுத்துதலாக இருந்தது. அந்த பாதை ஒருவகையில் ஒரு வறண்ட சிற்றோடையை ஞாபகப்படுத்தியது. இருமருங்கிலும் உயர்ந்த பகுதி, தண்ணீர் பாயும் தடத்திலே நாங்கள் போவது போன்ற உணர்வு. எப்பொழுது வேண்டுமானாலும் மடை திறந்த வெள்ளம் எங்களை அடித்துச் சென்றுவிடும் என்றே கருதினேன்.

 

எனது பயணத்தை நான் துவக்கும்போது எல்லாரும் நால்வழி சாலையையே நான் தெரிவு செய்வேன் என எண்ணியிருந்தார்கள். எனது மனதிற்குள் கிராம சாலைகளும் குக்கிராமங்களுமே நான் பயணிக்க வேண்டிய சாலைகளாக கற்பனையில் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் நடந்ததென்னவோ நேர்மாறாகத் தான். என்னால் ஒருபோதும் குக்கிராமங்களுக்குச் சென்றடைய முடியவில்லை. எனக்கென நான் வகுத்துக்கொண்ட பயண திட்டம் என்னை ஒரு  ஒழுங்குக்குள் இழுத்துப்பிடித்திருந்தது. பனை சார் தொழில்கள் சாலைகளை விட்டு வெகு தொலைவுக்கு உள்சென்றுவிட்டன என நான் உணர்ந்தேன். நெடுஞ்சாலைகள் பனைத்தொழிலை முக்கியப்படுத்தும் ஒன்றல்ல மாறாக அவைகளை பின்னுக்குத்தள்ளும் வேகம் கொண்டவை.

 

சாலைகளில்லா வழிகளே பனைமர தொழிலுக்கு ஏற்றது போலும்.  எங்களை அழைத்துச் சென்றவர்கள் சாலையே இல்லாத ஒரு இடத்திற்குள் திரும்பினார்கள். மரங்கள் செறிந்த பகுதிக்குள் சென்றோம். அங்கே எங்கள் தலைக்கும் தாழ்வாக கிளைகள் படர்ந்து விரிந்த தோட்டத்திற்குள் பைக்கிலேயே தலை குனிந்து சென்றனர். சார் குனிந்துகொள்ளுங்கள் என்றேன். அவர் நான் கத்தியதை வைத்து புரிந்திருப்பார் என நினைக்கிறேன். எப்படியோ ஒருவாறு அந்த சாகச பயணம் முடிவுக்கு வந்தது. அவர்கள் எங்களை அழைத்து  சென்ற இடம் ஒரு கருப்பட்டி காய்ச்சும் இடம். சத்ய நாராயணா எனக்காக எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்.

 

அந்த இடம் சோலைகளால் சூழப்பட்டிருந்தது. சோலைகளைப் பிளந்தெழும் பனைமரங்கள் அவற்றில் வந்து செல்லும் சிறுபறவைகளின் ஒலிகள். ஓலைகளில் வந்தமரும் துக்கணாங்குருவிகள், சிறகை மடித்துச் செல்லும் பட்டாம்பூச்சி, குயில்களின் சத்தம் மற்றும் அணில்களின் கீச் கீச். இவைகளுக்கிடையில் இடுப்பளவு உயர மூங்கில் கூடுகள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. அவைகளினுள் போர் கோழிகள் இருக்கும் என்பதை நான் அறிவேன். இதே போன்ற காட்சிகளை பனைத் தொழிலாளர்கள் தனித்து வாழும் பகுதிகளில் நான் பார்திருக்கிறேன்.  ஆறுமாத கடும் உழைப்பு கொண்ட அவர்களுக்கு வருடத்தின் பிற்பகுதியில் பொழுதுபோக்கு அம்சமாக போர்கோழிகள் இருக்கலாம் என ஊகித்தேன். கிட்டத்தட்ட 12 கூடைகள் இருந்தன. வெளியே நின்ற சேவல்கள் கழுகு பார்வையுடன் நிமிர்ந்து நோக்கி கடந்து சென்றன. இரண்டு குடிசைகள் வேயப்பட்டிருந்தன. ஓலைக்குடிசைக்குள்ளிருந்து புகையும்  பதனீர் காய்க்கும் வாசனையும் ஒருசேர எழுந்தன.

 

வாசனையை வைத்து பருவம் வரவில்லை என நினைத்துக்கொண்டேன். ஆனால் நாங்கள் சற்றுமுன் இங்கு வந்திருந்தால் கண்டிப்பாக முதலிலிருந்து அனைத்தையும் பார்த்திருக்கலாம். பதனீர் காய்க்கும்போது முன்று வகையான வாசனைகள் கிடைக்கும். முதல் வகையானது எங்களூரில் காய்க்கும் அக்கானி கஞ்சிக்கு ஒப்பானது. பதனீரில் அரிசி மாவிட்டுச் செய்யும் காலை உணவது. அடுப்பிலிருந்து இறக்கும்போது களிபோல பதனீரின் சுவையுடனும் மெல்லியதாக பதனீரின் வாசனை கொண்டதாகவும் இருக்கும்.

 

அதன் பிற்பாடு கருப்பட்டி காப்பியின் வாசனையும் பதனீரின் வாசனையும் கலந்து எழும் ஒரு வாசனை எழும்பும் அப்போது மண்டியின் நிறத்தில் பதனீர் மாறிவிட்டிருக்கும். இந்த நேரத்தில் தான் துடுப்பு எனும் பனை மட்டைகொண்டு காய்க்கப்படும் பதநீரை துழாவுவார்கள். இத்தனைக்கும் சுமார் இரண்டு மணி நேரங்கள் கடந்துவிட்டிருக்கும். பற்றியெரியும் நெருப்பு பெரிய தகர டப்பாவின் கீழ் எரிந்துகொண்டிருக்கும்.

 

இதற்குப் பின்பே ஒரு துள்ளிபருவம் எனும் பாகு பருவம் வரும். பனம் பாகின் மணம் வருகின்ற நேரம் இது. இந்த நேரத்தில் கண்டிப்பாக பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்துவிடுவார்கள். இதற்கு மிஞ்சி அடுப்பிலிருந்தால் தீய்ந்துவிடும். கருப்பட்டி வாசனை ஊற்றி வைத்து ஆறியபின்பே கிடைக்கும். அதிலும் புகையில் இட்ட நாட்பட்ட கருப்பட்டிகளின் வாசனை மெல்லிய வேறுபாட்டுடனும் இருக்கும்.

பதநீர் காய்ச்சும் பெண்மணியுடன் சத்ய நாராயணவும் நானும்

பதநீர் காய்ச்சும் பெண்மணியுடன் சத்ய நாராயணவும் நானும்

அந்த சோலை என்னை எனது சிறு பிராயத்திற்கு கொண்டு சென்றது. அந்த இடமே 30 ஆண்டுகள் பின் தங்கி இருந்தது போல தான் தோன்றியது. மிக உக்கிரமான தீ கிழிருந்து எரிந்து கொண்டிருந்தது. நடுவயது பெண்மணி ஒருவர் தலைமுதல் கால் வரை வியர்வையில் நனைந்தபடி துடுப்பிட்டுக்கொண்டிருந்தார் மிக நீளமான பனை மட்டை. அப்படி இல்லாதிருந்தால் அந்த அடுப்பிலிருந்து எழும் அனலின் முன் நிற்கவியலாது. நான் நினைத்தது போலவே மிக அகன்ற பாத்திரத்தில் அங்கே கருப்பட்டி காப்பி நிறத்தில் பதனீர் திளைத்துக்கொண்டிருந்தது. உழைப்பவனின் நிறத்தில் வந்து கலந்த வியர்வை போல் அதன் நிறம் காணப்பட்டது. ஆம் உழைப்பின் சாரமல்லவா கருப்பட்டி.? பனைத்தொழிலாளி சிந்திய வியர்வை துளிகளின் நிறையல்லவா கருப்பட்டி?

 

எனது சிறு பிராயத்திலிருந்து இன்றுவரை சுமார் 30 ஆண்டுகாலத்தில் பனை சார்ந்த தொழிலில் எந்த வித மாற்றமும் இல்லை என்பதற்கு இதுவே சான்று. தொழில் நுட்பங்கள் எங்கோ செல்லுகின்ற இந்த காலத்தில்கூட, நம்மால் எவ்வகையிலும் பனைத்தொழிலாளர் படும் துயரங்களில் இருந்து அவர்களுக்கு மீட்பளிக்க இயலவில்லை என்பதே குறை. குறைந்த பட்சம் அவர்களுக்கான ஒரு மின்சார அடுப்பாவது நாம் கண்டுபிடித்து வழங்கியிருக்கவேண்டும். அரசு மின்சார அடுப்புகளையும் இலவச மின்சாரத்தையும் வழங்கியிருக்கவேண்டும். எந்த விதமான உதவிகளும் நாம் பனைத்தொழிலாளர்களுக்குச் செய்யாமல் தொழில் நசிந்துவிட்டது எனக் கூறுவது பயனுள்ள ஒன்றாக அமையாது. நமது நாக்கின் சுவை நரம்புகளுக்காக நமது ஆரோக்கியத்திற்காக பாடுபடும் ஒரு சமூகம், மாற்றமே இல்லாமல் இருந்தால் அழிந்துவிடும் என்பதே உண்மை.

பதநீர் காய்ச்சும் பணியில்

பதநீர் காய்ச்சும் பணியில்

நான் சற்று நேரம் உங்களுக்கு உதவி செய்யலாமா எனக் கேட்டு அவர்களிடமிருந்து அந்த துடுப்பை வாங்கிக்கொண்டேன். வெக்கை என்மேலும் அடித்தது. சட்டைக்குள் வியர்த்து வடிந்தது. மென்மையாக துழாவிக்கொண்டிருந்தேன். வேகமாக கலக்கினால் பதனீர் சிந்திவிடும். ஒவ்வொரு துளியும் வியர்வையால் பெறப்பட்டது. பதனீர் பெறுவதற்கு பனைத்தொழிலாளியின் குடும்பங்கள் இழக்கும் வியர்வைத் துளிகள் எந்த பணத்தினாலும் ஈடுசெய்ய முடியாதது. எனது எண்ணங்கள் காலத்தால் பின்னோக்கிச் சென்றன.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (37)

ஜூலை 17, 2016

பனையும் வாழ்வும்

நொறுக்கப்பட்ட பனைமரங்கள்: செங்கல் சூளைக்கு முன்பு

நொறுக்கப்பட்ட பனைமரங்கள்: செங்கல் சூளைக்கு முன்பு

எங்களை அழைத்துச் செல்ல ஒரு வாலிபனும் அவனோடு இரு சிறுவர்களும் வந்திருந்தார்கள். அவர்களை பின் தொடர்ந்து சென்றோம். அங்கிருந்து நாங்கள் கிளம்பிச்சென்ற வழியில் ஒரு செங்கல் சூளையைப் பார்த்தோம்.  சுற்றிலும் நான் பார்த்தபோது அதன் வெளிப்புறம் சாலையோரத்தில் அனேக பனைமரங்கள் வெட்டுண்டு கிடந்தன. சாலைஓரத்தில் பனை மரங்கள் துண்டுதுண்டாய் கிடப்பதைப் பார்க்கும்போது ஒரு போர்க்களத்தில் வெட்டுண்டு கிடக்கும் வீரர்களின் கரம் கால்கள், சதை தொகுப்புகள் போன்றே தோன்றியது. கரிய தோல்களின்  உள்ளிருந்து வளிப்படும் வெள்ளைச் சதைகள் போல . சற்றே  நெஞ்சம் நின்று அதிர்ந்தது .  எவ்வகையிலும் ஈடு செய்ய இயலாத இழப்பை கண்முன்னால் காண்பது எளிய காட்சி அல்ல. மகாபாரதப்போரின் ஒரு மாற்று வடிவாகவே எனக்கு முன்னால் இக்காட்சி கலங்கிய கண்களில் தெரிந்தது.

பனைமரங்களே பொதுவாக செங்கல் சூளைக்கு எரிக்க பயன்படுகிறது. செங்கலுக்கு கிடக்கும் சிவந்த நிறம் பனை மரத்தை எரிப்பதினால் தன் வருகிறது என்று கூறுகிறார்கள். உறுதியாக அப்படி சொல்லமுடியுமா தெரியவில்லை. செங்கலுக்கு ஏன் சிவந்த நிறம் தேவை? சொல்லத்தக்க  காரியம் ஒன்று உண்டென்று சொன்னால், பனை மரம் மிக மலிவாக கிடைப்பது தான். சுமார் 200 முதல் 1000 ரூபாய்க்குள் வாங்கிவிடலாம்.

ஒரு மரம் வளருவதற்கு சுமார் 15 வருடங்கள் ஆகின்றன. பயன்  தரும் மரங்களிலேயே மிக அதிக நாட்களை எடுத்துக்கொள்ளும்  தாவரம் பனை. “தென்னையை  வைத்தவன்  தின்னுட்டு செத்தான் பனையை வைத்தவன் பாத்துட்டு செத்தான்” என்பது எங்கள் ஊரில் சொல்லப்படும் பழமொழி. அதாவது தென்னை மரத்தை வைத்தவன் அதன் பலனை அனுபவித்த பின்பே மரிப்பான் ஆனால் பனை மரத்தை வைத்தவர் தனது வாழ்நாளில் அதன் பலனை அனுபவிப்பது இல்லை எனும் பொருளில் சொல்லப்பட்ட ஒன்று. பொதுவாக பனைமரத்தின் வயதும் மனித வயதும் ஒன்றுபோல் இருக்கவேண்டும் என்றே நான் கருதுகிறேன். எனது வாசிப்பிலும் ஒரு சில இடங்களில் கூறப்பட்டவைகளை பொருத்திப் பார்க்கும்போது கண்டிப்பாக மனித வாழ்வுடன் பனை மரத்தின் வாழ்வும் ஒன்றாக இருப்பதே சரியானது என்று எனது ஆழ்மனம் சொல்லுகிறது. ஆனால் இது குறித்து திட்டவட்டமாக எதையும் என்னால் உறுதி செய்ய முடியவில்லை. காரணம் எனது வாழ்வில் நடைபெற்ற சமீபத்திய ஒரு நிகழ்ச்சி.

நான் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த போது என்னோடு பானைத்தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றிய ஷைன்ஸ் ராஜ் என்னை கூப்பிட்டார். அண்ணா பத்து வருடங்களுக்கு முன்பு நாம் நட்ட பனை மரங்கள் முளைத்திருக்கின்றன என்றார். உண்மையிலேயே அந்த சம்பவத்தை நான் மறந்துவிட்டிருந்தேன். அவர் அழைத்ததும் தான் ஞாபகம் வந்தது. செறுவாரக்கோணம் ஆப்ஸ் நினைவு சி ஏஸ் ஐ ஆலயத்தின் முன்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தின் அருகில் விதைத்திருக்கிறோம். பல மரங்கள் மற்றும் முட்செடிகள் வளர்ந்திருக்கின்ற இடத்தில் பனை கணுக்கால் உயரமே வளர்ந்திருக்கிறது. அவை அவ்விதம் குறுகி நிற்பதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. என்னைப்பொருத்தவரை இது 10 வருடங்களுக்கு நாங்கள் இட்ட விதைகளாயிருந்து இப்போது தான் இவ்வளவு உயரத்தை எட்டியிருக்குமென்று சொன்னால், கண்டிப்பாக அவைகள் வளர்ந்து பயன் தர குறைந்த பட்சம் முப்பதிலிருந்து நாற்பது வருடங்கள் வரை  ஆகலாம். பனையின்  மூப்பும் நூறு வருடங்களுக்கு அதிகமாக இருக்கலாம்.

பல வருடங்களாக பனை வளர்ச்சியின் பருவத்தை பட்டியலிடவேண்டும் என நினைத்தும்  அது செயல்பாட்டில் வடிவம்பெறாத குறை எனக்கு உண்டு. தாவரவியலாளர்கள் தங்களது கல்லூரிகளில் இதை முயற்சித்துப் பார்க்கலாம். தனிப்பட்ட மனிதர்கள் செய்ய இயலுவதை விட கல்வி நிறுவனங்களாக, தாவரங்கள் குறித்த அடிப்படை புரிதல் கொண்டவர்கள், மாணவர்களின் உதவியோடு  இவைகளை செய்வது பயனுள்ளதாகவும் எளிதாகவும் இருக்கும்.

பெண் பருவமடையும் நேரத்தை ஒத்ததே பனை பருவமடையும் நேரமும் என கூ. சம்பந்தம் தனது பனைத் தொழில்; உண்ணா பொருட்கள் எனும் நூலில் குறிப்பிடுகிறார். வேறு சில இடங்களிலும் 12 வருடத்தில் பனை மரம் பயன் தரும் என கூறக்கேட்டிருக்கிறேன். ஆயினும் சரியான முடிவுக்கு வர இயலவில்லை. எப்படி இருந்தாலும் பனை மரங்கள் இன்று மலிவான மரமாக மாறிவிட்டது. 12 முதல் 20 வருடமான பயன் தரும் எந்த மரமும் இத்துணை மலிவான விலைக்கு விற்கப்பாடாது என்பது உறுதி.

என்ன செய்யலாம் என நினைத்தபோது தோன்றியது இதுதான். தேசிய பறவை தேசிய மிருகம் இவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பனைகளுக்கு கிடைக்கவேண்டும். பனைமரத்தை வெட்டுவது சட்ட விரோத செயலாக அறிவிக்கப்படவேண்டும். மாநில மரத்திற்கு ஏற்படும் சிதைவு, அழிவு மாநிலம் எதிர்கொள்ளும் அவமதிப்பாக கருத்தப்படவேண்டும். பனைமரத்தை வெட்டுமுன்   அல்லது மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதி பெற நிற்பந்திக்கலாம். அவ்விதம் அனுமதி பெற வருபவர்கள் இரட்டிப்பாய் பனைமரங்களை நட்டு 10 வருடங்கள் காத்திருந்து அவற்றின் சான்றிதழ் பெற்றே பழைய மரத்தை வெட்ட அனுமதி பெறவும் நிற்பந்திக்கலாம். சட்ட வல்லுனர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இணைந்து செய்யும் பணி இது. எப்படியாயினும் உடனடியாக பனை மரத்தை தடுக்க ஏதேனும் செய்யவில்லை என்று சொன்னால், நம்மால் பனை மரத்தைக் காக்க இயலாது.

பனை மரங்களின் அழிவுக்கும் செங்கல் சூளைகளின் பெருக்கத்திற்கும் பெரும் தொடர்பு இருப்பதாக எண்பதுகளில் விரிவான பனை சார் ஆய்வுகளை செய்த  டி ஏ டேவிஸ் குறிப்பிடுகிறார். பனை தொன்மையின் அடையாளமாகவும் செங்கல் நவீன வளர்ச்சியின் அடையாளமாகவுமே நான் பார்க்கிறேன். தொன்மையை எரித்து சாம்பலாக்கும் வளர்ச்சியில் நாம் வேகமாக சென்றுகொண்டிருக்கிறோம். ஒன்றுக்கும் உதவாத பனைமரங்களை நாங்களே வெட்டிக்கொள்ளுகிறோம் என

சொல்லும்போது பனை ஏறும் தொளிலாளர் இல்லாத இடங்களில், பனை மரம் பயனற்றவை என கருத்தப்படும் நவீன மனதுக்கு அவை இடத்தை அடைக்காமல் இருந்தால் சரி என்றே தோன்றுமாயிருக்கலாம். ஆகவே இலவசமாய் கூட வெட்டிக்கொண்டு போய்விடுங்கள் என்று சொல்லுமளவு பனை மரத்தை பதம் பார்க்க எளியவழிகளை அறிந்து வைத்திருக்கின்றனர் செங்கல் சூளை முதலாளிகள். அதில் ஆந்திராவோ குமரியோ வித்தியாசம் இல்லை.

எந்து வீட்டின் அருகில் வாழும் ஒரு குடும்பத்தினர் வைத்திருக்கும்  80 ஏக்கர் நிலபரப்பில், சுமார் 500 மரங்களை தங்களது செங்கல் சூளைக்கு பயன்படுத்தியிருக்கின்றனர். பிற்பாடு பனைமரத்தின் பயனறிந்து அதை வெட்டுவதை அடியோடு நிறுத்திவிட்டனர். ஆனாலும் தங்களிடம் தற்போதுள்ள  500 மரங்களை எப்படி பயன்படுத்துவது என்ற கேள்வியுடனே இருக்கின்றனர்.

நாங்கள் அந்த பகுதியைக் கடக்கையில் எங்களைத் தாண்டி ஒரு கொம்பேரி மூர்க்கன் எனும் பாம்பு சாட்டையாய் மின்னி மறைந்தது. பனைமரம் சார்ந்து வாழும் ஊர்வனவற்றில் கொம்பேரி மூர்க்கனும் ஒன்று என்பதை பனைமர வேட்கைப் பயணத்தின் இறுதியில் எங்களோடு இணைந்துகொண்ட ஹாரிஸ் பிரேம் அவர்களின் புகைப்படம் வாயிலாக பிற்பாடு அறிந்துகொண்டேன். தமிழகத்தின் சூழலியலை தீர்மானிப்பது பனைமரம் தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. பனையை இழந்து நாம் எவ்வித் வளர்ச்சியையும் எட்டிவிட இயலாது. அந்த அளவிற்கு பனை சார்ந்த ஒரு பல்லுயிர் சூழலின் அடினாதமாக பனைமரம் இயங்கி வந்துள்ளது.

பால்காரரின் சைக்கிளில் பனைஓலை பெட்டி

பால்காரரின் சைக்கிளில் பனைஓலை பெட்டி

அங்கிருந்து சற்று தொலைவுதான் சென்றிருப்போம் ஒரு சைக்கிள் நிற்பதைப் பார்த்தோம். அந்த சைக்கிளின் பின்னால் ஒரு ஓலைப் பெட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து வாகனத்தை நிறுத்தினோம். அந்த ஓலைப் பெட்டியின் அருகில் சென்றபோதுதான் அது பனைத் தொழிலாலர்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு வாகனம் என்றும் அது பால்காரருடைய வண்டி என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. உள்ளே ஒரு சிறிய பிளாஸ்டிக் பால் கேன் வைக்கப்பட்டிருந்தது. இது இன்னுமொரு  திறப்பை எனக்கு கொடுத்தது. ஓலைகளின் பயன்பாடு ஆந்திராவிலும் இருந்திருக்கிறது, ஆனால் அவை இன்றையதினம் அருகிவிட்டது என்பதே. காரணம், பனை ஓலை ஒரு முக்கிய பயன்பாட்டு பொருள். அந்த பொருளை உபயோகிக்காமல் பனைத் தொழில் நிறைவு பெறுவதில்லை.

பனைஓலைப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பால் கேன்

பனைஓலைப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பால் கேன்

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (36)

ஜூலை 16, 2016

ஓலை காலம்

நாங்கள் தேடிய நபர் வருவதாகவும் அதுவரை காத்திருக்கவும் சொன்னார். நாங்கள் அங்கிருந்த ஒரு வீட்டின் முன்னால் வயதானவர் ஒருவர் ஓலைகளைக்கொண்டு முடைந்து கொண்டிருக்கும் பகுதி நோக்கி போனோம். நேர்த்தியாகவும் வேகமாகவும் முடைந்துகொண்டிருந்தார். முடைதல் சற்று வித்தியாசமாக இருந்தது. பொதுவாக குமரி மாவட்டத்தில் முக்கு மடக்கி பின்னுதல் எனும் வகையே உண்டு, அது பாய் ஆனலும் சரி கடவப்பெட்டியானாலும் சரி. இங்கோ தாத்தா வேறு விதமாக பின்னியிருந்தார். கிழ்பகுதி பின்னல்கள் போல முடிவுற்றது, விலா பகுதி பாய் போன்று இருந்தது, பெட்டியின் விளிம்பு முக்கோண வடிவத்தில் மேலும் கீழுமாக இருந்தது. எதற்கக எனக் கேட்டோம். அதற்கு அவர். பனங் கருப்பட்டிகள் வைக்க எனக் கூறினார்.

பனையோலை வேய்ந்த  வேறொரு குடிசை

பனையோலை வேய்ந்த வேறொரு குடிசை

எழுபது வயதுக்குமேல் இருக்கும் அவருக்கு தெரிந்த இந்த பின்னல் முறைகள் இளய சமூகத்தினர் எவருக்கும் தெரியுமா என தெரியவிலை. பேசிக்கொண்டே பின்னினார். மிகவும் உற்சாகமாக அவர் இந்த பணியை அவர் ஈடுபாட்டுடன் செய்தார். இளைஞர்கள், சிறுவர்கள் முதியோர் அனைவரும்  எங்களை சுற்றி கூடிவிட்டனர்.  நான் உற்சாக மிகுதியால்  அந்த தாத்தாவை ஓலையில் வரைத்தேன். அனைவருக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டது ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். தத்தாவோ கருமமே கண்ணாக இருந்தார்.

ஓலை ஒரு மகத்தான பொருள். அதுவே என்னை பனையின் பால் ஈர்த்தது. முடிவிலா வடிவங்கள் அதிலிருந்து கிளைத்தெள முடியும். அது பெறுகின்ற வடிவங்கள், கலைஞனையும் கவிஞனையும் ஒன்றுகூட்டும், கற்போறையும் விற்போரையும் அது தனதாக்கிகொள்ளும். ஓலைகள் பனையின் உள்ளிருந்து வருவது போல் பனை சார் எண்ணங்களும் குருத்து வரும். ஓலை வாழ்வு நமக்குள் இருக்கும் ஆதி கால உறவுகளை மீட்டெடுக்கும். உலகம் முழுவதும் ஓலையில் நாம் பயணம் செய்யலாம். எனது சிறு வயதில் பாய்மரக் கப்பல் என ஒன்று குறித்து கேள்விபட்டபோது அது பனையோலையில் தாம் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பது எனது முதிரா மனதின் புரிதல். ஆனால் பனைத் தொழிலாளர்கள் தங்கள் தொழில் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தும் எண்ணற்ற கயிற்று முடிச்சுகள் மாலுமிகள் கப்பல்களில் பயன்படுத்துவதற்கு ஒத்திருப்பதையும் காண முடியும். ஏன், பனைமரங்கள் பெரும்பாலும் கடற்கரை ஓரங்களில் தான் தழைத்து ஓங்கி வளருகின்றன.

ஓலைகள் இன்றைய வாழ்வில் சொற்களின் திரளாக எஞ்சி நிற்கிறது. ஓலை வந்தது என்பதை கடிதத்தைக் குறிக்கவும், ஓலையில் எழுதப்பட்டது என்பது ஆவணத்தையும், ஏடு வாசித்தல் என்பது அய்யாவழியினரின் புனித நூல் அகிலத்திரட்டை வாசிப்பதும் என பொருள் கொள்ளப்படுகின்றன. இன்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் திருமண அறிவிப்புகளைச் சொல்லுவதகு பெயர் ஓலை வாசித்தல் என்பது தான். முற்காலங்களில் மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கு ஓலைகளின் ஓரத்தில் மஞ்சள் தடவுவதும் மரண அறிவிப்புகளைக் சுமந்து வரும் ஓலையின் ஓரத்தில் சுட்டு கரியாக்கி விடுவதும் துக்கத்தை வெளிப்படுத்தும் காரியங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

எங்கள் விட்டின் அருகில் ஓலையில் மந்திரங்கள் எழுதும் ஒரு தாத்தா இருந்தார். அவருக்கு வைத்தியமும் தெரியும். நன்றாக மிருதங்கம் வாசிப்பார். அவர் தன்னைடமிருந்த ஓலைச்சுவடிகளில் ஒன்றை எனக்குக் பரிசாக கூட கொடுத்திருக்கிறார். ஒருநாள் நான் குருத்தோலைகளை எடுத்துச் செல்லும்போது என்னை அழைத்தார். நான் வைத்திருந்த குருத்தோலைகளை வாங்கி பார்த்துவிட்டு, அதிலிருந்த ஒன்றை அவர் எடுத்துக்கொண்டார். அந்த ஓலை வண்டு துளைத்ததாக இருந்தது. நான் இந்த ஓலை எப்படி உங்களுக்கு பயன்படும் எனக் கேட்டேன் அதற்கு அவர் கரிச்சை கடிச்ச ஓலையிலே தான் எந்திரம் வரைய வேண்டும் என்றார். அவர் அனேகருக்கு மந்தரித்து எழுதிய தாயத்துக்களை அணிவித்து விடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

ஏன் வண்டு கடித்த ஓலைகளை தெரிவு செய்யவேண்டும்? இந்த கேள்விக்கு விடையளிப்பது சுலபமல்ல. பனை சார் ஆய்வாளர்களும், தாவரவியலாளர்களும், பூச்சியியலாளர்களும், ஓலை சுவடி பாதுகாப்பவர்களும், மந்திரம் எழுதுபவர்களும் இணைந்து செய்ய வேண்டிய ஆய்வு. ஆனால் எளிமையாக கூறத்தக்க ஒன்று உண்டு. ஓலை பயன்பாடு மிக முக்கியமாக இருக்கும்போது குறையுள்ள வண்டு துளைத்த ஓலைகளை வீட்டு பயன்பாட்டிற்கோ சுப காரியங்களை எழுதவோ பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அவைகளே அமானுஷ்யமான மந்திரம் எழுத பயன்பட்டிருக்கும்.

பனையை தாலம் என்றும் கூறுவார்கள். தாலம் என்பது விரிந்த பாத்திரம் எனவும் பொருள் படும். ஓலை விரிந்த பாத்திரமாக செயல்படுவாதால் அவ்விதம் இருந்திருக்குமோ. உலகத்தைக் குறிக்கவும் தாலம் எனும் வார்த்தை தமிழ் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. தாலம் எனும் வார்த்தை மருவியே தாலி என்றாக மருவியிருக்கிறது என்றும் கூறுவார்கள். அதற்கும் காரணம் உண்டு. முற்காலத்தில் அணிகளில் ஓலை அணி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. குறிப்பாக காது வளர்க்கும் வேளைகளில் ஓலையை சுருட்டியே காதை பெரிதாக்கியிருக்கிறார்கள். கவுதமபுத்தரின் காதை நோக்கும்போதெல்லாம் அந்த வளர்ந்த காதில் நுழைந்து சென்ற பாக்கிய ஓலைகளை நான் நினைத்துக்கொள்வேன்.

அவ்விதமாகவே திருமண சடங்கிலும் மந்திரங்கள் எழுதப்பட்ட ஓலைகளை அணிதல் மரபாக இருந்திருக்கலாம். தாலத்தில் இருந்து வந்ததாலேயே தாலி என பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் டாலிஸ்மான் (Talisman) எனும் வார்த்தை கூட தாலம் தாலி என்பவற்றிலிருந்து பிறந்ததாக அறிகிறோம். கற்காலம், போல ஓலை காலம் என ஒன்று இருந்திருக்கும். அவைகளை நாம் குறிப்பெடுத்து வைக்க தவறிவிட்டிருக்கிறோம். வேடிக்கை என்னவென்றால் நமது குறிப்புகள் யாவும் ஓலையிலே பாதுகாக்கப்பட்டன என்பதுதான்.

எனது அம்மா தான் ஓலைகளை பள்ளிக்கு எடுத்துச் சென்ற இறுதி தலைமுறை. சுமார் எழுபது வருடங்களுக்கு முன் பள்ளிகூடம் செல்லும்போது ஆசிரியர்கள் அவர்களது கையில் சிறிய ஓலையை கொடுப்பார்களாம். உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் யாவும் அவ்விதம் அவர்கள் கற்றனர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பூவார் அருகிலிருக்கும் எனது நண்பன் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கே அவர்கள் தங்கள் வீட்டு பத்திரத்தைக் காண்பிக்கிறோம் எனக் கூறி ஒரு ஓலைச் சுவடியைக் காண்பித்தனர். அவர்கள் அதை என்னிடம் காண்பித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நான் பனை மரங்களையும் அது சார்ந்த அனைத்தையும் விரும்பினேன் என்பது ஒன்று. இரண்டாவது அதில் எழுதியிருந்த எழுத்துருக்கள் தமிழ். ஆச்சரியமான உண்மை ஆனால் வாசிக்கும்போதோ அவை மலையாள மொழியில் ஒலித்தது.

ஓலைகள் திருவிழாக்களில் முக்கிய இடம் வகித்தன. அதற்குக் காரணம் அவைகளில் இருந்து புறப்படும் நறுமணம் என்றால் மிகையாகாது. எனது பெரியம்மா மகனுடைய திருமணம் ஒழுங்கானபோது நாங்கள் ஓலையில் திருமண அழைப்பிதழ்களை நண்பர்களுக்கு மட்டும் கொடுத்தால் என்ன என யோசித்தோம். ஆனால் அப்போது நான் மும்பையிலிருந்தேன். என்றாலும் எப்படியாவது முயற்சி செய்ய வேண்டும் என நினைத்து, எனது அத்தானிடம் கேட்டேன். மும்பையில் மலாட் என்ற பகுதியைத் தாண்டி  மட் என்று  சொல்லப்படுகின்ற இடத்திற்கு என்னை அழைத்துக்கொண்டு சென்றார். அங்கே அப்போது பனையேறி தமிழகத்திலிருந்து வந்திருந்தார். எங்களுக்கு வேண்டிய ஓலைகளைக் கொடுத்தார் அதை வங்கிக்கொண்டு வந்தோம். ஓலைகளை உடனடியாக காய போடவேண்டும். அப்படியே அவைகளை பனியிலும் போட்டுவிடக்கூடாது. ஆகையினால் மாலை வேளையில் அந்த ஓலைகளை எடுத்து மாடிப்படியில் ஒதுக்கி போட்டிருந்தேன். காலை வேளையில் பக்கத்து வீட்டிலிருந்த பாட்டி கேட்டார்கள் ஆமா அது என்ன மணம்? அவர்கள் மருமகளும் அதையே கேட்டார்கள். ஓலையிலிருந்து வந்த அந்த வாசனை அனைவருக்கும் பிடிக்குமோ என்ன என்று எனக்குள் இருந்த சந்தேகம் அன்றே போய்விட்டது.

ஆகவே தான் ஓலை தோரணங்கள் மலர்களுக்கு இணையாக திருவிழாக்களில் இடம்பிடித்தன. திருவிழா நேரங்களிலப்பங்களைச் சுடுவதற்கும்  மணம் வீசும் பனைஓலைகளே தெரிவு செய்யப்பட்டன. அப்படியே தொன்மையான கார்த்திகை திருநாள் அன்று, அரிசி மாவுடன் வசனை பொருட்களும் பாரம்பரிய இனிப்பும் சேர்த்து பனை ஓலைகளில் அவித்த கொழுக்கட்டை எனும் அப்பம் செய்யும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (35)

ஜூலை 16, 2016

பனையின் நிழல்

சத்ய நாராயணா என்னை எங்கே அழைத்துச் செல்லுகிறார் எனத் தெரியாது. ஆனால் அவர் தனக்கு தெரிந்த மக்களிடம் பேசி எனக்கு சிறந்த ஒரு இடத்தை காண்பிக்கும்பொருட்டு அவர் முயற்சிக்கிறார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது. பனை மரம் சார் பயணங்களில் உள்ளூர் ஞானம் பெற்றவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் நாம் பெரிதாக எதையும் கண்டடைய முடியாது. சத்ய நாராயணா அவ்விதத்தில் எனக்கு அமைத்துத்தந்தது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம். நாங்கள் சென்று சேர்ந்தபோது மணி பத்து ஆகிவிட்டிருந்தது.

பனைக்குடில்

பனைக்குடில்

ஆனால் சத்ய நாராயணா நினைத்ததுபோல் ஒன்றும் சரியாக அமையவில்லை. நாங்கள் தேடி வந்த நபரை காணவில்லை. அவரை கிராமம் முழுக்கத் தேடினோம். அப்போது அந்த கிராமமே எங்களுக்காக பல விஷயங்களை திறந்து வைத்திருக்கிறதை காணமுடிந்தது. நாங்கள் தேடிய நபரைக்குறித்து விசாரித்த இடத்திலேயே மிக நேர்த்தியாக கட்டப்பட்ட ஒரு பனைக்குடிலைப் பார்த்தோம். கூம்பு வடிவத்தில் பென்சில் முனைபோல் சரிந்து வரும் கூரையமைப்பு. இவ்விதமான கூரைகள் பழங்குடியினரின் குடியிருப்புக்களிலே  நாம் அதிகமாக காணமுடியும்.  நம்மைப்போல் முன் அறை பின் அறை சமையலறை குளியலறை கொண்ட குடியிருப்புகள் அல்ல. தங்குவதற்கான தனி வளை அல்லது தனிக்கூடு. அதிகப்படியாக முன்னால் இன்னும் சற்று நீட்டி அதில் சமையல் செய்யும் இடமாக மாற்றியிருந்தார்கள்.

பனைக்குடில் முன்னால் நான்

பனைக்குடில் முன்னால் நான்

இக்குடிசையின் அமைப்பு மிக எளிமையானது. நடுவிலே ஒரு ஒற்றைத் தூண். அது பனந்தடியில் உயர்ந்து நிற்கும். அதைத் தொடர்ந்து சுற்றிலும் பனை மர வரிசைகள் மிகவும் சரிவாக கீழிரங்கும். நமது நவீன குடையின் ஒரு தொல் பழங்கால அமைப்பு என உருவகித்துக் கொள்ளலாம். ஆனால் குடை உச்சியின் கால் பகுதியே கவிந்திருக்கும், இவ்விதமான அமைப்புகளிலோ முக்கால் பகுதி கவிந்திருக்கும். சுற்றிலும் பனந்தடிகள் கொண்டே சுவரையும் அமைத்திருந்தார்கள். அந்த வீட்டிற்கு சொத்தக்கார்ரான பாட்டி அங்கே வந்தார்கள். அவர்களை வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இவ்விதமான வீடுகளை நாம் பார்ப்பதரிது. வேய்ந்த பனை ஓலைகளை ஒன்றிணைக்க கூட ஓலையிலிருந்து பெறப்பட்ட ஈர்க்கில்களை பயன்படுத்தியிருப்பார்கள். இங்கோ ஓலைகளையே பயன்படுத்தியிருந்தார்கள்.

ஒற்றைத் தூண் குடிசை அதன் உரிமையாளருடன்

ஒற்றைத் தூண் குடிசை அதன் உரிமையாளருடன்

நான் சிறுவனாக இருக்கும்போது எங்கள் பாட்டி வீட்டின் ஒருபுரம் ஓலைகளால் வேயப்பட்டிருக்கும். ஒரு முறை நான் அவர்கள் பழைய தென்னை ஓலைகளை மாற்றிவிட்டு புதிய ஓலைகளை வேய வந்த போதுதான் எப்படி ஓலை வீடுகளைக் கட்டுகிறார்கள் என புரிந்துகொண்டேன். காலை  அவர்கள் வரும்பொது கக்கத்தில்  பனை ஈர்க்கில் கட்டை கொண்டுவந்தார்கள். அவைகள் பார்ப்பதற்கு  தென்னை விளக்குமாறு போல காட்சியளித்தது. ஆனால் தென்னை விளக்குமாறை யாரும் கக்கத்தில் எடுத்துவர மாட்டார்கள். அந்த ஈர்க்கில் தென்னை ஈர்க்கில் போல தனித்த ஈர்க்கிலாக அல்லாமல்,  சிறிது ஓலையும் மேலிருந்து கீழ்வரை ஒட்டியிருந்தது. இது எதற்கு என கேட்டபொழுது ஓலையை கம்புகளில் கட்டுவதற்கு என்றார்கள். எனது ஒரே பார்வையிலேயே தெரிந்துகொண்டேன், இந்த ஈர்க்கில்கள் மிகவும் பழமையானவைகள் என. உடைத்துப்பார்த்தால் என்ன என்று ஒன்றை உடைத்த போது எளிதாக உடைந்தது. இதை வைத்து எப்படி கட்டப்போகிறார்கள் என எண்ணினேன்.

ஒரு பெரியவர் தனது கரத்திலிருந்த ஈர்க்கில் கட்டை எடுத்து  அதில் தண்ணீர் தெளித்தார், சற்று நேரம் சென்ற பின்னர் அந்த கட்டை வளைத்து அப்படியே தண்ணீர் இருந்த மண் பானைக்குள் சொருகி வைத்துவிட்டார். ஈர்க்கில் உடையாமல் இருந்ததை நான் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் அவர்கள் கூரையின் மேல் ஏறி சிதிலமடைந்திருந்த ஓலைகளை ஒவ்வொன்றாக பிய்த்து கிழே எறிந்தார்கள். அனைத்து ஓலைகளும் கீழிறக்கப்பட்ட பின்பு, அவர்கள் தேனீருக்கு ஒரு இடைவேளை விட்டார்கள். காலை வந்ததுமுதல் சுமார் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் இந்த ஈர்க்கில் நனைந்துகொண்டிருக்கிறது. அதன் பிற்பாடு வந்து ஓலை கட்ட ஆரம்பித்தார்கள்.

முடைந்த தென்னை ஓலையை இரண்டிரண்டாக கொடுக்கவேண்டும். அவைகளை குறுக்காக செல்லும் கம்புகளுக்கு அருகில் வைப்பர்கள். பின்னர் அருகில் வைத்திருக்கும் ஈர ஈர்க்கிலை எடுத்து ஓலைக்கும் கம்புக்கும் உட்புறமாக நுழைத்து வெளியே எடுப்பார்கள். அதன் பின்னர் ஈர்க்கிலை சுற்றி கயிறு போல கட்ட மாட்டார்கள். இரண்டு தும்பையும் எடுத்து ஒன்றாக்கி நன்றாக முறுக்கி அதை முடிச்சிடுவார்கள். ஆச்சரியம் ஆனால் உண்மை பனை ஈர்க்கிலுக்கு அத்தனை நெகிழும் தன்மையும் வளையும் தன்மையும் வந்ததென்று என்னால் நம்பவே முடியவில்லை. ஈரப்பதத்தை அது உறிஞ்சி தக்க வைத்திருந்தது எனக்கு பெரும் ஆச்சரியமான காட்சி.

பனையோலை குடில்களை நான் ஒரு சில இடங்களில் பார்த்திருக்கிறேன். மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் தங்களது நிர்வாக கூடுகைக்கு மாத்தாண்டத்திலும், கோட்டவிளையிலும் அவ்விதம் அமைத்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இரண்டுவிதமான பனையோலை கூரை அமைப்புகளையே  நான் இதுவரைப் பார்த்தது. ஒன்று ஒற்றைச் சாய்வு அல்லது இரட்டை சாய்வு. சுற்று சாய்வில் பனைஓலைகளை அடுக்கி நான் எந்த இடத்திலும் குடியிருப்புகளைப் பார்த்ததில்லை.

ஐக்கிய இறையியல் கல்லூரி நுலகத்தில் ஒரு மிகப்பழைய ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்ட புத்தகம் இருந்தது. அந்த புத்தகத்தின் இறுதிப்பகுதியில் ஆப்பிரிக்காவில் காணப்பட்ட மிகப்பழைய ஆலயத்தின் படத்தை கருப்புவெள்ளையில் பதித்திருந்தார்கள்.  எனக்கு மிக நன்றாக தெரிந்தது அது பனையோலையால் அன அமைப்பு என்று ஆனால் எந்த இடம் என சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அப்பிரிக்கா செல்லவேண்டும் எனும் உந்துதலை அந்தப்படமே எனக்கு கொடுத்தது. இன்றய கோபுரத்தை ஒத்த உயரம் ஆனால் ஒரே சரிவாக ஆனால் ஆலயத்தின் தன்மை அதில் குடிகொள்ளும்படி அமைத்திருந்தார்கள். அந்த கலையுள்ளத்தை நான் காணும் தினம் நான் பேறு பெற்ற நாள்.

என்னைப் பொருத்தவரை ஒற்றைத்தூணும் சுற்று சாய்வும் அமைத்த குடிலை எழுப்பியவனே முதல் பொறியாளன். அந்த அமைப்பை அவன் பனை மரங்களிடமிருந்தே பெற்றிருக்க முடியும் உயர்ந்த துணும் குடைபோல் விரிந்திருக்கும் பனைத் தாவரங்கள் கொடுத்த அளவில்லா மன எழுச்சி கொண்டே இத்தகைய அமைப்பு எழும்பியிருக்க வேண்டும். அவ்வகையில் அந்த பாட்டியின் வீடு தொன்மைக்கு சான்றாக உறுதியோடு நிற்கிறது. அந்த பாட்டியின் வீட்டருகில் இன்னும் ஒரு சில வீடுகள் அவ்விதமாக அமைந்திருந்ததைக் கண்டேன்.

பனையின் நிழலும் சரி பறையன் உறவும் சரி என ஒரு பழமொழி கூறக்கேட்டிருக்கிறேன். இந்த பழமொழி மேலோட்டமாக பார்த்தால், நிழல் தரா மரங்கள் பயனற்றவை எனவும் அது போலவே பறையர் உறவும் பயனற்றவை என்ற பொருளிலேயே பயன்பாட்டில் இருந்துவந்தது. ஆனால் அவ்விதம் ஒரு பொருள் கொள்ளத்தக்க காரணிகள் மிக பிற்காலத்திலேயே பனையின் மேன்மையை அறியாத, மனித பண்புகளின் மாண்பை அறியாத ஒருவரின் கூற்றாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதையே சற்று விரித்து பொருள் கொள்ள முயற்சித்தால் பனையின் நிழல் அதன் ஓலையிலிருந்து வருகிறது. அந்த ஓலை நிரந்தரமான ஒரு தங்குமிடத்தை அமைத்துக்கொடுக்கிறது. ஒரு குடும்பமாக வாழ வழிவகை செய்கிறது எனவே நான் பொருள்கொள்ளுகிறேன். பண்டய தமிழகத்தின் வாழ்வியலில் பனை சாதிகளைக் கடந்தே பங்களிப்பாற்றியிருக்கிறது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 


%d bloggers like this: