பனைமரச் சாலை (20)


பனை இறையியல்

நண்பர் பிரேமுடன் - ஹைதராபாத்

நண்பர் பிரேமுடன் – ஹைதராபாத்

 

காலை எழுந்தபோது கதவு பலமாக தட்டப்படும் சத்தம் கேட்டது, திறந்து பார்த்தால் யரோ ஒருவர் நின்றுகொண்டிருந்தார். என்னவேண்டும் எனக் கேட்டேன். நான் ப்ரேம்  என்றார். மணி என்ன என்று கேட்கப்போய் அப்படியே நிறுத்தினேன். கண்கள் கூசுகின்ற அளவிற்கு வெயில் அடித்துக்கொண்டிருந்தது. 10 மணி ஆகிவிட்டதா? இருங்க சார் ஒரு நிமிடம் என்றபடி, பல் தேய்த்து குளித்தேன். 10 நிமிடத்தில் ஒருங்கி வெளியே வந்தேன். வெளியே போய் பேசியபடி காலை உணவு சாப்பிடலாம் என முடிவு செய்தோம்.

காசா (CASA – Church’s Auxiliary for Social Action ) என்பது நமது தேசம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே செயல்படும் ஒரு கிறிஸ்தவ அமைப்பு. இந்துக்களும் இஸ்லாமியர்களும் சுதந்திர வேளையில் பிரிவுபட்டு நின்ற பொழுது, பிரதமரான நேரு கிறிஸ்தவ தலைவர்களை அழைத்து, பிரிவினை முற்றியிருக்கும் இந்த சூழலில் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் மட்டுமே சமாதான தூதுவர்களாக இருக்க முடியும், ஆகவே இணைந்து தேச சமாதானத்துக்காக பாடுபடுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து சீர்திருத்த திருச்சபைகளும் இணைந்து உருவாக்கியதே காசா. மதமாற்ற எண்ணம் ஏதுமின்றி மக்களின் அடிப்படை தேவைகளுக்காக களமிறங்கியிருக்கின்ற கிறிஸ்தவத்தின் அன்பின் கரம்.

எனது சிறு வயதில் மார்த்தாண்டம் எல் எம் எஸ்  பெண்கள் பள்ளிகூடத்திற்கு ஒரு கிணறு வேண்டும் என கேட்ட பொழுது, காசா அவர்களுக்கு பணமாக கொடுக்காமல் கோதுமை தானியமாக வழங்கியது. ஒரு மிகப்பெரிய லாரி நிறைய வந்த கோதுமையை பள்ளிகூட நிர்வாகத்தார் விற்று அதிலிருந்து கிடைக்கு லபத்தில் கிணறு வெட்ட வேண்டும் என்பது நிபந்தனை. இப்போது எண்ணிப்பார்த்தால் அவர்கள்   கொடுத்த கோதுமை, கஷ்டப்பட்ட விவசாயிகளிடமிருந்து வாங்கி அவர்களுக்கும் நன்மை செய்திருக்கின்றனர். எங்கள் வீட்டிலும் கோதுமை வாங்கினர்.

அதன்பிறகு வந்த நாட்கள் நான் சோற்றுக்காக ஏங்கிய நாட்கள். கோதுமை ஒரு நல்ல உணவு என்று வீட்டில் சொல்லப்பட்டது. கோதுமையை அரைக்க கொண்டு சென்றால் அங்கு வந்த அனைவருமே தெரிந்த முகங்கள் தான். அரிசியில் என்னென்ன பண்டங்கள் செய்தர்களோ அவைகள்  அனைத்தும் கோதுமையில் என்றாகின. கோதுமை தோசை ஜவ்வென்று இழுத்தது. கோதுமை பிடி கொளுக்கட்டை கசந்தது, கோதுமை அடை தொண்டையை அடைத்தது, கோதுமை புட்டு தொண்டையில் விக்கியது. பல்வேறு தேச வரைபட மாதிரியில் சுடப்பட்ட சப்பாத்திகள் பப்படத்திற்கு இணையாக மொறுமொறு என்றிருந்தன. சாம்பாரில் ஊறப்போட்டு அரைமணி நேரம் சென்றபின்புதான் சாப்பிட முடியும். பலவகைகளில் எங்களுக்கு சொதனை வைத்த அந்த கோதுமையை என்னால் நேசிக்க முடியவில்லை. கோதுமை மேல் ஒரு கொலைவெறி வெறுப்பே வந்தது. பல நாட்களுக்கு அந்த கோதுமையை  பள்ளிக்கூடத்தில் வைத்து விற்றார்கள். எங்களைப்போன்ற ஏழைகள் அவைகளை வாங்கி அப்பணியை ஊக்குவித்தார்கள்.  பிற்பாடு கோதுமை பழகிவிட்ட போது கோதுமையும் தீர்ந்துவிட்டது. கிணற்றையும் வெட்டிவிட்டார்கள்.

காசா தன்னை ஏழை விவசாயிகளின் தோழனாக, இயற்கை சீற்றங்களில் உதவும் நண்பனாக மிளிருகின்ற திருச்சபையின் கரம். பெரும்பாலும் திருச்சபையினர் அவர்களை அறிவதில்லை. பல்வேறு முறைகளில் வேடமிட்டு புகைப்படங்களுக்காக சிரிக்கின்ற போலி ஏழைப் பங்காளர்களுக்கே பணத்தை வாரி இறைக்கின்றார்கள். திருச்சபையின் பணம் திருடப்படுகின்றது என கூச்சலிடுபவர்களில் ஒருவர் கூட திருச்சபைகள் இணைந்து செயல்படும் பாங்கினை வாழ்த்துவது கிடையாது. அவர்கள் அதை அறிந்திருப்பதும் இல்லை.

ஆகவே பிரேம் அவர்கள் என்னை பார்க்க வந்தது ஒரு பெரிய ஆசீர்வாதமாக நான் கருதினேன். அவர்கள் ஹைதராபாத் பகுதியில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள். களப்பணியில் ஈடுபடுகிறவரானபடியால் அவரோடு எனக்கு அதிகம் பேசவேண்டி இருக்கும் என எண்ணிக்கொண்டேன். அருகிலேயே உள்ள ஒரு சாலையோர கடையில் நின்று உணவை உண்டுவிட்டு, பேச ஆரம்பித்தோம்.

முதலாவதாக எனது பயணத்தை குறித்து எப்படி விளக்குவது என்று யோசித்தேன். ஆனாலும் பனை மரத்தை குறித்து அவருக்கு விவரிக்க வேண்டி இருக்கவில்லை. தமிழகத்துக்கு அடுத்தபடியாக ஆந்திராவில் தான் பனை மரங்கள் இருக்கின்றன என அறிந்து அத்தோடு தொடர்புடைய நபர்களை தேடி வந்திருக்கிரேன் என்றேன். உடனேயே புரிந்து கொண்டார்கள். நீங்கள் எந்த பக்கம் போகவேண்டும் என சொல்லுங்கள் அந்த பகுதியில் நான் உங்களுக்கான ஆட்களை ஏற்பாடு செய்கிறேன் என உறுதியளித்தார்கள். ஆனால்  அன்று மாலையே நான் சூர்யபேட் சென்று சேரவேண்டிய கட்டாயம் இருந்ததால் என்னால் அன்று அந்த வாய்ப்பை பயன்படுத்த முடியவில்லை. அவர்கள் சூர்யபேட்டிலேயே ஒரு அமர்வை ஏற்படுத்தலாம் என்றார்கள். சென்று சேரும்போது இருட்டிவிடும், அதற்குப் பின்பு அவர்களை சந்திப்பது சாத்தியமாகாது.

அவர்களோடு உள்ள பேச்சின் சாராம்சத்தை தொகுத்துப் பார்த்தால், பனை மரங்கள் மிகுதியாக காணப்படும் பகுதிகளிலும் காசா உயிர்ப்புடன் செயலாற்றுகிறது. ஆனால் பனைத் தொழிலாலர்களை மட்டும் முன்னிறுத்தி காசா சிறப்பான நிகழ்ச்சிகள்  ஏதும் செயல்படுத்தவில்லை. வரும் நாட்களில் பனைத்தொழிலாளர்களுக்கு எதேனும் செய்ய விருப்பம் என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றார்.

கிறிஸ்தவ உலகம் ஒரு மாயைக்குள் சிக்கியிருக்கிறது. எதற்கு பொருளுதவி வருகிறதோ அதையே செய்ய இன்று மக்கள் முன்வருகின்றனர். கோவிலை இடித்து கோபுரம் எழுப்ப வேண்டுமா? நட்ச்த்திர பிரசங்கிகளுக்கு, மிஷனெறி ஸ்தாபனங்களுக்கு, கண் தெரியாதவருக்கு, ஏழைகளுக்கு, குஷ்டரோகிகளுக்கு என ஒரு வழக்கமான உதவி பட்டியலை வைத்திருக்கிறார்கள். யார் வேண்டுமானலும் இவர்களை அணுகி உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், புதிய முயற்சிகள் ஏதும் இன்று சாத்தியப்படுவதில்லை.  அவைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதும் இல்லை. வறட்சி ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்குள் நுழையாமல் உடனேயே காணிக்கை கொடுக்கும் வழக்கமே திருச்சபையால் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது.

பிரேசிலின் ஆர்ச் பிஷப் டாம் ஹெல்டர் கமாரா  ( Dom Helder Camara, a Brazilian archbishop) கூறிய ஒரு கேள்வி சொற்றொடர் உண்டு, “நான் ஏழைகளுக்கு உணவளிக்கும்போது அவர்கள் என்னை புனிதர் என்கின்றனர், ஏழைகள் ஏன் இருக்கின்றனர் என நான் கேட்டால் என்னை கம்யூனிஸ்ட்  என்கின்றனர். ஏன்?”

எனது பயணத்தில் இறையியலையும் சேர்த்துக்கொண்டேன். திருமறை மீள் வாசிப்பிலும், அதன் பொருளை பனைசார்  மக்களை திருச்சபையோடு இணைப்பது எப்படி என்ற கேள்வி என்னுள் ஊடுருவி சென்றுகொண்டிருந்தது.

இறையியல் கல்வியின் இறுதி ஆண்டில் நாங்கள் அனைவரும் ஒரு ஆரதனையை நடத்த வேண்டும். அவைகளுக்கு மதிப்பெண் இடப்படும். ஒருவகையில் நாங்கள் கற்ற அனைத்தையும் சாறு பிழிந்து கொடுக்கவேண்டிய ஒரு முக்கிய நிகழ்வு. அதுவே ஒரு அலகாக அக்கல்வியை நாம் எப்படி உள்வாங்கியிருக்கிறோம் என வெளிப்படுத்தும் நிகழ்வு. அனைத்து மாணவர்களும் மிகவும் சிரத்தையுடன் பங்கேற்கும் ஒரு இறுதி போட்டிக்களம். உலகத்தின் அத்தைனை பிரச்சனைகளும் திருமறையுடன் அலசி ஆராயப்படும் இடம். உலகளாவிய பிரச்சனைகளையும், தேசத்தில் பரபரப்பாக நிகழும் காரியங்களும், சில ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தியல்களையுமே அங்கு பேசமுடியும் என்ற ஒரு மாயை நடமாடிக்கொண்டிருந்தது.

எனது முறை வரும்போது நான் என்ன செய்யவேண்டும் என உறுதி செய்வதற்கு வசதியாக நான்காவது (யோவான்) நற்செய்தி நூலை எங்களுக்கு கற்றுத்தந்த அறிவர் அருட்திரு டேவிட் ஜாய் அவர்களின் வகுப்புகள் பேருதவியாக இருந்தன. நான் யோவான் 12: 12 – 16 வரை தெரிந்து கொண்டு எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை ஒரு மறியல்  போராட்டத்தை போன்று நடத்த அனுமதி கேட்டேன். அனுமதி மறுக்கப்பட்டது.

ஆகவே மாற்றாக என்ன செய்ய வேண்டும் என நினைத்து எனது மாதிரி பிரசங்க நேரத்தை ஒவ்வொன்றாக யோசித்து வரிசைப்படுத்தினேன். என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் அவைகளை எவ்விதம் எதிர்கொள்ளலாம் எனவும் எண்ணிப்பார்த்தேன். ஒருவாறு என்னை தயார் செய்துவிட்டு, எனக்கு உதவி செய்யும் குழுவை சந்திக்க ஆயத்தமானேன். இக்குழுவில் இரண்டு ஆசிரியர்களும்  15க்கு உட்பட்ட மாணவர்களும் பல்வேறு வகுப்பில் இருந்து கலந்து வந்திருப்பார்கள். அவர்களின் கேள்விகளும் சந்தேகங்களுக்கும் நான் விடையளித்தால் தான் என்னால் மேடைக்கே செல்ல முடியும். இதற்கு நேர் முந்தைய வாரம் தான் மற்றொரு மாணவரை எங்கள் குழு திருப்தி இல்லாத ஆயத்தம் என திருப்பி அனுப்பியிருந்தது. ஆகவே கலக்கத்துடனே சென்றேன். ஒவ்வொன்றாக எவ்விதம் ஆயத்தம் செய்திருக்கிறேன் என கேட்டார்கள். நான் பதில் கூற கூற அந்த இடத்திலிருந்த இறுக்கம் தளர்ந்தது. அனைவரும் இயல்பாவதை உணர்ந்தேன். நான் விளக்கி முடிக்கும்போது அனைவரின் முகத்திலும் ஒரு புதிய தரிசனத்தைக் கண்ட மகிழ்ச்சி தெரிந்தது. வாழ்த்தி வழியனுப்பினார்கள்.

நான் செய்தது எளிய மாறுதல்களுடன் ஒரு பாரம்பரிய ஆராதனையையே முன்வைத்தேன். அங்கிக்கு பதிலாக நான் ஒரு பனையேறியின் உடையும் கருவிகளும் அணிந்து பீடத்திற்குச் சென்றேன். மொத்த கூடுகையும் உறைந்து என்ன நிகழப்போகிறதோ என பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து

“இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன்.அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். 10 அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.” (திருவிவிலியம் திருவெளிப்பாடு 7: 9 – 10)

இந்த திருமறைப்பகுதியை துவக்க வாசகமாக நான் வாசித்தேன். இந்த வசனம் அனைவரையும் கட்டிபோட்டது. பொருள் நிறைந்த திருமறைப் பகுதி. அங்கிருந்து துவங்கிய வேகம் பரபரப்பு, ஆர்வம் எதுவும் குன்றாமல் பாடல்களுடனும் குறிப்புணர்த்தும் நிகழ்ச்சிகளுடனும் ஒரு நாடகம் போல உச்சக்கட்டத்தை அடைந்தது.

எனது செய்தி நேரத்தில், குருத்தோலை எவ்விதமாக உலகளாவிய குறியீடாக கிரிஸ்தவ்ர்களுக்கு மாறியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, கிறிஸ்தவ உலகம் நான்காம் நூற்றாண்டிலிருந்து குருத்தோலை திருநாளை அனுசரிப்பது குரித்த ஆவணங்கள் இருந்தாலும், பனை சார் மக்களை இதுகாறும் எண்ணாமல் இருப்பது ஒரு முரண்நகை எனக்கூறினேன். எனக்கு எதிர்வினையாற்றிய பேராசிரியர் என்னை வாழ்த்தி ஆசீர்வதித்தார். இளம் மாணவர்களிடம் அந்த நிகழ்ச்சியின் தாக்கம் மூன்றாண்டுகளுக்கு மேலும் இருந்தது. எனது கனவுகள் இத்தனை வலிமையானது என நான்  கனவிலும் எண்ணியிராத மாபெரும் வெற்றி அது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: