பனைமரச் சாலை (24)


 

ஒன்றிணைக்கும் சரடு

ஓலையில் செய்யப்பட்ட படத்துடன் மகிழ்ச்சியோடு நிற்கும் பனைத்தொழிலாளி

ஓலையில் செய்யப்பட்ட படத்துடன் மகிழ்ச்சியோடு நிற்கும் பனைத்தொழிலாளி

நான் அந்த பனைத்தொழிலாளரோடு பேச்சு கொடுத்தேன். மாலை வேளை பனையேற்றுக்காக அவர் ஆயத்தமாகிக்கொண்டிருந்த அவர், எனது உடைந்த இந்தியை  ஒருவாறு புரிந்துகொண்டார். அவரது தகப்பனார் பனை ஏறுவதாகவும், கள் இறக்கும் தொழிலில் அவர்கள்  ஈடுபட்டிருப்பதாகவும் சொன்னார்கள். அவரது தாயார் அங்கு கள் விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். குடும்பமாக  தொழில் செய்தால்  மட்டுமே பனை தொழில் லாபகரமாக இருக்கும் போலும். பிற்பாடு நான் கண்ட இடங்களிலும் பனைத் தொழிலாளர் என்பவர் ஆணாகவும், விற்பனையாளர்கள் பொதுவாக பெண்களாகவுமே இருக்கக் கண்டேன்.

நண்பருக்கு அணியும் ஓலை கைபட்டை

நண்பருக்கு அணியும் ஓலை கைபட்டை

அவர்கள் இருந்த இடத்தைச் சுற்றி சில ஓலைகள் கிடந்தது. அவற்றை சுட்டிகாட்டி நீங்கள் ஏன் ஓலைகளை பயன்படுத்துவதில்லையா என கேட்டேன், கூரை வேய பயன்படுத்துவோம் என்றார். அந்த குடிசை தான் கள் விற்பனை மையமாக இருந்தது. அவரது தாயார் கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் உள்ளே செல்லலாமா எனக் கேட்டு விட்டு குனிந்து சென்றேன். மிக குளிர்ச்சியான ஒர் அமைப்பு. உள்ளே நிற்பதற்கு வசதியாக இருந்தது. அமர்வதற்கு தரை ஓரங்களில் சற்று மேடாக்கிய அமைப்பு வைத்திருந்தார்கள்.

ஓலையில் பனைத்தொழிலாளியை பிரதி எடுத்தபோது

ஓலையில் பனைத்தொழிலாளியை பிரதி எடுத்தபோது

அந்த சிறிய அமைப்புக்குள் சென்றபோது அங்கே ஒருவர் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார், இருவர் எனக்குப்பின்னால் வந்தனர். அவர்கள் எனது பயணத்தைப் பற்றி கேட்க நான் எனது பயணத்தைக் குறித்து விவரிக்கத் துவங்குமுன்பதாக அந்த பனைத்தொளிலாளியை, எனது படம் வரையும் தன்மைக்கு ஏற்றவிதமாக அமரும்படி கேட்டுக்கொண்டேன். பிற்பாடு அங்கு வந்தவர்களோடு எனது பயணத்தை குறித்து விவரித்தேன். என்றாலும் அவர்களிடம் பனை சார்ந்து அதிகம் கேள்விகள் கேட்க இயலவில்லை. அவர்கள் தங்களை கவுட் சாதியச் சாந்தவர்கள் என சொல்லிக்கொள்ளுகிறார்கள், அல்லது இலங்கையிலிருந்தும் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் 17 விழுக்காடு இம்மக்கள் வாழ்கிறார்கள். வேகமாக முன்னெரி வரும் இச்சமூகத்தில் 5% பனங்கள் விற்பனையிலும், மது விற்பனையிலும், 50% விவசாயத்திலும் 45 %  ஈடுபட்டிருக்கிறார்கள். மஹாராஷ்டிரா, ஒரிஸ்ஸா மற்றும் கர்னாடகாவில் இவர்கள் பரவி வாழ்கிறார்கள்.

சாதியும் பனைமரமும் என்பது ஒரு ருசிகர களம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நாடார் ஜாதியினர் பெரும்பான்மையாக பனை மர தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே தமிழகத்தைப் பொறுத்தவரையில் பனை மரம் சார்ந்த எந்த முயற்சிகளும் ஜாதியின் அடிப்படையில் பார்க்கப்படுவது துரதிருஷ்டம். அதுவே பல சந்தேகங்களையும் கேள்விகளையும் நம்முள் எழுப்புகிறது. ஜாதியைத் தண்டி பனைமரத்தைக் கொண்டு செல்லும் வல்லமை யாருக்கு உண்டோ அவரே பனையைப் பாதுகாக்க இயலும்.

ஜாதி சார்ந்து அனேகர் பனை மரத்தை நேசிக்கின்றதை நாம் அறிகின்ற அதே வேளையில் பனை தொழில் செய்யும் சாதியினரில் பெரும்பாலோர்  அத்தொழிலை விட்டு வெளியேறுவது வெகு சகஜமாயிருக்கிறது. அதற்குக் காரணம் பனைத் தொழில் மரியாதைக்குரிய தொழிலாக இன்று இல்லை என்பதேயாகும்.  இத்தனை காலம் அவர்கள் ஒரு மரபை தொடர்ந்து முன்னெடுத்து சென்றிருக்கிறார்களே அதற்கு நாம் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

முதலாவதாக, தேயிலை தொழிலாளர்களை அங்கிலேயர் அடிமைகளாக கடத்தியது போல நடைபெற்ற சம்பவமாக பனையேற்றுத் தொழிலை நாம் கணக்கிட முடியது.  பனைமரங்கள் திரட்சியாக இருந்த இடங்களில் வாழ்ந்த மக்களின் தெரிவு அது என்பதே சரியான புரிதலாக இருக்கமுடியும். மக்களுக்கு வாழ்வாதாரமும் உபரியும் பனை என்பதாக இருந்த காலம் அது. எப்படி மீன் பிடிக்கிறவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்களோ அப்படி. ஆனால் மீனவ சமூகம் பெற்ற உலக கவனம் முன்றாம் உலகில் வாழும் பனையேறும் சமூகத்தினருக்கு கிடைக்காதது ஆச்சரியமானது. பல்வேறு நிலைகளில் விவசாயம், மீன்பிடி உபகரணாங்கள் வந்தும் பனை சார் உபகரணங்களில் மாற்றமோ நவீனமயமாக்கலோ ஏற்படவில்லை. உலகளாவிய நிலை இது.

இந்தியா முழுக்க பல்வேறு ஜாதியினர் பனை சார் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர், ஏன் தமிழகத்தில் கூட பனை சார் தொழிலில் ஜாதி மத பேதமின்றி அனேகர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. இவர்களைக் குறித்த விரிவான ஆய்வுகள் இல்லை. அவ்விதம் ஆய்வுகள் இல்லாதபோது, இத்துறையில் நாம் புதுமைகளைப் புகுத்துவது சாத்தியமல்ல. முதலில் இவர்கள் சந்திக்கும் பொதுமையான  பிரச்சனைகளைக் கண்டடையவேண்டும் அதன் பின்பே இவர்களுக்கு மாற்று செய்ய ஏதேனும் முயற்சிகள் செய்ய இயலும்.

அவ்விதமான ஆய்வுகளுக்காக நிதி ஆதாரங்களை நெருக்கி பெறுவதும், தமிழகத்தின் மாநில மரம் பதுகாக்கப்படவேண்டும் எனும் உணர்வை மீட்டெடுத்து செயல்முறைப்படுத்துவதும் ஆரம்ப வெற்றிகளையும் பெற வல்லது.

இரண்டே நிமிடத்தில் நான் அவருடைய படத்தை வரைந்து முடித்துவிட்டேன் அனைவருக்கும் மகிழ்ச்சி. அப்படியே அவரது கரத்தில் ஒரு பனையோலை கைபட்டையயும் அணிந்துவிட்டேன்.  அருகிலிருந்தவர் அன்புடன் கள்ளை நீட்டினார். இல்லை எனக் கூறி அங்கிருந்து அவரது தகப்பனார் கள்ளிறக்கிய மரத்தை நோக்கிச் சென்றேன்.

பனைத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்கள் பணியை மிகவும் நேசிக்கின்றனர் என்பதே எனது புரிதல். இத்தனை வேகமாக உற்சாகத்துடன் பணி செய்பவர்களை நாம் பார்ப்பது இக்காலத்தில் அரிது. ஆடி பட்டம் தேடி விதைக்கும் விவசாயி போலவும், கடல் அலையை உணர்ந்து  மீன் பிடிக்கச் செல்லும் மீனவனைப் போலவும் இப்பணி இவர்கள் வாழ்வோடு ஒன்றியது. என்றாலும், இவர்கள் செய்யும் உடலுழைப்பை மதிக்கும் ஒரு தலைமுறை இன்றில்லை. ஆகவே இவர்கள் செய்யும் பணிகளுக்கு ஏற்ற கூலி கிடைப்பதில்லை. நிறைவான லாபம் வராத தொழில்கள் நசிகின்றன

உயர்ந்த பனை உச்சியில் பனைத் தொழிலாளி

உயர்ந்த பனை உச்சியில் பனைத் தொழிலாளி

.

வயோதிபர்களுக்கும் இளைய தலைமுறைக்கும் வித்தியாசம் உண்டு என கேள்வி பட்டிருப்போம். முற்காலங்களில் 60 பனை வரை ஏறி ப்லன் எடுத்த பனைத்தொழிலாளர்கள் உண்டு. இன்றோ 30 பனை என்பது அதிகபட்சம். நான் பார்த்த போது அந்த மனிதர் மிக உயரமான மரத்தில் ஏறிக்கொண்டிருந்தார். நான் அதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆபத்தான பணி

ஆபத்தான பணி

பனை ஏறுவது குறித்து ஒரு சுவையான கதை உண்டு. வெள்ளைக்காரர் ஒருவர் பனையேறி ஒருவர் பனையில் ஏறுவதை முதன் முறையாக பார்த்தாராம். ஆவர் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவரது உதவியாளர் அவரிடம் வந்து அய்யா இவ்வளவு அதிசயமாக என்ன பார்க்கிறீர்கள் என கேட்க. அவரும் அந்த மனிதன் பனையில் ஏறுவதை நான் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றாராம். சரி துரை தானே, பார்காதவற்றை பார்கட்டும் என உதவியாளர் தனது வேலையை கவனிக்க சென்றுவிட்டாராம்.

அந்த துரை மீண்டும் தனது உதவியாளரைப் பார்த்தபோது சொன்னாராம் “நான் அவர் இறங்கும்போது தலையை கீழ் வைத்து இறங்குவார் என்று நினைத்தேன் ஆனால்  தலை மேலேயிருக்கும்படியாகவே அவர் இறங்கினார்”. பொதுவாக பாம்பு, பல்லி, ஓணான், அணில், மரநாய் போன்றவைகள் பனை மரத்தில்  ஏறும் போது தலையை வானம் நோக்கி வைத்துக்கொண்டிருக்கும். கீழிறங்கும்போதோ அவைகள் மண்னைப்பார்த்தே தங்கள் தலைகளை திருப்பிக்கொள்ளும். ஒருவேளை இந்த வித்தியாசத்தை அவர் கண்டிருக்கலாம்.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்த பனைத் தொழிலாளர் மோகு எனும் இடைக் கயிற்றால் பனை மரத்தை பற்றி ஏறிக்கொண்டிருந்தார். தெலுங்கு மொழியில் மோகு என்பது பற்றிக்கொள்ளும் கயிறு என நண்பரிடம் கேட்டு அறிந்துகொண்டேன். பனையை பெண்ணாக, காளியாக வரித்து மாலையிடும் பற்றிக்கொள்ளும் கொளுனனாக பக்தனாக அம்முதியவரைக் கண்டேன். எத்துணை வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர். அவரை இருகரம் கூப்பி தொழுதேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: