பனைமரச் சாலை (25)


கொடுத்துக் காய்த்த கரங்கள்

மிகவும் உயர்ந்த மரத்தில் அந்த வயோதிப மனிதர் ஏறி உச்சியில் பாளையை சீவிக்கொண்டிருந்தார். மோகு அணியும்போது பனையேற்றில் சில மாறுதல்கள் இருக்கும். தமிழகத்தில் திளாப்பை கால்களுக்கு அணிந்து மேலே செல்லும்போது மட்டைகள் தென்படும் இடத்தில் பனை தொழிளாளர்கள் தங்கள் கரங்களால் மட்டையைப் பற்றிக்கொண்டு வெகு லாவகமாக தங்கள் கால்களில் இறுக பற்றியிருக்கும் திளாப்பை ஒற்றைக் காலுக்கு கொண்டு வருவார்கள். அதன் பின்பு மட்டைகளுக்கு உள் நின்றுகொண்டு கீழ்நோக்கி சரிந்திருக்கும் பாளையை மட்டையில் மடிந்து மடங்கி கீழ்நோக்கி குனிந்து சீவுவது வழக்கம். ஆனால் ஆந்திராவில் நான் கண்ட காட்சி அவ்விதம் அல்ல. மோகு அணிந்து விட்டால் மட்டைகளுக்கு உள் செல்ல இயலாது. பனை முழுவதும் சுற்றி வரலாம். ஆனால் மட்டைகளுக்கு கீழிருந்து தான் அவர்கள் அனைத்தையும் செய்ய முடியும்.

நிழலாய் மாறிய வாழ்க்கை

நிழலாய் மாறிய வாழ்க்கை

இது ஒரு முக்கிய குறிப்பை உணர்த்துகிறது. ஓலை சார் கலை பொருட்கள் ஏன் ஆந்திராவில் பெருமளவில் இல்லை என்பதற்கு இதுவே சான்று. ஓலையில் செய்யும் கலைப் பொருட்களுக்கு குருத்தோலைகளே உகந்தது. அவைகளைப் பெற வேண்டுமானால் மரத்தின் உச்சி பாகத்திற்குச் செல்ல வேண்டும். ஆந்திரா தெலுங்கானா பகுதிகளில் வாழும் பனை தொழிலாளர்கள் மோகுவை பயன்படுத்துவதால் தண்டு பகுதியைத் தாண்டி மேலே செல்ல இயலாது. ஆகவே கீழிருந்து சுத்தம் செய்யும் ஓலைகளிலேயே அவர்கள் பொருட்களை செய்வது வழக்கம். அவைகள் அன்றாட பயன்பாட்டு பொருட்களாகவோ பனை தொழிலின் தேவைக்கு பயன்படும் ஒன்றாகவோ மட்டுமே இருக்கிறது.

ஆனால் வருடத்திற்கு ஒருமுறை பனையை சுத்தம் செய்வது வழக்கம், பழைய மட்டைகளை தறித்து மாற்றிவிட்டு பாளையில் கலயம் கட்டுவதற்கு ஏற்றவிதமாக பனையை சுத்தம் செய்வார்கள். இவ்விதம் செய்யும்பொது ஒரு பனைக்கு ஆறு முதல் 12 மட்டைகள் வரை கிடைக்கும். இவைகளில் காயந்தவற்றை எரிப்பதற்கு எடுத்துவிட்டு மற்றவைகளை கூரை வேய்வதற்கு பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் ஆந்திரவில் பனை ஓலை குடிசைகளைப் பார்க்க முடிந்தது.

இளம் தலைமுறைகள் மிக அதிகமாக பனைத் தொழிலுக்கு வருவதில்லை ஆகையால் முதியோர்கள் பனைத் தொழிலில் ஈடுபடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அறுபது வயதுக்குமேல் பனை ஏறுபவர்களைப் பார்க்கும்போது, வாறுமையே அவர்களை தொடர்ந்து இப்பணியில் ஈடுபடச் செய்கிறது என்பதை நாம் உணர முடியும். உலகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு உள்ள ஒரே ஒற்றுமை, வறுமை தான். ஆகவே தான் பனைத் தொழிலைக் குறித்தும் பனை மரங்களைக் குறித்தும் ஆய்வு செய்த, நாகொர்கோவில்காரர்  பேராசிரியர் டி. ஏ. டேவிஸ் “பனைமரமும் வறுமையும் இணைந்தே இருக்கின்றன” என்கிறார். வளம் நிறைந்த ஒரு மரத்தினைச் சார்ந்து வாழும் மக்கள் இவ்வித ஏழ்மை நிலையில் இருப்பது இயற்கையானது என நாம் ஒத்துக்கொள்ள இயலாது.

ஆந்திரா அரசு இவர்களுக்கு கள்ளிறக்க லைசென்சு வழங்குகிறது. ஆனால் இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில்லை. வயோதிப காலத்தில் இவர்களை எவரும் கண்டுகொள்வதும் இல்லை. இது எனது பார்வையில் சற்று வித்தியாசமாக தெரிகிறது. பெரும்பாலோர் இந்த தொழிலை விட்ட பின்பு வறுமையின் உச்சத்திலேயே வாழுகின்றனர். பிள்ளைகளை நம்பி கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இவர்கள் வாழ்வு மிகவும்பரிதாபகரமாகவே இருக்கிறது.

எனது தாத்தா, கண்ணனூர் எனும் பகுதியில் 1947 வாக்கில் போதகராக பணி புரிந்தவர்கள். அவர்கள் கண்ணனூர் நாட்டையர் என்றே பேர் பெற்றவர்கள். கடவுளின் ஆசியால் 101 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்தவர்கள். அவர்களுக்கான 101வது பிறந்த நாளை கொண்டாடும்படியாக நானும் எனது மாமா மகன் ஜானியும் முயற்சி செய்தோம். ஏனென்றால் அப்பொழுது எங்கள் பெரிய குடும்பத்தில் திருமணம் ஆகாமல் இருந்தது நாங்கள் இருவர் மட்டுமே. ஆகவே பொறுப்புகளை எங்கள் தலையில் எடுத்துச் செய்தோம். அப்போது, தாத்தா குறித்த எதேனும் சிறப்பு குறிப்புகள் கண்ணனூர் திருச்சபையில் கிடைக்குமா என எண்ணி நான் அங்கே சென்றேன்.

போதகரின் அனுமதியோடு மிக தொன்மையான பல மினிட் புத்தகங்களை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவைகளில் கருப்புகட்டி காணிக்கை என ஒரு பதம் வந்தது என் கவனத்தை ஈர்த்தது. கருப்புகட்டி காணிக்கை என்பது பொதுவாக நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மக்கள் சி எஸ் ஐ திருச்சபைகளுக்கு  வழங்கும் காணிக்கை. பொதுவாகவே காணிக்கைகள் விளை நிலத்தின் பலனை கொடுப்பதாகவோ அல்லது மிருகஜீவன்களில் முதற்பலனைக் கொடுப்பதுவோ வழக்கம். பணமாகவும் கொடுப்பார்கள். ஆனால் வறுமையில் இருந்த மக்கள் தங்கள் தயாளத்திலிருந்து கொடுத்தவைகளாகவே இக்காணிக்கைகளை நாம் பார்க்க வேண்டும். இக்காணிக்கைகளை ஆலயத்தின் ஒரு பகுதியில் குவித்து வைத்து பின்னர் ஏலம் விடுவார்கள்.

குமரி மாவட்டத்தின் சி ஏஸ் ஐ ஆலயத்தின் ஏலம், குறிப்பிட த்தகுந்த ஒன்று. பொதுவாக மிக அதிகமாக யார் விலை கூறுகிறார்களோ அவர்களுக்கே ஏலப்பொருள் என்பது உலகளாவிய  மரபு. இங்கும் அப்படித்தான். ஆனால் இங்கு ஏலம் என்று அழைத்தவுடன், எழைகள் மற்றும் விதவைகளே அவ்விடத்தில் கூடுவார்கள். மிக அதிகபட்ச விலை என்பது வெளியே நாம் கடையில் வாங்கும் விலையை விட மிக குறைவாகவே இருக்கும். வெளியே கடையில் லாபம் வைத்து விற்கும்போது, திருச்சபை ஏழைகளைக் கருத்தில் கொண்டது  அதே வேளையில் தனது வருமானத்தையும் தக்கவைத்துக் கொண்டது.

பின்னாட்களில் கருப்பட்டி காணிக்கை வரத்து குறைந்தது. ரப்பர் அவ்விடத்தை பிடித்தது. பனை மரங்கள் வெட்டப்பட, ரப்பர் மரங்கள் அவ்விடங்களை நிறைத்து வேகமாக பரவியது. பனை மரத்தில் ஏறியவர்கள் ரப்பர் பால் எடுக்க புறப்பட்டார்கள். பணப்பயிர் பனைபயிரை இல்லாமலாக்கியது. ரப்பர் பனையை அழித்துவிட்டது. ஆனால் இவற்றுக்கும் மேலே ஒன்று உண்டு. திருச்சபை இந்த மாற்றங்களை உணராதபடி இருந்தது. அல்லது இந்த மாற்றத்தை மவுனமாக ரசித்தது. காணிக்கையில் கருப்பட்டி வாசனை வந்தால் என்ன ரப்பர் வாசனை வந்தால் என்ன?

பனைதொழிலாளர் பிள்ளைகள் போதகர்கள் ஆயினர். ஆகவே மீட்பின் அடையாளமாக ரப்பர் வரவேற்கப்பட்டது. பனை நுகத்தடியாக உணரப்பட்டு வெறுக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டது

கடந்த 30 வருடங்களுக்குள் பனைத் தொழில் குமரி மாவட்டத்திலிருந்து  முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டது. பனையோடு தொடர்பு திருமறையை தொடர்புபடுத்திய நிகழ்வுகள் எதுவும் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெறவில்லை. பெரும்பாலும் விழாக்களை மிக அலங்கரிப்புடன் செய்து மகிழும் குமரி மக்கள் பனை சார் பொருட்களை திருச்சபை அலங்கரிப்பில் பயன்படுத்தவில்லை. ஏன், குருத்தோலை பவனியின் நேரம் கூட பனை ஓலைகளை எடுத்துச் செல்லாமல் தென்னை ஓலைகளையே பிடித்துச் செல்லுகின்றனர். பனை மரத்திற்கும் தங்களுக்கும் ஒரு நீண்ட நெடிய தொடர்பு உண்டு என்பதை திருச்சபை மறந்துவிட்டது இம்மக்களின் அவல நிலைக்கு ஒரு காரணம்.

தனது காணிக்கையால் என்றும் திருச்சபையை நினைவுகூர்ந்த பனையேறிகளுக்கு திருச்சபை கடன் பட்டிருக்கிறது. அந்த கடனை அவர்கள் தீர்க்குமட்டும் அது திருச்சபையின் மேல் தீராக்கடனாக மட்டுமே எஞ்சும். இன்றும்  மிக பொருட்செலவில் இயங்கும் திருச்சபையின் இயற்கை (சுழியல்) நல துறை, தங்கள் வாழ்நாள் முழுவதும் மரத்தைக் கட்டிப்பிடித்து பணிசெய்யும் இவர்களை ஒருமுறை கூட  நினைத்தது இல்லை. இயற்கை பாதுகாப்பு என்பதை மக்களோடு  இணைந்த ஒன்றாக புரிந்து கொள்ளாமல் அதை எளிய உயர்வுகளுக்கான ஒரு களமாக எண்ணப்படுகிறது.

ஆயினும் திருச்சபையிலிருந்து ஒரு ஓளி கீற்று எழுந்தது. தென் கேரள சி ஏஸ் ஐ திருச்சபையின் பேராயராக இருந்த சாமுவேல் அமிர்தம், தாம் தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் முதல்வராக இருந்தபோது பனைத் தொழிலாளர்கள் நிலையினைக் கண்டு மிகவும் வேதனை அடைந்து அவர்களுக்காக பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்தார். 1975ல் ஆரம்பிக்கப்பட்ட இன்னிறுவனம் பனை தொழிலாளர் மத்தியில் குறிப்பிட தகுந்த பணியாற்றியது. எனது இறையியல் கல்வி முடிந்தபின்பு பேராயரோடு 4 வருடங்கள் நான் பணியாற்றினேன். ஆரம்ப கட்ட பணிகளிலிருந்து பல படிகள் தாண்டி சுய உதவி குழுக்கள், மன்றங்கள்,  கூட்டமைப்புகள், சிறு கடன், இயற்கை விவசாயம், எச் ஐ வி தொற்றுள்ளோருக்கான பணிகள் என பல திட்டங்களில் ஈடுபட்டிருந்தது.

பனை சார்ந்த ஆய்வுகளுக்காக, களியக்காவிளையை அடுத்த கோட்டவிளை எனும் இடத்தில் ஒரு ஆய்வகமும், கற்கண்டு தயாரிக்க கம்பிளார் எனும் இடத்திலும் நிறுவனம் முனைப்பு காட்டியது. பல்வேறு சூழல்களின் நெருக்கத்தினால் பனை சார் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் பேராயரின் கனவான மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும் எண்ணம் பலித்தது. அதற்கு ஏராளமான குடும்பங்கள் இன்றும் கடமைப்பட்டிருக்கின்றன.

இன்று குமரி மாவட்டத்தில் பனைத் தொழிலில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற முதியவர்கள் அனேகர் உண்டு. திருச்சபை குருத்தோலை ஞாயிறு அன்று மட்டுமாவது இவர்களை கவுரவப்படுத்துவது நல்லது. மரத்திலிருந்து விழுந்து செயலற்றவர்களாகி போனவர்களுக்கு தனி கவனத்தை மிஷன் மருத்துவமனைகள் கொடுப்பது பேருதவியாக இருக்கும்.

திருச்சபை இன்று செயல்படுகின்ற பல்வேறு ஊழியங்களுக்கிடையில், நலிவுற்றிருக்கும் பனைத்தொழிலாளர்களையும் இணைத்துகொள்ள வேண்டும் என்பதே எனது மன்றாட்டு. திருச்சபை செய்யும் இப்பணி முதியோரை அணைக்கும் செயலாகவும், உழைப்பை உயர்வாய் நோக்கும்  விழுமியமாகவும் கருதப்படும்.

 

அவர் கீழிறங்கி வந்தபோது பாத்தேன், ஒட்டிகிடக்கும் வயறு. தன்னைச் சுருக்கி பிறருக்கு உணவளிக்கும் தாயுள்ளம் அவரது சிரிப்பில் இருந்தது. அவரது கரங்களை பற்றினேன். ஆசை தீர அவரை தழுவிக்கொண்டேன். இனி ஒருபோதும் பார்க்க இயலாத நண்பனை கட்டிக்கொள்ளுவது போல அவரை கட்டிக்கொண்டேன். அவர் அப்படியே சிலை போல நின்றார்.

கொடுத்து காய்த்த கரங்களுக்கு நாம் எதை கொடுத்து ஈடு செய்ய போகிறோம்.?

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: