பனைமரச் சாலை (26)


தவறவிட்ட கலைவடிவங்கள்

நேரம் கடந்து சென்றுகொண்டிருந்த படியாலும் நான் செல்லவேண்டிய தூரம் அதிகமாயிருந்ததாலும் சூர்யபேட் நோக்கி பயணித்தேன். அங்கிருந்து இன்னும் 40 கி மீ மாற்றுபாதை எடுத்துச் செல்லவேண்டும். எப்படியானாலும் இரவு 8 மணிக்கு மேலேயே நான் சென்று சேர முடியும்  என தோன்றியது. மாலை ஏழு மணிக்குள் சென்று சேரவேண்டிய இடத்தை நான் ஹைதராபாத் தவிற வேறு ஒரு இடத்திலும் சரிவர கைக்கொள்ளவில்லை. ஆனாலும் நான் தனியனானபடியால் நேரத்தை நெகிழ்வாக என்னால் கையாள முடிந்தது.

சைக்கிளில் கள் விற்கும் பனைத்தொழிலாளி

சைக்கிளில் கள் விற்கும் பனைத்தொழிலாளி

செல்லும் வழியில் மீண்டும் ஒரு பனைத்தொழிலாளர் கள் விற்பதைப் பார்த்து வண்டியை நிறுத்தினேன். என் அனுபவத்தில் நான் கண்ட மிக அழகான  நடமாடும் கள்ளுக்கடை அது. கள்ளிறக்கிய பிறகு, பனைத்தோழிலாளியே எவர் உதவியுமின்றி கள் விற்பது தான் நடமாடும் கள்ளுக்கடை. தனது சைக்கிளில் கள் பானையை வைத்துக்கொண்டு சாலையில் போகிறவர்கள் வருகிறவர்கள் அனைவரிடமும் விற்பனை செய்வது. அதிலே ஒரு எளிமை இருந்தது, அந்த எளிமை ஒரு அழகு சேர்த்தது, அந்த அழகு காணக்கிடைக்காத ஒரு தரிசனம்.

ஓரு பழைய சைக்கிள். அந்த சைக்கிள் ஹேன்டில் பாரில் மோகு  கம்பீரமாக சுற்றிவைக்கப்பட்டிருக்கிறது அதோடு கூட திளாப்பும் மோகுவின் குட்டி போல தொங்கிக்கொண்டிருக்கிறது. சைக்கிளின் பின்னால்  கெரியரில் பனைத்தொழிலாளியின் தொழிற்கருவிகள் வைக்க  தொங்கவிடப்பட்ட சாக்குப் பை. அதன் அருகில் கள்ளில் கிடக்கும் பூச்சிகளையும் துரும்புகளையும் களைவதற்காக சிறிய அரிப்பு. அதன் அருகில் செம்பு அளவில் கானப்படும் அளக்கும் குண்டான். கெரியரில் கள் கலயத்தைக் கட்டி செல்வதற்கு வசதிகள். இறுதியாக மிக அழகாக சித்தையைக் கவரும்படியாக நடுவில் உள்ள கம்பியில் கள் நிறைந்த சிறிய கலயம் நூதனமாக மாட்டப்பட்டிருக்கிறது. அதாவது கலயத்தின் கழுத்தில் ஒரு சிறிய கயறு கட்டப்பட்டிருக்கிறது அந்த கயிற்றை கம்பிக்கு  மேல் கொண்டுவந்து அதனூடக ஒரு பனை மட்டையை ஆப்பைப்போல  சொருகி விட்டால் மிக அழகாக  அந்த கலயம் பிடிமானம் பெற்றுவிடுகிறது. காண கண்கொள்ளக் காட்சி.

சைக்கிள் கம்பியில் இணைக்கப்பட்ட கள் கலயம்

சைக்கிள் கம்பியில் இணைக்கப்பட்ட கள் கலயம்

நான் 2005 ஆம் வருடம் இந்தோனேஷியா சென்றபோது எங்களுக்கு ஒரு நட்சத்திர விடுதியில் உணவு வழங்கினார்கள். அந்த உணவு திறந்தவெளியில் வைத்துப் பறிமாறப்பட்டது. அங்கே பழங்களை அவர்கள் வைத்திருந்த விதம் என்னைக் கவர்ந்தது. சரித்து வைக்கப்பட்ட சைக்கிளின் பின்புறம், இருபுறமும் இரண்டு வாழைத்தார்களை கட்டியிருந்தார்கள். சைக்கிளின் முன்னால் ஒரு அழகான பழக்கூடையை மாட்டி அதனுள் பழங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். இது, இந்தோனேஷியாவில் காணப்படுகின்ற ஒரு சாதாரண காட்சி. அதுவே இத்துணை மனக்கிளர்ச்சியைக் கொடுக்கும் என அந்த இடத்தில் தான் கண்டுகொண்டேன்.

அதுபோலவே நாமும் ஒரு நடமாடும் பனை சுவை சைக்கிளை உருவாக்கினால் என்னா? பொதுவாக, பஜாஜ் எம் 80 தான் பதனீருக்கும் நுங்குக்கும் இப்பொழுது விற்பனை வாகனம் அல்லது டி.வி. ஏஸ். 50. இவைகளுக்கு மாற்றாக ஒரு சிறந்த, சைக்கிளை மையப்படுத்திய விற்பனை மையத்தை வடிவமைக்கவேண்டும். அதுதான் ஒரு முழுமையான வடிவமைப்பாக இருக்கும். யாவாரிக்கும் பனையேறிக்கும் உள்ள வித்தியாசம் அதால் உணர்த்தப்படவேண்டும்.

அந்த எண்ணம் இந்த மனிதரைப் பார்த்தவுடன் என்னுள் வடிவம் கொண்டது. மண்பானையில் வைக்கப்பட்ட பதனீர் பின்னால் கேரியரில் கட்டி, அதன் இருபுறமும் நுங்கு குலைகளை கட்டி அழகுபடுத்தி, பின்னர் முன்னால் கம்பையை இதுபோன்ற கலயத்தைக் கட்டி. முன் சக்கரத்தின் இருபுறமும் ஓலைகலை வைத்துச் சென்றால் அது ஒரு சிறப்பு நடமாடும் பதனீர் வாகனமாக இருக்கும்.

 

பனைமரம் சார் வடிவமைப்புகள் பலவும் அருகிவிட்டன. அவைகளை தயாரிப்பவர்கள் காலத்தால் அடித்துச்செல்லப்பட்டுவிட்டார்கள். குமரி மாவட்டத்தில் கலயங்கள் செய்யும் குயவர்கள் இன்று இல்லை.மண் கலயங்கள் தயாரிக்கப்படுவது நின்று விட்டது. திருவிழா பண்டங்களை இட்டு கொடுக்கும் விழாப் பெட்டிகள் அரிதாகிவிட்டன. நாரை சுத்தம் செய்து பணிபுரியும் திறமையளர்கள் குறைந்து விட்டனர். இவைகள் யாவும் ஒரு நடமாடும் பனைசார் கடைக்கு இன்றியமையா பொருட்கள். இவைகள் யாவும் மீட்டெடுக்கப்பட்டு ஒரு வடிவம் கொடுக்கவேண்டும் என எண்ணிகொண்டேன். வடிவமைப்பில் திறமை உள்ளவர்களையும் இதில் இணத்துக்கொள்வது இன்னும் பயனுள்ளவைகளாக இருக்கும்.

முப்பது வருடங்களுக்கு முன்பு வரை பனை ஓலையால் செய்யப்பட்ட குடுவைகளே பதனீர் இறக்க பயன் பட்டன. நான் எனது சிறு வயதில் அவைகளை கண்டதில்லை ஆனால் ஒருமுறை எங்கள் வீட்டு பிளான் அமைத்துத் தந்த இஞ்சினியரை பார்க்கப்போயிருந்த போது, அவர் தம்மிடம் வைத்திருந்த அழகான ஓலைக் குடுவையை எனக்கு காண்பித்தார். இது சுமார் 1995 வாக்கில் நடந்திருக்கும். பின்னர், இந்த குடுவை எங்கே கிடைக்கும் என நான் தேடத்துவங்கினேன். நாகர்கோவில் வடசேரி சந்தையில் கிடைக்கவில்லை, மார்த்தாண்டம் சந்தையிலும் கிடைக்கவில்லை. ஆனால் 1998 வாக்கில் கருங்கல் சந்தையில் 7 குடுவைகள் விற்பனைக்கு இட்டிருந்தார்கள். விலை என்ன என கேட்டேன் 32 ரூபாய் எனச் சொன்னார்கள். வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.

பனையோலைக் குடுவை

பனையோலைக் குடுவை

குடுவையின் அழகு உறுதி யாவும் தனித்தன்மை வாய்ந்தது. எவரும் அதை இலகுவில் செய்துவிட முடியாது எனும் அளவிர்கு கலை நேர்த்தி கொண்டதும் பயன்பட்டு அம்சங்கள் கொண்டதுமாகும். குடத்தை சற்று ஒத்திருக்கும் வடிவத்திலேயே குடுவைகள் செய்யப்பட்டன. 4 ஓலை இலக்குகள் ஒன்றன் மேல் ஒன்னாக பின்னிச் செல்லும் நெருக்கம் அதனுள் இருந்து பத்னீர் சிந்திவிடாமல் பாதுகாக்கிறது. வாய் பகுதியில் மட்டையை வளைத்து கட்டுகிறார்கள், அவைகள் பிரிந்து விடாமல் இருக்க மிக அழகாக நார் பின்னலைக் கொண்டே கட்டுகிறார்கள். கீழ்பகுதியிலிருந்து முடைந்து மேல்நோக்கி வந்த குடுவை அதன் வாய் பகுதியில் மட்டைகளால் இருபுரமும் சுற்றப்பட்டு கட்டி இறுக்கப்படுகின்றன. முடைதலில் அழகும் கலை நயமும் தெரியும்படியாக அமைக்கப்பட்டுள்ள இவைகள் இன்று காணக்கிடைப்பதில்லை

2002ல் எனது அமெரிக்க தோழிக்காக நான் மீண்டும் அதே கடைக்குச் சென்றேன். அப்போது ஒரே ஒரு குடுவை அங்கே தொங்கிக்கொண்டிருந்தது. விலையைக் கேட்டேன். அதே 32 ரூபாய் என்றே கடைக்காரர் சொன்னார். விலை குறைப்பீர்களா என கேட்டேன். அதற்கு அவர் 2 ரூபாய் குறைத்துக்கொள்ளுங்கள் என்றார். எப்படியாவது அது இடத்தை அடைக்காமல் இருந்தால் போதும் என எண்ணியிருப்பார் போலும். ஆனால் அன்று நானோ அந்த கடைகாரரோ அறியவில்லை குமரிமாவட்டத்தின் கடைசி குடுவை அமரிக்கா போகிறது என்று. அதன் பின்பு என்னால் எத்துணை முயற்சி செய்தும், அதுபோன்ற ஒன்றை தேடிக்கண்டடையமுடியவில்லை.

அந்த அழகிய குடுவையைச் செய்பவருக்கு கடைக்காரர் 20 அல்லது 25 ரூபாய் கொடுத்திருப்பார். மிகவும் குறைவான ஒரு கூலி. அதை செய்த தாத்தா குமரி மாவட்டத்தின் ஓலை வரலாற்றில் ஒரு எஞிய கலைஞன். நான் பலமுறைக் கேட்டும் அந்த கடைக்காரருக்கு குடுவை செய்யும் தாத்தா எங்கிருந்து வருகிறார், எப்படி செய்கிறார் எனச் சொல்லத்தெரியவில்லை. ஒரு தாத்தா கொண்டு போடுவார் அவ்வளவுதான் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். தொழிலுக்கு பங்கம் வந்துவிடும் என நினத்திருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் கலை நுணுக்கம் மிக்க பயன்பட்டு பொருளின் வடிவமைப்பை நாம் முழுமையாக இழந்து விட்டோம்.

இவைகளை மீட்பது ஒரு மிகப்பெரிய சவால்.  குடுவையின் முடைதலுக்கும் அளவுகளுக்கும் குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வித்தியாசங்கள் உண்டு. அவைகளையும் ஆவணப்படுத்தவெண்டும். ஒரு பழமையான் பெரிய கட்டிடம் சிதிலமடைந்து மட்கிப்போவதுபோல் நம் கண்முன்னே பனைசார் பண்பாடு சிதிலமடைந்துகொண்டிருக்கிறது என்பது முற்றிலும் உண்மை.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: