பனைமரச் சாலை (27)


நாடோடி பனைத் தொழிலாளர்கள்

போதகர் பாத்திபட்டி விக்டர் பால் அவர்கள் தங்கியிருக்கும் கிராமம் சூர்யா பேட்டிலிருந்து சுமார் 40 கி மீ தொலைவில் இருந்தது. சூர்யபேட் செல்லும் முன்பே இடதுபுறமாக பிரியவேண்டும் என்று அவர் எனக்கு சொல்லியிருந்தார். ஆகவே சற்று கவனத்துடனே வாண்டியை ஓட்டினேன். எனது தோற்றத்தை கண்டு கவரப்பட்ட இரண்டு இளைஞர்கள் என்னையே பார்த்தபடி எனக்கு இணையாக வந்தார்கள், அவர்களிடம் பனிகிரி எப்படி போகவேண்டும் எனக் கேட்டேன். அவர்கள் எங்களோடு வாருங்கள் என சீறிப்பாய்ந்து சென்றார்கள். ஒரு சில நிமிடங்களில் ஒரு ரோடு பிரிந்தது, அதை கை காட்டியபடி அவர்கள் வலதுபுறம் சென்றார்கள் நான் இடதுபுறம் சென்றேன்…

நான் எடுத்த பாதை கிராம சாலை ஆனால் மிகவும் நேராகவும் நன்றாக பராமரிக்கப்பட்டும் இருந்தது. மணி 7.30ஐ தாண்டிவிட்டதால் இருட்டு கவிந்து சாலை தனித்து காணப்பட்டது. சுற்றிலும் அங்காங்கே பனை மரங்கள் தெரிந்தாலும், பயிரிடும் இடங்கள் என்றே தோன்றியது. சாலையில் ஓரிரு நிமிடங்களில் நான் பயணித்த உடனேயே ஒரு பெட்டிகடை வந்தது. கூட்டமாக மக்கள் நின்றனர். ஒரு பாட்டில் தண்ணீர் கேட்டேன், அங்கே அனேகர் நின்று சிகரெட் மற்றும் வேறு ப்ல பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றனர். பெட்டிக்கடைக்கு பின்புறம் அவர்களின் வீடு அமைந்திருந்தது.

எனக்காக அவர்கள் ஃபிரிட்ஜை திறந்து தண்ணிர் எடுக்கையில் அங்கே பியர் பாட்டில்கள் இருந்ததைப் பார்த்தேன். மினி சூப்பர் மார்கெட்டாக அது செயல்பட்டுக்கொண்டிருந்தது. மளிகையும் காய்கரியும்கூட விற்றுக்கொண்டிருந்தார்கள். அனேகர், கூலித்தொழிலுக்குச் சென்று மீண்டவர்கள் போல தோன்றியது. தண்ணிர் முழுவதையும் அங்கிருந்தே குடித்தேன். பொதுவாக நான் பாட்டில்களை எடுத்து செல்லவில்லை அதற்கான வசதி என்னிடம் இருக்கவில்லை.

நான் சென்ற பாதையில் அந்த இரவு நேரம் வேறு வாகனங்கள் ஏதும் தென்படவில்லை. ஒரு மர்ம சாலை போல் அது இருந்தது. கிராமங்களோ வீடுகளோ ஒன்றையும் காணமுடியவில்லை. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை 4 சக்கர வாகனம் ஏதாவது சென்றது. ஆனால் பயன்பாட்டில் உள்ள சாலை போல் தெரியவில்லை. எனக்குள் ஒருவித பயம் முதன்முதலாக வந்தது.

எனது பயணத்திற்கு அனேகர் தடை சொல்லுவதற்கு காரணம் ஆந்திரா நக்சலைட்டுகளின் கோட்டை. அங்கே செல்பவர்களை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று. எனது பயம் அதைச் சார்ந்து எழுத்ததுதான். ஆனால் அப்படியே கொன்றுவிடுவார்கள் என நான் நம்பவில்லை. அல்லது கடத்திக்கொண்டு போவார்கள் என்பதிலும் பொருள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஆனால் வழி மறித்தார்கள் என்றால் நேரம் விரயமாகும், ஒருவேளை நாட்களும் விரயமாகலாம். ஆகவே இப்படி ஒரு பாதையை தெரிந்துகொண்டோமே என எண்ணியபடி நான் வண்டியை ஓட்டினேன்.

போதகர் பாத்திபட்டி விக்டர் பால் எனும் “விக்கி” நான் இறையியல் கல்லூரியில் நுழையும் போது மூன்றாம் ஆண்டு மாணவர். கரிய முரட்டு நாட்டுப்புற உருவம் ஆனால் அன்பால் மிகவும் கனிந்த ஒரு அண்ணனாகவே இருந்தார். அங்கேயே உயர்கல்வி பயின்ற கிருபா அக்கா அவர்களையே திருமணம் பின்னாட்களில் செய்தார். ஒருநாள் அவரது முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். பனை மரங்களின் பின்னணியத்தில் அவரது திருச்சபையினரோடு அங்கியில் அவர் நின்றுகொண்டிருக்கும் ஒரு கண்ணைக்கவரும் அழகிய படம். நான் அவர்களை உடனேயே தொடர்பு கொண்டேன்.

அவர்கள் பனகிரி என்னும் கிராமத்தில் குடும்பமாக இருந்து ஊழியம் செய்வதாகவும் தங்களுக்கு சுமார் 12 கிராமங்கள் ஊழியக் களங்களாக கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறினார்கள் . மேற்படி புகைப்படம் பூக்கி தண்டா எனும் இடத்தின் திருச்சபை மக்களுடன் எடுத்தது எனவும் சொன்னார்கள். தண்டா எனும் தெலுங்கு வார்த்தைக்கு வாழ்விடம் என்று பொருள். நீங்கள் இருக்கும் இடத்தில் பனைமரங்கள் அதிகம் இருக்கும் போலிருக்கிறதே என்றேன். அவர்கள் ஆமாம் மிக அதிகமாக இருக்கிறது எனது திருச்சபை மக்கள் அதில் ஏறி பயன் எடுக்கிறார்கள் என்றார். அவர்களைப் பார்த்தால் பழங்குடியினரைப்போல் அல்லவா இருக்கிறது என்றேன். அதற்கு அவர் ஆம் அவர்கள் லம்பாடி இனத்தவர், அவர்களை பஞ்சோரா என்றும் அழைப்பார்கள் என்றார்.

லம்பாடி இனத்தவர்  நாடோடி சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஆஃப்கானிஸ்தான் பகுதியிலிருந்து மாடு மற்றும் உப்பு வணிகம்  செய்பவர்களாக சுற்றிதிரிந்திருக்கிறார்கள். தற்பொழுது அவர்கள் ஒருசில இடங்களில் அவர்கள் நிலையாக தங்கியிருக்கிறார்கள். பூக்கி தண்டா பகுதியில் காணப்படும் பனை மரத்தில் ஏறி கள் இறக்குவது, ஓலைகள் எடுப்பது மற்றும் நுங்கு சேகரிப்பது போன்றவற்றை இவர்களே செய்கிறார்கள் என்றார். பனைமரத்திலிருந்து வேறு என்ன பயன்பாட்டுபொருட்களை அவர்கள் கையாள்கிறர்கள், குறிப்பாக ஓலையை அவர்கள் எப்படி பயன்படுத்டுகிறார்கள் எனக் கேட்டேன். பொதுவாக ஓலை கூரை வேய்வதற்கும், கிடை அமைப்பதற்கும் மற்றும், வீட்டின் அருகில் குளியலறை மறைவுக்கும் பயன்படுத்தப்படுகிறது என பதிலளித்தார்கள். நான் நேரில் காண விழையும் அவர்கள் வாழ்கைச் சுழல் எனக்கு இன்னும் அனேக காரியங்களை குறிப்புணர்த்தும் என எண்ணிக்கொண்டேன்.

இந்த செய்தி ஒரு முக்கிய திறப்பாக எனக்கு அமைந்தது. பிற்படுத்தபட்ட சமூகமே பனைத் தொழிலில் ஈடுபடும் என சொல்லப்பட்டிருந்த கற்பிதங்கள் யாவும் கரைந்து மாயமாய் போயின. கவுட், நாடார், பண்டாரி, தலித் மக்கள் மற்றும்பழங்குடியினரும் மாத்திரம் அல்ல நாடோடிகளும் இதில் ஈடுபட்டிருப்பது ஒரு உவகை தரும் புதிய தகவல். ஆகவே நான் போதகர் அவர்களை பார்க்க வருவேன் என உறுதி கூறியிருந்தேன். பனை மர  வேட்கைப்  பயணத்தில் போதகர் அவர்களை சந்திப்பேன் என நான் அப்போது நினைத்திருக்கவில்லை.

பொதுவாக ஆந்திரா பகுதிகளில் கவுட் சாதியினர் தான் மிக அதிகமாக கள்ளிறக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது. அப்படியிருக்க ஒரு நாடோடி சாதி எப்படி இவ்விதமான ஒரு பணியில் தெரிந்துகொண்டார்கள்? இவைகள் முக்கியமான கேள்விகள். நமது தேடுதலுக்கு பதில் கிடைக்க வாகான துவக்கம். ஆனால் அவ்வளவு எளிதாக விடுவிக்கத்தக்க புதிர் அல்ல இது.

ஃபனகிரி சேருவதற்கு சுமார் 7 கி மீ முன்பு ஒரு குக் கிராமம் தென்பட்டது. அங்கே ஒரு அழகிய குடிசையின் முன்பதாக அனேக வயதான பெண்களும் சில ஆண்களும் கூடி இருந்தார்கள். அவர்களிடத்தில் ஏதோ ஒரு எண்ணம் உந்க்ட வண்டியை நிறுத்தினேன். ஒரு நடுத்தர வயது மனிதர் ஓடோடி வந்தார். வரும்போதே கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாருங்கள் என கட்டளையிட்டார். எனக்கு குடிக்க கொடுத்தார்கள். அதன்பின்பே பேச்சுக்கொடுத்தார்கள். எனது பயணத்தில் அந்த வீட்டைப் பார்த்து கவரப்பட்டு நிறுத்தியதாகவும் இங்கு ஓலைகளில் வேறு என்ன செய்வீர்கள் எனவும் கேட்டேன். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு கூரையிட மட்டுமே பயன்படுத்துவதாகச் சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டேன்.

அவர்களின் வழிகாட்டுதலின்படி அடுத்த கிளை சாலை வந்தபோது, நான் செல்லவேண்டிய இடம் வந்தது என அறிந்து கொண்டேன். அங்கே விசாரித்தபோது, அருகிலே தான் இருப்பதாகவும் ஹாஸ்பிடல் காம்பவுண்ட் போங்கள் என்றார்கள். சாலையிலிருந்து பிரிந்த மண்சாலை புதர்களுக்குள் இருந்ததுபோல் தோன்றியது. நூறடி தோலைவிலேயே அந்த பங்களா தெரிந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஒரு வீடு.  நான் அருகிலே சென்றபோது அதன் பழைமை சற்றும் மாறாமல் இருந்ததை கவனித்தேன். வாசலில் சென்று பார்த்தபோது போதகரின் பெயர் இடப்பட்டிருந்தது ஆனால் ஆள் அரவம் ஏதும் இல்லை. சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என எண்ணியபடி கதவைத் தட்டப்போகும்போது தான் கவனித்தேன், கதவு பூட்டப்படிருக்கிறது என்று.

உடனடியாக செல்பேசியில் அவரை அழைத்தேன் வந்துகொண்டிருப்பதாக கூறினார்கள், மணி 9.30 தாண்டிவிட்டது. அந்த பங்களா சுமார் 100 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம். அப்படியானால் மிஷனெறிகள் வந்த நாட்களில் இவ்விடம் எப்படி இருந்திருக்கும்?  எப்படிபட்ட ஒரு தரிசனம் இருந்திருந்தால் பிற்படுத்தப்பட்ட ஒரு பகுதியைத் தேடி அம்மக்களுக்காக தங்கள் வாழ்வை அற்பணித்து வந்திருப்பார்கள்.? அத்துவான காடு போல் தோன்றிய அந்த பங்களாவின் முன்னால் அமர்ந்து போதகர் அவர்களின் வருகையை எதிர்நோக்கியிருந்தேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

போதகர் விக்டர் பால், பனையேறும் பஞ்சாரா இனத்தவருடன்.

போதகர் விக்டர் பால், பனையேறும் பஞ்சாரா இனத்தவருடன்.

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: