பனைமர திருப்பணி
சற்று நேரத்தில் தனது ஆன்மீக கடமைகளை முடித்துவிட்டு போதகர். விக்டர் அவர்கள் வரும் சத்தம் கேட்டது. “டேய் மச்சா……” (ன் சேர்க்காமல் தான்) என கூவியபடி வந்து என்னை அணைத்துக்கொண்டார். மிகப்பெரிய உடல். நான் ஒரு குழந்தையைப்போல அவரது அணைப்பில் நின்றேன். பாசத்துடன் அதிக நேரம் காக்க வைத்துவிட்டேனா என்றார்கள். அப்பொழுது இன்னுமொரு ஸ்கூட்டி வந்தது அதிலே க்ருபா அக்கா வந்தார்கள். இருவருமாக இணைந்து சுற்றிலுமுள்ள 12 கிராமங்களில் ஊழியம் செய்ய வேண்டும். மிகப்பெரிய பொறுப்பு. பொறுமையும் கனிவும் ஊழிய பாரமும் உண்டென்றால் மட்டுமே அது சாத்தியப்படும்.
பொதுவாக போதகர்கள் ஆன பிற்பாடு அவற்றிலும் சிறந்த கோயில்கள், சிறந்த பதவிகளை தேடிப்போகிறவர்களை நான் பரிதாபத்திற்குரியவர்களாகவே பார்க்கிறேன். அழைப்பு என்பதை புரிந்து கொள்ளாதவர்கள். இயேசுவின் அடிச்சுவட்டை சற்றும் அறியதவர்கள் அவர்கள். பொதுவாக மெதடிஸ்ட் போதகர்களை அருட்பொழிவு செய்யும்போது அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். அவைகளில் ஒன்று, “கிறிஸ்துவின் பணி செய்ய எங்கே நீங்கள் அமர்த்தப்படுகிறீர்களோ அங்கே பணி செய்ய சித்தமா?” இக்கேள்விக்கு அனைவரும் ஆம் என்றே பதில் கூறுவார்கள். ஆனால் அதற்கு முன்பே தாங்கள் எங்கே அமர்த்தப்படவேண்டும் எனும் தெளிவான முயற்சிகளை எடுத்திருப்பார்கள். நான் வேடிக்கையாக கூறுவதுண்டு மெதடிஸ்ட் போதகர்களுக்கு டிரான்ஸ்பர் தவிர வேறு எதுவும் மனதில் நிற்காது. அவ்வளவு வேகத்தோடு மூர்க்கமாக தங்களுக்கான இடத்தை தெரிவு செய்வார்கள். ஒருவகையில் பிள்ளைகளின் படிப்பு போன்ற காரியங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்பது உண்மைதான். ஆனாலும் அதைவிட தனது இடம் அசைக்கப்படக்கூடாது, அப்படி மாறுதல் இருந்தாலும் அது பல வகைகளில் பலன் தருகின்ற ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படி இல்லாது போனால் அது பழிவாங்கிய நடவடிக்கையாக பார்க்கப்படும்.
குடும்பமாக இவர்கள் இங்கே செய்யும் பணி உண்மையிலேயே என்னை அசைத்தது. ஒரே நாளில் 4 ஆலயங்களுக்கு குறைந்த பட்சம் இருவரும் தனித்தனியாக செல்லவேண்டும். அங்குள்ள மக்களிலேயே மிகவும் வசதியானவர் போதகர் தான். ஆகவே மக்களின் இன்பம் துன்பம் எல்லாவற்றிலும் இவர்களின் பங்களிப்பு மிக அதிகமானது, அசாதாரணமானது. போதகராக அவர்கள் செய்யும் பணி என்னை பொறாமைக் கொள்ளச் செய்தது. அக்கா கதவைத் திறக்க உள்ளே சென்றோம். மிகப் பிரம்மாண்டமான வீட்டில் நாங்கள் மூன்றே பேர் தான். மிகப்பெரிய பாத்ரூமில் குளித்துவிட்டு உணவுக்கு ஆயத்தமானோம். அந்த வீடு என்னை மலைக்க வைத்தபடி இருந்தது.
அக்கா உணவை பறிமாறியபடி இன்று இந்த எளிய உணவை எடுத்துக்கொள்ளுங்கள் நாளைக்கு மதியம் உங்களுக்கு வேண்டிய உணவை தயார் செய்யலாம் என்றார்கள். போதகராக பணியாற்றிவிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் உணவை சிறப்பாக ஆயத்தம் செய்யவேண்டுமென்றால் அது மிகவும் சிரமமான காரியம். நான் சொன்னேன், உங்களோடு உணவு அருந்தும் வாய்ப்பு கிடைத்ததே பெரிய காரியம், நாளை ஆலயத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து சுமார் 200கி மீ தூரம் நான் பயணம் செய்து ஏலூரு செல்ல வேண்டும் தயவு செய்து அதிக சிரமம் எடுத்துக்கொள்ளாதீர்கள் என்றேன். மனதில்லாமல் ஒப்புக்கொண்டார்கள்.
ஆந்திராவிலும் கன்னியாகுமரி மாவட்டத்தைப் போலவே ஒரு லண்டன் மிஷனெறி சங்கத்தார் சீர்த்திருத்த திருச்சபையின் பணிகளை 1805ல் துவங்கினார்கள். ஆனால் அரை நூற்றண்டுகளுக்குப் பின்பே வெஸ்லியன் மெதடிஸ்ட் இப்பகுதியில் மெல்ல காலூன்ற துவங்கியது. அதன் பின்பும் சுமார் கால் நூற்றாண்டுகள் ஆன பிறகே குறிப்பிடத்தகுந்த பணிகள் நடைபெற துவங்கின. மும்பையில் பணியாற்றிய வில்லியம் டெய்லர் ஹிந்துஸ்தானி மிஷன் ஒன்றை ஆந்திராவில் 1872 – 74 வரையில் நடத்தினார். அதன்பின்பு 1880களில் வில்லியம் பர்காஸ், பெஞ்சமின் பிராட், மற்றும் பெஞ்சமின் வெஸ்லி ஆகியோர் இணைந்து காளை வண்டியில் சென்று ஊழியங்களைச் செய்தனர். பல்வேறு சமயங்களில் கொடிய காட்டு விலங்குகளிடமிருந்து அதிசயமாக தப்பித்திருக்கின்றனர். பெஞ்சமின் பிராட் தற்போதுள்ள கரீம் நகர் சி ஏஸ் ஐ பேராயம் உருவாவதற்கு காரணமானவர்கள். அப்பகுதியை அவரே மேற்பார்வை செய்து, புதிய பணிகளைத் துவங்கியிருக்கிறார். அவர்கள் வாழ்ந்த வீட்டிற்குள் நான் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் என்பதே எனக்கு மிகப்பெரிய ஆசி.
அப்பகுதியிலே 100 வருடம் பழைமையான ஒரு மிஷன் மருத்துவமனை தற்பொழுது செயல்படாமல் இருக்கிறது. அதை செயல்படுத்தச் செய்வது சாத்தியமா என கேட்டேன். அது மிகப்பெரிய சவால் என்பதாக அவர் சொன்னார். அனைத்து வசதிகளும் நிறைந்த ஒரு மருத்துவமனையே மக்களின் தேர்ச்சியாக இருக்கிறது. அதற்கு அதிக நிதி தேவை என்பதாக அவர் கூறினார்.
கிறிஸ்தவ மிஷனெறிகளின் பணிகளில் தலையாயது கல்வி மற்றும் மருத்துவம். இரண்டு பணிகளையும் அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செய்தார்கள் என்பது உண்மை. ஆனால் இன்று திருச்சபைகளின் நிலைமை அப்படி இல்லை. கல்வி நிலையங்கள் யாவும் கள்ள பணம் சம்பாதிக்கும் இடமாகவும் மருத்துவமனைகள் விற்பனை செய்யப்படும் நிலங்களாகவும் மாறி விட்டன. அதை ஒரு தொடர் செயல்பாடாகவே மாற்றிவிட்டனர். இதற்கான குற்றச்சாட்டை பொதுவாக பேராயர் மேலேயே சுமத்துவது வழக்கம். பேராயர்கள் கண்டிப்பாக இவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டும் ஆனால் சற்றும் கிறிஸ்தவ விழுமியங்கள் தங்களில் தென்படாத அரசியல் எண்ணங்கொண்ட சிலரே இதற்கு காரணம். அவர்களுக்கு தெரியும் எந்த நிலத்தில் எப்போது கை வைக்கவேண்டுமென்று. பொறுமையாக 5 ஆண்டு திட்டம் 10 ஆண்டு திட்டம் என யோசித்து காய் நகர்த்துகிற சூத்திரதாரிகள் உண்டு. திருச்சபையில் சில லட்சங்கள் கொடுத்துவிட்டு கோடிகளில் கொள்ளையடிக்க கற்றுத்தேர்ந்தவர்கள். யாரை எப்படி கவனித்து காரியங்களை சாதிக்க வேண்டும் என அறிந்து வைத்திருப்பவர்கள்.
நலிவடைந்து வரும் மருத்துவமனைகள் இவர்களது இலக்கு. அவற்றுக்கு எவ்விதமான உதவிகளும் செய்ய ஒப்பமாட்டார்கள். நல்ல மருத்துவர்களை தங்களது சுய லாபத்திற்காக சிரமத்திற்குள்ளாக்குவார்கள். மெல்ல மருத்துவமனை நோயுற்று கவனிப்பாரற்று வீழ்ந்து போகும் நிலை வரை கொண்டு செல்வார்கள். பின்னர், மீண்டும் செயல்படுத்த முடியாது எனும் சூழ்நிலையில் விற்பதே ஆகச்சிறந்த வழி என திருச்சபை எதிர்க்கொள்ளும் வேறு நிதிசுமைகளை எடுத்துக்கூறுவார்கள். தெரிந்தவர்களுக்கு அடிமாட்டு விலைக்கு வாங்கிக்கொடுத்து கொள்ளை லாபத்தை எடுத்துக்கொள்ளுவார்கள். இந்த நிலை மாறுமா என தெரியவில்லை. மாறுகின்ற நேரத்தில் நம்மிடம் மருத்துவமனைகள் இருக்குமா என்றும் சொல்லத்தெரியவில்லை.
இப்படியிருக்கும் வேளையில் திருச்சபைக்குள் பனை மரங்கள் எதேனும் கவனத்தைப் பெறுமா? திருச்சபையின் மக்கள் மற்றும் தலைமை பீடங்களின் கவனத்தை எப்படி கோருவது என்பதே எனது ஒரே குறிக்கோளாக இருக்கிறது. திருச்சபைக்குள் பனை மரத்தை மீண்டும் நிறுவும் ஒரு மிஷனெறி பணி வேண்டும். அந்த பணி ஆசிய ஆப்பிரிக்க பனை தொழிலாளர்களுக்கு நல்ல எதிர் காலத்தை வழங்குகின்ற ஒன்றாக அமைய வேண்டும். இந்த வேண்டுதலோடு கண்ணயர்ந்தேன்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி, மும்பை
8888032486
குறிச்சொற்கள்: பயணக்கட்டுரை
மறுமொழியொன்றை இடுங்கள்