பனைமரச் சாலை (29)


வழிபாட்டுத் தலங்கள்

காலை எழுந்தவுடன் பரபரப்பாக ஆலயத்திற்கு கிளம்பினோம். பல வருடங்களுக்குப் பின் கூடுவதால் புகைப்படம் எடுக்க விரும்பினோம், எங்கள் நல்ல நேரம், வேறு ஒரு நபர் உதவிக்கு வந்தார். 8 மணிக்கு ஆராதனை, நாங்கள் ஏழரைக்கே ஆலயத்திற்குச் சென்றுவிட்டோம். கதவைத் திறப்பது முதல் மைக் செட் யாவற்றையும் அமைப்பது வரை போதகர் விக்டர் பால் பொறுமையாக செய்தார். ஆலய ஆராதனைக்கு அனைவரும் வரும்படி அவரே மைக்கில் அழைப்பு விடுத்தார். மக்கள் வரும் மட்டும் மிக அழகாக பாடல்களை பாடினார். ஒருசிலர் வந்து அவரோடு இணைந்து பாடினர்.  ஒவ்வொருவராக மக்கள் வந்தவண்ணமிருந்தனர். சரியாக எட்டுமணிக்கு ஆலய ஆராதனை துவங்கியது. அன்றைய தினம் திரித்துவ ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.

மூன்று போதகர்கள்: போதகர் க்ருபா, நான் மற்றும் போதகர் விக்டர் பால்

மூன்று போதகர்கள்: போதகர் க்ருபா, நான் மற்றும் போதகர் விக்டர் பால்

அன்றைய தினம் செய்தியின் வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. மூவரான ஏகர் குறித்து எக்கண்ணாயினும் கனி சுவை ஒன்றே என நுங்கு குறித்து பேசினேன். படைப்பவர், காப்பவர், வழிநடத்துகிறவர் என திரியேகரை கிறிஸ்தவம் புரிந்து கொண்டிருக்கும் வேளையில் இவைகள் பரஸ்பரம் தொடர்புடையவைகளாக ஒன்றாகவே இருப்பதை எடுத்துக்கூறினேன். நுங்கிலிருந்து கண்ணும், பழத்திலிருந்து சாறும், விதையிலிருந்து கிழங்கும் என அவைகள் தம்மை அற்பணித்து மாந்தரை நிறைவுசெய்வதை கூறினேன்.

நீதிமான் பனையைபோல் செழித்து (லீபனோனிலுள்ள கேதுருவைப்போல வளருவான்) எனும் பகுதியை சுட்டிக்காட்டி, நீதி செய்பவர் கடவுளின் வழி நிற்பவர். ஆகவே பூமிக்கும் வானத்திற்குமாக உயர்ந்து நிற்கும் பேறு பெற்ற மரத்திற்கு அவர் ஒப்பாகிறார். அவரின் கனி பசியை போக்கி மனிதரை திருப்திகொள்ள செய்கிறது. வழித்துணைக்கான உணவும் அதனிடமிருந்தே பெறப்படுகிறது என்றுவிட்டு, பனைசார் (ஈச்சமர) திருமறை பகுதிகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினேன்.

ஆராதனை முடிந்த பிற்பாடு, அவர்கள் திருச்சபையின் சார்பிலே அன்பை வெளிப்படுத்தும்படி சால்வை கொடுத்தார்கள். செயின்ட் லூக்ஸ் சி ஏஸ் ஐ ஆலயம் நாகாரம், சமீபத்தில் தான் புதிதாக எடுத்து கட்டப்பட்டிருக்கிறது. போதகர் அவர்களின் கடுமையான உழைப்பிற்கு அது ஒரு உதாரணம் என்றும் சொல்லலாம். கோபுரம் அமைக்கப்பட்ட புத்தம்புதிய கட்டிடம். கிராமத்திலே இக்கட்டிடத்திற்கு இன்றையதினம் ஒரு மதிப்புண்டு. வளர்ச்சியின் முதல் படியாக ஆலயம் எழுந்து நிற்பது ஒன்று. அங்கே வருவது மனதை புதிதாக்குகின்ற ஒரு அனுபவம் கூட. விசாலமான அந்த இடம் அவர்கள் மன இறுக்கத்திலிருந்தும் அவர்களை விடுவித்து ஒன்றாயிருப்பதன் மேன்மையைச் சுட்டிக்காட்டும் ஒரு குறியீடாக அந்த ஆலயம் எழுந்து நிற்பதை கண்டேன்.

நாகாரம்  சி எஸ் ஐ புனித லூக்கா திருச்சபை

நாகாரம் சி எஸ் ஐ புனித லூக்கா திருச்சபை

போதகர் வேறொரு திருச்சபைக்கு செல்லவேண்டும் ஆகையால் என்னை வழியனுப்ப வந்தார்கள். திருச்சபையின் வாலிபர்களும் மகிழ்ச்சியோடு வந்து என்னை வழியனுப்பினார்கள். நான் தனித்தவனாக விடப்படவில்லை என்கிற உணர்வு எனது நெஞ்சை  நிறைத்தது. அனைவருக்கும் விடை கூறி அங்கிருந்து சுமார் 10 மணியளவில் ஏலூரு நோக்கி பயணித்தேன்.

வரும் வழியில் ஒரு இடத்தில் ஒரு பானையும் நுறைத்து வழியும் ஒரு கள் குப்பியும் வைத்திருப்பதைப் பார்த்தேன். இது கள்ளுக்கடைக்கான அடையாளம். ஆகவே வண்டியை நிறுத்தினேன். சாலையின் உள் ஒரு புதர்க்காட்டிலே ஒரு பனைக்குடில் அமைந்திருந்தது. ஒரு பெண்மணி மட்டும் அங்கே இருந்து கள் விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். வேறு எவரும் இல்லை. தனித்த அந்த இடத்தில்  எப்படி தைரியமாக இருக்கிறார்கள் என ஆச்சரியப்பட்டுகொண்டே எனது வாகனத்தை அங்கே நிறுத்தினேன்.

பனைக்குடிலுக்கு முன் எனது வாகனம்

பனைக்குடிலுக்கு முன் எனது வாகனம்

பனையோலையில் செய்யப்பட்ட குடில் மிக அழகாக தொல் பழங்குடியினரின் தங்குமிடம்  போல் மிகவும் சுத்தமாக பேணப்பட்டிருந்தது. கள்ளின் வாசம்  வாடிய மலர்மாலையிலிருந்து எழும்  மணம் போல் இருந்தது. பனைதொழிலாளி விட்டுச் சென்ற கருவிகள், கள்ளிறக்கும் பானைகள் கள் நிரப்பப்பட்ட கேன்கள் என அந்த இடம் ஒரு பழங்குடிச் சடங்கு நடைபெறும் இடம் போல  காட்சியளித்தது.  மூதாதயர் விட்டுச்சென்ற வழிபாட்டு தலத்தில் தனித்து நிற்கும் பூசாரியைப் போல் உணர்ந்தேன்.

தொழிற்கருவிகள்

தொழிற்கருவிகள்

அந்த பெண்மணியைப் பார்த்தவுடன் எனக்கு திருமறையின் தன்னிகரற்ற ஒரு பெண் ஞாபகத்துக்கு வந்தார்; அவர் பெயர் தெபோரா. இஸ்ரவேலர்களுக்குள் அரசர்கள் தோன்றுமுன்  அந்த வெற்றிடத்தை நீதி தலைவர்கள் நிரப்பினார்கள். கடவுள் வாக்களித்த கானான் நாட்டை இஸ்ரவேலர் கைப்பற்றிய போது முடியாட்சி இல்லாத குறையை கடவுள் தாம் தெரிந்துகொண்ட நீதி தலைவர்கள் மூலம் நிறைவுசெய்தார். போர்கள் மூழும்போதும் வேறு இக்கட்டு தருணத்திலும் இவர்களின் பங்களிப்பே இஸ்ரவேலர் சிதறுண்டு போகாமல் இருப்பதற்கான காரணியாக அமைந்தது. இவர்களில் சிலர் பலம் பொருந்திய வீரர்களாகவும்,  படைத்தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் இருந்து செயல்பட்டு வந்தார்கள். இவர்களுள் ஒருவரே தெபோரா எனும் நீதி தலைவர். பெண் நீதித்தலைவராக குறிப்பிடப்படும் ஒரே நபர் இவர் தாம்.

தெபோரா எனும் பெயருக்கு – தேனீ என பொருள். சுறுசுறுப்புக்கு மற்றும் உழைப்புக்கு மாற்றாக சுட்டி நிற்கும் பொருள் கொண்ட பெயர்.

“அச்சமயத்தில் இஸ்ரயேலருக்கு இறைவாக்கினரும் இலப்பிதோத்தின் மனைவியுமான தெபோரா நீதித் தலைவியாக இருந்தார். அவர் எப்ராயீம் மலைநாட்டில்  இராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் ‘தெபோராப் பேரீச்சை’ என்ற மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். தீர்ப்பு பெறுவதற்காக இஸ்ரயேலர் அவரிடம் செல்வர். (நீதித் தலைவர்கள் 4: 4, 5)

இலப்பிதோத்து எனும் பெயருக்கு தீ பந்தம் என பொருள் கொள்ளலாம். குமரி மாவட்டத்தில், ஓலைகள் மற்றும் சல்லடைப் போல் காணப்படும் பனை பன்னாடையைக் கொண்டு வழித்துணைக்கு சூட்டு எனும் பந்தம் செய்வார்கள். மிக எளிய தொழில் நுட்பத்தில் செய்யப்படும் சூட்டு சுமார் 10 நிமிடம் வரைக்கும் கூட ஒளிர்ந்து வழிகாட்ட வல்லது. அதுபோலவே ஓலைகளில் பந்தங்கள் செய்து கொடுத்திருப்பாரே? அவரைக் குறித்து மேலதிகமாக சொல்லப்படவில்லை. ஆகவே தெபோரா அவர்களின் குறிப்பிடத் தகுந்த தலைவராவதற்கும் “இஸ்ரயேலின் தாயாக”(நீதித் தலைவர்கள்5: 7) ஏற்றுக்கொள்ளப் படுவதற்கும் உகந்த முக்கிய ஆளுமை அவரிடம் இருந்திருக்கும் என நாம் எளிதில் யூகிக்கலாம்.

ஆனால் அது எப்படி சாத்தியமாயிற்று? இஸ்ரயேலர் எகிப்த்திலிருந்து புறப்பட்டு கானான் வந்தடைந்தபோது அவர்களின் 12 குலத்தவருக்கும் வெவ்வேறு இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. பென்யமீன் மக்களின் குலத்திற்கு கானான் நாட்டில் ஒதுக்கப்பட்ட நிலத்துள் இராமாவும் ஒன்று. அங்கிருந்து அவர்கள் பெத்தேல் எனும் தூய இடத்திற்கு செல்லுவது வழக்கமாயிருந்திருக்கும். அந்த நெடுஞ்சாலை வழிமறிக்கப்பட்ட சூழலில் இச்சிற்றூர்களை தெபோரா ஒருங்கிணைக்கிறார். நெடுஞ்சாலை தடுப்புகளை அவர் நீக்குகிறார் ((நீதித் தலைவர்கள்5: 6) ஆகவே அவரிடம் நீதி கேட்டு வருகிறார்கள்.

தெபோரா பேரீச்சை என்பது ஒரு குறியீடாக இருக்கலாம். சுற்றிலுமுள்ள பேரீச்சைகளின் வியாபாரத்தை அவள் நிர்வகித்திருக்கலாம். அதில் கிடைக்கும் பழங்கள் முக்கிய வணிக பொருளாக இருந்திருக்கும். நெடுஞ்சாலையில் செல்லும் வழிப்போக்கர், வணிகர் மற்றும் புனிதப் பயணம் செல்வோர் யாவரும் தங்கும் கூடாரங்களை அவள் ஈச்ச ஓலைகளைக் கொண்டு அமைத்துக் கொடுத்திருக்கலாம். முக்கியமாக சுவையான ஈச்ச மரத்துக் கள் பயணிகளை அச்சாலையை தெரிவு செய்யச் செய்திருக்கும். மிகையான பயணிகள் வரும்தோரும் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தெபோரா மேற்கொண்ட முயற்சிகள் அவளை ஒரு மாபெரும் நீதித் தலைவியாக காட்டுகின்றது.

கள் கிடைக்குமிடம் என்பதை குறிப்புணர்த்தும் சாலையோர சின்னங்கள்

கள் கிடைக்குமிடம் என்பதை குறிப்புணர்த்தும் சாலையோர சின்னங்கள்

ஆனால் இன்று என் கண்முன்னால் காணப்படும் பெண்மணி, அதே துணிவுடன் இருந்தாலும் புறக்கணிக்கபட்டவராக காட்சியளிக்கிறார். பெரும்பாலும் வந்து செல்லுகிறவர்களின் ஏளன பார்வைகளில் சிக்கி உடைந்து போயிருக்கும் ஒரு உருவம் அது. கடந்த ஒரு தலைமுறையாக  இந்த ஏளனம் அவர்கள் மேல் சுடும் நெருப்பாக பற்றியெரிந்துகொண்டுள்ளது. அதை அணைக்க வில்லையென்று சொன்னால் பனை சார் வாழ்வு நம்மை விட்டு எடுபட்டுப் போய்விடும். இன்று பனைமரத்தடியில் வாழும் தெபோரா நிலையை திருச்சபை சற்றேனும் சிந்தித்துப் பார்ப்பது நலம்.

அங்கிருந்து நான் புறப்படுகையில் நினைத்துக்கொண்டேன், திருமறையை வாசிப்பது என்பது நாம் நமது பயணம் சார்ந்து அமைத்துக்கொள்ளுவதே சிறந்தது என்று. அமர்ந்து செய்யும் தியானைத்தைவிட அலைந்து செய்யும் வாசிப்பு திறக்கும் வாசல்கள் அபாரமானது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: