பனைமரச் சாலை (30)


படுகளம்

சுமார் ஒரு மணி நேரம் பயணித்தும், காலை உணவுக்காக நிறுத்த எந்த இடமும் தென்படவில்லை. இறுதியாக ஒரு சந்திப்பில் உணவுகள் கிடைத்தாலும், நான் அங்கிருந்த இளநீர் கடையையே தெரிவு செய்தேன். இரண்டு இளநீர் அவற்றினுள்ளிருந்த மென்மையான தேங்காய். மொபைலைப் பார்த்தபோது சாம்சன் ராஜுவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

நீங்கள் தெரிவு செய்யவேண்டிய பாதை என இரண்டு பாதைகளை குறிப்பிட்டிருந்தார்கள். ஒன்று விஜயவாடா சென்று திரும்பி ஏலூரு செல்லுவது. அது முழுக்க முழுக்க தேசிய நெடுஞ்சாலை. மற்றுமொன்று கிராமத்துச் சாலை. பனை மரங்கள் நிறைந்தது. நீங்கள் எதை வேண்டுமானாலும் தெரிவு செய்யலாம்.

நான் அவரை உடனடியாக அழைத்தேன். கிராம சாலையையே  நான் தெரிவு செய்கிறேன் இன்று மாலை உங்கள் வீட்டிற்கு வந்துவிடுவேன் எனக் கூறினேன். அப்படியானால் நான் உங்களுக்கு ஒரு நண்பரை அறிமுகப்படுத்த முடியும். நீங்கள் வரும் வழியில் கம்மம் எனும் ஒரு ஊர் வருகிறது. அந்த ஊரில் நீங்கள் படித்த அதே பெங்களூரு ஐக்கிய இறையியல் கல்லுரியில் பயின்ற ஒருவர் போதகராக இருக்கிறார் நீங்கள் அவரை பார்க்கவேண்டும் என்றார்கள். பயணம் தாமதிக்குமே என்று நினைத்தாலும் சரி அவரது எண்ணை அனுப்புங்கள் என்றேன். பொதுவாக போதகர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைப்பது அரிது. அதுவும் காலை 10 மணி வாக்கில் அழைப்பது மிகவும் தவறு. ஆகவே சற்று பிந்தி அழைக்கலாம் என எண்ணி மீண்டும் பயணித்தேன்.

சாம்சன் ராஜூ

சாம்சன் ராஜூ

சாம்சன் ராஜு எனது முகநூல் நண்பர். அவர் இந்த பயணத்தில் ஒவ்வொருநாளும் என்னை தொடர்புகொண்டு எனது பயண விவரங்களை ஆவலாக சேகரித்துக்கொண்டிருந்தார். அவரிடத்திலே நான் பேசும்போது நான் ஒரிசா சென்று வரும் வழியில் அவரைப் பார்ப்பேன் எனச் சொல்லியிருந்தேன். ஆனால் எனது திட்டத்தில் நான் ஒரிசா செல்வது பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. நேரமின்மை ஒரு முக்கிய காரணம். ஆகவே எனது பயண திட்டத்தில் ஏலூரு விடுபட்டுப்போனது. சாம்சன் ராஜு என்னை விடவில்லை. தொடர்புகொண்டு, விஜயவாடா அருகில் தான் நான் இருக்கிறேன், நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்கள். வாழ்வின் நல்லூழ் எப்படி அமையுமென்று தெரியாது. எனக்கு சாம்சன் ராஜு வடிவில் பனைமர வேட்கைப் பயணத்தில் அப்படி அமைந்தது.

கம்மம் என்பதை இடைபட்ட இலக்காக கொண்டு நான் சென்ற பாதை மிக அழகானது. பனை செறிந்த சாலை. பல்வேறு விதமான எரிகள் குளங்கள் இவைகளை நான் பார்த்தேன். இவைகளைச் சுற்றிலும் பனை மரங்கள் செழித்து நிற்பதைக் காணமுடிந்தது. ஒரு இடத்தில் ஈச்சமரமும் பனைமரமும் சேர்ந்து நிற்பதை பார்த்து புகைப்படம் எடுத்தேன். இரண்டு மரங்களும் பயிரிடப்படாதவைகள். ஈச்சமரத்தால் இந்த பனை வாழும் சூழலில் வளர முடியும் என்றால் கண்டிப்பாக பனைமரத்தாலும் ஈச்சமரங்கள் வாழும் பகுதியில் தழைக்கமுடியும் என்று எண்ணினேன். பனைமரத்தின் மூலம் சமூகக் காடுகள் வளர்க்கும் திட்டத்தை பரவலாக்கவேண்டும் அதன் மூலம் பல்வேறு வகைப்பட்ட மக்களுக்கு கிராமிய பொருளாதாரத்தை சார்ந்த தன்னிறைவை அளிக்க முடியும்.

ஈச்சமரமும் பனைமரமும் இணைந்து வளரும் காட்சி

ஈச்சமரமும் பனைமரமும் இணைந்து வளரும் காட்சி

நான் இவ்வாறு நின்றுகொண்டிருக்கையில் இரண்டு சிறுவர்கள் என்னை நோக்கி வந்தார்கள். வினோதமான எனது தோற்றம் அவர்களை கவர்ந்திருக்கும் என நினைக்கிறேன். என்ன பார்க்கிறீர்கள் எனக் கேட்டார்கள். நான் பனைமரத்தை சுட்டிக்காட்டினேன் புரியாமல் என்னையும்  அதையும் பார்த்தார்கள். நான் வண்டியிலிருந்து இறங்கி எனது பையைத் திறந்து ஓலைகளைக் காட்டினேன். பிற்பாடு பனை மரத்தை காட்டினேன். பிற்பாடு ஓலையில் செய்யப்பட்ட கை பட்டைகளை அவர்களுக்கு அணிந்துவிட்டேன் ஒருவாறு புரிந்திருப்பார்கள் என நம்புகிறேன். மிக உற்சாகமாக கைகளைக் காட்டி என்னை வழியனுப்பினார்கள்.

சிறுவர்கள் என்னிடம் சேர.... தடை செய்யாதிருங்கள் என்றார்

சிறுவர்கள் என்னிடம் சேர…. தடை செய்யாதிருங்கள் என்றார்

இன்னும் சற்று தூரம் வந்தபோது எனக்கு சாலையிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் ஒரு மேட்டுபகுதி சாலைக்கு இணையாக வந்துகொண்டிருந்தது. இந்த மேட்டுப்பகுதியில் பனை மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன. சாலையின் இரு மருங்கிலும் வயல்கள். எனது அனுபவத்தாலும் உள்ளுணர்வாலும் அது கண்டிப்பாக ஒரு நீர் சேமிக்கும் அமைப்பு என எண்ணிக் கொண்டேன். என்றாலும் அதை உறுதி செய்யும் வண்ணமாக எனது வாகனத்தை நிறுத்தி விட்டு அந்த இடம் நோக்கி நடந்தேன். ஆம் அது ஒரு நீர் தேக்கம் தான். பெரிய குளத்தின் ஒரு புறத்தில் மண்ணை குவித்து மேடு ஏற்படுத்தி அதில் பனைவிதைகளை நட்டிருக்கிறார்கள். அவைகள் யாவும் முதிர்ந்த மரங்களாக காட்சியளிப்பதால் பல மரங்கள் பட்டுப்போயிருக்கும் அல்லது வேறு தருணங்களில் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கும் என தோன்றியது.

நீர் நிலைகள் பாதுகாக்கப்பட....மணல் சரிவை தடுக்க

நீர் நிலைகள் பாதுகாக்கப்பட….மணல் சரிவை தடுக்க

ஏரிக்கரையோரங்கள், ஆற்றோரங்கள், குளக்கரைகள் ஏன் வயல் நடுவே கூட பனை மரங்கள் வைக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். இவைகள் திட்டமிட்டு வைக்கப்பட்டவைகளாகவே இருக்கமுடியும். நீர் ஆதாரத்தைப் பேணும் மரத்தையே அவ்விதம் நமது முன்னோர்கள் தெரிவு செய்திருக்கின்றனர். பனை மரம் சல்லி வேர்களைக் கொண்டது. வேர்களின் மேற்பகுதி மிகவும் உறுதியான பட்டையால் மூடப்பட்டிருக்கும் அதனுள் பஞ்சு போன்ற மென்மையான பகுதி நீரை சேமித்துக்கொள்ளும். நீரை உறிஞ்ச இவைகளுக்கு நடுவே ஒரு மெல்லிய குழாய் செல்லும். இது ஒரு அழகிய அமைப்பு. தேவைக்கு அதிகமாக பனை நீரை எடுத்துக்கொள்ளுவதில்லை. இன்று நமது ஏரிக்கரைகள் உடைப்பெடுக்காத வண்ணம் இருக்கவேண்டுமென்றால் பனை மரங்கள் ஓர் உயிர் வேலியாய் பூமிக்கடியில் செயல்படும் உண்மையை நாம் உணர்ந்து அவைகளையே நட வேன்டும். மண் அரிப்பை தடுப்பதற்கும் பனை ஏற்ற மரமாகவே உள்ளது.

ஏரிக்கரையோரம் எனது வாகனம்

ஏரிக்கரையோரம் எனது வாகனம்

சுமார் 40 அடிவரை பூமிக்கு அடியில் சென்றும் அதன் வேர்கள் முடியும் இடத்தை தன்னால் கண்டுகொள்ள முடியவில்லை என பேராயர் கால்டுவெல் குறிப்பிடுகிறார். ஆகவே தான் பனை சார் உணவுகள் மேன்மையானவைகள் என கருத்தப்படுகிறது. பூமியின் அடியாழத்தில் உள்ள தாதுக்களை அது நல்ல உணவாக மாற்றி கொடுக்கிறது. இன்றையதினத்தில் எவ்வித கலப்படமும் இல்லாத ஒரே உணவாக பனை உணவு உயர்ந்து நிற்கிறது.

வழியில் மீண்டும் கள் பானைகளும் கள் குப்பியும் வைத்திருக்கும் ஒரு மரத்தடியைப் பார்த்து நிறுத்தினேன்.  அந்த மரத்திற்குப் பின்புறம் ஒரு வீடு இருந்தது. அங்கே இருந்தே வியாபாரத்தை கவனித்துக்கொண்டனர். நான் சென்றதும் வியாபாரம் ஏதும் நடக்குமா என அருகிலிருந்த ஒரு நபர் வந்து பார்த்தார். நான் புகைப் படங்கள் எடுத்துக்கொண்டேன்.

கொல்லப்பட்ட  பனை மரங்கள்

கொல்லப்பட்ட பனை மரங்கள்

அதனருகில் ஒரு கிளைச் சாலை பிரிந்து சென்றது. அந்த சாலையின் ஒரு ஓரத்தில் அனேக பனை மரங்கள் வெட்டி வீசப்பட்டு கிடந்தன. இயந்திர ரம்பம் கொண்டு மனசாட்சியே இல்லாமல் வெட்டப்பட்டு கிடந்தன. இள மரங்கள், பயன் தரத் துவங்கிய நேரத்தில் ஏன் இப்படி? பனை மரங்கள் இன்றைய சூழலில் மதிப்பிழந்த மரங்களாக மாறிவிட்டனவா? புல்லை வெட்டி சாய்ப்பதுபோல் இவைகள் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கின்றனவே? அவை சார்ந்து வாழும் சமூகம் எப்படி தங்கள் எதிர்கால வாழ்வை முன்னெடுக்கும்? அவை சார்ந்து வாழும் பறவைகள் சிறு பிராணிகள் எங்கே போகும்? கொலைக்களத்தில் வீழ்ந்துபட்டுக் கிடக்கும் வீரர்கள் போல் அவைகள் கிடந்தன. எனக்கு மூச்சு முட்டியது பொன்ற ஒரு உணர்வு வந்தது.  துக்கம் மிகப்பெரும் பாரமாய் என்மேல் வந்து அமர்ந்தது. வீழ்ந்து கிடக்கின்ற அவைகள் உயிர்தெழுமா என பார்த்துக்கொண்டிருந்தேன்.

நான் சிறுவனாக இருந்த நேரத்தில் எங்கள் பள்ளிகூட வளாகத்தில் புதிய ஒரு கட்டுமானத்திற்காக பனை மரத்தினை வெட்டினார்கள். அன்று மாலையில் ஒருவர் கோடாரி கொண்டு அதன் தலைப்பகுதியை பிளந்துகொண்டிருந்தார். பொறுமையாக அவர் என்ன செய்கிறார் என கவனித்துக்கொண்டிருந்தேன். மிக அதிக பிரயாசத்திற்குப் பின் அதன் உள்ளிருந்து மிகப்பெரிய தந்தம் போன்ற ஒன்றை எடுத்தார். எனது கரத்தில் ஒரு பெரிய துண்டை வைத்து பிள்ளா சாப்பிடு என்றார்.

பார்க்க உறுதியாக தோன்றிய அந்த துண்டை வாயில் வைத்து  கடித்தால் அது மிக மென்மையாக ஆப்பிளை விட கடிப்பதற்கு எளிதாக இருந்தது. இலேசான இனிப்பு, பனையின் அபாரமான குருதோலை வாசனை, குருத்தெலும்பை விட மென்மையாய் இருந்தது. கடிக்கும்தோறும் நாவில் உமிழ்நீர் சுரந்துகொண்டே இருந்தது. அந்த சுவை நான் எனது வாழ்வில் பிறகெப்போதும் அறியாதது. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் திசையன்விளை சென்றிருந்தபோது அங்கே ஒரு பனை பொருள் விற்பனை கடையில் பனங்குருத்துகளை  வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். அங்கே பனை மரங்கள் வேகமாக அழிக்கப்பட்டுவருவதால்  அன்று அந்த பனங்குருத்தை வாங்க எனது மனம் ஒப்பவில்லை.

ஆனால் இங்கோ குருத்துக்களை கூட எடுக்க மனமின்றி நுங்கு குலைத்த பனைமரங்களையும் துண்டித்துப் போட்டிருப்பதைப் பார்த்து நான் திகைத்து விட்டேன். ஒன்றும் செய்வதிற்கில்லை என நான் தெளிந்த பிறகு எதற்காக வெட்டியிருபார்கள் என ஆராய்ந்தேன். சாலையை விரிவாக்கவேண்டி தான் வெட்டி வீழ்த்தியிருக்கிறார்கள். நவீன வளர்ச்சியின் சிறந்த உதாரணமாக இதை நாம் கொள்ளலாம். வீழ்ந்து கிடக்கின்ற பனை மரங்களே நாம் கொடுக்கின்ற விலை. இவைகளை நாம் ஈடு செய்ய வெண்டுமென்றால் மேலும் சில தலைமுறைகள் ஆகலாம். ஆனால் எவ்வளவு வேகமாக சுதாரிக்கிறோமோ அந்த அளவு நம்மால் சற்றேனும் இழப்பை ஈடுசெய்ய இயலும்.

ஓய்வுநாள் என்பது கிறிஸ்தவர்களுக்கு மிகவும் புனிதமான நாள். அந்த புனிதம் கிறிஸ்து மரணம் விட்டு உயிர்தெழுந்தார் எனும் புரிதலில் இருந்து எழுவது. அப்படிப்பட்ட புனித நாளில் இவ்விதமான ஒரு காட்சி ஆன்மாவில் சோர்வையே எற்படுத்தியது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: