பனைமரச் சாலை (31)


ஏழைகளின் நிழல்

போதகர் ரவீந்த்ராவை அழைத்தேன். பரபரப்பாக இருந்தவர் எனது அழைப்பை எடுத்தார். என்ன வேண்டும் எனக் கேட்டார். நான் எனது பயணத்தை குறித்து இவ்விதமாக கூறினேன். மும்பையிலிருந்து தமிழ்நாடு செல்லும் வழியில் உங்கள் ஊரைக் கடந்துச் செல்லுகிறேன். உங்களைப் பார்க்க இயலுமா எனக் கேட்டேன். எதற்காக வருகிறீர்கள் எனக் கேட்டார். உங்கள் நண்பர் திரு. சாம்சன் ரஜூ உங்களது எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளச் சொன்னார் . மதியம் நான் சற்று ஓய்வெடுக்க ஒரு இடத்தை ஆயத்தப்படுத்த முடியுமா? என்று கேட்டேன்.. சரி வாருங்கள் என்றார்.  ஆனால் அவர் மனமில்லாமல் சரி சொன்னதுபோல இருந்தது. விலாசத்தை குறுஞ்செய்தியில் அனுப்பினார். எனக்கு போகவேண்டுமா என்ன என்றே தோன்றியது.என்றாலும் செல்லுவதில் தவறில்லை என்றே எனது ஆழ்மனம் கூறியது.

பனந்தடிகளை ஏற்றிச்செல்லும் டிராக்டர்

பனந்தடிகளை ஏற்றிச்செல்லும் டிராக்டர்

பயணத்தின் அடுத்த கட்டத்தில் ஒரு டிராக்டர் முழுவதும் பனந்தடிகள் ஏற்றிச் செல்வதைப் பார்த்தேன். என்ன கேட்பது எப்படி கேட்பது எனத் தெரியவில்லை ஆனால் அந்த வண்டியை முந்திச் சென்று நிறுத்தினேன். எங்கிருந்து எடுத்துச்செல்லுகிறீர்கள், எதற்காக எடுத்துச் செல்லுகிறீர்கள் எனக் கேட்டேன். அது ஒன்றுமில்லை இங்கே பல்வேறு மக்கள் வீடு கட்டுகிறார்கள். ஏழைகள் தங்கள் வீடு கட்டுவதற்கு பனை மர தடிகளே உகந்தது. ஆகவே எடுத்துச் செல்லுகிறோம். அதில் நான் வேறு சொல்லுவதற்கு இல்லை. ஏழைகள் குடிலைக் கட்ட பனைமரம் இன்றும் உதவியாய் இருப்பது மகிழ்ச்சியான காரியம்.

முற்காலங்களில் பனை மரத்தை வெட்டி வீடு வைப்பது முக்கியமான சமூக அந்தஸ்தை குறிப்பிடும் ஒரு காரியம். எத்தனை பனை மரங்கள் வெட்டியிருக்கிறார்கள் என்பதே வீட்டின் அளவை குறிப்பிடுவதாக அமையும். முற்காலங்களில் கோவில்கள் ஆலயங்கள் போன்றவற்றில் கூட கட்டுமானப் பணிகள் பனை சார்ந்தே நடை பெற்றது. சரி….இன்று பனை மரம் முறிக்கும் போது கண்ணீரும் முற்காலங்களில் பனை மரம் வெட்டும்பொது பெருமையும் ஏற்படுவது எதனால்?

பனை மரங்கள் வெட்டப்படுவது என்பது முற்காலத்தில் உள்ள ஒரு முக்கிய பணி. மரம் வெட்டுபவர்கள் வந்து மரத்தைச் சுற்றி தண்ணீர் விட்டு பிக்காசி வைத்து மண்ணை பெயர்த்து எடுப்பார்கள். பிற்பாடு மண்வெட்டி வைத்து அவைகளை களைந்து விட்டு, கூம்பு வடிவம் போல மரத்தின் வேர்களைமாற்றி கீழ்நோக்கி சரிவாக வெட்டுவார்கள். அதன்பிறகு பெரிய வடத்தைக் கொண்டு எப்பக்கதில் மரத்தை சரிக்கவேண்டுமோ அந்த பக்கம் நோக்கி திருப்புவார்கள். சுமார் 5 அல்லது ஆறு பேர் சேர்ந்து மரத்தை ஒரு புறம் இழுக்க வெட்டப்பட்ட சிறு குழியிலிருந்து ஒருவர் வாகாக கோடாரியால் சுற்றிலும் வெட்டுவார். மரம் முறிந்த பிற்பாடு மரத்தின் தூர் எனும் அடிப்பாகத்தை விட்டுவிட்டு மரத்தை மூன்று துண்டாக எடுப்பார்கள். தூர் பகுதியை குடைந்து எடுத்தால் மாட்டிற்கு உணவு வைக்கும் தொட்டி கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் இதை அதிகம் பயன்படுத்துவதில்லை.

பனை மரங்கள் வெட்டுவது சாதாரணமாக நடைபெறாது. இளமரங்கள் வெட்டுவது கற்பனையில் கூட நடைபெறாது. நெடுநெடுவென்று கோணல் இன்றி உயந்து நிற்கும் முதிர்ந்த பனையையே தெரிவு செய்வார்கள். பொதுவாக மூன்று துண்டுகள் விழும்படியான பனையே முறிப்பதற்கு சிறந்தது. கீழுள்ள இரண்டு பகுதிகளும் தூண்கள் செய்ய மற்றும் கூரை வேய பயன்படுத்துவார்கள். மீதியான ஒற்றைத் துண்டை எடுத்து, கூரையில் ஓடுகள் அமைக்கும் பட்டியலுக்காக பயன்படுத்துவார்கள். வெட்டப்பட்டு கிடக்கும் பனை மரத்தின் தலை பகுதியிலிருந்து சில ஓலைகளை எரிப்பதற்கும், சில ஓலைகளை கடகம் (கடவப் பெட்டி) போன்ற பொருட்கள் செய்வதற்கும், குருத்தோலைகளை அழகிய கலைபொருட்கள் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள்.  24 ஓலைகளுக்கும் மேல் முறிக்கப்படும் பனைமரத்திலிருந்து கிடைக்கும். அவைகளின் மட்டைகளுக்கும் பல்வேறு பயன்பாடுகள் உண்டு.

பனை மரங்களுக்கும் வேறு மரங்களுக்குக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு.பொதுவாக அனைத்து மரங்களும் அதன் மையப்பகுதியிலேயே  வைரம் பெற்று உறுதியாக இருக்கும்.

பனை மரமோ இதற்கு எதிர்மாறாக இருக்கும். மரத்தின் வெளிப்பகுதி உறுதியாகவும் உட்பகுதி மென்மையாகவும் இருக்கும். பனை மரம் வெளிப்புறம் கருமையாகவும் உட்புறம் வெண்மையாகவும் இருப்பதால், வெள்ளை உள்ளம் படைத்தோருக்கு இணையாக ஒப்புமைப் படுத்துவதும் உண்டு. மேலும் பனை மரத் தடியின் அமைப்பும் வேறு விதமாக இருக்கும். சிறா என்று சொல்லகூடிய ஊசிபோன்ற உறுதியான அமைப்புகளின் தொகையே வெளிப்புற உறுதியான மரம். ஈட்டி மரத்தைவிட உறுதியான அழகான தோற்றம் கொண்டது. ஆனால் பணி செய்வதற்கு மிகவும் கடினமான ஒன்று. ஆகவே தச்சு வேலைகள் செய்பவர்கள் இன்று அதிகமாக பனை மரத்தை பயன்படுத்துவதில்லை. எனது பாட்டிவீட்டு ஜன்னலில் கூட கம்பிக்குப் பதிலாக பனை மரத்தினை கடைந்து  இட்டிருந்தார்கள்.

பனை மரத்தை சீர்செய்வதற்கு இன்றும் கோடாலி போன்றவற்றையே பயன்படுத்துகிறார்கள். நவீன இயந்திர வாட்களைக் கொண்டு குறுக்காக வெட்ட முடியும்  ஆனால் நீளவாக்கில் வெட்ட இயலாது. பனைமரத்தின் வைரம் என்பது வாட்களையே பதம் பார்த்துவிடும். பல நேரங்களில் வாட்களும் பனந்தும்புகளும் உரசிக்கொள்ளும் நேரத்தில் தீப்பொறி எழும்புவதையும் நாம் காண முடியும்.

கன்னியாகுமரி இரயில்வே நிலையத்தின் அருகில் குமரி அனந்தன் அவர்கள் பனை மரத்தால் செய்த பொருட்களை ஒரு காட்சியகமாக வைத்திருக்கிறார். பனை மரத்தால் செய்ய இயலாதது என இன்றும் இல்லை என்றாலும் நுண்ணிய வேலைப்பாடுகள் செய்ய உகந்த மரம் அல்ல அது. ஏழைகளோடு வாழும் மரம் ஏழைகளுக்காகவே பயன்படுவதில் தவறொன்றும் இல்லை.

டிராக்டர் ஓட்டுனரோடு பேசியபோது

டிராக்டர் ஓட்டுனரோடு பேசியபோது

அவர் குறிப்பிட்ட செயின்ட் மேரீஸ் ஆலயம் குறித்து அனேகருக்குத் தெரியவில்லை. வழி தவறி ஒரு கத்தோலிக்க பேராயரின் இல்லத்திற்குள் சென்றேன். அங்கே என்னை சந்தித்த பாதிரியார், எனக்கு சரியான வழியை காண்பித்துவிட்டு, நானும் உடன் வரவேண்டுமா எனக் கேட்டார்கள். இல்லை நான் சமாளித்துக்கொள்ளுகிறேன் எனக் கூறிக்கொண்டு, நான் சென்று சேர்ந்த அவர்களின் ஆலயத்தில் ஒருவரும் இல்லை. ஓய்வுநாள் ஆராதனை முடிந்து ஆலயமே வேறிச்சோடியிருந்தது.

மீண்டும் போதகரை அழைத்தேன், அவர் என்னிடம் உங்களுக்கு பக்கத்தில் ஒரு தெரு இருக்கிறது அதுவழியாக வந்தால் செயின்ட்  மேரீஸ் ஸ்கூல் வரும் அதற்குள் வாருங்கள் என்றார். தேடி கண்டுபிடித்து அந்த பள்ளிக்கூடம் அருகில் சென்றபோது திரளான கூட்டம் இருந்தது. வாட்ச்மேன் என்னைத் தடுத்து நிறுத்தினான். நான் போதகரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்றேன். போதகர் வெளியே போயிருக்கிறார் இங்கே இல்லை என்றான். எனக்கு தலையைச் சுத்துவதுபோலிருந்தது. சமாளித்துக்கொண்டு, அவர் என்னை வரச்சொல்லியிருந்தார் என்றேன்.  என்னை அனுமதித்தான். போதகரின் வீட்டைக் காண்பித்தான். ஃபனிகிரியில் பார்த்த வீட்டைபோலவே ஆனால் இன்னும் பிரம்மாண்டமாக இருந்தது. வீட்டிற்கு முன்பாக நான் வண்டியை நிறுத்திய போது ஒரு வாலிபன் அங்கே இருந்து ஓடி வந்தான்.

பேசவில்லை ஆனால் சிரித்தபடியே எனது பைகளை பற்றிக்கொண்டான். போதகர் இருக்கிறாரா என்றேன், இல்லை ஆனால் உங்களை காத்திருக்கச் சொன்னார் என்றான். எனது பைகளை அவனே எடுத்துச் சென்று வீட்டிற்குள் வைத்தான். ஃபேன் போட்டு விட்டு என்ன வேண்டும் என்பது போல எனது கட்டளைகளுக்காக காத்துநின்றான். போதகர் உனது அப்பவா என்றேன் ஆம் என்றான். ஏதோ நினைத்தவன் போல உள்ளே சென்று  தண்ணீர் கொண்டுவந்து  கொடுத்துவிட்டு, வேறு எதுவும் வேண்டுமா என்று கேட்டான். நான் சொன்னேன், எனக்கு குளிக்க வேண்டும் என்றேன். உடனடியாக அனைத்தையும் ஒழுங்கு செய்தான். குளித்துவிட்டு வெளியே சென்று உணவு உண்டபின்னர் சற்று ஓய்வெடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். எனக்கு அவர்கள் ஒதுக்கியிருந்த அறை நான் மும்பையில் வாழும் முழு வீட்டிற்கு இணையானது. எனது படுக்கையறையின் அளவு பெரிதாக நான் குளிக்கச் சென்ற பாத்ரூம் இருந்தது.

நான் குளித்துவிட்டு வரும்போது எனது கட்டிலுக்கருகில் ஒரு ஏர் கூலரை அந்த தம்பி திருப்பி வைத்துக்கொண்டிருந்தான். கோடையின் வெக்கைக்கு மிகவும் இதமாக இருந்தது. நான் எனது உடைகளை மாற்றிவிட்டு சட்டை போடாமல் கட்டிலில் எனது பொருட்களை எடுத்துவைத்துக்கொண்டு அந்த இதமான காற்றை அனுபவித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்தப் போதகர் எனது அறைக்குள் புயல் போல நுழைந்தார்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: