பனைமரச் சாலை (32)


பனை திருப்பணியில்

நானும் போதகர் ரவீந்திராவும்; எனது கழுத்தில் பனை ஓலையில் செய்யப்பட்ட கிளர்ஜி காலர் இருக்கிறது.

நானும் போதகர் ரவீந்திராவும்; எனது கழுத்தில் பனை ஓலையில் செய்யப்பட்ட கிளர்ஜி காலர் இருக்கிறது.

போதகர் அங்கியோடு வேகமாக வந்து எனது கரங்களைப் பற்றினார். ஞாயிற்றுக் கிழமையின் நெருக்கடியினாலே  தாமதித்துவிட்டேன் என்றார்கள். உங்களுக்கான உணவு வந்துகொண்டிருக்கிறது நங்கள் வேளியே சாப்பிட்டுவிட்டோம் என்றார்கள். அழகான மெல்லிய பிரெஞ்சு தாடி மற்றும் கண்ணாடி இட்ட முகம்.  ஒரே நிமிடம் இருங்கள் உடை மாற்றிக்கொண்டு வருகிறேன் என்றார். நான் சரி என்றுவிட்டு அவர்களுக்கு காண்பிக்கவேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன்.

உணவு எனக்காக வெளியிலிருந்து பெறப்பட்டது. போதகர் ரவீந்திரா மற்றும் அவரது உதவி போதகர் சூழ அந்த வட்ட வடிவ மேஜையில் அமர்ந்தேன். போதகர் எனக்கு உணவை பறிமாறினார்கள்.

அன்றய தினம் அவர்களிடம் சற்றுநேரம் பேசிவிட்டு ஒரு மணி நேரமாவது ஓய்வெடுக்க வேண்டும் என நான் நினைத்தேன் அவர்களும் அதையே என்னிடம் சொல்ல, நாங்கள் பேசத்துவங்கினோம். எங்கள் கல்லூரி குறித்து, எங்கள் ஆசிரியர்கள் பற்றி, நான் அறிந்த அவர் பேட்ச் மாணவர்கள் மற்றும் என்னோடு பயின்ற ஆந்திரா மாணவர்கள் என பேசத்துவங்கினோம். நேரம் சென்றுகொண்டே இருந்தது

பிற்பாடு எனது பயணத்தைக் குறித்து விசாரித்தார். நான் எனது வாழ்வின் தேடலை மிகவும் உணர்ச்சிகரமாக சொல்லிக்கொண்டிருந்தேன். உற்ற தோழனைப்போல அவர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். சோர்புகள் யாவும் பறந்தோடின. இனிமேல் கண்டிப்பாக ஓய்வு என்பது இல்லை. பணியில் திளைப்பதே ஊட்டம் என கருதி எனது கருவிகளையும் ஒலைகளையும் எடுத்துவந்து அவர்களுக்கு கண்பித்தேன். போதகரின் உருவத்தை ஓலையில் செய்ய அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. ஓலையில் சிலுவை செய்வது, ஓலையில் கைபட்டைகள் செய்வது, ஓலையில் புக் மார்க் செய்வது என அனைத்தையும் அவருக்கு காண்பித்தேன். அவரது மகனும் இவையாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

முன்று போதகர்கள்

முன்று போதகர்கள்

அனைத்தையும் பார்த்து கேட்டு முடித்த பின்பு போதகர் பேசத்துவங்கினார். நீங்கள் எடுத்திருப்பது மிகவும் சவாலான ஒரு பணி. ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்த அனைவருமே அற்பணிப்பு கொண்டவர்கள் தாம். எனினும் நான் பார்க்க இது சற்று வித்தியாசமாக இருக்கிறது. நீங்கள் கூறுவது போல  நமது ஊரில் கிடைக்கும் ஓலைகளைக் கொண்டே நாம் ஏன் சிறந்த அலங்கரிப்பைச் செய்யக்கூடாது? குருத்து ஞாயிறு இன்னும் பொருளுள்ளதாக அமைய வேண்டுமென்றால் பனைத் தொழிலாலர்களை இணைத்தே நாம் அதை அனுசரிக்க வேண்டும் எனும் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன். எனது வாழ்வின் இனிய நாளாக இதைக் கருதுகிறேன் என்றார்.

மேலும் அவர், உங்களது பயணம் இந்திய கிறிஸ்தவ சூழலில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கோருகின்ற ஒன்று. இளைஞர்களை உங்கள் பயணம் மிக அதிகமாக கவர்ந்திழுக்கும் என்று சொன்னார். அதை நான் மிகப்பெரிய ஆசியாக கருதினேன். நான் குழந்தைகள் விரும்பும் போதகராக இருந்திருக்கிறேன், ஆனால் இளைஞர்களுக்கு நான் ஒரு முன்மாதிரியாயிருப்பேன் என அவர் சொன்னதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.

னான் தற்போது பணி செய்யும் திருச்சபையில் எனது குழந்தைகளைத் தவிற வேறு இரண்டு குழந்தைகள் மட்டுமே உண்டு. சுமார் 10 இளைஞர்கள் திருச்சபையின் அனைத்து காரியங்களிலும் பங்கெடுக்க உற்சாகமாக முன்நிற்கிறார்கள். பல்வேறு காரியங்களை நாங்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தாலும், எனக்கு இளைஞர் மத்தியில் நான் பணி செய்யும் ஒரு ஆளுமையாக இருப்பேன் என்பது கனவிலும் உதிக்காத ஒன்று. ஆனால் எனது பயணத்தின் முக்கிய தீர்க்க தரிசனம் அவரது வார்த்தைகளே.

மன்றாட்டுடன் அங்கிருந்து நான் புறப்பட்டேன். அவரது மகனும்  நண்பனுமாக என்னை வழியனுப்ப போதகர் பணித்தார். சற்றும் நான் எதிர்பாரா வண்ணம் எனது பங்களிப்பு உங்களின் பனை மர வேட்கைப் பயணத்திற்கு என பணம் கொடுத்தார். நான் அதை மாறுக்கின்ற சூழலில் இல்லை. ஆனால் நெகிழ்ந்து போய் விட்டேன். அவர் என்னோடு செலவு செய்த அந்த இரண்டரை மணி நேரமே விலையேறப்பெற்றது. அவர் எனது பயணத்தை மிக மிக கருத்தாய் கொண்டிருக்கிறார் என்பதை நினைத்தே நெகிழ்ந்தேன்.

கம்மம் மிஷன் பங்களா முன்பு

கம்மம் மிஷன் பங்களா முன்பு

மேலும் அவர் நான் போகிற வழியில் சோற்றுபள்ளி எனும் இடம் வருவதாகவும் அங்கே சாலோமோன் என்றொரு போதகர் இருப்பதாகவும் அவரை நான் பார்ப்பது எனக்கு பயனளிக்கும் என கூறி அவரது எண்ணைக் கொடுத்தார். நான் வெளியே வந்தபோது எனது வாகனத்தின் மேல் அக்-ஷை அமர்ந்திருந்தான். போதகரின் மகனுடைய நண்பன் அவன். நாங்கள் அனைவருமாக ஒன்றுகூடி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அங்கிருந்து நான் சோற்றுப்பள்ளி செல்ல அவர்கள் எனக்கு வழிகாட்டும்படியாக முன்னால் சென்றார்கள். முக்கியச் சாலை வருமட்டும் நான் அவர்களை பிந்தொடருகிறேனா என அவர்கள் பார்த்து பார்த்துச் சென்றார்கள். முக்கிய சாலை வந்தவுடன் நான் கரங்களை ஆட்டியபடி செல்ல முயல, போதகரின் மகன் என்னை கைகாட்டி நிறுத்தினான். நான் வண்டியை நிறுத்தினேன்.

நான் இதே பாதையை தெரிவு செய்தால் பொதும் என்றும், சோற்றுப்பள்ளி எட்டியவுடன் போதகரை அழைக்கவேண்டும் என்று கூறினான். சரி என்றேன். நான் புறப்பட ஆயத்தமானபோது, அக்ஷையைச் சுட்டிக்காட்டி அவனுக்கு உங்களோடு செல்ஃபி  எடுக்கவேண்டும் என ஆசை, எடுத்துக்கொள்ளலாமா? என தயக்கத்தோடு கேட்டான்.

நான் சிரித்து விட்டேன். கண்டிப்பாக நீங்கள் என்னோடு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன். நான் இதுவரை செல்ஃபி எடுத்தது கிடையாது. இன்று அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கலையாக மாறிவருவதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனது சிரிப்புக்கு காரணம் போதகர் நீங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள் எனச் சொல்லி 10 நிமிடம் கூட ஆகவில்லை. வாக்கு பலித்தது. உண்மைதானா? நான் செய்வது எனக்கான பயணம் மட்டும் இல்லையா? அனேகரை என்னோடு இழுத்துக்கொள்ளும் பயணமா இது? அப்படியாயின், நான் ஒரு மிகப்பெரிய பொறுப்பையே எனது பயணத்தினூடாக சுமந்து செல்லுகிறேன். அனேகரின் கனவுகள், அன்பர்களின் ஆசிகள், இளையோரின் ஈடுபாட்டுடன் எனது பயணம் மகத்தானதொரு மாற்றத்தை சமூகத்திலும் திருச்சபையிலும் ஏற்படுத்தும் என நிச்சயமாக தோன்றியது. சிறிய வெற்றிதான் ஆனால் என்னை நானே நம்பி முன்செல்ல மிகவும் தேவையாக இருந்தது.

ஃபனிகிரியிலிருந்து காம்மத்திற்கு சுமார் 100 கிலோ மீட்டரும் கம்மத்திலிருந்து சோற்றுபள்ளி செல்ல 80 கிலோ மீட்டரும் பயணிக்க வேண்டும் மாலை 6.00 மணி இருக்கும்போது நான் சோற்றுபள்ளியை அடைந்தேன். வருகிற வழியில் ஒரு ஊரின் பெயர் கள்ளுர். பொருத்தமான பெயர் தான். ஆனால் நின்று விசாரிக்க தான் நேரம் இல்லை. ஆந்திராவில் ஒரு வாழ்நாள் பயணம் அமைக்கவேண்டும் என உறுதிகொண்டேன். அந்த பயணம் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும் வண்ணமாக ஒருங்கிணைக்க வேண்டும். ஓலைகளை பயன்படுத்துவதில் ஆந்திராவில் ஒரு புரட்சி ஏற்படுமென்றால், தமிழகத்தால் அதற்கு இணையாக நிற்க இயலாது என்பதே உண்மை. அதில் பிழையேதும் இல்லை. அவரவர் முலதனங்களை அவரவர் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கதே.

அந்திராவில் பயன்படுத்தப்படாத ஓலைகள் வீணய்ப் போவதை பார்க்கும்போது ஓலைகளை கஞ்சனைப்போல் பயன்படுத்தும் எனக்கு கண்ணீரே வருகிறது. ஒருவேளை மூங்கிலிலிருந்து காகிதம் தயாரிப்பது போல் ஓலைகளிலிருந்து தயாரிக்க இயலுமா? அப்படி ஏதேனும் வெற்றிகரமான ஆய்வு நடைபெற்றால் அதுவே கூட ஒரு சிறந்த மாற்றாக அமையும். மரங்கள் வெட்டப்படாமல் பாதுகாக்கப் படுவதற்கும் பனைத் தொழிலாளிகள் வாழ்வில் ஒரு புதிய வருவாய்க்கான வாய்ப்பும் அமையும்.

போதகர் சாலோமோனுடன்: சோற்றுப்பள்ளி

போதகர் சாலோமோனுடன்: சோற்றுப்பள்ளி

போதகர் சாலோமோன் அவர்கள் எனக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தான் அப்பகுதிகளில் உள்ள திருச்சபைகளுக்கு சுழியல் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் பொறுப்பிலிருப்பவர்கள். உற்சாகத்துடன் என்னை வரவேற்றார்கள். அங்கே சற்று அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது எனது நல்லூழ். புதிய நிகழ்ச்சியாக ஏதேனும் செய்யலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன், உங்களின் பயணம் நாங்கள் பனை மரங்களை நடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது. திருச்சபையின் சுழியல் சார்ந்த நிகழ்வுகளில் இதை நான் கவனத்தில் கொள்ளுகிறேன் என்றார்கள். சற்றும் நான் எண்ணிப்பர்க்காத இரு சந்திப்புகள் இந்த நாளில் நடைபெற்றதை நினைத்து கடவுளுக்கு நன்றி மன்றாட்டைக் கூறினேன்.  தேனீர் கொடுத்து நான் தெம்பாக ஏலூரு செல்ல வழியனுப்பினார்கள். இன்னும் சுமார் 75 கி மீ தொலைவு நான் செல்ல வேண்டும், மணி ஏழேகால் ஆகிவிட்டது. பயணத்தைத் தொடர்ந்தேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: