பனைமரச் சாலை (33)


பனை பித்தன்

ஏலூரு நோக்கி நான் எனது வாகனத்தை திருப்பிய பொழுது, இருட்டிவிட்டிருந்தது ஒரே ஒரு இடத்தில் தான் நான் எனது வாகனத்தை மாற்றுப்பாதையில் செலுத்தவேண்டியிருந்தது. சாலை சிறியதும் நெருங்கியதுமாக இருந்தது. வழியெங்கும் பனைமரக் காட்டினுடாக வந்த அனுபவம் எனது வாழ்வின் மகத்தான தருணங்களில் ஒன்று. நான் திட்டமிட்டபடி வந்திருந்தால் கண்டிப்பாக அனைத்து பனைமரங்களையும் பார்த்திருப்பேன். ஆனால் எனக்கான அனுபவம் வேறு விதமாக அமைந்தது.

அன்று பவுர்ணமியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். அனைத்தும் நிறைவாய் அமைந்ததாலே எனது மனம் ஒருவித ஆழ்தியானத்திலே சென்றது. வாகனம் ஓட்டுவதே ஒருவகை தியானம் தான். அந்த தியான மனநிலையில் பனைமரங்கள் என்னை வேறொரு கனவுலகுக்கு அழைத்துச் சென்றன. பனைமர வேட்கைப் பயணம் எனக்கு அளித்த மிகப்பெரிய பரிசு அவ்விரவு. ஒருபோதும் நான் திட்டமிட்டு பெற்றுக்கொள்ளக்கூடாத ஆசி அது. எனது அத்தனை ஏக்கங்களுக்கும் வடிகாலாய் அமைந்த இரவு அது. ஒருவேளை இப்பித்திலேயே நான் மரணித்திருந்தால் சுவர்க்கத்திலுள்ள  பனைமரங்கள் யாவும் என்னை கை நீட்டி அழைத்துச் சென்று அவற்றினடியில் என்னை அமரச் செய்திருக்கும்.

நானும் குழந்தைகளும் வாகனத்தில் செல்லும்போது நிலவுகள் எப்போதுமே எங்கள் கூட வரும். குழந்தைகள் ஒருபோதும் நிலவைப் பார்க்க தவறியதில்லை. நடந்தாலும் சரி. நிலவு கூட வருகிறது என்பது குழந்தைகளைப் பொருத்தவரை ஒரு  மகிழ்ச்சியான காரியம். இளையவன் மித்ரன் இல்லாத வண்டியின் முற்பகுதியை தடவிப்பார்த்துக் கொண்டேன். தோளில் பாரமாயிருந்த சுமை எனது ஆரோன் இல்லையா? தோள்மேல் கைவைத்து அழுத்திப்பிடிக்கும் ஜாஸ்மின் எங்கே? ஒரு மோன நிலையிலேயே வண்டி சென்றது. பாம்பைப்போல வளைந்து  செல்லும் சாலை, அது தேடும் மணியாக வானத்தில் நிலவு. பனைபுதர் வழியாக நிலவை எட்டிப்பிடிக்க விழைகிறதோ சாலை? எண்ணங்கள் பால் நிலவு போல ஒழுகிச் சென்றுகொண்டிருந்தது.

வெள்ளி ஒளி உமிழும் நிலவிலிருந்து பெறும் ஒளியால் உயிர்பெற்ற பனைமரங்கள் நிழலுருவமாய் என்னைக் கடந்துபோய்க்கொண்டிருந்தன. திடீரென நான் வேறு ஒரு உலகத்திற்குள் இழுக்கப்பட்டேன் பனையாலான உலகம் அது. அனைத்தும் பனையால் அமைந்திருந்தது. கால்களை ஒன்றாய் ஊன்றி ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்து நிற்கும் காதலர் மரம். தமது கடமை செய்யக் காத்திருக்கும் காவலர்கள் வரிசை போல் சீராக எழுந்து நிற்கும் சலையோர நெடுமரங்கள். தனது பாதையிலிருந்து இறங்கி பூமியை நனைக்கும்படியாய் கீழிறங்கிய  முகில் கூட்டமாய் தூரத்து பனங்காடு. காளி போல் அவேசங்கொண்டு தனது கைகளைதிசைக்கொன்றாய் பரப்பி நிற்கும் வடலி. தனது குழந்தைகளுக்கு இடம் விட்டு நடக்கும் பெற்றோர்போல் பெரிதும் சிறிதுமான பனைகள். நண்பர்களின் இசைவுடன் பின்னிப் பிணைந்து நெருங்கி நிற்கும் பனங்கூட்டம். புதிதாய் ஏற்றியும் தனது திரி அவிந்த சூம்பிய மெழுகுதிரிபோல மொட்டைப் பனை. தனது விரல்களால் நிலவை அள்ளியெடுக்கத் துடிக்கும் ஓலைகள். சல்லடைப்போல நிலவை சலித்தெடுக்கும் ஓலைப் பின்னல்கள்.

கற்பனை ஊறும் மரங்கள்

கற்பனை ஊறும் மரங்கள்

பாற்கடலை கடையும் மத்தாக பனந்தடி. சிலுப்பியபடி நிற்கும் முடியைப்போன்ற பறங்கித்தலை, என்னை ஒயாமல் வாழ்க வாழ்க என ஒலிஎழுப்பி எனது பயணத்தை உற்சாகப்படுத்தும் பனைத்திரள். தவத்தில்  மூழ்கியிருக்கும் ஒற்றைப்பனை. சற்றே அமர்ந்து கொள்ளுகிறேன் எனும் பாவனையில் வளைந்து மேலெழும்பும்  குளக்கரை பனை. வயல் வரப்பைக் காத்தபடி கண்ணிமைக்காமல் காவல் காக்கும் பனைவரிசை. நீர்நிலைகளில் மூழ்கி தலையுயர்த்தும் அன்னமென மரக்கூட்டங்களுள் தலையுயர்த்தி நிற்கும் பனை.

படைத்தோனை நோக்கி கரங்களை குவிக்கும் சன்றோர் போல தம் குருத்தை குவித்து சிந்தையோடிருக்கும் வளர்த்திய பனை. இறகுகளைப் பிடுங்கிய கோழியைப் போல் காணப்படும் சுத்தம் செய்யப்பட்ட மரங்கள். தேனீ அடை கட்டியதுபோல் குவிந்து தொங்கும் ஓலைகளையுடைய பழம் பனை. நான் பொலிவுற்றிருக்கிறேன் என குலைத்து தொங்கும் கன்னிப்பனைகள், நான் ஆண்வர்க்கம் என நீட்டியபடி கிடக்கும் கட்டுக்கடங்கா காளையர்போல் ஆண்பனைகள், பாளைசீவி ஒரு விதமாக கலயத்திற்குள் தனது வாழ்வை ஒப்புக்கொடுத்த அலகுப்பனைகள். தங்கள் வாழ்வே பானைக்குள் தான் என சோகத்துடன் குனிந்த தலை நிமிரா பாளையுடன் பருவப்பனைகள்.

தூக்கணாங் குருவிகள் அமைத்த கூடுகளை தனது விரல்களால் பதறாமல் பற்றியிருக்கும் அன்னைப்பனை. வவ்வால்கள் தொங்கியதால் இறகாய்த் தொங்கிய ஓலைகள். காற்றில்லையேல் அமைதி, காற்றடித்தால் சலசலப்பு, பெருங்காற்றில் பேயாட்டம் என நிமிடத்துக்கொருமுறை தம்மை மாறியமைத்தன. சாமரம் வீசுவதுபோல் தமது ஓலைகளால் என்னை வருடின.

ஒவ்வொரு பனையும் என்னை முன்னுக்கு முந்தி தள்ளியது. வாவா என அழைத்து தன்னை மறைக்காமல்  முழுமையாக எனக்கு அதன் அழகை காண்பித்தது. வாழ்த்துபா ஒலிக்க அவைகளினூடாக எனது பனைமர வேட்கைப்பயணம் வெற்றிகரமாக சென்றுகொண்டிருந்தது.

அனைத்தையும் படைத்த இறைவன் புன்முறுவலுடன் என்னை கடந்துபோனார். மூதாதயர் தங்கள் ஆசிகளை என்மீது பொழிந்தனர். உலகின்  எங்கோ இருக்கும் பல்வேறு நண்பர்களால் நான் நினைவுகூரப்பட்டேன். இக்கணத்திற்காக நான் பிறந்தேன். எனது வாழ்வின் உச்சக்கட்டம் இது என எண்ணிக்கொண்டேன். இத்துணை புனிதமாய்க் கழிந்த பிரிதொரு புனித நாள் என் வாழ்வில் இல்லை. மங்கிய ஒளியில் என்னைக் கூர்தீட்டியது யார்?

எண்ணத்தால் அருகிலிருப்பவை

எண்ணத்தால் அருகிலிருப்பவை

ஏலூரு நகரத்தை நெருங்கிய போது கட்டிடங்கள் எனது கனவுகளை மறைத்தது. சீறிப் பாய்ந்த வாகனங்கள் எனது கண்களை கூசச்செய்தன. ஆழ்துயிலில் இருந்து எழுப்பபட்ட எரிச்சலை அடைந்தேன். கனவுகள் பின்னுக்குப் போய் நகரத்தின் மும்முனை சத்தியில் வந்து நிற்பதை புரிந்துகொண்டேன். எங்கே செல்லுவது எனத் தெரியவில்லை. சாம்சன் ராஜுவை அழைத்தேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: