சிறுவர்களும் முதிர்கன்னிகளும்
மதியம் மூன்று மணிக்கு நாங்கள் மன்னார்குடியில் உள்ள ஒரு மெஸ்ஸில் சாம்பார் சாதம் சாப்பிட்டோம். காலையிலேயே இலக்குவன், அன்றைய தினமணியில் வெளியான எங்கள் பயணத்தைக் குறித்த கட்டுரையை கத்தரித்து புகைப்படமாக அமிர்தராஜ் அவர்களுக்கு வாட்சாப்பில் அனுப்பியிருந்தார்கள். பனைமரச்சாலையின் முதல் பத்திரிகைச் செய்தி அது எனும்போது இலக்குவனுக்கும் ஜெபக்குமாருக்கும் கடன்பட்டிருக்கிறேன் என்றே எண்ணத் தோன்றியது. ஆசைதீர அதைப் பார்த்து, முகநூலில் பகிர்ந்து, பதிலளிக்க வெண்டியவர்களுக்கு பதிலளித்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
எங்களது இலக்கு திருப்பனந்தாள் செல்லுவது. நாங்கள் சென்ற வழிகளில் மிக இனிமையன ஒரு பாதை இதுவென்று எண்ணுமளவிற்கு அழகிய கிராம சாலைகள். வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பனை மரங்களின் கூட்டமும் என மன ரம்மியமான ஒரு இடம் அது. மாலை சுமார் 4 மணிக்கு திருப்பனத்தாளுக்கு மிக அருகில் வந்துவிட்டோம். இன்னும் நான்கு கிலோ மீட்டர் தான் இடைவெளி இருக்கும், சாலையின் இரு புரமும் பனைகள் தெரிந்தன. அமிர்தராஜ் எனக்குப்பின்னால் வந்துகொண்டிருந்தார். அதே வேளையில் சாலையின் இடதுபுறம் ஒரு சிறு குட்டையில் நீர் கலங்கும்படியாக சிறுவர்கள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தனர். நான் அதைப்பார்த்து புன்னகைத்துவிட்டு, அமிர்தராஜ் அவர்களுக்கு சிறுவர்கள் குளிக்கிறார்கள் என்பதை சைகை காட்டியபடி முன்னால் சென்றேன். அமிர்தராஜ் அந்த அழகிய காட்சியால் கவரப்பட்டு அங்கேயே நின்றுவிட்டார்.
அவர் வாகனத்தை நிறுத்தியது தெரியாமல் நான் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். இருபுறமும் பனைமரங்கள் இருந்ததால் நின்று எவ்வளவு அழகான மாலைகாட்சி என சொல்லாம் என்று பார்த்தால் ஆளைக் காணவில்லை. திரும்பி பார்த்தால், அவர் பைக்கை நிறுத்திவிட்டு தனது உபகரணங்களை எடுத்துக்கொண்டு நின்றார். நான் திரும்பி அவரிடத்தில் போனேன். அவர் சாலையின் வலது புரத்தில் வண்டியை நிறுத்தியிருந்தார். நான் இடது புறம் சிறுவர்கள் விளையாடுகின்ற குட்டையின் அருகில் போய் நிறுத்தினேன். குதித்து குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் உடனேயே, அங்கிருந்து கரையேறி வரிசையாக எங்களைப் பார்த்தபடியே நின்றார்கள். அவர்கள் பார்வையில் ஒருவித மருட்சி தென்பட்டது. நான் அவர்கள் குதிப்பதை பார்க்க, வண்டியிலிருந்து இறங்கினேன். அப்போது நானும் அமிர்தராஜும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்றது.
சிறுவர்கள் திசைக்கொன்றாய் விழுந்தடித்து ஓடினார்கள். எனக்கும் அமிர்தரஜுக்கும் எதுவும் புரியவில்லை. சிலருடைய ஆடை அவிழ்ந்தது குறித்து கூட எந்த நினைவுமின்றி ஒருவகையில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு வேகம். அவர்களில் சற்று வயதில் மூத்தவர்கள் கரையோரம் நின்று எங்களையே வெறித்துப் பார்த்தனர். ஓடிய சிறுவர்கள் ஒரு நூறு மீட்டர் தள்ளி நின்று நாங்கள் என்ன செய்கிறோம் என பார்த்துக்கொண்டிருந்தார்கள். மான் கூட்டம் அரவம் கேட்டு தலைதூக்கி மருண்டு பார்ப்பதுபோல் இருந்தது. நான் இறங்குவதைப்பார்த்துதான் அவர்கள் ஓடுகிறார்கள் என எனக்குப் புரிய சற்று நேரம் பிடித்தது. புரிந்துகொண்டேன். முகமூடி அணிந்திருக்கிறேன். சாக்கு வைத்திருக்கிறேன். பிள்ளைகளை பிடிக்க வந்திருக்கிறேன் என நினைத்துக்கொண்டார்கள் போலும். அமிர்தராஜுக்கு சிரிப்பு தாளவில்லை. எனக்கோ மிகவும் அவமானமாக இருந்தது. அமிர்தராஜ் கேமராவை எடுக்க, அது தனது மாயத்தை காண்பிக்கத் துவங்கியது. ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். நான் எனது முகமூடி, கண்ணாடி மற்றும் ஹெல்மட்டைக் கழற்றி அங்கே வைத்துவிட்டு இலகுவானேன்.
அனைத்து சிறுவர்களும் ஒவ்வொருவராக வந்துவிட்டார்கள். பயமின்றி குளிக்கத்துவங்கினார்கள். குதித்தும் மிதந்தும் ஒருவர் மேல் ஒருவர் புரண்டும். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அற்புத கணத்திற்குள் மீண்டும் வந்துவிட்டனர். அமிர்தராஜ் அந்த ஈர தருணங்களை தனது கமிராவால் படங்களாக ஒத்தி எடுத்துக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் சில சிறுவர்களுக்கு எனது வண்டி மேல் பிரியம் ஏற்பட்டு என்னை சுற்றி வளைத்துக்கொண்டனர். ஒரு சில நிமிடங்களில் என்னவெல்லாம் ஏற்பட்டுவிட்டது என எண்ணினேன்.
ஆம் பயணத்தின் முதலிலேயே, நில்ஷியில் சிறுவர் கடத்தப்படுவது குறித்து கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் இன்று முகமூடி அணிந்து எவரும் வருவதில்லை. அத்துணை பயமும் இல்லை. மிகவும் தெளிவாக திட்டமிட்டு சற்றும் பயமின்றி கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அந்த வலை அத்துணை பெரியது. கிராம சிறுவர்கள் கவனத்துடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சியாக இருந்தது.
அவர்களிடம் எனது பயணத்தைக்குறித்து விளக்கினேன். என்னிடமிருந்த பொருட்களை காட்டினேன். ஆனால் அதன் பின்புதான் அது எனக்கு தோன்றியது. அவர்களிடம் கேட்டேன், எப்படி பனை ஓலையை விளையாட்டு நேரங்களில் நீங்கள் பயன்படுத்துவீர்கள் என. அவர்கள் என்னிடம் ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தார்கள். நான் சற்றும் எதிர்பாரா வண்ணம் ஒரு சிறுவன் ஒரு ஓலையைக் கிழித்து எனக்கு காத்தாடி செய்வது எப்படி என காண்பித்தான். எனது பயணத்தின் பொற்கணம் அது. மிகவும் எளிமையான முறையில் செய்யும் காத்தாடி. செய்துவிட்டு அவர்கள் ஓடினால் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடாகாது. இன்றைய தலைமுறைக் குழந்தைகள் இருந்த இடத்தில் இருக்க அவர்கள் முன்பாக டி.வி, மொபைல், என அனைத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது அவர்கள் ஆரோக்கியம் உட்பட.
அங்கிருந்து சில நூறு தொலைவு சென்றதும் இடதுபுறம் ஒரு சாலை சென்றது. அங்கே ஒரு பனங்காடு இருந்தது. நான் 12 வருடங்களுக்கு முன்பும் இங்கே ஆய்வுக்காக வந்திருக்கிறேன் என்பது எனக்கு மங்கலாக நினைவுக்கு வந்தது. எப்படி வந்தேன் என்று இன்றும் கூட பிரமிப்பாக இருக்கிறது. உள்ளே சென்றோம், 1500க்கும் மேற்பட்ட பனைமரங்கள் அங்கே இருந்தன. ஆனால் பனை ஏறுவதற்கு ஒருவரும் இல்லை. வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இருவர் எங்களை நோக்கி வந்தனர். அவர்களிடம் கேட்டபொழுது பல வருடங்களாக பனை ஏறுகின்றவர்கள் இங்கு வருவதில்லை என்றனர். அப்பனைகள் தனித்து விடப்பட்ட முதிர்கன்னிகள் போல் ஒடுங்கி நின்றிருந்தன. பனையை அணைக்கும் கரங்கள் இல்லாததால் அனைத்தும் ஒரு ஒற்றைக்கால் தவத்தில் இருப்பதுபோல் காணப்பட்டது. நாங்கள் அந்த இடத்தில் சற்று நேரம் நின்றோம். இருவருக்குள்ளும் ஒரே உணர்வு இந்த விதமான ஒரு அதிர்ச்சியை எப்படி எதிர்கொள்ளுவது? இவைகளுக்கான தீர்வுகளை எப்படி அணுகலாம். சற்று வித்தியாசமாக அணுகவேண்டிய பிரச்சனை என்பதை அறிந்திருந்தோம்.
பனை ஏற இன்று ஆட்கள் இல்லை எனபதை ஒத்துக்கொள்ளவேண்டும். அதை மறைத்து பனையை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. பனையும் வாழ்வும் வேறுவேறல்ல என்பது அடிப்படை புரிதலாக இருக்கவேண்டும். பனை மரங்களோடு அதைச் சார்ந்து வாழும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது, மனிதராகட்டும், பறவைகளாகட்டும், விலங்கினாங்களாகட்டும், ஊர்வனவோ அல்லது சிறு பூச்சிகளோ அவை தமிழகத்தை சுற்றி இருக்கும் ஒரு பிரம்மாண்ட பாதுகாப்பு வளையம். இங்கிருப்பவர்கள் வேலைதேடி பிற இடங்களுக்குச் செல்லுவது இடப்பெயர்ச்சி ஆகிவிடுகிறது. வேலை இல்லா திண்டாட்டம் நிரம்பிய கால கட்டத்தில் அரசு பனை குறித்து கவனம் கொள்ளவில்லை என்று சொன்னால் இவைகளால் பெரும் சுமையையே. பறவைகளும் விலங்கினங்களும் அப்படி உடனடியாக தங்கள் அமைவிடங்களை மாற்றிக்கொள்ள முடியாது. பூச்சிகள் குறிப்பிட்ட தாவரத்தில் மட்டும் வாழ்ந்து பங்களிப்பாற்றுபவை. ஆகவே இந்த பனையை முறித்து கரியாக்கும் விளையாட்டு அவைகளை பராமரிக்காமால் அனாதைகளைப்போல விட்டுவிடுவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
பனை நேரடி மற்றும் மாறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதையும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்குகிறது எனவும் ஆகவே அன்னிய செலாவணியை ஈட்டுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த பனை வளர்ப்பு என்பதுவே சிறந்த முறையாக இருக்கும், அதற்கு நாம் இன்னும் நம்மை தயார் படுத்தவேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் கடந்த இருபது ஆன்டுகளில் பனை மர தொழிலாளர்கள் எதேனும் போராட்டம் செய்து நாம் பார்த்திருக்க முடியாது. அது நுட்பமான செய்திகளை தன்னுள் கொண்டிருக்கிறது. பனைத்தொழிலாளர்கள் தமிழக அளவில் ஒன்றுகூட இயலவில்லை, ஒன்றுகூட்டும் அமைப்புகள் இல்லை. மார்த்தாண்டம் பனைத்தொழிலளர் வளர்ச்சி இயக்கம் குமரி மக்களை ஒன்றுகூட்டியது 1980களில் அனேக முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள். ஆனா அவைகள் எவர் காதையும் எட்டுவதில்லை. தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ மற்றும் உலக அளவிலோ ஒன்றுபட்ட முயற்சிகள் ஏதும் நடைபெறவில்லை. திருச்சபையின் வாயிலாக ஆசிய அளவில் பனைத்தொழிலாளர்கள் மீது கவனத்தை குவிக்க முயற்சிக்கிறேன். நான் இன்னும் தொடர்ந்து கடுமையாக போராடினால் மட்டுமே எனக்கு சற்றேனும் வாசல் திறந்து கொடுக்கப்படும். அதுவும் உறுதி இல்லை.
பனை ஏறுபவர்களுக்கான 1978 ஆம் ஆண்டு ஒரு கருவியை டாக்டர் டி ஏ டேவிஸ் அவர்கள் வடிவமைத்தார்கள். அவர் அதை அணிந்து பனையில் ஏறும் புகைப்படத்தை நான் டாக்டர் ஷோபனராஜ் அவர்கள் வீட்டில் பார்த்திருக்கிறேன். இதற்கிடையில் தென்னை ஏறும் கருவிகள் மற்றும் பனை ஏறும் கருவிகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பனைத்தொழிலாளர்கள் பயன்படுத்தத்தக்க ஒரு கருவியை கோவை வேளான்மை கல்லூரி “கண்டுபிடித்திருப்பதாக”வும் அதைக் கொண்டு அனைவருக்கும் பயிற்சியளிக்கப்போவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் பனைத்தொழிலாளர் வளர்ச்சி சங்கத்திலிருந்து அரசுக்கும் பின்னர் கோவை வேளாண்மை கல்லூரிக்கும் கடித தொடர்பை ஏற்படுத்தி, மேற்கொண்டு என்ன செய்யலாம் நாங்கள் பனை தொழிலாளர்களை இணைக்கிறோம் அவர்களுக்கான கருவிகளை நாங்கள் பரவலாக்குகிறோம் என்றபோது இரு இடங்களிலிருந்தும் மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
விலையில்லா சைக்கிள் வழங்குகின்ற அரசால் கண்டிப்பாக பனை மரத்தில் ஏறும் கருவியையும் வழங்கமுடியும். குறந்த பட்சம் மானிய விலையிலாவது வழங்க முடியும். தற்போது விற்பனை செய்யபடும் பனையேறும் எளிய கருவி சுமார் எழாயிரம் விலை விற்கிறது. ஒரு பனை தொழிலாளி அதை வாங்குவது அவசியம் என எண்ணமாட்டார். ஏனெனில் அவரிடம் ஏற்கனவே திறமை இருக்கிறது. மேலும் புதியவைகளைக் கற்றுக்கொள்ள புதியவர்களாலேயே இயலும். பழகியவர்களை புது பழக்கத்திற்கு மாற்றுவது சுலபமல்ல. இலவச பயிற்சிகள் ஒருங்கினைக்கப்படவேண்டும், அவர்கள் ஒரு குடைக்குள் கூட்டுவதனால் மாத்திரமே அப்படி ஒன்றை பரவலாக்க முடியும். அவர்களை அவ்விதம் கூட்டும் கவற்சிகரமான திட்டங்களும் இருக்கவேண்டும்.
பயன் படுத்தப்படாத பனை மரங்களை பிற மானிலத்திலிருந்து பனைத் தொழிலாளிகளை அழைத்து தேவையை உறுதி செய்யலாம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் அதிகமாக இருந்தாலும், இன்று மக்கள் தங்கள் விரும்பியபடி தங்கள் வேலைகளுக்காக புலம் பெயர்வது இயல்பான ஒன்றாகி விட்டது. மும்பையில் கள்ளிறக்குபவர்களில் பெரும்பாலோனோர் பிற மாநிலத்திலிருந்து வந்தவர்களே. குறிப்பாக பீகாரிலிருந்து மிக ஆர்வமாக அனேகர் வருகிறார்கள்.
இதையும் தாண்டி நம்மால் யோசிக்க முடியுமா என்பது மிக முக்கிய கேள்வி. குறிப்பாக பனைத்தொழிலாளர்களை அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இணைக்கலாம். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அரசு பனை தொழிலாளர் சேவை மையங்களை திறக்கலாம். எல்லாவற்றிற்கும் கண்டிப்பாக பனை மற்றும் பனைத் தொழிலாளர்கள் குறித்த ஒரு அடிப்படை ஆய்வறிக்கை தேவை. குறைந்த பட்சம் ஒரு ஆய்வறிக்கை இல்லாமல் நாம் மேற்கொண்டு பேசுபவைகள் அனைத்தும் பொருளற்றவைகளாகவே இருக்கும்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி, மும்பை
8888032486
E-mail: malargodson@gmail.com
You must be logged in to post a comment.