பனைமரச் சாலை 45


பனைநகரம்

பனைமரச் சாலை சென்னையை சுற்றி வருவதற்கு காரணம் உண்டு. நண்பர்கள் அனேகம் உள்ள இடம் மாத்திரம் அல்ல அங்கே தான் பனை சார் முக்கிய இடங்கள் இரண்டு உள்ளன. மத்திய அரசின் நிறுவனமும்  மா நில அரசின் பனை வாரியமும் இணைந்து இருக்கும் இடம். இரண்டு இடங்களுக்கும் நான் சென்றிருந்தபடியால் மீண்டும் பனைமர வேட்கைப் பயணத்தில் இவைகளை இணைத்துச் செல்வது ஏற்புடையதாக இருக்கும் என்று கருதினேன். சென்னையில் நான் நினைத்ததெதுவும் நடைபெறவில்லை நினைக்காதவைகள் நடைபெற்றன அவையே பயணத்தை செறிவுள்ளதாக மாற்றியது.

சுமார் எட்டு வருடங்கள் இருக்கலாம், ஜெயமோகன் அவர்களது உந்துதலினால் நான் எனது வலைபூவை துவக்கியிருந்த நேரம். ஜெயமோகன் அவர்கள் தனது வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தியதால் அனேகர் எனது வலைப்பூவிற்கு வந்தனர். அப்படித்தான் ஜெபக்குமார் அவர்களும் அறிமுகமானார். நான் மும்பையில் இருக்கையில் அவர் என்னை ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து அழைத்தார். அய்யா உங்கள் எழுத்து இன்றைய தேவையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் என்றார். வள்ளியூர்காரர் குமரிமாவட்டத்தில் பெண் எடுத்திருக்கிறார். தொழிலதிபர், அரசியல் களப்பணியாளர், பத்திரிகையாளர் , திருச்சபை நலம்விரும்பி மற்றும் இயற்கை மீதான கரிசனை கொண்ட மனிதர் என பல்வேறு ஆழுமைகளை ஒருங்கே கொண்டவர். நான் நாகர்கோவில் வந்தபோது என்னை வீட்டில் வந்து பார்த்தார். அவரது உன்னத சிறகுகள் எனும் பத்திரிகையில் எனது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரச் செய்தார். எங்கள் நட்பு அப்படி துவங்கியது.

ஜெபக்குமார்

ஜெபக்குமார்

கிறிஸ்தவ பத்திரிகை உலகில் அவரது பத்திரிகை தனித்தன்மை வாய்ந்தது. கிறிஸ்தவர்களை சுயபரிசோதனை செய்யும் ஒரு அருமையான பத்திரிகை. தொடர்ந்து நான் எழுதாதபோதும் எனது வலைபூவில் இருந்தவைகளை எடுத்து பயன்படுத்தினார். நான் எழுதுவதை நிறுத்தியபோது என்னை அன்போடு கடிந்துகொண்டவர். அடிக்கடி என்னை தொடர்புகொண்டு பேசுவார் இல்லை நான் அவரை தொடர்பு கொள்ளுவேன்.

எனது பனைமரச் சாலை பயணத்தை உற்சாகப்படுத்தியதில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. நான் எனது பயணத்தைக் குறித்து அவரிடம் பேசியபோது திட்ட வரைவுகள் சரியாக இல்லை. ஒரு கருத்தாகத்தான் நான் பகிர்ந்துகொண்டேன். மிகவும் மேலோட்டமாக. ஆனால் அவர் அதை பிடித்துக்கொண்டார். அதைக்குறித்து என்னிலும் அதிகமாக உற்சாகமாக பேச ஆரம்பித்தார். அவர் உற்சாகமாக பேச பேச எனக்குள் கலக்கமே மிஞ்சியது. ஏனென்றால் அப்போது நான் ஆரம்பகட்டமாக கூட எதையும் செய்ய ஆரம்பிக்கவில்லை. எனது வாகனத்தை பழுதுபார்க்க விடவில்லை, எனது விடுமுறைக்கான அனுமதி பெறவில்லை, எனது பயண செலவுகளைக் கூட நான் ஒழுங்குபடுத்தவில்லை. ஆகவே நிலமை கைமீறி போவதற்குள் நான் அமர்ந்து திட்ட வரைவுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

எனது பயணத்தில் அவரது நண்பரும் சர்வதேச புகைபடக்காரருமான அமிர்தராஜ் ஸ்டீபனும் ஒரு பாதிரியாரும் வருவதாக வாக்களித்திருப்பதாக கூறினார்கள். நான் சற்றும் எதிர்பாரா வண்ணம் ஒருநாள் எனது முகநூலில் எனது பயணத்தைக் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்கள். அந்த அறிவிப்புடன் அவர்கள் வெளியிட்ட படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனது மூத்த மகன் ஆரோனுடைய பிறந்தநாளை நாங்கள் கொண்டாடிய படத்தை அதில் சேர்த்திருந்தார்கள். பனை ஓலையில் செய்த நவீன தோரணங்களின் பின்னணியில் நான் ஆரோனுக்கு நுங்கு ஊட்டுகின்ற படம் அது.

குழந்தைகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது ஜாஸ்மினின் ஆசை. எனக்கோ பிறந்தநாளின்போது குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவேண்டும் எனும் விருப்பம் உண்டெனினும், கேக் வெட்டுகின்ற முறை எனக்கு ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது. அந்த கேக் கலாச்சாரத்திற்குள் இருந்து வெளிவர சிறிது சிறிதாக குடும்பமாக முயற்சித்தோம். முதலாவதாக ஜாஸ்மினுடைய பிறந்தநாளின்போது நான் சில பழங்களை வாங்கி அவற்றைக்கொண்டு ஒரு கேக் சிற்பம் போன்ற ஒன்றைச் செய்து அதை வெட்டி அவளது பிறந்தநாளைக் கொண்டாடினோம். அதைத் தொடர்ந்து மித்திரனுடைய பிறந்தநாளுக்கு புட்டு செய்து அதை பிட்டு கொடுத்து  மகிழ்வுடன் கொண்டாடினோம். ஆரோனுடைய பிறந்தநாள் ஏப்ரல் 25. ஆகவே நுங்கு கிடைக்கும் காலமாகையால் நான் அதிகாலையில் பனைத்தொழிலாளியை தேடிச் சென்றேன். எனது நல்ல நேரம் அவர் எனக்கு நுங்கு குடுப்பதாக உறுதி கூறினார்.

ஆரோனின் பிறந்தநாளை நுங்கு வெட்டி கொண்டாடியபோது. பின்னால் நவீன ஓலை தோரணம்.

ஆரோனின் பிறந்தநாளை நுங்கு வெட்டி கொண்டாடியபோது. பின்னால் நவீன ஓலை தோரணம்.

நுங்கை வாங்கி வந்த நான் மிக அழகாக ஓலையாலான  நவீன தோரணம் அமைக்க ஆரம்பித்தேன். மித்ரனும் ஆரோனும் எனக்கு உற்சாகமாக உதவி செய்ய ஆரம்பித்தார்கள். தோரணம் தயாரான பின்பு நான் கத்தியால் நுங்கை சுத்தம் செய்து கரண்டியால் ஆரோனுக்கு ஊட்டினேன். மித்திரனும் ஜாஸ்மினும் அவரவர் பங்குகளை பெற்றுக்கொண்டனர். என்னைப்பொறுத்தவரையில் நமது வாழ்வில் மகிழ்சிகளை நாமே தேடிச் சேர்க்கவேண்டும். மகிழ்வின் தருணங்களை ஆரோக்கிய சிந்தனைகளோடு சேர்த்து முன்னெடுப்பது அவசியம். குழந்தைகள் கண்டிப்பாக புரிந்துகொள்ளுவார்கள். கடந்த வருடம் ஆரோனுடைய பிறந்தநாளுக்கு அவன் தேவிகோட்டில் அவனது அம்மா பாட்டி வீட்டில் இருந்தான் அவனது பிறந்தநாளுக்கு அவன் வெட்டியது ஒரு பெரிய பலாபழத்தை. எத்தனை பேர் வந்தாலும் ஆளுக்கொரு சுளை பகிர்ந்து கொடுக்க இயற்கையால் வடிவமைக்கப்பட்ட அற்புதமான கேக் அல்லவா அது.

உலக வரலாற்றில் முதன் முறையாக பனைமரத்தை தேடி   ஒரு பயணம் என்பதை கேள்விப்பட்ட அனைவரும் என்னை உற்சாகப்படுத்தினர்.  ஜெபக்குமார் உற்சாகம் கொள்ள ஆரம்பித்தார். எனக்கோ இன்னும் எவ்விதமான அனுமதியும் பெறாமல் பதிவிடப்பட்டுள்ளதே என்ற பதைபதைப்பு. உடனடியாக எனது மாவட்ட கண்காணிப்பாளரிடம்  (அவரும் போதகர் தான்) சென்று நேரடியாக பேசினேன். அவரோ பேராயரோடு பேசவேண்டும் என்றார். நாட்கள் கடந்தன பேராயரோடு பேசுவதற்கு மிக முக்கிய பணிகள் தடையாக முன்னிற்க, மாவட்ட கண்காணிப்பாளரே எனக்கு அனுமதி அளித்தார். மெதடிஸ்ட் திருச்சபையைப் பொறுத்தவரையில் “விடுப்பு என்பது உரிமை அல்ல”.

இவைகள் ஒருபுறமிருக்க நான் தினம்தோரும் சுமார் 5 கிமீ நடக்க ஆரம்பித்தேன். உடல் ஆரோக்கியம் எனது பயணத்திற்கு இன்றியமையாதது எனும் உண்மையை அறிந்ததனால் உடலை சற்றேனும் ஒரு வழிக்குள் கொண்டுவரவேண்டும் என இவைகளைச் செய்ய ஆரம்பித்தேன். செலவு மிகுதியாகும் எனத் தெரிந்ததினால் முடிந்த அளவு செலவுகளைக் குறைத்தேன். அப்பொழுது தான் வினோலியா அவர்கள் என்னோடு முகநூலில் தொடர்பு கொண்டார்கள். எனக்கு அவர்களது பெயர் 30 வருடங்களுக்கு முன்பே தெரியும் ஆனால் மூன்று வருடங்களுக்கு  முன்புதான் சந்தித்துக் கொண்டோம்.

வினோலியாவுடைய தந்தை அருள்திரு வின்சென்ட் அவர்களும் லுத்தரன் திருச்சபையின் ஒரு முக்கிய போதகர். சென்னை எல்டாம்ஸ் ரோடிலுள்ள  கிறிஸ்டியன் மீடியா  சென்றரின் இயக்குனராக பணியாற்றியவர்கள். வான் மலர் நிகழ்ச்சியை கிறஸ்தவ நிகழ்ச்சிகளில் தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றிய பெருமை இவரையேச் சாரும். வினோலியா சிறு வயதிலேயே கதைகள் எழுதியவர்கள். அவர்கள் எழுதிய சிறுவர் கதைகளை நான் சிறுவனாக இருந்தபோது வாசித்திருக்கிறேன்.

நான் சென்னை வருகின்ற நாளை அவர்கள் குறித்துக்கொண்டு சென்னை வரும்போது அவர்களே எனது தங்குமிடம் யாவற்றையும் ஒழுங்கு செய்வதாகவும் தனது நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் செல்லவேண்டி இருப்பதால் நமது சந்திப்பு அரிதாகவே நிகழும் வாய்ப்பு உள்ளது எனக் கூறியவர்கள். வாய்ப்பு கிடைத்தால் தான் அங்கே வந்து எனது பயணத்தை வாழ்த்த வருவதாகவும் கூறினார்கள். மேலும் அவர்கள் எனது தந்தை பட்டுக்கோட்டையின் அருகில் தான் வசிக்கிறார் நீங்கள் போகும் வழியில் அவரையும் சந்தித்து எங்கள் வீட்டில் தங்கிச் செல்லுங்கள் என்றார்கள். இப்படியாக அவர்கள் எனது பயணத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்கள்.

திருமதி. வினோலியா மற்றும் அவரது தந்தை காலம்சென்ற அருட்திரு J. வின்சென்ட்

திருமதி. வினோலியா மற்றும் அவரது தந்தை காலம்சென்ற அருட்திரு J. வின்சென்ட்

சென்னையில் நான் சற்று இளைப்பாறி செல்லலாம் என்று எண்ணியதாலும் இன்னும் அனேகரை நான் சந்திக்கும் மையமாக அது இருக்கும் என எண்ணியதாலும் அங்கே நான் தங்கிச் செல்வதே சரியானது என எண்ணிக்கொண்டேன். சென்னையில் உள்ள நண்பர்களை அழைத்து எனது வருகையைச் சொன்னேன்.

 

நான் கிறிஸ்டியன் மீடியா சென்டர் வந்தடைந்தபோது காலை மணி 8.45 ஒவ்வொருவராக அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தனர். வினோலியாவை அழைத்தேன் அவர்கள் எனக்கான அறையை குறிப்பிட்டார்கள். நான் எனக்கான அறைக்குள் சென்றபோது அங்கே ஒருவர் வந்து காலை மன்றாட்டு நேரம் ஆரம்பமாக இருக்கிறது வந்து கலந்துகொள்ளுகிறீர்களா எனக் கேட்டார்கள். நான் சரி என்றேன். அங்கே சென்றபோது பாடல் துவங்கியிருந்தது. மிக அழகிய மற்றும் எளிய ஆராதனை. நாளை துவங்குமுன் கடவுளை வேண்டி துவங்குதல் தான் எத்துணை இனியது. காந்தி ராட்டை நூற்பதை தனது மற்றாட்டின் ஒரு பகுதியாக மாற்றியிருந்தார்.

வான்மலர் நிகழ்ச்சியை தாங்குகின்ற நபர்களி பெயர்ப்பட்டியல் ஒன்று எனது கரத்தில் தரப்பட்டது. இந்த நாள் இவர்களின் பிறந்தநாள் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்கள். நான் மன்றாட்டு ஏறெடுக்கும்போது அப்பெயர்களுள் ஒன்றாக வினோலியாவின் பெயரை கண்டுகொண்டேன். கடவுளின் வழிநடத்துதல் எத்துணை அருமையானது என உணர்ந்துகொண்டேன்.

(திருமதி. வினோலியாவின் தந்தையும் லுத்தரன் திருச்சபையின் குறிப்பிடத்தகுந்த போதகருமான அருட்திரு. ஜெ. வின்சென்ட் அவர்கள் நேற்று காலை ஆண்டவருக்குள் இளைப்பாறுதலை பெற்றார்கள். பனைமரச் சாலையில் அவர்களோடு ஒரு இரவில் தங்கி பயணத்தை தொடர கடவுள் அருள் புரிந்தார். வினோலியாவுக்கு ஆண்டவர் அருளும் பெலன் உடனிருந்து பரலோக வாழ்வில் மீண்டும் சந்திக்கும் நிச்சயம் பெற வேண்டிக்கொள்ளுகிறேன்.)

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: