பனைமரச் சாலை (46)


பனையேறும் கால்கள்

வான்மலர் அலுவலகத்தில் மன்றாட்டின்போது

வான்மலர் அலுவலகத்தில் மன்றாட்டின்போது

மன்றாட்டு முடிந்த பின்னர் அவர்கள் எனது பயனத்தைக் குறித்து நான் சிறு குறிப்பு கூறலாம் என்றனர். அலுவலகத்தில் வந்தவர்களுக்கு நான் பனை மரம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்துகொண்டேன். தமிழகத்தில் பனைமரங்களும் பனைத் தொழிலும் அருகிவருவதையும் பனைத் தொழிலாளர்கள் மிகவும் அவமானத்திற்கு உரிய சின்னமாக மாறிவிட்டிருக்கின்றனர் என்றும், திருமறை சார்ந்த கூற்றுகள் எப்படி பனை சார் வாழ்வினை பிரதிபலிக்கின்றன எனவும் திருச்சபை எப்படி பனைத் தொழிலாளிகளை பொருட்டாக கருதாது தங்கள் ஆன்மீகத்தை முன்னெடுக்கின்றன என்பதையும் பதிவுசெய்தேன். அங்கிருந்தவர்களில் ஒருவர் பனைத் தொழிலாளர்கள் வாழ்வில் அவர்கள் பனையேறுவதால் அவமானம் எனும் கருத்தை தான் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எத்தனை பனை ஒருவர் ஏறுகிறார் என்று பார்த்தே பெண்கொடுத்திருக்கிறார்கள் என்றார். நான் அப்படி ஒரு காலகட்டத்தை மறுக்கவில்லை என்று கூறினேன். மீண்டும் இதை விவாதத்திற்கு கொண்டு சென்று வெறெங்கோ நிறுத்த மனதில்லாததால் அதை அப்படியே நிறுத்திக்கொண்டேன்.

வான்மலர் அலுவலகத்தில் உரையாடல்

வான்மலர் அலுவலகத்தில் உரையாடல்

ஆனால் நாம் ஒவ்வொருவரும் உணரத்தக்க சில கருத்துக்கள் உண்டு. திருமண விளம்பரங்கள் சிறந்த உதாரணம். ஜாதி, கல்வி, வருமானம், நிறம் , தொழில் போன்றவைகள் மிக முக்கியமான பேசுபொருளாக இவ்விளம்பரங்களில் வருகிறது. பெருமையானவைகளையே பேசி திருமணத்தை நடப்பிக்கும் காலம் இது. 40 பனை ஏறி பதனீர் இறக்கும் திறமையுள்ள ஆண்மகனுக்கு எம். பி யே பட்டம் பெற்ற மணமகள் தேவை என ஒரு விளம்பரம் கண்ணில் பட்டால் யாரேனும் சொல்லுங்கள். அந்த காலம் இனிமேல் வருவதற்கு வாய்ப்புகள் குறைவே.

பனைத்தொழிலாளிக்கு மட்டுமல்ல பனைத்தொழிலாளியின் வீட்டு பிள்ளைகளுக்கும் திருமணம் என்பது சற்று கடினமான காரியமே. “கிருஷியாக்கும் செய்யுதோம்” என்று தங்கள் விவசாயத்தையே முன்னிறுத்துகிறவர்களை நான் கண்டிருக்கிறேன்.  நாம் அவர்களின் உலகிற்குள் நுழைந்து அதன் சாகசத்தை ஏற்காதவரைக்கும் அவர்கள் ஒரு குற்றுணர்வோடே இருக்க இந்த சமுதாயம் நிர்பந்திக்கிறது என்பது தான் உண்மை. எப்சிபா ஜேசுதாசன் எழுதிய புத்தன் வீடு நாவலில் கூட திருமணம் ஆகா பனைத்தொழிலாளியின் நிலை மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். மதிப்பிழந்த சூழல். நாம் எண்ணுவது போல் மாடு அடக்கும் வீரர்களாய் பனை ஏறுபவர்களையும் ஒரு காலத்தில் கருதியிருக்கலாம். ஆனால் அவைகளுக்கான பழந்தமிழ் இலக்கிய சான்றுகளை எவரும் தேடி எடுத்து முன்வைக்கவில்லை.

பனை ஏறுவது அவமானம் என்பது குறித்த கருத்தை பலர் கூற நான் கேட்டிருக்கிறேன். ஆகவே நானே ஒரு கடுமையான மன உளைச்சலுக்குள் ஆட்படுகிறேன். பனைத் தொழில் நீடிக்கவேண்டுமென்றால் பனைத்தொழிலாளர்கள் வேண்டும். அவர்களே நமது விருப்பங்களுக்கு வடிகால். நாம் பனை சார் பொருட்கள் பெறவேண்டுமானால் ஒருவர் குரங்கைப்போல் மரத்தில் ஏறவேண்டுமா? என ஒரு முறை எனது பேராசிரியர் என்னிடம் கேட்டார். கல்வி கற்பதே பனைத் தொழிலில் உள்ள அவமானங்கள் நீங்குவதற்காக தான் என்பது ஒரு புரிதல். குமரி மாவட்டத்தில் உள்ள 100 சதவிகித கல்வியறிவு அவ்விதமாக அவமானங்களுக்கு பதிலுரைக்க எடுக்கப்பட்ட நிலைப்பாடு என்பதாகவே கருதுகிறேன். இந்த அவமானத்தின் சின்னம் குமரியில்  இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர்கள் வேகமாக அவைகளை அழித்தனர். நெல்வயல் , தென்னை, வாழை மற்றும் ரப்பர் என வேகமாக பல்வேறு விவசாய முறைகளுக்கு மாறி இன்று வீடு கட்டுதலில்  வந்து நிற்கின்றனர்.

மிகச்சரியாக  நாற்பது ஆண்டுகளே இருக்கும், பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் துவங்குமுன்பு பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள் தமது நண்பர்களை அழைத்து பனைத் தொழிலாளர்கள் முன்னேற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை ஒத்த ஒரு கருத்தை கேட்டிருக்கிறார். அந்த கூடுகையில் மிகவும் துடிப்புள்ள இளைஞனாக இருந்த தற்போதைய மார்த்தாண்டம் சவுத் இந்தியா பிறஸ் உரிமையாளருமான திரு. கருணா அவர்கள் இவ்விதமாக பதிலளித்திருக்கிறார்கள். “மொதல்ல எல்லா பனையையும் வெட்டணும்”. பனைத் தொழிலே கல்வி கற்று மேலெழுவதற்கு தடையாக இருக்கிறது என கருதிய காலம் அது. ஆனால் அவர் கூற்றின் உண்மை மிகவும் கூர்மையானது. இன்று பனைத் தொழில் செய்யும் தொழிலாளி என குமரிமாவட்டத்தில் ஒருவர் கூட கிடையாது. தொழில் செய்ய ஒருசிலர் பாண்டிக்கு செல்கின்றனர். தென்னை ஏறுகின்றனர். ஆனால் பனை மரத்தில் ஏறுவது அவமானம் தான். ஆகவே பனைமரங்கள் தங்கள் நினைவிலிருந்து அப்புறப்படுத்துவது  ஏற்புடையதாகவே மக்கள் எண்ணுகின்றனர்.

வேறொருமுறை நான் எனது பிரியமான பேராசிரியரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது மனைவியும் இவ்விதமான கருத்தை பதிவு செய்தார்கள். பனைத் தொழிலுக்கு ஆள் இல்லை என்று வந்த பின்பாவது அதைக் குறித்து பேசுவதை நிறுத்துங்களேன். எவ்வளவு கஷ்டப்பட்டு அவற்றிலிருந்து நாம் விலகியிருக்கிறோம் எனத் தெரியாதா? அவர்கள் கல்லூரியில் படிக்கும்போது பனையேறி குடும்பங்களை சேர்ந்தவர்களை மிகவும் கேவலமாக பார்க்கும் பேசும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆகவே அந்த வேதனையிலிருந்து விடுபடுவதே அவர்களுக்கு மீட்பு எனவும். கல்வியே குமரி மக்களை தகுதியுள்ளவர்கள் ஆக்கும் எனவும் அவர்களது புரிதல்.

பனை ஏறுபவர் கல்வி கற்றவர்களால் மிகவும் ஏளனமாக பார்க்கப்பட்டதை நான் அறிவேன். விவசாயத்தை கூட எள்ளி நகையாடிய கூட்டம் தான் பனைத்தொழிலாளர்களையும் அருவருப்புடன் பார்த்தது. வெள்ளை காலர் பணி என்பதே உயர்விடம் என புரிந்துகொண்ட சமூகத்தில் நமக்கென பணி செய்தவர்கள் இகழப்படுவது கற்றாருக்கு அழகல்ல. எனது குடும்பத்தில்பனையேறும் முன்னோர்கள் கிடையாது தந்தை வழியிலும் தாய் வழியிலும். ஆனால் என்னை நானே ஒரு (பனையேறத்தெரியாத) பனையேறியாக பிரகடனப்படுத்திக்கொண்டேன். அவ்விதமாக அவர்கள் சந்திக்கும் அவமானத்திற்குள் என்னையும் இணைத்துக்கொண்டேன்.

சில முக்கிய காரணங்கள் இந்த அவமானத்திற்குப் பின் உண்டு. கல்வி கற்றவர்களுக்கு வேலை கிடைத்த காலம் அது. ஆகவே கல்வி கற்காதவர்கள் இழிவானவர்களாகவும் சமூகத்தின் அடித்தட்டில் நிற்பவர்களாகவும் கருதப்பட்டார்கள். பள்ளிக்கூடங்களில் கூட “மாடு மேய்க்கப்போறியாலே”  என்பதைவிட “பனையேறப்போறியாலே”  என்பதுவே அதிகம் கேட்கப்படும்வசை. பெரும்பாலும் பனைத் தொழிலாளர்கள் ஏழைகளாக இருந்ததால் அவர்கள் சமூகத்தில் மதிப்பிழந்திருந்தார்கள்.  அன்றாடம் வரும் வருமானத்தை நம்பி வாழும் சமூகத்தில் அவர்களிடம் கருப்பட்டி வாங்கி விற்கும் வியாபாரிகளே மிகுந்த வருமானம் பெற்றவர்களாக இருந்தனரே ஒழிய பனைத்தொழிலாளர்கள் செல்வச் செழிப்பில் இருக்கவில்லை. அவர்களின் உடை அமைப்பும் மிக எளிமையாக நவீன காலத்திற்குப் பொருந்தாததாகவே காணப்பட்டது. பல வேளைகளில் ஒரு முண்டு மட்டும் கட்டி தோளில் ஒரு சிறிய துண்டை மட்டும் போட்டுக்கொண்டு பேருந்தில் ஏறிய பல பானைத் தொழிலாளிகளை நான் கண்டிருக்கிறேன்.  அவர்களுக்கு அதுவே நிறைவான உடை. குமரியின் தட்பவெட்ப சூழலுக்கும், கடின உழைப்பு செய்யும் அவர்களுக்கும் அது நிறைவான உடையே. ஆனால் காண்பவர்கள் அவர்களை அந்த உடையைக் கொண்டே இழிவு செய்தனர்.

இவை எல்லாவற்றிற்கும் மேல் இரண்டு காரணங்கள் உண்டு அவை அவர்கள் கள் இறக்குபவர்கள் அல்லது குடிப்பவர்கள் என்பது ஒரு பொதுவான எண்ணம். இருக்கலாம். அப்படியாயின் இன்றைய தமிழகம் எத்துணை கூனி குறுகி நிற்கவேண்டும்? எல்லாவற்றிகும் மேலாய் பனைத் தொழிலாளர்கள் உடலில் சில வடுக்கள் இருக்கும். அதுவே அவர்களை இலகுவில் வேறுபடுத்திக் காட்டும். பனை ஏறுபவர்களுக்கு நெஞ்சிலும், கைகளிலும் கால்களிலும் காய்ப்பு ஏற்பட்டு கருமையாக இருக்கும். உள்ளங்கை உள்ளங்கால்கள் யாவும் காய்த்து மரக்கட்டை போலிருக்கும். இதுபோக கருக்கு மட்டை அறுத்துவிட்ட இடங்களிலும் அவர்களுக்கு காயங்கள் இருக்கும். வீர யுகம் கடந்துவிட்டதால் கல்வி யுகத்தில் இக்காயங்கள் பொருளிழந்தவையாக மாறிவிட்டன. ஆகவே கொஞ்சம்  கொஞ்சமாக பனைத்தொழிலாளர்கள் தங்களை அத்தொழிலிலிருந்து விடுவித்துக்கொண்டார்கள்.

அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.(ஏசாயா 53:  3 – 5)

மேற்கூறிய  ஏசாய 53 ஆம் அதிகாரம் கிறிஸ்துவின் மரணத்தை ஒட்டி கூறப்பட்ட தீர்க்க தரிசனமாக கிறிஸ்தவர்கள் பொருள் கொள்ளுவர். பனை தொழிலாலர்களின் வாழ்வோடு இதே வசனங்களை பொருத்திப்பார்த்தால் சற்றும் வேறுபாடு இருப்பாதாக எனக்குத் தெரியவில்லை.

மெய்யாகவே பனைத்தொழிலாளியின்  பாதங்கள் மிகவும் அழகுள்ளவைகள் என்றே நான் நினைக்கிறேன். அவைகளே நமக்கு நற்செய்தி அருளவும் நலவாழ்வு நல்கவும் விடுதலை பறைசாற்றவும் பனை மேல் ஏறியவைகள். இன்று அவைகள் எவ்வகையிலும் நினைவுகூறப்படாதது துரதிருஷ்டவசமே. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஒரு பனைத்தொழிலாளியின் காலை திருச்சபை அனுசரிக்கும் பெரியவியாழன் ஆராதனையில் கழுவ வேண்டும் என கருதுகிறேன். திருச்சபையால் ஒட்டுமொத்தமாக மறக்கப்பட்டவர் அவரே.

இஸ்ரவேலர் தங்கள் அடிமைத்தனத்தை  இன்றளவும் மறக்கவில்லை. கிறிஸ்து அடிமையின் சாயலை அணிந்துகொண்டதாக  பிலிப்பியர் 2: 7ல் வாசிக்கிறோம். எனில்  அடிமை உருவை மறந்துவிடுவதோ அழிக்க நினைப்பதோ இழிவாக கருதுவதோ நம்மை மேலெழுப்பாது மாறாக நமது தனகங்காரத்தையே அது வெளிப்படுத்தும்.

சிலுவையில் அடிக்கப்பட்ட ஆணிகள் மட்டுமே இவர்களுக்கு இல்லை ஆனால் தழும்புகளோ ஏராளம். இயேசு தனக்கான சிலுவையை ஏற்றுகொண்டதன் பின்னணியை இவர்களைக் கொண்டே நான் புரிந்துகொள்ள முற்படுகிறேன்.

இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

2 பதில்கள் to “பனைமரச் சாலை (46)”

 1. Logamadevi Annadurai Says:

  காட்சன் இது வரை வந்த பகுதிகளிலேயெ இதுதான் அற்புதமென்பேன். கிருஸ்துவில் பனையை கண்ட நீங்கள் இதோ இன்று பனையேரிகளின் உடலில் உள்ள காயங்களையும் சிலுவை சுமந்த கிருஸ்துவையும் ஒப்பிட்டு காலம் காலமாக புறக்கணிக்கப்பட்டவர்களை புனிதராக்கினீர்கள்
  பனைஏறிஒருவரின் காலை கழுவுவது குறித்த பதிவில் என் கண்கள் பனித்தது.
  பனைஏறத்தெரியாவிடினும் பனையேறியாக உங்களை அவர்களின் அவமானத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு பிரகடனப்படுதியத்தியதை உங்களின் பேரன்பே சாத்தியமாக்கியது
  க்ருஷி செய்வது கேவலமாகிவிட்டதோர் காலத்தில் பனைஏறுவதும் கேவலம்தான்
  எனினும் சாமுவேல், கர்த்தர் இருக்கிறார் அவர் மந்தையில் வழிதவறிய ஆடுகளுக்கு சரியான பாதை காண்பிப்பார், ஆனால் காயம்பட்ட ஆடுகளையோ மார்போடணைத்துக்கொள்வாரல்லவா?
  புறக்கணிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்,அலட்சியப்படுத்தப்பட்டவர்கள் கண்டுகொள்ளப்படுவார்கள் அதன் பொருட்டே இந்த பனைப்பயணத்தை ஆண்டவர் தொடங்கி நடத்துகிறார்

 2. Logamadevi Annadurai Says:

  i

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: