பனைமரச் சாலை (47)


அழிவின்மை நோக்கி

மொத்த  பயணத்திலும் எனது வாகனம் ஒய்வு எடுத்த நாளாகவே இந்நாளைக் கருதவேண்டும். வினோலியா இன்னும் நாளைக் காலை வருகிறேன் என்றார்கள். எனது நண்பரும் உடன் போதகருமான அருட்பணியாளர். ஆபிரகாம் அவர்களும் தான் சென்னை வந்துகொண்டிருப்பதாகவும் மறுநாள் காலையில் என்னை சந்திப்பதாகவும் கூறினார்கள். பலர் தங்களால் வர இயலாது எனக் குறிப்பிட்டிருந்தார்கள். நகரங்களுக்குள் வாகனம் ஓட்டுவது எனக்கு சற்றும் விருப்பம் இல்லாத ஒன்று. அதுவும் பழகாத இடங்களில் வழி தவறிவிடுவேனோ என்று மிகவும் பயப்படுவேன்.  ஆகவே உதவிக்கு அமிர்த்தராஜ் ஸ்டீஃபன் வருகிறாரா எனப் பார்த்தேன் அவரும் வரவில்லை. ஆனால் எனது பயணத்தை செறிவுள்ளதாக்க திருமதி. ஜெசிக்கா ரிச்சர்ட் அவர்கள் முன்வந்தார்கள்.

நான், விஜி,  ஜெசிக்கா மற்றும் பேராசிரியர் இஸ்ரயேல் செல்வநாயகம்

நான், விஜி, ஜெசிக்கா மற்றும் பேராசிரியர் இஸ்ரயேல் செல்வநாயகம்

நாங்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதன் முதலாக சந்தித்த விதம் மிகவும் சுவையானது. நான் அப்பொழுது பூனே டெகு ரோட் பகுதியில் போதகராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். நான் இருக்கும் இடத்திலிருந்து நகர்வது என்பது நினைத்தே பார்க்க முடியாத காலம். ஆனால் எனக்கு அதிகபடியான நேரம் கிடைத்தது. ஆகவே ஓலையில் படங்களை வரைய ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் எனது இறையியல் கல்லூரியில் பெண்ணிய வகுப்பு நடத்திய ஆசிரியை முனைவர். இவாஞ்சலின் ஆன்டர்சன் ராஜ்குமார் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு நாம் ஏன் இணைந்து ஒரு பனைஓலை படங்களின் கண்காட்சி வைக்கக்கூடாது என்றார்கள். நான் அதை ஒரு சவாலாக எடுத்து லெந்து காலம், பெண்கள் மற்றும் ஓலைகள் எனும் தலைப்பில்  பணிகளை ஆரம்பித்தேன்.

போஸ்டர்

போஸ்டர்

அதை செய்யும்பொழுதுதான் எனது கல்லூரி தோழனும் சி ஏஸ் ஐ போதகருமான விஜி வற்கீஸ் ஈப்பன் அவர்கள் சினாட் தொடர்புத்துறை அதிகாரியாக இருக்கிறார் என்பதை அறிந்தேன். மும்பையிலிருந்து விடுமுறையில் நான் தென்னகம் வருவதாலும் அனேகரை நான் அவரை தொடர்புகொண்டு லெந்து கால பனை ஓவிய கண்காட்சி நடத்தலாமா எனக் கேட்டேன்.  அவர்களோடு இணைந்து நடத்திய அந்த கூடுகையில் பேராசிரியர். இஸ்ரயேல் செல்வநாயகம் முன்னுரை ஆற்றினார். திருமதி. ஜெசிக்கா லெந்து காலமும் பெண்களும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். கோயமுத்தூர் பேராயர் திமோத்தி ராவீந்தர் அவர்களை கூட இந்த நிகழ்ச்சியிலேயே நான் அறிந்துகொண்டேன். ஆனால் அவர்கள்  அவ்வேளையில் பேராயராகியிருக்கவில்லை.

சென்னை வந்தால் சொல்லுங்கள் சேர்ந்து காப்பி சப்பிடலாம் என்றிருந்தார்கள். ஆனால் நான் கடந்த முறை வந்தபோது மிகவும் பிசியாகிவிட்டார்கள். ஆகவே இந்த முறை சந்திப்பு தவறிவிடக்கூடாது என்பதில் என்னவிட அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார்கள். ஜெசிக்கா ஆசிய பெண்கள் இறையியல் மற்றும் கலாச்சார ஆதார மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்கள். மிகவும் நிறுத்தி நிதானமாக பேசுவார்கள். அவர்களோடு செலவிடும் நேரம் மிகவும் சிறந்ததாகவே இருக்கும். என்னோடு இரண்டு மாணவிகளையும் அழைத்து வருகிறேன் என்றார்கள்.

ஜெசிக்காவும் மாணவிகளும்

ஜெசிக்காவும் மாணவிகளும்

எங்கள் சந்திப்பை கிறிஸ்டியன் மீடியா சென்டர் வளாகத்திலேயே வைத்துக்கொண்டோம். மிக முக்கிய சந்திப்பாக அது அமைந்தது. மாணவர்கள் பனை மீதான எனது ஆர்வம், எனது பணிகள் போன்றவற்றை குறித்த கேள்விகளை எழுப்பினார்கள். எனது ஒலை சார்ந்த கைவினைப் பொருட்கள் அவர்களை மிகவும் கவர்ந்தது. ஆகவே அதிலிருந்தே கேள்விகள் எழுப்பப்பட்டன. அவர்களுக்கு நான் பதிலிறுக்கும்போது நான் இவ்விதமாக கூறினேன். ஓலை எனது போரட்டக் கருவி. எந்த போராட்டத்திலும் நான் இதையே கருவியாக எடுத்து முன் செல்லுகிறேன். எனது அகிம்சை வழி போராட்டத்தில் ஓலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பனை மரத்தை முன்னிறுத்துவதற்கோ அல்லது வேறெந்த போராட்டத்திலும் ஓலைகள் மென்மையான தனது பங்களிப்பைச் செய்ய வல்லது.

ஓலை பல்வேறு வகைகளில் நமது பண்பாட்டில் பங்களிப்பாற்றியிருப்பதால் அவைகளை நாம் பல்வேறு வகையான போராட்டக் களங்களில் ஒரு ஊடகமாக முன்னிறுத்தலாம். என்னைப்பொறுத்தவரையில் ஓலையே  எனது கொடி, ஓலையே எனது ஒலி, ஓலையே நான் மேலழ உதவும் சிறகு. ஓலையின் வழியாகவே எனது போராட்டத்தை நான் காட்சிபடுத்துகிறேன். பழமைக்கும் புதுமைக்கும் இடையில் ஓலையைக்கொண்டே நான் பாலம் அமைக்கிறேன். பெரும் திரளான மக்களின் எதிர்காலம் ஓலையிலேயே எழுதப்பட்டிருக்கிறது என்பது எனது திண்ணமான எண்ணம். ஓலை தம்முள் ஒரு விடுதலைச் சீட்டை கொண்டிருப்பதாகவே நான் உணருகிறேன். அதை அறித்தவர்கள் கண்டிப்பாக அப்போராட்டக் கருவியின் வலிமையை உணர்ந்துகொள்ளுவார்கள். வர்ணங்களை விடவும் காய்ந்த பனையோலை மிக அழுத்தமாகவும் அதிகமாகவும் தனது பங்களிப்பை ஆற்றமுடியும். மரணித்த பின்பும் வாழுகின்ற சூட்சுமத்தை அறிவிப்பதல்லவா அது?

எனது வாழ்வில் நான் முதன் முறையாக குருத்தோலையை கண்டபோது அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது. இத்துணை நேர்த்தியான ஒன்றை நாம் இயற்கையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமா என்பதே எனது நெடுநாள் கேள்வியாக இருந்தது. எதைச் செய்தாலும்  குருத்தோலைகளைக்கொண்டே அவைகளை நான் செய்ய முற்பட்டேன். வெண்மை, தூய்மை, தந்தம் போன்ற உயர்குடித்தன்மைகொண்டது என கருதி அதை பாவிக்கத் துவங்கினேன்.  மற்ற ஓலைகளில் செய்யப்பட்ட பொருட்கள் எவ்வகையிலும் எனது கவனத்தை கோரவில்லை. அவைகளை ஒரு பொருட்டாகவும் எண்ணவில்லை. பண்டைய பழமொழி ஒன்று உண்டு, “சாரோலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்”. ஆம், அழகு நிறைந்த குருத்தோலை தனது வனப்பினால் பெருமிதம் கொண்டு  மற்ற ஓலைகளை எள்ளி நகையாடுவதை அவ்விதம் பெருமை கொண்டுள்ள மனிதர்களுக்கு ஒப்புமையாக கூறுவார்கள்.

ஆனால் படிப்படியாக ஓலைகள் தமது விரிந்த இலைக்குள் என்னை அழைத்தன. அவற்றின் வசீகரம் அதன் பச்சை நிற ஓலையிலும் இருப்பதை நான் கண்டுகொண்டேன். ஒருவகையில் கிருஷ்ணனை நினைவுறுத்தும்  நீலம் கலந்த பச்சை. ஆழமற்ற கடற்கரை ஓர இளநீலபச்சை. வானம் ஒரு துண்டாக கரத்தில் ஏந்தியிருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படலாயிற்று. ஓலையின் வாசம் அதற்குள்ளும் இருந்தது. பனங்கருப்பட்டி போட்டு கொடுக்கின்ற சாரோலை பெட்டிகள், கடகங்கள், காக்கட்டைகள், தோண்டிகள், ஓலைபாய்கள் என ஒவ்வொன்றும் என்னை வசீகரித்துக்கொண்டிருந்தன. அவைகளுக்கான ஒரு தனித்துவமான அழகும் குணமும் அவைகளுள் இருப்பதையும் காணும் கண்ணை இறைவன் கொடுத்தார். அது எனக்கு ஒரு புதிய திறப்பாக அமைந்தது. நான் எனது வாழ்வில் ஒரு புதிய தரிசனத்தை பெற்றதாக உணர்ந்தேன்.

பொதுவாக குருத்தோலைகள் ஒரு வருடத்திற்கு ஒன்றை மட்டுமே வெட்டுவார்கள். மேலும் பெரும்பாலான குருத்தோலைகள் மரங்களை அடிக்கும் (வெட்டும்) கூட்டத்தினரிடமிருந்து பெறுவதாகும். அந்த சூழலிலிருந்து நான் என்னைப் பிரித்துக்கொள்ளவே விரும்பினேன். அதற்கு சாரோலைகளின் அழகை நான் கண்டுகொண்ட தருணம் மிக உதவியாக இருந்தது. சாரோலைகள் மிக அதிகமாக கிடைக்கும் அதன் விலையும் குறைவு. அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையில் மிகவும் எளிமையாக கிடைப்பது. ஆகவே அதை நான் முன்னிறுத்தவேண்டும் என முடிவு செய்தேன். குருத்தோலை பயன்பாட்டை நிறுத்தவேண்டும் என்பது அல்ல எனது எண்ணம், மாறாக அதற்கு இணையாக சாரோலையையும் நாம் பயன்படுத்த முடியும் என்பதே.

ஆனால் எனது பயணம் அத்துடன் முடிவடையவில்லை. நான் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஓலையில் படங்களைச் செய்துகொண்டிருக்கும்போது காய்ந்த பனையோலையையும் பயன்படுத்தமுடியும் என்பதை அறிந்துகொண்டேன்.  அந்த நாள் எனது வாழ்வில மறக்க இயலாத நாள். தங்கத்தில் செய்யப்பட்டவைகள் போலிருந்தன. தாமிர நிறமோ என ஐய்யங்கொள்ள வைத்தன. மண்ணிலிருந்து உதித்தவை, மண்ணின் நிறம் கொண்டவை ஆனால் வானத்துக்கு ஏகும் தன்மைகொண்ட ஓலைகளாக அவைகளை நான் கருதினேன். தங்கள் வாழ்வை முடித்த பின்பும் மீன்டும் ஒரு வாழ்வை அந்த ஓலைகள் பெறுகின்றது சாதாரணமான காரியமல்ல. கலைக்கென தன்னை ஒப்புக்கொடுத்து அது மீண்டும் இவ்வுலகில் ஒரு நெடுவாழ்வு வாழ்கின்றது.

பொதுவாக காய்ந்த ஓலைகளை ஒருவரும் கலை பொருட்கள் செய்ய பயன்படுத்துவதில்லை. ஆனால் அவைகளுக்குள்ளும் வாழ்வு எஞ்சியிருக்கிறது என்பதை அறிந்த பின்பு எனக்கு அது ஒரு முக்கிய உத்வேகத்தை அளித்தது. ஆம் குருத்தோலைக்காக காத்திருக்கவேண்டாம், சாரோலைக்காக செலவளிக்கவேண்டாம், மேலிருந்து விழும் ஓலைகளை பொறுக்கி வைத்துக்கொண்டால் போதும் மிக திறமையாக அவைகளை பயன்படுத்தலாம். பயிற்சி மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். நூற்றாண்டுகள் வாழும் ஓலை கண்டிப்பாக மனிதர்களை நிறைவு செய்யும் வல்லமைக் கொண்டது. ஆம் காலம் கடந்து நிற்பதுவே மதிப்பு பெறுகின்றது. கலைகள் காலம் கடந்து நிற்கின்றன. ஓலையும் கலையும் இணந்தால் அவை அழியாமை பெறும்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: