பனைமரச் சாலை (48)


வீழ்ந்தோர் எழுக

மாணவிகளுடன் எங்களது உரையாடல் முடிந்த பின்பு ஜெசிக்கா என்னை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களது அலுவலகம் நாங்கள் இருந்த கிறிஸ்டியன் மீடியா சென்றருக்கு பின்புறமே இருந்தது. போகிற வழியில் கமல்ஹாசன் வீடு இங்கேதான் இருக்கிறது என காண்பித்தார்கள். அவர்கள் அலுவலகத்தில் அவர்களது பணிகளைக் குறித்து எனக்கு விவரித்தார்கள். ஆசிய பெண்களுக்கான ஒரு இறையியல் கருத்துதளம் முன்னெடுக்கப்படுகிறது என்றும், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நிர்வாகம் ஆசிய நாடுகளுக்குள்ளே மாறும் எனவும் குறிப்பிட்டார்கள். முக்கியமாக பத்திரிகை வாயிலாக அவர்கள் செயல்பாட்டாலும் பல்வேறு இடங்களில் சிறு அமர்வுகளை ஏற்படுத்தி அதன் வாயிலாக சிறு அதிர்வுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார்கள். தங்களை அணுகுகின்ற கல்லூரிகளுக்கு இலவசமாக தங்களிடமுள்ள பத்திரிகைகளை கொடுப்பதாகவும், தபால் செலவை மட்டுமே கல்லூரிகள் பொறுப்பெடுத்தால் போதும் என்றும் சொன்னார்கள்.

மதியம் சாப்பாட்டிற்கு பாரம்பரியம் என்ற உணவகத்திற்கு சென்றோம்  . அங்கு எனது பனை ஓலை ஒவியங்களும்  அவர்களின் வேளியீடுகளில் பங்களிப்பாற்ற முடியும் எனவும் தனித்தன்மை வாய்ந்த எனது படைப்புகள் ஆசிய இறையியல் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்றும் கூறி உற்சாகமூட்டினார்கள்.  மறுநாள் தக்ஷின் சித்திரா செல்லவேண்டும் என முடிவு செய்து அதற்கான ஒழுங்குகளைச் செய்வதாக குறிப்பிட்டார்கள்.  மீண்டும் என்னை கிறிஸ்டியன் மீடியா சென்டரில் கொண்டு வந்து விட்டார்கள்.

நான் பயணம் துவங்கும் முன்பே எனது பயணம் குறித்த ஒரு அறிமுக உரையை எனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பியிருந்தேன். அதன் மூலமாக என் டி டி வி சாம் டானியேல் அறிமுகமானார். அவர் அன்று மாலை வருவதாக இருந்ததால் பிற நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்தேன். வாழ்வின் முதன் முதலாக பத்திரிகையாளர் முன்பதாக நிற்கப்போகிறேன் என்பதே பரபரப்பாக இருந்தது. பலரும் என்னிடம் பத்திரிகையாளர்களை சந்திக்கவேண்டும் எனக் கூறியிருந்தார்கள். ஆனால் எளிதில் அது நடைபெறுமா என்ற சந்தேகம் என்னுள் இருந்தது.

மாலையில் அவருடனான சந்திப்பு மிகவும் இயல்பான ஒன்றாக அமைந்தது. மைக் எதுவும் நீட்டவில்லை. ஒரு அரைமணி நேரம் செய்தி சேகரித்துவிட்டு புறப்பட்டுப்போனார். பேட்டி இவ்வளவு தானா என எளிமையாக இருந்தது. அந்த பேட்டியை மைய்யமாக கொண்டு தான் செய்தி தாயாரிக்கப்போவதாகவும் தேவைப்பட்டால் என்னை அழைப்பதாகவும் குறிப்பிட்டார்கள். நான் அமிர்தராஜ் ஸ்டீபன் அவர்களை அழைத்தேன். அவர்கள் மறுநாள் காலை வேளையில் வருவதாக கூறினார்கள். ஆக அந்த நாள் எனக்கு ஒரு ஓய்வின் நாளாக அமைந்தது நல்லதே.

நான் பனைத் தொழிலாளர்கள் வாழ்வில் சந்தித்த சறுக்கல்களை குறித்து யோசிக்கத் துவங்கினேன். அது வ்ரலாற்று ரீதியாக அல்ல உணர்வுபூர்வமாக நான் அறிந்தவைகள் மட்டுமே. பனைத் தொழில் உண்மையில் லாபம் மிகுந்த ஒரு தொழில் தான். அதன் லாபம் பனைத் தொழிலில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் கிடைக்கும் காலம் இருந்தது. அந்த காலம் வேறு நாம் வாழும் காலம் வேறு.

பனை அமுதூட்டும் தாயாகவும் இரத்தம் குடிக்கும் காட்டேரியாகவும் ஒருசேர குணங்கள் பெற்ற ஒன்று. பனைத்தொழிலால் வாழ்வில் முனேற்றம் அடைய இயலும். அதே நேரம் பனையிலிருந்து விழுந்து விட்டால் பிற்பாடு வாழ்வில் நகரவே முடியாது. வாழ்வில் மிக உயரங்களைத் தொட்டவர்கள்  மீள இயலா படுகுழியில் விழுவது பனைத்தொழிலில் கண்கூடு.  பேராயர் சாமுவேல் அமிர்தம் தனது வாழ்வில் பனைத்தொழிலாளர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கு காரணமே அவர் போதகராக பணியாற்றியபோது நிகழ்ந்த பனையேறிகளின் மரணங்கள் தான். பனை மரத்திலிருந்து விழுந்து இறப்பது ஒன்று மற்றொன்று விழுந்து வாழ்நாள் முழுவதும் கட்டில் கிடையாக கிடந்து குடும்பத்தை மேலும் வறுமை நோக்கி தள்ளுகின்ற நிலை.

முற்காலங்களில் பனை மரத்திலிருந்து பனைத் தொழிலாளி விழுவது என்பது அன்றாட செய்தி. மும்பையில் இரயில் பயணிகள் தவறிவிழுவதுபோல. திரளான மக்கள் ஏறுகின்ற தொழிலாக பனைத்தொழில் காணப்பட்டது. ஆகவே அங்காங்கே  இருந்து பனைத் தொழிலாளிகள் விழும் செய்தி வந்துகொண்டே இருக்கும். மழை நேரம் மரம் வழுகுவதாலும், எட்டிப்பிடிக்கும்போது மட்டை பெயர்ந்து வருவதாலும் விபத்து ஏற்படலாம். குடி பழக்கம் மற்றொரு காரணம். நெருங்கி பனை ஏறுபவர்கள் ஒரு பனையிலிருந்து மற்றொரு பனைக்கு தாவுகின்ற ஒரு முறை உண்டு. மரத்தை விட்டு மரம் தாவுகின்ற வேளையில் தவறி விழுவதும் உண்டு.

“சதிவு” என்று சொல்லுவது துரோகம் செய்வது என பொருள்படும். துரோகத்தாலும் விபத்து ஏற்படுவது உண்டு. நெருங்கி நிற்கின்ற மரத்தில் கயிற்றுப் பாலம் அமைத்து ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குப் போவது வழக்கம். விரோதம் கொண்டவர்கள் இரவில் ஏறி கயிற்றை அறுத்துவிடுவார்கள். அறுத்தது தெரியாதபடி கீழிருந்து அறுப்பார்கள். அதிகாலை வேளையில் கயிற்று பாலம் வழியாக கடக்கும்போது பாரத்தினால் கயறு அறுந்து விபத்து ஏற்படும்.

குமரி முழுவதும் வைத்தியர்கள் நிரம்பியிருப்பதால் பல்வேறுவகையான வைத்திய முறைகளும் இவர்களுக்குகாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. விழுந்தவர்ககளுக்கு மட்டை  கட்டுகின்ற சிறப்பு வைத்தியர்கள். எண்ணையில் உடலை ஊறப்போடுகின்றவர்கள். சிறப்பு கஷாயம் காய்ச்சுகிறவர்கள் அனைத்தும் அறிந்த மல்டி ஸ்பெஷலிஸ்டுகள் எல்லாம் உண்டு. எனது சிறு வயதில் அப்பவிடன் ஜெபிக்க சென்ற்ற இடங்களில் பனையில் இருந்து விழுந்தவர்கள் கட்டில் கிடையாக கிடப்பதை பார்த்திருக்கிறேன்.எண்ணை வழியும் உடல் மருந்தெண்னையின் வீச்சம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும்.

ஒரு வேடிக்கை கதை கூட உண்டு. இன்று போல பிராயிலர் கோழிகள் இல்லாத காலம். கோழி இறைச்சி அரிதான ஒன்றாயிருந்த ஏழ்மைச்  சூழல். ஒரு சிறுவன் கையில் கோழியின் கால் எலும்பை வைத்து சூப்பிக்கொண்டிருக்கிறான். இந்த எலும்பு, சிறுவனின் பனையேறி தந்தை மரத்திலிருந்து விழுந்ததற்காக  வைத்தியர் செய்த கஷாயத்தில் எஞ்சிய சக்கை. உண்மையில் அதில் ஒன்றுமே இல்லை. ஆனாலும் அது சிறுவனுக்கு மிகவும் அரிதான பண்டமாகையால் அதை சுவைத்துக்கொண்டிருக்கிறான். அப்போது அவன் வயதை ஒத்த  வேறொரு சிறுவன் வந்து தனக்கும் கொஞ்சம்  சுவைக்கத் தரும்படி கேட்கிறான். கோழி கால் வைத்திருக்கிற சிறுவனோ கொடுக்க மறுக்கிறான். கெஞ்சி கேட்டும் பலனில்லாமல் போய்விட்டதால் மிகவும் கோபமாக சிறுவன் சொன்ன மறுமொழி ” எக்க அப்பனும் பனையிலெண்டு விழும்”.

நான் அடிக்கடி நினைப்பது உண்டு.  திருமறையை அடியொற்றி பார்வை இழந்தவர்களுக்காக, குஷ்டரோகிகளுக்காக, காது கேளதவர்களுக்காக, முடவர்களுக்காக என பல நலதிட்டங்கள் சிறப்பாக செய்யப்பட்டதுண்டு. ஏன் இப்போது கூட ஏச் ஐ வி யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேன்சர் நோயாளிகளுக்கு என்று சிறப்பு படுக்கைகள் என விரிவுபடுத்துவதை மன நிறைவுடன் கண்டு அவைகளில் நமது பங்களிப்பையும் செலுத்துகிறோம், ஆனால் வீழ்ந்து குற்றுயிரான பனைத் தொழிலாளிகளுக்கு என செய்யப்பட்டவைகள் குமரி மண்ணில் இல்லை என்பது வேதனையான காரியம்.

இத்துணை வீழ்ச்சிக்குப் பின்பும் பனைத் தொழிலை ஒரு சாரார் பற்றியிருக்க காரணம் அதிலிருந்து பெறப்படுகின்ற வருமானம தான். கடும் உழைப்பைக் கோரினாலும் அதிலிருந்து பெறப்பட்ட வருமானம் குறிப்பிடத்தகுந்ததே. ஆறு மாதம் சொந்த ஊரிலும் ஆறு மாதம் பாண்டியிலும் சென்று வருகின்ற பனைத் தொழிலாளிகள் உடல் உழைப்பை செய்யும் வர்க்கத்தில் மிகவும் உயர் நிலையில் நிற்பது கண்கூடு. ஆனால் அது அப்படியே பார்க்கப்படகூடியது அல்ல என்பதை நான் பிற்பாடுதான் புரிந்துகொண்டேன்.

பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தெரியும் அது ஒரு மிகப்பெரிய பகடை என. அதில் உருட்டப்படுவது என்னவோ பனையேறிகளும் அவர்கள் குடும்பங்களும் தான். பனை அதன் அத்தனை சாத்தியக்கூறுகளுடன் நாம் பார்த்தோம் என்று சொன்னால் பெரிய லாபம் கிடைக்கின்ற ஒரு மரமாக தோன்றும். காகிதத்தில் அதன் லாபக் கணக்கை எழுதிவிடலாம் ஆனால் அப்படி எப்போதும் இருக்காது என்பது தான் உண்மை. மீனவர்கள் வாழ்க்கைப்போல. மழை பெய்தால் கருப்பட்டி செய்ய இயலாது. அது இழுகிவிடும். கெட்டித்த தன்மையோ நாட்பட வைக்கும்  தன்மையோ போய்விடும். வெயில் காலத்தில் பதநீர் சீக்கிரம் சளிக்க ஆரம்பிக்கும்.

நான் பார்த்தவரைக்கும் பனைத் தொழிலிலாளர்களோடு ஈடுபடுபவர்கள் அனைவரும் அது ஒரு லாபகரமான தொழில் எனும் எண்ணத்தோடு அதில் இறங்கி மண்ணைக் கவ்வுவதைப் பார்த்திருக்கிறேன். பல்வேறு கணக்குகளோடு அதன் அருகில் சென்று தோல்வி அடைந்தவர்களே நான் இதுவரைப் பார்த்தது. ஆய்வுகள் மற்றும் அனைத்தும் தோல்வியில் முடிவதற்கு காரணம் பனை மரத்தையோ பனைத் தொழிலையோ மிகச்சரியாக புரிந்துகொள்ளாததன் விளைவே. மிகவும் முக்கியமாக பனைத் தொழிலாளிக்கும் பனை மரத்திற்கும் உள்ள உறவை தெரிந்துகொள்ளவில்லையென்று சொன்னால் நம்மால் எதையும் உணர்ந்துகொள்ள முடியாது. ஒன்றில் பனைத் தொழிலாளர்களை பிடுங்கி தின்னும் முதலாளித்துவ கூட்டமாக இருப்பர் அல்லது பனைத் தொழிலாளிகள் தங்கள் வாழ்வை சரியாக கட்டமைக்கத் தெரியாத அறிவிலிகள் என எண்ணத் தலைப்படும் அறிவுஜீவிகளாக இருப்பார்கள்.

நான் மிகவும் உறுதியாக சொல்லுவேன் பனைத் தொழில் என்பது ஒரு வாழ்கை முறை. தன்னை அதற்கென அற்பணித்தவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனை. பனை வளருகின்ற  பகுதில் வாழும்  மக்களின் உணவுக்கான உரிமை சார்ந்த பிரச்சனை.  அதில் வெளியே நின்று நாம் கொடுக்கின்ற குரல்கள் தெளிவானவைகள் என கொள்ள முடியாது. அவர்களுக்காக பேசிய அனைவரும் எங்கோ ஒரு இடத்தில் வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். நானும் விதிவிலக்கல்ல. அந்த வீழ்ச்சி பனை சார்ந்து குரல் கொடுப்பவர்களுக்கு வீழ்ச்சி ஆகாது மாறாக பனையை நம்பி இருக்கின்ற பனைத் தொழிலாளிக்கும் பனைமரங்களுக்குமே.  அந்த உண்மையை அறிந்துகொண்டபின் என்னால் உணர்சிவசப்பட்டு எதையும் சொல்ல இயலவில்லை. புள்ளிவிவரங்களை சந்தேகக்கண்ணோடு பார்க்கிறேன். ஒட்டுமொத்தமாக எங்கே வீழ்ச்சி என்பதையே ஆராய முற்படுகிறேன். தீர்வு என ஒன்றைச் சொல்லி கடந்துபோக மனம் ஒப்பவில்லை. விலங்கிடப்பட்ட கைதியாகவே உணருகிறேன்.

பனைத் தொழில் உண்ணும் பொருட்கள் மற்றும் உண்ணாப் பொருட்கள் எனும் பரந்துபட்ட தளத்தில் கவனிக்கபடவேண்டும். அத்தனை வாய்ப்புகளும் இணைந்து செயல்படும் அமைப்பு நிர்வகிக்கப்படவேண்டும். அவ்விதம் முன்னெடுக்கப்படும் முயற்சி நமது சமூகத்தில் அனேகருக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும். பனை தொழில் சார்ந்த துணை தொழில்கள் தளைக்கும். பனை மரங்கள் காப்பாற்றப்படும். அது சார்ந்த சுழியல் நலம் பெறும்.

பனைக்காக குரல் கொடுப்பவர்கள் ஒன்று திரள வேண்டும். தனித்து ஆங்காங்கே நின்று களப்பணியில் ஈடுபடுபவர்களின் அனுபவம் முயற்சிகள் யாவும் பதிவு செய்யப்படவேண்டும். ஒரு கால் நூற்றாண்டை கருத்தில் கொண்டு பனைத் தொளிலாளர்களுக்காக ஒருங்கிணைந்த திட்ட வரைவு தமிழக அளவில் தயாரிக்க முடிந்தால் உலகமெங்கும் அதை நாம் விரிவுபடுத்தும் சாத்தியம் உண்டு. இன்று நாம் அறிந்த வரையில் உலகளவில் மிக அதிக ஊதியம் பனைத்தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் மட்டுமே கிடைக்கிறது.

தமிழக அரசு பதநீருக்கு நிர்ணயித்திருக்கும் விலை ஒரு லிட்டருக்கு ரூ.12/-. ஆனால் தற்போது தமிழகத்தில் விற்கப்படும் பதனீர் அதை விட நான்கு மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. யார் இவைகளால் பயன்பெறுவார்? பனைத் தொழிலாளிகளோ பொதுமக்களோ இவைகளால் பயன் பெறுவது சாத்தியம் அல்ல. வியாபாரிகள் லாபத்தைப் பங்கிடும் ஒரு சூழலில் இன்று வந்து நிற்கிறோம். பண்பாட்டு பின்னணியத்தில் பனை பொருட்களை பயன்படுத்துவது, சமய சடங்குகளில் பனை மரத்தினை முக்கியத்துவப்படுத்துவது,  கிராமபுற வேலை வாய்ப்பிற்கான களமாக பனை மரத்தினக் கொள்ளுவது நம்பிக்கை அளிக்கும் என கருதுகிறேன். பனை உணவு நமது உரிமை என கொள்வோமென்று நாம் சொன்னால் பனைத்தொழிலாளர்களோடு ஒன்றுபட நம்மனைவருக்கும் உரிமை உண்டு.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச் சாலை (48)”

 1. Logamadevi Annadurai Says:

  சாமுவேல் சார்
  இந்த அத்தியாமும் மனதை கனக்கச் செய்வதாகவே இருக்கிறது. பனையிலிருந்துவிழுந்து மரித்தவர்கள், வீழ்ந்து மேலும் கஷ்டப்படுபவர்கள், அவர்கள் விழுவது சதியினாலும் இருக்கலாம், அதற்கான வைத்திய முறைகள், அதனுடன் தொடர்புடைய அந்த சிறுவனின் :இளமையில் வறுமை”, காட்டிய கொடுமை, பதனீரின் விலை,இப்படி எத்தனை எத்தனை விவரங்கள்!1
  பனைத்தொழிலின் கடந்தகாலம் , அதன் நிகழ் காலம், அதன் எதிர்கால விரிவாக்கத்திற்கான சாத்தியங்கள் இப்படி அனைத்தயுமே ஆவணப்படுத்தி இருக்கிறீர்கள்.
  குறிப்பாக பனையிலிருந்து கிடைக்கும் பொருட்களை உண்ணும் மற்றும் உண்ணாப்பொருட்கள் என்னும் பரந்து பட்ட நிலையில் இருந்து பார்க்கவேண்டும் எனும் கருத்து மிக சரி
  மிக ஆழமான பனைத்தொழில் குறித்த புரிதல் இருந்ததால் மட்டுமே இப்படி சொல்ல முடிகிறது உங்களால்
  நீங்கள் சொன்னது போல பனைத்தொழில் ஒரு வாழ்வுமுறைதான் ஆசிரியம் போல.
  அன்புடன்
  தேவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: