பனைமரச்சாலை (49)


தக்ஷின பனை

காலை நான் எழுந்தபோது தமிழக பனைமரச்சாலையின் துவக்கம் என எண்ணிக்கொண்டேன். காலை எட்டுமணிக்கெல்லாம் என்னோடு மும்பை மெதடிஸ்ட் திருச்சபையில் பணியாற்றும் போதகர் ஆபிரகாம் அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களை எனது பயணத்தை துவக்க ரசாயனிக்கு அழைத்திருந்தேன்  அவர்களால் வரமுடியாமற் போயிற்று. மதுரை அரசரடியிலுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பயின்றதால் ஒத்த கருத்துடையவர்களாக மும்பையில் எங்களாலான பணிகளை முன்னெடுக்கிறோம். ஆபிரகாம் அவர்கள் மக்களை ஒருங்கிணைப்பதில் வல்லவர். நவிமும்பை பகுதியில் அனைத்து சபை கிறிஸ்தவர்களின் கூட்டமைப்பை உருவாக்கிய சிற்பி. பயணங்களைக் குறித்து விசாரித்தார். சமீபத்தில் இரண்டாம் குழந்தைக்கும் தகப்பனானபடியால் என்னோடு பயணத்தில் கலந்துகொள்வதில் உள்ள சிரமங்களைக் கூறினார். புரிந்துகொண்டேன்.

கூடன்குளம் அணுமின் எதிர்ப்பு வரலாற்றில் இடையறாது பணியாற்றிய சர்வதேச புகைப்படக் கலைஞர் அமிர்தராஜ் ஸ்டீபன் அவர்களும் வந்தார்கள். குறுந்தாடியுடன் தனது 500 சி சி  ராயல் என்ஃபீல்டு வண்டியில் வந்திருந்தார்கள். எனது பயணத்தைக் குறித்து சிறகுகள் ஜெபக்குமார் மூலம் கேள்விப்பட்டு  என்னோடு பயணிக்க இசைந்தவர்கள். தனது திறமைகளுக்காக சர்வதேச அளவில் மிக அதிக ஊதியம் பெறுபவர்கள், எனது பயணத்தின் நோக்கத்தை அறிந்து எவ்வித ஊதியமோ எதிர்பார்ப்போ இன்றி என்னோடு பயணிக்க இசைந்தவர்கள். தமிழக தேர்தல் நேரமாக மட்டும் இல்லாதிருந்திருந்தால் என்னோடு மும்பையிலிருந்தே இணையவேண்டும் என உற்சாக வெறியில் இருந்தவர்கள். சமூக பணிக்கு என தன்னை அற்பணித்து தனது சொந்த ஊரான காவல்கிணறு பகுதியிலேயே வாழ்ந்து தனது சர்வதேச திறமைகளை வெளிப்படுத்துபவர். பல வெளிநாட்டு வாய்ப்புகளை இளம் வயதில் சொந்த மண்ணுக்காக புறக்கணித்தவர். பார்த்தவுடனேயே நெடு நாட்கள் பழகிய நண்பர்களைப்போல் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டோம். வரும்போது தன்னோடு வில்பர்ட் அவர்களையும் ப. சா. லிங்கம் அவர்களையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

அமிர்தராஜ் ஸ்டீபன்

அமிர்தராஜ் ஸ்டீபன்

பனை மரம் ஒவ்வொருவரையும் எப்பிடி ஈர்த்தது இன்னும் ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறது என்பதையும் குறித்து பேசிக்கொண்டோம். ஆபிரகாமும் எங்களோடு இணைந்துகொண்டார். உற்சாகமான காலை வேளையாக இருந்தது. வெயில் ஏறத்துவங்கியதால் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் கூழ் சாப்பிடலாம் என்று போதகர் ஆபிரகாம் அழைத்துச் சென்றார். காலை உணவே அதுவாக மாறிவிட்டது. நாங்கள் திரும்பி வரும்போது வினோலியா அவர்கள் வந்தார்கள். என்னை அவரது கணவரோடும் அறிமுகப்படுத்தினார்கள். நாங்கள் முதன் முதலாக சந்திக்கிறோம். என்னிடம் அவர் பனை மரம் குறித்தே உரையாடினார். மீண்டும் வினோலியா என்னை அழைத்துக்கொண்டு சென்று நிற்வாக இயக்குனரிடம் அறிமுகம் செய்தார்கள். தொடர்ந்து எவ்விதமாக பணி செய்ய முடியும் என்பதைக் குறித்து பேசினோம். குறிப்பாக மும்பையில் அவர்கள் பனைத் தொழிலாளிகளுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர்.

நான் போதகராக பணிபுரிகின்ற ரசாயனி பகுதியில் பனைத்தொழிலாளிகளுடன் நான் பழகும்போது அவர்களுக்கு பதனீர் இறக்க தெரியவில்லை என்பதை உணர்ந்து அவர்களுக்காக சுண்ணாம்பு வாங்கிவந்து ஒரு பரீட்சார்த்த முயற்சியில் இறங்கினோம். ஆனால் அது பருவம் முடிகின்ற தருணம். மேலும் நான் பனைமர வேட்கைப் பயணம் செல்வதற்கும் முந்தைய நாளிலேயே அது சாத்தியப்பட்டது. ஆகவே அதைக்குறித்து முகநூலில் நண்பர்களுக்கு தெரிவித்த போது வினோலியா இப்படியான காரியங்களில் நாங்களும் இணைந்து கொள்ள விரும்புகிறோம் என குறிப்பிட்டார்கள். என்னோடு வந்திருந்த போதகர் ஆபிரகாமையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி தொடர்ந்து மும்பையில் நமது பணிகளை தொடருவோம் எனக் கூறி விடை பெற்றோம். நான் கீழே வரும் போது வாண்டி மேல் விரித்துப் போட்டிருந்த எனது ஜாக்கெட்டிலே ஒரு பூ உதிர்ந்து கிடந்தது.

எனது பயணத்தை வாழ்த்திய பூ

எனது பயணத்தை வாழ்த்திய பூ

ஜெசிக்காவும் அவரது மகன் இவானும் அவர்களோடு மேலும் இரண்டு மாணவிகளும் வந்திருந்தனர். சிறுவன் இவான் என்னைப் பார்க்கவேண்டும் என்றே வந்திருக்கிறான். வில்பர்ட், பா. சா. லிங்கம், வினோலியா, கிறிஸ்டியன் மீடியா சென்றரின் இயக்குனர், போதகர் ஆபிரகாம் என அந்த பட்டியல் நானே எபிர்பாராத அளவு மிகவும் விரிவடைந்தது. நான் சற்றும் நினைத்திராத ஒரு திரள் அது. நானும் அமிர்தராஜும் மட்டுமே புறப்படும்போது இருப்போம் என எண்ணியிருந்தேன் ஆனால் நான் நினைத்ததைவிட ஆசி மிகுந்த நாளாக அது அமைந்தது. ஒன்றாக புகைப்படம் எடுக்க எண்ணியபோது அமிர்தராஜ் அவர்களின் நண்பன் வருவதாக கூறினார்கள். போதகர் ஆபிரகாம் அவர்கள் மன்றாட்டு ஏறெடுக்க நாங்கள் புறப்பட்டோம். ஜெசிக்கா குழுவினர் காரிலும் நாங்கள் இருவரும் எங்களது புல்லட்டிலும் அவர்களைத் தொடர்ந்தோம்.

முதல் இரு தெருக்கள் தாண்டியதும் அமிர்தராஜைக் காணவில்லை. என்னவென்று பார்த்தால் அவரது பைக்கின் பின்புறம் ஒரு ஹெல்மெட் இருக்கிறது. போதகர் ஆபிரகாமுடையது அது. எப்படி வண்டியில் விழாமல் இருந்தது என தெரியவில்லை. நான் போய் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றார். நான் ஆபிரகாமுக்கு அழைத்துச் சொன்னேன். சென்னை சலைகள் அத்துணை கடினமாக இல்லை. இ சி ஆர் சாலையைப் பிடித்து நாங்கள் தக்ஷின் சித்ரா சென்ற போது மணி 12. பிந்திவிட்டோம் என்பது உறைத்தது. எங்களுக்காக ஜெசிக்கா காத்துக்கொண்டிருந்தார்கள்.

தக்ஷிணசித்ராவில்

தக்ஷிணசித்ராவில்

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த மிகப்பெரும் கலைக்கூடம் தான் தக்ஷின சித்ரா. தென்னிந்தியாவின் கலை மரபுகளில் உருவான மர வீடுகளின் மாதிரிகளை அப்படியே பெயர்த்து தனித்தன்மை கெடாமல் புதிதாக்கி வைத்திருக்கிறார்கள். அவைகளைக் குறித்த குறிப்புகளும் உண்டு. ஊள்ளே நுழைத்தவுடனே பனைமரங்கள் கண்ணுக்குப்பட்டன. நான் வாழ்வில் அதுவரைப் பார்த்திராத பனைஓலைத் தோரணத்தை அங்கே தான் பார்த்தேன்.  ஒவ்வொரு வீட்டினுள்ளே நுழையும்போதும் பனைஓலையில் செய்யப்பட்ட ஏதேனும் பொருட்கள் செய்முறைப் பயிற்சியாக வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆர்வமூட்டும் இடமாக இருந்தது. கொஞ்சம் பத்மனாபபுரம் அரண்மனைக்குள் சென்று மீண்ட உணர்வு ஏற்பட்டது.

மதிய உணவை ஜெசிக்கா எடுத்து வந்திருந்தார்கள். இவான் என்னோடு மிகவும் ஒட்டிக்கொண்டான். எனக்கு மொத்தத்தில் ஒரு புது அனுபவமாக இருந்தது. அங்கிருந்து நாங்கள் எடுத்த புகைப்படத்தை நான் உடனடியாக முகநூலில் பதிவேற்றினேன். எனது நன்பனும் புகைப்பட கலைஞனுமான ரெங்கிஷ் என்னோடு சாட்டில் வந்தார். உங்களோடு அமிர்தராஜ் வருகிறாரா எனக் கேட்டார். நான் ஆம் என்றேன். ரெங்கிஷ் நாகர்கோவில் சார்ந்த பகுதிகளை நிகழ்வுகளை புகைப்படம் எடுப்பவர். அவரது கோணங்கள் தனித்துவமானவைகள். அவர் என்னோடு வரவேண்டும் என நான் ஆசைப்பட்டேன்.  ஆனால் அவருக்கு என்னைப்போல இரண்டு சிறு குழந்தைகள். என்னோடு 15 நாட்கள் அவர் நேரம் செலவளிப்பாரா என்பது ஒரு புறம் இருக்க, தொடர்பிலிருந்து தொலைவில் சென்றுவிட்டார். பனைமர வேட்கைப் பயணத்தில் அவருக்கு விருப்பம் இல்லையே என நான் நினைக்குமளவு அவர் விலகி இருந்ததாக நான் எனக்குள் எண்ணிக்கொண்டேன். ஆனால்  அவர் என்னை தொடர்ந்திருக்கிறார். நான் தான் கவனிக்கவில்லை. அவர் என்னிடம் கூறினார் “அமிர்தராஜ் உங்களுடன் வருகிறார் என்றால் நீங்கள் பாக்கியசாலி, அவரே சிறந்தவர்”.

சுமார் மூன்று மணி வரை அங்கிருந்துவிட்டு ஜெசிக்கா குழுவினருடன் விடைபெற்று  புறப்பட்டோம். கண்கள் சொக்கத் தொடங்கியிருந்தது. தமிழகம் முழுக்க அமிர்தராஜ் எனக்கான பாதையை தெரிவு செய்ய கையளித்துவிட்டேன். அவர் தமிழகம் முழுக்க பயணம் செய்தவர். தமிழக சாலைகள் குறித்த சிறந்த புரிதல் உள்ளவர். ஆகவே நான் அவரிடம் இன்று புதுவை செல்லவேண்டும் போகும் வழியில் மகாபலிபுரம் செல்லவேண்டும் எனக் கூறினேன். அந்த வரலாற்று சிறப்புமிக்க இடம் நோக்கி மிகுந்த எதிர்பார்ப்புடன் புறப்பட்டோம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: