பனைமரச்சாலை (50)


மகாபனைபுரம்

வெயில் வியர்வையாய் முதுகில் ஒட்டிக்கிடந்தது.  புழுக்கம் மற்றும் வெம்மை வண்டியில் பயணப்பட துவங்கியதும் மாறியது. தேடல் எனும் உணர்வு உந்த மாமல்லபுரம் செல்லும் சாலையில் சென்றோம். சாலை மிகவும் நேர்த்தியாக நெருக்கடி இன்றி இருந்தது.  செல்லும் வழியிலும்  பனைமரங்கள் நிற்பதைக் கண்டோம். அமிர்தராஜ் பயணப்படும் சாலையை நன்கு அறிந்துவைத்திருந்தார் ஆகவே எனது பயணம் சார்ந்த எந்தவித அச்சமுமின்றி அவரை தொடர ஆரம்பித்தேன்.

பயணத்தில் துணை, பறவைகளின் சிறகுகளை ஏந்தும் காற்றை போல் சுகமானது. ஒழுகிச்செல்லும் சாலையில் கவலையற்று வண்டியை இயக்குவதையும் சுற்றிலும் காணும் பனை மரங்களைப் பார்ப்பதுமாக பயணித்தேன். மகாபலிபுரம் ஒரு சிறிய ஊராக காணப்பட்டது. ஆனால் வாகனங்கள் அனேகம் அங்குமிங்கும் சென்றுகொண்டிருந்தன. நேராக ஐந்து ரதம் கோவிலுகுச் சென்றோம். அங்கே ஒரு பனைமரத்தைப் பார்த்தேன். நாங்கள் வாகனத்தை அங்கே நிறுத்த இயலாது ஆகையால் திரும்பி , வாகனங்கள் நிறுத்துமிடம் நோக்கி வந்தோம். எங்களது பைகளை அங்கிருந்த ஒரு பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றோம்.

டிக்கெட் எடுத்துவிட்டு அந்த இடத்தை நோக்கிச் செல்ல செல்ல மிக தொன்மையான ஒரு இடத்தைற்கு தேவையற்ற நவ நாகரீக வேலிகள் இடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். பழைமையை பேணத்தெரியாத இடங்களில் இப்படி சுவர் எழுப்பித்தான் பழைமையை பாதுகாக்க வேண்டியிருக்கிறது.  வெளியே இருந்து பார்ப்பதற்கு மிகவும் புத்தம் புதிதாய் காணப்பட்ட ஐந்துரதக் கோவில்  அருகில் சென்றபோது துகிலுரியப்பட்ட பாஞ்சாலிபோல் நிற்கதியாக விடப்பட்டுள்ளதை கண்டேன். சுரண்டலுக்கும், மேல்பூச்சுக்கும் பெயர்போனவர்களாக நமது கலாச்சாரம் அந்த இடத்தில் பல்லிளித்துக்கொண்டிருந்தது. மணல் வீச்சு முறையில் சிலைகள் யாவும் மழுங்கடிக்கப்பட்டிருந்தன. தங்கள் நேரத்தை அற்பணித்த கலைஞர்களைக் குறித்து இயந்திரங்களுக்கோ இயந்திர கதியில் வாழ்பவர்களுக்கோ என்ன தெரியும். வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இடத்தை இழந்துகொண்டிருக்கிறோம் என்றே எண்ணத்தோன்றியது.

ஐந்து ரதங்களைக் கடந்து ஒரு ஒற்றைப்பனைமரம் நின்றது. அது ஒரு முக்கிய சான்று. மாமல்லபுரம் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்திருக்கிறது. அது பனைமரம் சூழ்ந்த இடம். பனை மரம், துறை அணையும் படகுகளுக்கு எப்படி உதவியிருக்கும்? தெரியவில்லை ஆனால் இந்திய கடற்கரையோரங்கள் அனைத்திலும் பனைமரங்கள் உண்டு. இவைகள் அனைத்திலும் இருந்து என்ன பெற்றிருப்பார்கள்? இவைகள் துறை முகத்திற்கு எவ்வகையில் பங்களிப்பாற்றியிருக்கும்? பண்டகசாலைகள் அமைக்க பனைமரங்களும் ஓலைகளும் முக்கிய அளவில் பங்களிப்பாற்றியிருக்கலாம். இரண்டாவதாக  மாலுமிகள் மற்றும் வியாபாரிகளுக்கு கரையில் களிப்புண்டாக்கும் கள் தாளமாககிடைத்திருக்கலாம். கருப்புகட்டி போன்றவற்றில் தயாரான உணவுகள் மாலுமிகளின் முக்கிய உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கலாம். பனை நார் கயறுகள் பயன்பாட்டில் இருந்திருக்கலாம். பொருட்கள் பொதிந்துவைக்க ஓலைகள் பெட்டிகளாக உருமாறியிருக்கலாம். விருந்தினர்கள் தங்கும் மாளிகைகள் கூடாரம் போன்ற அமைப்பாக ஓலைகளில் செய்யப்பட்டிருக்கலாம். அனைத்து ஆவணங்களும் ஓலைகளில் பறிமாறப்பட்டிருக்கலாம். இவைகள் எல்லாவற்றையும் விட, கடற்கரையில் படகு அணையும் இடங்களில் பனைமரங்கள் நாட்டப்பட்டு படகுகள் கரையணைய பயனளித்திருக்கலாம்.

யுவான் சுவாங்

யுவான் சுவாங்

பெரும்பலான பயணிகள் இந்திய பெருநிலத்திற்கு வந்தபோது பனைமரங்களைக் கண்டதாக பதிவுசெய்கிறார்கள். மெகஸ்தனிஸ், பிளினி ஆகியோர் பனை மரத்தினைக் குறித்து எழுதிவைத்திருக்கிறார்கள்.யுவான் சுவாங் தனது இந்திய பயணம் முடித்து சீனா செல்கையில் தன்னோடு அனேக பனையோலை சுவடிகளி எடுத்துச்செல்லுகிறார். அவரது தமிழக பயணம் அதை மேலும் உறுதிப்படுத்துகிறது. அவருக்கு நிறுவப்பட்டுள்ல சிலையில் ஒரு குடையுடன் அவர் காட்சியளிக்கிறார். பனையோலைக் குடையாக இருக்குமோ?

1741ல் குளச்சல் கடற்பகுதியில் ஒரு போர் நடந்தது. டச்சுப் படைக்கும் திருவிதாங்கூர் மன்னராகிய மாராமார்தா ண்டவர்மாவின் படைக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் மிக எளிதில் திருவிதாங்கூர் படைகள் வென்றன. டச்சுப் படையை வழிநடத்திய கேப்டன் டிலனாய் மார்தாண்ட வர்மாவிடம் சரணடைந்தார். போருக்கான காரணம் நல்ல மிளகு வணிக வாய்ப்புகள் மையப்படுத்தி ஏற்பட்ட போர் எனக் கூறப்படுகிறது. மழை பொழிவு அதிகமான இப்பகுதிகளில், சுக்கு நல்லமிளகு போன்றவை இட்ட கருப்பட்டி பானம் மிகவும் முக்கியமானது.  நல்லமிளகு ஏற்றுமதியாகியிருக்கிறது சுக்கும் ஏற்றுமதியாகியிருக்கிறது. அப்படியென்றால் கருப்பட்டி? கருப்பட்டியின் வயதை இதுவரை எவரும் நிர்ணயிக்கவில்லை. பக்குவமாக எடுக்கப்பட்டு புகையிடப்பட்ட கருப்பட்டி பல ஆண்டுகள் கெடாமல் இருக்கும். கப்பலில் வெகுதொலைவுக்கு கொண்டுபோகும்படி இவைகள் செய்யப்பட்டிருக்குமா?

குளச்சல் போரில் எப்படி மார்தாண்ட வர்மாவுக்கு வெற்றி ஏற்பட்டது என ஊர் பெரிசுகள் கூறும் ஒரு கதை உண்டு. கேப்டன் டிலனாய் சிறந்த போர் வீரன். பீரங்கி செய்யும் தொழிகல் நுட்பம் கற்றவன். தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு மாத்தாண்ட வர்மாவின் படைகளையும் கோட்டையையும் பலப்படுத்தின சூத்திரதாரி. அவர் பீரங்கிகளோடு போருக்கு வருகிறார் என்பது மார்த்தாண்ட வர்மாவுக்கு நிச்சயமாக தெரிந்தது. ஆகவே பீரங்கிகளற்ற ஒரு படைகொண்டு கேப்டன் டிலனாயை எதிர்கோள்வது சிரமம் எனக் கருதி ஒரு திட்டம் தீட்டினர். ஏராளமான பனை மரங்களை வெட்டி பீரங்கிகள் போல் வரிசையாக வைத்துவிட கப்பலில் இருந்து பார்த்த டிலனாய்க்கு இத்துணை பீரங்கிகள் கொண்ட ஒரு படையை வெல்லுவது எளிது  அல்ல என அறிந்த படியால் சரணடைந்தார் என கூறுவார்கள். குறைந்த குருதி சிந்தி பெற்ற வெற்றி பனையால் சாத்தியமாகியது.

இப்படியான ஒரு வறலாற்றை இன்று நாம் முன்மொழிய முடியாதுதான். ஆனால் குமரி கடற்கரையோரங்களில் பனை மரங்கள் உண்டு. அவைகள் அன்று நிகழ்ந்ட போரில்  மிக முக்கிய பங்களிப்பாற்றியிருக்கும் என நாம் எண்ண தலைப்படலாம். கடற்கரையோர பனங்காடு எவ்வகையில் அந்தப் போரில் பங்களிப்பாற்றியிருக்கும் என்பது ஒரு முக்கிய கேள்வி. முட்டம் கடற்கரை குளச்சலிலிருந்து ஆறு கிலோமீட்டருக்குள்ளே  இருக்கும். அங்கு பனை மரங்கள் ஓங்கி வளர்ந்திருப்பதைக் காணலாம். கன்னியாகுமரி சூரிய அஸ்தமனத்துக்காக இப்போது ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்திலும் பனை மரங்கள் எராளம் உண்டு. முகிலன்குடியிருப்பு, உசரவிளை, சொத்தவிளை ஆகிய கடற்பகுதிகளிலும் இன்னும் சில இடங்களிலும் பனை மரங்கள் சான்றாக நின்றுகொண்டிருக்கின்றன. பனை மரத்திலிருந்து அம்பு எய்திருப்பார்களா அல்லது பனை மரம் அரணாக செயல்பட்டதா. பனைத்தொளிலாளிகள் உள்ளடக்கிய போர்படை, டச்சு  பீரங்கியைக் கண்டு அஞ்சாமல் வீரமாக போரிட்டார்களா?.

குளச்சலில் மற்றும் குமரிக் கடற்கரையோரங்களில் இன்று பனை மரங்கள் அதிகமாக கிடையாது. தென்னை மரங்களே அதிகம். என்ன காரணமாக இருக்கும்? 1860ல் அனத்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா சானல் என ஒரு நீர்வழித்தடம் குளச்சல் அருகிலுள்ள  மண்டைகாடு முதல் பூவார் பொழிமுகம் வரை திறக்கப்பட்டது. அந்த வேளையில் நீர் பாசனம் கிடைக்கப்பெற்றதால் பனை மரங்கள் மாற்றப்பட்டு தென்னை மரங்கள் பயிரிடப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கிறேன். குமரி மண்ணில் அவ்விதம் பல்விதமான பணப்பயிர்கள் பனை மரத்தை மாற்றியிருக்கிறதை நாம் காணலாம். மேலும் கடற்கரையில் நாம் காண்கிற தென்னைகள் அனைத்தும் நேர்த்தியாக பயிரிடப்பட்டவைகள் என்பது கண்கூடு.

குமரி மாவட்டத்தில் மீன் பிடி சமூகம் பெரும்பாலும் கடற்கரையோரங்களில் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு உள்நாட்டில் தங்கும் இடம் கிடைப்பது அரிது. அவர்கள் கடற்கரையோரங்களிலேயே தங்களை விரிவுபடுத்திக்கொள்ள இயலும். அப்படியானால் கடற்கரையில் இருக்கும் பனை தொளிலாளர்கள் தங்களை சற்றே நெகிழ்த்தி உள்நாட்டிற்கு வரவேண்டும். இப்பிரிவை ஒரு குறியீடாக மாற்றிய பெருமை தென்னை மரங்களுக்கு இருக்கலாம்.

குமரியின் கடற்கரை சமூகங்களுக்குள் குடி ஒரு முக்கிய பிரச்சனையாக வெகு சமீப காலம் வரைக்கும் இருந்துள்ளது. எனது சிறு பிராயத்தில் பொழியூரிலிருந்து சாராயம் தமிழக கடற்கரைக்கு வருவதைக் குறித்து அறிந்திருக்கிறேன். நாங்கள் மார்த்தாண்டத்தில் இருக்கும்போது கைபற்றப்பட்ட கள்லம்சென்ற  சாராயம் இவைகளை மார்த்தாண்டம் காவல் நிலையத்தின் முன்னால் உள்ள ஓடையில் ஒழுக விடுவதைப் பார்த்திருக்கிறேன். காஆசிரியர் பக்தவல்சலம் அவர்கள் வீட்டிற்கு நான் செல்லும்போது குடலை பிடுங்கும் வாசனை அந்த ஓடையிலிருந்து எழும். ஒருவேளை மீனவர் சமூகம் குடியிலிருந்து விடுபட கத்தோலிக்க திருச்சபை பனைமரங்களை மெல்ல அப்புறப்படுத்த தலைப்பட்டிருக்கலாம். அது நாம் புரிந்துகொள்ளக்கூடியதே. பெரும்பாலான அவர்களின் வருமானத்தை அவர்கள் கள் அருந்த  செலவிட்டிருப்பார்கள்.

 

நமது கடற்கரை பனை மரங்களால் சூழப்பட்டு ஒரு கலச்சார, வரலாற்று, பொருளியல், மற்றும் சூழியல் பங்களிப்பை ஆற்றிவந்திருக்கிறது. அவைகள் குறித்த குறிப்பிடத்தகுந்த ஆதாரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. அவைகளை மீட்டெடுப்பது இன்று அவசியமான ஒன்றாகும். சுனாமி தாக்கிய பின்பு கடற்கரையோரங்களில் சவுக்கு மரங்களை நடத்துவங்கினர். ஆனால் பனை மரங்கள் காலம் காலமாக நின்று பயனளித்தவை. அவைகள் இன்று காணாமற் போய்விட்டன். அவைகள் நினைவிலும் இல்லாது போய்விட்டதே காலத்தின் கோலம் எனலாம்.

ஐந்து ரத பனைமரம், மகாபலிபுரம்

ஐந்து ரத பனைமரம், மகாபலிபுரம்

ஒற்றைப் பனையாயிருந்தாலும் அது எஞ்சிய துளி. கால ஓட்டத்தின் அறுபடாத இழை. உயர்ந்து தன்னை உரக்க வெளிப்படுத்தும் உண்மை. அந்த பனையையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். தமிழகத்தின் முதல் நாள் பயணத்தினை ஐந்து ரதத்தின் அருகில் கம்பீரமாக நின்ற அந்த பனை மரமே செறிவுள்ளதாக்கியது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (50)”

  1. Logamadevi Annadurai Says:

    its too interesting to know the historical aspects of palm tree from this post. great work sir. keep going
    thanks for

  2. Logamadevi Annadurai Says:

    thanks form these rare informations

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: