பனைமரச்சாலை (52)


இருள் கவ்வும் நேரம்

நாங்கள் அங்கிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறிய தடுமாற்றம். எப்படி வெளியேறவேண்டும் என. ஒரு வயதான பாட்டி எங்களுக்கு வழி காட்டினார்கள். கல்பாக்கம் வழியாக பாண்டிச்சேரிக்குச் செல்லவேண்டும் என்றார்கள். கல்பாக்கம் அணுமின் நிலையம் வெகு தூரத்தில் தெரிய சாலையில் அதைப் பார்த்தபடி பயணித்தோம். பனையூர் வழியாக போகும்போது அமிர்த்தராஜ் என்னிடம் பனை மரம் திரளாக உள்ள் ஊர் இது. நமக்கு தற்போது நேரம் இல்லை. இருத்திருந்தால் நாம் சென்றிருக்கலாம் என்றார்.

 

அவ்வகையில் பனை மிக முக்கிய இடத்தை தமிழக ஊர் பெயர்களில் பெற்றிருக்கிறது. சிறப்பாக பலவேறு இந்து வழிபாட்டிடட்ங்கள் இருக்கும் இடங்களுக்கு பனை சார்ந்த பெயரே இடப்பாட்டிருப்பதைக் காணலாம். குமரி மாவட்டத்திலுள்ள இடங்களை ஒரு குறிப்புக்காக  எண்ணிப்பார்த்தேன். ஒரு முழுமையான பட்டியல் அளிக்க முடியாவிட்டாலும் குமரியின் நிலத்தை ஓரளவு நாம் அள்ளியெடுக்க ஊர் பெயர்கள் உதவுகின்றன.

 

தக்கலையிலிருந்து அழகையமண்டபம் செல்லும் வழியில் ஒரு இடத்திற்குப் பெயர் பனைவிளை. பனை இத்தப்பகுதியில் அதிகமாக நின்றிருக்கவேண்டும். இன்றும் சாலை ஓரங்களில் அங்காங்கே ஒன்றிரண்டு நிற்பதை நாம் பார்க்கலாம்.

 

நாகர்கோவில்  சி ஏஸ் ஐ ஹோம் சர்ச் எனும் இடத்தின் அருகில் உள்ள விளையாட்டு திடலுக்கு பனவிளை என்று பெயர். எனது நண்பர்கள் அந்த இடத்தில் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். அங்கே பனை மரங்களை நான் பர்த்தது இல்லை. ஆனால் சமீபத்தில் ஒரு பழங்கால கோட்டோவியத்தை காண நேர்ந்தது. அந்த கோட்டோவியம் வரையப்பட்ட கோணத்தைப் பார்த்தால் கண்டிப்பாக தற்போது பனவிளை என்று அழைக்கப்படும் இடம் பனைகளால் நிரம்பிய இடமாக அந்த படம் காட்சிப்படுத்துகிறது. கிறிஸ்தவ மிஷனேறிகள் வந்தபோது பனை மரத்தின் பயன்பாடு மிக அதிகMஆக இருத்ததால் பனைமரங்கலை மிக முக்கியமாக கருதி பேனினர். ஆனால் தற்போதோ மிக எளிதாக ஒரு பனைமரத்தை குமரி மாவட்டத்தில்  பார்க்க இயலாது.

 

குளச்சல் அருகில் உள்ள “குறும்பனை” என்னும் இடம், கேரள எல்லையிலுள்ள “பனச்சமூடு”, கருங்கல் அருகில் உள்ள “கருக்குபனைவிளை”, கோட்டார் அருகில் உள்ள வடலிவிளை (வடலி என்பது பருவம் வராத பனை) போன்ற பெயர்கள் பனைமரங்கள் பரந்து விரிந்து குமரியில் வளர்ந்திருப்பதையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் கூறி நிற்கின்றன.

 

குளச்சல் அருகில் உள்ள “குறும்பனை” என்னும் இடம், கேரள எல்லையிலுள்ள “பனச்சமூடு”, கருங்கல் அருகில் உள்ள “கருக்குபனைவிளை”, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டார் சந்தையின் அருகில் அருகில் உள்ள “வடலிவிளை” (வடலி என்பது பருவம் வராத பனை)  விரிகோட்டின் அருகிலுள்ள  “பனம்குழி” போன்ற பெயர்கள் பனைமரங்கள் பரந்து விரிந்து குமரியில் வளர்ந்திருப்பதையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் கூறி நிற்கின்றன.

 

முற்காலங்களில் இடங்களைச் சுட்டிக்காட்ட நமது முன்னோர்கள் தாங்கள் கண்ட தாவரங்களை அவ்விடங்களுகு பெயராக சூட்டியிருப்பார்கள். பாறை நிறைந்த பகுதியில் காணப்படும் ஆலமரம் உள்ள ஊர் ஆலம்பறை என பெயர் பெற்றது. புன்னை மரங்கள் நிறைந்த இடங்கள் புன்னைகாடு, புன்னையடி ஆனது. மாமரங்கள் நின்ற இடங்கள் மாவிளை ஆனது. இது போலவே சில காட்சிகளைக் கண்டும் அவற்றை ஊர் பெயராக சூட்டியிருக்கிறார்கள். புலியிறங்கி, ஆனைகுழி, போன்றவைகளை அதற்கு உதாரணமாக கொள்ளலாம்.

 

இவ்விதமான பெயர்கள் மிகவும் தொன்மையானவைகளுமாக இருக்கலாம். மக்கள் இவ்விடங்களில் வந்து தங்கிய பின் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். ஆனல் குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மக்கள் வெகு முற்கலத்திலிருந்தே இங்கு சிதறி வாழ்ந்திருக்கின்றனர் எனவும், தமது ஊர்களுக்கு தொன்றுதொட்டு இட்ட பெயர்களையே பெரும்பாலும் வழங்கிவந்திருக்கின்றனர் என்பதும் கண்கூடு.

 

பனை பெயர்கள் சார்ந்த இடங்கள் வேறு சிலவும் எனது பயண நிரலில் இருப்பதால் அங்கிருந்து எவ்வளவு வேகமாக பாண்டிச்சேரி செல்லமுடியுமோ அவ்வளவு வெகமாக செல்லமுடிவெடுத்து கிளம்பினோம்.

 

பனையூர் தாண்டியவுடன் எங்கள் வேகம் ஒரு காட்சியால் மட்டுப்பட்டது.சாலையோரத்தில் பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தன. நாங்கள் வண்டியை நிறுத்திவிட்டு அந்த இடத்திற்குச் சென்றோம்.  அந்த பனை மரங்கள் ஏன் வெட்டப்பட்டன என்பதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை. குறிப்பாக சீமைக் கருவேலங்கள் அந்த இடத்தில் நின்றன, அவைகளை அப்புறப்படுத்தாமல் பனை மரங்களை மட்டும் ஏன் வெட்டினர்கள் எனத் தெரியவில்லை. ஒருவேளை சாலையை விரிவு படுத்த வேண்டி இருக்கலாம். அந்த மரங்கள் யாவும் 10 அடி துண்டுகளாக அறுக்கப்பட்டு தாறுமாறாக கிடந்தன. மனிதர்களுக்கு கெம்பீரமானன்வற்றின் மீது எந்தவிதமான மதிப்பும் இல்லையோ என எண்ணத்தோன்றியது. அந்த பனை மரங்கள் யாவும் நெருப்பிட்டு எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்ததை பார்த்தோம்.

 

செஞ்சிலுவை சங்கம் போல ஓலைச் சிலுவை சங்கம் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது. போர்களத்தில் தனே அவர்கள் பணியாற்றுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களைத் தானே தூக்கியெடுத்து உதவுகிறார்கள். பல்லுயிர்களை பேணும் பல தலைமுறை காணும் பனை அதன் மைய நிலத்திலிருந்து அறுப்புண்டு போவது சரியான ஒன்றாக படவில்லை. மொத்த தமிழகமும் இணைந்து செயல்பாட்டாலொழிய பனைமரத்தினைக் காப்பது சாத்தியமல்ல. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் ஒரு நபருக்கு 10க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருந்திருக்கிறது. இன்று இருவருக்கு ஒரு பனைமரமே உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள ஒரு இயற்கை பாதுகாப்பு அரணை நாம் இழந்துவிட்டோம் என்றே தோன்றியது.

 

எரியூட்டுதல் இந்திய மரபில் உள்ள ஒரு தொன்மையான வழக்கம். சாம்பல் பூசுவது பழங்குடி காலத்திலிருத்தே நடைபெறும் சடங்கு. அவ்விதமாகவே குலக்குறிகள் உடலில் வரைவது பரவலாகியிருக்கும் என எண்ணுகிறேன். சாம்பல் ஒன்றுமில்லாமல் எஞ்சுவது. கிறிஸ்தவர்கள் கூட சாம்பற் புதன் கொண்டடுவார்கள். திருச்சபையின் முக்கிய விழாவாக நான் கொண்டாடுவதும் கருதுவதும் இதுவே.

 

கத்தோலிக்கத் திருச்சபையினரும் சீர்திருத்த திருச்சபையினரும் கொண்டாடும் ஒரு முக்கிய நாள் சாம்பற் புதன். பிற திருச்சபையினர் திருமறையை தவறாது கடைபிடிக்கிறோம் என மார் தட்டுவதற்காக இந்த தொன்மையான கிறிஸ்தவ அனுசரிப்பை ஏற்றுக்கொள்ளுவதில்லை. கி. பி 352ல் நடைபெற்ற நிசேயா கூடுகையில் சாம்பற்புதன் அனுசரிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதன் தொன்மை கிறிஸ்தவத்திற்கும் யூத சமயத்திற்கும் முந்தையது. யூதர்கள் மற்றும் வேறு சில இனத்தவரும்  தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த, தங்கள் பாவங்களை உணர்ந்தவர்கள் என அறிக்கையிட தங்கள் உடலில் சாம்பலைத் தூவி இரட்டுடுத்தி உண்ணாமல் இருப்பது வழக்கம். திருச்சபை தனது மக்களை புனரமைக்கும் ஒரு காலகட்டம் இது. தவக்காலம் என்றும் கூறுவர்.

 

உலக அளவில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படும் அன்று தங்கள் கரங்களில் கொடுக்கப்பட்ட ஓலைகளை எடுத்துச்செல்லும் திருச்சபையார் அவைகளை சாம்பர்புதன் வரை தங்கள் வீடுகளில் சேமித்து வைப்பார்கள். போதகர் அல்லது குருவானவர் அவைகளை சேமித்து எரியூட்டி சாம்பலக்கி அன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் வருபவர்களுக்கு நெற்றியில் சாம்பலைக்கொண்டு சிலுவை அடையாளம் வரைந்து ”  நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” (தொடக்கநூல் 3 :19) எனும் வசனத்தை சொல்லுவார்கள். சிலுவை வரையும் வழக்கம் போப் கிரகரி அவர்களால் 7ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்டதாக கூறுவர்கள்.

ஓலை தமிழகத்தைப் பொறுத்தவரையில் மிக முக்கிய குறியீடாக பல தளங்களில் பயன்பட்டதை அறிவோம். சாவோலையில் ஓரங்கள் நெருப்பில் காட்டப்பட்டு அவைகள் அனுப்பபட்டன என்பதை முன்னால் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு காரணம் உண்டு. மேற்குலகில் பனைமரங்கள் அதிகம் இல்லாத சுழலில் “பாம் சண்டே” என குருத்தோலை ஞாயிறை வழங்கலாயினர். அவர்களைப் பொறுத்தவரையில் பனை மொத்தமாக ஒரு குறியீடு. தொலைவில் நின்று பார்க்கின்ற பார்வையில் தெரியும் பிரம்மாண்ட உருவம். அவர்கள் பகுத்துப் பார்க்கும் அளவுக்கு அவர்களிடம் பனைமரங்கள் இல்லை. அல்லது பனையோடு கூடிய தொடர்பு அவர்களுக்கு இல்லை.

 

நமக்கு அப்படியல்ல, பனை மரம் அணுகி அறிந்த ஒரு படிமம். அவற்றின் ஒவ்வொரு அசைவும் நமக்கு பல பொருள் தருவதாய் அன்றாடம் நமது வாழ்வோடு இணைந்து இருந்தது. ஆகவே தான் ஓலைகளை பிடித்துக்கொண்டு போனவர்களை குறித்த பகுதியை நம்மவர்கள் “குருத்தோலை” என செறிவுபடுத்தி மொழியாக்கம் செய்தனர். நமக்கு ஓலைகளை விட குருத்தோலைகள் பொருள் பொதிந்த ஒன்று. புதிய துவக்கத்தின் குறியீடாகவும், தூய்மையின் அடையாளமகவும், புது வாழ்வை குறிப்பதகவும் பொருள்பட்டது. இயேசு எருசலேம் நுழைகையில் அதை தூய்மையாக்கினார் என்பது, ஒரு புதிய அரசு அமைக்கும் நிகழ்வாக தம்மை அங்கே வெளிப்படுத்தினார் என்றும், அவர் புதிய வாழ்பை தருபவர் எனும் நோக்கிலும் மக்கள் ஓலைகளை பிடித்தனர் என பொருள் கோள்ளத்தக்க சேறிவுமிக்க பகுதியாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அரசர்களுகு அளிக்கும் வரவேற்பை மக்கள் குருத்தோலை மூலமாக கொடுத்தனர் என்பதும் தமிழக வாழ்வில் குருத்தோலை தோரணங்கள் இட்டு அழகுபடுத்தும் மரபிற்கு மிகவும் நெருங்கிய தொடர்பை வலியுறுத்துகிறது.

 

குருத்தோலை இத்துணை  முக்கியமான ஒன்றாக காணப்படுவதனால் ஓலையில் செய்யும் சிலுவை வீட்டில் வைத்துக்கொள்ளுவது மிகவும் முக்கியம் என கருதப்பட்டது. அப்படியானால் அவற்றை எரிப்பதும் மிக முக்கியமான குறியீடாகவே, ஒரு வித உன்னதமக்கப்பட்ட ஒரு நிலையாகவே கருதப்பட்டிருக்கும்.  ஒரு தனி மனிதனின் பாவம் அத்துணை கொடூரம் நிறைந்தது, அது நம்மை மண்ணோடு மண்ணாக்கிவிடும் என்னும் உண்மையை சொல்லும்படியாக வழக்கமாக்கப்பட்டது. ஆனால் திருச்சபைகள் இவைகளை வெறும் இறையியலாக்கி, உன்னதமாக்கலோடு இன்று நிறுத்திவிட்டன என்பதே வேதனையான காரியம். சடங்கின் நீட்சியாகவே இவைகள் இன்று எஞ்சுகின்றன. ஆகவே தான் பனைத் தொழிலாளிகளோ பனைமரங்களோ இன்றளவும் திருச்சபையால் கண்டுகொள்ளப்படவில்லை. அது கிறிஸ்தவ ஆன்மீக வாழ்வில் ஒரு பெரிய விடுபடலாகவே நான் காண்கிறேன்.

 

விழுந்து கிடக்கும் பனைமரங்கள் எரியூட்ட முயற்சிக்கப்பட்டு அவை முழுமைபெறாமல் கிடந்தன. நாங்கள் ஒரு மயானத்தை சுற்றிவரும் நிலையிலேயே அங்கே இருந்தோம். நான் வீழ்ந்துகிடந்த ஒரு மரத்தில் அப்படியே அமர்ந்து விட்டேன். அமிர்தராஜ் அமைதியாக புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். என்னைப் பொறுத்தவரையில் பனைமரம் சாம்பலிலிருந்து முளைக்கும் ஒருநாள் வாழ்வு கொண்ட காளான் அல்ல. ஆயிரம் தலைமுறை வாழ்ந்து வாழவைத்த அருட்கொடையின் பருவடிவம். நாம் மட்கினாலும் அவை நீடித்து நிமிர்ந்து நிற்கும். பனைகள் இல்லாத இடத்தில் வாழ்வது என்பது உறைநிலை வாழ்வாக மட்டுமே எஞ்சும். ஆம் அப்போதே இருள் கவிய துவங்கியது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (52)”

 1. Logamadevi Annadurai Says:

  பாஸ்டர், இன்றையதும் இதற்கு முந்தையதுமான உங்களின் இரண்டு பதிவுகளுமே வழக்கம் போல அருமை மற்றும் தகவல் களஞ்சியம்.
  மஹாபலிபுரதில் ஒரு சில பனையே காணக்கிடைப்பினும் அந்த இடம் உங்களுக்கு மஹா பனைபுரமானது. பனைக்கும் உங்களுக்குமான பிரேமையால் ஆக்கப்பட்டது அதே இடத்திற்கு சென்ற வருடம் சென்றிருந்த நான் அதே 5 ரதங்களினிடையில் எடுத்த எந்த புகைப்படத்திலும் பனை இல்லை. ஆனால் உங்களின் பார்வையே பனை சார்ந்ததாகவேதான் இருக்கிறதென்பதால் எங்கும் எதிலும் பனையே காண்கிறீர்கள்
  எங்கள் ஊரில் சொல்லுவார்கள் காதல் கொண்ட பெண் ஒருத்தியின் கூற்றாக ”மரத்தைப் பார்த்தா நீங்க, மட்டையை பார்த்தா நீங்க, குளத்தைப்பார்த்தா நீங்க, அட , ஒரு குட்டையை பார்த்தாலும் நீங்க “ என்று

  காதல் கொண்டால் எதை பார்ப்பினும் அவராக அல்லது அவளாக தெரியும் ” உங்களுக்கோ, பனையின் மீது வெறும் காதல் மட்டுமல்ல அதையும் தாண்டிய அர்ப்பணிப்புடனான ஒரு இஷ்டமுள்ளதால் பார்க்கும் இடமெல்லாம் உங்களுக்கு பனை தெரிவதை விடவும் பனை எங்கிருந்தும் உங்களை பார்த்து விடுகிறது என்றே தோன்றுகிறது
  ஒரு முறை ஒரு கோவிலில் உள்ளே செல்லவே முடியாதபடிக்கான கூட்டமிருந்த்தபடியால் நான் வாசலில் இருந்தே அம்மனை வணங்கி விட்டு வந்துவிட்டேன். அன்று எழுதிய என் நாட்குறிப்பில்.” எங்கிருந்தும் உன்னை காணமுடியா நெரிசல்தான் எனினும் நீ எங்கெங்கிலும் இருந்தென்னை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாய்” என்றெழுதினேன்

  பாஸ்டர், கெம்பீரமான உயர்ந்த, இறையின் வடிவிலான பனை உங்களை எங்கெங்கிலும் இருந்து கண்டுகொண்டேதான் இருக்கிறது. அருளிக்கொண்டேதன் இருக்கிறது

  பனை சார்ந்த இடங்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் அருமை., வெட்டப்பட்ட பனைகளின் அருகே மயானம் போல நீங்கள் உணர்வது உங்களின் உள்ளத்திலே பனைக்கான மகத்தான இடமென்னவென்று வாசிப்பவர்களுக்கு காட்டுகிறது

  இருள் கவியத்தொடங்குகையில் ஆரம்பித்த உங்கள் பதிவு இருள் முற்றாக கவிந்ததும் நிறைவுற்றது.
  பாஸ்டர் இருட்டின் பின்னேதானே வெளிச்சம் வரும். பனைக்கான இருண்ட காலம் முடிந்து அது வெளிச்சத்தை நோக்கி வரும் காலம் இதொ நெருஙிவிட்டதென்றே நினைக்கிறேன். மேலும் மேலும் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களுடன்
  லோகமாதேவி

 2. pastorgodson Says:

  ஜெயமோகன் அண்ணனுடைய வாசகர்களின் வாசிப்பு வேகத்திற்கு ஈடாக என்னால் எழுத முடியவில்லை என்பதை நான் ஒத்துக்கொள்ளுகிறேன். ஆனால் உங்களின் பின்னூட்டமும் தொடர்ந்த வாசிப்பும் என்னை களைப்புறாமல் எழுத தூண்டுவது உண்மை. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: