பனைமரச்சாலை (53)


பனைக்கான இறைவாக்கு

மாலை வேளையில் நடைபேறும் சவ அடக்கத்திற்கு சென்று திரும்பும் மன நிலையிலேயே நானும் அமிர்தராஜும் இருந்தோம். பயண களைப்பு ஒருபுறம் பனைமரங்கள் வெட்டி எரிக்கப்பட்டு இருந்த காட்சியை கண்டது இன்னொருபுறம். எனது பயணத்தில் இது இன்றியமையாத ஒரு காட்சியாக மாறிவிட்டது. எனக்கு முன்னால் உள்ள சவால் இந்த மரங்களை உயிர்பிப்பது தான். திருவிவிலியம் கூறும் ஒரு காட்சி படிமம் எனக்குள் அப்போது வந்தது. உலர்ந்த எலும்புகள். கடவுள் அவற்றிற்கு இறைவக்குரைஞரால் உயிரளிப்பது. சிலிர்த்துவிட்டேன். என்னால் முடியுமா? கடவுளே! இது தான் எனக்கான பணியா?

1 ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன. 2 அவர் அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன.

அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன. 3 அவர் என்னிடம், ‘மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா?’ என்று கேட்டார். நான், ‘தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே’ என்று மறுமொழி அளித்தேன். 4 அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. ‘உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்’ என்று சொல். 5 தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். 6 நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்; உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர்பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள். 7 எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்குரைத்தேன். நான் இறைவாக்குரைக்கையில், உராயும் ஓசை கேட்டது.  ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது. 8 நான் பார்க்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது.

ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை. 9 பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை; மானிடா! இறைவாக்குரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும் ‘உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்.’ 10 எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்குரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது.

அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர். [1]

11 அவர் மேலும் என்னிடம் கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ ‘எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்’ எனச் சொல்கிறார்கள். 12 எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். 13 அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து  வெளிக்கொணர்கையில்,

நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். 14 என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். ‘ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்’ என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். (எசேக்கியேல் 37: 1 – 14)

 

உலர்ந்து எரியூட்டப்பட்ட ஒரு சமூகத்தை சாம்பலில் இருந்து உயிர்பெறச்செய்வது எப்படி? அது எளிதில் நடைபெறுமா? எவ்விதமாக இறைவாக்குரைக்கவேண்டும்? மிகப்பெரிய பொறுப்பல்லவா? எங்கிருந்து துவங்குவேன் எங்கே முடிப்பேன் கடவுளே என அங்கலாய்க்கத்துவங்கினேன்.

 

ஒரு போதகருக்கு இருக்கும் கட்டாயங்கள் அளவிடமுடியாதது. சடங்குகள்   என வகுத்திருப்பவை தாண்டி செய்யும் எவற்றையும் ஒரு பற்றாளரால் ஏற்க முடியாது. இறைவன் இந்த உலகை படைத்தவர். அவரே அதன் அழிவை அனுமதிக்கிறார். அவரிடம் வேண்டுவதை விட நாம் அதிகமாக ஏதும் செய்துவிடமுடியாது. அவ்விதம் செய்யும் காரியங்கள் யாவும் கடமை தவறும் காரியங்கள் தாம். இந்த வாற்பிலிருந்து வேறு வடிவம் எடுப்பதும் இயலாது, மீண்டும் உருக்கப்படவேண்டும். மீண்டும் உருவாகிவரவேண்டும். முடியுமா? தெரியாது. ஆனால் எனது புரிதலின்படி கடவுள் நம்மிடம் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார். எசேக்கியேலிடம் கூறியது போல. அதை நாம் செய்ய கடன் பட்டவர்கள் என்பது எனது திட்டவட்டமான புரிதல். ஆகவே எனது பங்களிப்பை ஆற்றவே நான் முயற்சிப்பேன். அதுவே எனக்களிக்கப்பட்ட காட்சியாக நான் கொள்ளுவேன். எரியூட்டப்பட்ட பனைமரங்கள் அப்படி என் முன்னால் கடவுள் அருளிய திருக்காட்சியாக நிற்கிறது.

பனைக்கான இறைவாக்கு எப்படி இருக்கும்?. உலர்ந்த எலும்புகள் இஸ்ரவேலருக்கு எப்படி ஒப்புமையாக்கப்பட்டதோ அது போலவே, விழுந்துபோன பனை மரங்கள், எரியூட்டப்பட்டவைகள், வெட்டப்பட்டவைகள், கடந்த நாட்களில் காணாமல் போனவைகள் யாவும் மீண்டும் நிலத்தில் ஊன்றி செழிக்கவேண்டும். முன்றாம் உலக உழைக்கும் மக்களின் வாழ்வில் உழைப்பிற்கான ஊதியம் பெற்றுக்கொடுக்கும் உத்தரவாதியாக பனைமரம் எழுந்து நிற்கவேண்டும். பசியோடிருப்பவர்கள் பசியாறும்படி பனை எங்கும் நிறைந்திருக்கும் இறைவடிவின் தோற்றமாக அருள்பாலிக்க வேண்டும். பனையில்லா ஊர்களோ நகரமோ பாழடைந்ததாக கருதும் மனநிலை வரவேண்டும். பனையில்லா ஊரில் குடியிருக்க வெண்டாம் எனும் நிலப்பாடு எடுக்கும் நவீன சமூகம் உருவாகவேண்டும்.

 

திருமறை சார்ந்த வசனங்கள் என்னுள் ஊறத்துவங்கியது, குறிப்பாக எரேமியா தீர்க்கரின் வாழ்வோடு என்னை பிணைத்துகொண்டேன். எரேமியா என்பவர் பிளவுபட்ட யூதா இஸ்ரவேல் தேசங்களுக்கு இறைவாக்குரைத்தவர். இதே யூதா பகுதியில் தான் ஏசாயாவும் இறைவாக்குரைத்தார். பல்வேறு பின்னணிகளில் ஆண்டவர் இறைவாக்குரைஞர்களை எழுப்புவது நாம் சிந்திக்கத்தக்க ஒரு காரியம். ஆமோஸ் எனும் தீர்க்கர் அத்திப்பழம் பொறுக்குகிறவரும் ஆடு மேய்க்கிறவருமாய் இருந்தவர். ஆண்டவரின் அழைப்பு அவருக்கு வந்தது. ஓசியாவின் அழைப்பு வேறுவிதமானது. ஏசாயா தனது குருத்துவ பணியின் இடையில் இறைவாக்குரைக்க அழைக்கப்பட்டு தனது பணியை தொடர்ந்தவர். இதை பதிவு செய்ய காரணம் உண்டு. அபிஷேகம் செய்யபட்ட குருத்துவ பணியினை செய்யும்போது பெறும் இறைவாக்கினை திருச்சபை புரிந்துகொள்ள வேண்டும்.

 

இவர்களெல்லாவற்றிலும் எரேமியா சற்று மாறுபட்டவர். அவர் தனது அழைப்பைப்பற்றிக் குறிப்பிடுகையில்,

 1. எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு; 5 “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.” 6 நான், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே” என்றேன். 7 ஆண்டவர் என்னிடம் கூறியது; “‘சிறுபிள்ளை நான்’ என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். 8 அவர்கள்முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன், என்கிறார் ஆண்டவர். “9 ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது; “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். 10 பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன் “.(எரேமியா 1: 4 – 10)

சிறு பிள்ளை எனும் கூற்றை நன் பலமற்றவன் எனும் பொருளிலும், ஆண்டவரின் அழைப்பு திருநிலைப்படுத்துதல் நாம் கருவில் உருவாகுமுன்னே நிகழும் விந்தையாகவும் காண்கிறேன். சிறப்பாக ” நடவும் ‘ எனும் வாக்கு எனது பணிக்கான அழைப்பாக தெள்ளத்தெளிவாக தெரிகிறது. என்றாலும், பிடுங்கவும், தகர்க்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும் தேவைப்பட்டால் கட்டவும் நான் அழைக்கப்படுகிறேன் என்பதை மறுப்பதிற்கில்லை என்பதையும் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

 

மேற்கூறிய திருமறைப்பகுதிகள் என் நினைவிற்கு வந்தபோது, என்னால் சற்று நிதானம் அடையவும் முடிந்தது. இதுவே எனக்கான சிலுவையென்றால் இதை சுமக்க நான் சித்தமாயுள்ளேன் ஆண்டவரே என்றே என்னால் சொல்ல முடிந்தது. இந்த நிலை நான் சற்றும் எதிர்பாராதது. எனது பயணத்தின் விளைவாக நிகழ்ந்தது. ஒரு வேட்கையுடன் புறப்பட்ட நான் இப்போது இதையே எனது தலையாய பணியாக எண்ண தலைப்பட்டிருக்கிறேன். இதற்கான விலையையும் கொடுக்க சித்தமாயிருக்கிறேன். இது வெறும் எனது விருப்பம் சார்ந்த ஒரு தேடல் அல்ல மாறாக இவ்வுலகில் கடவுள் என்னை பிறப்பித்ததற்கு நான் செய்யும் நன்றிக்கடன். கடவுளின் படைப்பை காக்கும் பணியில் என்னையும் இணைத்துக்கொள்ளும் அற்பணம். என்னுள் நிகழ்ந்த அந்த கூரிய மாற்றம் என்னையே ஆச்சரியம் கொள்ள வைத்தது.

 

ஆம் வாழ்வில் ஒரு திருப்புமுனை கணம் வேண்டும். அது எனக்கு பனைமர வேட்கை பயணத்தின் வாயிலாக  அமைந்தது. மிக எளிமையாக  நான் துவங்கிய இந்த பயணம், என்னை உக்கிரமான ஒரு சுழலுக்குள் இழுத்துப்போவதை அந்த இரவில் உணர்ந்துகொண்டேன். பனை மரத்திற்கும் அது சார்ந்த தொழிலாளர்களுக்கும் என்னால் ஒரு முக்கிய பங்களிப்பாற்ற இயலும் என்று சொன்னால் அதுவே என் பிறவிப்பயன் என்று கொள்ளுவேன். எனது பாதை இடுக்கமானதுதான், சவால் நிறைந்தது கூட, முடிவு குறித்து எதுவும் கணக்கிட்டு தெரிந்துகொள்ளும் சூழலில் நான் இல்லை. ஆனாலும் என்னை உந்தும் ஒரு சக்தி உண்டு. அது என்னை முன்குறித்திருக்கிறது. இப்பயணம் எத்துணை வெற்றிகளை பெற்றுவரும் எனத் தெரியாது, ஆனால் அழுத்தமான ஒரு தடத்தை விட்டுவிட்டேச் செல்லும்.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (53)”

 1. Logamadevi Annadurai Says:

  பாஸ்டர், பனை வேட்கையின் இந்த பதிவில் உங்களுக்கான இறைவாக்கு பனையின் பாதுகாப்பு என குறிப்பிட்டு இருக்கிரீர்கள் உண்மையில் அது வெறும் இ/றை வாக்கு மட்டுமல்ல, இறைவனின் மீறமுடியாத ஆணையென்றே கொள்ளவேண்டும்.
  சாம்பலில் இருந்து ஃபீனிக்ஸ் பறவை மட்டுமல்ல பனையும் உயிர்த்தெழும் உங்களின் முயற்சியாலும் கடவுளின் அருளாலும்.
  போதகருக்கான கட்டாயங்கள் அதிகமெனினும் இறைவனின் பெயராலே நீங்கள் ஏற்றிருக்கும் இந்த பணிக்காக உங்களுக்காக திறந்திருக்கும் வாசல்களும் மிக அதிகம்
  மிக எளிமையான ஆனால் மிக மிக அத்யாவசியமான பணியை ஏற்றெடுத்திருக்கிறீர்கள்.
  பனைமரச்சாலை நீண்டதும், இடுக்கானதும் சவால்கள் நிறந்த்ததும் தான், எனினும் உங்களுடன் பயணிக்க நிறைய ஆர்வலர்களும் நண்பர்களும், கூடவே ஆண்டவரும் இருப்பதால் ,நம்பிகையுடன் தொடர்ந்து செல்லுங்கள்,
  சுவடுகலளையும் வெற்றிகளையும் சேர்ந்தே பெறப்போகும் , மகத்தான பனைமீட்பு பயணத்திற்கான எனது வாழ்த்துக்களுடன்
  லோகமாதேவி

 2. pastorgodson Says:

  நன்றி லோகமாதேவி. உங்களின் வார்த்தைகள் உற்சாகமளிக்கின்றன. சோர்புகளை நண்பர்கள் எளிதில் விலக்கிவிடுவார்கள் போலும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: