பனைமரச்சாலை (54)


புலரி

பாண்டிச்சேரி நான் செல்லவேண்டும் என முடிவெடுத்ததற்கு சில காரணங்கள் உண்டு. ஒன்று, அது கடற்கரை சாலையை ஒட்டி வருவது ஆகவே அது இயல்பான பாதை. இரண்டாவதாக ஆரொவில்லில் பனை மரங்கள் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக எனது கல்லூரி தோழி பேர்ளி வீடு அங்கே தான் இருக்கிறது. பேர்ளி தற்போது ஜெர்மனியில் முனைவர் பட்ட ஆய்வில் இருந்தாலும் அவளது பெற்றோர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். எனது திருமணத்திற்கு பாண்டிச்சேரியிலிருந்து கன்னியாகுமரி வரை பயணித்து வந்தவர்கள். அவர்களையும் கண்டு மகிழ வேண்டியே திட்டமிட்டிருந்தேன்.

 

பேர்ளிக்கும் எனக்குமான நட்பு மிகவும் ஆழமானது, தூயது. எனக்கு அவள் தோழியாக கிடைத்தது மிகப்பெரிய வரம். கல்லூரிக்காலத்தில் என்னை அவள் அளவு கிண்டல் செய்தவர்கள் எவரும் கிடையாது. ஆனால் எனது பனை மர வேட்கையில் அவளின் பங்கும் முக்கியமானது. என்னை கூர்மைப்படுத்த அவள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவற்றையும் இன்றும் நன்றியோடே நினைக்கிறேன்.

 

பேர்ளியின் தந்தையை அழைத்து எங்களுக்கு ஒரு அறையை ஒழுங்குசெய்யவேண்டும் என கேட்டுக்கொண்டேன். அவர்கள் சரி என்றார்கள். நாங்கள் பாண்டிச்சேரி சென்று சேர்ந்த போது இரவு 8.30ஐ தாண்டியிருந்தது. நேராக ஒரு உணவகத்திற்குச் சென்றோம். மொட்டைமாடியில் எவ்வித கூரையுமற்ற வெட்டவெளியில் அழகாக மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தது. அருகில் இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு பெண் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள். உடனிருந்தது காதலனாக இருக்கும் என நினைக்கிறேன். சிறு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வந்திருந்த குடும்பத்தினர் இருந்தனர். பணி முடித்து வந்த இளைஞர்களும் இருந்தனர். சேவை சற்று தாமதமானாலும் சிறப்பான பஞ்சாபி உணவை எங்களுக்கு அவர்கள் அளித்தார்கள்.

நாங்கள் உணவு உண்டுகொண்டிருக்கும்போது எனக்கு ஜெசிக்காவிடமிருத்து ஒரு தகவல் வந்தது. இவான் உங்கள் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை என்று. நாங்கள் தக்ஷிண சித்திராவிலிருந்து புறப்படும் முன்பு அவனை எனது வாகனத்தில் ஏற்றி ஒரு சுற்று சுற்றி வந்தேன். அது பெரிய காரியம் அல்ல. ஆனால் பயல் நான் வாழ்நாளிலும் அவனை மறக்கக்கூடாதபடி ஒரு காரியத்தை செய்துவிட்டான். வீட்டிற்கு சென்றவுடன் முதல் வேலையாக பென்சிலெடுத்து என்னை படம் வரைந்திருந்தான். எனது பயணத்தை சிறு குழந்தைகளும் ஏற்றுக்கொள்ளுவதே எனக்கு பேருவகை அளிப்பதாக இருந்தது. அவர்கள் அந்த படத்தையும் எனக்கு இணைப்பாக அனுப்பியிருந்தார்கள். இவான் மிகப்பெரிய ஓவியனாக வளர வாய்ப்புள்ளது.

சிறுவன் இவான் என்னை நினைவிலிருந்து மீட்டு வரைந்த படம்

சிறுவன் இவான் என்னை நினைவிலிருந்து மீட்டு வரைந்த படம்

அங்கிருந்து அமிர்த்தராஜ் தனது நண்பருக்கு தொடர்புகொண்டு பேசினார். நான் பேர்ளியின் தந்தையை தொடர்புகொண்டு பேசினேன். எங்களுக்காக யாத்ரிநிவாசில் அறை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் வீட்டிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். நாங்கள் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த யாத்ரிநிவாசிற்குச் சென்றோம். அவர்கள் எங்களை வரவேற்கும் நிலையில் இல்லை. ஏன் இங்கே வந்தீர்கள் என்பதுபோலவே நடத்தினார்கள். பதிவு செய்திருக்கிறோம் என்ற பின்பே சற்று நிதானமடைந்து எங்களை உள்ளே அனுமதித்தார்கள். வேறிச்சோடி கிடக்கும் இவ்விடத்தில் ஏன் எங்களை இவ்விதமாக நடத்துகிறார்கள் என எங்களுக்குப் புரியவில்லை.

 

மூன்றாம் மாடியில் எங்களுக்கான அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறை விஸ்தாரமாக இரு படுக்கையறைகள் கொண்டதாக இருத்தது. ஆனால் அங்கே இருந்த புதிய விரிப்புகளைத் தவிர மீதி அனைத்தும் பழைமையின் தன்மை கொண்டிருந்தன. இத்தனைக்கும் அது அத்துணை பழைய கட்டிடமும் இல்லை. கழிவரை உடைந்து பெயர்ந்து கிடந்தது. ஏன் இப்படி எனக் கேட்டால் எங்களுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை, பலமுறை கேட்டு ஓய்ந்துவிட்டோம் என்றார்கள். நாங்கள் இன்று இரவு இங்கேதான் சமாளிக்கவேண்டும்  என நினைத்துக்கொண்டோம்.

 

அமிர்த்தராஜ் உடனடியாக குளியலரைக்குச் சென்றார். நான் என்னுடைய அழுக்குத் துணிகளை எடுத்துக்கொண்டு தோழி வீட்டிற்குச் சென்றேன். அங்கே பேர்ளியின் சகோதரியும் வந்திருந்தார்கள். அவர்களை கண்பதே மகிழ்ச்சி. பேர்ளியை விட அவள் அம்மா இரு மடங்கு நகைச்சுவை உணர்வுடன் பேசுவார்கள். அன்பால் மூழ்கடிப்பர்கள். எனது துணிகளை அங்கேயே துவைத்து காய்வதற்கு இட்டுவிட்டு அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அமிர்த்தராஜ் தனது நண்பரை பார்க்கச் செல்லுவதாக குறிப்பிட்டிருந்தார். இரவு சுமார் 12 மணிக்கு நான் அறைக்கு வரும்போது அமிர்த்தராஜ் தண்ணீர் வெண்டும் என்று கேட்டார். தண்ணீர் வாங்குவதற்கு செல்லலாம் என்றால். கேட்டை பூட்டிவிட்டார்கள். எங்களிடம் தண்ணீர் இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியதால் 2 பாட்டில் வாங்கிக்கொண்டு 100 ரூபாய் கொடுத்தேன். மீதி சில்லறை இல்லை நாளை வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். என்னிடமும் சில்லறை இல்லை, சரி என்று அறையில் படுத்துக்கொண்டோம்.

 

காலையில் எழுந்து அறையை காலி செய்யும்போது அவர்கள் தரவேண்டிய பாக்கி பணத்தை தரவில்லை. என்னிடம் பணம் வாங்கியவர் இரவு நேர பணியாளர் எனவும் அவரிடம் தான் அதைக் கேட்கவேண்டும் என்றும் சொன்னார்கள். புத்திசாலித்தனமான பதில். இவைகளை எப்படி எதிர்கொள்ள என எனக்குத் தெரியாது. வாழ்க என வாழ்த்திவிட்டு வெளியெ வந்தோம். அமிர்த்தராஜ் தனது நண்பனை பார்க்கச் செல்லுவதாகவும், என்னை பேர்ளி வீட்டில் வந்து சந்திப்பதாகவும் கூறினார். நான் பண்டிச்சேரி சாலையில் செல்லும்போது ஒரு பனைத் தொழிலாளி டி வி எஸ் 50ல் பயணித்து கொண்டிருப்பதைப் பார்த்து அவரை நிறுத்தினேன். காலை சுமார் ஏழு மணி இருக்கும், தனது பணிக்காக அவர் செல்லுவதாக குறிப்பிட்டார். பதநீரோ கள்ளோ ஏதும் அவரிடம் இல்லை.

பாண்டிச்சேரி பனைத்தொழிலாளி

பாண்டிச்சேரி பனைத்தொழிலாளி

மும்பையிலிருந்து நான் வரும் வழியெங்கும் ஒரு சிறு மாற்றத்தை பனைத் தொழிலாளர்களிடம் கவனித்தேன். மும்பையில் சொந்தமாக பனை ஏறுபவர்கள் ஸ்கூட்டி வைத்திருக்கிறார்கள். ஆந்திராவில் சைக்கிள் வைத்திருக்கிறார்கள். புதுவையில் டி வி எஸ் 50. குமரியில் இன்று பனைத்தொளிலாளர்கள் இல்லை, இருந்தால் கூட ஒருவரும் வாகனம் வாங்க மாட்டார்கள். குண்டுமணி தங்கமோ, 2 சென்று நிலமோ அல்லது வீட்டை புதுப்பித்து கட்டவோ செய்வார்கள். இல்லாதவர்கள் கண்டிப்பாக மரத்திலிருந்து விழுந்து அதற்காக வைத்தியருக்கு செலவளித்துக்கொண்டிருப்பார்கள்.

 

அங்கிருந்து நான் பேர்ளி வீட்டிற்குச் சென்றேன். காலை உணவு எனக்கு ஆயத்தமாக்கியிருந்தார்கள். எனது துணிகளை எடுத்து மடித்துவிட்டு காலை உணவை உண்டேன். நான் அங்கிருக்கும்போது ஜெர்மனியிலிருந்து பேர்ளி அழைத்தாள். தனது முனைவர் ஆய்வில் தீவிரமாக இருப்பதால் வீட்டிற்கும் அழைப்பது குறைவுதான் என்றாள். என்னால் அதை நம்பமுடியவில்லை. சமூக வலைத்தளங்களிலும் அவள் அதிகமாக இல்லை. நன்றாக படிப்பவள். ஆனால் நான் அவர்கள் வீட்டிற்கு போன நேரம் பார்த்து அவள் அழைத்தது எங்கள் நட்பின் சாட்சியாகவே இருந்தது. சுமார் 8.30 மணிக்கு அமிர்தராஜ்  தனது நண்பரைப்பார்த்துவிட்டு பேர்ளி வீடு தேடி வந்தார். நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம்.

 

எனக்கு எனது வண்டியை எங்காவது காண்பித்தால் நல்லது என தோன்றியதால் அமிர்தராஜிடம் கூறினேன். அவர் என்னை அழைத்துக்கொண்டு சென்ற இடம் பாண்டிச்சேரியில் மிகவும் பிரபலமான ஃபெலிக்ஸ் அவர்களுடைய கடை. ஃபெலிக்ஸ் ஆரோவில்லின் அத்தனை புல்லட்டையும் சரி செய்பவர். எனது வண்டியைப்பார்த்துவிட்டு இன்னும் ஆயிரம் கிலோமீட்டர் தாக்குபிடிக்கும் என்றார். அமிர்தராஜ் வண்டியிலும் சில போல்ட்டுகளை இறுக்கிவிட்டு, எனது வண்டியிலும் சிறு பணிகள் செய்துவிட்டு அன்றய பயணத்தை துவக்கினோம்.

 

அங்கே அருகில்தானே ஒரு கடையில் அவர் தனது வாகனத்தை நிறுத்தினார். காலையிலேயே வெயில் கொளுத்தத்துவங்கி இருந்தது. தாகமும் வியர்வையும் சேர்ந்துகொண்டது. ஆகவே ஒரு சர்பத் குடிக்க வேண்டி அவர் நிறுத்தியிருக்கிறார் என்பதை பிற்பாடுதான் அறிந்துகொண்டேன். எனது வாழ்வின் மிகவும் சுவையான ஒரு சர்பத் அன்று அவர் வாங்கிகொடுத்தது. அதன் நிறம் சற்று கருமைபடர்ந்திருந்தது, சப்ஜா விதைகளும் ஐசும் இட்டு மிகப்பெரிய கண்ணாடி கப்பில் கொடுத்தார்கள். நான் சர்பத் குடிக்கும் ஒரு உலக புகழ் பெற்ற 🙂  படத்தையும் அமிர்த்தராஜ் அப்போது எடுத்தார். அங்கிருந்து நாங்கள் புறப்படும் முன்பு அருகிலுள்ள ஒரு கடையில் எங்களது பொருட்களை கட்டிவைக்க எலாஸ்டிக் கயிறுகளையும் வாங்கினார்.

நன்னாரி சர்பத் குடிக்கும் மகிழ்வின் தருணம்.

நன்னாரி சர்பத் குடிக்கும் மகிழ்வின் தருணம்.

அன்று நாங்கள் அரோவில் போகும் திட்டம் தடை பட்டது. அமிர்த்தராஜுக்கு தெரிந்தவர்கள் அந்த நேரத்தில் அரோவில்லில் இல்லை. ஆகையினால் நாங்கள் நேராக கடலூர் செல்லலாம் என தீர்மானித்தோம். ஆரோவில் பனை சார்ந்து அனேக முயற்சிகளை முன்னெடுக்க ஒரு சிறந்த களம் என்றே எண்ணுகிறேன். எனது அடுத்த பயணத்திலாவது ஆரோவில் செல்லவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

 

ஜெபக்குமார் என்னை அழைக்கும்போது கண்டிப்பாக கடலூர் பனை ஆராய்ச்சி நிலையம் செல்லவேண்டும் என கோரியிருந்தார்கள். எனது பயண பாதையில் தான் கடலூர் ஆனால் அங்கே பனை ஆராய்ச்சி மைய்யம் இருப்பது எனக்குத் தெரியாது. எங்களை அங்கே வழிநடத்த இலக்குவன் எனும் நண்பரையும் ஜெபக்குமார் ஒழுங்கு செய்திருந்தார்கள். காலையிலிருந்தே நாங்கள் இலக்குவனை அழைத்தும் அவர் எங்கள் தொடர்பில் வரவில்லை. ஆனாலும் எங்கள் பயணம் நம்பிக்கை இழக்காதபடி முன்னேறியது.

 

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (54)”

 1. Logamadevi Annadurai Says:

  pastor,3 chapters in just two days .!!!!!!!!!! amazing. keep going on
  this chapter describes your travelling experiences , your friends, the difficulties you have met, and the way you responded those problems,
  மும்பையில் சொந்தமாக பனை ஏறுபவர்கள் ஸ்கூட்டி வைத்திருக்கிறார்கள். ஆந்திராவில் சைக்கிள் வைத்திருக்கிறார்கள். புதுவையில் டி வி எஸ் 50. குமரியில் இன்று பனைத்தொளிலாளர்கள் இல்லை, இருந்தால் கூட ஒருவரும் வாகனம் வாங்க மாட்டார்கள். குண்டுமணி தங்கமோ, 2 சென்று நிலமோ அல்லது வீட்டை புதுப்பித்து கட்டவோ செய்வார்கள். இல்லாதவர்கள் கண்டிப்பாக மரத்திலிருந்து விழுந்து அதற்காக வைத்தியருக்கு செலவளித்துக்கொண்டிருப்பார்கள்
  this statement is wonderful. this shows how you observe the lifestyle of people who depend on palm in their life. hope you will meet lakkuvan . best wishes for your palm project
  with regards
  logamadevi

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: