பனைமரச்சாலை (56)


பனை – ஆயிரம் பயன்

நாங்கள் அங்கிருந்து வேகமாக மீண்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தோம். அங்கே ஊடக நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. இலக்குவன் எங்களை அறிமுகப்படுத்த பேட்டி ஆரம்பமானது. நான் நினைத்தது போன்று மைக்கை எனக்கு முன்பு நீட்டியபடி அல்ல, மாறாக நண்பர் கூழாமுடன் பேசும் சிறு பேச்சுபோல அது காணப்பட்டது. நாங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது இலக்குவன் எங்களை அவர்களுடன் இணைத்து ஒரு புகைப்படம் எடுத்தார். அங்கிருந்து நாங்கள் புறப்படும் நேரம் ஊடக நண்பரும் எங்களை ஒரு புகைப்படம் எடுத்தார்.

நாங்கள் புறப்படுகையில் மூன்றுமணி தாண்டிவிட்டிருந்தது. எங்களுக்கோ கடும் பசி. இலக்குவன் சாப்பிட அழைத்தார், ஆனால் அமிர்தராஜ் நாங்கள் வேறு இடத்தில் பார்த்துக்கொள்ளுகிறோம் என்றார். ஆகவே பிரியும் முன்பதாக இலக்குவன் எங்களுக்கு நன்னாரி சர்பத் வாங்கிக் கொடுக்க, அங்கிருந்து விடை பெற்றோம். செல்லும் வழியில் பெரிய குப்பம் எனும் ஒரு இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். கடற்கரைப் பகுதி வழியாக அந்த இடத்தை நாங்கள் எட்டினோம். மணல் மேடுகள் அவைகளில் காணப்பட்ட சிறு தாவரங்கள் மற்றும் பனை மரங்கள். கிராமங்கள் என அதிகம் எதுவும் இல்லை ஆனால் மிகப்பெரிய ஒரு பன்னாட்டு நிறுவனம் அந்த இடத்தில் தோன்றியிருந்தது. சுனாமி அவர்களை செயலிழக்கச்  செய்ததாக அமிர்தராஜ் குறிப்பிட்டார்கள்.

அந்த நிறுவனத்திற்கு நேர் எதிரே சுமார் 300 முதல் 400 அடி தூரத்தில் சாலைக்கு மறுபகுதியில் கடல் இருந்தது. அந்த கடல் மார்க்கமாக நிறுவனத்திற்கு/ தொழிற்சாலைக்கு வேண்டிய உபகரணங்களை எடுத்து வருவதற்காக ஒரு தற்காலிக சிறிய துறைமுகம் ஏற்படுத்தியிருக்கிக்கிறார்கள் நான் காட்டுகிறேன் என அமிர்தராஜ் கூறி என்னை அழைத்துச் சென்றார். அது ஒரு வித்தியாசமான அனுபவம். கடலிலிருந்து இன்னும் 50 மீட்டர் நிலத்திற்குள் ஒரு நீர்வழிப்பாதையை அமைத்திருக்கிறார்கள். அந்த பாதையில் வரும்போது படகு சேதமடையாமல் இருக்க இருபுறமும் பனை மரங்களை நெடுக புதைத்திருக்கிறார்கள். சுமார் 20 அடி ஆழமாவது பனை மரம் மண்ணுக்குள் அழுந்தியிருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் படகு செல்லும் வழித்தடத்தை சுனாமி வந்து மூடிவிட்டது என்று அமிர்த்தராஜ் சொன்னதை நான் நம்பவேண்டியிருந்தது. பன்னாட்டு நிறுவனங்களை சுனாமிதான் மண்ணைப்போட்டு மூடவேண்டும் போல.

ஊடக நண்பர்களுடன், கடலூர்

ஊடக நண்பர்களுடன், கடலூர்

இந்த பனை மரங்களை தரையில் ஆணி அடிப்பது போல அடித்து இறக்கியதை தாம் பார்த்ததாக அமிர்த்தராஜ் கூரினார். அந்த சிறிய படகணையும் துறைமுகம் என்னுள் வேறு ஒரு காட்சியை வரையதுவங்கியது. மகாபலிபுரம் போன்ற பண்டைய இந்திய கடற்கரை துறைமுகங்கள், இப்படித்தான் இருந்திருக்குமோ? கடலில் சில பருவங்களில் உள்வாங்குவதும் பிற்பாடு தனது பழைய இருப்பிடத்திற்கு வருவதும் இயல்பு. அப்போது  பொழிமுகத்தில் பனைமரங்களை இப்படி அழுத்தி இவ்விதம் ஊன்றியிருப்பார்களோ? அலை மிகுந்த கடற்கரையில் மரங்களாலான தடுப்புகள் கப்பல்களுக்கு மிகவும் பாதுகாப்பானவைகளாக இருக்கும். உப்புகாற்று பனந்தடிகளை இறுகச்செய்யும் என்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காக தான் இவைகளா? சுனாமி ஏற்பட்டு சுமார் 12 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் இந்த மரங்கள் உறுதியுடன் இருக்கின்றன என்றால் அவைகளின் நீடித்து உழைக்கும் தன்மையை நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால் பனந்தடிகளை துரந்து உள்ளே சிமென்ட் போடப்படிருந்ததைப் பார்த்தேன்.

கடற்கரை ஓரம் காணப்படுகின்ற இந்த பனை மரங்களை மனிதர்கள் பலவிதங்களில் பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் உண்டு. கட்டுமரம் பயன்பாட்டிற்கு வருமுன்பு ஆதி காலத்தில் தாட்டி தோணி போன்றவைகள் புழக்கத்தில் இருந்திருக்கலாம். எனது சிறு பிராயத்தில் பனையோலை பெட்டியில் தான் மீன்கார அம்மா மீன் கொண்டு வருவார்கள். இன்றும் பனையோலைப் பாய்கள் மற்றும் பெட்டிகள் குமரி கடற்கரையோரத்தில், மீனவர்கள் தொழில் செய்யும் ஒருசில இடங்களில் புழக்கத்தில் இருப்பதை காணலாம். பனை அனைத்து விதமான பயன்களும் அளித்து பின்பு ஒரு தேக்கநிலையை அடைந்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது. ஓலைகளில் செய்யும் கைவினைப்பொருட்கள் மிக சமீபத்திய கண்டுபிடிப்புகளே. வாழ்வோடு இணைந்த பல பயன்பாடுகள் இன்று அரிதாகிவிட்டது. இருபதாம் நூற்றாண்டு பனை மரத்தின் சகாப்தத்தில்  வீழ்ச்சியின் காலம் என்றே குறிப்பிடவேண்டும்..

சிறுவயதில் தண்ணீர் சுமக்க காக்கட்டை செய்வதையே நான் நேரில் பார்த்திருக்கிறேன். தென்னையோலையில் இருந்து பெறப்படும் ஒரு மெல்லிய நூல் போன்ற ஒன்றையெடுத்து, பிற்பாடு ஊசி கொண்டு நனைத்த ஓலைகளை நீர் புகாதவண்ணம் மடித்து தைத்து பின்னர் நீர் கொள்ளும் ஒரு கலனாக வடிவமைப்பது வழக்கம். இப்படிப்பட்ட சுமார் 20 முதல் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு கலன்களை பனை மட்டையால் இணைத்து தோளில் தொங்க விட்டபடி தண்ணீர் மொள்ளுவார்கள்.

எண்ணிமுடியாத பயன்பாடுகள் இருந்தாலும் அவைகள் காலப்போக்கில் மங்கிவருவதை நாம் இன்று நமது கண்ணெதிரே காண்கிறோம். வரலாற்றின் பக்கங்களில் நாம் வேட்கையோடு தேடினால் பனைமரங்களோடு நாம் எப்படி பின்னிப்பிணைத்திருந்தோம் எப்படி ஒட்டி உறவாடியிருக்கிறோம் என்பது கண்டிப்பாக மறைவிலிருந்து  மேலெழும். அவை நம்மை மீண்டும் ஒரு புதிய பனையுகத்திற்குள் அழைத்துச் செல்லும்.

அமிர்தராஜ் ஊடகங்களுக்கு நான் எப்படி பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டார். நான் பேசிவற்றின் சில நுண்தகவல்களை ஊடகத்தினரால் எப்படி திரித்து பொருள் கொள்ள முடியும் என்றார். அவரது கருத்து அவர் ஊடக பின்னணியில் வளர்ந்ததால் ஏற்பட்டது என நான் கூறினேன். குறிப்பாக நான் பனைமர வேட்கைப் பயணத்தை ஒரு அவதானிப்பு என்ற கோணத்திலேயே பதிவு செய்தேன். ஆனால் அமிர்த்தராஜ் என்னை பனைமரம் பாதுகாக்கும் பாதுகாவலன் என பிம்பம் ஏற்படுத்தும்படி புரிதல் கொண்டிருந்தார் போலும். நான் எளியவன் என்பதை அவர் நம்பத் தயாராக இல்லை. ஆகவே எங்களுள் கருத்து மோதல் ஏற்பட்டது. என்னை இலகுவில் இந்த பெரும் சுமையிலிருந்து  தப்பித்துவிடகூடாது என அவர் திட்டம் தீட்டுகிறாரோ என எண்ணம் கொண்டேன். ஆனால் என்னை அவர் பனை பணிக்குள் தீவிரமாக செயல்பட அழைப்புவிடுக்கிறார் என புரிந்து கொண்டேன். அவரது தீவிர மனநிலை என்னை அசைத்தது உண்மை. முந்தையநாள் திருமறை வாக்குகளும் அதையே உறுதி செய்தன.

இந்த இரண்டு நாட்களில் அமிர்த்தராஜுடைய ஒரு முக்கிய சொற்றொடரை அறிந்துகொண்டேன். “சிறுவண்டு சிக்கும், சிறுத்தை சிக்காது” எவ்வளவு தூரம் சண்டைபோட்டோமோ அந்த அளவிற்கு நெருங்கிவிட்டோம். முக்கியமான காரியங்களை என்னைவிட அதி முக்கியத்துவம் கொடுப்பதும், முக்கியமற்றவைகளை என்னிலும் எளிதாய் எடுத்துக்கொள்ளுவதும் அவருக்கு வழக்கமாயிருந்தது. அது அமிர்தராஜுக்கு ஒரு சிறப்பு தன்மையாக காணப்பட்டது. இத்துணை எண்ண வேற்றுமைகள் கொண்டவர்கள் அன்புடன் இணைவது அரிதினும் அரிது. பனைமரமே எங்களை இணைக்கும் பாலமானது என்றால் அது மிகையாகாது.

கொலைப்பசி எங்களுக்கு, அங்கிருந்து புறப்பட்டு சாப்பிட செல்லும் வழியில் மீண்டும் பனை மரங்களை பார்த்தோம்.சாலையின் இருமருங்கிலும் பனை மரங்கள் அழகாக நின்றன. வாகனத்தை  அங்கே தான் நிறுத்திவிட்டு புகைப்படங்களை எடுக்கத்துவங்கினோம். ஒருபுறம் கடற்கரை மற்றொருபுரம் மணற்பாங்கான பகுதியில் காணப்படும் பனைமரக்காடு. வரிசையாக எல்கைகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியிருந்தனர்,  மற்றும் பிற பகுதிகளிலும் அதிகமாக நட்டு பேணி வளர்க்கப்பட்டிருந்தன.

அங்கிருந்து நாங்கள் சற்று தொலைவு சென்றபோது மீண்டும் ஒரு இடத்தில் மிகவும் சாய்வாக நிற ஒரு பனை மரத்தைப் பார்த்து நான் வண்டியை நிறுத்தினேன். பனை மரத்தில் ஏறவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் வளைந்து தனது தும்பிக்கையை நீட்டும் யானை போல் நின்ற அந்த மரத்தில் ஏறுவது எனக்கு உவப்பான ஒன்றாக இருந்தது. பனைக்கும் யானைக்கும் அதிக ஒப்புமை உண்டு. இரண்டுமே கரியநிறம். தந்தம் போன்ற குருத்தோலைகள் பனைமரத்திலும் உண்டு. யானை காட்டில் உயர்ந்து நிற்கும், பனை நாட்டில் உயர்ந்து நிற்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். பனை மரம் இருந்தாலும் ஆயிரம் பயன், இறந்தாலும் ஆயிரம் பயன். பனை ஓலைகளும் யனையின் காதும் ஒன்று போல் விரிந்து அசைபவை. நீண்ட ஆயுள் கொண்டவை. மனிதர்களுடன் தம்மை இணைத்துக்கொண்டவை. மனிதர்கள் இல்லாவிடினும் தமது பங்களிப்பை இப்பூவுலகிற்கு ஆற்றுபவை. மனிதனின் கரிய தோழர்கள் இருவரும். பனைமரங்களும் யானைகளும் பெரும்பாலும் ஒரே பகுதிகளில் வாழ்வதை நாம் காணலாம். உலகத்தின் எப்பகுதியினரும் பனைக்கும் யானைக்கும் உரிய கனத்தை கொடுப்பது கண்கூடு. வாழும் தெய்வங்கள் அருளும் கொடையாளர்கள். செல்வம் நிறைந்த யானையை வாடவிடுவதும் செல்வம் கொடுக்கும் பனைமரத்தை அழித்தொழிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

யானை என்னை துதிக்கையில் சுமப்பது போன்ற ஒரு எண்ணம் என்னுள் நிறைந்திருந்தது. பற்றுமிடம் இல்லாததால் நான் விழாமல் என்னை சமன் செய்வது துதிக்கையில் பயணிப்பது போலவே இருந்தது. அப்படியனால் உயர ஏறும் பனைத் தொழிலாளி தன்னை எப்படி கற்பனை செய்வான்? அனைத்திற்கும் மேலே எழுவது கொடுக்கும் மன எழுச்சி அவனை தன்னிகரில்லாதவனாக்குகிறது. தனித்தன்மை கொண்டவனாக உயர தன்னை நிலைப்படுத்திக்கொள்ளுகிறான். அம்மரத்திற்கு பணி செய்வதை தன் வாழ்நாள் கடமையாக கொள்ளுகிறான். எப்படி பாகன் தன் யானையை விட்டு நீங்குவதில்லையோ அப்படியே, விடுமுறை இன்றி பனைக்காக தன் வாழ்நாளை அற்பணிக்கின்றான்.

நாங்கள் அங்கிருந்து புறப்படுகையில் எனது முகத்தை மறைக்கும் துண்டு விழுந்துவிட்டதை உணர்ந்து தேடிப்போனோம். கிடைத்தது. அங்கிருந்து போர்டோனோவா எனும் பரங்கிப்பேட்டை வந்து சேர்ந்தோம். மணி நான்கை நெருங்கிவிட்டிருந்தது. புரோட்டாவிற்கு பெயர்போன ஒரு சிறிய கடையில் அமிர்தராஜ் வண்டியை நிறுத்தினார். சும்மா சொல்லக்கூடாது, அமிர்தராஜ் சுவைகளை அறிந்தவர். மிகவும் சுவையான புரோட்டா சால்னா அங்கே சாப்பிட்டோம். நான் பல மாதங்களுக்குப் பின்பு முதன் முறையாக புரோட்டா சாப்பிடுகிறேன். எனக்கு அது அமிர்தமாக இருந்தது. அவர் என்னை பாஸ்டர் என்றும் கூப்பிடுவார் அதை சுருக்கி பாஸ் என்றும் கூப்பிடுவார். சாப்பிட்டு முடித்ததும், பாஸ் கொஞ்சம் இருங்க வந்திர்ரேன் என்றுவிட்டு போனார். நான் வினோலியாவிற்கு போன் செய்தேன். இன்று பட்டுக்கோட்டை அருகிலிருக்கும் அவர்கள் தந்தையின் வீட்டிற்கு செல்லுவேன் என்று கூறினேன். ஆனால் எனக்குத் தெரியாது அவர்கள் வீட்டிற்கு அன்றையதினம் எங்களால் சென்று சேர முடியாது என்று. அமிர்தராஜ் தனது கரத்தில் எதையோ வாங்கிக்கொண்டு வெற்றிவீரன் போல சிரித்துக்கொண்டு வந்தார். அது பரங்கிப்பேட்டை பாத்திமுத்து கடை அல்வா. சற்று நேரம் அங்கிருந்து சுவைத்துவிட்டு, பிற்பாடு எங்கள் பயணத்தை துவக்கினோம்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (56)”

 1. Logamadevi Annadurai Says:

  pastor, happy to follow you continously for week in this palm journey. the comparison between elephant and palm tree is amazing. yes they share many common features as magnificent creatures and most neglected creatures. we make that huge animal to beg in streets and we just ignored this great tree and prevented its survival . what we do to both these organisms is highly unethcal in terms of ecology. anthropology and biolgy.
  the chemistry between you and amirtharaj sir is good to know and yes its bridged by palm tree with no doubt.
  takecare sir
  you are blessed with wonderful ,pure friends in your inner orbit.
  with regards
  logamadevi

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: