பனைமரச்சாலை (57)


 

நாங்கள் பறங்கிப்பேட்டையிலிருந்து புறப்படும்பொழுது அங்கே ஒரு வாலிபன் வந்து எனது பைக்கின் பழமையைக் குறித்து விசாரித்தான். எனது பைக், எனது கரத்தில் வந்து சேர்ந்தது ஒரு பெரிய கதை. எம் எஸ் எல் எனும் பதிவு 1964ஐ  சார்ந்தது  என்கிறார்கள். 8537 என்பது எண். என்னிடத்தில் திருமணம் ஆகும் வரை இரு சக்கர வாகனம் கிடையாது. நான் கல்லூரி படிக்கும் போது நடந்தோ அல்லது சைக்கிளிலோ தான் செல்லுவேன். எனக்கு பைக் ஓட்டக் கற்றுக்கொடுத்தது எனது நெருங்கிய தோழன் வின்ஸ்டன். அவனுடைய யமஹா ஆர் எக்ஸ் 100ஐ என்னிடம் சில காலங்கள் வைத்திருக்கும்படி கொடுத்துவிட்டு அவன் நியூசிலாந்டு சென்றுவிட்டான்.

திருமணத்திற்குப் பிறகு நாங்கள் புதிய வண்டியை வாங்கவேண்டும் என நினைத்தோம். அப்பொழுது எனக்கு வெறும் எழு ஆயிரம் மட்டுமே சம்பளம். நான் அந்த பணத்தை வைத்துக்கொண்டு அன்றாடம் நிகழ்வை ஓட்டுவதே மிகவும் சிரமமாக இருந்தது. இந்த வேளையில் ஜாஸ்மின் எனது கருவை சுமக்கத் துவங்கியிருந்தாள். ஆகவே குழந்தையோடு அவள் வருகையில் ஒரு வாகனம் வேண்டும் என நினைத்தேன். அப்படித்தான் பழைய ஒரு புல்லெட்டை தேட ஆரம்பித்தேன். 1966க்கு முன்பு வெளிவந்த மாடலை தேடினோம். அனைத்தும் ரூ90,000/- விலையில் இருந்தன. 1958ஆம் ஆண்டு வண்டி சுமார் ரூ1,50,000 வரை விலை கூறப்பட்டது. 1955ஆம்ம அண்டு வண்டி ஒன்று ரூ4,50,000/- எனக் கேட்டபோது வண்டி வாங்கும் எனது எண்ணம் முடிவுக்கு வந்துவிட்டதோ என எண்ணினேன்.

எனது மாமா மகன் பாலு அவர்களின் மூத்த மகன் மெல்வின் வண்டிகளை தெரிந்தெடுப்பதில் நிபுணன். அவனிடம் கேட்டபோது, என்னை ஒரு இடத்திற்கு அழைத்துக்கொண்டு போனான். ரூ35,000/- இந்த வண்டியை முடித்து தந்தான். முதலில் ரூ 20 ஆயிரம் கொடுத்து வண்டியை எடுத்துச் சென்றேன். பிற்பாடு இரண்டு மாதங்களுக்குப் பின்பு எனது மோதிரங்களை அடகு வைத்து மீதி பணத்தை கொடுத்தேன்.  நான்கு வருடங்களுக்குப் பின்பு அந்த மோதிரங்களை மீட்டேன். இதற்கிடையில் எனது வாகனத்திற்காக நான் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவளித்திருந்தேன்.

எனது புல்லட், சற்றேறக்குறைய கடும் பச்சை வர்ணம் கொண்டது.   பார்ப்பதற்கு ஒரு இராணுவ புல்லட் போலவே இருக்கும். எனக்கு அதன் சொரசொரப்பான வர்ணம் பிடித்திருந்தது. ஆனால் அந்த வண்டியை நான் கொண்டுபோன வேளை எனது மாமனாருக்கு அது பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் பணம் போட்டு ஒரு புது வண்டி வாங்கியிருக்கலாமே. எப்போது உடைந்து விழும் என்று இருக்கும் ஒரு துருப்பிடித்த வண்டிக்கு இவ்வளவு செலவு செய்தீர்களா எனக் கேட்டார்கள். ஜாஸ்மினுக்கு கொஞ்சம் நாட்களாகவே இது ஒரு மனக்குறையாக இருந்தது. இந்த வண்டியில் நான் ஏறமாட்டேன் என உறுதியாக கூறிவிட்டாள். ‘எனக்க தம்பியளுக்க வண்டியப்பாருங்க” என்றாள். அந்த வண்டி புத்தம்புதிதாக அழகாக தான் இருந்தது. ஆனால் எனக்கு நான் வாங்கிய வண்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதினேன். ஆகவே அவள் கூறியவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் நான் நினைத்தபடி வண்டியை விற்று வண்டியை வாங்குமளவு பொருளோ, நேரமோ உடையவன் கிடையாது.

ஒரு சில மாதங்களுக்குப் பின்பே நான் எனது வாகனத்தை மும்பைக்கு கொண்டு வந்தேன். நான் அப்பொழுது மீராரோடு எனும் பகுதியில் இருந்தேன். எனது புல்லட் அப்பொழுது லாரியில் ஏற்றி விடப்பட்டிருந்தது. நான் போய் அதை பன்வேலிலிருந்து எடுத்தேன். எனது மூத்த அண்ணன் என்னோடு அன்று இருந்தார்கள், பன்வேலிலிருந்து நான் அந்த வண்டியை எடுத்து முதல் வளைவில் திருப்பும்போது எதிரே நான்கு சக்கர வாகனம் ஒன்று சீறிப்பாய்ந்து வந்தது. நான் வேகமாக பிரேக் பிடிக்க வண்டி மிக அபாயகரமாக அலம்பியது. அன்று அதன் கட்டுப்பாட்டு சூட்சுமத்தை அறிந்தேன். ஒருபோதும் நான் நிதானம் இழக்கும்படி இந்த வண்டியை ஓட்டியதில்லை. இந்த வண்டியிலிருந்து நான் விழுந்ததும் இல்லை.

வேறு வழியில்லாமல் ஜாஸ்மின் என்னோடு வாகனத்தில் வரத்துவங்கினாள். பல நேரங்களில் வழியில் நின்றுவிடும். பெட்ரோல் லீக் ஆகிவிடும். பல பிரச்சனைகள் அடிக்கடி வந்துகொண்டிருந்தன. வீட்டில் பிரச்சனை என ஒன்று வந்தால் அது புல்லட்டிற்காக என எண்ணுமளவு அவளுக்கு அந்த வண்டிமேல் ஒரு வெறுப்பு இருந்தது. சில நேரங்களில் அவளது கோபம் எல்லை மீறி போய்விடும். அப்போது எல்லாம் கோபத்தை எனது ஹெல்மெட் மீது தான் காட்டுவாள். “இந்த பாறைய அடிச்சு ஒடச்சிருவேன், வேறே எங்கியாவது கொண்டு வைங்க”. வெளியே எங்கு சென்றாலும், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருவர் எனது வண்டியை உற்று பார்ப்பது வழக்கம். ஜாஸ்மின் கெஞ்ச ஆரம்பித்தாள், இந்த வண்டியில் போவதற்கு மிகவும் அவமானமாக இருக்கிறது என்று. எப்படியோ சமாளித்தேன். அப்படியே ஒற்றை இருக்கையை மாற்றி இரட்டை இருக்கையாக மாற்றினேன். வண்டிக்கு இன்னும் ஒரு பழைமையான தோற்றம் கிடைத்தது.

குடும்ப வாகனம், புகைப்படம் ஜாஸ்மின்

குடும்ப வாகனம், புகைப்படம் ஜாஸ்மின்

முதலில் எனது பைக்கை ஏற்றுக்கொண்டவர்கள் திருச்சபையில் உள்ள சிறுவர்கள் தாம். என்னை புல்லட் பாஸ்டர் என செல்லமாக அழைக்க ஆரம்பித்தார்கள். திருச்சபையின் எந்த குறு நாடகங்களிலும் சிறுவர்களில் எவர் பாஸ்டர் வேடம் இட்டாலும், அவரின் வருகை புல்லட்டிலேயே இருக்கும். அதைக் கொண்டே திருச்சபையினர் பாஸ்டர் வருகிறார் என அறிந்துகொள்ளுவார்கள். அந்த அளவுக்கு என்னையும் புல்லட்டையும் சிறுவர்கள் ஒன்றாக இணைத்தே பார்த்தனர். சில வேளைகளில் பைக் நின்றுவிடுவதையும் பைக்கோடு நான் மாரடிப்பதையும் கூட நடித்துக்காட்டுவார்கள். மிக சமீபத்தில் கூட  முகநூலில் வாலிபனான ஒரு அன்றைய சிறுவன் எனது பைக் அருகில் அவன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தான். அவர்களால் மறக்கமுடியாத பாஸ்டர் நான்

பலர் என்னிடம் வந்து இந்த வண்டியை விற்கிறீற்களா எனக் கேட்கும்போது, இதில் அப்படி எனா இருக்கிறது? “குடுத்து தொலைக்கப்பிடாதா” என அவர் கேட்பாள். ஆனால் நான் காத்திருந்தேன். அவள் இந்த வண்டியை தனதாக ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் என நம்பிக்கையோடிருந்தேன். ஜாஸ்மினை மனம் மாறச்செய்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் உண்டு. ஒன்று நாங்கள் மீரா ரோடில் இருக்கும்போது ஒருநாள் அங்குள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு ஒரு நிகழ்ச்சி ஒழுங்குசெய்யும்படி நாங்கள் சென்றோம். நாங்கள் சென்று வாகனத்தை நிறுத்திய இடத்தில் இன்னும் 5 புத்தம் புதிய ராயல் என்ஃபீல்ட் வண்டிகள் நின்றுகொண்டிருந்தன. 20 வயதின் துவக்கம் அல்லது இன்னும் வயது குறைந்த வாலிபர்கள் தங்கள் தோழிகளோடு அமர்ந்திருந்தனர். எனது வண்டியை நான் நிறுத்தியதும் ஒவ்வொருவராக தங்கள் இடத்திலிருந்து எழுந்தனர். தங்களுக்குள் ஏதோ சொல்லியபடி என்னை சுற்றி வளைத்தனர். ஜாஸ்மின் பயந்துவிட்டாள். நான் ஸ்டான்ட் போடுகின்ற நேரம் ஒருவன் வந்து, அங்கிள் இது எந்த மாடல்? எனக் கேட்டான். பொதுவாக பேச்சு அப்படித்தான் ஆரம்பிக்கும்.

பனை மக்கள்

பனை மக்கள்

ஜாஸ்மின் கண்கள் விரிய நின்றிருந்தாள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேள்விகள். எங்கே வாங்கினீர்கள், எவ்வளவு குடுத்தீர்கள், உங்கள் மெக்கானிக் யார், எவ்வளவு மைலேஜ் போன்ற வழக்கமான கேள்விகள். ஒருவன் கேட்டான். விற்கிறீர்களா என்று. சிரித்துக்கொண்டே இல்லை என்றேன். ஒருவன் தனது புத்தம் புதிய வாகனத்தை காட்டி, இதை எடுத்துக்கொள்ளுங்கள் நான் உங்கள் வாகனத்தை எடுத்துக்கொள்ளுகிறேன் என்றான். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வாகனத்தை காட்ட நான் சிரித்துக்கொண்டே நழுவினேன். ஜாஸ்மின் அயர்ந்துபோனாள், இது எப்படி “ஆளாளுக்கு அழகான வண்டியை வெச்சிண்டு இந்த சொரி பிடிச்ச வண்டிக்கு இவனுவ ஏன் இப்படி பறக்கினும்? அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக சொறிபிடித்த எனது வண்டி மேல் அவளுக்கு கொஞ்சம் அன்பு வந்தது.

குழந்தைகளோடு - புகைப்படம் ஜாஸ்மின்

குழந்தைகளோடு – புகைப்படம் ஜாஸ்மின்

மீராரோடில் இருக்கும்போது ஆலிம் எனும் ஒரு மெக்கானிக் கிடைத்தார். வண்டி நின்றுவிட்டது என்றால் எனக்கு எதுவும் செய்யத்தெரியாது. அவரையே அழைப்பேன். வந்து பார்த்துவிட்டு வெறுமனே ஸ்டார்ட் செய்வார். வண்டி எந்த பிரச்சனையும் இன்றி ஸ்டார்ட் ஆகிவிடும். அஹமதாபாத் சென்ற போது அங்கேயும் வண்டி பல சிறு சிறு பிரச்சனைகளை சந்தித்தது. அங்கும் ஒரு சிறந்த மெக்கானிக் கிடைத்தார். அவர் பெயர் சயீத் பாய். வீட்டிற்கும் வந்து எனக்கு வண்டியை சரி செய்து கொடுத்திருக்கிறார். எனது திருச்சபையைச் சார்ந்த ஒருவரின் வண்டி பல வருடங்களாக அவருடைய காரேஜில் சும்மாவே கிடந்தது.

சபர்மதி ஆற்றைக் கடக்கும் பாலத்தின் துவக்கத்தில் நாங்கள் அவர்களை முந்தியிருப்போம் என நினைக்கிறேன். அல்லது அவர்கள் தங்கள் வண்டியை எங்கேனும் ஓரம் கட்டினார்களா என தெரியவில்லை. திடீரென எங்களை இரண்டு வண்டிகளும் சூழ்ந்து கொண்டன. எனக்கு வலதுபுறத்தில் வந்த பெண் ஹ்லோ சார், எம் ஏஸ் எல் எந்த ஊர் பதிவு எனக் சத்தமாக கேட்டாள். நானும் சத்தமாக மெட்றாஸ் என்றேன். எந்த வருடம் பதிவுசெய்யப்பட்டது என்றாள். நான் 1964 என்றேன். என்னைத்தாண்டி இடதுபுரம் வந்துகொண்டிருந்த அவளின் தோழியிடம் எதோ கூறினாள். அவர்கள் வாகனம் எங்களுக்குப் பின் சென்றுவிட்டது. மீண்டும்  எங்களை அவள் நெருங்கிவந்து சார் கொஞ்சம் வண்டியை ஒதுக்கி நிறுத்துவீர்களா என்றாள். ஜாஸ்மின் புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க, நான் வண்டியை நிறுத்தினேன். மணி கிட்டத்தட்ட 10 இருக்கும்.

 

அவள் பெயர் அஞ்சலி, கேரளாவைச் சார்ந்தவள் என்றும் தன்னை அறிமுகப்படுத்தி தனது ஸ்னேகிதிகளையும் அறிமுகப்படுத்தினாள். பெண்களாக சேர்ந்து இரு சக்கர வாகனம் ஓட்டும் ‘ரைடர்னி” எனு குழுவிற்கு தலைவியாக இருப்பதாக கூறிவிட்டு, புல்லட் மேல் தனக்கிருக்கும் அளவுகடந்த பிரியத்தையும், தன்னுடைய உயரம் அதற்கு தடையாக இருப்பதால் தான் அதை அவள் புல்லெட் வாங்கவில்லை என்றும் குறிப்பிட்டாள். எங்கள் வாகனத்தின் அருகில் நிறு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என அவள் கேட்டபொழுது ஜாஸ்மினுக்கு தான் காண்பது கனவா இல்லை நனவா என்று புரியவில்லை. எனக்கும்தான்.

பிற்பாடு அவள் சொன்னாள், இயந்திரங்கள் கூட மனிதர்களை இணைக்கமுடியும் என்பதற்கு இதுவே சான்று என. பிரியும் போது எங்கள் வீட்டிற்கு மிக அருகில் தான் அவர்கள் வசிப்பதாகவும் வந்துவிட்டு செல்லுங்கள் என்றாள். எனது நீண்ட பயணத்திற்கு அவளும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்கவியலாது.

ஜாஸ்மினின் தம்பி அவனது முந்தைய இருசக்கர வாகனம் உருக்குலைந்து அடிமாட்டு விலைக்கு அதை விற்றுவிட்டான். அதன் பிறகு ஒரு புத்தம் புது கார் வாங்கினான். அதுவும் பழையதாகிவிட்டது. எனது வண்டி அன்றிலிருந்து இன்றுவரை சொறிமுத்துவாக ஜல்லிக்கட்டில் புகுந்துவிளையாடிக்கொண்டிருக்கிறது.

எனது பனைமர வேட்கைப் பயணம் முடிந்த பிற்பாடு நான் அந்த வண்டியை என்னோடு எடுத்து வரவில்லை. சற்று நாட்கள் வண்டியில்லாமல் தான் இருந்து பார்போமே எனும் எண்ணம். ஆனால் அவள் என்னிடம் நூறுமுறைக்கு மேல் சொல்லியிருப்பாள் “அந்த வண்டிய கொண்டு வந்திருக்கப்பிடாதா”. வாழ்வில் நான் உள்ளூர மகிழும் தருணங்கள் அது. காது குளிர கேட்கவேண்டும் போலிருக்கிறது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (57)”

  1. Logamadevi Annadurai Says:

    இன்றைய பைக் பதிவிலும் பனைமரங்கள் பிண்னணியில் இருக்கின்றன. அருமையான பதிவு
    மகன்களோடு பைக்கில் இருக்கும் அந்த பனையும் குதிரை ஒன்றுமான புகைப்படம் மிக அழகு

  2. pastorgodson Says:

    Thanks

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: