பனைமரச்சாலை (58)


மிதக்கும் பனை

அமிர்தராஜ் இதற்கிடையில் போகும் வழியை தெரிவுசெய்திருந்தார். தில்லை வழியாக பிச்சாவரம் போகவேண்டுமென. ஒரு முக்கிய நபரை உங்களுக்கு அறிமுகப்படுத்தபோகிறேன் என்றார். பிச்சாவரம் நான் கேள்விப்பட்டிருந்தாலும் அங்கே செல்லுவது இதுவே முதன் முறை. பிச்சாவரம் செல்லும் பகுதிகளில் அனேக பனைமரங்கள் இருந்தாலும் பிச்சாவரம் அலையாத்தி காடுகளால் நிறைந்திருந்தது. நாங்கள்  வாகனம் நிறுத்துமிடத்தில் சென்றபோது நீதிமணி அவர் நிற்கும் பகுதிக்கு நாங்கள் செல்லும்படி தொலைபெசியில் அழைப்பு விடுத்தார் 100 மீட்டர் தொலைவு தான் அது.

நான் அலையாத்திக் காடுகளை பார்த்தபடி சென்றேன். அலையாத்திக்காடுகளை நான் மணக்குடியில் தான் முதன்முதலாக பார்த்தது. பிற்பாடு, நான் மும்பை செல்லும்போதும் அவைகளை வாஷி மான்குர்ட் பகுதிகளுக்கிடையிலும், வசாய்  நாலசபோரா பகுகிகளிலும் இரயிலில் கடந்து செல்லும்போது பர்த்திருக்கிறேன். இறால் மற்றும் மீன்கள் குஞ்சுபொரிக்க ஏற்ற இடம் என சொல்லப்படுவதுண்டு. பனை மரங்களை கூட இப்படியும் வளர்க்கலாமே என்னும் எண்ணம் என்னுள் கடந்து சென்றது. நான் சிறுவனாக இருக்கும்போது எனது அப்பா ஜேம்ஸ் டவுண் என்கிற ஊரில் போதகராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அதன் அருகே மேட்டுக்குடியிருப்பு என ஒரு ஊர். அங்கே ஒரு குளம் இருந்தது. குமரி மாவட்ட மேற்குப் பகுதியில் உள்ள குளங்கள் யாவும் வெட்டி குழி எடுத்ததுபோல இருக்கும், ஆனால் இங்கோ குளம் என்பது ஒரு அணை போல. குளத்தைச் சுற்றி மூன்று பகுதிகள் சற்று மேடாகவும் ஒரு பகுதி நீர் வரத்துக்கான ஆதாரமாகவும் இருக்கும். தண்ணீர் ஒரு கரையில் குறைவாகவும் மற்றொரு பகுதியில் ஆழமாகவும் இருக்கும்.

ஆழம் குறைவான பகுதியில் பனைமரங்கள் நிற்பதை பார்த்திருக்கிறேன். மழை வரும் நேரங்களில் தான் அந்த பனைமரங்களின் அடிப்பகுதி தண்ணீரில் முங்கும். பிற்பாடு ஒருமுறை நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பயணிக்கும்போது குளத்தின் நடுவில் பனை மரங்கள் நிற்பதை கண்டிருக்கிறேன். மிகச் சமீபத்தில் தான் குமரி மாவட்டத்தில் உள்ள மாம்பழத்தாறு குறித்து கேள்விப்பட்டு அங்கே பனை மரங்கள் இருப்பதைக் கணச்சென்றேன். எனது மாமா மகன் ஜானி எனக்கு சில புகைப்படங்களை அனுப்பியிருந்தார். பனைமரங்கள் கணுக்கால் முதல் இடுப்புவரை என சில பகுதிகளிலும் சில பகுதிகளில் தோள் கழுத்து ஏன் மூக்கு வரைக்கும் தண்ணீருக்குள் அமிழ்ந்திருந்தது. எனது வாழ்வில் நான் முதன் முதலில் கண்ட அதிசயம் அது. தண்ணிருக்குள் தவமிருக்கும் முனியாக பனைமரம் காட்சியளித்தது.

நீருக்குள் தவமிருக்கும் பனைமரங்கள், மாம்பழத்தாறு அணை, குமரி மாவட்டம் - புகைப்படம் ஜானி

நீருக்குள் தவமிருக்கும் பனைமரங்கள், மாம்பழத்தாறு அணை, குமரி மாவட்டம் – புகைப்படம் ஜானி

பனை மரங்கள் நின்ற பகுதிகளிலேயே மாம்பழத்தாறு அணையை கட்டியிருக்கிறார்கள். ஆகவே நீர் நிறைந்த போதும் வேர்கள் நீரால் பாதிக்கபடாத வகையில் உயிர்ப்புடன் நிற்பது ஆச்சரியம். எவ்வகை நிலமானாலும் நீருக்குள்ளும் பனை மரங்கள் வளருவது பெருத்த ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாகவே இருந்தது. அப்படியானால் இன்றும் நீர்நிலைகளில் நம்மால் பனை மரங்களை நட்டு காப்பாற்ற இயலுமா? அவ்விதமாக யாரேனும் ஆய்வோ முயற்சிகளோ முன்னெடுத்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் ஒரு முக்கிய வாய்ப்பாக அது நமக்கு முன்பாக நிற்கிறது. பாங்காக்கில் உள்ள மிதக்கும் சந்தை போல மிதக்கும் பனை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக விளங்கவும் வாய்ப்புள்ளது. பிச்சாவரத்தில் அப்படி பனை மரங்களை நாம் நட்டு பேணுவதற்குரிய வாய்ப்புள்ள இடமாகவே கருதுகிறேன். தொல் பழங்கால நீரும் நிலமும் ஒன்றுபடும் இடத்தில்தானே பனை மரங்கள் இருந்திருக்கின்றன. பனையும் படகும்  இணையும் ஒரு கற்பனை மிக உவப்பானதாகவே இருக்கின்றது.

நீதி மணி அவர்களை பார்த்தபோது மிக மென்மையான ஒரு மனிதராக தெரிந்தார். சினேகமான  புன்னகையுடன் எங்களை அங்கிருந்த ஒரு உனவகத்திற்கு அழைத்துச் சென்றார். சுமார் 50 பேர் வரை அமரக்கூடிய அந்த உணவகத்தில் ஒருவரும் இல்லை. நாங்கள் மட்டும் அமர்ந்து சர்பத் ஆர்டர் செய்தோம். நீதிமணி தன்னை குறித்து பேசுகையில் மேக்னட் என்ற சுற்றுசூழல் பாதுகாப்பு பேராயத்தினை பதிவு செய்து அதன் தலைவராக இருக்கிறேன் என்றார்.

அவரது பனைத் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் குறித்த செய்திகளை ஆர்வமுடன் கேட்டேன். இடையறாது தொடர்ந்த் பல்வேறு பணிகளின் மத்தியிலும் பனை மரம் காக்கப்படவேண்டும் என சிரத்தை எடுத்துக்கொள்ளுபவர். சுதேசி அமைப்புகளுடன் சேந்து பெண்களுகு பனை வெல்லம் காய்ச்சும் பயிற்சியும் அளித்திருக்கிறார். அவரது பணிகளில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளாக பனை மரத்தைக் காப்பதை குறித்து பகிர்ந்து கொண்டார். பெரும்பாலும் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்களை வெட்டுகிறவர்களை தடுப்பது, செங்கள் சூளைகளுக்கு பனை மரத்திற்கு மாற்றாக சீமை கருவேலம் போன்றவற்றை அளிப்பது பனை மரத்திக் காக்கவேன்டும் என பிரச்சாரம் மாத்திரம் அல்ல பனக்கொட்டைகளை குள்க்கரைகளில் ஊன்றியும் பாதுகாத்து வருகிறவர் என தனது முயற்சிகளை உற்சாகமாக கூறிக்கொன்டு வந்தார்.  இயற்கை பாதுகாப்பு சார்ந்த அனைத்து விழிப்புணர்வு நிகழ்சிகளிலும் பனைமரங்கள் பாதுகாப்பு குறித்து பேசுபவர் எப்போதும் பனை மரங்களை யானைபோன்றது எனக் குறிப்பிடுவாரம். நானும் அதே புரிதல் கொண்டிருப்பது எங்களை இன்னும் ஒன்றுபட தூண்டியது.

நீதிமணி மற்றும் அமிர்த்தராஜுடன், பிச்சாவரம்

நீதிமணி மற்றும் அமிர்த்தராஜுடன், பிச்சாவரம்

நீதி மணி போன்று களத்தில் இருப்பவர்களை காண்பதும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுவதும் பனை மரம் சார்ந்த போராட்டத்திற்கு மிகவும் உதவும். என்னைப்பொருத்தவரையில் அனைவரும் இணைந்து போராடாதவரைக்கும் பனைமரத்திற்கு விமோசனம் இல்லை. பனைமரங்கள் ஒரு சங்கிலிபோல் தமிழகத்தை சுற்றி வளைத்து இருக்கிறது. அது நமது பாதுகாப்பு வளையம். அதை அறிந்து கொண்டால் நமது மண் வளம்பெறும்.

பிச்சாவரத்திலிருந்து 15 நிமிடங்களுக்குள் கிளம்பினோம். நேராக சிதம்பரம் சென்றோம் . வினோலியாவின் தந்தையின் வீட்டில் அன்று தங்குவதாக உத்தேசம். ஆனால் நாங்கள் வழியை சரியாக புரிந்துகொள்ளவில்லை. சிதம்பரம் பைபாசின் அருகில் நின்றுகொண்டு ஒரு சில பனை மரங்களை வேடிக்கை பார்த்தோம். இருட்டும் வெளையில் நான் முதலில் வண்டியை எடுத்தேன் ஒரு 200 மீட்டருக்குள் சாலை இரண்டாக பிரிவதைப் பார்த்து நின்றுவிட்டேன். அமிர்தராஜ் வரட்டும் என்று காத்திருந்தேன். பத்து நிமிடங்க+ள் பதினைந்து நிமிடங்கள் என நேரம் கடந்க்டுகொண்டே சென்றது. வேகமாக இருட்டியும்விட்டது. சுமார் இருபது நிமிடங்களுக்குப் பின்பு அவரைத்தேடி நாங்கள் நின்ற இடத்திற்குப் போனபோது அவரைக் காணவில்லை. அவரை அலைபேசியில் அழைத்தேன். தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என சத்தம் வந்தது. வண்டியை ஒதுக்கி நிருத்க்டிவிட்டு மொபைலின் திரையையே பார்த்துக்கொண்டிருந்தேன். சுமர் 15 நிமிடங்களுக்குப் பிறகு அழைப்பு வந்தது.

பாஸ்டர் எங்கே இருக்கிறீங்க என்றார். நான் இருக்கும் இடத்தை சொன்னவுடன், நேராக கொள்ளிடம் பாலத்துக்கு வாங்க என்றார். வழியையும் தெளிவாக குறிப்பிட்டார். நான் முத்தி சென்றுவிட்டேன் என கருதி அவர் வேகமாக என்னை தொடர்ந்து பிடிக்கச் சென்றிருக்கிறார். ஆனால் என்னைக் காணவில்லை என்றவுடன் நின்று அழைத்திருக்கிறார். ஒரு சில விநாடிகளில் நாங்கள் ஒருவரை ஒருவர் தவற விட்டிருக்கிறோம். நான் வேகமாக சென்று அவர் கூரிய பாலத்தின் அருகில் இருந்த செக்போஸ்டின் அருகில் எனக்கக காத்திருந்தார். நான் செல்வதை தூரத்திலிருந்து பார்த்தவர், பாஸ்டர் என என்னை அழைத்து வன்டியை நிறுத்தினார். இருவருக்கும் பெரும் மகிழ்வின் கணமாக அது இருந்தது. நேடுநாள் கழித்து ஒருவரை ஒருவர் பார்ப்பது போல மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டோம்.

அங்கிருந்து நாங்கள் திருக்கடையூர் எனும் வழிபாட்டு ஸ்தலம் இருக்கும் ஊருக்குப் போனோம். அங்கே வண்டியை நிறுத்திவிட்டு தண்ணீர் வங்கி குடித்தோம். எதோ தேவைக்காக நான் பணத்தை எடுக்க முற்படுகையில் தான் கவனித்தேன். பர்ஸ் எங்கோ விழுந்துவிட்டது. இனி தேடுவது பலன் தராது எனும் உண்மை ஒருபுறம் இருக்க, இருவருமே மிகவும் சோர்வடைந்திருந்தோம். அந்த வேளையில் வினோலியா எங்களை அழைத்தார்கள். எப்போது பட்டுக்கோட்டை சென்றடைவீர்கள் என. அமிர்த்தராஜ் நெஞை பிடித்க்டுக்கொண்டர். பாற் இப்படியெல்லம் நென்சுக்கு குறிவைக்காதீங்க என்ரார். இன்னும் 200 கி மீ மேல் இருக்கிறது பட்டுக்கோட்டைச் செல்ல என்றார். இந்த பிரச்சனிக்கு முழுமுதல் காரணம் நானே தான். காட்டுமாவடி செல்லும் வழியில் வினோலியா வீடு இருப்பதாக அமிர்தராஜிடம் கூறியிருந்தேன். அமிர்தராஜ் காட்டுமாவடி நோக்கி என்னை அழைத்துச் சென்றார். ஆனால் பட்டுக்கோட்டையின் அருகில் தான் அவர்கள் இருக்கிறார்கள் எனும் தகவல் அமிழ்ந்துவிட்டது. ஆகவே அமிர்த்தராஜ் அழைத்து சென்ற இடம் காட்டுமாவடி தான். நான் குறிப்பிட்ட இடம் கட்டுமாவடி. ஆங்கிலத்தில் கூகிள் மேப் பார்த்து நான் இட்ட தகவல், அவைகளை சரி பார்க்காமல் குருட்டு நம்பிக்கையோடு எங்கள் பயணத்தை மேற்கொண்டதால் ஏற்பட்ட தவறு. முதலில் வினோலியாவை அழைத்து இன்று நாங்கள் அவர்கள் தகப்பனாரை சந்திக்க இயலாது என கூறி மன்னிக்க வேண்டினேன். அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எங்களை ஊக்கப்படுத்தினார்கள். அதுவே ஆறுதலாக இருந்தது.

இப்பொழுது எங்காவது நாங்கள் தங்கவேண்டும். என்னிடத்தில் பணமில்லை, யாரிடத்தில் கேட்டாலும் மறுநாள் மட்டுமே பணம் கிடைக்கும். என்ன செய்வது என எண்ணுகையில், அமிர்தராஜ், கவலைப்படதீர்கள் பாத்துக்கலாம் என்றார். அது வழிபாட்டு மைய்யமானபடியால் அங்கே அனேக விடுதிகள் இருந்தன. சிறப்பான ஒன்றை அவர் தேர்ந்தெடுத்தார். சிறந்த விடுதிகளை தெரிந்தெடுப்பதில் அவர் நிபுணர். அதற்கான அனேக குறிப்புகளை அவர் வைத்திருந்தார். உணவு  மற்றும் விடுதி சார்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய நுண் தகவல்கள் அவரிடம் அனேகம் உண்டு.

அன்று இரவு நாங்கள் தங்கிய இடம் மிகவும் ஒரு சிறந்த விடுதி. அருகிலேயே இருந்த சரவணபவனில் இரவு உணவை முடித்துக்கொண்டோம். நான் பெங்களூரில் இருக்கும் எனது பள்ளிக்கூட நண்பன் சஜீவ் நாயரை அழைத்து எனக்கு பணம் வெண்டும் எனக் கூறினேன். அவன் தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டு உடனே அனுப்புகிறேன் என்றான். அனைத்து கவலைகளையும் மறந்து தூங்க ஆரம்பித்தோம்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (58)”

 1. Logamadevi Annadurai Says:

  பாஸ்டர்
  நல்ல பதிவு. நீருக்குள் தவமிருக்கும் முனிப்பனையை அகக்கண்களால் கண்டேன்.
  எனினும் ஒரு தகவல் சொல்லவேண்டுமென் நினைக்கிறேன். பனையை நீருக்குள் வளர்த்தாலும் வளர்க்கலாம் ஆனால் அலையாத்திக்காடுகளில் அவற்றை வளர்க்க இயலாது. அலையாத்திக்காடுகளின் நீரில் மிகுந்திருக்கும் உப்பானது எல்லாதாவரங்களாலும் தாங்கிக்கொள்ள இயலாது. அலையாத்திக்காடுகளில் வளர்பவை halophytes எனப்படும் சிறப்பு வகை தாவரங்கள் அவை மிகுந்த உப்புள்ள, இது போன்ற இடங்களில் வளர்வதற்கேற்ற தகவமைப்பு கொண்டவை. அதீத உப்புள்ளதால் அவற்ரின் வேர்களால் சுவாசிக்க முடியாது, எனவே நீரினின்றும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும், சிறு சிறு துளைகள் மூச்சு விடுவதன் பொருட்டு கொண்டிருக்கும் சுவாச வேர்களைக்கொண்டிருக்கும் அவை எல்லாம்
  பனைக்கு அந்த இடத்தில் வளரத் தேவையான தகவமைப்புகள் இல்லை. ஆனால் நன்னீரில் வளருமாயிருக்கும் நீங்கள் கண்டது போல.
  நீதிமணியும் உங்களின் இன்னொரு version என்றே தோன்றுகிறது. ”கற்றாரை கற்றாரே காமுருவர்’ என்பதற்கேற்ப , பனைக்காதலர்கள் எங்கிருப்பினும் சந்தித்து கொள்கிறார்கள் அல்லவா? பனைமரச்சாலை நீண்டுகொண்டே போகையில் பனைச்சங்கிலியின் பிணைப்பும் இறுகிக்கொண்டெதான் இருக்கிறது.
  ஜெயமோகன் அவர்கள் இன்றைக்கு சொல்லியிருப்பது போல ”மழைநாளின் பேரருவி போல” உங்கள் மீது கடவுளின் அன்பு பொழிவதாக
  பயணத்திற்கான மனமார்ந்த வாழ்த்துக்களுடன்
  லோகமாதேவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: