பனைமரச்சாலை (59)


பனைமரச்சாலை (59)

கற்பின் ஊற்று

மறுநாள் காலை தெளிவுடன்  எழுந்தோம். எங்கு செல்லவேண்டும் எப்படி செல்லவேண்டும் என்பதை இரவிலேயே தீர்மானித்துவிட்டோம். மிக அருகில்தானே தரங்கம்பாடி இருந்தது, அதை முடித்துவிட்டு, பூம்புகார், திருவலம்புரம் சென்றுவிட்டு திருப்பனந்தாள் செல்லலாம் என முடிவு செய்தோம். கண்டிப்பாக பட்டுக்கோட்டை செல்ல வழியில்லை என்பதையும் உறுதி செய்துகொண்டோம். காலை 8 மணிக்குமுன் புறப்பட்டு எதிரிலுள்ள கடையிலேயே காலை உணவை முடித்துக்கொண்டு தரங்கம்பாடி நோக்கிச் சென்றோம்.

நான் ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயிலும்போது தரங்கம்பாடிக்கு வந்திருக்கிறேன். சுமார் 15 ஆண்டுகள். தரங்கம்பாடியின் நுழைவுவாயில் சிதிலமடைந்திருந்தாலும் அது அன்று என்னை வசீகரிக்கும்  பிரம்மண்ட கோட்டை வாயிலாக இருந்தது. ஆனால் இப்போதோ நாங்கள் நுழையும் தருணத்தில் அது சீர்செய்யப்பட்டு இருந்தாலும் அதன் பழைமையின் கம்பீரம் இழந்ததாகவே எனக்குத் தோன்றியது. உள்ளே, நேரடியாக நாங்கள் கோட்டை நோக்கிச் சென்றோம். அந்த கோட்டைக்கு மறுபுறம் ஒரு பனை மரம் நின்றதை பார்த்தவுடன் நான் அங்கே செல்லலாம் எனக் கூறினேன். அந்த பனை மரத்தை கோட்டையோடு இணைத்து புகைப்படம் எடுக்க முடியுமா என்று கேட்டேன் அமிர்தராஜ் முடியாது என்றார். அவரது புகைபட இலக்கணத்துக்குள் அந்த கோணம் வராது எனக் குறிப்பிட்டார். அப்போது நாங்கள் கோட்டைக்குப் பின்புறம் இருந்தோம்.

அங்கு நின்ற ஒற்றைப்பனை எனக்கு மாகாபலிபுரத்தையே நினைவுறுத்தியது. இங்கும் ஒரு துறைமுகம் மிக சமீபத்தில் இயங்கியிருக்கிறது. பனை மரங்கள் இங்கும் திரளாய் இருந்திருகின்றன என்பதன் எச்சமாக இந்த ஒற்றைப்பனைமரம் இருக்கிறது என நினைத்துக்கொண்டேன். அந்த பனைமரம் மரணிக்கும் தருவாயிலிருந்ததை அதன் ஓலைகள் சாய்ந்திருந்ததைக் வைத்துப் புரிந்துகொண்டேன். அந்த பழம்பெரும் மரத்திற்கு இறுதி அஞ்சலி செய்ய அதனை நோக்கிப் போனேன். அந்த பனை மரத்தின் கீழே ஒரு சிறு கோயில் அமைக்கப்பட்டிருந்தது. நாட்டார் வழிபாட்டு தலம். அங்கே  மரணிக்கும் பனைமரத்தின் அடியில் வேறொரு பனைமரம் வளர்ந்து வருவதைக் கண்டபோது ஏற்பட்ட பரவசம் சொல்லில் வடிக்க முடியாதது.

பனை ஓலையில் பதிக்கப்பட்ட டச்சு முத்திரை, தரங்கம்பாடி அருங்காட்சியகம்

பனை ஓலையில் பதிக்கப்பட்ட டச்சு முத்திரை, தரங்கம்பாடி அருங்காட்சியகம்

நாங்கள் அங்கிருந்து கோட்டை வாயிலுக்குச் சென்று எங்கள் பொருட்களை ஒப்படைத்தோம். பின்பு அங்கு சென்று அங்கிருந்த அருங்காட்சியகத்திர்குள் நுழைந்தோம். அனேகர் அங்கே வந்திருந்தனர். நாங்கள் உள் நுழைந்தவுடன் எங்கள் கண்ணில் பட்டது அங்குள்ள தங்க ஓலை தான். ஒரு ஒப்பந்தத்தைக் குறிக்க ஓலைகளில் எழுதி அனுப்பப்படும் செய்தி மிக முக்கியமான ஆவணமானபடியால் தங்கத்திலேயே  ஓலை போல செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. அப்படியே அங்கிருந்த வேறு ஓலைகளையும் பார்த்தோம். சுமார் 400 வருடங்களான ஓலைகள் இன்னும் நல்ல நிலையில் இருப்பதை கண்டுகொண்டோம். குறிப்பாக டச்சு முத்திரைக்கொண்ட ஒரு ஓலை மிகவும் நேர்த்தியாக சிதைவுறாமல் இருந்ததைக் கண்டபொழுது, பனைஓலைகளின் நீடித்த தன்மை குறித்த புரிதல் நம்மவர்களுக்கு மிகச்சிறப்பாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

தங்க ஓலை ஒப்பந்தம், தரங்கம்பாடி அருங்காட்சியகம்

தங்க ஓலை ஒப்பந்தம், தரங்கம்பாடி அருங்காட்சியகம்

திரும்பி வரும் வழியில் ஒரு குடும்பத்தினர் தங்களை புகைப்படம் எடுத்துத்தருமாறு வேண்டினர். அமிர்தராஜ் அவர்களுக்கு உதவினார். அங்கிருந்து புறப்பட்டு சீகன் பால்கு அவர்கள் தோற்றுவித்த திருச்சபையைக் காண வந்தோம். என்னைப்பொருத்தவரையில் இது ஒரு முக்கியமான இடம். ஆசியாவிலே முதல் அச்சுபொறியை நிற்மாணித்த சீகன்பால்கு அவர்கள் தமிழ் கற்றது ஓலைச்சுவடிகளைக் கொண்டுதான். எண்ணிறந்த சுவடிகள் இங்குள்ள கல்வி பின் புலத்தைத் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதை  சீகன்பால்க் புரிந்துகொண்டிருப்பார். அவரை அனுப்பியவர்களுக்கு இங்கிருந்து அனுப்பப்பட்ட சுவடிகள் பெரும் ஆச்சரியத்தை அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. டென்மார்க் தேசத்திற்கு அவர் அனுப்பிய ஓலைச்சுவடிகள் இன்னும் பத்திரமாக காக்கப்படுகின்றன. அதன் பழமை மாறாமல் புத்தம்புதிதாக அவைகள் காட்சியளிப்பது மனநிறைவளிக்கும் ஒன்று.

ஆலயத்தின் உள் நான் பார்த்த ஒரு விஷயம் என் சிந்தையை கவர்ந்தது. காணிக்கை போடுவதற்காக ஆலயத்தின் உள்ளே இரண்டு உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டுமே பித்தளையில் செய்யப்பட்ட குடங்கள். சற்று இஸ்லாமிய சாயலில் இருந்தன. அவைகளுக்கு மூடி இட்டு அவைகள் பூட்டப்பட்டிருந்தன. கண்டிப்பாக 200 வருடங்களுக்கு முந்தைய பானையாக தான் இருக்கும். சமீபத்தில் அதுபோன்ற பானைகள் புழக்கத்தில் இல்லை. சிறப்பு என்னவென்றால், காணிக்கை செலுத்துவதில் தற்போது உள்ள முறைகளுக்கும் பழைய முறைகளுக்கும் உள்ள வேறுபாடு அதில் தெரிந்தது. காணிக்கை பெட்டியில் பணத்தை இடுவது மன விருப்பத்தை சார்ந்தது என்றும் காணிக்கை பைகளை நீட்டுவது ஒரு வித கட்டாயத்தை ஏற்படுத்துவதுமாக இருப்பதை காண்கிறேன். ஆம் இன்று ஒரு கட்டயத்துக்குள் நம் அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம். வாராந்திர காணிக்கை சேகரிக்கும் பழக்கத்திற்கு நூறாண்டுகளே இருக்கும் என்பது அனேக திருச்சபையினருக்குத் தெரியாது.

புதிய எருசலேம் சபை, தரங்கம்பாடி

புதிய எருசலேம் சபை, தரங்கம்பாடி

சுமார் 300 வருடங்கள் நிறைவடையும் சீகன்பால்கு கட்டிய ஆலயத்தினுள் மீண்டும் சென்றேன். சீகன்பால்கு அவர்கள் ஆலயத்தின் உள்ளேயே புதைக்கப்பட்டிருந்தார்கள். ஆலயம் கட்டிமுடித்த மறுவருடம் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். 12 வருடங்களுக்குள் அவர் ஆற்றிய பணிகள் முதன்மையானவைகளாக காணப்படுகின்றன.

அங்கிருந்து பூம்புகாருக்குச் சென்றோம். பூம்புகார் மீண்டும் ஒரு துறைமுகப்பட்டினம். தரங்கம்பாடியும் பூம்புகாரும்  குளச்சல் இனையம் போன்ற இடங்கள். ஒரே கடலின் வேறு கரைகள், பாதைகள், காலங்கள், தேவைகள். தரங்கம்படிக்கு வந்த சுற்றுலா குழுவினருக்கும் பூம்புகாருக்கு வந்த குழுவினருக்கும் இடையில் பெருத்த வித்தியாசம் காணப்பட்டது. ஏழைகளின் சுற்றுலாத்தலமாக பூம்புகார் காணப்பட்டது. ஆனால் மகிழ்ச்சி கரைபுரண்டோடும் ஒரு இடமாக இருந்தது. நான் ஏற்கனவே சிலப்பதிகாரம் அருங்காட்சியகத்துக்குச் சென்றதால், மீண்டும் அங்கே செல்லாமல் கடற்கரையை ஒட்டி வாகனத்தை நிறுத்தினோம். அங்கே பனை மரங்கள் சிறு கூட்டமாக நின்றன.

சிறுவர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். எங்களைப்பார்த்தவுடன் ஓடோடி வந்து எதற்காக வந்திருக்கிறோம் என ஆச்சரியத்துடன் பார்க்கவும் பேசவும் செய்தனர். நான் என்னிடமிருந்த ஓலைகளை எடுத்து அவர்களுக்கு செயல்முறை விளக்கம் காண்பித்தேன். குறிப்பாக என்னிடமிருந்த கைபட்டைகளை சிறுவர்களுக்கு அணிவித்தேன். ஓலைகளை பயன்படுத்தும் வழக்கம் கிராமங்களில் குறைந்து வருவது நேரிடையாக காணமுடிந்தது. ஆனால் சிறுவர்கள் அதை பெற்றவுடன் பெரு மகிழ்ச்சியில் ஆடினார்கள். கிடைக்காதவர்கள் அதைக்குறித்து எந்த கவலையுமின்றி தண்ணிரில் குதித்து விளையாட துவங்கினார்கள்.

சிறுவர்களுடன், பூம்புகார்

சிறுவர்களுடன், பூம்புகார்

சிறுவர்கள் என்னை சூழ வரும்போது ஒரு இனம்புரியாத உணர்வு என்னைக் கடந்துபோவதை நான் உணருகிறேன். இயேசு ஒருமுறை கூறுவார், என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிவேன். சிறுவர்கள் அவ்விதமாக என்னிலிருந்து எதையோ எடுத்துக்கொள்ளுகிறார்கள் என்றே எண்ணுகிறேன். ஒரு வேளை அது நம்பிக்கையாக இருக்கலாம், கனவாக இருக்கலாம், பனை சார்ந்த வேட்கையாகவும் இருக்கலாம். அவர்கள் மனதிற்குள் செல்லும் இக்காட்சி ஆழப்பதிந்து பிறகெப்போதாவது வேகத்துடன் மேலெழும் என்றே நம்புகிறேன்.

ஆச்சரியத்துடன் சிறுவர்கள், பூம்புகார்

ஆச்சரியத்துடன் சிறுவர்கள், பூம்புகார்

பூம்புகர் வந்து கண்ணகி சிலையை பார்த்த பின்பு கற்பை பற்றி பேசாமல் அங்கிருந்து புறப்படுவது தகாது. கற்பு குறித்த ஜெயமோகன் அண்ணனுடைய பதில் என் நினைவுக்கு வந்தது.

“கற்பு என்ற சொல் பழங்கால நூல்களில் ‘பாலியல் ஒழுக்கம்’ என்ற பொருளிலோ ‘பெண்ணுக்கான குலக் கட்டுப்பாடு’ என்ற பொருளிலோ பயன்படுத்தப்பட்டதில்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.

கற்பு என்ற சொல் கல்வி என்பதுடன் சம்பந்தப்பட்டது. பலநூல்களில் கற்பு என்பது கல்வி என்றே சொல்லப்பட்டுள்ளது. ‘எழுதாக் கற்பு’ கொண்டது வேதம் என்று சங்கப்பாடல் சொல்லும்போது அங்கே குறிப்பிடப்படுவது கல்வியையே. ‘அமண் சமணர் கற்பழிக்க திருவுளமே’ என சம்பந்தர் பாடுவது சமணர்களின் நூல்கல்வியை வெல்வதுபற்றித்தான்

நூல்வழியும் சமூக மரபுப்படியும் கற்கப்பட்டது’ என்ற பொருளிலேயே கற்பு என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது.”

கண்ணகியின் சிலம்பை விட அவள் கரங்கள் வழி கடந்து சென்ற நூல்களே அவளுக்கு மிகப்பெரிய காப்பு என நான் நினைக்கிறேன். எளிய ஓலையில் எழுதப்பட்ட அறங்களே அவளை அரசன் முன் நிற்கச் செய்தது. சிலம்பு என்பது வணிக அடையாளத்திலிருந்து நூல்களை பயின்று எஞ்சும் கல்வி அளிக்கும் அறவுணர்வின் அடையாளமாக மாறிநிற்பதையே இளங்கோவடிகள் பதிவுசெய்வதாக நான் எண்ணுகிறேன். நம்முடைய நவீன மனத்திற்கு சிலம்பும் அதில் நிறைக்கப்பட்டிருக்கும் மாணிக்க பரல்களும் ஒரு பொருளதார கிளர்ச்சியைக் கொடுப்பதனால் கண்ணகி இன்றும் சிலம்போடு அலைந்து திரிகிறாள்.  எங்கேனும் கண்ணகி கற்பில் சிறந்தவள் எனும் கருத்தை வலியுறுத்தி அவள் கரங்களில் ஏடுகள் அளிக்கப்பட்டால் தான் நிறைந்து ஊறுகின்ற கற்பு அவள் மார்பிலிருந்து கல்வியாக புறப்பட்டு பெரு நெருப்பை தமிழகத்தில் ஏற்றும்.

ஆண்கள் கரங்களில் ஏடும் பெண்கள் கரங்களில் அணிகலனும் அளித்து (ஒளவையார் தவிர்த்து) புது யுகங்களை சிற்பிகள் படைத்துள்ளனர். இணையத்தில் தேடியபோது கர்னாடகாவின்  பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு பெண் சுவடியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் சிலையை காண நேர்ந்தது.

கல்வியில் ஈடுபட்டிருக்கும் பெண், 10ஆம் நூற்றாண்டு

கல்வியில் ஈடுபட்டிருக்கும் பெண், 10ஆம் நூற்றாண்டு

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனுந்

திண்மையுண் டாகப் பெறின்”

எனும் வள்ளுவரின் வாக்கையே யூதர்களின் ஞான நூற்களில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது.

திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளை காண்பது மிக மிக அரிது;

அவள் பவழத்தைவிடப் பெருமதிப்புள்ளவள். (நீதி 31: 10)

அங்கிருந்து புறப்படும் வழியில் மீன் பொரித்து விற்றுக்கொண்டிருந்தார்கள். என் வாழ்நாளில் அத்தனை ஈக்களை ஒரே இடத்தில் நான் பார்த்தது கிடையாது. ஈக்களாலான பெஞ்சுகள் மற்றும் தரைபரப்பு. மக்களைக் கண்டு சிறிதும் பயப்படாத ஈக்கள். ஆனால் அங்கே அனேகர் அமர்ந்து மீன்வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கணவாய் வீன் வாங்கினோம். ஈ மொய்க்கும் பண்டங்களை வாங்குவது தவறு என்பது நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட ஒன்று. அனால் பெங்களூரில் நான் இரையியல் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது அங்குள்ள சேரிபகுதிகளில் வசிப்பவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருந்தோம். வருடத்தில் ஒருமுறை எங்களோடு ஒருநாள் அவர்கள் உணவருந்த வருவதும், மற்றொருநாள் அவர்களோடு நாங்கள் உணவருந்த செல்லுவதும் வழக்கம். அங்கே செல்லும்பொது அந்த இடமே ஈ மொய்த்தபடி தான் இருக்கும். ஆனால் அவர்களின் அன்புக்கு முன்னால் அவைகள் நமக்கு பெரும் கேடு விளைவிப்பவைகள் அல்ல என்பதே என் அனுபவம். இங்கே அமர்கையில் அதுவே நினைவுக்கு வந்தது.

இரண்டு துறைமுகங்களை இன்று ஒருசேர கண்டது மிகவும் சிலிர்ப்பான அனுபவம். இரு இடங்களிலும் பனைமரங்கள் நிற்பது காலத்தின் எச்சமாக கொள்ளலாம். தரங்கம்பாடியை விட பூம்புகார் இன்னும் செழிப்பான இடமாக காணப்படுகிறது. காவேரி கலக்கும் இடமாகையால் அப்படி இருக்கலாம். முக்கிய துறைமுகங்களில் கற்றவரின் சேவைகள் தேவைப்பட்டிருக்கும் ஏனெனில் ஆவணங்கள் புழங்குமிடம். முத்திரைகள் கையாளுபவர்கள் இருக்குமிடம். ஆகையினால் இரு இடங்களுமே ஓலையால் ஆளப்பட்டவைகள் தாம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (59)”

 1. Logamadevi Annadurai Says:

  பாஸ்டர், இன்றைய பதிவில் மரணிக்கும் பனையின் அடியில் வளரத் துவங்கும் இன்னுமோர் பனை, அழிந்து கொண்டிருக்கும் பனையின் புது வாழ்விற்கான ஒரு குறியீடாகவே எடுத்துக்கொள்ளலாம்
  400 வருட பழமையான ஓலைகளும் பித்தளை உண்டியல்களுமாய் ஒரே வரலாற்றுத்தகவல்கள்!!!!
  சிறுவர்களுக்கு அளிக்க உண்மையில் நம்மிடம் வெகு சிலவே உள்ளன பாஸ்டர். எனினும் சி|றுவர்களுக்கு இயற்கை அளித்திருப்பது எண்ணற்றவை. மேலும் இதுதான் கிடப்பதைப்பற்றியும் கிடைக்காததைப்பற்றியும் எந்த கவலையும் இன்றி மகிழ்ந்திருக்கும் பருவம்
  கண்ணகியை சொன்னால் கற்பயும் சொல்லவேண்டும் தான். ஜெயமொஹன் சொன்னது மிகச்சிறந்த ஒரு கருத்து. இந்த மாத காலச்சுவடில் ஒரு கேரள பெண் நடன கலைஞர் சொன்னபடி கற்பு மரபு என்பனவெல்லாம் அவர்வர்கள் மனதிற்கு உட்பட்டது.
  ஜெ சார் சொன்னது போல ஒழுக்கம் என்பது அறமல்ல, நெறி. நெறிகள் சமுகதிற்கு சமூகம் மாறும் இயல்புடையவையே
  என் அக்கா சில வருடம் முன்பு ஒரு பெண்கள் சிறப்பிதழில் மனைவியை விட்டுவிடு வேறு பெண்ணிடம் சென்றுவந்த கணவன் கோவலனல, கேவலன் என்று எழுதி இருந்தாள்
  கோவலன் வந்து கேட்கயில் கண்ணகி சிலம்பிற்கு பதில் செருப்பைக்கழற்றுவதாக முடியும் அந்த கதை
  ஏராளமான பெண்களிடமிருந்து பலத்த வரவேற்பு பெற்றது அந்த கதை
  உங்கள் பதிவை வாசித்ததும் இதை நினைத்துக்கொண்டேன்

  அன்பிற்குமுண்டோ ஈத்தொல்லை? நாமெல்லோரும் நல்ல இம்யூன் சக்தி கொண்டவர்கள் பாஸ்டர். ஈக்களால் எல்லாம் நம்மை ஒன்றும் செய்ய முடியாதுதான்

  பிரமாண்ட கோட்டை வாயிலும், தங்க ஓலையும், பித்தளை உண்டியல்களும், கடலில் திளைக்கும் சிறுவர்களும்,கண்ணகியும் சிலம்பும், மரிக்கும் மற்றும் உயிர்க்கும் பனைகளும், மரத்தடி நாட்டார் வழிபடும் கோவிலும், துறைமுகங்களும்,கற்சிற்பமும்,ஒற்றைப்பனையுமாய் இன்றைய பதிவு ஒரு அற்புத கனவு போலவெ இருந்த்தது எனக்கு
  தொடரட்டும் உங்களின் பனைப்பணி
  மிக்க அன்புடன்
  லோகமாதேவி

  எனவே கைப்பட்டை கிடைக்காவிடினும், மற்றைய சந்தோஷங்களில் மூழ்கிவிடுகிறார்கள் அவர்கள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: