பனைமரச்சாலை (60)


 

பனைசுவையின் வேர்

நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளேயே அமிர்த்தராஜ் என்னை வேகமாக முந்தி கையால் செய்கை காட்டினார். ஒரு மிகப்பெரிய பனை மரம் இருக்கிறது அதைப் பாருங்கள் என்றார். நான் திரும்பிப் பார்த்தபோது மிக பிரம்மான்டமான ஒரு பனைமரம் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தது. அதன் தடிமனும் ஓலைகளும் மிகப்பெரியவை. பனை மரத்தை அத்தோடு ஒப்பிடுகையில் பனைமரம் அதன் குழந்தையாகவே எண்ணுமளவிற்கு மிகவும் சிறியது.

குடப்பனை, பூம்புகார் அருகில்

குடப்பனை, பூம்புகார் அருகில்

நான் முதலில் பனை மரம் என்றுதான் எண்ணினேன், பிற்பாடு புரிந்தது அது பனை அல்ல ஆனால் பனை வகையைச் சார்ந்த குடப்பனை (குடை பனை) என்று. கன்னையாகுமரி மாவட்டத்தில் குடப்பனைமூடு என்று ஒரு ஊர் உண்டு. குடப்பனையை எடுத்து தலைக்குடை செய்வார்கள். தலைக்குடை எனப்படுவது குடப்பனை ஓலையில் செய்யப்பட்ட பெரிய குடை. ஆனால் அதற்கு பிடிமான  கம்பு இருக்காது. தலையில் வைப்பதற்கு ஏற்ற ஒரு வளையம் சேர்த்து செய்யப்பட்டிருக்கும். தலையை அதற்குள் வைத்துவிட்டால் அதன் பின்பு கரங்களின் உதவி தேவைபடாது. மேலும் ஓலையில் எழுதி பாதுகாக்கப்பட்ட பல்வேறு ஆவணங்கள் குடப்பனையில் எழுதப்பட்டவைகளே. அவைகளின் வாழ்நாள் பனையோலைகளைக் காட்டிலும் இன்னும் அதிகமானது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

குடப்பனை ஓலையில் செய்யப்பட்ட சுவடி

குடப்பனை ஓலையில் செய்யப்பட்ட சுவடி

அப்பா குலசேகரம் பகுதியிலிருந்து கேரள எல்லையிலுள்ள மஞ்சாலுமூட்டை அடுத்த சிறக்கரை எனும் ஊரில் உள்ள சி ஏஸ் ஐ ஆலயத்திற்கு  மாற்றலானார்கள்.  எனக்கு பனைமரங்கள் குறித்த ஆர்வம் துவங்கிய நேரம் அது. பனைகளில் பல்வேறு வகைமைகள் இருப்பதை அறிந்திருந்தேன். ஆனால் குடப்பனை குறித்து எதுவும் அப்போது எனக்குத் தெரியாது. ஒருநாள் எங்கள் திருச்சபையின் செயலரோடு என்னை அப்பா அவரது வீட்டிற்கு அனுப்பினார்கள். நாங்கள் அவர் வீட்டை நெருங்கும்போது நான் முதன்முறையாக குடப்பனையைக் கண்டேன். பிரம்மாண்டமான  அந்த பனை பூத்திருந்தது. அப்படி பனை பூக்காது என எனக்குக் தெரியும். அப்போது அந்த பெரியவர் சொன்னார். இந்த மரம் பூத்து விட்டால் அதன் மரணம் நெருங்கிவிட்டது என அர்த்தம். உலகத்தின் மிகப்பெரிய உயிருள்ள பொக்கே இதுவென்றே குறிப்பிடுகிறார்கள். ஒரு கொத்தில் ஒருலெட்சம் பூக்களுக்கும் அதிகமாக பூக்கும் என்கிறார்கள்.   அவர் மேலும் சொன்ன ஒரு தகவல் தான் வயல் வேலை செய்கிறவர்கள் இதில் தொப்பி செய்து அணிந்துகொண்டு வேலை செய்வார்கள்.

குடப்பனை பூத்திருக்கும்போது

குடப்பனை பூத்திருக்கும்போது

எனக்கும் அப்படி ஒரு தலைக்குடை தேவைப்பட்டது. குடையை பிடித்துக்கொண்டு போவதைவிட வசதியானது அல்லவா?  ஆகவே அது குறித்து விசாரிக்க ஆரம்பித்தேன். அந்த வேளையில் ஒருவரும் அவைகளை பயன்படுத்தவில்லை. வழக்கொழிந்துவிட்டது. காணிக்குடியிருப்பில் தலைக்குடை செய்பவர்கள் இருக்கலாம் என்று சொன்னர்கள். ஒருமுறை எனது நண்பனை அழைத்துக்கொண்டு பஸ்ஸில் ஆறுகாணி சென்று இருவருமாக பஸ்ஸில் குடப்பனை ஓலையை எடுத்துக்கொண்டு வந்தோம். ஆனால் எங்களால் தலைக்குடை செய்யும் காணியை இறுதிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பனைமரம் சார்ந்த எனது விருப்பம் சிறுவயது தொடங்கியே இருந்திருக்கிறது. ஆனால் அது பல்வேறு பனை வகை தாவரங்களைக் நான் கண்டு அவைகளில் இருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தின் வாயிலாக வந்து சேர்ந்த இடமாகவே கருதுகிறேன். மார்த்தாண்டத்தில் நாங்கள் இருக்கும்போது அந்த சிறு வயதிலேயே மூன்றுவிதமான பனை மரங்களை நான் கண்டிருக்கிறேன். அவைகளோடு எனக்கு நேரடி உறவு உண்டு. அக்கானி தருகின்ற பனைமரம். தேங்காய் தருகின்ற தென்னைமரம் இரண்டும் வீட்டின் முன்னாலேயே இருந்தன. பனைமரச்சலையில்  பனை குடும்பத்தை சார்ந்த வேறு பல இனங்களை நான் நினைவில் கொள்ளுவது சரியானது என்றே நினைக்கிறேன்.

தென்னை மரங்களின் அருகில், மாலத்தீவு

தென்னை மரங்களின் அருகில், மாலத்தீவு

தென்னை மரம் மிகவும் விசேஷித்தது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தேங்காய் பறிக்கிறவர் வருவார். எங்கள் வீட்டிலுள்ள 4 வயது முதல் 14 வயது வரையுள்ள 7 பேரையும் அதிகாலமே அப்பா அழைத்துக்கொண்டு செல்லுவார். காலை எட்டுமணிக்குள் அனைத்து தேங்காய்களையும் ஓலைகளையும் சர்ச் காம்பவுண்டிலிருந்து வீட்டிற்கு கொண்டு வந்துவிடுவோம். அதன் பின்னர் தேங்கா வெட்டுகிற தாத்தாவிடம் ஓடிப்போய் “எளநீ தாங்க” என கேட்போம். வியர்த்து வழியும் உடம்புடன் இருக்கும் அவர் எங்களிடம் பேரிய தேங்காயாக பார்த்து எடுத்து வரச்சொல்லுவார். அது அவர் எங்களுக்காக வெட்டி போட்டிருக்கின்ற ‘கருக்கு”. வெகமாக தனது பளபளப்பான அறிவாளால் தேங்காய்களை சீவி தருவார். உடலில் வழியும் படி அந்த புது எளநீ குடிக்கையில் நாக்கில்  சுர்ரென்று ஒரு ஒரு பரபரப்பு ஓடும். அந்த அனுபவம்  பிற்பாடு எனது திருமணத்திற்குப் பின்பே வாய்த்தது. எனது மாமனார், நான் எப்போது சென்றாலும் இளநீர் பறித்துவிடுவார். எனது வயிற்றில் இளநீர் தவிர காற்று கூட இருக்க இடமில்லாதபடி இரண்டு மூன்று இளநீர்களை ஒன்றாக எனக்கு கொடுத்தபின்பே அவ்விடம் விட்டு நகருவார்.

அந்த நாட்களில் காளைச்சந்தை எனும் இடத்தில் மிகப்பிரம்மாண்டமான கன்வென்ஷன் நடக்கும். பிரபல கிறிஸ்தவ பேச்சாளர்கள் வந்து இறைச் செய்தி வழங்குவார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் அமருவதற்காக தென்னை ஓலைகளை முடைந்து வழங்குவதை பார்த்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக மிகச் சிறு வயதில் ஈர்க்கில் கொண்டும், வளர வளர தென்னை மட்டை கொண்டும் அடிவாங்கி வளர்ந்திருக்கிறேன். ஆறாம் வகுப்புக்குமேல் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது எங்களுக்கு தென்னை மட்டையே உதவியது. தென்னையிலிருந்து இள நிறத்தில் காணப்படும் கருப்பட்டி கிடைக்கும் எனும் தகவலும், கள்ளிறக்குவார்கள் எனும் தகவலும் வாழ்வின் மிக பிற்பகுதியில் நான் கேள்விப்பட்ட ஒன்று.

ஒரு முறை நாங்கள் வீட்டிலுள்ள பிள்ளைகளாக விரிகோடு எனும் பகுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது மழை பெய்ததால், ஒரு கடையில் ஒதுங்கி நின்றோம். அங்கே ஒரு தாத்தா தொண்டு சவரியை பிரித்து கயறு செய்துகொண்டிருந்தார். சிகரெட் பீடி பிடிக்க வருபவர்களுக்கு கயிற்றில் உள்ள கங்கே போதும். ஒட்டி உறிஞ்சி தீ பற்ற வைத்துவிடுவார்கள். பிற்பாடு சுனாமி ஏற்பட்ட நேரத்தில் பாதிக்கப்பட்ட கயறு தொழில் செய்பவர்களுக்காக பனைத்தொழிலாளர் இயக்கம் ஈடுபட்ட மறுவாழ்வு பணியை நான் முன்னின்று செய்ய வாய்ப்பு கிடைத்தது. தென்னை மரத்தை சார்ந்திருக்கும் மக்கள் திரள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அவர்களின் நோய்கள் மற்றும் பிரச்சனைகள் என ஒவ்வொன்றும் மிக பூதாகரமாக என் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது. பிற்பாடு கொச்சியில் இருக்கும் கயறு தொழிற்சாலைகளை கண்டபோது அயர்ந்துபோய் விட்டேன். ஒரு நகரமே கயறை மூலதனமாக வைத்துப் பிழைக்கிறதோ எனும் எண்ணம் வந்தது.

மாலத்தீவில் தென்னை ஓலைகளை எடுத்து கடலில் போட்டுவிடுவார்கள். நம்மைப்போல் அலை அடிக்கத கடல். பவழப்பாறைகளுக்குள் இருக்கும் ஒருவித சோழி  அதில் ஏறிவிடும். அதையே முற்காலத்தில் அவர்கள் நாணயமக பயன்படுத்தியிருக்கிறார்கள். வடகிழக்கில் உள்ள எனது நண்பர்கள் அந்த சோழிக்கு ஈடாக பெரும்பணத்தை செலவிட தயாராக இருப்பதை பார்த்திருக்கிறேன்.

இந்தோனேஷியா சென்றபோதும் கம்போடியா சென்றபோதும் தென்னை மரங்களை அதிகமாக காண முடிந்தது. எனது வாழ்வில் நான் பார்த்ததிலேயே மிகப்பெரிய தேங்காய் கம்போடியாவில் தான். யாழ்பாண தேங்காய் அதற்கு ஈடாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி தேங்காய் தான் சிறந்தது என்று கூறுவார்கள்.

குமரி மாவட்டத்தில் செந்நிற தேங்காய் காய்க்கும் ஒரு தென்னை மரம் உண்டு. அதை பொதுவாக செந்தெங்கு எனக் கூறினாலும், கவுளி யாத்திரை என கிராமத்தினர் அழைப்பதும் உண்டு. அதைக் குறித்து ஒருவர் எனக்கு விளக்கும்போது அது உண்மையில் “கவுரி காத்ரம்” என்றே வழங்கப்பட்டு வந்து, மருவி கவுளி யாத்திரையாக மாறிவிட்டது என்று சொன்னார். கவுரியின் மார்பை ஒத்த சிவப்பு நிறமுடையது என்று அதற்கு பொருள். காணாதவைகளை கற்பனை செய்யும் சுதந்திரம் தராளமாகவே இருந்திருக்கிறது. திருமண வீடுகளில் செந்தெங்கு குலைகள் அழகுக்காக வாசலில் கட்டிவிடப்பட்டிருக்கும். மருத்துவ குணமுடையதாக குறிப்பிடுவார்கள்.

திருமண நேரங்களில் காய்கறி வெட்டும்நேரத்தில் ஊரிலுள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள். வரும்போது அனைவரும் கத்தி மற்றும் தேங்காய் திருவலையையும் கொண்டுவருவார்கள். தேங்காய் திருவி கொடுப்பதற்கு திறமையான ஆண்கள் முன்வருவார்கள். மர பெஞ்சு அல்லது நாற்காலியில் இருந்துகொண்டு திருவினால் கீழே கிடக்கும் பனை ஓலையில் அல்லது வாழை இலையில் பனி மூடிய மலைபோல் குவிந்துவிடும். திருமணத்திற்கு காய்கறி வெட்டி கொடுத்து உதவி செய்ய வரும் வாலிபர்களுக்கு இரவு நேர காளைப்பாற்றும் பானம் இளநீர்தான். “கருக்கு களவாண” போவது அன்றைய வாலிபர் சடங்கு. மறுநாளில் உதவி செய்ய வந்தவர்கள் அனைவருக்கும் பொதுவாக “அறுப்பு” கிடைக்கும். அதனால் பிணக்குகள் உருவகும். அது மனத்தாங்கலில் முடியும். என்றாலும் இதுவே வழக்கம்.

திருச்சபைகளில் வரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதி தேங்காய் காணிக்கை வரவே. குருத்தோலை ஞாயிறு அன்று நாங்கள் பிடித்துச் செல்லுவதும் தென்னையின் குருத்துக்களே. இந்து கோவில் திருவிழக்களின்போதும் தென்னை ஓலைகளிலேயே தோரணம் செய்வர்கள். மிக அழகாக இருக்கும். ஓலையில் பந்து செய்து விளையாடிய நாட்களை மறக்க முடியாது. எவ்வளவு தூரம் தென்னை மரத்தோடு பயணித்திருக்கிறோம் என எண்ணும்போது வியப்பாக இருக்கிறது.

தென்னை ஓலை அலங்காரம்

தென்னை ஓலை அலங்காரம்

தென்னை இன்று கேரளாவின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் தாவரம். அவர்களுடைய சுற்றுலாத்துறையை ஆசீர்வதித்த பெருமை தென்னை மரங்களையேச் சாரும். தென்னையின் மேல் மனதை பறிகொடுத்தவர்கள் அதற்காக உழைத்து இன்று அதை ஒரு முக்கிய துறையாக முன்னெடுத்திருக்கிறார்கள். விவசாயத்துறை அமைச்சகத்தின் கீழ் தென்னைமரங்கள் பேணப்பட்டு இன்றுவரையில் தென்னை சார்ந்த எந்த புள்ளிவிவரங்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் உயிர்ப்புடன் இருப்பதை பார்க்கையில் பொறாமையாக இருக்கிறது.

ஆம் பனை வாரியம் விவசாயத்துறையின் கீழ் வரவில்லை. காதி கதர் கிராமத் தொழில்களின் கீழ் வருகிறது. பனைத்தொழில் சிறப்பு பெற வேண்டி இவ்விதம் செய்தார்களா அல்லது திட்டமிட்ட சதியா என தெரியவில்லை. எதேனும் காரணம் இருக்கலாம். ஆனால் தேசிய அளவில் பனை மரம் சார்ந்து முன்னெடுக்கும் முயற்சிகளே பனை மரத்தினை மாநில அளவில் காப்பாற்ற இயலும். அதற்கு சர்வதேச அளவில் பனை மரத்திற்கான குரல்கள் ஒலிக்கவேண்டும்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (60)”

 1. Logamadevi Annadurai Says:

  பாஸ்டர்
  நேற்றைய இந்த பதிவை நான் நேற்றே படித்தாலும் பணிச்சுமை காரணமாக பின்னூட்டம் அளிக்க இயலவில்லை
  இந்த பதிவு குறித்து எழுதும் முன்னர் ஒன்று சொல்ல வேண்டும். you are so loyal and confined to your subject அதற்கு என் பாராட்டுக்கள் முதலில்.
  உங்களது கட்டுரையில் பேசுபொருளான பனையினின்றும் நீங்கள் விலகிச்செல்வதே இல்லை
  இன்றைய பதிவில் பனைக்குடும்பத்தை சேர்ந்த தென்னையையும் விவரமாக விளக்குகிறீர்கள்
  இளனீர் அருந்துவது, ஈர்க்கிலும் மட்டையிலும் அடிவாங்கியது, தென்னைமட்டையில் கிரிக்கெட் ஆடியது, தென்னங்கள் வெல்லம்,இளனீரின் வகைகள், கங்கு மின்னும் தொண்டுசவரி, தென்னை ஓலைகளில் ஏறிக்கொள்ளும் சோழிகள்,செவ்விளனியின் பெயர்க்காரணம் இப்படி எதை சொன்னாலும் அதன் தகவல் களஞ்சியமாகவே இருக்கிறீர்கள் பாஸ்டர்
  ஆம் யாழ்பாணத்தேங்காய்மிகப்பெரியதுதன் பாஸ்டர். நான் இலங்கைக்குஅடிக்கடி சென்றவள் என்பதாலும் பொள்ளாச்சி எனும் தென்னை நகரில் பிறந்து வளர்ந்து, பாரதியின் பாடலில் ஈர்க்கப்பட்டு 12 தென்னைமரங்கள் வீட்டில் வைத்து வளர்ப்பதாலும் தேங்காய்களின் அளவை ஒப்பிட்டு சொல்கிறேன் இதை.
  நான் வெகுனாட்கள் என் வீட்டில் ஒரு யாழ் தேங்காயின் அரை மூடியை பெரியகிண்ணம் போல இருக்கும் , வீட்டு வரவேற்பறையில் சாவிகள்,பேனா பென்சில்கள் போட்டு வைக்க பயன்படுத்திக்கொண்டிருந்த்தேன்.
  கொழும்புவில் கிடைக்கும் சம்பல் எனும் dry தேங்காய் சட்டினியைபோல இன்னோரு சுவையான பதார்த்தம் நன வேறெஙகும் உண்டதில்லை
  பாஸ்டர், பனைக்கிறுக்கு எனக்கும் தலைக்கேறிவிட்டது என்றே நினைக்கிறேன். இன்றென் மூத்த மகனை பார்க்க சென்றுவிட்டு அவனுடன் ஒரு திரைப்படம் பார்த்தேன்
  திரைப்படத்தில் 2 முறை ஒற்றைப்பனைமரம் காண்பிக்கப்பட்டது. சவக்கிடங்கொன்ரில் பனைஓலையில் கிடத்தப்பட்டிருந்தது ஒரு சவம்
  எங்கு சென்றாலும் எதைப்பார்த்தாலும் பனையை கண்களும் மனசும் தவறவிடுவதே இல்லை
  இன்றைய சொல்வளர் காடிலும் பனையே.
  நான் நினைத்தேன் இந்த பதிவு ஜெயமோகன் சார் உங்களுக்காகவே சிறப்பாக எழுதியது என்று
  நன்றி பாஸ்டர்

 2. pastorgodson Says:

  பேராசிரியை அவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: