பனைமரச்சாலை (61)


பனை சுவையின் ஆழம்

மார்த்தாண்டத்தில் நாங்கள் இருக்கும்போது பிரம்மாண்டமான அந்த வாளாகத்திற்குள் ஆள் நடமாட்டமே இருக்காது. ஆனால் மிகவும் பாதுகாப்பான இடம். கோவில் பிள்ளை, வாச்மேன், திருச்சபை பெரியவர்கள் என அனேக பாதுகாப்பு அரண்கள் இருந்ததால் வெகு சுதந்திரமாக சுற்றித்திரியலாம். ஆனால் தனியாக மட்டுமே அதைச் செய்ய முடியும். துணைக்கு ஆளிருக்காது. அப்படியான ஒரு தருணத்தில் தான் சிங்கிளேயர் அமைத்த தூணுக்கு எதிர்புரம் ஒரு அழகான பனைமரம் நிற்பதை கவனித்தேன். பார்பதற்கு பனையைப்போலவே காணப்பட்டாலும், பனையைவிட உயரத்திலும் பருமனிலும் மிகவும் சிறியதே. அதன் தண்டு பனைமரத்தைப் போலல்லாது இள சாம்பல் வண்ணத்திலும், புடைப்புகள் இன்றியும் இருக்கும்.

மார்த்தாண்டம் சி எஸ் ஐ ஆலய வளாகத்தின் முன்பு நிற்கும் அழகு பனைமரம்.

மார்த்தாண்டம் சி எஸ் ஐ ஆலய வளாகத்தின் முன்பு நிற்கும் அழகு பனைமரம்.

அந்த மரம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த மரத்தின் அடியில் மென் மணல் இருக்கும். மிகவும் சுத்தமாக பேணப்பட்ட மரம். சில நேரங்களில் உருண்டை வடிவான கருத்த காய்கள் அதிலிருந்து பழுத்து விழும். நான் அதை எடுத்து வீட்டிற்கு தெரியாமல் சாப்பிட்டிருக்கிறேன். மாவு போன்ற அதன் மென்மையான வெளிப்புறம் சுவையாகவே இருந்தது. உட்புற விதை மேலடுக்கோடு அதிகம் தொடர்பில்லாதது போல பிரிந்துவிட்டது. சிறிய கோலி குண்டுபோல உட்புற கெட்டியான பழுப்பு நிற விதையும் கருமை நிற பழங்களின் வெளிப்புறம் பெரிய திராட்சையை ஒத்தும் இருந்தன.

மிகவும் நளினமாக நின்ற அந்த பனைமரம் பிற்பாடு எனது முக்கிய மையமாகிப்போனது. நான் எனது நேரத்தை அந்த மரத்தின் அடியிலேயே செலவிட்டேன். அந்த மரத்தின் அடியில் நின்று அதன் காய்களை கல்லெறிந்து பறிக்கவும் செய்திருக்கிறேன். எனது குறி தவறாது என்பது என்னை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். கருஞ்சிவப்பு நிறத்தில் காய்கள் இருந்தால் கூட அவைகளை சாப்பிட முடியாது என அறிந்தேன். இப்போது நினைத்துப்பார்க்கையில் அந்த இடத்தில் பனை மரத்தை ஊன்றியவர் சாதாரணமான ஒருவராக இருக்கமுடியாது. ஆலயத்திற்கு எது அழகு சேர்க்கும் என அறிந்தே நட்டிருக்கிறார். மேலும் அதன் விதைகள் குறித்தும் அறிந்திருக்கிறார், குறிப்பாக விஷமில்லாதது என்று.

பல மிஷனெறிகள் மிகவும் ஆர்வத்தோடு மரங்களை நட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மரங்களின் அருமை தெரிந்ததினால் அதற்காக நேரம் செலவளித்து மரங்களை தெரிந்து நட்டிருக்கிறார்கள். மார்த்தண்டம் பகுதியில் 30 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்களுக்குத் தெரியும் தற்போதைய ஆலயம் செழிப்பில்லாத வறண்ட பகுதியில் இருப்பது. அங்கே வைக்கப்படும் மரங்கள் குறைந்த தண்ணீரில் வளரவேண்டும் அது போல அழகு சேர்ப்பதாகவும் இருக்கவேண்டும் என கூர்ந்து கவனித்தே வைத்திருக்கின்றனர்.

தேவாலயத்தின் முன்னால் நின்ற அந்த அழகிய பனைமரம் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என இப்போது நான் உணருகிறேன். அது நான் பனை குடும்பங்களை குறித்த வேறுபாட்டை கவனிக்கவும் பின்னர் அவைகளில் எனக்கான பனையை தெரிந்துகொள்ளவும் ஏற்பட்ட முதற்புள்ளி எனவே கொள்ளுகிறேன்.

நாங்கள் மார்த்தாண்டத்திலிருந்து கோடியூர் சென்றபோதுதான் நான் சளையோலை குறித்து அறிந்துகொண்டேன். சளை மரத்தின் ஓலைகள் தென்னை ஓலையின் மிகச்சிரிய வடிவம் போல் இருக்கும். அது பல்வேறு ஓலைகளாக ஒரே நேரத்தில் சுருண்டு முளைத்தெழும். பின்னர்  4 – 6 அடி நீளம் வரைக்கும் வளரும். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு திருச்சபை விழாக்களுக்கோ அல்லது திருமண வீடுகளுக்கோ அலங்காரத்திற்காக சளை ஓலைகளை காடுகளுக்குள் சென்று எடுத்து வருவார்கள். எவருக்கும் பணம் கொடுக்கவேண்டாம். கொண்டு செல்லுகின்ற வாகனங்களில் 5 முதல் 10 வாலிபர்கள் ஏறிக்கொள்ளுவார்கள். சிறுவர்கள் அவர்களுடன் செல்ல முடியாது. இன்று சளை ஓலையின் பயன் அருகிவிட்டது. சளை ஓலை மரங்களும் மிகவும் அரிதாகிவிட்டது. குமரி மாவட்டத்தில் தற்போது சளை மரம் அழிவின் விளிம்பில் இருப்பதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.

நல்ல சமாரியன் சிலையின் பின்னால் சளை மரம், பெங்களூரு (உதவி இணையம்)

நல்ல சமாரியன் சிலையின் பின்னால் சளை மரம், பெங்களூரு (உதவி இணையம்)

நான் படித்த பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியிலும் சளை மரம் கிளை பரப்பி வரவேற்கும் வண்ணமாக நிற்கும். அதன் முன்பு அறிவர். ஞானா ராபின்சன் அவர்கள் முதல்வராக இருக்கும்போது, கல்லூரியின் 90ஆம் ஆண்டு நிரைவு விழாவை ஒட்டி, இயேசு கூறிய நல்ல சமாரியன் உவமையை மயிலாடி கல்லில் அழகாக செதுக்கி பதிப்பித்தார்கள்.

மேலும் இரண்டு  முறை நான் சளை மரங்களை கண்டது இன்றும் என் நினைவில் நிற்கின்றது. ஓருமுறை சிறக்கரை அருகே ஒரு இரவில் நான் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது என்னை மயக்கும் ஒரு வாசனை எங்கிருந்தோ வந்தது. வாசனைக்கு மனதை மயக்கும் தன்மை உண்டென்று அன்று தான் கண்டுகொண்டேன். அந்த இடத்தை நான் நெருங்கிய போது அங்கே ஒரு சளை மரத்தைக் கண்டேன். ஆனால் அந்த வாசனை சளை மரத்திலிருந்து வரவில்லை மாறாக அந்த மரத்தில் படர்ந்திருந்த வாண்டா எனும் ஆர்கிட் வகை கொடியில் பூத்துக்குலுங்கிய மலர்களிலிருந்து எழுந்து வந்தது. ஆர்கிட் மீது எனக்கு பெரும்  விருப்பம் ஏற்பட சளை மரம் காரணமாகியது.

பிறிதொருமுறை நானும் எனது மாமா மகன் ஜானியும் ஒருமுறை நல்ல வருக்கை இன பலாபழம் தேடி பேச்சிபாறை அணையை தாண்டியிருக்கிற கொடுதுறை என்ற கிரமத்திற்குச் சென்றோம். அங்கே எங்களுக்கு பலாப்பழம் கிடைக்கவில்லை ஆனால் செல்வகுமார் என்கிற காணி நண்பர் ஒருவர் கிடைத்தார். அவருடைய வீட்டிற்குச் செல்லும் வழியில் ஓரிரு சளை மரங்களைப் பார்த்தபோது, அதில் காய்கள் காய்த்திருந்தன. சற்றேறக்குறைய புன்னைக்காய் போன்றவை.  அவரிடம் நான் இந்த காய்களை பயன்படுத்துவீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், ஆம் அதை அப்படியே உண்ணமுடியாது, முதலில் நன்றாக காயபோடவேண்டும் பிற்பாடு 7 நாள் ஓடுகிற தண்ணீரில் ஊறபோடவேண்டும், அதன் பின்பு 7 நாட்கள் தினமும் தண்ணீர் மாற்றி ஊறபோடவேண்டும். பிற்பாடு காயவைத்து இடித்து பொடித்தால், புட்டு தேசை போன்றவைகள் செய்யலாம், மிகவும் சுவையாக இருக்கும் என்றார். எனக்கு இன்னும் சுவைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நாட்டிலுள்ளவர்கள் மிக அதிகமாக இவைகளை பயன்படுத்தி நான் கேள்விப்பட்டதில்லை.

உலத்திக் குலை, உலத்தி ஓலை, செந்தெங்கு மற்றும் சளை ஓலை ஆகியன திருமண வரவேற்பில்

உலத்திக் குலை, உலத்தி ஓலை, செந்தெங்கு மற்றும் சளை ஓலை ஆகியன திருமண வரவேற்பில்

சளை ஓலை எடுக்கப்போகும் கலாச்சரத்தில் உலத்திக் குலையை எடுக்கும் வழக்கம் சற்று பிற்பாடு வந்தது என நினைக்கிறேன். திருமண வீடுகளில் வரவேற்கும்படி வாசலில் வாழை மரங்களை நட்டு அதற்குமேல் உலத்திக் குலைகளைக் கட்டி பிற்பாடு செந்தெங்கு அல்லது நுங்கை கட்டி வைப்பது வழக்கம். அனைத்தும் மங்கலகரமான பொருட்கள். இத்துணை பனை சார்ந்த பொருட்கள்  ஒருசேர இணைவது குமரி மாவட்டத்தில் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன். உலத்தி வகை பனை மரங்கள் கேரள எல்லையில் மட்டுமே கிடைக்கும். ஆனல் கேரளாவில் உலத்தி என கூறமாட்டார்கள் உலட்டி என்றே குறிப்பிடுவார்கள். உலத்தி என்பது மலயாளத்தில் கெட்டவார்த்தை.

ஆங்கிலத்தில் உலத்தி பனையை ஃபிஷ் டெயில் பாம் ( Fish tail Palm) என்று குறிப்பிடுவார்கள். அதன் இலைகள் மீனின் வாலைப்போன்று இருப்பதனால் அப்பெயர் வந்திருக்கிறது. ஆகவே அதை கண்டுபிடிப்பது எளிது. இம்மரத்தின் குலைகள் மேலிருந்து கீழ் வரை சுமார் 8 முதல் 10 அடிவரை நீண்டு சடை போல தொங்கிக்கொண்டிருக்கும். நான் பார்த்த இனங்களில் தேங்காயை ஒத்த மிகச்சிறிய காய்கள் அவைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். இச்சடைக் குலைகள் உலக்ட்தி பனைமரம் இருபது அடி இருக்கும்போது குலைதள்ளும், நாட்கள் செல்லச் செல்ல இக்குலைகளின் அளவு சிறிதாகி அதன் மரணத்தை உணர்த்தும். உலத்தி கள் மிகவும் போதை அளிப்பது எனவும் கூறக்கேட்டிருக்கிறேன். அதில் கள்ளெடுப்பதற்கு குடங்களை காணி மக்கள் கட்டி வைப்பார்களாம்.

திருமணத்திற்கு இவைகள் முக்கியம் என்றால் தாம்பூலத்திற்கு பாக்கு முக்கியம். பாக்கு வெட்டுவதை தான் முதன் முதலில் பார்த்தேன். பெட்டிகடைகளில் சிறிய தேங்காய் போல் இருப்பதை வெட்டி கேட்பவர்களுக்கு கடைகாரர்கள் குடுப்பதை பார்த்திருக்கிரேன் ஆனால் பாக்கு மரம் (Arecanut) எப்படி இருக்கும் என்று தெரியாது. கடையில் மீன் வாங்க வருபவர்கள் அந்த நாட்களில் பாக்கு மட்டையில் செய்த ஒரு தண்ணீர் பிடிக்கும்  வாளியை வாங்கி அதில் மீனையும் காய்கரிகளையும் எடுத்துச்செல்லுவர்கள். மிக நேர்த்தியன ஒரு இயற்கை பொருள். பாளையை கோட்டி தண்ணீர் பிடிக்க ஏதுவாக செய்திருக்கும் அந்த வாளிக்கு ஆயுசு குறைவுதான்.  என்றாலும் மிக எளிமையானது மற்றும் விலை குறைவானது. எனக்கு பாக்கு மட்டையை சீர்படுத்தி அதில் படம் வரையவேண்டும்  என்பது நெடுநாளைய  ஆசை. அதை நான் முயற்சித்தும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ என்னால் அவைகளை தொடர முடியவில்லை.

பாக்கு மரம்

பாக்கு மரம்

குலசேகரம் பகுதியில் நாங்கள் இருக்கும்போது பாக்கு மரங்களை நான் முதன் முதலாக பார்க்கும் வாய்ப்புகிடைத்தது. அது சற்று வித்தியாசமான அனுபவம். 1993 ஆம் ஆண்டு நான் 12 ஆம் வாகுப்பு ஏற்றக்கோடில் படித்துக்கொண்டிருக்கும்போது ஒருமுறை கனமழை காரணமாக எங்களுக்கு விடுமுறை விட்டார்கள். நாங்கள் ஏற்றக்கோடிலிருந்து நடந்து திருவாட்டர் வழியாக குலசேகரம் சென்றோம். திருவட்டார் புதிய பாலத்திற்கும் மேலாக தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. எங்கள் வகுப்பு மாணவர்கள் உட்பட அனேகர் பாதிக்கப்பட்டனர் என கேள்விப்பட்டு, மறுநாள் எங்கள் வகுப்பு ஆசிரியருடன் ஒரு சில மாணவர்களாக எங்கள் உடன் பயிலும் சஜீவ் நாயர் வீட்டிற்குச் சென்றோம். அவர்களுக்கும் பாதிப்புதான். ஆனால் அவனில் காணும் உற்சாகம் சற்றும் வடிந்திருக்கவில்லை. வீட்டின் பொருட்களை அந்த அடாத மழையிலும் எடுத்து ஒதுக்கி காப்பாற்றியவன், மழையில் நனைந்து விரைத்துக்கொண்டிருந்தான். ஆனாலும் உற்சாகத்தோடு தண்ணீரிலிருந்து தான் எடுத்த பாக்கு மரத்தினை சுட்டிக்காட்டி சொன்னான் ” ஈ கமுகினே ஞான் எடுத்து”. அப்பொழுது தான் நான் அந்த கமுகு மரத்தைப் பார்த்தேன். சாம்பல் நிறத்தில் காணப்பட்ட அந்த மரம் மூங்கிலை விட சற்றே பருமனுடையதாயிருந்தது. கிட்டத்தட்ட முங்கிலைப்போலவே பயன்படுத்தப்படுவதும் கூட.

பாக்கு ஊறப்போடும் பானைகள் ஏறக்குறைய முதுமக்கள் தாழியை ஒத்திருக்கின்றதை பார்த்திருக்கின்றேன். பாக்கு வெட்டியில் காணப்படும் கலை நுணுக்கங்கள் அவற்றை சேகரிப்பவர்கள். பித்தளை வெற்றிலை செல்லம் இவைகளையும் விதம் விதமாக பார்த்திருக்கிறேன். வெற்றிலை துப்புவதற்கு என்றே பித்தளையில் செய்யப்பட்ட கோளம்பி எனது தனிப்பட்ட சேகரிப்பில் இருக்கிறது. பாக்கு மரத்தை தொடர்ந்து வந்ததன் விளைவுகள் இவை.

நவி மும்பை பாம் பீச் ரோடு

நவி மும்பை பாம் பீச் ரோடு

எனது பெரியம்மா மகன் ஹெரால்ட் எனக்கு ஒரு பனை வகையை அறிமுகம் செய்து வைத்தார். ஆங்கிலத்தில்  பாட்டில் பாம் என்று கூறப்படும் அவைகளையே இன்று பெரும்பாலும் அழகிற்காக வளர்க்கிறார்கள். மும்பை பாம் பீச் ரோட் முழுவதும் பாட்டில் பாம் கொண்டே அலங்கரித்திருக்கிறர்கள். ஐக்கிய இறையியல் கல்லூரியில் நான் படிக்கும்போது இறுதி ஆண்டு ஆராதனை நடத்தவேண்டும் என நான் எங்கள் நூலகத்தின் அருகிலுள்ள பாட்டில் பாம்மையே  தெரிவு செய்திருந்தேன். பொதுவாக சிற்றாலயத்தின் வெளியில் வைத்து அதை நடத்த அனுமதிப்பார்கள். நான் கல்லூரி முதல்வரிடம் கேட்டபோதோ அவர் மறுத்துவிட்டார். பிற்பாடு நான் அழுது கதறி ஓலமிட்டு அந்த இடத்தை முதல்வரிடமிருந்து வாங்கினேன். பேராசிரியை இவாஞ்சலின் ஆண்டர்சன் ராஜ்குமார் அவர்கள் எனது கதறுதலை பொறுக்க மாட்டாமல் எனக்கு அதற்கான அனுமதியை வாங்கிக்கொடுத்தார்கள். பிற்பாடு பேராசிரியர் ஜோசப் முத்துராஜ் அவர்களை நான் சந்தித்த பொழுது அவர் “உழைப்பவரோடு தொடர்புடைய பனையை கூற தலைப்படும் நீ ஏன் அந்த அழகு பனையின் கீழ் அதை மலினப்படுத்த நினைக்கிறாய்” எனக் கேட்டார்கள். அந்த வார்த்தையால் நான் மீண்டு விட்டேன். பிற்பாடு நான் துணிந்து எனது இறுதி வருட மாதிரி ஆராதனையை சிற்றாலயத்தில் வைத்தே நடத்தினேன். இப்படியாக ஓரு பனைத்தொழிலாளி நடத்திய ஆராதனை சீகன்பால்கு சிற்றலாயத்தில் ஒரு புது வரலாற்றை நிகழ்த்தியது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

3 பதில்கள் to “பனைமரச்சாலை (61)”

 1. Arputharaj Samuel Says:

  சில விசயங்களை “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற எளிதில் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. உதாரணமாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் திருமண வீட்டு வாயில் தோரணம் நான் கண்டு மகிழ்ந்த ஒன்று. இயற்கையான, ஆனால் பிரமாண்டமானதாக இருக்கும். ஆனால் இப்பொழுது கன்னியாகுமரி மாவட்ட திருமணங்களில் இவைகளைக் காணதரிதாகி வருகிறது.
  இதே போலவே, பனை சார் தொழில்கள் நலிந்தும் நசுக்கப்பட்டும் வருவது அதைச்ச் சார்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கே கேடு விளைவிக்கும். இது புரிய வேண்டியவர்களுக்கே புரியவில்லை. அவர்களில் ஒரு சிலருக்காவது இத்தொடர் கட்டுரைகள் போய் சேர்ந்தால் நலம்.

 2. Logamadevi Annadurai Says:

  பாஸ்டர்
  அரிகேசியே குடும்பத்தில் இனி ஒரு சில உறுப்பினர்களே உள்ளார்கள் உங்களால் விவரிக்கப்படாமல் என்று நினைக்கிறேன்
  சவளை மரம் குறித்த புகைப்படம் எனக்கு தெளிவாக இல்லை. தயவுசெய்து அதை மீண்டும் பிரசுரிக்கவும். அது என்ன மரம் என்றும் என்னால் கணிக்கமுடியவில்லை
  மீன் வால் பனை அனேகமாய் caryota urens ஆக இருக்கும் என ஊகிக்கிறேன். மாலை வந்து பார்க்கவேண்டும்
  பனைமரத்தடியில் உங்கள் ஆராதனையின் பொருட்டான கதறல் இன்னும் காதில் ஒலிக்கிறது.
  என்ன மாதிரியான பனைப்பிரியம் இது?
  மார்த்தாண்டம் தேவாலயத்தின் பனையைக்குறித்த விவரணயில் எத்தனை botanical description ? எங்கள் பணிக்கே உலை வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே?
  seed detached from seed pi,t pulp, edibility இப்படி ஏகத்துக்கும் தாவ்ரவியல் தகவல்கள்
  ஒவ்வொரு பதிவும் ஆச்சர்யமூட்டிக்கொண்டே இருக்கின்றது
  நன்றியுடன்
  லோகமாதேவி

 3. pastorgodson Says:

  நண்பர் அற்புதராஜ், பனையின் அழிவும் பனை சார் தொழில் நசிவும் நமக்கே உலைவைக்கும் என்பது உறுதி. எவ்வளவு சீக்கிரம் சுதரிக்கிரோமோ அத்துணை நல்லது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: