பனைமரச்சாலை (66)


பனை கோபுரம்

திருப்பனந்தாள் விட்டு வெளியே வரும்பொது நான் கிழக்கு வாசல் அருகில் சென்று ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என  கூறினேன். கோபுரமும் பனைமமும் ஒன்றுபோல சேர்ந்து இருந்தது. நான் முன்பு வந்தபோதே பார்த்து உருகியிருக்கிறேன். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லுவார்கள். கோபுரத்தின் அருகில் இணையாக நிற்கும் பனை மரம், நாம் ஒப்புநோக்க ஒரு காரணத்தை தன்னுள் கொண்டிருகிறது. உயர்ந்து நிற்பது, உணவளிப்பது ஆகவே வாழ்வளிப்பது என பல்வேறு பரிணாமங்கள் கொண்டது. கடந்த முறை பார்த்ததை விட இன்னும் நெக்குருகி அதை பார்த்துக்கொண்டிருந்தேன். பனை எதனுடனும் இணையும் தன்மை கொண்டது என அவ்விடம் சான்று கூறியது.

ஆம் பனைமரம் எந்த மரத்தின் நிழலிலும் வாழ விரும்பாதது. சூரிய ஓளி அதற்கு நேரிடையாக கிடைக்கவேண்டும். வெகு தூரத்தில் இருந்து கூட பனை மரத்தினை தொல் மூதாதை கண்டுகொள்ள முடியும். மற்ற மரங்களுக்கு மேல் அது உயர்ந்து காணப்படுவதனால் கோபுரம் போன்ற அதன் அமைப்பு உணவை தேடுவோருக்கு உறுதியளிப்பதாக இருக்கிறது. இன்றும் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் வெள்ளைக் காய்ச்சி எனும் வகை பனம்பழத்தை ஆரோக்கியம் உள்ள எவரும் உண்ணலாம். சுடவோ அல்லது வேக வைக்கவோ தேவையில்லை. அப்படியென்றால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களின் ஆரோக்கியம் எப்படி இருந்திருக்கும். நுங்கிருக்கலாம், அல்லது பனம்பழமிருக்கலாம் இவை இரண்டும் இல்லையென்று சொன்னால் கண்டிப்பாக பனம்பழம் இருக்கும். பசிப்பிணி போக்கிய கைகளால் கட்டப்படாத கோபுரம் அல்லவா பனை. அதன் ஆசி பெற்றோர் தமது பக்தியால்  கோபுரம் அமைத்தனர்.

பனையும் கோபுரமும், திருப்பனந்தாள்

பனையும் கோபுரமும், திருப்பனந்தாள்

பக்தி காலகட்டங்களில் ஏன் பனை மரக்காடுகளில் வாழும் தொல் தெய்வங்கள் பெருந்தெய்வங்களுடன் இணைக்கப்படவேண்டும் என்பது முக்கியமான கேள்வி. பவுத்தமும் சமணமும் கால்பரப்பி நின்ற தருணத்தில், பக்தி இலக்கியங்கள் தோன்றத்துவங்கின. இவ்விலக்கியங்களை பரப்புவதற்கு மிகவும் ஏற்றது அவைகளை எழுத்தில் வடித்து பிரதி எடுப்பதே. ஆகவே பனங்காடுகள், பக்தி அடியவர்களின் நோக்கில் மிக முக்கியமாக பட்டிருக்கவேண்டும். ஓலைகள் பக்தி இலக்கியங்களைப்  பரப்புவதில் முகிய இடம் வகித்ததாக கருத இடமுள்ளது. இன்றும் மடங்களில் காணப்படும் ஓலைச் சுவடிகளின் திரளே இவைகளுக்குச் சான்று.

அடியவர்களின் வாழ்வில் உணவு ஒரு முக்கியத் தேவை. அதையும் நிறைவேற்றியது பனை மரம். பல்வேறு தல வரலாறுகளில் எப்படி அடியவர்கள் உணவு பெற்று தங்கள் பசி பிணி நீங்கினார்கள் என்பது போன்ற கதைகள் வழக்கில் இருக்கிறது. பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கும் மரபிற்கு பனை மரங்கள் உணவினை தாராளமாக கொடுத்து உதவியிருக்கும். குறிப்பாக இனிப்பு சேர்க்கின்ற பண்டங்கள் அனைத்தும் பனை மரங்களையே நம்பி இருக்கும் என்பது தெளிவு. திரளான மக்கள் கூடுமிடங்களில் பனை கருப்பட்டியே தேவைகளை பூர்த்தி செய்திருக்கும்.

எவ்வித விவசாய கடப்பாடுகளும் உருவாகா தருணத்தில், எளிதாக கிடைக்கின்ற உணவுகளையே பிரசாதமாக வழங்குகின்ற நாட்களாக இருந்திருக்கும். அல்லது, கிடைப்பதையே பகிர்ந்துண்ணும் வழக்கம் இருந்திருக்கலாம். ஆலய கட்டுமானங்கள் மற்றும் ஆலய பராமரிப்புக்கென்று மன்னர்கள் நிலம் வழங்குவது காலத்தால் பிந்தியதாக இருந்திருக்கவேண்டும். இவ்விதம் எண்ணத்தலைப்படும்பொழுது, பனங்காடுகள் எவ்விதம் பக்தி மார்க்கம் ஊடுருவும் களங்களாக இருந்தன என்பது தெளிவாகும்.

காடு திருத்தி நாடு சமைக்கும் காலகட்டத்தில், பனங்காடுகள் புறக்கணிக்கப்பட்ட இடங்களாக இருந்திருக்கலாம். நகர் புரங்களுக்கும் காடுகளுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகமாக இருந்திருக்கலாம். அப்படிபட்ட தருணத்தில், பக்தியில் திளைத்த அடியவர்கள் அனைவருக்கும் இறைவன் ஒன்றே எனும் சீரிய கருத்தை பரப்பும் எண்ணத்துடன் பனங்காட்டில் துணிந்து புகுந்திருக்கலாம். அங்கு பனையினை நம்பி வாழும் மக்களுடன் இறை அன்பினை பகிர்ந்திருக்கலாம். ஆம் அப்பணி பனையினை மையப்படுத்தியே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பது கண்கூடு. தூனிலும் இருப்பவர் துரும்பிலும் இருப்பவர் பனையில் இருக்க மாட்டாரோ. பக்தியால் பனங்காட்டிறைவனை தரிசிக்க அவர்களால் இயன்றது.

அமிர்த்தராஜ் இரவு தங்குவதற்கு ஏற்ற இடமென்ன என் எண்ணிக்கொண்டே சென்றார். இருட்டில் ஒருவரை ஒருவர் பின் தொடர்ந்து  சென்றோம். ஒரு இடத்தில் வந்தபோது அமைர்தராஜ் என்னிடம் சாலை மிகவும் அழகாக நேர்த்தியாக இருக்கிறது இல்லையா என்றார். ஆம் என்றேன். அவர் சொல்லி இரண்டு கி மீ தூரம் கூட நாங்கள் செல்லவில்லை  அதற்குள் சாலை தரமிழந்தது. கடித்துப் பிடித்து வண்டியை ஓட்டி காரைக்கால் செல்லுகின்ற முக்கிய சலையைப்பிடித்தபோது அமிர்தராஜ் சொன்னார், “இப்படி தெரியும்னா ரோடு நல்லா இருக்குன்னே சொல்லியிருக்கமாட்டேன்” சிரித்துக்கொண்டோம். தொடர்ந்து நாங்கள் பயணம் செய்ததால் ஆளில்லாத ஒரு இடத்தில் வண்டியை ஓரங்கட்டினோம்.

ஒரு 15 நிமிடம் அங்கு நின்று ஓய்வெடுத்தோம். அவர் தனக்கு வந்த அழைப்புகளுக்கு மறுமொழி கூறிக்கொண்டிருந்தார், நான் முகநூல் பர்த்துக்கொண்டிருந்தேன்.   அமிர்தராஜின் தொடர்புகள் அனைத்தும் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்ததால் அவர் என்னிடம், இன்றைக்கு என்னுடைய செலவு என்றார். அங்கிருந்த மிகச்சிறந்த ஓட்டல்களை தேடி கண்டுபிடித்து அறை பதிவுசெய்தார். பிற்பாடு எங்கு நல்ல உணவு கிடைக்கும் என தனது நண்பர்களுக்கு கேட்டு “மஜா மஜா” எனும் உணவத்தினை கேள்விப்பட்டு அங்கு அமிர்த்தராஜுடைய பைக்கிலேயே சென்றோம். சும்மா சொல்லக்கூடாது, கடையில் ஆள் கூட்டம் நிரம்பி வழிந்தது, இஸ்லமியர் நடத்தும் ஓட்டல் அது. சிக்கன் தந்தூரி, ஃபிரைடு ரைஸ், புரோட்டா என பல வகைகளில் ஆர்டர் செய்து அசத்தினார் அமிர்த்தராஜ். அனைத்தையும் பார்சலாக கட்டிக்கொண்டு அறைக்கு திரும்பினோம்.

அமிர்தராஜுடைய வண்டியில் நெருக்கமான அந்த சாலையை  கடக்க சிரமப்பட்டோம். நான் சலையைக் கடந்து அவர் வண்டியை திருப்ப காத்திருந்தேன். அமிர்த்தராஜ் தனது கரங்களைக் காட்டியபடி மெதுவாக முன்னேற பாய்ந்து வந்த ஒரு இருசக்கர வாகனம் அமித்தராஜுடைய வண்டியில் மோதியது. அமிர்த்தராஜுடைய கால்கள் நோருங்கியிருக்கும் என்றே எண்ணினேன். அந்த சாலை வேகமாக வண்டி ஓட்டக்கூடிய சாலை அல்ல. முதிரா இளைஞர்கள் இருவர் அந்த வண்டியில் இருந்தார்கள். தம்பி பார்த்து போகக்கூடாதா என்றேன்? வண்டி ஓட்டிய வாலிபன் வந்து மன்னிப்பு கேட்டான், அனால் பின்னால் இருந்தவன் மிகவும் தறக்குறைவாக பேசினான். ஏய், இன்னா மொறைக்கிறே, எந்த ஊரு, இன்னாத்துக்கு  வந்தே, பையில பொருள் வெச்சிருக்கீயா? எங்கிட்டேவா, எந்த ஊர் வண்டி என அடுக்கிக்கொண்டே போனான். இது ஒரு யுக்தி, தனது தவறுக்கு பிறரை பொறுப்பாக்குவது. நான் எப்படி பொறுமையாக இருந்தேன் என்பது எனக்கே தெரியாது ஒரு புறம் இரத்தம் கொதிக்கிறது ஆனால் கைகளை நீட்டுவது சரியாகாது. அமிர்தராஜும் பொறுமையாகவே பதில் சொல்லிக்கொண்டு வந்தார். இதற்குள் ஆட்கள் கூடிவிட்டார்கள். நான், உனக்கு அடி ஒண்ணுமில்லியே என்றேன், அமிர்தராஜ் இல்லை என்றார். சரி, கிளம்புவோம்  என்றேன். ஹோட்டல் சென்று, அனைத்தையும் மறந்து உணவை ரசித்து சாப்பிட்டோம்.

வாகன விபத்து ஏற்படுவதில் இந்திய அளவில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. இதற்கு முழுமுதல் காரணம் மது என்றே கூறுகிறார்கள். சாலை விதிகளை மதிக்காதது மற்றொரு காரணம். நான் நாகர்கோவிலில் இருக்கும்போது புத்தாண்டு அன்று வின்ஸ்டன் என்னை தனது பைக்கில் நாகர்கோவிலைச் சுற்றிபார்க்க அழைத்துச் செல்லுவான். கண்டிப்பக இரண்டு மூன்று கடும் விபத்துக்களை நாங்கள் பார்ப்போம். அனைத்தும் இளைஞர்கள், பெற்றொரிடம் போராடி தங்களுக்கு என வாகனம் வாங்குபவர்கள். தங்கள் சுய பெருமைக்காக வாகனம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர். வேகம் விவேகம் அல்ல என எவ்வளவு சொன்னாலும் இவர்களுக்குப் புரியாது.

சிறு வயதில் விபத்தைச் சந்தித்து வாழ்வில் முடங்கியவர்கள் வாழ்வை முடித்துக்கொண்டவர்கள் என அனேக  துயர நிகழ்வுகளை அனுதினமும் நடைபெறுகின்றது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நாங்கள் இருக்கும் ரசாயனி எனும் பகுதியில் விபத்தினால் நான்கு இளம் உயிர்கள் பறிபோயுள்ளன. சுடுகாடு எங்கள் வீட்டிற்கு அருகில்தான் இருக்கிறது, விபத்தினால் ஏற்படும் மரணங்கள் மொத்த ரசாயனியிலும் ஒரு ஆழ்ந்த வருத்தத்தை விட்டுச்செல்லுகிறது ஆனாலும் இளைஞர்கள் வேகமாக வாகனங்களை ஓட்டிக்கொண்டு வந்துகொண்டே இருக்கிறார்கள்.

அன்று இரவு ஒழுங்கு செய்யவெண்டிய காரியங்கள் அனேகம் இருந்தது. தமிழகத்தில் இது மூன்றாவது நாள். இதை தவிர்த்தால் இன்னும் நான்கு இரவுகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் பயண வழியெங்கும்  எங்களை எதிர்நோக்கியிருக்கும் மக்கள். அனைத்தையும் ஒழுங்கு செய்யவேண்டி இருந்தது. முதலில் வினோலியாவிற்கு அழைத்து எனது பயணங்கள் குறித்துச் சொன்னேன். அவர்கள் தகப்பனாரிடம் நாங்கள் நாளை வருவோம் என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்டுக்கொண்டேன். ஜெபக்குமார் அழைத்து கேட்டார் “பையன் எப்படி?” என்று சிறப்பான துணை என்று கூறினேன். ஜெபக்குமார் எனக்கான முகநூல் பதிவுகளை தொடர்ந்து இட்டுக்கொண்டிருந்தார். வள்ளியூரில் தாம் இருப்பதாகவும் வழியில் சந்திக்கலாம் எனவும் கூறினார்.

நாகர்கோவில் கங்கார்டியா இறையியல் கல்லூரியில் பயின்று வருபவரான திரு. சாம் ஜெபசிங் அவர்கள் எனது முகநூல் நண்பர். அவர் என்னிடம் கிறிஸ்து ஞான வள்ளுவன் என்று வேம்பாரிலிருக்கும் ஒரு தமிழ் ஆசிரியரை  தொடர்பு கொள்ளச்சொல்லி எனக்கு தகவல் அனுப்பியிருந்தார். எனது பயனத்துக்கு முன்பே உறுதி செய்திருந்தது வேம்பாரைக் கடக்கும்போது நான் கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்களை தொடர்புகொள்ள வேண்டும் என்பதை. ஆனாலும் சென்னை வந்தும் என்னால் உறுதியாக எதுவும் கூற முடியவில்லை. அவர்களோ எனது சென்னை வருகைக்குப் பின்பு பரபரப்பாக காத்திருக்க துவங்கி விட்டனர்.

மேலும் எனது பயண நிறைவு குறித்தும் நான் பேசவேண்டி இருந்தது. அவைகளையும் பேசி ஒழுங்கு செய்தேன். அதைக்குறித்து நான் இன்னும் அதிகமாக எழுதவேண்டும். குடும்பத்தினர் அனைவருக்கும் பேசி, எழுதவேண்டியவர்களுக்கு  எழுதி அனைத்தும் மிகச்சரியாக அமைந்திருக்கிறது என அறிந்த பின் படுக்கச் சென்றேன். துணிந்தவனுக்கு பனைமரச்சாலை பஞ்சு மெத்தை என அந்த பிரம்மாண்ட கட்டில் என்னை கண்ணுறங்கச் செய்தது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (66)”

 1. Logamadevi Annadurai Says:

  பாஸ்டர் உங்களின் 66 மற்ரும் 65 பதிவுகள் பேச வேண்டியதை எல்லாமே அந்த கோபுரதிற்குஇணையாக எழுந்து நிற்கும் பனையின் புகைப்படம் சொல்லிவிட்டது. என்ன ஒரு அற்புதமான இறைமை நிறைந்த ஒரு புகைப்படம்?
  கோபுர தரிசனம் கோடி நன்மை என்று சொல்வாரகள். ஆனால் ஒரு கிருஸ்துவ திருச்சபையை சேர்ந்த இறைப்பணியாளராகிய நீங்கள் சொல்லுகையில் அதன் சிறப்பு மேலும் அதிகரிக்கிறதல்லவா? கோபுர தரிசனம் அதனுடன் இணைந்த பனை தரிசனம் இரண்டு கோடி புண்ணியம் இப்பொது கண்டவர்களுக்கு!!!!!!
  உயர்ந்து நிற்பது,, வாழ்வளிப்பது, உணவளிப்பது, குணப்படுத்துவது என எல்லாமே இறையின் அம்சம் பனை கொண்டுள்ளது.
  பனை ஒரு sun demanding plant. எனவே தான் அது மற்றவற்றுடன் போட்டியிடாமல் தனித்தும் வானுயர்ந்தும், இருக்கிறது
  பனையின் உணவுப்பயன்பாடினையும் சொல்லிவிட்டீர்கள் இது Palaeodietil பனை பெரும் பங்கு வகித்திருக்கும் என்பதில் ஐயமில்லை

  ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் வெள்ளைக் காய்ச்சி? அது என்ன பாஸ்டர்? அது ஆரஞ்சுகாய்ச்சியாக ஏன் அறியப்படவில்லை? இது போன்ற எளிய வினாக்களை வலைப்பூ எழுத்கையில் சந்த்திக்க நேரிடும் அபாயத்தை உணர்ந்திருப்பிர்கள் என நினைக்கிறேன்.!!!
  ”பக்தி இயக்கத்தில் பனைஒலைகளின் பயன்பாடு” என்று ஒரு கருத்தரங்கே நடத்தலாம் என் நினைக்கிறேன் இந்த பதிவை படித்தபின்
  நகரமயமாக்கலின் போது தனிமையை நாடி அடியவர்கள் பனக்காட்டிற்குள் வந்து பனைசார்ந்தவர்களுடன் பக்தியில் ஈடுபட்டிருக்கலாம் என்பது நல்ல பொருத்தமன ஒரு கருத்தாகவே இருக்கிறது.
  சாலைப்பயணங்களில் இதுபோன்றவிபத்துக்கள் இப்போது தவிர்க்கமுடியாதவை. நல்ல வேளை பெரிதாக ஒன்றுமில்லாமல் இறைவன் துணையிருந்திருக்கிறார்
  துணிந்தவனுக்கும் பனையின் மீது மாறக்காதல் கொண்டிருப்பவனுக்கும் பனைச்சாலை பட்டுச்சாலையேதான் பாஸ்டர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: