பனைமரச்சாலை (67)


ஓலை உணவுகள்

காலையுணவு எங்களுக்கு ஓட்டலிலேயே  வழங்கினார்கள். காரைக்காலிலிருந்து நாங்கள் கிளம்பும் முன்பதாக அமிர்தராஜின் யோசனைப்படி பெட்ரோலை நிறைத்துக்கொண்டோம். நேராக நாகூர் செல்கிறோம் என்றார். அவருக்கு இடங்கள் மிகவும் தெளிவாக தெரிந்திருந்தன. சீராக போய்கொண்டிருந்த வழியில் ஒரு நபர் சைக்கிளில் ஓலை பெட்டிகளை வைத்து மிதித்து சென்றுகொண்டிருந்தார். நாங்கள் ஆர்வம் மிகுதியால் வண்டியை நிறுத்தினோம். அவரும் தனது வாகனத்தை நிறுத்தி இறங்கினார். ஒன்றுபோல் பின்னப்பட்ட உழக்கு போன்ற பெட்டிகள். எதற்காக எடுத்த்துச் செல்லுகிறீர்கள் எனக் கேட்டோம், அதற்கு அவர், நாகூரில் சிலர் வேண்டுதல் செய்து ஏழை எளியவர்களுக்கு பிரியாணி வழங்குவார்களாம். அந்த பிரியாணி இந்த பெட்டியில் இட்டே கொடுப்பார்கள் எனக் கூறினார். முன்பு அனேகர் தொடர்ந்து தங்கள் வீடுகளில் இப்பெட்டிகளை செய்து கொண்டிருந்தார்கள், இப்போதோ இரண்டே குடும்பத்தினர் மட்டுமே செய்கிறோம் என்றார். போதுமான வருமானம் வருகிறது என்றார். ஒரு பெட்டி சுமார் 5 ரூபாய்க்கு விற்கிறார். கடைகளில் வாங்குவோர் அவைகளை 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும்.

பனை ஓலையில் செய்யப்பட்ட பிரியாணி பெட்டிகள், நாகூர் அருகில்

பனை ஓலையில் செய்யப்பட்ட பிரியாணி பெட்டிகள், நாகூர் அருகில்

உணவுகளை தயாரிப்பதிலிருந்து பறிமாறுவது வரை நமது முன்னோர்களுக்கு இலைகள் தேவைப்பட்டிருக்கின்றன. குமரி மாவட்டத்தினரைப் பொறுத்தவரையில் இலை என்றால் அது வாழை இலை தான். மிக சமீபத்தில் வரைக்கும் திருமண வீடுகளில் வாழை இலையே உணவை அளிக்க பயன்பட்டது. பிற்பாடு மெதுவாக இலைவடிவ காகிதமும், தெர்மாகோல் பிளெட்டும் பயன்படுத்த துவங்கிவிட்டனர். ஆடம்பர கலியாணங்களில் உடையாத தட்டிலிருந்து மாறி இப்போது பீங்கான் தட்டை பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அனைத்தும் சமூகத்தின் வளர்ச்சியை பிரதிபலிக்கும்படியாக அமைகின்றன. ஆகவே இயற்கையோடு நமகுள்ள தூரத்தையும் அவை இன்று உணர்த்துகின்றன.

குமரி மாவட்டத்தில் எந்த சிறிய சாய கடைக்கு காப்பி குடிக்க போனாலும் இலையிலேயே உணவுகளைத் தருவார்கள். இலைகளின் விலை ஏறிவிட்டது என்று இன்று மிகப்பெரிய கடைகளில் மட்டுமே இலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன. இலை போட்டு சாப்பாடு என்பது மிகப்பெரிய மரியாதை கவுரவம் என்று கருதப்பட்டிருந்தது போய், வேறு விதமான எண்ணங்கள் ஊருக்குள் புகுந்துவிட்டது.  கல்லூரிக்கு உணவு எடுத்து செல்லும்போது, சுடு சோற்றை இலையில் கொட்டி, அவியல் அல்லது சம்மந்தி வைத்து கட்டி மதியம் பிரிக்கும்போது எழும் மணம் இன்றும் நினைவில் நீங்காமல் நிற்கிறது.

விருந்துக்குச் சென்றால் கண்டிப்பாக தோட்டத்திலிருந்து பறித்த புதிய இலையிலேயே சாப்பாடு வழங்கப்படும். மணம் மாத்திரம் அல்ல அதன் பயன்கள் பல்வேறு வகை பட்டவை. இலைகளின் மருத்துவ குணம் கூட உணவில் இணைகிறது.  தண்ணீர் மிச்சமாகிறது, தோட்டத்திலிருந்தே கிடைக்கும் மூலப்பொருள் என பயன்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இன்றைய மாசுபட்ட உலகில் இலைகள் எவ்விதம் நமக்கு மாசில்லா ஒரு பயன்பாட்டு பொருளாக எளிதில் மட்கி எருவாகி பயன் தந்திருக்கிறது என்பது தெளிவாகும்.

குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில் கார்த்திகை மாதத்தில் கோளுக்கட்டை அவிப்பார்கள். தெரளி இலையில் அவிக்கப்படும் கொளுக்கட்டையின் மணம் தனித்துவமானது. பசியைக் கிளறச் செய்வது. இலையை கூம்பு வடிவத்தில் ஆக்கி இன்றைய ஐஸ்கிரீம் முதலியவைகளுக்கு முன்னோடியக இருந்தது அது. ஒன்றுக்கும் கவலைப்படவேண்டம், தெரளி இலையையே ஆதாரமாக  வைத்து சாப்பிட்டு விடலாம்.

 

சிறு வயதில் தோட்ட வேலை செய்ய வருகிறவர்களுக்கு வீட்டில் பெரிய பானையில் கஞ்சி வைப்பர்கள். வீட்டிலுள்ள அனைவருக்கும் அன்று கஞ்சிதான். கரங்களை எவ்வளவுதான் கழுவினாலும் தோட்டவேலை செய்பவர்கள் தங்களுக்கான கரண்டியை பிலா இலையை கோட்டியே செய்வார்கள். சிறு வயதின்  மிக பரவசமான தருணங்களில் அதுவும் ஒன்று. கோட்டிய பிலா இலையை தென்னை ஈர்க்கில் கொண்டு முடிந்து வைப்பார்கள்.

ஒருமுறை வயல் அறுவடை நேரம் அப்பாவுடன் வயலுக்குச் சென்றிருந்தேன். வயலை ஒட்டியே ஒரு குளம் உண்டு. அந்த குளத்தில் தாமரை இலையைப் பறித்து அப்பா எனக்கு உணவு கொடுத்தார்கள். தாமரை இலையில் தண்ணீர் படாது என்று சொல்லுவோமே, அப்படி அல்ல, தாமரையின் மேல்பகுதியில்தான் தண்ணீர் ஒட்டாது. கீழ்பகுதி தண்ணீரில் நனைந்தே இருக்கும். எனக்கு உணவளிகும்போது அப்பா சொன்னர்கள் இலையை மத்தி போடு. தண்ணீர் ஒட்டாத பகுதி நஞ்சு என்று. இன்றும் குமரி மாவட்டத்தில் பூக்களை மடித்து கொடுக்க தாமரை இலைகளையே பயன்படுத்துவார்கள். அதுபோலவே பூக்களை அதிக அளவில் எடுத்துச் செல்லுவதற்கு பனையோலை பெட்டிகளையே இன்றும் பயன்படுத்துவார்கள்.

நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு கோடை விடுமுறைக்காக வேலூர் சென்றேன். எனது மூத்த சகோதரனும் சகோதரியும் அப்போது அங்கே பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அங்கே தான் தையல் இலையை நான் முதன் முதலாக பர்த்தது. பீஃப் பிரியாணியை கட்டி தருகின்ற இலைக்கும் ஒரு சிறப்பு மணம் உண்டு. இரண்டாக பிரிந்திருக்கும் அந்த இலை இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை.

குமரி மாவட்டத்தில் தேக்கிலைகள் கிடைக்கும் இடத்தில் கிழங்கை சுட்டு சப்பிடும் போதோ அவித்து சாப்பிடும்போதோ பயன்படுத்துவார்கள்.

செல்வகுமார் காணி எங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வைத்திருந்தார். அவரை பார்க்கப்போகும்போது இருவருக்கு ஒரு கோழி என்ற கணக்கிலேயே கோழி எடுத்துச் செல்லவேண்டும். கோதையாறு சென்று அவருடைய கொடுதுறை என்ற கணிக்குடியிருப்பிலிருந்து சற்று உள்நோக்கி நடந்தால் காட்டுக்குள் ஒரு ஓடை வரும். அங்கு நாங்கள் போய் சேரும்போதே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். ஆனால் அங்கு போன பின்புதான் சமையலே ஆரம்பிப்போம். செல்வகுமர் அவர்களுடைய முக்கிய தயாரிப்பு, கற்களை தீயில் பழுக்க வைத்து உணவை வேகவைக்கும் முறை. மசாலா தடவிய கோழியை ஓரு வித கட்டிலைக்குள் வைத்து பொதிந்து நெருப்பில் வெந்த கற்களுக்குள் வைத்துவிடுவார். அனைத்தும் செய்து முடிக்க மூன்று மணி நேரத்திற்கு மெல் ஆகிவிடும். ஆனால் அந்த சுவை எங்கும் கிடைக்காது. மிகச்சிறந்த தந்தூரி கூட அதன் முன்னால் ஒன்றுமில்லை. இலையின் மாயம் அப்படி. ஒருமுறை பனையோலையைக் கொண்டுவருவேன் என்று செல்வகுமாரிடம் கூறியிருக்கிறேன்.

செல்வகுமார் மேலும் சொல்லுவர், பாத்திரமே வேண்டம், கமுகு பாளையிலேயே சாதம் வைத்துவிடலம் என்று. சுமார் இருபது முதல் இருபத்தைந்து வருடங்களுக்குள்ளேயே நான் பாக்கு மட்டையில் உணவு தட்டுகள் தயரிப்பதைப் பார்த்தேன். மிகவும் ஆச்சரியமக இருந்தது.  ஆனால் மிக நேர்தியான ஒரு உணவுத் தட்டு அது.

பனையோலை கூட ஒரு சிறந்த பாத்திரமாக பயன்படும் என்பதை சிறு வயதிலிருந்தே அறிந்திருக்கிறேன். எங்கள் ஊரில் ஓலையில் யாரெனும் பொதி சுமந்து சென்றார்கள் என்றால் அது பன்றி இறைச்சியே. இன்றும் கிராமங்களில் அந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பன்றிகறி விற்பவர்கள் பெரும்பாலும் தலித் சமூகத்தினர் அப்படியே அதை உண்பவர்களில் பெரும்பாலோனோர் கிறிஸ்தவர்கள். பனை ஓலைகளை தலித் சமூகத்தினர் பயன்படுத்துவது குமரிமாவட்டத்தில் தொன்றுதொட்டுள்ள வழக்கம்.

தெரளி இலை கொழுக்கட்டை

தெரளி இலை கொழுக்கட்டை

பதனீர் குடிக்க உதவும் பட்டை அனைவரும் அறிந்த ஒன்று. பொதுவாக புனித வெள்ளி அன்று ஆலயங்களில் கஞ்சி வழங்குவது இயல்பு. ஆனால் பட்டையில் கஞ்சி குடிக்கும் வாய்ப்பு எனக்கு வடக்கு சூரங்குடி சி எஸ் ஐ ஆலயத்தில் வைத்தே அமைந்தது. எனக்கு ஒரு பட்டையில் கஞ்சியை ஊற்றி, பின் துவையால் வைத்து ஒரு ஓலை கரண்டியையும் சேர்த்து கொடுத்தார்கள். அது நிறைவான ஒரு உணவு உண்ணும் வழக்கம். இரு கையால் உணவை பவ்வியமாக எந்தி அருந்துவது உணவுக்கு அளிக்கும் மரியாதை போன்றே இருக்கும். கஞ்சியின் சுவையும் ஓலையோடு இணையும்போது சுவை மிக்கதாக மாறிவிடுகிறது.  பனையோலை கொளுக்கட்டை தெரளி இலை கொளுக்கட்டைக்குச் சவால் விடும்.

பனை ஓலை கொழுக்கட்டை

பனை ஓலை கொழுக்கட்டை

புது ஓலையில் குழாய் போன்ற ஒன்றை பின்னி அதனுள் மாவு வைத்து  புட்டு அவிக்கும் வழக்கத்தையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓலை புட்டு என அழைக்கப்படும் அதை என் வாழ்நாளில் நான் கண்டது கூட கிடையாது. இப்படி எத்தனையோ வகைகளை இழந்திருக்கிறோம்.

பனை ஓலை பிரியாணி பெட்டி, நாகூர் அருகில்

பனை ஓலை பிரியாணி பெட்டி, நாகூர் அருகில்

நாங்கள் பார்த்த ஓலை பெட்டி குமரி மாவட்டத்தில் கிடைக்கும் விழா பெட்டியை ஒத்திருந்தது. ஆனால் மூடி இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் விழாக்களின்போது இனிப்பு கார வகைகளை அங்கே வந்து திருவிழா பண்டங்களை புதிதாக செய்யும் கடைகள் உண்டு. அவைகளில் பலகாரங்களை வாங்கும்போது விழா பெட்டியிலேயே தருவார்கள். அந்த ஓலைபெட்டியின் மணம் கிறங்கடிப்பது.

பனை ஓலை பிரியாணி பெட்டி (உதவி: http://keelaiilayyavan.blogspot.com/2013/09/blog-post_28.html)

பனை ஓலை பிரியாணி பெட்டி
(உதவி: http://keelaiilayyavan.blogspot.com/2013/09/blog-post_28.html)

நாங்கள் பார்த்த மனிதரிடம் இருந்த பெட்டிகளை பார்த்தேன். பிரியாணியின் சுவை பன்மடங்காக மாறிவிடுவதை மனக்கண்ணில் கண்டேன். ஒருவேளை நாகூரில் எழைகளுக்கு உணவு வழங்கும் வரிசை இருக்குமென்றால் கண்டிப்பாக வரிசையில் நின்று வாங்கி சாப்பிடவேண்டும் என முடிவு செய்தேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் கூட திருமண வீடுகளில் சமையல்காரர்கள் சாதத்தை வடித்து பரப்பப்பட்ட பனை ஓலைப் பாயில் கொட்டிவிடுவார்கள். அதன் மணம் சுவை யாவும் பிரத்தியேகமானது. பனையோலையில் பயன்படுத்தும் தோண்டியை வைத்தே சம்பார் குழம்புகளை அள்ளி பிற பாத்திரத்தில் ஊற்றுவார்கள். நான் கம்போடியா சென்றிருக்கும்போது நாணயங்கள் வடிவில் கருப்பட்டி விற்கிறதைப்பார்த்தேன். சிறு வட்டவடிவ பத்து பன்னிரெண்டு வில்லைகளை பாப்பின்ஸ் மிட்டாய் போல அடுக்கி அதை நான்கே பனை ஓலைக் கீற்றுகளைக் கொண்டு மிக நேர்த்தியாக மடித்திருந்தார்கள்.

பிளாஸ்டிக் இன்று உடலுக்கு பூமிக்கு நகர விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்போது, ஓலையில் செய்கின்ற இவ்விதமான பொருட்களை எவரேனும் முன்னெடுத்தால் சில குடும்பங்கள் வாழ்வுபெறும் சுற்றுசூழலுக்கும் நல்லது. சென்னையில் சிறுதானிய உணவு, இயற்கை சார்ந்த உணவு என பல்வேறு வகைகளில் உணவுகள் பறிமாறப்படுகையில் ஓலைகளில் எவரேனும் மடித்துக் கொடுப்பதையோ அல்லது உணவை பரிமாறுவதையோ குறித்து சிந்திக்கலாம்.

பனைமரம் சார்ந்து ஒரு விடுதி பனங்காட்டில் நடத்துவதை எண்ணிப்பார்த்தால், தமிழகம் இந்திய அளவில் ஒரு சிறந்த முன்னுதாரணம் வழங்கும் அளவிற்கு ஒரு முழுமை அவற்றில் குடிகொண்டுள்ளது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் துவங்கும் வெளிநாட்டு மக்களின் வருகையும் பனைத் தொழிலின் காலமும் மிகவும் பொருந்திப்போவதும் சிறப்பு. நுங்கு பெறுவது கோடைகாலம் என்றாலும் வருடம் முழுவதும் நுங்கு கிடைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் உணவுகளை வழங்கலாம்.

ஓலையை எவ்விதம் ஒரு சிறந்த வடிவமைப்பில் நாம் கொண்டுவரலாம் என்பது ஒரு பெரிய சவால். அவைகளைக் கொண்டு நாமெடுக்கும் சிறு முயற்சிகள் கூட மிகப்பெரிய அளவில் காகித உற்பத்தியை தடுக்கும், நீரை சேமிக்கும், சுற்று சூழலை மலினமாக்காமல் பாதுகாக்கும்.

மன விருப்பங்கள் மனப்பதிவுகளைச் சொல்லிசெல்வதில் உள்ள மிகப்பெரிய சிக்கலை நான் உணர்ந்திருந்தாலும். பனையோலைகளை இன்று மாற்று பயன்பாட்டு பொருளாக பொதுஜன உபயோகத்திற்கு கொண்டுவந்தால்  அது இன்னும் அனேகருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சிறந்த வடிவமைப்பை நாம் பெற்றுக்கொள்ளும் எதிர்காலத்திற்கு  காத்திருக்காமல் நாகூரை மைய்யப்படுத்தியிருக்கும்  பனைத்தொழிலாளர் குடும்பங்களைப் போன்ற எண்ணிறந்த கைவினைஞர்களை அடையாளம் கண்டு பிரியாணி விற்பவர்களும் புரோட்டா விற்பவர்களும் பயன்படுத்தலாம். ஏதோ ஒருவகையில் சூழியல் பங்களிப்பு, தனித்துவமான உணவு பொதியும் முறை மற்றும் ஓலைகளை நம்பி வாழும் குடும்பத்திற்காற்றும் பேருதவி.  இவ்வித எளிய முயற்சிகளால் தான்  பனை மரம் பண்பாட்டு ரீதியாகவும், பயன்பாட்டு ரீதியாகவும் இன்றும் முக்கியத்துவம் வாய்த்தது எனும் கருத்தோட்டத்தை நாம் முன்னெடுக்க இயலும். இக்கருத்தோட்டங்களே பனை மரத்தை எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும்படி வாழ வைக்கும்.

தன் பயணத்தை தொடரும் பனை ஓலை கைவினைஞர், நாகூர் அருகில்

தன் பயணத்தை தொடரும் பனை ஓலை கைவினைஞர், நாகூர் அருகில்

நாங்கள் பார்த்த  ஓலையில் பெட்டிசெய்யும் கைவினைஞர் ஒரு இந்து, பாரம்பரியமாக இவைகளைச் செய்து வருகிறார். அவர் இவைகளை கொடுப்பது நாகூரில் உள்ள தர்க்காவிற்கு. எத்துணை அழகான ஒரு வாழ்க்கைமுறை இது. வாழையிலையை தவிர்த்து பனையோலையை தொடர்பில் வைத்திருக்கும் இஸ்லாமியர்கள் மரபும், தமிழர் வாழ்வில் அவர்தம் கலாச்சரத்தையும் இணைத்த பெருமையும் பனைமரத்திற்கு மட்டுமே உண்டு.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (67)”

 1. Logamadevi Annadurai Says:

  பாஸ்டர், காலைஉணவு, ஒலை உணவு என ஆரம்பமே கவிதையாக இருக்கிறது!!!!
  நீங்கள் செல்லும் வழியிலேயே பனைப்பெட்டிகளுடன் ஒருவரும் வருகிறார் என்பது இந்த தகவல்களெல்லாம் உங்களால் ஆவணபப்டுத்தப்படவேண்டும் என்னும் இறைவனின் ஆணைப்படியேதான் என்றே தோன்றுகிறதுபனைஓலைப்பயன்பாடு நீங்கள் சொன்னது போல. மட்கும் பொருளாகவும் சுவை அதிகரிக்கவும் பனைப்பாதுகாப்பிற்குமென எத்தனை பயன்களைத்தருவதாயிருக்கும்?

  இயற்கை அங்காடிகளிலும் இப்போது உண்ணும் பொருட்களுக்குத்தரும் முக்கியத்துவ்ம் அவற்றை packing செய்யும் பொருட்களுக்கு தருவதில்லை.
  கட்டுசாதம் கட்டிகொண்டு போவதுவும் பிலா இலையை கோட்டி( கோட்டி என்பதை நான் குவித்து அகப்பை போல செய்வது எனப்பொருள்கொண்டிருக்கிறேன்) கஞ்சி குடிப்பதுமாக இனிய சுவையான நினைவுகளைப்பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள

  நீங்கள் சொன்னது போல ecotourism பனைசார்ந்த பொருட்களை பயன்படுத்தினால் மாநிலமரம் பாதுகாக்கப்படுவது மட்டுமல்ல, சுற்றுச்சூழலும் மாசின்றி இருக்கும். சுற்றுலா சீசனயும் கூட குறிப்பிட்டு சொல்லி இருக்கிறீர்கள் . பாராட்டுக்கள்.
  நாஞ்சில் நாடன் அவ்ர்கலின் வலைத்தளத்டில் நேற்றுத்தான் மரச்சீனிக்கிழங்கை சுட்டு இலைகளில் வைத்து சாப்பிடுவதைக்குறித்து படித்தேன்
  கணவர் இருக்கும் இடத்திற்கு அருகில் ஆம்பூர் எனும் பிரியாணிக்கு பிரபலமான இடத்திலும் இன்னும் பிரியாணியை இலைகளிலேயெ கட்டித்தருகிறார்கள் என்று சொன்னார்.
  கொங்கு மாவட்டத்தில் நாங்கள் அறியாத பல புதிய உணவுகளை பற்றி எழுதியதோடல்லாமல் அவற்றின் நேர்த்தியான புகைப்படங்களயும் பிரசுரித்து அப்படியே எடுத்து சாப்பிடலாம் போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்
  இரண்டு கைகளிலும் ஏந்தி பதனீர் அருந்துவது உணவிற்கு அளிக்கும் மரியாதை என சொன்னது மிக நன்றாக இருந்தது . முன் காலத்தில் எல்லாம் உண்பவர்கள் தரையிலும் உணவு சிறிய மனைப்பலகையில் சற்று உயரத்தில் இருக்கும் அன்னம் பிரம்மம் என்று அறிந்தவர்களின் காலமது இல்லையா பாஸ்டர்?
  நம் குழந்தைகளுக்காவது இதை நாம் கற்றுக்கொடுப்போம்
  நான் படித்த மனையியல் பல்கலைக்கழகத்தில் உணவுக்கூடம் இதன் படியேதான் அமைக்கப்பட்டிருக்கும். சிறிய சற்று உயர்ந்த சதுர மேசையில் உணவும் அதனைசுற்றி தரையில் நாங்கள் மாணவிகளும் அமர்ந்து உண்போம்
  பலபதிவுகளின் வாயிலாக நீங்கள் மரநேயம் மட்டுமல்ல மனித நேயத்தயும் மதங்களைக் கடந்தவர்களைப்பற்றியும் கூட சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்
  யாவற்றிற்கும் நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: