பனைமரச்சாலை (68)


நாகூர் – பனையோலைகளின் சங்கமம்

 

நாகூர் சென்றடைந்தபோது பரபரப்பாக இருந்தது. அனேக இந்துக்கள் அங்கே வந்துகொண்டிருந்தனர். அந்த காட்சியே  அழகாக இருந்தது. தஞ்சாவூர் வரும் இந்துக்கள் மற்றும் வேளாங்கண்ணி வரும் கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக நாகூரும் வந்து பார்த்துக்கொண்டே செல்வார்கள் என அமிர்தராஜ் கூறினார். பல்வேறு சமயத்தவர்  ஒருங்கிணையும் இடம் இந்திய மனதிற்கு கண்டிப்பாக ஒரு புனித ஸ்தலமே . மனிதர்கள் மதங்களின் பெயரால் பிளவுபட்டு கிடக்கும் நேரத்தில் இப்படியான சமய நல்லிணக்க இடங்கள் நமக்கு கண்டிப்பாக வேண்டும். அவ்வகையில் நாகூர் ஒரு குறிப்பிடத்தகுந்த இடம்.

ஓலை பிரசாத தட்டு - நாகூர் தர்க்கா

ஓலை பிரசாத தட்டு – நாகூர் தர்க்கா

நாங்கள் அந்த பழைமையான தர்கா முன்பு சென்றபோது பனைமரங்கள் இருக்கின்றனவா என பார்த்தேன். பனைமரங்கள் சுற்றிலும் இல்லை ஆனால் பனையோலைகளை கொண்டு செய்யப்பட்ட அர்ச்சனை தட்டுகள் வைத்திருந்தார்கள். பனை ஓலைகளுக்காக அந்த அர்ச்சனை தட்டுகளை வாங்கிக்கொண்டோம்.  எனது எண்ணங்கள் முழுவதும் ஓலை குல்லாய் எப்போது பார்ப்போம் என்பதிலேயே இருந்தது.  அங்கு உள்ளால் சென்றால், பனை ஓலை தொப்பிகளை வைத்திருப்பர்கள் என எங்களுக்குச் பலர் சொன்னார்கள். ஆனால் இறுதிவரை அவைகளை எங்களால் பார்க்க இயலவில்லை. அந்த எண்ணம் நாகூரில் எனது பயணம் முழுமையடையவில்லை என்றே தோன்றச்செய்தது.

நாகூர் தர்க்கா

நாகூர் தர்க்கா

பல அதிசயங்கள் தனது பிறப்புக்கு முன்பே தன் தாயின் கருவறையிலிருந்து நிகழ்த்திய அதிசய குழந்தையாக,  நாகூர் ஆண்டவர் என அனைத்து மதத்தினராலும் அழைக்கப்படும்   சாகுல் ஹமீது 1490ல் உத்தர பிரதேசத்தில் பிறந்தார். மெக்கா, மாலத்தீவு மற்றும் இலங்கை உட்பட உலகின் பல்வேறு இடங்களுக்கு பயணித்தவர், தமக்கு இலவசமாக கிடைத்த கப்பலை தானமாக வழங்கியவர், நற்போதனைகளும் அதிசயங்களும் நிகழ்த்தியவர் என அவர் குறித்த வரலாற்றின் மூலம் அறிகிறோம். நாகூர் ஆண்டவர் தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560 – 1614) நோயினைத் தீர்த்து வைத்ததாகவும் அவர்களது அருளினால் மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்ததாகவும் நாகூர் தர்க்காவின் வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ளுகிறோம். மன்னர் அருளிய இடத்தில் தான் தற்பொழுது தர்க்கா அமைந்திருப்பதாகவும் இந்துக்கள் இதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்தவகையில்  பங்களிப்பாற்றியிருக்கிறார்கள் என்பதும் மத நல்லிணக்கத்திற்கான சான்று.

16 ஆம் நூற்றாண்டில்  நாகப்பட்டிணம் துறைமுகமாக இருக்கையில் நாகூர் இஸ்லாமிய குடியிருப்பாக இருந்திருக்கிறது. பிற்பாடு பிரிட்டிஷ் இந்திய ஆட்சி காலத்தில் நாகூர் ஒரு துறைமுகமாக வளர்ந்தது. கிழக்குகடற்கறைப்பகுதி முதலில் போர்த்துக்கீசியர்கள் கரத்திலும் பின்பு டச்சுக்கரர்கள் கரத்திலும் அதன் பின்னர் பிரிட்டிஷார் கரத்திற்கும் மாறியது. ஆகவே அவரவர் தளங்களை அவர்கள் விரிவுபடுத்த ஏற்ற காரணங்கள் இருக்கும் என்பதை நாம் யூகிக்கலம். இப்பகுதிகளில் நான் பனைமரங்களை அதிகம் காணவில்லை என்றாலும் இங்கு புழங்குகின்ற பனை சார் பொருட்கள் நாகப்பட்டினம் – நாகூர் குறித்த என் துறைமுகம் சார்ந்த முந்தைய எண்ணங்களையே உறுதிப்படுத்துகின்றது.

நாங்கள் தர்க்காவிற்குள் நுழையும்போது எனக்கு ஷார்ட்ஸ் இருந்ததால் என்னால் உள்ளே போகமுடியாது என்பதை அறிந்தேன். ஆகவே நான் உள்ளே செல்லவில்லை அமிர்தராஜ் மட்டும் போய் வந்தார். நான் அங்கிருந்து பார்த்தபோது பல்வேறு மதத்தைச் சார்ந்த அனேக மக்கள் மிக பவ்வியமாக அங்கே சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். இந்து சமய தாக்கம் நிறைந்திருக்கும் தர்க்கா இது. இங்கு போர்த்தப்படும் சால்வைகள் யாவும் பாரம்பரியமாக இந்து குடும்பத்தினர் செய்து வருகிறார்கள் என்பது சிறப்புத் தகவல். நான் அங்கே பார்த்துக்கொண்டிருந்தபோது பல்வெறு உண்டியல்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது எனது கவனத்தைக் கவர்ந்தது.

ஆம் தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தைப்போல குடத்தையே உண்டியலாக மாற்றியிருக்கிறார்கள். வித்தியாசம் என்னவென்றால் பழைய செப்பு குடங்களுக்குப் பதிலாக புதிய எவர்சில்வர் குடங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நான் இப்படி எண்ணுகிறேன், இந்து ஆலயங்களில் குடத்தில் காணிக்கை பெற்றிருப்பார்கள் அந்த வழக்கம் கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் சென்றடைந்திருக்கும். இஸ்லாமியர் வாழ்ந்த இடங்களிலிருந்து அவர்கள் கலாச்சார வடிவம் கொண்ட அழகிய குடங்களை புதிய எருசலேம் ஆலயத்தில் பயன்பட்டிற்காக வாங்கியிருக்கலாம். பன்மைதன்மை கொண்டுள்ள நமது மண்ணின் பெருமைகள் இது.

அமிர்தராஜ் தர்காவை விட்டு வெளியே வரும்போது சோர்ந்திருந்தார். நாங்கள் முதலில் பிரசாதம் வாங்கிய கடையின் அருகில் சென்றோம், எங்கள் வாகனங்கள் அங்குதான் நிறுத்தப்பட்டிருந்தன. எங்களுக்கு பொருள் விற்ற வயதான பாய் அமர்ந்து சுருட்டு புகைத்துக்கொண்டிருந்தார். அமிர்தராஜ் தனது பையை திறந்து ஒரு கட்டு சுருட்டை எடுத்து அந்த தாத்தாவிற்கு கொடுத்தார். தாத்தா அரண்டு போனார். அவருக்கு வாழ்வில் எவரேனும் ஒரு சுருட்டு இலவசமாக கொடுத்திருக்கலாம். அனால் தெரியாத ஒரு நபர் ஒரு கட்டு சுருட்டைக் கொடுப்பது ஆச்சரியமானது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது இத்தனைக்கும் அமிர்த்தராஜ் புகைத்து நான் பார்க்கவில்லை.

நாகூர் நாகப்பட்டிணம் இவைகளில் உள்ள “நாக்” எனும் வார்த்தை என்னைக் கவர்ந்தது. நாக வழிபாடு தொல் பழங்காலத்திலிருந்தே இருப்பது. பனைக்கும் பாம்பிற்கும் அதிக தொடர்புகள் உண்டு. வடலி பனையில் நாக பாம்புகள் குட்டிபோடும் என்பது அனைவரும் அறிந்த செய்தி. பனை மரத்தில் பாம்புகள் ஏறும் என்பதும் அறியப்பட்ட உண்மை. பாம்பு கடித்து விழுந்த பனைதொழிலாளர்கள் உண்டு. பொதுவாக இப்படி சொல்லுவார்கள் பனை மரத்திலிருந்து பெறும் பதநீரில் பாம்பு விழுந்திருந்தாலும் அது விஷமாகாது. ஏனென்றால், பதநீர் பெறுகின்ற கலயத்தில் இடப்பட்டிருக்கும் சுண்ணாம்பு விஷத்தை எடுத்துவிடும் என்று. கடற்கரையிலிருந்து கிடைக்கப்பெறும் சிப்பி மற்றும் கிளிஞ்சல்களை நீற்றி தான் சுண்ணாம்பையும் பெற்றுக்கொள்ளுகிறோம்.

பனை பாம்பு - (புகைப்பட உதவி - ஹாரிஸ் பிரேம்)

பனை பாம்பு – (புகைப்பட உதவி – ஹாரிஸ் பிரேம்)

பனைமரங்கள் சேர்ந்து வளருகின்ற பனங்காடுகளில் பம்புகளின் நடமாட்டம் இருந்திருக்கும். அவைகள் வழிமரபாக வணங்கப்பட்ட இடங்கள் ஊர் மற்றும் பட்டணங்களாக காலத்தால் வளர்ந்திருக்கும் ஆகவே பெயர் மாற்றம் இவ்விதம் நிகழ்ந்திருக்கலாம். எனது நண்பரும் புகைப்படக் கலைஞருமான ஹாரிஸ் பிரேம் எனக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தார்கள். பனை மரத்திலிருந்து சரசரவென இறங்கும் பாம்பின் படம் அது. எப்போதும் கிடைக்கும் காட்சியல்ல அது. ஒரு பொற் தருணத்தில் அது அவருக்கு வாய்த்திருக்கிறது. அப்படியானால் பனைமரத்தில் பாம்பைக்கண்ட மூதாதைகளின் தொல்மனம் எப்படி கிளர்ச்சி அடைந்திருக்கும்? நாகம் மண்ணிலிருந்து மண்ணோடு மண்ணாக வாழ்வது இல்லை, பாதாளத்திலிருந்து எறி வருவதும் இல்லை. அவைகள் விண்ணிலிருந்து இறங்கிவந்த மின்னல் கீற்றுகள். மண்ணிலிட்ட மூதாதையர்கள் விண்ணிற்கு ஏறிச்செல்லும் அற்புத காட்சி என்பதாகவே உணர்ந்திருப்பார்கள். பாம்புகள் பல்வேறு செடி கொடிகளுடன் பின்னிப்பிணைந்து வாழ்பவை எனும் வகையில் அவைகளின் அறிவு அசாதாரணமானது என முன்னோர் கருதியிருக்கலாம்.

நாங்கள் வெளியே வந்தபோது நுங்கு விற்றுகொண்டிருந்த ஒருவரிடம் போய் நுங்கு வாங்கி சாப்பிட்டுவிட்டு, அருகிலிருந்த கடைக்குச் சென்று அங்கு காணப்பட்ட பனையோலை பொருட்களை பார்வையிட்டோம். இன்னும் பனையோலை பொருட்கள் இங்கு கிடைப்பது ஆச்சரியமானது மேலும் மகிழ்வளிப்பது. என்னிடத்தில் பனை ஓலைப் பொருட்கள் வைக்கப் போதுமான இடம் இல்லை. ஆகவே நான் எதையும் வாங்கவில்லை. அமிர்தராஜ் பொருட்களை வாங்கிக்கொண்டிருகையில் அங்கே ஒரு வயதான தாத்தா ஒரு கட்டு பனையோலை விசிரிகளுடன் வந்தார்.

பனையோலை விசிறி - நாகூர் தர்க்கா அருகில்

பனையோலை விசிறி – நாகூர் தர்க்கா அருகில்

அந்தக் காட்சி என்னக்கு பெரிய ஒரு திறப்பைக் கொடுத்தது. பொதுவாக இளம் பனை மரத்திலிருந்து பெறுகின்ற ஓலைகளை சேகரித்து பனை ஓலை விசிரிகளைச் செய்வார்கள். என் வாழ்நாளில் நான் கண்டிராத ஒரு நேர்த்தி அந்த தாத்தா எடுத்துவந்த விசிரிக் கட்டிலிருந்தது. நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மிக அழகிய ஒரு செவ்வக வடிவத்தில் அந்த வடிவமற்ற ஓலை விசிரிகளை தாத்தா ஒழுங்குபடுத்தியிருந்தார். ஏற்றுமதிக்கான ஒரு வடிவ நேர்த்தி அதில் காணப்பட்டது. ஓலைகளில் செய்கின்ற பொருட்களில் மிக அதிக மாற்றங்களின்றி செய்யப்படும் பொருள் விசிறியாகும். ஆகவே எளிதானதும் கூட. ஆனால் அவற்றைச் செய்யவும் பயிற்சி வேண்டும். தாத்தா மிகச்சிறப்பான ஒரு கைவினைஞர் என்பதில் சந்தேகம் இல்லை.

நமது ஊரில் இருக்கும் வெப்பத்திற்கு பனை ஓலை விசிறிகள் மிகவும் ஏற்றது. சிறு வயதில் ஃபேன் இல்லாமல் தூங்காத எனக்கு பாட்டி வீட்டில் உள்ள பனையோலை விசிறி கொடுக்ட்த இதம் மறக்க முடியாதது. காணிமடம் விசிறி சமியார் யோகி ராம் சுரத்குமார் தனது கரத்தில் எப்போதும் பனையோலை விசிறி வைத்திருப்பது வெம்மையை விரட்டி தண்மையை அளிப்பவர் எனும் கருத்தை வெளிப்படுத்துவதாக இருக்குமோ?

ஓலை விசிரிகளை பெரும்பாலும் வீடுகளிலேயே செய்துகொள்ளும் அளவிற்கு எளிய தொழில் நுட்பம் தான். ஆனால் இன்று, நுகர்வு கலாச்சாரத்தில் எதையுமே செய்ய கற்றுக்கொள்ளாத ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது. பள்ளிகூடங்களில் ஆறாம் வகுப்புக்குமேல் விசிறி செய்வது எப்படி என்று சிறுவர்களுக்கு கற்றுக்கொடுத்தால் இலகுவில் எவருக்கும் வீணான விசிறியாக போய்விடமாட்டார்கள்.

 

எல்லாவற்றிற்கும் மேலாக பனையோலைப் பெட்டியில்  பிரியாணி சாப்பிட நினைத்தோம் ஆனால் மதியம்வரை காத்திருப்பது நேரவிரயம் என்பதை உணர்ந்து கொண்டோம். ஒரு “வட போச்சே” உணர்வு கடந்து சென்றது. எத்தனையோ பிரியாணி பொட்டலங்களைப் பற்றிப்  பேசியவர்கள் ஓலைப்பெட்டி பிரியாணி குறித்து வரும் நாட்களில் சிறு குறிப்பு வரைந்தால் அடுத்தமுறை சரியான நேரத்தில் வந்து கை நனைக்க வசதியாக இருக்கும்.

நாகூர் நான் மிகச்சரியாக கவனிக்காத ஒரு பகுதி என்பதே என் மனப்பதிவு. பனை சார்ந்து அங்கு உள்ள வாழ்வுமுறை நுட்பமாக ஆராயப்படவேண்டியது. நாங்கள் அங்கிருந்த ஒரு மணிநேரம் போதுமானது அல்ல. ஆனால் கண்டிப்பாக உள்ளூரில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களின் உதவியைப்பெற்று மேலதிக தகவல்களை சேகரிக்கவேண்டும்.

எனது பயணங்கள் வேட்கையுடன் செய்யபடுகின்ற ஒன்றே தவிர ஆய்வு நோக்கில் செய்யப்படுவது அல்ல. ஆய்வு செய்யும் திறன் உள்ளவர்களை நோக்கி கவன ஈர்ப்பு செய்யும் ஒரு பயணம். இதிலிருந்து கிளைத்துச் செல்லும் பாதைகளை கண்டடைந்து நெடுஞ்சாலை அமைப்பவர்கள் நமது தேசத்தின் வரைபடத்திற்கு பனையின் மாறா சுவையினை வழங்கிய கொடையாளிகள் ஆவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  அவ்விதம் துலங்குகின்ற நமது வரலாறு, வாழ்விடங்கள், நமது தொன்மை, பரம்பரியம், கலாச்சாரம், சமய நம்பிக்கை, உணவு சார்ந்த தன்னிறைவு போன்றவை நம்மை ஒன்றுகூடியிருக்கும் தன்னித்தன்மை கொண்டவர்களாக இவ்வுலகிற்கு பறைசாற்றும்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (68)”

 1. Logamadevi Annadurai Says:

  பாஸ்டர்
  அருமை வேறு என்ன சொல்ல?நாகூர் குறித்த் ஏதும் அறியாத எனக்கு அரிய தகவல்கள் பல கிடைத்தது.நன்றி
  இஸ்லாத்தின் ஒரு தர்கா அவவளவே எனக்கு தெரியும் . இந்த பதிவின் பின்னரே அது ஒரு மதங்களைத்தாண்டிய ஒரு புனிதமான இடமென்று தெரிந்துகொண்டேன்
  .அங்கு சால்வை இந்துக்கள் செய்வது அங்கு வழங்கப்படும் பிரியாணிக்கான ஓலைக்கூடை இந்து செய்வது, எல்லா வாயில்கலிலும் குத்துவிளக்குகள் எரிவது என இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான ஒர் இடமாகவே நாகூர் திகழ்கிறது.
  நாக் எனும் வார்த்தைக்கும் நாகத்திற்குமான ஒற்றுமையும் பனையிலும் வாழும், குட்டி போடும் நாகங்களையும். பனைஏறி பாம்பு கடித்து விழும் தொழிலாளிகளையும் பற்றி முதல் முதலாக இப்பொதுதான் அறிந்துகொள்கிறேன் .
  அதுவும் பனைமீதிருந்து இறங்கும் சவுக்கு போல அல்லது உங்கள் வார்த்தையில் சொன்னால் ஒரு மின்னல் போல அந்த பாம்பின் படம் அருமை
  . flora and fauna in relation to palm-அழகாக சொல்லிவிட்டீர்கள்
  நாகூர் அப்துல் கையூம் எனும் ஆய்வாளர் நாகூரின் பெயர்காரணத்தை நீங்கள் சொன்னபடியேதான் இப்படிக் குறிப்பிடுகிறார்
  நாகர்களும் வசித்ததாக குறிப்பிடும் ஏடு
  நாவலர்கள் வாழ்ந்ததினால் நா-கூர் என்று
  நற்றமிழில் பெயர்வைத்தார் நல்லோர் அன்று

  அந்த பனைஓலைத்தட்டுக்களும் பெரியவர் அழகாக அடுக்கிகொண்டுவந்த பனைவிசிறிகளும் அழகு என்றால் உங்களின் அந்த விசிறி சிலேடை அழகிலும் அழகு. உண்மைதான் அதுபோன்ற கைத்தொழில்கள் கற்றுக்கொடுக்கப்பட்டால் சிறுவர்கள் கவனம் சிதறாமல் இருக்கும்.பதின்ம வயதில் வெட்டியாய் ரசிகர் மன்றங்களில் வாழ்வை வீணாக்காமலும் இருப்பார்கள்

  பனைஓலைக்குல்லாய்களும் பனைப்பெட்டியில் தரப்படும் பிரியானியும் கிடைக்காதது வருத்தமே ஆனால். ஏதேனும் காரணம் இருக்கும் பாஸ்டர் அவை காணவும் உண்ணவும் இயலாமல் போனதிற்கும்.

  நாகூர் நீங்கள் சரியாக கவனிக்க முடியாத பகுதி அல்ல. இன்னும் கவனிக்க வேண்டிய ஒரு பகுதி அவ்வளவே!!!!

  வேட்கையினால் செய்யப்படும் பயணமே உங்களது எனினும் அதில் நீங்களறியாமல் பல ,நுண்ணிய ஆய்வு தகவல்கள் தந்துகொண்டே இருக்கிறீர்கள் மேலும்உங்கள் களப்பணியினால் ஈர்க்கப்பட்டு வருபவர்களுக்கு நீங்கள் கல்லிலும் முள்ளிலும் சென்று பின் வருபவர்களுக்கெனெ போட்டுக்கொடுத்திருக்கும் இந்த சாலை இலகுவாக இருக்கும்
  ஆய்வின்பொருட்டோ அன்றி உங்களை பின் தொடரவோ வருபவர்களுக்கு இந்த பதிவுகள் தகவல் சுரங்கம் என்பதில் ஐயமே இல்லை

  நாகூர் புராணத்தில் சொல்லி இருப்ப்பது போல,

  “பஞ்ச மற்றது படர்பிணி யற்றது பவஞ்செய்
  வஞ்ச மற்றது வறுமைமற் றற்றது, வாழ்க்கை
  யஞ்ச மற்றது தீவினை யற்றதன் றாகா
  நஞ்ச மற்றது நம்பெரு மானுறை நாகூர்”

  நாகூர் மட்டுமல்ல உலகமே இப்படி இருப்பின் எத்தனை நல்லது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: