பனைமரச்சாலை (69)


பதனீர் சத்யாகிரகம்

 

நாகூரிலிருந்து வேளாங்காண்ணிக்குச் சென்றோம். குறுகிய சாலையில் எண்ணிக்கையிலடங்கா வாகனங்கள். மே மாதம் கடைசி நேரம்  ஆன படியால் விடுமுறையை செலவிடும் பக்தர்களின் கூட்டம் அங்கிருந்தது. அமிர்தராஜ் கத்தோலிக்கர் ஆனபடியால் சொந்த திருச்சபை குறித்த விமர்சனங்களை கூறிக்கொண்டு வந்தார். முக்கியமாக திருச்சபை எப்படி வணிகமயமாகிப்போனது என்று. ஆழ்ந்து யோசிக்க வேண்டியவைகள் தாம்.

 

இந்த பிரச்சனை பொதுவாக அனைத்து மதங்களிலும் உள்ளது தான். காணிக்கை கொட்டவேண்டும் எனும் மனப்பாங்கு அதிகரித்திருக்கிறது, அதுவும் ஒரு வகையில் கட்டாயப்படுத்தி பெற்றுக்கொள்ளுவது அனைத்து மதங்களிலும் உண்டு. பணமே இன்று பலப் பரீட்சை நிகழ்த்தும் ஆயுதமானபடியல் பெரும் பொருளை திரட்டும்படியான கதைகளையே அனைவரும் சொல்கின்றனர். அனைத்து “பக்திமான்களும்” கொடுப்பதை பற்றியே பேசுங்க பாஸ்டர் என வேண்டுகோள் விடுப்பதை நான் ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன்.  அந்த பணத்தை என்ன செய்ய வேண்டும் என அவர்கள் அறிவார்கள். சில மரபான செலவு செய்யும் வழிகள் உண்டு, அதைத்தாண்டி ஒன்றும் யோசிப்பதற்கு வழியில்லை. ஆகவே என்னைப்பொருத்தவரையில், ஆன்மீகம் என்பதை முன்வைத்து அதன்  வாயிலாக திரட்டப்படும் பணம் பெருமளவில் விரயம் செய்யப்படுகிறது. இன்று ஆன்மீகம்  குறித்து  பேசுகையில் காணப்படவேண்டிய எளிமை மறைந்துபோய் பிரம்மாண்டங்களில் முட்டி நிற்கிறது.

 

திருச்சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இயேசுவின் சீடர் பேதுரு மற்றும்  யாவரும் இயேசுவின் அடியொற்றி, இறைப்பணியில் ஈடுபட்டனர். ஒருமுறை  பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் பேதுருவிடம் கொண்டுவர, அந்த மனிதன் தனக்கு பேதுரு ஏதாகிலும் உதவி செய்வார் என எதிர்பர்ப்புடன் அவரை நோக்க, பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன் நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும் (திருத்தூதர் பணிகள் 3: 6) எனக் கூறுவார். திருச்சபைக்கு மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு பகுதி இது. ஆனால் இன்று “நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” எனச் சொல்வோர்களிடம் வெள்ளியும் பொன்னும் கொட்டிக்கிடக்கிறது.

 

பதிமூன்றாம் நூற்றாண்டு, திருச்சபை பணம் கொழித்துக்கொண்டிருந்த சமயமது, அப்போதிருந்த போப் அவர்களை தாமஸ் அக்வினாஸ்  என்கிற இறையியலாளர் சந்திக்கச் சென்றார்.  அப்பொழுது எண்ணக்கூடாத செல்வத்தை போப் அவரிடம் காட்டி, மேற்கூறிய திருமறைப்பகுதியை மிகப்பெருமையுடன் சொன்னாராம் ” வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை” என திருச்சபை பேதுருவைபோல் இனி சொல்லவேண்டி வராது என. அதற்கு இறைவன்பால் ஈர்க்கப்பட்ட தாமஸ் அக்வினாஸ் பதிலளிக்கையில், பேதுருவைப்போல் “எழுந்து நட” என்றும் இனிமேல் திருச்சபையால் சொல்லமுடியாது என்றாராம். இந்த வேறுபாடு அனைவரும் அறிந்திருக்கவேண்டியது அவசியம்.

 

 

வேளாங்கண்ணியை விட்டு வேகமாக வெளியேறினோம். ஒருவகையில் அன்புக்குரியவர்கள் அங்கெ இருப்பதனால் மீண்டும் வரலாம் என்ற எண்ணம் ஒருபுரம், வேறொன்று குருத்தோலை ஞாயிறு மட்டுமே இங்கு வருவது எனக்கு ஏற்புடையதாக இருக்கும் என நான் எண்ணியது இன்னொன்று, எங்களிடம் செலவளிக்க அதிக நேரம் இல்லை என்பதே முக்கியமான தடையாயிருந்தது. உள்ளே வருவதைப்போன்றே வெளியேறுவதும் சிரமமாக இருந்தது. எப்படியோ தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியில் வந்தோம்.

 

நாங்கள் அடுத்ததாக செல்லவேண்டியது வேதாரணியம். போகிற வழியில் ஒரு சிறிய கடையில் சர்பத் குடித்தோம். எங்கள் பயணத்தின் அதிகர பூர்வ பானமாக சர்பத் மாறிவிட்டதோ என்னும் அளவிற்கு வழியெங்கிலும் சர்பத் குடித்துக்கொண்டோம். உண்மையிலேயே கடும் வெயில், உடலை குளிர்விக்க வேறு வழியில்லை, வழியெங்கும் பனைமரங்கள் இருந்தும் பதநீர் கிடைக்காத ஒரு சூழலில் வாழ்கிறோம் என்பதே கடும் எரிச்சலாக இருந்தது. சும்மா சொல்லக்கூடாது வேதாரணியம் மீண்டும் ஒரு சத்யாகிரகத்திற்காக என்னை அழைக்கிறது என எண்ணிக்கொண்டேன்.

உப்பு சத்யாகிரக ஸ்தூபியின் முன்பு, வேதாரண்யம்

உப்பு சத்யாகிரக ஸ்தூபியின் முன்பு, வேதாரண்யம்

 

இந்திய விடுதலைப்போரில் உப்பு சத்தியாகிரகம் குறிப்பிட தகுந்த தேசிய அலை எழுப்பிய ஒன்று. காந்தி உருவாக்கிய முதல் உப்பு சத்தியாகிரக போராட்டம்,   அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து துவங்கி சுரத் அருகிலுள்ள தண்டி வரை, 24 நாள் பயண திட்டம் கொண்ட உப்பு சத்தியாகிரகம் 1930ஆம் அண்டு மார்ச் 12அம் தேதி  துவங்கியது. 78 நபர்களோடு துவங்கிய பயணம் சிறிது சிறிதாக மக்கள் அதரவை பெற்று பிரிடிஷ் அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுக்கும் அளவுக்கு மிகப்பெரும் போராட்டமாக வெடித்தது. காந்தியோடு சுமார் நாடு முழுவதிலும் 80,000 மக்களையும் பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. உலகம் எங்கும் பத்திரிகைகளால் குறிப்பிடத்தகுந்த  போராட்டமாக இது வெளியிடப்பட்டது.

 

சத்தியாகிரகா என்னும் வார்த்தையை காந்தி இரண்டு வார்த்தைகளை கொண்டு இணைத்து உருவாக்குகிறார். சத்யா மற்றும் ஆக்கிரகா எனும் சமஸ்கிருத வார்த்தைகள் முயங்கி உண்மைக்கான வேட்கை என்பதாக பொருள் கொள்ளத்தக்க அறப்போரின் வார்த்தை வடிவாக காந்தி அதை முன்மொழிகிறார். காந்தி தான் வாசித்த புதிய எற்பாடு மூலம் மிகுந்த தாக்கத்தை அடைந்தவர். ஒரு முறை காந்தியவாதியும் எனது நண்பருமான டாக்டர் ஜாண் செல்லதுரை அகமதாபாத் வந்தபொழுது என்னை வித்யா  பீடிற்கு அழைத்துச் சென்றார்.  காந்தி அகமதாபாத்தில் இருக்கையில், வித்யா பீடில் நடக்கும் கிறிஸ்தவ தொழுகைக்குச் தவறாமல் செல்லுவதை வழக்கமாக வைத்திருந்தார் எனவும், அங்கு வருகிறவர்களுக்கு திருமறையை விளக்கி சொல்லுவதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார் எனவும் கூறினார். போதகராக அன்ட்த  அறையைப் நான் பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். “உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” (யோவான் 8:32. திருவிவிலியம்) என்கிற இயேசுவின் வார்த்தை அவரை கண்டிப்பாக தொட்டிருக்கும். அதை அவர் தமக்குரியதாகவும் இந்தியர்களுக்குறியதாகவும் மாற்றியபொழுது, திருமறையை பொருளற்றதாக ஏந்தியவர்களின் கை தளர்ந்தது.

 

இதை தொடர்ந்து தமிழகத்தில் தான் ராஜாஜியால் உப்பு சத்தியாகிரகம் முன்னெடுக்கப்பட்டது. நூறு நெறி தவறா போராளிகள் இந்த அஹிம்சைப் போரில் கலந்துகொண்டார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் திரு.ஏ.என். சிவராமன், திரு.ஜி. ராமசந்திரன்,  கல்கி சதாசிவம், டி எஸ் எஸ் ராஜன், சர்தார் வெத்ரத்னம்,  ருக்மினி லக்ஷ்மிபதி,  காமராஜர்,  அறந்தாங்கி சி. கிருஷ்னசாமி, பக்தவத்சலம் , சி. ஆர். நரசிம்மன், வைதியநாத அய்யர் ஆகியோருடன் மேலும் பலரும் அற்பணிப்புடன் கலந்துகொண்டார்கள்.

 

1930ஆம் ஆண்டு எப்ரல்  13ஆம் தேதி திருச்சியிலிருந்து துவங்கிய நடை பயணம் சந்தித்த துயரங்கள் சொல்லிமுடியாது. தஞ்சை கலக்டெர் தோர்னே (தொர்னெ) மிக திறமையக இச்சத்தியாகிரகத்தை தடைச் எய்ய திட்டமிட்டு, பத்திரிகை வாயிலாகவும் துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் எவரேனும் உப்பு சத்தியாகிரகம் செல்பவர்களுக்கு உணவோ உரைவிடமோ கொடுத்தால் ஆறு மாத சிரை தண்டனை என அறிவித்தார். அதையும் மீறி உணவிட்டு தங்குமிடம் அளித்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

 

பயணம் தங்கு தடையில்லாமல் முன்னேற மக்கள் ஆதரவு கொடுத்தனர். உணவு பொட்டலங்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டு போராட்டக்காரர்களுக்கு உதவிகள் குவிந்தன. அரசு சார்பில் போராட்டத்தை கலைக்க வந்தவர்களுக்கு, உண்ண உணவோ குடிக்க நீரோ கிடைக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கம்  மிகவும் தீவிரமாக முன்னேறி ஏப்ரல் 28ஆம் தேதி பிரிட்டிஷார் கண்களில் உப்பைத் தூவி விட்டனர். இரண்டு நாட்கள் பொறுத்து இன்னும் போராட்டக்காரர்கள் வந்துசேரும்படி ராஜாஜி அழைப்பு விடுத்தார். ஏப்ரல் 30ம் தேதி உப்பெடுக்க அவர் அளம் இறங்குகையில், சரணடையும்படி வற்புறுத்தப்பட்டு மீறியதால் கைது செய்யப்பட்டார்.

 

நாங்கள் வேதாரண்யம் சென்றபோது இன்னும் மூன்று கிலோ மீட்டர் செல்லவேன்டும் என்று சொன்னார்கள். அமிர்தராஜ் என்னை முன்னால் செல்லும்படி கூறிவிட்டு தனக்கு வந்த அழைப்பிலிருந்தார். நான் செல்லும் வழியில் குழவியோ எதோ என் கண்களின் அருகில் மோதியது. அப்படியே கண்ணடிக்குள் புகுந்து என் கன்னத்தில் கடித்து வைத்துவிட்டது. இத்துணை அழுத்தமான முத்தம் எனக்கு கிடைத்ததில்லை என எண்ணிக்கொண்டேன். முத்தத்தில்  கிறங்கியதால் வண்டி தள்ளாடியது, ஒதுக்கி நிறுத்தி அருகிலுள்ள கடையில் தண்ணீர் வாங்கி குடித்தேன். போன ஜென்மத்தில் பதநீர் ஊற்றெடுக்கும் பனையாக இருந்திருப்பேனோ தேனீக்கள் மொய்க்கின்றனவே என எண்ணிக்கொண்டேன். வலி தெறித்துக்கொண்டிருந்தது. கண்ணிற்கு எதும் ஆகிவிடுமா என பயந்தேன். நல்லவேளை கன்னம் சற்று தடித்தவாறு மாறிவிட்டது, வலியும் இருந்தது, மயக்கம் ஏதும் ஏற்படவில்லை. அமிர்தராஜ் வராததால், நான் மீண்டும் பயணித்து இடத்தை குறித்துக்கொள்ளலாம் என முன்னேறினேன்.

 

ஊர் முடிவுற்று வெறும் புதர்காடுகள் போன்ற இடங்கள் வந்துவிட்டன, அவர்கள் குறிப்பிட்டபடி ஒரு செக் போஸ்டின் அருகில் சிறிய டீக்கடை இருந்தது. அதில் இருந்தவர்களிடம் கேட்டபோது, இடதுபுறமாக பிரிந்து செல்லும் சாலையில் இரண்டரை கி மீ உள்ளே சென்றால் சத்தியாகிரக ஸ்தூபியைப் பார்க்கலாம் என்றார்கள். அப்போது அமிர்தராஜ் என்னை அழைத்தார். நேரக வாருங்கள் என்றேன். அவர் இணைந்தபோது கூட அந்த பயணம் மிகவும் தனிமையில் அமைத்தது போன்ற ஒரு எண்ணத்தை அளித்தது. மனித சஞ்சாரமற்ற இடம். 1930களில் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஓடி ஒளிந்து இலட்சியத்தை அடைந்திருக்கின்றனர்  என்பதை மட்டும் அந்த தனித்திருக்கும் இடம் அறிவுறுத்தியது.

 

 

உப்பு சத்யாகிரக தூண் முன்பதாக வந்தபோது அமிர்தராஜிடம் கூறினேன், “ஓய்,    இங்க பாரும், எவ்வளவு பனை மரங்கள் கடலை ஒட்டி நிக்கிது” அவர் அதுக்கென்ன என்பது போல் என்னை பார்த்தார். நான் சொன்னேன் ‘ஒரு உள்ளுணர்வு சொல்லிச்சி,  இங்க கண்டிப்பா பனை மரம் நிக்கும்ணு”. அவர் என்னை ஏகமாக கிண்டலடிக்க தொடங்கினார். தமிழ்நாடு முழுக்க எங்க போனாலும் பனைமரம் இருக்கும், மும்பையிலிருந்து வந்துட்டு, இங்க பன மரம் இருக்கும்ணு நெனச்சேன், அங்க பனமரம் இருக்கும்ணு நெனச்சேண்ணு கதவிடப்பிடாது” என்றார். நான் அதை ரசித்தேன், ஆனால் எனக்கு அந்த பனை மரங்கள் ஒரு முக்கிய குறியீடு. அவரும் அதை உணர்ந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

 

எனது பயணத்தின் மிக முக்கிய நாள் முக்கிய மற்றும் இடம் இது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. நானும் ஒரு போராட்டத்திற்கு ஆயத்தமாகிறேன் என்பதை அத்தூணின் முன்னால் நின்றபோது உணர்ந்தேன். எனது பாரம்பரிய உணவை நான் பெற்றுக்கொள்ள எனக்கு உரிமையில்லையா? வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் வேளையில் ரேஷன் கார்டுக்கு கருப்பட்டி கிடைக்குமா? மாதத்திற்கு ஒருமுறை மண்ணெண்ணைக்குப் பதில் ஒரு லிட்டர் பதநீர் கிடைக்குமா? மாநில மரம் பயனற்றிருந்தால் மாநிலம் முன்னேற்றப்பதையில் செல்கிறது என்பதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.?

 

ஆம் அனைவரையும் இணைத்து தமிழகம் தழுவிய ஒரு போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். “வெறும் பட்டை போராட்டம்”  அல்லது  “பதனீர் யாசகம் பெறும் போராட்டம்”. தமிழகத்தின் அனைத்து பனைமரங்களும் அரசின் போர்கால நடவடிக்கைகளால் மக்களுக்கு “தீங்கு விளைவிக்கா பானம் வழங்கும் திட்டம்” ஒன்று வழங்கும்படி கோரி ஒரு போராட்டம். கள் இறக்குவது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளுவோம்,  கள் இரக்குவதற்காக போராடவோ  நாம் மெனக்கெடவோ வேண்டாம். ஆனால் பதநீர் நாம் கேட்டு பெற்றுக்கொள்ளும் உரிமையுள்ள பானம். அதைக் கேட்போம், அதை தருவோம் என உறுதி கூறும் அரசுக்கு உறுதுணையாக நிற்போம். இலவசமாகவோ விலையில்லா பண்டமாகவோ அல்ல விலை கொடுத்து பெற்றுக்கொள்ளும் பண்டமாக அதை நாம் வாங்கலாம்.

 

அனைத்து சமுதாயத்தினரையும் இணைக்கும் உப்பைப்போல பனையும் அனைவரையும் ஒன்றிணைப்பது. ஆகவே உரிமையில்லா விஷயங்களை தவிர்த்து உரிமை கோரும் பதனீருக்காகவும் கருப்பட்டிகாகவும் நான் களமிறங்குவது சரியானதாகவே படுகிறது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (69)”

 1. Logamadevi Annadurai Says:

  இஸ்லாத்திலிருந்து இப்போது கிருஸ்துவத்திற்கான பயணத்தில் தொடங்குகிறது இந்த பயணம்.. திருச்சபைகள் மட்டுமல்ல பாஸ்டர் எல்லா ஆலயங்களுமே இப்பொது வணிகமயமாகிவிட்டது. காணிக்கை போடுபவர்களுக்கும் சிறப்பு தரிசன நுழைவு சீட்டு எடுப்பவர்க்குமல்லவா இறைவனின் நெருங்கிய தரிசனமும் பிரசாதமும் கிடைக்கிறது?

  செலவழிக்க நேரம் இல்லை என்பது உண்மைதான். எத்த்னை ஊர்கள், எத்தனை மனிதர்கள், எத்தனை நிகழ்வுகள் எத்தனை இடர்பாடுகள் எத்தனை நெடியதோர் சாலை?,
  உண்மைக்கான வேட்கை காந்தியிடன் இருந்தது எனில் பனைக்கான வேட்கை உங்களிடம்!!!!
  காந்தி மக்களை சாலைகளில் நடந்தே இணைத்தார் என்றால் நீங்கள் பைக்கில் பயணித்தே இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிரீர்கள். இரண்டும் சத்தியத்தை அறியும் விருப்புதான்

  உப்பு சத்யாகிரகம் குறித்து இத்தனை தகவல்களை நான் எங்கும் கேட்டதில்லை. வந்தனம் பாஸ்டர்!!!

  அந்த உங்கள் கண்கண்ணாடியில் தெரியும் ஸ்தூபியின் பிரதிபலிப்பு மிக அருமையான ஒரு புகைப்பட உத்தி. அமிர்தராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  ஆம் இது பலர் முன்வந்து நடத்தவேண்டியதோர் போராட்டம் பொங்கலுக்கு கருப்பட்டி தரலாம், நியாயவிலயில் இதை அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யலாம். கற்பனை செய்யவே எத்தனை நன்றாக இருக்கிறது?

  உப்பிலா பண்டம் மட்டுமல்ல!!! பனையில்லா சமுதாயாமும் கூட குப்பையிலேதான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: