பனைமரச்சாலை (71)


மலரும் மரமும்

 

காலை பயணம் மிக அருமையாக இருந்தது. நாங்கள் நினைப்பதற்கரிய நிகழ்வுகளை அந்த நாள் எங்களுக்காக எடுத்து வைத்திருந்தது.  நாங்கள் செல்லும் வழியில் ஒரு தாமரைக்குளம் இருந்தது நாங்கள் வண்டியை நிறுத்தினோம். குளத்தின் அருகில் பனை மரங்கள் நின்றன. தேசிய மலரும் மாநில மரமும் ஒருங்கே கவனிப்பாரற்று இருந்ததை பார்க்கும்போது பெருமூச்சுதான் வந்தது. அமிர்தராஜ் மெய்மறந்து அங்கிருந்த தாமரை மலர்களை படம்பிடிக்கத் துவங்கினார்.

 

அமிர்தராஜ் முள்நிறைந்த அந்த குளத்தினுள் சென்று புகைப்படம் எடுத்தார். அவர் மனதில் என்ன ஓடிக்கோண்டிருந்தது என எனக்குத் தெரியாது. ஆனால் அங்கே குளித்துக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் தான் பறித்த தாமரைகளில் ஒன்றை எனக்குக் கொடுத்தான். இரு கரங்களிலுமாக ஏந்திக்கொண்டேன். என்ன அழகிய நிறம், ரோஜா வண்ணம் என ஒன்று இல்லை தாமரை வண்ணத்தையே ரோஜா சூடிக்கொண்டுள்ளது. மிகப்பெரிய இலைகளைப்போன்ற இதழ்கள், அடுக்கடுக்காக விரிந்து செல்லும் அம்மலர் மெல்லிய வசீகர வாசனையோடிருந்தது. சேற்றில் மலர்ந்த செந்தாமரை என்பது அதன் அழகுக்காக மட்டுமல்ல அதன் நறுமணத்தையும் நினைத்தே கூறியிருப்பார்கள் போலும்.

தாமரை மலருடன்

தாமரை மலருடன்

எனக்கு சிறுவயதில் ஆசிரியர் சொல்லித்தந்த

 

வெள்ளத் தனைய மலர்நீட்டம் – மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

 

ஒருவகையில் அதுவரை நான் கூர்ந்த் பார்க்காத ஒரு மலரை என் கண்முன்னால் நிறுத்திய தமிழாசிரியரை நான் நன்றியுடன் நினைக்கிறேன். தண்ணிருக்கு மேல் தான் தாமரை மலர் இருக்கும் என்பது தெரியும் ஆனல் அவைகள் நீர் உயர உயர நீண்டு வளரும்  எனும் ஒரு உண்மையை திருக்குறள் வாயிலாக அவர் சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது கம்போடிய பயணத்தில்  கத்தோலிக்கத் திருச்சபை நடத்தும் ஜெசுயிட் அகதிகள் சேவை மையத்தில் அழகான தாமரை குளம் இருந்தது. தாமரை வழங்கும் நம்பிக்கை அபாரமானது. மறு வாழ்விற்கு அது அடையாளமாக இருக்கிறதை நான் அங்கே தான் உணர்ந்துகொண்டேன்.

 

 

தொல்பழங்காலத்திலிருந்தே தாமரை மக்களின் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெற்றிருக்கிறது, குறிப்பாக எகிப்திய மக்கள் தாமரையை மிக முக்கியமாக கருதியிருக்கிறார்கள். ரா என்கிற சூரிய கடவுள் அங்கே வழிபடபட்டபடியால் தாமரை (அல்லது அல்லி/ குவளை) அங்கே மதிப்புக்குரியதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சூரியன் வளமைக்கு அடையாளமாக இருக்கும் பட்சத்தில் தாமரை இன்னும் பொருளுள்ளதாக மாறுகிறது. நைல் நதி சேர்த்த வண்டலில் தாமரைகள் வளரும்போது அவைகளும் உணவு, மருந்து, அலங்காரம் என பல வகைகளில் அவர்களுக்கு பயனுடையதாய் இருந்திருக்கும். முக்கியமாக வண்டலில் தமரை வளரும்போது அவர்கள் அந்த மண் விவசாயத்திற்கு ஏற்றது எனவும் கருத இடமுள்ளது. ஆகவே வளமைக்கு காரணமான மலராக அவர்கள் வாழ்வில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

 

இந்திய அளவில் தாமரை பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது, அழகின் அடையாளமாகவும், வளமையின்  அடையாளமாகவும், செழுமையின் அடையாளமாகவும், ஆன்மீகத்தின் அடையாளமாகவும்  பயன்படுத்தப்படுகிறது. சரஸ்வதி அமர்ந்திருப்பது மிக முக்கியமாக உடனே நமது நினைவுக்கு வருவது. பல்வேறு சிலைகள் அமர்ந்திருக்கும் பீடமும் தாமரை வடிவில் அமைத்திருப்பது அழிவின்மையை குறிக்கிறதோ? வறண்ட நாட்களின் போது அழிந்து போன தாமரை மீண்டும் நீர் வந்த பின்பு தளிர்பது ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கலாம்.

 

இரண்டு முக்கியமான காரியங்கள் எனது எண்ணத்தை உடனேயே தொட்டது. இந்து மதமும் புத்த  மதமும்  தாமரைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்டு. ஆகவே கிறிஸ்தவ ஆலயங்களில் பொதுவாக தாமரையை காண்பது அரிது. ஆனால் உண்மை என்னவென்று சொன்னால் தென்னிந்திய திருச்சபையின் சின்னமாக இருப்பது மலர்ந்த தாமரையும் சிலுவையும் தான். சிலுவையினூடாக காணப்படும் அந்த தாமரை இதழ்களே தூய அவியின் வடிவமாக அக்கினியாகவும் உரு பெறுவதைக் காணமுடியும்.  இந்திய சிந்தனையோடு முயங்கி உருவான அர்த்தம் பொதிந்த ஒரு சின்னம் அது. எத்தனை பேர் அதை ஆழ்ந்து கவனித்திருப்பார்களோ தெரியாது.  சி ஏஸ் ஐ குமரி பேராயம் சிலுவையும் பனையோலையும் கொண்டுள்ளது.  ஆனால் ஓலையை கொண்டு அவர்கள் இதுவரை எதையும் செய்ததில்லை. ஒரு நினைவாக வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான்.

சிலுவையும் பனையும் சிலுவையும் தாமரையும்  யாவும் பற்பல விதங்களில் ஒன்றை ஒன்று நிறைவு செய்பவை. இணைவினால் அவைகள் கொடுக்கும் அர்த்தம் பன்மடங்காகிவிடுகிறதை நான் கவனித்திருக்கிறேன். தனித்து சிலுவையை பார்க்கும்போது அது எனக்க்கு மட்டுமே பொருள் தருவதாயிருக்கிறது. அனால்  தரையுடன் ஒரு சிலுவையை பார்க்கும்போது மனம் விம்மும் ஒரு ஆழ்ந்த பொருள் அதனுள் உறைந்திருக்கிறது.  தாமரையோடுள்ள சிலுவை மேலதிக பொருள் தருகிறது. இந்திய கிறிஸ்தவர்கள் சிலுவையுடன் தனித்து செல்கிறவர்கள் அல்ல, அவர்கள் இங்குள்ள தொல் பாரம்பரியத்தின், தூய்மையின் சின்னங்கள் ஆகவே தியாக சிலுவை மேலதிக பொறுப்பை தென்னிந்திய கிறிஸ்தவனிடம் கோருகிறது.

 

திருமறையில் ஒரே ஒரு புத்தகத்தில் தாமரை குறிப்பிடப்படுகிறது. அது ஆச்சரியமான  ஒரு விஷயம். தமிழ் திருமறையை மொழிபெயர்த்தபோது தாமரை எனும் வார்த்தையை அவர்கள் இணைக்கவில்லை, அதன் காரணத்தை நாம் அறியோம். ஆனால் அந்த வசனங்கள் சொல்லும் குறிப்புகளைப்பர்த்தால் கண்டிப்பாக அது தாமரையாகத் தானிருக்கவேண்டும்.

 

அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.

தழைகளின் நிழல் அதைக்கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.(யோபு 40: 21 – 22)

 

மேலே குறிப்பிடப்படுகிற மிருகம் நீர் யானையை ஒத்துப்போகின்ற ஒன்று ஆனால் பலஸ்தீனாவில் நீர் யானை கிடையாது. அப்படியே தாமரை மலரும் கிடையாது, எனில் எப்படி திருமறையில் இவைகள் கூறப்பட்டன? அவைகள் மர்மமாக இருப்பதற்கு காரணம் யோபு யூதன் அல்ல,

 

ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார்.

அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார்.

கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார். (யோபு 1: 1)

 

யோபு குறித்த பல்வேறு யூகங்களே இன்று எஞ்சுகிரது, ஆகவே பிற சமயத்திலும் கடவுளின் பிரியத்த்துக்குரியவர்கள் வாழ்வார் எனும் கருத்தை யூதர் உணரும்பொருட்டு இவை இடம்பெற்றிருக்குமா எனும் கேள்வி தொக்கி நிற்கிறது. ஊசு நாட்டில் எழுதப்பட்ட ஒரு காவியத்தை தங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் என கருதி யூதர்கள் பயன்படுத்தினார்களா? ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஆங்கில மொழிபெயர்பில் “தாமரை” (Lotus) என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

 

அழ்ந்த பொருள் தரக்கூடிய தாமரையையே நாம் தேசிய மலராக கொண்டிருக்கிறோம். அப்படியே ஆழ்ந்த அர்த்தம் கொண்டதுதான் நமது மாநில மரமாகிய பனை . தொல் வழிபாட்டில் முக்கிய இடம் பெற்றவைகளே. அவ்விதம் அவைகள் இன்று ஒரு குறியீடாக  மட்டுமே நம்மிடம் எஞ்சி நிற்கிறது.

 

அன்று காலை உணவை அதிராம்பட்டிணம் வந்து எடுத்துக்கொண்டோம். காலையில் சற்று நேரம் அங்கே அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு கிளம்பினோம். அங்கிருந்து நாங்கள் செல்லும் வழியில் பைக் வேகம் குறைந்தது. பழுது பட்டிருக்குமோ எனும் ஐயம் தோன்றியது இருக்காது என எண்ணிக்கொண்டோம். ஆனால் வேகமாக செல்ல இயலவில்லை. அப்படியே நாங்கள் வந்துகொண்டிருக்கும்போது ஒரு சிறிய இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் இடத்தைக் கண்டு அங்கே வண்டியை நிறுத்தினோம்.

எங்களை அங்குள்ளவர்கள் சூழ்ந்து கொண்டார்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என கேட்க நாங்கள் பனை புராணத்தை மீண்டும் சலிக்காமல் துவங்கினோம். அனைவரும் ஆர்வமுடன் கேட்டார்கள். பனையை காப்பற்றியே தீரவேண்டும் என உறுதிமொழி மட்டுமே பாக்கி இருந்தது.

 

எங்கள் வாகனத்தை பழுதுபார்ப்பவர் எடுத்துச் சென்றார். சற்று நேரத்தில் அவர் வந்தபோது எங்கள் வகனத்தில் ஆயீல் எப்பொழுது செக் செய்தீர்கள் எனக் கேட்டார். நான் ஒரு வரம் இருக்கும் என்றேன். ஆனால் அயில் விட்ட பிறகு நான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் கி மீ பயணித்திருக்கிறேன். அவர் சுத்தமாக ஆயில் இல்லை என்றார். ஏலுரில் ஒருநாள் சென்று ஒரு மெக்கானிக்கை பர்க்கவேண்டும் என நினைத்திருந்தோம். ஆனால் அன்று மிகவும் பரபரப்பாக நாள் சென்றதால் அன்றும் இயலவில்லை. தவறு செய்திருக்கிறேன். இனி எப்படி பயணத்தை நிரைவு செய்வது எனும் கே.ள்வி என் முன்னால் கோர தாண்டவம் ஆடியது.

 

என்னிடத்தில் ஆயில் இல்லை பக்கத்துக் கடையில் வாங்குங்கள் என்றார். நான், நீங்களே வாங்குங்கள் என்றேன், அதற்கு அவர் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுவதில்லை என்றார். என்ன பிரச்சனையோ. சிறு வயதில் இருவர் சண்டை போட்டார்கள் என்றால் அவர்களை இணைத்து வைப்பது மிகப்பெரிய புனித கடமையாக செய்திருக்கிறேன். போதகர் ஆன பின்பு, ஒரே ஒரு முறை தான் பிரிந்த ஒரு வயோதிப தம்பதியை சேர்த்து வைக்க முடிந்தது. பல வேலைகளில் சேர்த்து வைப்பது இயலாதோ எனும் அளவிற்கு ஒன்றும்  இல்லாத காரியங்களை பெரிதாக்கி கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் ஒன்றாம் வகுப்பில் நாங்கள் சந்தித்த அதே பிரச்சனைக்கு நிகரானவைகள் தாம் அனைத்தும். மனங்கள் இறுகிவிட்டால் நெகிழ்த்துவது சுலபம் அல்ல.

 

அவர் வண்டிக்கு ஆயில் ஊற்றும்போது பார்த்தேன் பனை மரங்கள் சாலையின் மறுபுறம் நின்றுகொண்டிருந்தது. அதற்கு அருகில் கட்டுமாவடி எனும் பெயர் பலகை இருந்தது. அமிர்தராஜிடம் கூறினேன், இது தான் பயண திட்டத்தில் உள்ள ஊர், உச்சரிப்பில் பிழை ஏற்பட்டதால் அன்று வழி தவறினோம், இன்று வாகன பிரச்சனையினால் இங்கு வந்க்டு நிற்கிறோம் என்று. எங்களுக்கு உதவி செய்த மெக்கானிக், குறைந்த கட்டனமே வாங்கினார், ஆனால் வண்டி எவ்வளவு தூரம் ஓடும் என அவர் உறுதி தரவில்லை.

 

அந்த நேரத்தில் சென்னையிலிருந்து என் டி றி வி தொலைக்காட்சியிலிருந்து சாம் டானியேல் என்னை அழைத்தார். மாலையில் 4 மணிக்கு உள்ளதாக நீங்கள் ராமெஸ்வரம் சென்றால் உங்களுக்காக எங்கள் செய்தி பிரிவு ஆட்கள் காத்திருப்பார்கள் என்றார். அமிர்த்தராஜ் இதக் கேட்டவுடன் மிகவும் உர்சாகமாகிவிட்டார். எப்படியாவது, அனேகருக்கு இந்த பயணத்தை எடுத்துச் செல்லவெண்டும் என்பது அவருடைய பேராவல். திருப்பனந்தாள் செல்லும் வழியில் சென்னையிலிருந்து வந்த ஒரு தொலைக்காட்சி அழைப்பிற்கு போய் வரலாமா என்று மீண்டும் மீண்டும் கேட்டார். நான் நேரத்தை சுட்டிக்காட்டி “அது நமக்கு ஒத்துவராது” என கூறினேன். நான் போதகராயிருந்தும் கூட, உண்மையில் மைக்கை பார்ப்பது என்றால் அவ்வளவு பயம் எனக்கு.

 

அமிர்தராஜுக்கு குஷி வந்துவிட்டது என்று சொன்னால் உடனடியாக கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவார். சிரித்துக்கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தோம், எவ்வளவு தூரம் போக முடியும் எனும் உறுதி இன்றி. வண்டி புறப்பட்டது.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (71)”

 1. Logamadevi Annadurai Says:

  இயற்கையை உற்று நோக்கும் வெகு சில மனிதர்களில் நீங்களும் ஒருவர் பாஸ்டர். நாம் இயற்கையின் ஒரு பகுதி என்பதை நம்மில் பலர் உணர்வதுஇல்லை என்பதே இப்போதைய அனைத்து இழப்புகளுக்கும் மூல காரணம்
  உங்களின் முதல் பனிமரச்சாலை பதிவிலிருந்தே நான் தொடர்ந்து காண்பது உங்களின் இந்த மன்றாட்டைத்தான். ஒரு முறை கூட உங்களின் சொந்த காரணங்களுகாக இறைவனிடம் இறைஞ்சியதே இல்லை நீங்கள்
  மரநேயம் மலர் நேயம் மனித நேயம் மிக்க பதிவுகள்
  மாநில மரமும் தேசிய மலரும் கவனிப்பாரின்றி கிடப்பது வருத்தமே.
  எந்த நாட்டிலும் இப்படி இருக்க வாய்ப்பில்லை. அந்தந்த நாடுகள் தேசிய மலர்களையும் மரங்களையும் போற்றிப்பாதுகாக்கின்றன.
  நாம் நமது இயற்கையினோடான உறவை மென்மேலும் வளர்த்துக்கொள்வதே இவற்றிற்கெல்லாமான ஒரே தீர்வாக இருக்கும்
  குளித்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் உங்களுக்கு தாமரையை அளித்தது ஒர் அற்புத கவிதைத்தருணம்
  தாமரையின் இலை தண்டு மலர் வேர் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை
  இன்றும் எங்கள் ஊரில் தாமரை தண்டு வத்தல் கிடைக்கும் . மிக சுவையானது மற்றும் உடலுக்கும் நல்லது
  பெளத்ததின் 8 முக்கிய சின்னங்களில் தாமரையும் ஒன்று.இலங்கயில் எல்லா பெளர்ணமி தினத்திலும் வெண்ணிற ஆடையணிந்த ஆண்களும் பெண்களும் வெண்தாமரையை ஏந்தியபடி புத்தரின் ஆலயம் செல்வதை கண்டிருக்கிறேன். நானும் அப்படி சென்றிருக்கிறேன்
  தாமரை சேற்றைலிருந்து வானை நோக்கி எழுவது போல மறுபிறப்புகள் பல கொண்ட சுழற்சியில் ஒவ்வொரு முறையும் உடலைத் துறந்து ஆத்மா முக்தி பெறுகிறது என்பதில் பௌத்தர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். தூய்மையான இதழ்களைக் கொண்ட தாமரை ஞானத்தின் உறைவிடமாகிறது. அது தன் இதழ்களைத் திறந்து சூரியவொளியைத் தன்னுள் ஏற்று தன் அழகையும் தூய்மையையும் மணத்தையும் இவ்வுலகுடன் பகிர்கிறது.
  சீனர்கள் தாமரையை காண்பதே நன்மையை கொண்டுவரும் என நம்புவார்கள். அங்கு தாமரை சாகுபடியே செய்யப்படுகின்றது
  கடவுள் தாமரையில் அமர்வது அதில் உள்ள பீடம் போன்ற உட்பகுதியால் இருக்கலாம். இதுதான் அல்லியயும் தாமரயையும் வேறுபடுத்திக்கட்டுவது.
  தாமரையும் சிலுவையும் ஒப்பீடு மிக அழகு .

  “எவ்வளவு தூரம் போக முடியும் எனும் உறுதி இன்றி. வண்டி புறப்பட்டது.”

  the palms and lotuses are lovely
  you have promises to keep
  you have miles to go in this road

  விண்ணவர்க்கரசன் நம் மன்றாட்டுகளுக்கெல்லாம் செவிசாய்ப்பாராக!!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: