பனைமரச்சாலை (72)


ஓலைக்கொடி

 

நாங்கள் வண்டியில் ஏறி புறப்படும்போது வேறொருவர் அங்கே வண்டியில் வந்து இறங்கினார். எங்கள் வாகனத்தை வழியில் பார்த்ததாகவும் ஆகவே அது எங்கே போகிறது என பார்க்க வேண்டி அதை தொடர்ந்து வந்ததாகவும் கூறினார். என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டோம். அவர் அருகிலிருந்த கடையைக் காட்டி இது தான் என்னுடைய கடை என்றார். அது ஒரு பனை மரத்தடிகள் விற்கும் கடை. தனது குடும்பத்தினர் பாரம்பரியமாக அதை செய்து வருவதால், தானும் அதையே செய்து வருகிறேன் என்றார். தவறாக எண்ண தோன்றவில்லை. பனை மரங்கள் மீண்டும் ஒரு வாழ்வை பெற ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது என்றே தோன்றியது.

வீட்டு உபயோகத்திற்காக பனந்தடிகளை விற்கும் குமார் அவர்களுடன்

வீட்டு உபயோகத்திற்காக பனந்தடிகளை விற்கும் குமார் அவர்களுடன்

பாரம்பரியமாக நடைபெறும் பனை மரங்கள் முறிக்கும் நிகழ்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு உருவான ஒன்று. உருளையான மரங்கள் பொருத்தமான தூணாக விளங்கியது. தற்போது ஒரு உருளையை நான்காக வெட்டிப்போடுகிறார்கள். பின்பு கோடலி கொண்டு அவைகளை அவர்கள் வெட்டி பிசிறு நீக்குகிறார்கள். பனை மரத்தை வெட்டுவதற்கு நவீன ரம்பங்கள் உதவாது என்பதை நான் அங்கே கேள்விப்பட்டேன்.  மற்ற மரங்களை போல் பனை மரத்தை ரம்பங்களைக் கொண்டு  அறுத்து எடுப்பது இயலாத காரியம். பனை மரத்தை குறுக்காக வெட்டிவிடலம். ஆனால் நீள வாக்கில் பனை மரத்தை சீர் செய்யவேண்டுமென்றால் கோடலி அவசியம். கோடாலியை பயன்படுத்தத் தெரிந்த இறுதி தலைமுறை இது என்றே எண்ணத்தோன்றுகிறது.

கற் கோடாலி, கற்காலம் (உதவி: இணையம்)

கற் கோடாலி, கற்காலம் (உதவி: இணையம்)

கோடாலியின் பயன்பாடு மனித வாழ்வின் மிக துவக்கத்திலேயே ஆரம்பமாகிவிட்டதை கற்கால சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. உலகம் முழுவதும் நெருப்பிற்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த குறிப்பிடத்தகுந்த ஒன்றாக கற்கோடாரிகள் ஆய்வாளர்களால் முன்னிறுத்தப்படுகிறது. கற் கோடாரிகள் பயன் படுத்தும் வேளையில் அவைகள் பல்வேறு பயன்பாட்டிற்குரிய ஒன்றாக முன்னிற்பது ஆச்சரியமானது. வேட்டையாடிய மிருகத்தின் மாமிசத்தை வெட்டவும், தோலை கிழித்து எடுக்கவும், மரங்களை வெட்டவும், மண்ணை தோண்டவும், தற்பாதுகாப்பிற்காகவும்,  ஆயுதமாகவும் மற்றும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

 

கோடாலி தண்ணீரில் விழுந்த கதை நாம் அனைவரும் அறிந்தது. உலகமெங்கும் செல்லுபடியாகும் ஒரு கதை அது.  மழு என்று அழைக்கப்படும் கோடாலி மிக முக்கிய ஆயுதமாக இந்திய பெரு நிலத்தில் மிக முக்கிய ஆயுதமாக பயன்பாட்டு பொருளாக இருந்திருக்கிறது.  பரசுராமர் குறித்த அனைத்து கதைகளிலும் மழுவே முக்கிய ஆயுதமாக இருக்கிறது.  அப்படி மிகப்பெரும் சவால் அளித்தவைகளை மேற்கொண்ட பெருமை கோடலிக்கு உண்டு. பனைமரம் அந்த சவாலில் இணையாக இன்றும் நிற்கிறது.

பரசுராமர் ஓவியம் (உதவி: இணையம்)

பரசுராமர் ஓவியம் (உதவி: இணையம்)

திருமறையில் கோடாலிகளைக் குறித்து அனேக வசனங்கள் வருகின்றன அவைகளை இந்திய பொதுநிலத்தை முன்வைத்து பேசி பொருள் கொண்டார்கள் என்றால் இன்னும் அதிக பயனுள்ளதாக இருக்கும். இயேசுவின் ஒரு கூற்று மட்டுமே எனக்கு கோடாலியோடு தொடர்பு படுத்த ஏற்றதாக இருக்கிறது. ”எய்தவனை” மட்டும் விட்டுவிட்டு அம்பை மட்டும் நோவதேன்?” எனும் பழமொழி கோடாரிக்கும் பொருந்தும்.

 

ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று.

நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும். (மத்தேயு 3: 10)

 

திருச்சபையில் அனேக போதகர்கள் மேற்கூறிய பகுதியை  பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் தண்டனை அருகில் இருக்கிறது என்பதை உணர்த்தும்படியாக இவைகளை சொல்லுவார்கள்.  கோடாரி ஒரு பணி செய்ய ஆயத்தமாக இருக்கும் கருவி. அது கடவுளின் கரத்தில் இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். அனேக வேளைகளில் கோடாரி தமது கரத்தில் இருப்பதாக பாவித்து மிக அபாயகரமாக வீசுகிறார்கள்.

 

 

மேற்கூறிய  திருமறைப் பகுதி, கனிகொடாத மரங்களெல்லாம் (பயனற்ற மரங்கள்- அன்றைய புரிதலின்படி)  கோடாரி கொண்டு வெட்டப்படுவது குறித்து எழுதப்பட்டிருக்கையில் கனிகொடுக்கும் பனை மரங்கள் வெட்டப்படுவது குறித்த பிரக்ஞை அற்று திருச்சபை காணப்படுவது  முரணான காரியம். கனி கொடுப்பவைகளை வெட்டிவிட்டால் பிளாட் போடுவதற்கு ஏதுவாக இருக்கும் போல. சூழியல் சார்ந்து திருச்சபையில் சிந்திக்க வேண்டிய மேலதிக பொறுப்புகள் அனேகம் உண்டு.

 

குமார் என்று பெயர் கொண்டுள்ள அந்த மனிதர் கிறிஸ்தவரா என்று தெரியாது ஆனால் ரூத் என தனது மனைவி பெயரில் கடையை வைத்திருந்தார். நான் கடைக்குள் சென்று பார்த்தபோது மிக அழகாக பனந்தடிகளை வெட்டி ஒழுங்கு செய்து வைத்திருந்தார்கள். பனை மர வேட்கை பயணத்தை குறித்து கேள்விப்பட்டவுடன் அவர் தனக்கு பனை மரம் மீது உள்ள பற்றுதலைக் குறித்து சொல்ல ஆரம்பித்தார்.

 

பனந்தடிகளை விற்பனைக்காக வெட்டுபவர்கள் வேறு அதை செங்கல் சூளைக்காக வெட்டுபவர்கள் வேறு என அவர் விளக்கம் கூறினார். முதிர்ந்த பனைமரங்களையே அவர்கள் வெட்டுவதாகவும், உயரமான வயதான மரங்கள் தெரிவு செய்தாலே அவைகள் வீடு கட்டவோ வேறு பயன்பாட்டிற்கோ உகந்ததாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

 

மேலும் அவர், கோடலி கொண்டு பணி செய்பவர்களை நான் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் என்றார். அவரது கடை  இருந்ததற்கு அடுத்த வளாகத்தில், பனந்தடிகளை வெட்டி சீர் செய்யும் இடங்கள் இருந்தது. ஆனால் அன்று அங்கு வேலை நடைபெறவில்லை. இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் சென்றால் வேறொரு பட்டறை வரும் என்றார். எங்களை சற்று முன்னால் அனுப்பிவிட்டு, அவருக்கு முக்கிய வேலை இருப்பதால், அவர் சற்று பின்னால் வருவதாக ஒப்புகொண்டார்.

கோடாலி மனிதர்களுடன்

கோடாலி மனிதர்களுடன்

சுமார் 5 பேர் பணிபுரியும் பட்டறை அது. அங்கே அந்த பட்டறையின் முதலாளியும் தொழிலாளிகளுடன் இணைந்து பணியாற்றுகிறதைக் கண்டோம். அனைவரும் சட்டைகளை கழற்றி போட்டுவிட்டு வெறும் கைலியுடனோ அல்லது டவல் கட்டிக்கொண்டோ பணியாற்றுகிறார்கள். நாங்கள் சென்றபோது அனைவரும்  ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். ஆகவே அவர்களுடன் பேசுவதற்கு அந்த நேரம் வாகாக அமைந்தது.  குறைந்த விலையுள்ள பனைமரங்கள், இவர்கள் கரங்களில் வந்த பின்பே சற்று விலை ஏறுகிறது. உள்ளூரில் உள்ள தேவைகள் மட்டுமல்லாது சுற்றிலும் உள்ள இடங்களுக்கும் பனந்தடிகளை அனுப்புகிறார்கள். முக்கியமாக வீடு கட்டுவதற்கும், மிக சமீப காலங்களில் ஓசூர் அருகில் இருக்கின்ற ஆட்டுப்பண்ணைகளுக்கும் அனுப்புகிறார்கள். ஆட்டுப்பண்ணையில் ஆடுகளின் சிறுநீர் பட்டு வேறு மரங்கள் மட்கிப் போய்விடுகின்ற போது, பனந்தடிகள் மிக நன்றாக உழைப்பதால் இவர்களிடம் வந்து வாங்குகிறார்கள்.

 

அங்கிருக்கும்போது அவர்கள் மேலும் எங்களுக்கு ஒரு புது தகவலை வைத்திருந்தார்கள். பனைமரத்தின் தூர் பகுதியை சிறிய தொட்டி போல குடைந்து அதில் மாடுகளுக்கு தீவனம் வைக்கும் பழக்கம் அப்பகுதியில் உண்டென்று சொன்னார்கள். அவர்களின் தொடர்பு எண்ணை எடுத்துக்கொண்டோம். ஆனால் களத்தில் சென்று பார்க்க இயலவில்லை. அந்த நேரத்தில் மீண்டும் குமார் வந்துவிட்டார். எங்களுக்கு அவர் விடையளிக்க அங்கிருந்து புறப்பட்டோம்.

 

நான் எனது பயணம் குறித்து யோசிக்கையில் வாழ்வின் அர்த்தம் பொதிந்த கணங்களாகவே ஒவ்வொன்றும் இருந்திருக்கிறது.  வேட்கையுடன் செல்வதால் அனேக காரியங்களை என்னால் அவதானிக்க முடிகிறது, என்னை நோக்கி அனேக உண்மைகள் எழுந்து வருகின்றன. ஆனால் என்னால் அவைகளுக்கு முழுமையாக எனது நேரத்தை அற்பணிக்க இயலவில்லை. எனது உரையாடல்கள் கூட தரவுகளை சேகரிக்கும்படியான ஒன்றாக அமையாமல் பனை சார்ந்த வாழ்வு நடத்துபவர்களுடன் ஏற்படுத்தும் தொடர்பு என்பதாகவே அமைந்திருக்கிறது. நான் எனது பயணம் குறித்து திட்டமிட்டது சொற்பமே, ஆனால் அது தன்னக்கான ஒர் அபாரமான  வடிவமைப்பை கொண்டிருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. மீண்டும் மீண்டும் பயணிக்க வெண்டும் எனும் எண்ணம் மட்டுமே நெஞ்சை நிறைக்கின்றது.

வெட்டப்பட்ட பனைமரங்கள்

வெட்டப்பட்ட பனைமரங்கள்

நாங்கள் அங்கிருந்து விலகி 10 கிலோ மீட்டர் சென்றிருக்க மாட்டோம் எங்களுக்கு வலதுபுறம் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு இடத்தில் பனைமரங்கள் வெட்டுண்டு கிடந்தன. சாலையைக் கடந்து அங்கு சென்று எங்கள் வாகனத்தை நிறுத்தினோம். ஒரு தாத்தாவும் பாட்டியும் மட்டுமே அங்கிருந்தார்கள். உடல்களை நீக்கிவிட்டு தலைகளை சிதறடித்த இடம் போல் காணப்பட்டது. ஒரு வெட்டுண்ட மரத்திலிருந்த ஓலையை பார்க்கையில், தனது ஓலைக் கரங்களை உயர்த்தி அபயமிட்டபடியே அப்பனைமரம் உயிர்விட்டது போலிருந்தது. தேவையற்ற ஒரு கலவரம் நிகழ்ந்தது போலிருந்தது.  அனைத்துமே இளம் பனை மரங்கள் என்பதை இலகுவில் கண்டுகொள்ள முடிந்தது. இயந்திர ரம்பங்களை எடுத்து ஈவு இரக்கமின்றி சீவிதள்ளியிருக்கிறார்கள். அடிமரம் அனைத்துமே வெள்ளைவெளேரென்று பால்மணம் மாறா பாலகர்களைப் போல் காணப்பட்டது.

கூரை வேய சேகரிக்கப்பட்ட பனையோலைகள்

கூரை வேய சேகரிக்கப்பட்ட பனையோலைகள்

அங்கிருந்த தாத்தா பாட்டி என்ன செய்கிறார்கள் என கவனித்தோம். அவர்கள் ஓலைகளை எடுத்து சேகரித்துக்கொண்டிருந்தார்கள். எதற்காக பனைகளை வெட்டியிருக்கிறார்கள் என கேட்டபோது, அது எங்களுக்கு தெரியாது, எங்கள் குடிசை இப்பொழுது ஒழுகிக்கொண்டிருக்கிறது, இந்த ஓலைகளை எடுத்துக்கொள்ளலாமா என அனுமதி பெற்று இங்கே வந்திருக்கிறோம் என்றனர்.  எழுபது வயது இருக்கலாம். அவர்களுக்கு உதவி செய்ய இன்னொரு இளம் வாலிபர் இருந்தார். வேகாத  வெயிலில் அவர்கள் செய்யும் அந்த கடும் உடலுழைப்பு அசாதாரணமானது. ஒன்றுமில்லா ஏழைகளுக்கு பனைமரம் எத்துணை பெரிய வரம். பனைகளை முறிக்காதபடியே கூட அந்த ஏழைகளுக்கு  ஓலைகளை தானம் செய்திருக்கலாம் அந்த தர்ம பிரபு.

தலை கொய்யப்பட்டு கிடக்கும் பனை

தலை கொய்யப்பட்டு கிடக்கும் பனை

பாட்டி, ஓலைகளை கட்டுவதற்கு பனை நாரினை எடுத்து சீராக்கி முடிச்சு போட்டுக்கொண்டு இருந்தார்கள். அமிர்தராஜ் பேரிடர் நேரத்தில் புகைப்படக்காரர்கள் இயங்குவதுபோல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். அவரது புகைப்படங்களே, நாம் எவ்விதம் பனை மரங்களை துச்சமாக மதித்து அதனை இல்லாமலாக்கியிருக்கிறோம் என எதிர்கால சந்ததியினருக்கு கூவி அறிவிக்கும்  ஆவணம். அப்படியே நகர்ந்து நகர்ந்து பாட்டியின் அருகில் வந்து மெல்ல பேச்சு கொடுத்தபடி பாட்டியை தனது காமிராவால் குறிவைக்க தாத்தா பதற்றத்துடன் ஓடி வந்து “எதுக்கு போட்டோ எடுக்குறீக தம்பி?” என தடுத்தார். அமிர்தராஜ் நகைச்சுவையாக அந்த தருணத்தை கடந்தார். பாட்டியும், என்ன படமெடுத்து அதுக என்ன செய்யப்போகுது என புன்னகைத்தபடியே  போஸ் குடுத்தார்கள். அமிர்தராஜ் உண்மையில் அந்த பாட்டி தயாரிக்கும் ஓலை நார் கயிற்றினை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். எளிய ஆவணப்படம் தான், ஆனால் அது கூட நம்மிடம் இல்லை. தாத்தாவிடம் எங்கள் பயணத்தைக் குறித்து ஒரு சில வார்த்தைகள் கூறினோம்.  அவர்கள் சீக்கிரமாக அந்த வெயிலிலிருந்து தப்பிச் செல்ல விரும்பியதால் அவர்களுக்கு மேலதிக தொந்தரவு கொடுக்கக் கூடாது என எண்ணி, அங்கிருந்து கிளம்பினோம்.

போய்வருகிறேன் என விடைபெறும் பனைமரம்

போய்வருகிறேன் என விடைபெறும் பனைமரம்

காய்ந்த பனையோலைகளில் ஒரு சில கீற்றுகளை எடுத்துக்கொண்டால் எங்கள் பயணத்தில் யாரையேனும் வரைவதற்கு உதவியாக இருக்குமே என்று தாத்தாவிடம் அரிவாளைக் கேட்டேன். தாத்தா என்னவேண்டும் எனக் கேட்டு எனக்கு ஓலையை அவர்களே வெட்டி குடுத்தார்கள். அரிவாளை எனது கரத்தில் கொடுப்பதற்கான தயக்கம்? அப்படியே அங்கே வெட்டுண்டு கிடந்த குருத்தோலையை நான் எடுத்து எனது வண்டியின் முன்னால் இருந்த கொடி கம்பத்தில் கட்டினேன்.  ஓலைக்கொடி எனக்கு முக்கியமான ஒரு அடையாளமாக அமைந்தது. நான் எனது பயணத்தின் துவக்கத்தில் எப்படியாவது ஒரு கொடியை அமைத்துக்கொள்ளவேண்டும் என நினைத்தேன், ஆனால் அது முடியாமற் போயிற்று. யோசித்து பார்க்கையில், ஓலையை கட்டி வைத்தது தான் சரியென்று எனக்குப் பட்டது. ஓலையோடு எனக்குள்ள உறவு, பனைக்காக நான் எடுக்கின்ற முயற்சியை பிரதிபலிப்பதாக அது அமைந்தது.ஓலைக்கொடி ஒரு வெற்றியின் கொடியாக எனது வாகனத்தை அலங்கரிக்கட்டும்  என முடிவு செய்து அங்கிருந்து ராமெஸ்வரம் நோக்கிச் சென்றோம்.

 

 

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (72)”

 1. Logamadevi Annadurai Says:

  பனை மரங்களின் உள்ளமைப்பு (wood anatomy) மற்ற இருவித்திலைத்தாவரங்களைபோல இல்லாததால் அதனை அப்படி நீளவாக்கில் நேர்த்தியாக அறுப்பது இயலாது. அதில் cambium மற்றும் annual rings இல்லாததால். அதை மட்டும் சொல்லாமல் அதனை வெட்ட உபயோகப்படுத்தப்படும் கோடலியையும் அதன் கற்கால வடிவத்தையும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.
  கோடலியை வெட்டத்தெரிந்த கடைசித்தலைமுறை மட்டுமல்ல மரங்களை வெட்டுவதிலும் நாம்தான் கடைசிதலைமுறையாக இருப்போம் ஏனனில் இனி அடுத்ததலைமுறைக்கு வெட்ட மரங்கள் ஏது?
  உங்களைபோன்றவர்களில் அருட்பார்வை பட்ட பனைமரங்கள் காப்பாற்றப்படலாம் இன்னும் இப்படி கோரிக்கைஅற்று கிடக்கும் தாவரங்கள் அனேகம் பாஸ்டர். அவற்றயும் நாம் இழந்துகொண்டே இருக்கிறோம்
  கோடலி கிணற்றில் விழுந்த அந்த கதையையும் மறக்காமல் குறிபிட்டு விட்டீர்கள்
  சிவனும் மழு ஏந்தியவனே!!

  ். கோடாரி ஒரு பணி செய்ய ஆயத்தமாக இருக்கும் கருவி. அது கடவுளின் கரத்தில் இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். அனேக வேளைகளில் கோடாரி தமது கரத்தில் இருப்பதாக பாவித்து மிக அபாயகரமாக வீசுகிறார்கள்.-இதை உணர்ந்தே சொல்லி இருக்கிறீர்கள்
  அது என்ன பணி செய்யப்போகிறது என்பதுவும் அதை கையில் வைத்திருப்பது யாரென்பதுமே முக்கியம்
  பனந்தடிகள் ஆட்டுப்பண்னைகளில் பயன்படும் விதம் ஆச்சர்யத்தகவல்
  பனையின் பயன்கள் விரிந்துகொண்டே போகின்றது
  உங்களை நோக்கி அனேக உண்மைகள் எழுந்துதான் வருகின்றது , சந்தேகமில்லாமல்
  உங்கள் பயணம் எளிமையாக திட்டமிடப்பட்டு பிரம்மாண்டமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ஏனெனில் இது ஆண்டவரால் பணிக்கப்பட்டது என்பதால்
  guided by the supreme power,this mission designs itself in a divine way

  அமிர்தராஜின் புகைப்படங்கள் உங்கள் மனநிலையை அப்படியே பிரதிபலிபதாய் இருக்கிறது. இப்படி நட்பு அமைவது அபூர்வம் மற்றும் அருமை. தலைகொய்யப்பட்டும் பால் மணம் மாறா பாலகர்களைபோலும் கிடக்கும் பனைகளைப்பற்றிய உங்கள் நெஞ்சுருக்கும் வர்ணனை அந்த புகைப்படத்தில் அப்படியே தெரிகிறது
  விடைபெறும் பனை எனும் செய்திமனதை கனக்கச்செய்கிறது
  சூழலியல் சார்ந்து திருச்சபைகள் மட்டுமல்ல உலகமே சிந்திக்க வேண்டிய பொறுப்புகள் அனேகம் பாஸ்டர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: