பனைமரச்சாலை (73)


பனைக்கான பாலம்

 

முதலில் ராமனாதபுரம் சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லவேண்டும். கோடையின் கடைசி கண கதிர்களையும் சூரியன் உமிழ்ந்துகொண்டிருந்தது. நாங்கள் வெயிலில் உருகி வழிந்து சென்றுகொண்டிருந்தோம். ராமனாதபுரத்தில் தான் உணவு என அமிர்தராஜ் சொல்லிவிட்டார். எனது வண்டி மெதுவாக செல்ல அமிர்தராஜ் சற்று முன்னால் சென்று சில ஆயத்தங்கள் செய்யவேண்டும் என கூறி எனக்கு வழியையும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நான் அவர் கூறிய வழியை தவறவிட்டுவிட்டு அங்கிருந்து நேராக ராமநாதபுரம் சென்றேன். பேருந்து நிலையத்தை அடைய சுமார் ஒரு கிலோ மீட்டர் இருகும்போது ஒருவர் எனது வண்டியை நிறுத்தி என்னை ராமனாதபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுங்கள் என கேட்டுக்கொண்டார். அவரை நான் இறக்கிவிடும்பொழுது அவர், தனது ஒர்க்ஷாப் அருகில் தான் இருக்கிறது என்றும், வண்டிக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தன்னை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டார். நான் அங்கே காத்துக்கொண்டிருந்தபோது அமிர்தராஜ் மீண்டும் என்னை அழைத்து எங்கே இருக்கிறீர்கள் எனக் கேட்டார், நான் பேருந்து நிலையத்தின்  அருகில் இருக்கிறேன் எனக் கூறவும், அவர் என்னிடம் நீங்கள் கடந்து சென்ற பாதையிலேயே வாருங்கள் நான் நிற்கிறேன் என்றார். சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டோம்.

இதற்குள் அவர் மதிய உணவிற்கான இடத்தைக் விசாரித்து வைத்திருந்தார். நாங்கள் சென்ற ஓட்டலின் அருகில்  எங்களைப்போலவே புல்லட்டில் பயணிக்கும் மூவரைக் கண்டோம். உணவு உண்டுவிட்டு வெளியே வந்த அவர்கள் முகங்களில் அருளே இல்லை. குளிரூட்டப்பட்ட அறைக்குள் சென்று உணவுகளை கூறி காத்திருந்தோம். எங்களுக்கு முன்னால் இருந்த இருவரில் ஒருவர் போதையில் அதிகமாக சலம்பிக்கொண்டிருந்தார். சிப்பந்தியை தரக்குறைவாக நடத்துவதிலிருந்து ஆபாசமாக பேசுவது வரை. அங்கிருக்கவே கூசியது. ஒரு பதினைந்து நிமிடம் பொறுமையாக அனைத்தையும் செய்த அந்த சிப்பந்தியே பொறுமை இழக்கும் வேளை வந்தது.  அந்த குடிகாரர் கேட்ட உணவை கொண்டு வந்து கொடுத்ததும், நான் இதை கேட்கவில்லை என அவர் சாதிக்க, சிப்பந்திகள் அனைவரும் கூடிவிட்டனர். பேசாம சாப்பிட்டுவிட்டு பில்லைக் கொடுத்துவிட்டு போ, இனிமேல் ஒரு வார்த்தை பேசினால் மரியாதையாக இருக்காது என சிப்பந்தி உறுதியான குரலில் கூற, குடிகாரர் பெட்டிப்பாம்பானார். எங்களாலும் அதற்கு பின்பே ஒழுங்காக உணவு உண்ண முடிந்தது.

“தண்ணியடிச்சா வயத்துல கெடக்கணும்” என்பது எங்களூர் வழக்கச்சொல். குடிக்கும் உரிமை உனக்கு உண்டென்று சொன்னால், உன்னால் பிறர் பாதிப்படையாதவாறு அதை நீ கட்டுக்குள் வைத்திருப்பது உனது கடமை என்பதே பொருள். ஆனால் குடித்துவிட்டு தன்னை மண்ணின் வீரம் காக்கும் திருமகன் என எண்ணிக்கொள்வது, குலப்பெருமைகளை எடுத்து இயம்புவது, வேட்டி அவிழ ஆணழகன் போட்டிக்கு மல்லுக்கட்டுவது, சொற்பொழிவு ஆற்றுவது, போக்குவரத்து துறை காவலராக உருவெடுப்பது என பல்வேறு பரிணாமங்களை எடுத்துவிடுகின்றனர். குடிக்காத இடங்களில் கிராம மக்கள் மிக அமைதியாக உணவு உண்பதை பார்த்திருக்கிறேன்.

மணி நான்காகிவிட்டது. ராமேஸ்வரம் சென்றிருக்கவெண்டிய தருணம் ஆனால் பயணத்தின் வேகம் குறைந்துவிட்டதை உணர்ந்தோம். அங்கிருந்து நாங்கள் என் டி றி வி செய்தி குழுவினருக்கு அழைத்தபோது மண்டபம் அருகில் எங்களுக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் உடனடியாக எங்களை வரும்படியும் அழைத்தனர். செல்லும் வழியில் தேவைப்படும் என்று ஒரு ஓலை வெட்டும் கத்திக்காக அலைந்தோம். பத்து ரூபாய்க்கு எங்கும் கிடைக்கின்ற அந்த கட்டர், ரமனாதபுரத்தில் நாங்கள் தேடிய ஒரு கடைகளிலும் இல்லை. ஒரு பல்பொருள் அங்காடியில் வைக்கப்பட்டிருந்தது துருபிடித்தபடி காணப்பட்டது. ஒருவேளை நான் ஓலையில் பொருட்களை  எப்படி செய்கிறேன்  என என் டி றி வி செய்தி குழுவினர் விருப்பத்துடன் கேட்டால் அவர்களுக்கு மாதிரி காண்பிக்க வேண்டும் என்பதற்காக ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டேன்.

தமிழகத்தில் பனை மரங்களை பார்த்து மகிழத்தக்க சாலைகள் அனேகம் உண்டு. ஆனால் ராமேஸ்வரம் சாலை தனித்துவமானது. விரிந்த சாலை குறைவான வாகனங்கள் இருபுறமும் தொடர்ந்து வரும் பனை மரங்கள் என அழகிய காட்சி அது. ராமேஸ்வரம் பகுதியில் பனை மரங்களில் ஏறும் பனைத் தொழிலாளர்கள் இன்று அதிகமாக இல்லை. ஆனால் ராமனாதபுரம் பகுதிகளில் மட்டுமே குறிப்பிட தகுந்த அளவில் பனைத் தொழிலாளிகள் இருக்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரையில் பனை மரங்கள் மிக அதிகமாக இருக்கின்ற பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் விளங்குகின்றது.

அமிர்தராஜ் அந்த சாலையைக் காட்டி சொன்னார், எப்படி இந்த சாலைகளை இத்தனை நேர்த்தியாக பேணி காக்கிறார்கள்? தமிழகத்தின் பிற சாலைகள் மிகவும் தரங்கெட்டு கிடக்கையில், இவ்விதமாக ஒரு சாலைக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் நெருடலாக இருப்பதாக கூறினார். ராமேஸ்வரம் பெரும்பாலும் வட இந்தியர்கள் வந்து செல்லும் புனித தலம். ஆகவே சாலைகள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது போலும்.

சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து ஒரு சுய உதவி குழுவிற்கு பயிற்சி கொடுத்தேன். ஓலையை எளிமையாக ஒரு ஓலை துண்டு போல வெட்டி எடுக்கவேண்டு அவ்வளவுதான். அதற்கான  கருவிகளையும் நானே எடுத்துச் சென்றிருந்தேன். ஆனால் அவர்களுக்கு அதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. இத்தனை சமீபத்தில் கூட எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனற்றதால் மேலும் என்ன செய்வது என தெரியாமல் அங்கிருந்து நான் திரும்பிவிட்டேன்.

ஆனால் நான் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும்தான,  பள்ளர்,  தேவர், வலையர் மற்றும் நாடார் ஆகியோர்  பனையேறுவதை காணமுடியும். பனைத்தொழில் ஜாதிகளைக்கடந்து வாழ்வாதாரமாக ராமநாதபுரத்தில் இருப்பது ஆச்சரியமானது அல்ல. அது மண்ணின் மரம். வசதி இல்லாதவர்களால் பனையை நம்பியே வாழ்வை அமைத்துக்கொள்ளமுடியும் என்கிற ஒரு அடிப்படை உண்மையை விளக்குவது அது. வலையர் ஜாதி இன மக்கள் பெரும்பாலும் மீன் பிடிக்கிறவர்கள் என்றாலும் அவர்களும் பனை மரம் ஏறுகிறார்கள் என்பது மேலதிக தகவலாக இருந்தது. ஒரு வாழ்வாதாரத்தை சாதியின் அடையாளத்தைச் சூட்டி, இன்று ஒருவரும் பயன்பட முடியாதபடி செய்துவிட்டோமோ என தோன்றுகின்றது.

பனையோலை பொருட்களை சுமந்து செல்லும் லாரி, இராமேஸ்வரம் செல்லும் வழியில்

பனையோலை பொருட்களை சுமந்து செல்லும் லாரி, இராமேஸ்வரம் செல்லும் வழியில்

மண்டபம் செல்லும் வழியில் நாங்கள் ஒரு லாரி பனையோலை பொருட்களை ஏற்றிக்கொண்டு நிற்பதைப்பார்த்தோம். பெரிய லாரி, பொருட்களை நிறைத்து வைத்திருன்ட்தனர். இன்னும் பொருட்களை ஏற்றும்படி அங்கு நிறுத்தியிருப்பதாக  கூறினார். அமிர்தராஜ் அங்கு நின்று அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். எங்களுகாக என் டி றி வி குழுவினர் காத்துக்கொண்டிருப்பதால், நான் முன்னால் செல்லுகிறேன் என கூறி நான் புறப்பட்டேன். அமிர்தராஜ் பொதுவாக புகைப்படத்தை உடனே எடுத்துவிடமாட்டார். யாரை புகைப்படம் எடுக்கிறாரோ அவர்களிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு அந்த சூழலை நன்கு உள்வாங்கிகொண்டே புகைப்படம் எடுப்பார். அவருக்கான நேரத்தை கொடுக்கவெண்டும், மேலும் எனது வாகனம் இப்பொழுது நான் நினைத்த வேகத்திற்குச் செல்லாது ஆகவே மெதுவாக முன்னால் சென்றேன்.

ஒரு வளைவில் நான் திரும்பும்போது எப்படி செல்லுவது என தெரியவில்லை, மண்டபம் என்பதை கிளைப்பாதையில் செல்லும் ஊர் எனக் கூறினர். நான் வாகனத்தை ஒதுக்கி நிறுத்திவிட்டு எனது செல்பேசியை எடுக்கவே அமிர்தராஜ் என்னை பார்க்காதபடி ஆனால் என்னைக் கடந்து வேகமாக சென்றுகொண்டிருந்தார். நான் செய்தியாளர்களை அழைத்து ஒருவர் வேகமாக புல்லட்டில் வருகிறார் அவரை  தடுத்து நிறுத்துங்கள் என்றேன். நான் மீண்டும் புறப்பட்டு செய்தியாளர்கள் இருந்த இடத்தை  அடைந்தபோது அங்கே இருவர் இருந்தனர். ஒருவர் என். டி. ற்றி. வி சார்பிலும் மற்றொருவர் தந்தி டி. வி. சார்பிலும் என அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தினார்கள்.

அமிர்தராஜ் எங்கே எனக் கேட்டேன், அவர் நாங்கள் நிறுத்தியதைக் கவனிக்காமல்  வேகமாக சென்றுவிட்டார் என கூறினார்கள். உடனடியாக அவரை நான் அழைக்க அவர், பாம்பன் பாலம் சென்று உங்களுக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னார். யாரோ வழியில் நிறுத்தினார்கள், அனால் உங்களைத்தேடி தான் நான் முன்னால் சென்றேன் என்றார். அவர் மீண்டும் வருவது வரை காத்திருந்தோம். மணி ஐந்தரை ஆகிவிட்டது.

நாங்கள் புதிதாக உருவகிக்கொண்டிருந்த கட்டடத்தின் முன்பு நின்றுகொண்டிருந்தோம். அமிர்த்தராஜ் வேகமாக வந்துவிட்டார். எங்களுக்கு எதிரில் பனைமரங்கள் சாலைக்கு வேலியாக நின்றுகொண்டிருந்தது. சாலைக்கு அப்புறம் சற்று பள்ளமாகவும்  விழுந்து கிடக்கும் ஓலைகள், மட்டைகள், நுங்கு தின்றுவிட்டு போடப்பட்டக் கூந்தல்கள், காய்ந்துபோன பனம்பழங்கள் என அப்பகுதியே தரை தெரியாதபடி பனைபொருட்கள்  ஒரு அடுக்கு  மெத்தையை உருவக்கியிருந்தது.  அமிர்தராஜ் சற்று ஒதுங்கி விட்டார்.  என்னை மட்டும் பேசச்சொன்னார்கள். நான் பேசி முடித்ததும், அமிர்தராஜ் சொன்னார் “கோயில்ல பிரசங்கம் செய்றது மாதிரியில்லே இருக்கு? சிம்பிளா சொல்லுங்க பாஸ்டர்”. நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லையா என எண்ணிக்கொண்டேன். எனது வழக்கமான மொழியே எனக்கு எளிமையானது. பிற்பாடு நாங்கள் ரீடேக் எடுக்கும்போது போதுமான வெளிச்சம் இல்லாதபடி ஆகிவிட்டது.

அங்கிருந்து நாங்கள் புறப்படுகின்ற வேளையில் ஒரு மனிதன் எங்கலையெ பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். ஒருவேளை நானும் தாடி வளர்த்தால் அவனைப்போலவே  இருப்பேன். ஏதுமற்றவன் ஆகவே எந்த கவலையுமின்றி உளம் கனித்த சிரிப்பு அவனுக்குள் இருந்து வெளிப்பட்டது. விலைமதிப்பற்ற அந்த புன்னகையை நினைவு பரிசாக எடுத்துச் செல்ல விரும்பினோம். ஆகவே அவனோடு நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.  இன்னும் மகிழ்வுடன் எங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். சுற்றுலா தலங்களில் இவ்விதமானோரை சொந்த குடும்பத்தினரே விட்டுச் செல்லுவது ஒரு வழக்கம்.  யாதுமற்றொருக்கு இறைவனே துணை.

சற்று நேரத்தில் செய்திக்குழுவினர்  புறப்பட்ட பின்பு அமிர்தராஜ் சொன்னார் “தமிழக மக்கள் பாவம் பாஸ்” ஏன் என்றேன் புரியாமல். “இனி ஒருவாரம் உங்க முகத்தை தான் அவங்க டி.வி.லையும் பேப்பர்லையும் பார்க்கணும்” என்றார். அடக்கமுடியாமல் சிரித்துவிட்டேன். உண்மையில் எனது முதல் பேட்டி அத்துணை தரமாக இருந்தது என்று சொல்லமுடியாது. முதல் முறையானபடியால் காமிராவை மட்டுமே பார்த்துப் பேசுவது சிரமமாக இருந்தது. நான் சொன்னேன் “அவங்க தப்பிக்கிறதுக்கு நெறைய வாய்ப்பு குடுத்திருக்கிறேன், கவலைப்படாதீங்க” என்று கூறினேன். சிரித்தபடி கிளம்பினோம்.

ராமர் சீதையை ராவணனிடமிருந்து காப்பாற்ற பாலம் கட்டிய இடத்தை நெருங்குகிறோம் என்றவுடனேயே மனது பரபரப்பானது. பனையை எப்படி காப்பாற்றுவது எனும் எதுவும் தெரியாத எனது பயணத்தில் தான் எத்தனை இராவணன்கள். பத்து தலை அல்ல ஆயிரம் தலை கொண்ட பனை கள்வர்கள் அனுதினமும் பனையை கடத்திச் சென்று கொன்றுவிடுகிறவர்கள். மனிதனின் வாழ்வையே நினைத்து அவனுக்கே தன்னை அற்பணித்த பனை எங்கோ தூரத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறது என எண்ணிக்கொண்டேன். இப்பயணம், சந்திக்கும் மக்கள், காண்கின்ற பனை சார் பொருட்கள், கொலைக்களத்தில் இன்றும் உயிருடன் எஞ்சும் பனைமரங்கள், பத்திரிகையளர் சந்திப்பு என ஒவ்வொன்றும் பனையை காப்பாற்றும் பாலமாக செயல்படுகிறதோ?. விடுதலை ஒருநாள் உண்டு எனும் நம்பிக்கை என்னுள் எழுந்தது.

அங்கிருந்து நாங்கள் நேராக பாம்பன் பாலத்திற்குச் சென்றோம், பாலத்தின் மேல் அனேகர் நின்று சூரிய ஆஸ்தமனத்தை பார்த்து முடித்துவிட்டிருந்தார்கள். நாங்கள் சற்றுநேரம் அந்த இடத்தில் அமர்ந்து இளைப்பாறினோம். சிறு வயதில் பிரம்மாண்டமான பாலமாக தெரிந்தது இப்போது சிறிய பாலமாக ஒடுங்கி காட்சியளிக்கிறது. கடற்காற்று அந்நாளின் வெம்மையை அடித்து துவசம் செய்துகொண்டிருந்தது. மிகவும் இலகுவானோம். அப்பொழுது அமிர்தராஜ் தனது கேமிராவைக் கொடுத்து “ஒரு போட்டோ எடுங்க பாஸ் என்றார்”. பாஸ் என்றால் பாஸ்டரின் சுருக்கம்.

அமிர்தராஜ், பாம்பன் பாலத்தில்

அமிர்தராஜ், பாம்பன் பாலத்தில்

போட்டோ எடுக்க வேண்டிய கோணம் அனைத்தையும் சொல்லித்தந்தார். முக்கியமாக எனது வேலை கிளிக் செய்ய வேண்டியது மட்டும்தான் என்பதை ஒருவாறு புரிந்துகொண்டேன். அவருக்குப்பின்னால் அவரது மோட்டார் பைக் ஒளி உமிழ்ந்துகொண்டு நிற்க அதனையும் சேர்த்தே எடுக்கவேண்டும் என்பது அவர் எனக்கு இட்ட கட்டளை. முதலில் ஒன்றிரண்டுமுறை அவர் கருதியபடி வரவில்லை. பிற்பாடு எப்படியோ அந்த அழகிய காட்சி பதிவானது. அமிர்தராஜ் மகிழ்ந்து போய் அந்த படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இருளை அகற்றும் ஒளியாக அந்த புகைப்படம் பிரகாசமாக இருந்தது. நானும் அந்த மகிழ்ச்சியில் அவருடன் இணைந்துகொண்டேன்.

 

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (73)”

 1. Logamadevi Annadurai Says:

  வழி மாறி நீங்கல் ராமனாதபுரம் சென்றது பனை அழிந்துவருஅவ்து போல குடியினால் அழியும் மனிதர்களைப்பற்ரியும் பதிவிடவேண்டும் என்ருதானொ என்னவோ?
  ராமேஸ்நரத்தில் சாலைகள் நன்றாக இருக்கிறதோ என்னவோ, கடற்கரையும் பலகிலோமீட்டருக்கு கடலும் பாழடைந்துவிட்டது. லட்சக்கணக்கில் வரும் பக்தர்களின் பாவமல்லவா அங்கு கழுவிவிடப்படுகிறது?
  கறுப்பு நிறத்தில் கடற்கரைமணலை அங்குதான் நான் பார்த்தேன்.
  ராமரிடம் தொடங்கி யுகம் யுகமாய் சேர்ந்துகொண்டிருக்கும் மாசுகளும் பாவங்களுமல்லவா அங்கிருப்பது?
  இதுநாள்வரை உங்கள் பதிவில் மதங்களைக்கடந்த்த கருத்துகளும் உண்மைகளும் வந்தன, இன்றைய பதிவில் ஜாதிகளைக்கடந்த பனைசார்ந்த தொழிளாளர்கள் குறித்தும் அறிந்துகொண்டேன்
  மண்னிற்கு ஏது ஜாதி பாஸ்டர்? பனை மண்ணின்மரமல்லவா?
  சென்ற பதிவில் உங்களை நோக்கி உண்மைகள் எழுந்துவருவது குறித்து பேசினோம், இதோ இன்றைய பதிவில் உங்களை நோக்கி உண்மைகள் லாரியிலும் வருகிறது
  எப்படி அத்தனை சரியாக நீங்கள் செல்கையில் பனைப்பொருள்களுடன் லாரி அங்கு வரமுடியும்? மீறமுடியாத ஆணையின் படியே இவை அனைத்தும் நடக்கின்றன
  உங்களையே பார்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்த யாருமற்ற,, ஏதுமற்ற, குடும்பத்தாலும் புறக்கணிக்கப்பட்ட அந்த எளியவரின் புகைப்படத்தை ஏன் பாஸ்டர் பிரசுரிக்கவில்லை?
  கடவுளுக்கு நெருக்கமானவர் அவரே!!!

 2. Jayant Judilson (@Judilson) Says:

  very pleasant reading..you are a honest writer..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: