பனைமரச்சாலை (74)


ராமரின்  பனைமர பாலம்

 

பாம்பன் பாலத்தில் வீசிய காற்றை சுவாசித்து, மெய்மறந்து இருக்கையில் திடீரென ஒரு சத்தம் “யாருப்பா அது அந்த புல்லட்ட கொஞ்சம் ஓரமா ஒதுக்கி நிப்பாட்டு”, நாங்கள் கண்களை உயர்த்திப்பார்த்தபொழுது நாங்கள் சந்தித்த அதே பத்திரிகையாளர் அங்கே சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார். அப்போது சாம் டேனியேல் என்னை செல்பேசியில் அழைத்தார். நான் அவர்கள் குழுவை சந்தித்தேனா என கேட்டார்கள். ஆம் என்றேன், அவர்களோடு தான் இருக்கிறேன் என்றேன். நாளை முடியுமென்றால் வெளிச்சத்தில் மீண்டும் ஒருமுறை எங்களது பயணத்தில் அவர்கள் குழுவினர் இணைந்து செய்தி சேகரிக்கவேண்டும் எனக் கூறினார்கள். சரி என்றேன்.

 

அங்கிருந்து நாங்கள் எங்கள் இரவு விடுதியை தேடி போனோம். இருபுறத்திலும் அழகழகான விடுதிகள் இருந்தன. எல்லாம் வடக்கத்தி பாணியில் அமைந்திருந்தது. ஆகவே வட இந்தியர்கள் வாங்கிபோட்டிருக்கும் சொத்து என சந்தேகமின்றி தெரிந்தது. மிக அழகான ஓட்டலை பார்த்து அங்கே போனால் என்ன என நினைத்து வாகனத்தை உள்ளே எடுத்துச் சென்றோம். அங்கிருந்த வாட்ச்மேன் எங்களிடம் ரூம் காலி இல்லை என்றான். அமிர்தராஜ் என்னை பார்த்து “போவோம்” என்றார். நாங்கள் வெளியே வந்தபோது, சொன்னார். உள்ளே சென்று ரிசப்ஷனில் நாம் கேட்டால் தான் அவர்கள் அறை இருக்கிறதா இல்லையா என கூற வேண்டும், வாட்ச்மேனைக் கொண்டு இப்படி துரத்துவது சரியில்லை என்றார்.

 

சரி எளிமையான விடுதியை பார்ப்போமே என்றேன் நான். நாங்கள் செல்லும் வழியில் ஒரு விடுதியைப் பார்த்தோம். எளிமையாக தோன்றியது. ஒரு அரசியல் பிரமுகர் ரமேஸ்வரம் வரும் கட்சிக்காரர்களுக்காக கட்டி விட்டிருக்கிறாராம். நாம் தான் கட்சி சார்பற்றவர்களாயிற்றே, நமது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்ப்போம் என நினைத்து உள்ளே சென்றோம். அப்பொழுது அங்கிருந்த ஒருவர், கடிதம் ஏது கொண்டு வந்திருக்கிறீர்கள என்றார். நாங்கள் அப்படி எதுவும் இல்லை எனக் கூறினோம்.  அப்படியானால் பொருப்பாளர் ஒருவர் இருக்கிறார், அவர் நினைத்தால் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்வார், அவரிடம் பெசுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார். நாங்கள் அந்த மனிதரைப் பார்த்து எங்கள் பனைமர வேட்கைப் பயணத்தைக் குறித்துச் சொன்னோம். அவரோ,  கடிதம் இல்லாமல் யாரையாவது நான் தங்கவைத்தால் பிரச்சனை ஏற்படும் என்றார். பணம் கொடுத்தால் கடிதம் தேவை இல்லை என்பதை குறிப்புணர்த்தியது போல் இருந்தது அவரது பேச்சு. அமிர்தராஜ், அங்கிருந்தும் “கிளம்புவோம்” என்றார்.

மீண்டும் நாங்கள் பார்த்தது பார்க்கிங் இல்லாத ஒரு விடுதி. ஆனால் அந்த விடுதி மிகப்புதியதாக கட்டப்பட்டிருந்தது. ஆகவே அமிர்த்தராஜ் அதை தெரிவு செய்தார். மே 31 ஆம் தேதி அது. சீசனின் கடைசி நாள். ஆகவே சீசனுக்கான கட்டணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் என அமிர்தராஜ் சொன்னார். உள்ளே சென்று விசாரித்தபோது ரூபாய் ஆயிரத்து முன்னூறு வெண்டும் என கேட்டார்கள். அதை பேசவேண்டிய முறையில் பேசி எண்ணூற்று ஐம்பதிற்கு கொண்டுவந்தது அமிர்தராஜின் திறமை தான். அறை புத்தம் புதிதாக அழகாக இருந்தது. குளிரூட்டப்பட்ட அறை. குளித்து வெளியில் சென்று உணவு உண்டுவிட்டு மீண்டும் அறைக்கு வந்தோம்.

கழுத்தளவு மணலில் புதைந்தபடி நிற்கும் பனைமரம் , தனுஷ்கோடி

கழுத்தளவு மணலில் புதைந்தபடி நிற்கும் பனைமரம் , தனுஷ்கோடி

மறுநாள் அதிகாலையில் எழுந்தோம். 7 மணிக்கு முன் புறப்பட்டு தணுஷ்கோடிக்குச் சென்றோம். தணுஷ்கோடி சாலை மிகப்பெரிதாக இருந்தது. “வருடத்திற்கு ஒருமுறை நாங்கள் அந்தோனியார் திருவிழாவிற்காக கடற்கரை வழி நடப்போம்”’ என்றார் அமிர்தராஜ். நாங்கள் செல்லும் வழியில் அனேகர் பூஜை செய்வதற்காக கடலுக்கருகில் ஜீப்பில்  சென்றுகொண்டிருந்ததை பார்த்தோம். பார்ப்பதற்கு கடலுக்குள் வண்டி ஓட்டிச் செல்லுவது போலத்தான்  இருந்தது. சாலையின் இருமருங்கும்  கற்களால் வேலி கட்டி, அந்த கற்கள் யாவும் கயறுகளால் நேர்த்தியாக பிணைக்கப்பட்டிருந்தது. ஏன் இப்படி ஒருவரும் வராத இடத்திற்கு மிக அழகிய விரிவான சாலை என எண்ணியபடி சென்றோம். சாலை தனுஷ்கோடியையும் தாண்டி சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தோம்.

பாழடைந்த தெவலயத்தின் முன்பு, தனுஷ்கோடி

பாழடைந்த தெவலயத்தின் முன்பு, தனுஷ்கோடி

தனுஷ்கோடி சிதிலமடைந்து கிடந்தது. ஒரு சில மீனவ குடும்பங்கள் தங்கள் வாழ்வை அங்கு அமைத்துக்கொண்டதைப் பார்க்கமுடிந்தது. பனைமரங்கள் நிற்பதைப் பார்த்தபோது எனது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எப்படி கன்னியாகுமரியில் நின்ற கடைசி மரம் பனைமரம் என்று எண்ணினேனோ அது போலவே இங்கும் பனைமரங்களே வளர்ந்து ஒங்கி நிற்கின்றன.  அனைத்து மரங்களும் 1964 புயல் வீசியபின் முளைத்தவைகள் என்று சொல்லப்படும் அளவிற்கு மிகவும் சிறியவைகள். மேலும் மணல் மேடுகளில் கழுத்தளவு புதைந்து நின்ற பனைமரமும் ஆச்சரியமளிப்பதாக இருந்தது.

பனை மர பாலம், பெரிய குப்பம்

பனை மர பாலம், பெரிய குப்பம்

நாங்கள் கடந்து வந்த பெரியகுப்பம் எனும் இடத்தில் காணப்பட்ட பனைமரங்கள் எப்படி பாலம் அமைக்கப்பட்டிருக்கலாம் எனும் யூகத்திற்கு வழிவகுத்தது. பனை மரங்களை ஆழம் குறைவான இடங்களில் நிற்கவைத்து படகுகள் அணைய செய்தது போல பனந்தடிகளை ஊன்றி பாலம் அமைத்திருக்கலாம். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பவழப்பாறைகளாலான ஒரு திட்டு இருக்கிறது ஆனால் அவைகள் கடல் மட்டம் உயரும்போது மக்கள் கடந்து செல்ல ஆபத்தானவைகளாக அமைந்திருக்கலாம். குறிப்பாக 1480களில் தான் இத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. சேட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்களில் தூண்டிக்கப்பட்டு கிடக்கும் திட்டுகளை  நாம் காணலாம்.

பனை மர பாலத்தின் மேல், பெரிய குப்பம்

பனை மர பாலத்தின் மேல், பெரிய குப்பம்

நான் 2003ஆம் ஆண்டு  மாலத்தீவு சென்றபோது அங்கே மாஃபுஷி என்ற சின்னஞ்சிறு தீவிற்குச் சென்றேன். தமிழ் பேசுகின்ற ஆசிரியராக இருக்கின்ற ஒருவரும், அந்த தீவு வாசியான ஒரு வாலிபருமாக இணைந்து அருகில் இருந்த மணல் திட்டு ஒன்றிற்குச் சென்றோம். அந்த திண்டில் ஒரு புதரும், ஒரு சில தென்னை மரங்களுமே இருந்தன. நாங்கள் சென்ற போது கணுக்கால் அளவு தண்ணீரில் அந்த இடத்தைக் கடல் கடந்து சென்றோம். ஒரு மணி நேரம் தான் அங்கு இருந்திருப்போம் தண்ணீர் ஏறத்துவங்கியது. எங்கள் கரங்களில் செல்போன் ஏதும் அப்போது கிடையாது. உள்ளுர் வாசி, நாம் புறப்படுவோம் என்றார். முழங்கால் அளவுதான் தண்ணீர் ஏறியிருக்கும் ஆகையினால் நாங்கள் மிகவும் நிர்விசாரமாக அதை எடைபோட்டோம். எங்கள் கால்களுக்கு கீழே பவழபாறைகள் சொரசொரப்பாக நொறுங்கி எங்கள் கால்களை கீறி விட்டது. கால்கள் மிக உறுதியாக வைக்கக்கூடிய தளமாக இருந்தாலிம், நீரோட்டத்தின் வேகம் அசாதாரணமாக இருந்தது. பெரும் பள்ளத்தை நோக்கி சீறிப் பாய்ந்தோடும் கட்டாறு போல. ஒருவர் கரத்தை ஒருவர் பிடித்துக்கொண்டோம். சுமார் இருபது முதல் முப்பது அடி தான் கடக்கவேண்டும். ஆனால் அதுவே வழ்வா சாவா போராட்டமாக அமைத்தது.

பனம் பழம் உண்ணும் குரங்கு (உதவி : இணையம்)

பனம் பழம் உண்ணும் குரங்கு (உதவி : இணையம்)

ராமருக்கும் பனைமரத்திற்கும் உள்ள தொடர்பை குறித்து யாரும் சொல்லி நான் கேள்விப்படவில்லை ஆனால், ராமர் பாலம் அமைக்கும் நாட்கள் வரைக்கும் உணவுகள் எங்கிருந்து வந்திருக்கும் என்பது முக்கிய கேள்வி. பனைமரங்கள் திரட்சியாக காணப்படும் பகுதி அவரது படைக்கும் வானர படைகளுக்கும் அதிகமாக உணவளித்து காத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிக நேர்த்தியாக ராமரால் படையணையும்படி தெரிவு செய்யப்பட்ட பகுதி ராமேஸ்வரம். அப்படியே பாலம் அமைக்கும் பணிக்கும் பனைமரங்கள் முக்கியமாக உதவியிருக்கும் என்பதும் உறுதி. திருவிவிலியத்தின் சிவந்த சமுத்திரத்தை கடந்தவர்களுக்கு ஏலிம் பேரீச்சைகள்  உணவும் நிழலும் வழங்கியதுபோல், சேது சமுத்திரம் கடந்தவர்களுக்கான உணவு, பனைதிரட்சியாக காணப்பட்ட ராமேஸ்வரத்தில் காணப்பட்ட பனைமரங்களில் இருந்து பெறப்பட்டிருக்கும். இந்த நிலம் கூறும் உண்மை இது.

ராமரின் அம்பு துளைக்கும் 7 பனைமரங்கள், கல் சிற்பம், அமிர்தேஷ்வர் ஆலயம், கர்நாடக (உதவி: இணையம்)

ராமரின் அம்பு துளைக்கும் 7 பனைமரங்கள், கல் சிற்பம், அமிர்தேஷ்வர் ஆலயம், கர்நாடக (உதவி: இணையம்)

ராமர் விட்ட அம்பு ஏழு பனைகளை துளைத்த சிற்பம் ஒன்று கர்நாடகாவிலுள்ள கோவிலில் இருக்கின்றது. ராமர் ஏன் 7 பனைகளை துளைக்கவேண்டும்? ஏழு முழுமையைக் குறிக்கும் எண்ணாக கருதப்பட்டால், பிசிரின்றி, வேகமாக, வீரியமாக குறி தவறாமல் எய்யும் ராமனை குறிகும்படியாக செதுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இலங்கைக்குப்  பாலம் கட்டவெண்டும்  என முயற்சித்த ராமன் பனை மரங்களை முறித்து  பாலம் கட்டியிருக்கிறார் என்பதையே அந்த சிற்பம் குறிப்புணர்த்துகிறது என நான் பொருள் கொள்ளுகிறேன்.

பனைமரங்கள் , தனுஷ்கோடி

பனைமரங்கள் , தனுஷ்கோடி

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் மிக நெருக்கமாக இருக்கும் இந்த நில இணைப்புப் பகுதி பனை மரங்கள் வளருவதற்கு ஏற்றவை. மாத்திரமல்ல இப்பகுதியில் சுனாமி போன்ற பேரிடர்  ஏதேனும் எதிர்காலத்தில் நிகழுமாயின் பனைமரங்கள் அவைகளிலிருந்து தனுஷ்கோடியை காப்பாற்றும் வல்லமை படைத்தவை. கடலரிப்பிலிருந்து மண்ணைக் காப்பவை. மீண்டும் முளைத்தெழும் வாழ்வாதாரத்தின் அச்சாக இருப்பவை. இந்திய இலங்கை இணைப்பின் ஒற்றுமையை வலியுறுத்துகின்ற தாவரம்.  தனுஷ்கோடி மண்ணின் மரம் என்பதாக கொள்ளலாம்.

பெரிய சாலை , தனுஷ்கோடி

பெரிய சாலை , தனுஷ்கோடி

இந்தியா  – இலங்கை பாலம் அமைக்கும் பணி அங்கே தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் கண்டோம். இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைக்கும் பணி நல்லதுதான் என்றாலும் சூழியல் வெகுவாய் பாதிக்கும் . இதை நம்பி வாழும் மீனவர்களுக்கும் பெரும் பாதிப்படைவார்கள் என்பதில் ஐயமில்லை. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை, அது அப்படித்தான் நடைபெறும். திட்ட வரைவுகள் யாவும் செய்யப்பட்டு பணிகள் துவங்கியாகிவிட்டது. இனிமேல் எனது அடுத்த “பனைமர தீவு” எனும் இலங்கை பயணத்திற்கு பைக்கில் செல்ல நான் ஆயத்தமாகவேண்டியது தான் எஞ்சியிருக்கிறது.

"பனைமர தீவு" செல்லும் வழி, தனுஷ்கோடி

“பனைமர தீவு” செல்லும் வழி, தனுஷ்கோடி

மீண்டும் வந்து காலை உணவை உண்ணும்போது எங்களுக்கு செய்தி குழுவினரிடமிருந்து அழைப்பு வந்தது. நாங்கள் செல்லுகின்ற வழியை அவர்கள் தொடர்ந்து வந்து படம்பிடித்தார்கள். அன்று பல்வேறு விதமான இடங்களை ராமேஸ்வரத்தில் கண்டோம். பனை மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் டிராக்டர், சாலையை விரிவு படுத்துவதற்காக வெட்டி இடப்பட்டிருக்கும் எண்ணற்ற பனைமரங்களைக் கண்டோம். பனைமரச் சாலை எனும் தலைப்பை விட பனை மரணச் சாலை என பொருள் தருகின்ற அளவிற்கு எனது பயணம் முழுக்க பனை மரங்களின் மரணத்தையே நான் பார்த்துக்கொண்டு வந்திருக்கிறேன். மாநில மரத்திற்கே இந்த நிலை என்று சொன்னால், தமிழகம் வேறு எந்த மரங்களை தான் பேணும்?

 

பனை ஓலைப் பாய்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்கும் கடையை நாங்கள் கடந்து வந்தபோது பனை ஓலை பொருட்கள் எங்கிருந்து வருகிறது என அவர்களிடம் விசாரித்தோம். அனைத்து பனை சார் பொருட்களும்  ராமநாதபுரத்திலிருந்து வருவதாக குறிப்பிட்டார்கள். ஆம் ராமேஸ்வரம் புண்ணிய பூமியானபடியால், மரங்களுக்கு அங்கு மதிப்பில்லை. ஏனெனில் அவைகள் நினைத்த அளவிற்கு பணம் தராது. பணமே ஆன்மீகம்.

 

மிக முக்கியமாக இராமேஸ்வரதில் நாங்கள் பார்த்தது மட்டைகளின் பயன்பாடுதான். இராமேஸ்வரம் முழுக்க வீடுகளின் அருகில் வேலியாக பனை மட்டைகளையே வைத்திருக்கிறார்கள். நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கிறது. நாங்கள் சந்தித்த ஒரு தாத்தா மட்டைகளை விற்பதையே தொழிலாக கொண்டிருந்தார். ஒரு பெட்டிக்கடை, முழுவதுமாக பனை மட்டைகளால் மறைத்து சுவரமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு குடிசைகள் கூட பனை மட்டைகளால் சுவர் எழுப்பப்பட்டு பனையோலை வேயப்பட்டு காட்சியளிப்பதை பனை மிகுந்திருக்கும்  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் பார்க்கலாம்.

 

இராமேஸ்வரம் நான் வரவேண்டிய இடம். நான் திட்டமிட்ட வரைபடத்தில் இருந்த இடம். பனம்பழத்தில்  அல்வா செய்யும் இடம் ஒன்று இருப்பதாகவும் அதை கண்டுபிடிக்கவேண்டும் என்றும் அமிர்தராஜ் சொல்லிகொண்டே இருந்தார். அவரது தொடர்பிலிருந்த நண்பர்களிடமும் கேட்டுக்கொண்டார், அனால் இறுதிவரை எங்களால் அந்த இடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. மீண்டும் இங்கு வருவோம் என கூறி  இராமேஸ்வரத்திலிருந்து விடை பெற்றோம். நீண்ட பாலம் அமைக்கும் பணி ராமருக்கு மட்டுமல்ல பனைமரச் சாலையில் வேட்கையுடன் அலையும்  எனக்கும், என்னைப்போன்ற எண்ணிறந்தவர்களுக்கும் இருக்கிறது.  ஆகவே தொடர்ந்து பயணித்தோம்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (74)”

 1. Jayant Judilson (@Judilson) Says:

  highlight 1: “பனைமரச் சாலை எனும் தலைப்பை விட பனை மரணச் சாலை என பொருள் தருகின்ற அளவிற்கு எனது பயணம் முழுக்க பனை மரங்களின் மரணத்தையே நான் பார்த்துக்கொண்டு வந்திருக்கிறேன். மாநில மரத்திற்கே இந்த நிலை என்று சொன்னால், தமிழகம் வேறு எந்த மரங்களை தான் பேணும்?”
  highlight 2:”ஆம் ராமேஸ்வரம் புண்ணிய பூமியானபடியால், மரங்களுக்கு அங்கு மதிப்பில்லை. ஏனெனில் அவைகள் நினைத்த அளவிற்கு பணம் தராது. பணமே ஆன்மீகம்.”

 2. Logamadevi Annadurai Says:

  ஆழிப்பேரலைக்குள் மூழ்கிய தனுஷ்கோடியைப்பற்றிய இந்த பதிவு மிக அருமை . அழிந்த இடத்தில் அழிந்துகொண்டிருக்கும் பனை!!!!
  மால்த்தீவில் மாஃபுஷி தீவில்சாவின் விளிம்பிற்கே சென்றுவந்திருக்கிறீர்கள்.?
  சேதுராம்ருக்கு உணவு அளிதிருக்கும் பனைகல் என்னும் கருத்தும், அதற்கு இணையாக திருவிவிலியத்தில் ஏலிம் பேரீச்சைகளை வழங்கியதையும் சொல்லியிருப்பது எனது விருப்பத்திற்குரியதோர் பதிவு

  அந்த ஏழு மராமரம் ஏன் பனையாக இருந்த்தது என்பதற்கான உங்கள் தரப்பு அழகு. அபப்டியும் இருக்கலாம். பனைகளை துளைத்து வெட்டியது பாலத்தின் பொருட்டும் இருக்கலாம்.
  ஒரு சிலர் மராமரம் என்பது பூக்காமல் காய்க்கும் மரமென்கிறார்கள். அது பூக்கள் வெளியெ தெரியாத ஆனால் பனம்பழங்கள் தெரியும் பனையாதான் இருக்கும்

  பாலம் அமைக்கும் பணியில் நீங்களும்தான் இருக்கிறீர்கள் ,செங்கள் சூளைகளுக்காகவும் சாலைவிரிவாக்த்திற்காகவும் சிறைப்பிடிக்கப்பட்டபனைகளை மீட்டு வர பாலமிட்டுக்கொண்டிருக்கி\ரீர்கள். பெரும் போராட்டமாகவே இருக்குமெனிலும் இருதி வெற்றி உங்களுக்கே!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: