பனைமரச்சாலை (75)


இடுக்கமான வாயில்

எனது முகநூலில் நான் பதிவிட்டுக்கொண்டு வருவதைப் பார்த்துவிட்டு சிறு வயது  நண்பன் பியர்சன் சார்ல்ஸ் இவ்விதம் எழுதியிருந்தார்.

நீதிமான் சந்ததி செழிக்கும் என்ற வசனத்தை உனக்கு காலம் சென்ற. அருட்திரு. சாமுவேல் உறுதிப்படுத்தினார்.

நீயோ நீதிமான் பனையைப் போல் செழிப்பான் என பனையைத் தேடி அலைகிறாய்.

காலம் சென்ற. அருட்திரு. சாமுவேல் கர்த்தரின் ஆத்தும ஆதாயத்துக்காக பயணித்தார்.

அருட்திரு.காட்சன் சாமுவேல் தனது பெயர் பிரஸ்தாபத்துக்காக பயணிக்கிறார்.

 

மேற்கூறிய வரிகள் அவரை நான் சிறுவய்தில் பார்த்ததற்குப் பின்பு அவர் எழுதியவைகள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பின்பு அவர் எழுதும் முதல் வரிகள். இடையில் ஒரு முறை நாங்கள் சந்தித்திருந்தாலும் விரிவாக எதையும் பேசிக்கொள்ளவில்லை.

 

மேற்கூறிய வரிகள் என்னை வெகுவாக காயப்படுத்தியது. அதை எண்ணியே எய்த குறி தவறா அம்பு. என்னையும் எனது காலம்சென்ற தந்தையையும் ஒருங்கே அவமதிக்கும் நோக்கோடு அவர் எழுதியது என்னை நிலைகுலையச் செய்தது. ஆனால் எப்படியிருந்தாலும் அவன் என் சிறு வயது தோழன், அவனிடம் நான் என்னை மறைக்ககூடாது என விரும்பினேன். ஆகவே அவனுக்கு ஒரு தன்னிலை விளக்கத்தை பின்வருமாறு அளித்தேன்.

 

“பியர்சன் சார்ல்ஸ், திறந்த மனதுடன் எழுதியமைக்காக நன்றி . எப்படியிருப்பினும், எனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஜூன் 6ஆம் தேதி நடைபெறுகிறது, நான் வந்துகொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து எனது குடும்பத்தாருடன் நீ இருக்கும்படி வேண்டுகிறேன். நேரத்துடன் நான் வீட்டிற்கு  வருவேன் என்றால் உன்னை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைவேன். ஏனென்றால் இந்திய சாலைகள் புகழை தேர்வு செய்யும் களமல்ல.”

 

என்னைக் கட்டுபடுத்தி எனது துயரத்தை உள்ளடக்கிய இந்த பதிலை அவன் புரிந்துகொள்ளவில்லை என்பதை நான் பின்னரும் அவனின் காயப்படுத்தும் வரிகளால் அறிந்துகொண்டேன். அவற்றிற்கான பின்னணியம் பெரியது. அவைகளை சொல்லிப் புரியவைப்பதும் கடினம்.

 

அப்பாவின் ஆசி பெற்ற பிள்ளை நான். பிறந்த ஏழுபேரில் இளையதாக நான் பிறந்தேன். அனைவரின் அன்பும் எனக்கு திகட்ட திகட்ட கிட்டியது. தவறு செய்தால் தண்டிக்கும் அப்பா, கண்டிக்கும் அம்மா. ஆனால் அன்பிற்கு சற்றும் பஞ்சமிருக்காது. அப்பா தனது போதகர் பணியை முதன்மையாக நேசித்தவர். அவரை அவரது தாய் பெற்றெடுக்கும்போதே ஊழியத்திற்காக என பெற்றெடுத்து சாமுவேல் என்று பெயரிட்டார்கள்.
திருமறையில் அன்னாள் எனு பெயர் கொண்ட ஒரு பெண் தேவாலயத்தில் வந்து  குடித்து வேறித்து பிதற்றுகின்ற பெண்ணைப்போல் கடவுளிடம் தனக்கு ஒரு ஆண் மகவு வெண்டும் என மன்றாட, தேவலயத்தில் இருந்த ஏலி எனும் பெரியவர், அவளை குடித்து வெறித்து வந்திருக்கும் பெண் என நினைத்து அதட்டுகையில், அவள் தான் மனகிலேசமுள்ள பெண், தனக்கு ஒரு ஆண்குழந்தை வேண்டும்  என மன்றாடுவதாக கூருகிறாள். அவளது மன்றாட்டு கேட்கப்பட்டதும், பால்குடி மறந்த தனது பிள்ளையை ஏலியின் பொறுப்பிலேயே தேவாலயத்தில் வளர விடுகிறாள். எனது பாட்டியை மிகவும் பாதித்த ஒரு திருமறைப்பகுதி. ஆகவே, அப்பா சிறு வயது முதலே ஆலயத்தில் இருந்தே வளர்ந்தார்கள். கோவிலை கூட்டி பெருக்குவது உட்பட அனைத்தையும் சிறுவயது முதற்கொண்டே செய்வார்கள்.

 

அப்பா எங்கு தனது ஆன்மீக கடமையாற்ற சென்றாலும், எங்களையும் அழைத்தே செல்லுவார். ஆனால் செயற்குழு கூட்டங்களில் அப்படியல்ல. எனது சிறு பிராயத்தில் செயற்குழு நடக்கும்போது எற்படும் பூசலைக் கேட்டு நான் பயந்திருக்கிறேன். திருச்சபை செயல்படும் போதகருக்கு எளிதான ஒன்றல்ல என்பதை அச்சிறு வயதிலேயே நான் கண்டுகொண்டேன். எவரும் பேசக்கூடாதபடி செய்யும் திறமை உள்ள போதகர்களும் உண்டு, ஜனனாயக முறைப்படி அனைவரையும் பேச அனுமதிக்கும் போதகர்களும் உண்டு. பேச இடம் கிடைக்கும்போது குதர்க்கமாக பேசுகிறவர்களே அதிகம்.

 

மார்த்தாண்டத்திலிருந்து கோடியூர் சேகர திருச்சபைக்கு வந்தபோதுதான்  பியர்சனை எனக்கு அறிமுகம். பியர்சன் வீட்டிலே அவனது சகோதரிகள் தான், எங்களுக்கு பாடல், நடனம், கோலாட்டம், நாடகம் எல்லாம் கற்றுக்கொடுப்பார்கள். எங்களுக்கு மிகவும் இணக்கமான குடும்பம்தான். ஆனால் கோடியூர் திருச்சபை அவ்வளவு எளிதாக இல்லை. ஒருநாள் ஆலயம் முடிந்த பிற்பாடு ஒரு பெரிய அடிதடி நடந்தது. திருச்சபையில் இருப்பவர்கள் யார் என காண்பித்த சம்பவம் அது. இரு குழுவாக மாறி நின்றவர்களை நான் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் போதகராக கூடாது என என் மனதிற்குள் நினைத்துக்கொண்ட நாள் அது.

 

நான் வளர வளர அப்பாவிற்கான ஆன்மீக அற்பணிப்பை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைய எனது பனைமர வேட்கை அவரின் ஆன்மீகத்திலிருந்து கிளைத்ததே. இருபது வருடங்களுக்கு முன்பு, அப்பாவிற்கு நான் பனையோலையை எடுத்துக்கொண்டு அலைவது பிடிக்கவில்லை. 12 வருடங்களுக்கு முன்பு அவருக்கு நான் பனைத்தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றுவது பிடிக்கவில்லை, அனைத்தையும் அவரை மீறியே நான் செய்தேன். ஆனால், அவரது மரண படுக்கையிலும் நான் ஓலைகளுடனே இருந்தேன்.  குருத்தோலை ஞாயிறுக்காக நன் செய்த ஒரு கைபட்டையை அப்பாவிற்கு அணிவித்தேன். அன்று முழுவதும் அப்பா அதை கழற்றவே இல்லை. அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுவார்கள். அனால் அப்பா அதை உள்ளூர விரும்பி என்னை ஆசீர்வதித்தார்.

 

பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் நான் சேர்ந்தது மிக தற்செயலானது. ஒரு வருட பயிற்சிக்காக மாணவர் கிறிஸ்தவ இயக்கம் என்னை பரிந்துரைத்தது. அப்பா படித்த கல்லூரி அது. ஆண்களும் பெண்களும் அங்கே படித்துக்கொண்டிருந்தார்கள். எனது அம்மாவினுடைய தந்தை வருகையின் தூதன் எனும் பத்திரிகையை நடத்திக்கொண்டு வந்தார். எங்கள் குடும்பத்தில் அவரே அபிஷேகம் பெற்ற முதல் போதகர். அதைத் தொடர்ந்து, அப்பாவே போதகராக அபிஷேகம் பெறும் வாய்ப்பைப் பெற்றார். ஆனாலும் போதகர் பணி எனக்கு ஒவ்வாததாகவே இருந்தது. ஒரு வருடம் எனது கல்வி நிறைவுறும் தருணத்தில், அப்பா என்னை போதகருக்கான பட்டபடிப்பை படிக்கச் சொன்னார். அப்பா ஓய்வு பெற்றிருந்த சமயம் அது. அம்மாவின் தாலியை அடகு வைத்தே எனக்கான தேவைகள் சந்திக்கப்பட்டது. அப்பா ஏன் இப்படி மெனக்கெடுகிறார் என எனக்கு புரியவில்லை.

 

ஆனால் அந்த கல்லூரி, என்னை இன்னும் சிறப்பாக வடிவமைத்தது. உலக தரம் வாய்ந்த ஒரு கல்வியை எனக்கு அறிமுகப்படுத்தியது. அங்கே தான் நான் பனைமரமே எனது  இறையியலின் அடித்தளமாக அமையும் வடிவம் என்பதை கண்டடைந்தேன். நான் தவமிருக்கும் போதி மரம் அதுவே. எந்த பனையின் அடியிலிருந்து பால் பருக கூடாது என அறிவுறுத்தப்பட்டதோ அதுவே எனது ஞானப்பாலின் அடித்தளமாக அமைந்தது. என்னைச் சூழ்ந்து எழுத்த ஏளனங்கள் எதுவும் எனக்கு பொருட்டாய் இருந்ததில்லை. பனை மரங்களே கண்டிராத வடகிழக்கு மாணவர்கள் கூட, தங்கள் பயணங்களில் பனை மரத்தைப் பார்த்துவிட்டு “காட்சன் உனது மரத்தை பார்த்தோம்” என்பார்கள்.

 

அனைவரையும் கிறிஸ்தவர்களாக ஆக்குவது என்பது காலனிய ஆதிக்கத்தின்  திருமறை வாசிப்பு என்பதை அங்கே தான் கண்டுகொண்டேன். ஆனால் இயேசு கூறிய நற்செய்தி பணி விரிவானது, அற்பணிப்பு நிறைந்தது, முன் வைத்த காலை பின் வைக்காமலிருப்பது, கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபை பல்வேறு பயன்பாடுகளை உடையது எனவும், ஒன்றை மட்டும் வளர்த்தெடுத்து மற்றவைகளை சூம்பிப்போக செய்யும் ஒற்றைப்படைத் தன்மை அதில் இல்லை என்பதையும் அறிந்துகொண்டேன்.

 

பியர்சன் வெளிப்படுத்திய மனநிலை கிறிஸ்தவத்தில் பெரும்பாலும் அனைவரிடமும் காணப்படுகின்ற ஒன்று. பல்சமய சூழலை புரிந்துகொண்டு திருச்சபைக்குள் காணப்படுகின்ற தவறுகளை களைய முற்படாமல் தங்களை நீதிமான்களாக எண்ணிக்கொள்ளுகின்ற ஒரு கூட்டம் திருச்சபைக்குள் உண்டு. அவர்கள் நினைத்தால் நாம் வாழலாம், இல்லையென்றால் வாழ முடியாது. நாம் எண்ணியிராத நெருக்கடிகளை உருவாக்கத் தெரிந்தவர்கள். எனது தோழி ஒருவர் வழக்கறிஞராக இருப்பவர் ஒருமுறை இவ்விதமாக கூறினார்    “என்னிடத்தில் வருகிறவர்கள் அனைவரும் குற்றம் சார்ந்து தீர்வு தேடி வருவதனால் அவர்களை ஒருபோதும் நான் சாதாரணமாக எடைபோடமட்டேன்”. திருச்சபைக்கும் அது பொருந்தும், மிகச்சிறந்த ஆன்மீகவாதிகள் என பிரகடனப்படுத்த முயற்சிப்பவர்கள் அனைவரும் ஒரு வேடத்தை தரித்திருக்கிறார்கள் அவைகளை விலக்கியே அவர்களை புரிந்துகொள்ளவேண்டும். இன்னும் ஒருசிலர், தங்களை மறைத்துகொள்ளாத குற்றவாளிகளாக வலம் வருபவர்கள், அவர்கள் தங்களை காக்கும்படி திருமறை வசனங்களையோ திருச்சபை பாரம்பரியத்தையோ கேடயமாக பிடிப்பவர்கள்.

 

ஒரு எளிய லவுகீக லாபத்திற்காக ஒவ்வொரு கணமும் நமக்கான கண்ணி நமக்கே அறியாமல் யாரோ ஒருவரால் பின்னப்பட்டுகொண்டிருக்கும். தங்கள் வளர்ச்சிக்கான காய்களை நகர்த்துபவர்கள் யாரையும் பகடையாக பயன்படுத்துவார்கள். ஒரு திருச்சபையில் அங்கமாக இருப்பவருக்கு அந்த திருச்சபையின் இறையியல் நிலைப்பாடு தெரியாது. ஆகவே ஒரு சில வசனங்களை எடுத்து நயமாக பேசுகிறவர்களின் வழி நின்று புரிதலின்றி செய்கின்ற அழிச்சாட்டியங்களுக்கு அளவே  கிடையாது.  எனது பணியில் முதல் நான்கு வருடங்கள் நான் செய்தவைகளை காட்டிலும் என்னால் அதிகமாக பிற்பாடு வந்த மூன்று வருடங்களில் செய்ய முடியவில்லை. கடந்த இரு வருடங்களாக நான் உறை நிலையில் இருக்கிறேன். அமைதி காப்பது தவிற வேறு எதுவும் செய்ய முடியாது. பேசுவதைக் கேட்கும் செவிகளே இல்லை.

 

இயேசுவின் வழி நின்று திருமறையை பார்ப்பதில் உள்ள நேர்மையை இன்று பொதுவில் எவரும் செய்வதில்லை. அதன் விலை அதிகம், ஆகவே எளிமையாக எவரை குற்றப்படுத்தி ஒரு தரப்பாக திரண்டு நிற்கலாம் என எண்ணுபவர்களே அதிகம். நிறுவப்பட்ட இந்த எண்ணங்களிலிருந்து மீண்டு வருவதே மிகப்பெரிய மீட்பு.

 

15 “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.

16 “குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். (மத்தேயு 23: 15 – 16, திருவிவிலியம்)

 

இன்று பிறரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுகிறோம் என சொல்லுபவர்கள் மிக நல்லவர்கள் என பெயர் பெறலாம் எனும் கருத்து ஊன்றபட்டாயிற்று. இயேசுவின் வார்த்தைகளை விட  அவரை வைத்து பணம் திரட்ட இயலும் என்பவர்களையே திருச்சபை ஏற்றுக்கொள்ளுகிறது. பேராயரானலும் சரி, போதகரானாலும் சரி இயேசுவின் கடைசி கட்டளைப்படி நடப்போம் என்பவர்கள் அவரின் கன்னி அழைப்பான

3 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.

7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.

8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!

இவைகளை சற்றும் பொருட்படுத்தாது விட்டுவிடுகின்றனர்.

 

ஐக்கிய இறையியல் கல்லூரியிலிருந்து நான் வெளிவரும்போது இரண்டு திருமறைப் பகுதிகளை எனக்குள்ளதாக நான் தெரிவு செய்தேன்.  ஒன்று எங்களது கல்லூரி தனது மாணவர்களுக்கு என அறிவுறுத்தும் திருவசனம்.

“இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்”.(மத்தேயு  20 :28, திருவிவிலியம்) இதில் “தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கு” எனும் கிரேக்க வார்த்தையையே எங்கள் கல்லூரியின் இலச்சினை கொண்டுள்ளது.

மேலும்

இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர்.

14 வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே. (மத்தேயு  7 :13 – 14, திருவிவிலியம்)

“இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்” எனும் வார்த்தைகளும் எனக்கு உறுதுணையாக நின்றன. யார் என்னை புரிந்துகொள்ளுகிறார்களோ  இல்லையோ, இடுக்கமான வாயிலைத் தெரிந்து கொண்ட இறைமகனுக்கு புரியும் எனது வழிகளும் எனது அற்பணிப்பும்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (75)”

 1. Jayant Judilson (@Judilson) Says:

  Dear bro, your last para sums it up all. We do not have to worry about what the worldly people think about us, and this applies to both the positives and the negatives. I think some people, like your friend here, face vitreous situations in life and turn into vitreous individuals themselves. We cannot judge them but can only pray for betterment of their lives.

 2. Logamadevi Annadurai Says:

  “தாங்கள் செய்கிறது இன்னது என்பதை அறியாதவர்கள் இவர்கள்; இவர்களை மன்னியுங்கள்”

  “அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்”

  “நல்ல மனிதன் தன் உள்ளத்திலிருக்கும் நல்ல களஞ்சியத்திலிருந்து நலமானதை எடுத்து அளிக்கிறான்; பொல்லாத மனிதன் தன்னுள் இருக்கும் பொல்லாத களஞ்சியத்திலிருந்து பொல்லாததையே எடுத்து அளிக்கிறான்”
  இந்த வரிகளை நாங்கள் உங்களுக்குச்சொல்லவேண்டியதில்லை பாஸ்டர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: