பனைமரச்சாலை (76)


காணாமற்போன பனை

இயேசு, தனது பணி எதுவென்பதை கூறுமிடமாக நாசரேத்து கொள்கை விளக்க அறிவிப்பு முன்னிற்கிறது.  நாசரேத்து இயேசு வளர்ந்த ஊராயினும், அது இஸ்ரவேலருக்குள்ளே மதிப்பிழந்த ஊராயிருந்தது. இயேசு அங்கிருந்தே தனது பணியை ஆரம்பிக்கிறார். அவரிடம் கொடுக்கப்பட்ட தோல் சுருளில் ஏசாயா தீர்க்கரின் புத்தகம் கொடுக்கப்படுகிறது.

“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்

ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். ” (லூக்கா 4: 18 – 19 திருவிவிலியம்)

முதலில் மக்கள் இதைக்கேட்டு ஆச்சரியப்படுகின்றனர்.

அதைத் தொடர்ந்து, தனது பணியைக் குறித்து அவர் விவரிக்கும்போது, அது எலியா மற்றும் எலிசா தீர்க்கரின்  வழி வந்தது என்கிறார். இஸ்ரவேலுக்கு வெளியே தீர்க்கர்கள் செய்த பணியை இயேசு குறிப்பிடவே, தொழுகைக் கூடத்திலிருந்த யாவரும் அவர் மேல் சீற்றங்கொண்டு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டு சென்று தள்ளி கொன்றுவிட மனதாயிருந்தனர். அந்த மனநிலை முக்கிய அவதானிப்புக்குறியது. எங்கள் எண்ணம் சார்ந்து நீ கூறுபவைகள் இருக்குமாயின் உன்னை ஏற்றுக்கொள்வோம் அல்லது சற்று மாறுபடுமாயின் உன்னை கொலை செய்யவும் தயங்கமாட்டோம் எனும் சீற்றம் கொலைகாரர்களிடமிருந்து எழவில்லை, தொழுகைக் கூடத்திற்கு வந்தவர்களுள் எழுவதை ஆச்சரியத்துடன் நாம் கவனிக்கலாம்.

அந்த உக்கிரம் தணிய வேண்டுமாயின், முழு எண்ணங்களும் மாற்றுருவடையவெண்டும். அவ்விதமான ஒரு மாற்றம், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் எனும் அடிப்படை புரிதலிலிருந்தே எழும். எனது கடவுள் பெரியவர், உனது கடவுள் சிறியவர் எனும் எண்ணங்கள் முதிரா ஆன்மீகத்தின் விளைவே. கடவுளை நம்புகிறவர்கள் அனைவரும் பல்வேறு தன்மைகள் கொண்ட பிள்ளைகள் ஒன்றித்திருப்பதையே விரும்புவார் என்பதே உயர்ந்த எண்ணமாக இருக்க முடியும். எனது எண்ணத்தைச் சார்ந்தே நீயும் எண்ணங்கொள்ள வேண்டும், அதுவே கடவுளின் விருப்பம் என்பது, கடவுளை நாம் நம் கரத்தில் வைத்து பூட்டிவைத்திருக்கிறோம் எனும் ஆணவத்திற்கு நிகர்.

கிறிஸ்தவத்திற்குள் மாற்றங்கள் ஏன் தேவை என்பதை காலா காலங்களில் கடவுளின் வெளிப்பாடுகளைப் பெற்ற அனேகர் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஐக்கிய இறையியல் கல்லூரியில் எங்களுக்கு பேராசிரியராக இருந்த முனைவர் ஜோசப் முத்துராஜ் அவர்கள், காந்தியின் கிறிஸ்தவ மதமாற்றம் குறித்த பார்வையை விரிவுபடுத்தி கிறிஸ்தவர்கள் தங்களை எப்படி முன்னிறுத்தவேண்டும் என முக்கிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், பேராசிரியர் இஸ்ரயேல் செல்வநாயகம் பல்சமய உரையாடலில் கிறிஸ்தவம் சார்பில் பெரும் பங்களிப்பற்றியவர்கள், பெயர்கள் சொல்லி முடியாத அளவிற்கு கிறிஸ்தவத்திற்குள் போதகர்கள், பேராயர்கள் பல்சமய உரையாடலின் வழியாக புதியவைகளை கற்றுக்கொள்ளவும், அவைகளை முன்னெடுக்கவும் முயற்சிக்கிறார்கள்.

பேராசிரியர் வெஸ்லி அரியராஜா இலங்கை தமிழ் போதகர். அவர் நூல் பேராசிரியர் தியான்சந்த் கார் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு “உமது கடவுள் எமது கடவுள் நமது கடவுள்” என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்தது. பல்சமய சூழலில் பழமைவாதங்களை விட்டு விலகி, திருமறை சார்ந்து பல்சமய உரையாடலில் பங்கெடுக்க அரியராஜா அழைப்பு விடுக்கிறார். ஆதி கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் இயேசுவைப் போன்றே யூதர்கள். அவர்களோடு இணைந்த பிற சமயத்தவர்களுக்கும் கலாச்சார பின்னணியைக் கொண்டவர்களுக்கும் காணப்பட்ட விருத்தசேதனம் அவர்களை ஒன்று கூட தடை செய்தது.

எருசலேமில் கூடிய மாமன்றம் இயேசுவின் சீடர்களுள்  காணப்பட்ட இந்த மேட்டிவாதத்தை மாற்றி விருத்தசேதனம் தேவையற்றது என ஒத்துகொண்டனர். அதை முன்னிறுத்தி கிறிஸ்தவர்கள் இன்று இரண்டாம் எருசலேம் கூடுகைக்கு ஆயத்தமாவோம், என்று அழைப்பு விடுக்கிறார் வெஸ்லி அரியராஜா. திருமுழுக்கை அப்படியே புறந்தள்ளுகிறார். நிசேயாவில் கூடிய கிறிஸ்தவ கூடுகையின் விளைவுகளை மாற்று எண்ணத்தில் நோக்க அழைப்பு விடுக்கிறார். எஞ்சிய ஆன்மீகத்தின் வழியாக பிற பற்றளர்களிடம் இணைந்து உரையாட அழைப்பு விடுக்கிறார். இந்த அழைப்பு பொதுவான நம்பிக்கைகளை இணைத்து ஆன்மீக வாழ்வில் முன்னேற உதவுகிறது. குறிப்பாக சமயங்களுக்குள் நல்லுறவு ஏற்பட வழிவகை செய்கிறது.

கடவுள் தம்மை அனைவருக்கும் உரியவராக காண்பிக்கிறார் என்பதை திருமறை வாயிலாக வெளிப்படுத்துகிறார் அரியராஜா. கிறிஸ்தவத்திற்கு வெளியே செயல்பட முடியாதவர் கடவுளாக இருக்கமுடியாது அல்லது திருமுழுக்கு பெற்றோர் மட்டுமே கடவுளின் பிள்ளைகள் எனக் கூறிக்கொள்ளுவது கடவுளின் பிரம்மாண்டத்தை புரிந்து  கொள்ளாமையே என நம்மை சுய நிர்ணயம் செய்துகொள்ள அழைப்பு விடுக்கிறார்.

யூதர்கள் பல தெய்வ வழிபாட்டிலிருந்து விலகி ஒரிறை கோட்பட்டிற்கு நேராக தம்மை தொகுத்துக்கொள்ளுவதை “The Natural History of the Bible” எனும் புத்தகத்தில் டானியேல் ஹிலல் (Daniel Hillel) கூறுகின்றார். அதற்கான காரணங்கள் அவர்களுக்கு உண்டு. பல்வேறு வகைகளில் அவர்கள் அந்த புரிதலுக்கு வந்தடைந்தனர். அவ்விதம் இணைகயில் அவர்களுள் எழுந்த இறைவாக்கினர் கடவுள் அனைவருக்கும் உரியவர் எனும் கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.

இஸ்ரவேலர்கள் கடவுளை குறித்த புரிதலை வெளிப்படுத்தும்போது அவரை படைகளின் ஆண்டவர் என அழைக்கின்றனர். அப்புரிதலில் நின்று தமது எதிரிகளோடு போர் செய்யும் சமயத்தில் வெற்றிபெற்றால் கடவுள் தமக்காக போரிட்டார் எனவும், தோல்வியுறும் வேளையில்  தாம்  கடவுளின் வழிகளை விட்டு விலகினார்கள் எனவும் பொருள் கொள்ளுகிறார்கள். ஆனால் கடவுள் எதிர் தரப்பில் நின்றும் போரிடுகிறார் எனும் எண்ணம் ஒரு சில இடங்களிலே பதிவு செய்யப்படுகிறது.

தனித்தன்மையை பேணிக்கொண்டு அமைதி வழியில் செல்ல மீக்கா இறைவாக்கினர் பின்வருமாறு கூறுகின்றார்.

“…..அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும்

தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்;

ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது;

அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். [1]

அவர்களுள் ஒவ்வொருவரும் தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும்,

அத்தி மரத்தின் அடியிலும் அமர்ந்திருப்பர்;

அவர்களை அச்சுறுத்துவார் எவருமில்லை;

ஏனெனில், படைகளின் ஆண்டவரது திருவாய் இதை மொழிந்தது. [2]

மக்களினங்கள் யாவும் தம் தெய்வத்தின் பெயரை வழிபடும்.

நாமோ, நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு

என்றென்றும் பணிந்திருப்போம்”. (மீக்கா 4: 3 – 5 திருவிவிலியம்)

 

இயேசு தமது பணியை எளியோருக்காக செய்ய முற்பட்டார் என்பதனை அவரது பிறப்பிலிருந்தே அறிந்துகொள்ளலாம். அவரின் காணாமற்போன ஆடு ஒரு சிறந்த உவமையாக இன்றும் நிற்கிறது.

1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க

அவரிடம் நெருங்கிவந்தனர்.

2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.

3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

4 “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?

5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்;

6 வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து,

‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.

7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். (லூக்கா  15:1 – 10 திருவிவிலியம்)

SAMSUNG DIGITAL CAMERA

SAMSUNG DIGITAL CAMERA

கடவுள் மேய்ப்பர்  என்பது இஸ்ரவேலருக்குள் இருந்த புரிதல். ஆனால் இயேசுவின் காலத்திலோ மேய்ச்சல் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இல்லை.  பெரும்பாலும் திருடர்களும் சமூகத்தில் மதிப்பிழந்தவர்களூமே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர். தாவீது கர்த்தர் என் மேய்ப்பர் எனக் கூறுகின்ற காலம் வேறு, இயேசு நானே “நல்ல” மேய்ப்பன் என அழுத்திக்கூறும் காலம் வேறு. இஸ்ரவேல் மக்களை ஆடுகள் என பொருள் கொண்டால் கூட, “இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்”. (யோவான் 10: 16 திருவிவிலியம்) எனும் கூற்று இயேசுவின் சமாரிய பயணங்களையும் உள்ளடக்கி பொருள் கொள்ளப்படவேண்டும். அந்த விரிந்த மனநிலை இல்லையென்றால் திருமறையை  கவனமின்றி கையாளுகிறவர்கள் ஆவோம்.

 

இன்று காணாமல் போவது ஆடுகள் அல்ல பனை மரங்கள். பல்வேறு அச்சுருத்தல்களின் நடுவில் அவைகள் வாழ்கின்றன. மேய்ப்பன் அற்ற ஆடுகள் போலவே அவைகளும் காணப்படுகின்றன. பனைகளின் காவலர் இன்று நமக்குத் தேவை. நான் பொருள் கொள்ளக்கூடுவது எல்லாம் பனைகளை மீட்கும் பணியினை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். அது, சுழியல் சார்ந்த ஆணை, வரலாற்றின் எச்சம், கலச்சார ஒன்றிணைப்பு, சமய நல்லிணக்கம், நலிவுற்றொருக்கான வேலைவாய்ப்பு,  மற்றும் எனது ஆன்மீக ஈடேற்றம். பனை சார்ந்த  எனது தேடுதல் எனது இறுதி மூச்சு மட்டும் தொடரும் தடைகள் ஒரு பொருட்டல்ல. புகழின் வழி அல்ல, தடைகளின் வழியாகவே இவ்விடம் நான் வந்து சேர்ந்திருக்கிறேன்.

 

ஆனால் எனக்கு நன்கு தெரியும் இத்தேடுதல் எளிதானது அல்ல. அற்பணிப்பின்றி எவரும் செய்யக்கூடுவதும் அல்ல. நினைத்த மாத்திரத்தில் விளைவுகளை கொண்டுவரும் மந்திர வித்தையும் அல்ல. கரிசனையுடன் கூடிய தேடுதல், உண்மையை கண்டடையும் அகன்ற விழிகள், தடைகளில் தொய்வடையா தொடர் வேகம், வீழ்ச்சிகளில் கற்றுக்கொண்ட விவேகம், கடவுளின் வழி நடத்துதல் நம்மோடு உள்ளது எனும் ஆழ்ந்த நம்பிக்கை இவைகளோடே தான் நாம் சிறுக சிறுக முன்னேற முடியும்.

 

ஜெயமோகன் சொன்ன ஒரு கதை அவரது வார்தைகளிலேயே கொடுக்கிறேன்.  எனது பனைமர வேட்கைப் பயணத்திற்கு பெரும்  தூண்டுகோலாக அமைந்த கதை அது .

 

“முன்னொருகாலத்தில் சீனமன்னன் ஒருவன் ஓர் இனக்குழுவை முழுமையாகவே அழித்தொழித்தான். அவர்களின் பண்பாட்டின் ஒரு சிறிய அம்சம்கூட இல்லாமல் செய்தான். அந்த இனக்குழுவின் குலப்பாடகனைக் கொன்றான். அந்த பாடகனின் நரம்பிசைக்கருவியையும் உடைத்தான். ஆனால் அக்கருவியில் நரம்புகளை இழுத்துக்கட்டும் ஒரு கிளிஞ்சலை மட்டும் ஒரு வீரன் எடுத்து வைத்துக்கொண்டான். அது வித்தியாசமாக இருந்தது.

 

பல நூற்றாண்டுகள் கழிந்து ஒரு இசைக்கலைஞன் அந்தக் கிளிஞ்சல் ஓரு நரம்பிசைக்கருவியின் உறுப்பு என்று கண்டுகொண்டான். அதை பயன்படுத்தவேண்டுமானால் அந்த நரம்புகள் எப்படி இருக்க வேண்டும் என அவதானித்தான். அந்தநரம்புகளை கட்ட அந்தக்கருவியின் குடம் எப்படி இருக்க வேண்டும் என்று ஊகித்தான். அவ்வாறாக அவன் அந்தக் கருவியை மீண்டும் உருவாக்கினான்

 

அந்தக்கருவியை அவன் இசைத்தபோது அந்தக் குலப்பாடகனின் இசை மீண்டு வந்துது. அந்த இசைஎழுந்தபோது இறந்துபோன இனக்குழு மூதாதையரின் ஆவிகள் மக்களின் உடல்களில் தோன்றின. அவை அழுதபடி தங்கள் கதைகளை சொல்ல ஆரம்பித்தன. அந்தக்கதைகள் வழியாக எல்லாமே மீண்டு வந்தது.”

 

நம்மிடம் இருக்கும் பனை சார் தகவல்கள் வெகு குறைவு என்பதே எனது எண்ணம். பொருட்படுத்தத்தக்க யூகங்களும் ஆய்வுகளும் குறைவே. அவைகளை முன்னெடுக்கும் வேகமும் பொருளும், ஆய்வு கருவிகளும் இன்று நம்மிடம் இல்லை. பனையிலிருந்து ஒரு மனித வரலாறு எழுதப்பட்டால் அது மானுட  வாழ்வின் பெரும்பகுதியை கூறும் தன்மை  கொண்டதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  குறைந்த பட்சம் தமிழகத்தின் வரலாற்றில் பனையின் பங்களிப்பு என்ன என்பதை அறிய இயலும். நாம் தேடுகின்ற பனை, நமது மூதாதயர் விட்டுச்சென்ற தடம். இன்று தவற விட்டால் பிறகு எப்போதும் அதை நம்மால் கண்டுபிடிக்க இயலாது.

 

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (76)”

 1. Logamadevi Annadurai Says:

  இந்த பதிவின் சாரம் “உமது கடவுள் எமது கடவுள் நமது கடவுள்” என்னும் வாக்கியத்தில் இருக்கிறதென்றே நான் உணர்கிறேன்
  கிருஸ்தவம் மட்டுமல்ல அனைத்து மதங்களுமே ஆதிவடிவிலிருந்து மாறத்தான் வேண்டும், மாறும் சமூக கட்டமைபுக்களுக்கு ஏற்ப மதங்களும் மாற்று வடிவம் எடுத்தாலே மானுடம் அதினின்றும் பயன் பெறமுடியும். மதங்கள் மனிதனுக்கானதல்ல மானுடத்திற்கானவை!!!!!!

  ”மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்” இந்த பத்தியை நான் மிக விரும்பி வாசித்தேன் பாஸ்டர்.

  காணாமல் போன ஆடுகளையும், நாம் இழந்து கொண்டிருக்கும் பனைகளையும் ஒப்பிடிருப்பது மிக பொருத்தமாக இருக்கிறது
  இன்று ஒரு பதிவில் இதை படித்தேன் பாஸ்டர்

  ஆதியில் பிரம்மா பூமியில் உள்ளவர்களுக்கு பலவற்றைப் படைத்தார். ஆனால் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மக்களின் பசியைத் தீர்க்கவில்லை. மக்களின் தேவையையும் பூர்த்தி செய்யவில்லை. எனவே மக்களில் ஒரு சிலர் சிவனிடம் முறையிட்டனர். சிவன் அவர்களது பிரார்த்தனையைச் செவிமடுத்தார். பூலோக மக்களின் அனைத்து தரப்பினருக்கும் அனைத்தும் கிடைக்க போதிய வசதியுடன் பிரம்மா தன்னுடைய காரியத்தைச் செய்யவில்லையே என்று கோபம் கொண்டார். சிவனின் கோபத்திற்கு பிரம்மா பலியாக கூடாதென கருதிய பார்வதி தேவி தலையிட்டு பிரம்மா மீது ஏற்பட்ட கோபத்தைத் தவிர்த்தார். உடனே மக்களுக்கு பயன்படக் கூடிய, முக்கியமான பட்டினியால் வாடுபவர்களுக்குப் பசியைப் போக்கவும், பஞ்சத்தாங்கியாகவும் சிவன் ஒரு மரத்தைப் படைத்தார். அதுவே பனைமரம்.

  சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனிஸ் பதநீர் இறக்கி அதிலிருந்து பனங்கற்கண்டு செய்வதை தன் குறிப்புகளில் பதிவு செய்ததுடன் தன்னுடைய நாட்டிற்கு கொண்டு போய் சேர்த்து அங்கு அதற்கு ‘சீனி’ என பெயரிட்டதாகவும் ஒரு செய்தியுண்டு.

  இப்படி இதன் எண்னற்ற பயன்களை உங்களின் முயற்சியிலாவது அறிவோமாக!!!!
  மீண்டும் நன்றி பாஸ்டர்

 2. Jayant Judilson (@Judilson) Says:

  very nice write up..nice story from Jeymohan..all the best in your endeavors for the palm tree. God bless.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: