பனைமரச்சாலை (77)


வேம்பார் கருப்பட்டி

மதியம் எங்கே சாப்பிட்டோம் என நினைவில்லை ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து திரும்பும்போது எங்களுக்கு அனேக நிகழ்ச்சிகள் காத்துக்கொண்டிருந்தது. தற்போது அரசு ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு தலைமையாசிரியராக பதவிஉயர்வு பெற்றுள்ள கிறிஸ்து ஞான வள்ளுவன் எங்களை தொடர்புகொண்டதை கவனிக்க தவறி விட்டோம். வந்த வழியில் வேம்பார் நெருங்குகிறது என அறிந்த பின்பே உறைத்தது. மிகவும் களைப்பாக இருந்ததால் அருகிலிருந்த ஒரு கடையின் அருகில் வண்டியை நிறுத்தினோம். வேப்பமர நிழலில் ஆசுவாசப்படுத்திக்கொண்டது பேரின்பம்.

 

செல்பேசியை எடுத்துப்பார்த்தால் ஆசிரியர் வள்ளுவனிடமிருந்து கணக்கில்லாத அழைப்புகள் வந்திருக்கின்றன. அவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தியும் வந்திருந்தது. “வருகிற வழியில் 60 கிலோ மீட்டருக்கு முன்பு உங்களை சந்திக்க கேப்டன் டி.வி நிருபர் காத்திருக்கிறார். அவரது தொடர்பு எண் என ஒரு எண் இணைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அரண்டு போனோம். இன்னும் 30 கிலோமீட்டர் தான் வேம்பாருக்கு இருக்கும் என கருதினோம். எப்படி பின்னோக்கி செல்வது என தெரியவில்லை. நிலைகுலைந்திருந்த அந்த தருணத்தில், சரி அழைத்து தான் பார்ப்போம் என எண்ணியபடி, அந்த தொடர்பு எண்ணை அழைத்தோம். அவர்களோ வாகனத்தில் எங்கோ சென்றுகொண்டிருந்தனர்.  ஆசிரியரை தொடர்புகொண்டபோது நாங்கள் எங்கே நிற்கிறோம் எனக் கேட்டார். அந்த ஊர் மக்களிடம் கேட்டு நாங்கள் இருக்கும் இடத்தைச் சொன்னோம், அப்படியே வாங்க இன்னும் 15 கி மீ வருகிற வழியில் உங்களை அவர்கள் சந்திப்பார்கள் என்றர். எனக்கும் அமிர்தராஜுக்கும் ஒருசேர பெருமூச்சு எழுந்தது. தப்பித்துவிட்டோம் என.

நாங்கள் அங்கிருந்த கடையில் காளிமார்க்கின் பவண்டோ வாங்கி குடித்தோம். பத்திரிகையாளர் சந்திப்பு நாங்கள் எதிர்பாராதது. திட்டத்தில் இல்லாதது, ஆனால் வேண்டாம் என சொல்ல முடியாதது. இப்பயணத்தை நான் துவக்குகையில், எனக்கு வெறுமனே பனை சார்ந்த ஒரு புரிதல் வேண்டும் என்பதற்காகவே துவக்கினேன். ஆனால், தமிழகம் வந்த பின்பு, ஜெபக்குமாரும் அமிர்தராஜும் என்னை பனை பாதுகாப்பாளன் எனும் கட்டமைப்புக்குள் இழுத்துபோட்டுவிட்டார்கள். பத்திரிகையாளர் சந்திப்பினால்  இந்த பயணம் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தினாலும் நல்லதே எனும் எண்ணத்திற்கு நானும் வந்துவிட்டேன். நாங்கள் செல்லும் வழியில் இருவர் நின்று எங்களை கையசைத்து நிறுத்தினார்கள்.

 

எனது பைக்கில் இருந்த பனை மரக்கொடியை பார்த்து நிருபர் மயங்கிவிட்டார். “ஓலையே கொடியாகவா சார்” என ஆச்சரியத்துடன் கேட்டார். அந்த நிருபர், தனது வழ்வில் பனை மரம் எப்படி முக்கியமானதாக இருந்தது என்றும், இன்று பனை மரம் சார்ந்த பொருட்கள் அரிதாகிவிட்டது என்றும் உணர்ச்சிபொங்க கூறினார்.  சற்று நேரம் பின்னணிகளை குறித்து தெரிந்துகொண்டு  பேட்டி எடுக்க ஆரம்பித்தார். பேட்டி முடிந்த பின்னும் எங்களுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தனர். எங்களை  விடவே மனதில்லை. வேம்பாரிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன. அனைத்தையும் அமிர்தராஜ் தான் சமாளித்தார். பேட்டி முடிந்தவுடன் அமிர்தராஜ் “பாஸ்டர், ரொம்ப நல்லா பேசுனீங்க” என்றார். “எல்லாம் உங்க பயிற்சி தான் என்றேன்”. சிரித்துக்கொண்டே கிளம்பினோம்.

 

நான் எனது பயணத்தை திட்டமிடுகையில் ஒரிசா சென்று அங்கிருந்து ஆந்திரா வழி வரவெண்டும் என்றே திட்டமிட்டிருந்தேன். பொருளாதாரம், நேரம் இந்த இரண்டும் போதிய அளவில் இல்லாததால், என்னால் அப்படி செய்ய இயலவில்லை. ஆனால் கடவுளின் அருள் என்னுடனே கூட இருந்தது. வேம்பார் என்று நான் அதுவரை பெயர் கேள்விப்படாத ஒரு ஊரை நான் தெரிவு செய்தது மிகவும் தற்செயலானது. ஆனால் அங்கு எனக்கு காத்திருந்த ஆச்சரியங்கள் பல. மீண்டும் சொல்லுவேன், எனது வேட்கையை கடவுள் ஆசீர்வதித்தார்.

 

ஆசிரியர் வள்ளுவன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது, நாகர்கோவில் கங்கார்டியா செமினரியில் படிக்கும் சாம் ஜெபசிங் எனும் மூன்றாம் ஆண்டு மாணவர். என்னை முகநூல் மூலம் அறிமுகப்படுத்திக்கொண்டவர். எனது பயண திட்டங்களை பார்த்து, அவருக்கு முகநூலில் அறிமுகமாயிருந்த கிறிஸ்து ஞான வள்ளுவனை எனக்கு அறிமுகப்படுத்தினார். இப்படி ஒருவரை ஒருவர் நெரில் அறியாதவர்கள் கூட, பனை என்றவுடன் எனக்கு உதவி செய்ய முன்வந்தது ஆச்சரியமானது. ஆரம்ப திட்டப்படி நான் வேம்பாரில் தான் தங்கவேண்டும். பிற்பாடு எனது பயணம் முடிந்தபின்பு, எனது பால்ய சினேகிதன் பெஞ்சமின் என்னை தொலைபேசியில் அழைத்து, “எங்க ஊருக்கு வந்துட்டு, என்னைன்னைப் பார்க்காம போயிட்டியே என்றான்”. அவன் வேம்பாரில்தான் இருக்கிறான் என எனக்குத் தெரியாது. இப்படியும் நடக்கும்.

 

வேம்பார் சென்ற பின்புதான் எனக்கு வேம்பாரின் முக்கியத்துவம் தெரிந்தது. கருப்பட்டியின் தரத்தைப் பொறுத்த அளவில் குமரி மாவட்டக்காரர்களுக்கு பிறர் மீது எந்த அபிமானமும் கிடையாது. குறிப்பாக திருநெல்வேலியிலிருந்து வரும் கருப்பட்டிக்கு “பாண்டி கருப்பட்டி” என்று பெயர். குமரி மக்களின் விடுகளில் பெரும்பாலும் கருப்பட்டி இருப்பதாலும், மேலும் நல்ல “நாடன்” கருப்பட்டி கிடைப்பதால், பாண்டி கருப்பட்டிக்கு விலை மற்றும் மதிப்பு குறைவுதான்.

 

பனை சார்ந்து எனது ஆய்வுகளை துவங்கிய பின்னரே எனக்கு உடன்குடி கருப்பட்டி சிறப்பானது என தெரியவந்தது. அது ஒரு வகையில் மிக பிந்தி நான் அறிந்துகொண்ட ஒரு தகவல். அப்படியே வேம்பார் குறித்தும் இப்போது தான் அறிகிறேன். உடன்குடி கருப்பட்டிக்கு அடுத்தபடியாக தரமான கருப்பட்டிக்கு பெயர்போன இடம் வேம்பார். ஒருவகையில் வெட்கமாக இருக்கிறது, இன்னொருவகையில் இப்பொழுதாவது அறிந்துகொண்டோமே எனும் மன நிறைவு. ஊரைத் தாண்டி போகவில்லையென்று சொன்னால் உண்மைகள் எதுவும் நமக்குத் தெரியாது. என்பது தான் உண்மை.

வேம்பாரில் பனைமரத் தோட்டம்

வேம்பாரில் பனைமரத் தோட்டம்

நான் பனைத்தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் நடத்திய கிராம பயிற்சி நிலையத்தில் தங்கியிருந்தேன். களியக்காவிளை அருகிலுள்ள  கோட்டவிளை என்னும் சிறு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. திருமணத்திற்கு முன் ஆகையால், நான் தனியாகவே அங்கே தங்கியிருந்தேன். தினமும் காலை  உணவு ஒன்று அல்லது இரண்டு லிட்டர் பதநீர் தான். ஒருமுறை பேராசிரியர் ஆர்தர் ஹாரீஸ், பனைத் தொளிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் உப தலைவர் அங்கே வந்தார்கள். அப்போது புதிதாக காய்த்து வைத்திருந்த கருப்பட்டியை காண்பித்து வேண்டுமா எனக் அந்த வளாகத்தை நிர்வகிக்கும் பெண்மணி கேட்க, அவரும் விலை கொடுத்து வாங்கினார். உடனே அதை சுவைத்துப் பார்த்தவர், முகத்தை சுளித்துக்கொண்டு ‘மழை கருப்பட்டியா” என்றார். அனைவரும் சிரித்து சமாளித்தனர். அவர் சென்ற பின்பு என்ன நடத்தது என நான் கேட்டேன். அப்போது, “மழை நேரத்தில் எடுக்கும் பதநீரில் செய்யப்படும் கருப்பட்டி உறுதியுடன் இருக்காது எனவும், அவை உடனே இழுக துவங்கிவிடும் என்றும் கூறினார்கள். அத்துணை துல்லியமாக நாக்கும் கரங்களும் கருப்பட்டிகளை அடையாளம் கண்டிருக்கின்றன. இன்று, கருப்பட்டிக்கு எந்தவிதமான தரக்கட்டுப்பாடுகளும் இல்லாததால், சீனி கலந்து விற்கப்படுவதை மிக வேதனையுடன் பார்க்கவெண்டியிருக்கிறது.

 

வேம்பார் வரும் வழியில் நாங்கள் எங்கும் பார்த்திராத ஒரு அழகிய காட்சியைக் கண்டோம். சுற்றிலும் வேலி அமைத்து சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் பனை பயிடப்பட்டிருந்தது. எங்களை எதிர்நோக்கி ஆசிரியர் காத்திருக்கிறார் என அறிந்தும் அந்த இடத்தில் எங்களால் வாகனத்தை நிறுத்தாமல் இருக்கமுடியவில்லை. கண்கள் நிரம்ப அந்த காட்சியை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நெஞ்சம் விம்மும் ஒரு தருணம். மிக சிரத்தையுடன் ஒரு தனி நபர் மேற்கொண்டுள்ள பணி. அந்த பகுதிக்குள் செல்ல இருந்த பிரம்மாண்ட இரும்பு வாசலில் “பனை செல்வம்” என  இரும்பில் செய்து ஒட்டப்பட்டிருந்தது. வடலி பருவம் கூட வராத இளம் பனைகள். பார்ப்பதற்கு பள்ளிகூடத்தில் மாணவர்கள் வரிசை தவறாமல் அமர்ந்திருக்கும் காட்சிபோல இருந்தது. அமிர்தராஜ் அழகிய  புகைப்படங்களை எடுத்தார்.

பனை செல்வம்

பனை செல்வம்

வேம்பார் சென்றபோது நாங்கள் சற்றும் எதிர்பாராத வரவேற்பு எங்களுக்காக காத்திருந்தது. ஆசிரியர் வள்ளுவன் எங்களுக்காக அங்கே பேருந்து நிலையத்தில்,  காத்திருந்தார். அங்கிருந்த சுமார் 30 பேர் உடனேயே கூடிவிட்டனர். அனைவரும் ஆண்கள். நாங்கள் கனவிலும் எதிர்பார்த்திராத வரவேற்பு எங்களுக்கு கொடுக்கப்பட்டது. மாலைகள் மட்டும் கிடையாது அத்தனையும் சால்வைகள். ஒவ்வொருவராக போட்டுகொண்டே வந்தார்கள். முதல்முறை இப்படி சால்வைகள் விழுவதால் நெளிந்தபடியே அதை ரசித்தேன். ஆசிரியர், நான் பேசவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

 

நான் பேசத்துவங்கினேன். எங்கிருந்து வந்த வேகம் எனத் தெரியாது ஆனால் உணர்ச்சிகரமாக பேசினேன். வேம்பாரில் எனது காலடி படும் முதல் நாள் இது. நீங்கள் எனக்கு அளித்த அன்பிற்காக இந்த மண்ணுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். இன்று நான் வரும் வழியெங்கிலும் பனைமரம் சூழநிற்கும் அழகிய கிராமமாக இது காணப்படுகிறது ஆனால் உங்களில் யருக்கேனும் பதநீர்  வேண்டுமென்று சொன்னால் நீங்கள் ஒரு பனைத் தொழிலாளியை தேடிச்சென்றே அதை பருக முடியும். நமது ஊரில் ஊற்றெடுக்கும், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்காத பதநீர் இன்று நமக்கு கிடைப்பது அரிதாயிருக்கிறது. ஆனால் எங்கோ தனது தொழிற்சலையை அமைத்து குளிர்பானங்களை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பானம் 24 மணிநேரமும் நாமக்கு கைக்கெட்டு தூரத்தில் இருக்கிறது இந்த நிலை மாறவேண்டும். நமது குழந்தைகள்  ஆரோக்கியமான பதனீரை குறைவின்றிப் பருக வழிவகை செய்ய வெண்டும்.

வேம்பார் உரை

வேம்பார் உரை

எனது சூழலின் கட்டுப்பாடுகளை உணர்ந்தே, நான் ஓலைகளை தெரிவு செய்து பயன்படுத்தி வருகிறேன். ஓலைகளில் நவீன நுகர்வோருக்கான பொருட்களை எப்படி எளிதில் செய்யலாம் என நான் முயற்சிகளை மேற்கொள்ளுகிறேன். ஓலைகளை விரயமாக்காமல் செய்யும் இவைகளுக்கு பெருத்த வரவேற்ப்பு இருக்கிறது. சிறுவர்களோ, வாலிபர்களோ சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண்களோ இவைகளை எளிதில் கற்றுக்கொள்ளலாம்.  ஓலை ஒரு மதிப்புகூட்டப்பட்ட சந்தைப்பொருளாக மாற்ற நாம் முயற்சிப்பது பனை மரத்தின் ஆயுளை கூட்டும் என்றேன்.

 

பனை ஓலையில் நன் செய்த கைபட்டைகளை அவர்களுக்கு காண்பித்தேன், அவர்கள் முன்னிலையிலேயே இரண்டே நிமிடத்தில் ஒரு ஓலை சிலுவையை செய்து ஆச்சரியப்படுத்தினேன். எனது கரத்திலிருந்த படங்களின் தொகுப்பைக் காட்டி, குருத்தோலை, சாரோலை மற்றும் காவோலைகளில் நான் செய்த படங்களை காட்டி விளக்கினேன். கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு பொதுவெளியில் என்னைசூழ்ந்து இத்தனை மக்களை பார்ப்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அனேகர் தங்கள் கரங்களில் இருந்த செல்போனில் படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் வீடியோவும்  எடுத்தனர்.

வேம்பாரில் ஓலை விளக்கம்

வேம்பாரில் ஓலை விளக்கம்

நாங்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே எங்களுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் எங்களை கலைக்கும்படி “பனையேறிகளுக்கு இண்னைக்கு என்ன மதிப்பு இருக்கு என்றார்” நாங்கள் திரும்பி பார்க்கையில், கட்டுமஸ்தான உடலுடன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஒரு நபர் நின்றுகொண்டிருந்தார். இதெல்லாம் ஒரு பயனும் விளைவிக்காது என்றார். கூட்டத்திலிருந்து சிலர் அவரை அமர்த்தப்பார்த்தனர். ஒருவர், அவரும் ஒரு பனைத் தொழிலாளிதான் என எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த மனிதர் மேலும் பேச ஆரம்பித்தார். இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு, குமரி அனந்தன் இங்கு வந்தார், அவருக்கு எடைக்கு எடை கருப்பட்டி வழங்கினோம் என்ன ஆகிவிட்டது எங்களுக்கு என்றார். அவராலேயே முடியாத போது நீங்கள் என்ன செய்துவிடப்போகிறீர்கள் என்றார். எதுவும் பேச இயலாதபடி நின்றோம்.

வேம்பார் உரை

வேம்பார் உரை

அவரே தொடர்ந்தார், நாங்கள் பல வருடங்களாக பதனீர் இறக்கிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கான உதவிகள் ஏதும் இங்கு கிடையாது. இங்கு கருப்பட்டி தரமாக செய்கிறவர்கள் அனைவரும் அதை உடன்குடிக்கு அனுப்புகிறார்கள். இத்தனை வருடங்கள் கட்டிக்காத்த எங்கள் வேம்பார் கருப்பட்டி இன்று உடன்குடி கருப்பட்டியாக விற்கப்படுகிறது. எங்களூரில் விற்கப்படும் கருப்பட்டிகளில் பலதும் சேலத்திலிருந்து வருகிறது. வியாபாரிகள் மட்டமான கருப்பட்டியை விற்பதால் முதல் தரத்திற்கு வரவேண்டிய எங்கள் ஊரின் பெயர் காணாமல் போய்விட்டது என்று ஆதங்கத்துடன் சொன்னார். உங்களைக் குறை கூறவில்லை சார், மனது பொறுக்காமல் இவைகளை சொல்லுகிறேன் என்றார் மன்னிப்பு கோரும் தொனியில். ஆசிரியர் கூறும்பொது, வேம்பார் என கூறப்படும் எங்கள் கிராமத்திற்கு பெருமையே தரமான கருப்பட்டி தான். அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்றார்.

வேம்பாரில் ஒரு பெரியவர் சால்வை அணிவித்தபோது

வேம்பாரில் ஒரு பெரியவர் சால்வை அணிவித்தபோது

மனது பாரமாக இருந்தது. எத்துணை பெருமைமிக்க மண் இது? தமிழக வரை படத்தில் காணப்படவேண்டிய முக்கிய ஊர்களில் ஒன்று. தமிழகத்தின் மாநில மரத்தின் ஆகச்சிறந்த பயன்பட்டு பொருளை காலம்காலமாக  வழங்கிவரும் உன்னதமான ஊர். இந்த ஊர் மக்களின் பெருமைக்குரிய பனைமரம் காப்பற்றப்பட என்ன செய்ய போகிறோம் என புரியாதபடி விழி விரிய நின்றிருந்தோம்.  ஆசிரியர் ஒரு வேண்டுகோள் வைத்தார். இங்கிருந்து சுமார் 5 கி மீ தொலைவில் சுப்பிரமணியபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறது அந்த ஊர் மக்கள் சுமர் 2 இலட்சம் மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார்கள். நீங்கள் வருவீர்கள் என அவர்களுக்கு சொல்லியிருக்கிறோம், நீங்கள் போகும் வழிதான் அது, அவர்களுக்கு கண்டிப்பாக உதவுங்கள். எங்களை விட அவர்களுக்கே உங்கள் உதவி தேவை என்றார்கள்.

வேம்பாரில் நிகழ்ந்த சந்திப்பு தி இந்துவில் வெளியான போது

வேம்பாரில் நிகழ்ந்த சந்திப்பு தி இந்துவில் வெளியான போது

நாங்கள் வருகிற வழியில் பார்த்த பனை செல்வம் எனும் பனை பண்ணை குறித்து விசாரித்தபோது, அந்த பண்ணை வேம்பாரைச் சார்ந்த ஒருவருடைய பண்ணை அது எனவும், அவரது தொழில் பனை மரங்களை முறிப்பது தான் எனவும் ஒருவர் கூறினார். ஒவ்வொரு பனை சார் செய்தியும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் ஊராக வேம்பார் காணப்பட்டது. எப்படி எடுத்துக்கொள்ளுவது என்றே தெரியவில்லை. களைப்பின் மிகுதியில் இருந்தாலும் சுப்பிரமணியபுரம் செல்லும் அழைப்பு வந்ததால் புறப்பட்டோம். எங்களுக்கு தங்குமிடமும், உணவும் ஆயத்தம் செய்வதாக ஆசிரியர் கூறினார், அவற்றை மறுத்துவிட்டு நாங்கள் புறப்படவேண்டும் என்றோம்.. கூடியிருந்த அனைவருக்கும் ஆசிரியர் டீ ஒழுங்கு செய்தார். அமர்ந்து இன்னும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அமிர்த்தராஜ் இரண்டு கிலோ கருப்பட்டி வாங்கினார். ஆசிரியருக்கும் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றோம். சூரியன் மறையத்துவங்கியது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

4 பதில்கள் to “பனைமரச்சாலை (77)”

 1. Logamadevi Annadurai Says:

  உங்களுக்கான வரவேற்பில் மகிழ்ந்தேன் ஏனெனில் இது பனைக்கானதோர் பிரத்யொகமான வரவேற்பு அல்லவா? பனைகளை முறித்து சூளைகளில் எரித்துக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் பனைகாப்பாளராக அறியப்பட்ட உங்களை வரவேற்பது பனைக்கும் நல்ல காலம் வந்துகொண்டே இருக்கிறது என்பதற்கான அடையாளமே!!
  அதுவும் உங்களின் உணர்வெழுச்சியுடன் கூடிய அந்த உரையின் சாரம்சமே முழு உரையை கேட்டது போல இருந்தது. அத்தனை உண்மை
  நாம் நம் இயற்கை பானமான பதனீரை புறக்கணித்து விட்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் சேர்க்கப்பட்ட செயற்கைபானங்களை விரும்பிக்குடிப்பது கசக்கும் உண்மையல்லவா?
  பனைசெல்வத்தின் பனைவளர்ப்பும் இன்னொரு பாஸிடிவ் அடையாளமே. பனை மக்கள் மத்தியில் புனர் வாழ்வு பெற்றுக்கொண்டிருக்கிறது.
  உங்களைக்கலைப்பது போல குறுக்கிட்டு பேசியவரின் கூற்றுக்களும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவையே? என்ன செய்தார்கள் எடைக்குஎடை கருப்பட்டி வாங்கிப்போனவர்களெல்லாம்?வாய்ச்சொல் வீரர்கள் பனைக்கு எதுவும் செய்யமுடியாது மாறாக செயல் வீரர்களே தேவை நமக்கு.
  தாவரங்களின் conservation குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கையில் அதை ஒரு action oriented integrated scientifically oriented program என்று சொல்லுவேன்.
  அதைதான் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
  குருத்தோலை தெரிந்தது எனினும் சாரோலை மற்றும் காவோலை என்பது என்னவென்று தெரியவில்லை . சமயமிருக்கயில் விளக்குங்கள்
  பதிவிற்கும் உங்கள் உழைப்பிற்கும் இந்த தேடுதலுக்கும் நன்றி

 2. Jayant Judilson (@Judilson) Says:

  கருப்பட்டியின் தரத்தைப் பொறுத்த அளவில் குமரி மாவட்டக்காரர்களுக்கு பிறர் மீது எந்த அபிமானமும் கிடையாது. குறிப்பாக திருநெல்வேலியிலிருந்து வரும் கருப்பட்டிக்கு “பாண்டி கருப்பட்டி” என்று பெயர். குமரி மக்களின் விடுகளில் பெரும்பாலும் கருப்பட்டி இருப்பதாலும், மேலும் நல்ல “நாடன்” கருப்பட்டி கிடைப்பதால், பாண்டி கருப்பட்டிக்கு விலை மற்றும் மதிப்பு குறைவுதான். (really the KK pride in full display here)

  “வேம்பாரில் எனது காலடி படும் முதல் நாள் இது. நீங்கள் எனக்கு அளித்த அன்பிற்காக இந்த மண்ணுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். இன்று நான் வரும் வழியெங்கிலும் பனைமரம் சூழநிற்கும் அழகிய கிராமமாக இது காணப்படுகிறது ஆனால் உங்களில் யருக்கேனும் பதநீர் வேண்டுமென்று சொன்னால் நீங்கள் ஒரு பனைத் தொழிலாளியை தேடிச்சென்றே அதை பருக முடியும். நமது ஊரில் ஊற்றெடுக்கும், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்காத பதநீர் இன்று நமக்கு கிடைப்பது அரிதாயிருக்கிறது. ஆனால் எங்கோ தனது தொழிற்சலையை அமைத்து குளிர்பானங்களை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பானம் 24 மணிநேரமும் நாமக்கு கைக்கெட்டு தூரத்தில் இருக்கிறது இந்த நிலை மாறவேண்டும். நமது குழந்தைகள் ஆரோக்கியமான பதனீரை குறைவின்றிப் பருக வழிவகை செய்ய வெண்டும்.” Nice words, very significant meaning,

  “நாங்கள் வருகிற வழியில் பார்த்த பனை செல்வம் எனும் பனை பண்ணை குறித்து விசாரித்தபோது, அந்த பண்ணை வேம்பாரைச் சார்ந்த ஒருவருடைய பண்ணை அது எனவும், அவரது தொழில் பனை மரங்களை முறிப்பது தான் எனவும் ஒருவர் கூறினார். ஒவ்வொரு பனை சார் செய்தியும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் ஊராக வேம்பார் காணப்பட்டது. எப்படி எடுத்துக்கொள்ளுவது என்றே தெரியவில்லை.” These words took away the momentary joy that you gave us when you introduced the estate in the earlier paragraph. What a paradox indeed.

  On another note, you must really try to get in touch with “Naam Tamizhar Katchi”..Although you may not agree on a lot of their principles, you will surely find some synergy with their passion for our Tamil identity and their stand against the dilution of our heritage.

 3. Jayant Judilson (@Judilson) Says:

  ஊரைத் தாண்டி போகவில்லையென்று சொன்னால் உண்மைகள் எதுவும் நமக்குத் தெரியாது. என்பது தான் உண்மை.very true..

 4. pastorgodson Says:

  பேராசிரியை அவர்களுக்கு. ஓலைகளின் முதிர்ச்சியை வரிசைப்படி குறிப்பிட்டிருக்கிறேன்.
  குருத்தோலை – இளம் ஓலை, தந்த நிறத்தில் இருப்பது
  சாரோலை – பச்சை நிற ஓலை, பயன்பாட்டுக்கு எடுக்கையில் இப்படி கூறுவார்கள்.
  காவோலை – காய்ந்து போன ஓலை, அடுப்பெரிக்க மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட ஓலை

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: