பனைமரச்சாலை (78)


தேன் ஊறும் பனை

நாங்கள் அங்கிருந்து புறப்படுகையில் அமிர்தராஜ் என்னிடம் நெகிழ்ந்துபோய் சொன்னார், “நீங்க ரொம்ப நல்லா பேசுனீங்க பாஸ்டர்”. அது வேடிக்கையல்ல, நிஜமாகவே வேம்பாரின் சூழல் அவ்விதம் அமைந்தது. பனைமரங்கள் சுழ இருக்கும் ஒரு பகுதி, கருப்பட்டிக்குப் பெயர் போன ஒரு இடம், பனைத் தொழிலாளர்கள் அருகி வருகின்ற காலகட்டம். பனை பொருட்களின் தரம் குறைந்து வருகையில் பனையின் பால் அன்பு கொண்ட எவரும் இதை விட சிறப்பாகவே பேச முடியும். அமைர்தராஜுக்கு எனது பணியின் நோக்கம் பிடித்திருந்ததாலேயே என்னோடு வர சம்மத்திதிருந்தார். இப்போது அருகில் நின்று பார்க்கையில் என்னை இன்னும் அவர் அதிகமாக புரிந்துகொண்டுள்ளார் என்றே எண்ணத்தோன்றியது.

 

வரும் வழியெங்கும் பனைமரச் சோலைகள். மிக அழகாக அமைதியான சாலை. எங்களுக்காக 5 ஊர்பெரியவர்கள் சாலையின் அருகிலேயே காத்துக்கொண்டு நின்றார்கள். ஒரு சிறிய கடை, அதன் அருகில் வாகனத்தை நிறுத்தினோம். அங்கிருந்து ஊருக்குள் செல்லும் ஒரு சாலை இருந்தது. சாலியின் இரு மருங்கிலும் பனை மரங்களால் நிறைந்த தோப்புகள் இருந்தன. பெரியவர்கள் எங்களைக் குறித்து விசாரித்தார்கள். நின்று கொண்டே சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினோம். இருள் கவிந்து விட்டது. ஆனால் நாங்கள் பேசியது தனித்துவமான ஒரு உரையாடல். அந்த உரையாடலில் என்னால் முழுமையாக பங்குகொள்ள இயலவில்லை, அரசியல் பின்னணியம் கொண்ட அந்த உரையடலை அமைர்தராஜ் மிகச்சிறப்பாக முன்னெடுத்தார். கூடங்குளத்தின் போராட்ட அனுபவம் அவருக்கு மிகச்சிறப்பாக கைகொடுத்தது.

 

சுருக்கமாக சொல்லவெண்டுமென்றால் புதிதாக துவங்கயிருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலைக்காக சுப்பிரமணியபுரத்தை குறித்திருக்கிறார்கள். மக்கள் தொகையும் அங்கிருந்த பனைமரங்களின் எண்ணிக்கையும் அரசு ஆவணங்களில் மிகவும் குறைவாக காட்டப்பட்டிருக்கிறது. சாதாரண மக்களின் வாழ்வோடு உரசிப்பார்க்கும் அரசு இயந்திரத்தின் மூர்க்கத்தை அங்கு காண முடிந்தது. இவைகள் எனக்கு முற்றிலும் புதியவைகள். சுப்பிரமணியபுரத்தில் உள்ள இரண்டு இலட்சம் பனை மரங்களில் ஒருலட்சம் பனைமரங்களை கிராமத்தினரே நட்டு வளர்திருக்கிறார்கள். 15 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து அவர்கள் இந்த மண்ணுக்குச் செய்த சேவை இது. நாங்கள் வேம்பாரில் கூட பனைத் தொழிலாளி பணியில் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடியவில்லை ஆனால் அந்த இருள் கவ்வும் நேரத்தில் எங்களுக்கு மாலை பதநீர் அங்கு கிடைத்தது. ஏன் எனது மொத்த தமிழக பயணத்தில், இங்கு தான் நாங்கள் முதன் முறையாக பனை மரத்தில் ஏறும் பனைத்தொழிலாளியைப் பார்க்கிறோம்.

 

அமிர்தராஜ் அவர்கள் சந்திக்கவெண்டிய நபர்களைக் குறித்து சொல்ல ஆரம்பித்தார். என்னால் முடியாத ஒரு முக்கிய முடிவெடுக்கும் தருணத்தில் என்னை நிரப்பும் ஒரு ஆளுமையாக இருந்தார். ஒரு தலை சிறந்த புகைப்படக்காரர் என ஒதுங்கி நிற்காமல் என்னை முன்னிருக்தவும், எனக்கு கைக்குடுக்கவுமே அவர் என்னுடன் தனது திறமைகளை மறைத்து நின்றிருக்கிறார். பல நாட்களுக்குப் பின்பு என்னை அவர் அழைத்து, நான் மற்ற காரியங்களை ஒழுங்கு செய்துவிட்டேன், அவர்கள் நம்புவது உங்களைத்தான். நீங்கள் நேரடியாக சென்றால் மட்டுமே அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்றார். இத்தனைக்கும், நான் அந்த மக்களிடம் பேசவே இல்லை. அமிர்தராஜ் தான் அவர்களின் நிலையை என்னைவிட முழுமையாக உணர்ந்துகொண்டவர். எப்படி இது நடந்திருக்கும் என்றால், அமிர்தராஜ் என்னை முன்னிறுத்தியே அவர்களிடம் பேசியிருப்பார். எனக்கும் பனைக்குமான உறவை அவர்களிடம் சொல்லியிருப்பார். அதுவே அவர்களை நோக்கிப் பேசும் எளிய உண்மை. பனையை நேசிப்பவன், கண்டிப்பாக அதை நம்பி வாழும் சாமூகத்தைக் கைவிட மாட்டான் எனும் எளிய புரிதல். ஆம், நானும் அதை நம்பியே பின் தொடருகிறேன். பனையின் பயன்பாடு பெற்று வளராத சமூகமே இல்லை. அதனை காப்பாற்றுவது நம்மையே தக்கவைப்பது தான். ஆகவே பனையின் பலதரப்பட்ட நன்மைகளை கூறி அறிவிக்கும்போது அனைவரும் இனைந்து பனை மரத்தினை காப்பாற்ற போராடுவார்கள் என்றே உறுதிகொள்ளுகிறேன்.

 

நாங்கள் அங்கிருந்து புறப்படுகையில் எங்களுக்கு பட்டை மடித்து பதனீர் கொடுத்தார்கள். பதனீர் சுண்ணாம்புடன் சற்று காரமாக இருந்தது. அதிலிருந்து ஒரு தேனீ கரை ஒதுங்கியது. பதனீரை குடித்தபின்பு நாக்கு சுண்ணாம்பின் காரத்தினால் வெடித்து விட்டது. ஆனால் அந்த தேனீ எனது சிந்தனை சுவை மெட்டுக்களை உணர்வூட்டியது. தேனீக்கும் பனை மரத்திற்குமான உறவு என்ன என்பதை நான் எண்ணிப்பார்த்தேன் அவை எனது சிந்தனைகளை எனது சிறு பருவத்திற்கு அழைத்துச் சென்றன.

 

அப்பொழுது நாங்கள் மார்தாண்டத்தில் இருந்தோம். மார்த்தாண்டம் சாலை இப்போது போல அத்துணை நெருக்கமக இருக்காது. வெட்டுமணி வரை நடந்தே செல்லுவோம். அங்கே ஒரு ஒய் எம் சி யே உண்டு. மேலும் வெட்டுமணி செல்லும் போது அங்கே மார்த்தாண்டம்  தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கமும் அங்கே உண்டு.  தேனீயை யார் வளர்ப்பார்கள்? வீட்டில் வளர்ப்பார்கள். ஆடு கோழி மாடு வளர்ப்பது தெரியும் தேனீயை எப்படி வளர்க்க முடியும்? நாங்கள் கோடியூர் மாறுதலகி சென்றபின்பே அங்குள்ள உதவி போதகர் தேனீ வளர்பதைக் கண்டு ஒரு புரிதல் ஏற்பட்டது. தரையிலிருந்து இரண்டரை அல்லது மூன்று அடி உயரத்திற்கு ஒரு வீடு போன்ற ஒன்றை செய்து அதில் தான் தெனீ வளர்த்தார்கள். பூக்களில் இருந்து அவை தேனை செகரிக்கும் எனவும் சொல்லிக்கொடுத்தார்கள்.  புகை போட்டு தேனீயை செயலிழக்கச் செய்யும் கருவியை அந்த பொதகர் வைத்திருந்தார். தேனீ கொட்டும் என்பார்கள் ஆனால் அதுவரை தேனீ கொட்டிய அனுபவம் இல்லாததால் தேன் தித்திப்புள்ள உணவாகவே இருந்தது.

தேனடை: நன்றி இணையம்

தேனடை: நன்றி இணையம்

நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது அப்பாவிற்கு ஜேம்ஸ் டவுண் எனும் ஊரில் மாற்றம் கிடைத்தது. சைக்கிள் எடுத்து ஊர் சுற்றுவதற்கு, பெஞ்சமின் மற்றும் ஐசக் எபி ஆகியோர் எப்போதும் துணையுண்டு. ஒருநாள் ஆலயத்தின் முன்னால் இருந்த மாமரத்தில் தேனீ இருப்பதை கண்டுபிடித்தோம். மிகச்சிறிய தேன்கூடு தான். ஆனால் பத்தடி உயரத்திலும் தேனீ குடு கட்டும் என்பது ஆச்சரியமாக இருந்தது. புகை போட்டு பிடிக்காலாம் என முடிவு செய்து புகை கருவியாக ஒரு கம்பில் துணி சுற்றி நெருப்பு வைத்தோம். புகை வருவதற்கு பதிலாக நெருப்புதான் வந்தது. எப்படியோ தேனீயிடம் வங்கவேண்டியவைகளை வாங்கி எடுக்க வேண்டிய தேனை எடுத்துவிட்டோம். மீண்டும் அங்கே தேனெடுக்க போனபோது எபி சொன்னான், பவுர்ணமி அன்று தான் தேன் அதிகம் இருக்கும் என்று.

 

பிற்பாடு பல தருணங்களில் நான் பட்டணங்களில் இருக்கும் உயர்ந்த கட்டிடங்களில் தேனீ இருப்பதை பார்த்திருக்கிறேன். தேன் எடுப்பது ஒரு கலை. தேனின் சுவை தித்திப்பு என்றாலும், கசந்த தேனை டாக்டர். கிறிஸ்டோபர் பின்னாட்களில் எனக்கு அரிமுகப்படுத்தினார். உலக ப்ரிஅசித்தி பெற்ற  மார்த்தாண்டம் தேன்,  இரப்பர் மரத்தை நம்பி இருக்கிறது என்பது பிற்காலத்தில் நான் அறிந்தது.

 

தேனெடுக்கும் வழக்கம் மிக தொன்மையானது அது உணவு சேகரிக்கும் காலகட்டத்தின் இனிப்பு சுவை தரும் முக்கிய உணவாக இருந்திருக்கிறது. பல்வேறு பழங்குடியினரின் வாழ்வில் இன்றும் தேன் சேகரிப்பு முக்கிய தொழிலாக இருக்கிறது. செல்வகுமார் காணி கூட தேன் சேகரிக்கப் போவதைக் குறித்து கூறியிருக்கிறார். ஆதி மனிதன் குகைகளில் வாழும்பொது பாறை வெடிப்புகளில் வந்து போகும் தேனீக்களை உற்று நோக்குகையில் அவன் கண்டுகொண்ட ஒரு உணவே தேன். இன்றும் அது உணவாகவும் மருந்தாகவும் மக்களின் வாழ்வில் கலந்திருப்பதை நாம் மறுக்க முடியாது.

 

பனை மரத்தில் தேனீக்கள் இருக்கும் பனைத் தொழிலாளர்களை அது கொட்டும் என்பது நான் சிறு வயதிலேயே அறிந்திருந்த ஒரு உண்மை தான். ஆனால் அவற்றை நான் பொருத்திப்பார்க்க தவறி விட்டிருக்கிறேன். தேன் பத்னீர் குடிக்க வந்து பத்நீருக்குள் விழுந்து விடுவதையும் சிறு வயதில் பார்த்திருக்கிறேனே, அப்படியானால் தேனீக்கும் பனை மரத்திற்கும் உள்ள தொடர்பு தான் என்ன?

 

தேனீக்களின் கதைகளை தேடியபொழுது பல சுவையான தகவல்கள் ஒய் எம் சி யே செக்கரட்டரியாக இருந்த ஜட்சன் அவர்களிடமிருந்து கிடைத்தது. ஓய். எம். சி. ஏ ஜெனரல் செக்கரட்டரியாக இருந்த கெ. பி. பால் அவர்கள் காந்தியோடு அதிக தொடர்பில் இருந்தவர்கள். கந்தியின் இந்தியா கிராமத்தில் வாழ்கிறது எனும் கூற்றை உணர்ந்து, மார்த்தாண்டம்  ஒய் எம் சி ஏ வை 1920களில் துவங்கினார்கள். காந்தி 1924ஆம் ஆண்டு மார்த்தாண்டம் ஒய் எம் சி ஏ விற்க்கு வருகை புரிந்துள்ளார். இந்திய அரசுடன் இணைந்து கிராம செயல்பாட்டு மைய்யமாக முதன் முதலில் ஒய் எம். சி ஏ துவங்கப்பட்டது.  முதல் சீனியர் செக்கரட்டரியாக டாக்டர் ஸ்பென்சர் ஹாட்ச்  அவர்களை நியமித்தார்கள் நேஷனல் கவுண்சில் ஆஃப் ஒய் எம் சி ஏ நியமித்திருக்கிறது.  வட அமரிக்காவிலிருந்து வந்த டாக்டர் ஸ்பென்சர் மார்த்தாண்டம் சந்தையில் நின்று, கிராம பொருளாதாரம் முன்னேறும் வாய்ப்புகளை துண்டு பிரசுரங்களாகவும், அறிவிப்புகளாகவும் கூறி மக்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படம் வெகு தற்செயலாக எனது கட்டுரையை நிறைவு செய்தபின் எனக்கு கிடைத்தது. பனை மர பின்னணியில் ஒய் எம் சி ஏ மார்த்தாண்டத்தில் கூடி மக்கள் காந்தி சர்கா சுற்றும் படம். வருடம் 1924

இப்படம் வெகு தற்செயலாக எனது கட்டுரையை நிறைவு செய்தபின் எனக்கு கிடைத்தது. பனை மர பின்னணியில் ஒய் எம் சி ஏ மார்த்தாண்டத்தில் கூடி மக்கள் காந்தி சர்கா சுற்றும் படம். வருடம் 1924

http://pazhayathu.blogspot.com/2010/04/money-from-honey-spencer-hatch-of-ymca.html

ஒருமுறை தனது கிராம பயணத்தில் தேனீக்களை பார்த்த அவருக்கு ஒரு பொறி தட்டியது. அவரது பெற்றோர் தேனீ வளர்பவர்கள். நாமும் ஏன் தேனீ வளர்க்கும் முறையை இங்கே அறிமுகம் செய்யக்கூடாது என எண்ணியிருக்கிறார். தனது சொந்த ஊர் சென்றபோது கையோடு தேனீ காலணியையும் எடுத்து வந்து இங்கு வளர்த்தபோது அது திருப்திகரமான பலனைத் தந்ததால், அனேக இளைஞர்களை ஒன்று திரட்டி, மிக பிரம்மாண்டமாக இந்தியாவின் முதல் தேனீ வளர்ப்போர் சங்கத்தை துவங்கினர். அது மாத்திரம் அல்ல காதி கிராம தொழில் கூட, மார்த்தாண்டம் ஒய் எம் சி ஏ விலிருந்து தான் துவங்கப்பட்டது.

 

இக்கதை என்னுள் பல விதமான காரியங்களை இணைத்துப் பார்க்க அழைப்பு விடுத்தது. ஒன்று மார்த்தாண்டம் பகுதியில் அனேக பனை மரங்கள் நின்றிருந்த காலம் அது. டாக்டர் ஸ்பென்சரின் வெற்றிகரமான இந்த ஆய்வுக்கு பனை மரங்கள் முக்கியமான பங்களிப்பற்றியிருக்கும் என நம்புகிறேன். பனை மரங்களில் பதனீர் இறக்குகையில் அதில் விழுந்து கிடக்கும் தேனீக்களே அதற்குச் சான்று. தேனீக்கள் பல்வேறு பூக்களில் இருந்து தேனெடுத்தாலும், கண்டிப்பாக பனை மரம் அதில் முக்கிய பங்களிப்பாற்றியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இவ்வகையில் நான் எனது ஆய்வுகளைத் தொடர்ந்தபோது எனக்கு குஜராத்தைச் சார்ந்த ஒரு ஆய்வுக்கட்டுரை கிடைத்தது. அதில், ஆந்திராவில் சேகரிக்கப்பட்ட தேனை பரிசோதித்தபோது பருவமல்லாத கலத்தில் பனை மரத்தின் பூந்தாதுகள் அதிகபட்சமாக ஒரு சதவிகிதமும், பருவ காலத்தில் அறுபத்தியோரு சதவிகிதம் வரை பனைமர பூந்தாதுகள் காணப்பட்டது எனவும் கண்டுகொண்டேன்.

 

பேச்சிப்பாறை வனப்பகுதியில் உள்ள காணி மக்களிடத்தில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கும் பேராசிரியர் எஸ். எஸ். டேவிட்சன் அவர்கள் கூறுகையில், தேனீ கூடுகள் கேரளா கர்நாடகாவிலிருந்து குமரி மாவட்டம் வந்தபோது பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் எண்பதுகளில் அதனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு டென்னிஸ் எம். பி. அந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியிருக்கிறார். மனிதர்களுக்கும் தேனீக்கும் நடந்த ஒரு சமர். அதற்கு காரணம், பனையை யார் எவ்வளவு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற போரட்டமே. தேனீ கொட்ட பனைத்தொழிலாளி தன்னியல்பாக கரங்களை உதறினால் மேலிருந்து விழுந்து இறந்து போக நேரிடும் அல்லது வாழ்நாள் முழுவதும் ஊனமாக நேரிடும். மேலதிகமாக, பதனீர் குடிப்பதால் தான் தேனீ பதனீரில் விழுந்து இறக்க நேரிடுகிறது. ஆனால் ஒரு கூட்டில் இருபது ஆயிரம் தேனீக்கள் முதல் எண்பதாயிரம் தேனீக்கள் வரை இருக்கும்  எனும் கணக்கு தேனீ மனிதன் சேகரிக்கும் பதனீருக்கு குறைந்தபட்ச இழப்பை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

நான் மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தாவரவியல் துறைத் தலைவர் டாக்டர். இரவிசந்திரன் அவர்களை சந்தித்தபோது அவர்கள் எனக்காக சில புகைப்படங்களை எடுத்து வைத்திருந்தார்கள். பனை சார்ந்த மிக முக்கியமான ஆய்வை அவர் துவங்கியிருக்கிறார். ஆண்பனையின் பூவையும் பெண்பனையின் பூவையும் மகரந்தச் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது எனவும் விவரித்தார். தேனீயின் பங்கு மிக முக்கியமானது என்பதை அங்கே தான் உறுதி செய்தேன். தேனீயைத் தவிற வேறு எதுவும் பெண்பனையின் பூக்களை நெருங்க முடியாது. அதன் அமைப்பு அப்படி. நொங்கு சாப்பிட வேண்டுமென்றால் கண்டிப்பாக தேனீக்களின் உதவி தேவை என்றே எண்ணத்தோன்றுகின்றது. எல்லாவற்றிலும் உச்சம் ஆண்பனையில் அலகில் சிறிய பூக்கள் காணப்படும். அந்த பூ விரியும் தன்மையை அவர் காண்பித்தபோது அரண்டு விட்டேன். பூக்கள் ஒவ்வொன்றாக பூக்கின்றன. அதற்கான ஒரு ஒழுங்கு இருக்கிறது. தேனீ வர வர அவைகள் பூத்துக்கொண்டே இருக்கின்றன. அதற்கான ஒரு அச்சு முறை இருக்கிறது. அந்த அச்சின் வழியாக அவைக்கள் இடைவெளிவிட்டு பூக்கின்றன.

 

 

பனை தன்னுள் தேனை சேமித்து வைத்திருக்கிறது. தேனீயை பின் தொடர்ந்தே ஆதி மனிதன் பனையின் சுவையை அறிந்திருப்பான். தேனீ வழிகாட்டியாக இருந்து மனிதனுக்கு பதனீர் எனும் தேனை கண்டடைய வழிவகை செய்திருக்கிறது. தேனீயை தொந்தரவு செய்யாமல் இனிக்க இனிக்க தேனை அனுபவிக்க என்ன செய்யவேண்டும்?  தேனீயை நேசித்தவன், தேனீ சேகரித்த தேனை எடுக்க விரும்பாமல், தேன் எங்கிருந்து வருகிறது என ஆராய்ந்திருப்பான். ஒன்று மட்டும் நிச்சயம் பனை மரத்தினை பங்கிடும் உரிமை தேனீக்கும் உண்டு. அது ஏன் என்கிற கேள்வி இன்னும் எஞ்சியிருக்கிறது. அவைகளில் ஒன்றை மட்டும் நான் கூறுவேன், தேன் – அதை கண்டடைபவர்களின் தனியுரிமை.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (78)”

 1. Logamadevi Annadurai Says:

  தேன் பனை!!!!!
  பனையைக்குறித்த உங்களின் பேச்சு மிகசிறப்பானதாக அமைந்ததிற்கான காரணத்தயும் நீங்களே அழகாக சொல்லிவிட்டீர்கள் பாஸ்டர்!!!!
  உங்களின் எழுத்தின் சிறப்பென்னவென்றால் நீங்கள் தொடர்பில் உள்ள விஷயங்களை அதன் உள்ளிருந்தும் அதன் வெளியிலிருந்தும் நீங்களே அவதானிகிறீர்கள் . அதனாலேயே இத்தனை சிறப்பாக உங்களால் சொல்ல வேண்டியவற்றை சொல்ல முடிகிறது எழுதின் வழியே!!!
  அமிர்தராஜ் உங்களின் ஆகச்சிறந்த partner.
  அவர் மக்களிடன் கூறியது பனைக்கும் உங்களுக்குமான உறவெனும், எளிய ஆனால் அற்புதமானதோர் உண்மையை அல்லவா?
  மடித்த பட்டையில் நீங்கள் பதனீர் அருந்துகையில் அதில் கரை ஒதுங்கிய தேனீ ஒரு கவிதைதருணம்
  அதுவும் அந்த ” கரை ஒதுங்கிய” என்னும் குறிப்பு மிக அழகு. ஆம் அந்த சிறு தேனீக்கு அந்த பட்டை நிறைந்தபதனீர் கடலைப்போன்றதல்லவா? அது கரையில்தான் ஒதுங்கி இருக்கும்.
  பனைமரச்சாலை கவிதை சாலையாகவும் இருக்கிறது பல இடங்களில்
  ஜெயமோகன் சாரின் சந்தனக்காட்டையும், மலையத்தியையும் சந்தனத் தேனையும் நினைவுபடுத்தியது உங்களின் தேன் பதிவுகள்.
  நான் ஒருமுறை பழங்குடியினர் மூங்கில் குழலில் சேகரித்து வைத்திருந்த தேனை சுவைத்திருக்கிறேன். அதன் பிறகு நான் சுவைத்தெதெல்லாமே நகரத்தில் வளர்க்கப்பட்ட தேனீக்கள் சேகரித்தது.. அந்த சுவைக்கும் பழங்குடியினரின் இயற்கை தேனிக்களின் தேனின் சுவைக்கும் இருந்த வேறுபாடு “உண்மைக்கும் விருப்பத்திற்குமான”” வேறுபாடுதான்!!!!!

  தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது என்பதயும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் பனையின் மருத்துவப்பயன்கள் அனைத்தும் பனைத்தேனிலும் இருக்கும் அல்லவா?

  ஜெயமோகன் சார் சொல்வளர்காட்டை நேற்று முடித்து முழுமை செய்துவிட்டார் அதிலும் தருமரின் உடலை முழுக்க தேனில் ஊறவைத்தே அவரை தம்பிகள் மீட்டெடுக்கிறார்கள். நீங்கலும் அதே நாளின் பதிவான இதில் தேனைக்குறித்தே எழுதியிருக்கிறீர்கள். அதுவும் தற்செயல் அல்ல இறைச்செயலே!!!

 2. Jayant Judilson (@Judilson) Says:

  nice write up!
  “…, தேன் – அதை கண்டடைபவர்களின் தனியுரிமை. “..going from being a good story on history, ending with philosophy,,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: