பனைமரச்சாலை (79)


 

பனைகளின் கோட்டை

அந்த இரவு நேரம் எங்களது பயணம் மீண்டும் துவங்கியது. தூத்துக்குடி செல்லவேண்டும் என்பது திட்டம். போகிற வழியெங்கும் சுப்பிரமணியபுரம் எங்கள் நெஞ்சம் முழுக்க விரவியிருந்தது.  இது ஒரு தனித்துவமான பிரச்சனை, எப்படி எதிர்கொள்ளுவது என தெரியாவிட்டாலும், எப்படியாவது இந்த மக்களுக்கு உடன் நின்று உதவி செய்ய வேண்டும் என்றே எண்ணினேன்.  முதலில் பனைமரங்களைக் கணக்கெடுக்க வேண்டும். அது எப்படி நடைபெறும்? அதை உணர்ந்தவர் போல அமிர்தராஜ் ஒரு சில காரியங்களை எனக்குக் கூறினார். மரங்கள் கணக்கெடுப்பு நிகழ்த்தும் ஒரு நண்பர் அவருக்கு உண்டு என்றும், ஒரு சில நாட்கள் அவர் அந்த ஊரில் தங்க இயலுமென்றால், அவரால் அதை ஒழுங்கு செய்யமுடியும் என்றும் கூறினார். அதற்கு எனது ஒத்துழைப்பு வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

களைப்பின் மிகுதியால் என்னால் எதையுமே எண்ண முடியவில்லை. அதுவும் பிரச்சனை மிக சிக்கலானது. அரசியல் சார்ந்த பிரச்சனைகளை அணுகுபவர்களுக்கே அவற்றின் சூட்சுமம் தெரியும். ஆனால் சுப்பிரமணியபுரம் என்னை மீண்டும் மீண்டும் அழைத்தது. என்னை நிலைகுலையச் செய்தது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை. எங்கே எனக்கு ஒரு சிறு ஒளி தெரியும் என்றே எண்ணிக்கொண்டு வந்தேன். ஒன்று மட்டும் செய்ய முயற்சிக்கலாம், சுப்பிரமணியபுரத்தை தத்தெடுப்பது. அங்கேயே வாழ முற்படுவது. குறுகிய காலம் அவர்களுடன் இருந்து அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எனது சொந்த பிரச்சனைகளாக கருதி முன்னெடுப்பது. ஆனால் அதற்கு இன்னும் நான் ஆயத்தமாக வேண்டும்.

 

பனைகளின் மீதான காதலிலேயே இப்பயணம் துவங்கப்பட்டது. ஆனால் நானே உருமறிக்கொண்டிருக்கிறேன் என்பது இப்பயணம் எனக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. பனைக்காக தங்களை அற்பணித்துக்கொண்டவர்கள் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தால், தமிழகம் பனைமரச் சோலையாகிவிடும் என்ற உறுதி பனைமரச்சாலையில் நான் கண்டுகொண்டேன். பனைமரச்சோலை எனும் பெயரை தமிழகத்துக்கு பெற்றுத்தருவது எனும் கனவு என்னுள் இப்பயணத்தின் வாயிலாக நிகழ்ந்தது. சுப்பிரமணியபுரம் அதற்கு ஊக்கமளிக்கும் ஒரு மாதிரி கிராமம்.

 

என்னைப்பொறுத்தவரை சுப்பிரமணியபுரம் தமிழகத்தின் வரைபடத்தில் முக்கிய இடமாக பேணப்படவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தவே முயற்சிப்பேன். எவ்வித அரசு மானியங்களுமின்றி, மாநில மரத்தை பாதுகாப்பதோடு தொடர்ந்து நட்டு வளர்த்து பேணி பயன் படுத்தி வருகிறார்கள். மொத்த தமிழகமும் இம்மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எவ்வகையிலும் இந்த கிராமம் மக்களின் கரத்தை விட்டு போகக்கூடாது. உலகமே திரும்பிப்பார்க்கும் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் ஒரு தன்னிகரற்ற பனை சார்புடைய கிராமமாக இந்த கிராமத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்ல தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்.

 

இந்த கிராமத்தின் அமைப்பின் சிறப்பே பனை மரம் சூழ இருப்பது தான். . அவர்களது பொருளியலின் அடிப்படை கூட பனை பொருட்கள் தான். பனை சார்ந்த நம்பிக்கை, பனை தொழில் செய்துவரும் நெடும் பாரம்பரியும், பனை சார் வாழ்வையே தங்கள் எதிர்காலமாக கொண்டிருப்பது இவை அனைத்தும், அந்த மக்கள் தமிழகத்துக்கு ஒட்டுமொத்தமாக கூறும் அறைகூவலாகவே நான் எடுத்துக்கொள்ளுகிறேன். இந்த அறைகூவலின் சத்தத்தை பிரம்மாண்டமாக்கி தமிழகம் எங்கும் ஒலிக்கச் செய்வது பெரும் பயனைத் தரும். முக்கியத்துவமற்ற ஊரை காலி செய்வது எளிது. முக்கியமான ஊர் என்பது, பொதுமக்களையும் அது தங்கள் ஊர் என எண்ணச் செய்வது. சுப்பிரமணியபுரத்திற்காக தமிழக மக்கள் தங்கள் உள்ளத்தில் ஒரு துளி கண்ணீர் சிந்தினாலும் அதுவே பெரும் ஆசி மழையாக அவர்களை சூழ நின்று பாதுகாக்கும்.

 

சுப்பிரமணியபுரம் போல் இன்னும் அனேக ஊர்கள் இருக்கும் அவைகளையும் ஒன்றிணைக்கவேண்டும். எப்படி இவைகளைச் செய்வது? மாவட்டத்திற்கு ஒரு ஊரை தெரிவு செய்து தன்னார்வலர்களாக கூடி முயற்சிக்கலாம். ஒரு கிராமம் மீண்டு வருமென்றால் பல்வேறு கிராமங்கள் மீட்பு பெறும். புதிய மக்களின் பங்களிப்புகள் புது புது வாய்ப்புகளை நமக்கு அள்ளித்தரும். இன்று இயற்கை விளை பொருட்களுக்கான காலம். பனை மரத்தை விட சிறந்த இயற்கை உணவு வேறு எதுவும் இல்லை எனக் கூறுமளவு பனை மரம் தன்னிகரில்லா தனித்தன்மையைக் கொண்டுள்ளது. அதை சிறந்த முதலீடு என நாம் கொள்ளலாம்.  பயமின்றி கிராம மக்கள் அதில் பயணிக்க அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

 

பனை சார் பொருட்களின் முக்கிய மையமாக சுப்பிரமணியபுரம் வரும்நாட்களில் மாறத்தக்கதாக ஒரு விரிவான திட்ட வரைவை மேற்கொள்ளலாம். அதற்காக ஏழு முனை கொண்ட திட்டம் ஒன்றை மனதில் வரைந்துகொண்டேன்.

 

பெண்களுக்கு

பனை ஓலையில் கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சி மற்றும் நிர்வாக மேம்பாடு

பனை சார்ந்த உணவு தயாரிக்கும் பயிற்சி பாதுகாத்தல்

சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகள்

 

ஆண்களுக்கு

பனைத்தொழிலின் புதிய கருவிகளை பயன்படுத்தும் பயிற்சி

புதிய பனைத் தோட்டம் அமைக்கும் பயிற்சிகள்

பனை மட்டைகளை கையாளும் (நார் மற்றும் தும்பு) பயிற்சிகள் அதற்கான ஆலைகள்

 

சந்தைப்படுத்துதல்

கிராம மக்களுக்கான கூட்டுறவு அங்காடியை உருவாக்குதல்

ஏற்றுமதிக்கான வழிமுறைகளைக் கண்டடைதல்

பிற உள்நாட்டு சந்தை வாய்ப்புகளை கண்டடைதல்

 

வேம்பார் சுப்பிரமணியபுரத்திற்கு  அருகிலிருக்கும் ஒரு ஊர். ஆகவே கருப்பட்டிக்கான ஒரு கூட்டுறவு அங்காடியை துவங்கலாம். கூட்டுறவு அங்காடியை மக்களே முன்னின்று நடத்தி அதன் சிறந்த பயனை ஒன்றுபோல அனுபவிக்கலாம்.

 

 

பனை தகவல் மையம்

பனை சார்ந்த பழைய தகவல்கள் சேகரிப்பது மற்றும் புதிய கட்டுரைகளை வெளியிடுவது.

மென் படங்களை சேகரிப்பது, புதிய ஆவனப்படங்களை உருவாக்குவது

பனைத் தொழில் சார்ந்த தகவல்கள் பரிமாற்றத்திற்கான மைய்யமாக செயல்படுவது

கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த பனைமர ஆய்வுகளுக்கு துணை நிற்பது.

 

தோட்டக்கலைப் பண்ணை

பனை சார்ந்த தோட்டக்கலையை நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் வளர்த்தெடுப்பது

பனங் கன்றுகளை நட்டு அவைகளை சந்தைப்படுத்துவது

புதிய ரகங்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்வது

 

பனை கலாச்சார சுற்றுலா

பனை மர பொருட்களால் செய்யப்பட்ட தங்கும் விடுதி

பனை உணவு சார்ந்த அமைப்புகளை நிர்வகிப்பது

பனை சார்ந்த தொடர் பணிகளை எடுத்தியம்பும் கிராம அமைப்பு ஏற்படுத்துதல்.

பனை சார்ந்த நேரடி அனுபவம் அனைத்தும் பெற வருவோருக்கு தன்னை தயார்படுத்தி வைத்திருப்பது.

அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்தி பனை தொழில் கருவிகள், பனை பொருட்கள் இவைகளை காட்சிக்கு வைப்பது.

 

சிறுவர் பயிற்சி பட்டறை

பனையோலையில் சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் கற்றுக்கொடுக்கும் பயிற்சி

பனை மரப் பொருட்களில் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு விளையாட்டு போட்டிகள்

பனை மரம் குறித்த அறிமுகம் கிராம மக்கள் வாயிலாக நேரடி அனுபவம் பெறும் நிகழ்ச்சியாக நடத்தலாம்.

 

 

இவைகளை இன்னும் செழுமைப்படுத்தலாம், விரிவாக்கலாம், குறைகளை கண்டடைந்து அவைகளை களையலாம். ஒரு எண்ணமாக மட்டுமே இன்று இவைகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த எண்ணங்கள் வடிவம் பெறும் தோறும் அவைகளை மேலும் சிறப்பானவைகளாக  முன்னெடுக்கலாம்.  காந்தி கண்டடைந்த தன்னிறவு கிராமத்தை செயல் வடிவில் காண்கிறோம் என நாம் கொண்டாடலாம். ஆனால் முதலில் களத்தில் இறங்கவேண்டும். கிராமத்தினரின் உண்மை நிலை அறியவேண்டும். சாத்தியக்கூறுகளை கண்டடையவேண்டும். எவைகள் உண்மையிலேயே சாத்தியப்படும் என்பதை கண்டடைந்த பின்பே ஒவ்வொன்றாக முன்னெடுக்கவெண்டும்.

 

சுப்பிரமணியபுரம் பனைகளின் கோட்டை என்றே எனக்கு தோன்றுகின்றது. அசைக்க முடியாத உறுதியுடன் அது உயர்ந்து நிற்கிறது. கோட்டைக் காவலர்கள் கூட பனையின் வைரத்தடிகளின் உறுதியுடனே இருக்கின்றனர். உதவி செய்வோர் இல்லையெனினும் சுப்பிரமணியபுரம் உயர்ந்தே நிற்கும். எப்புயலும் அதனை ஒன்றும் செய்ய இயலாது.

 

நாங்கள் தூத்துக்குடியை நெருங்கிவிட்டோம் என மஞ்சள் நிற விளக்குகள் ஒருசேர தூரத்தில் நின்று எங்களை வரவேற்றன. தூத்துக்குடியின் மிகச்சிறந்த ஓட்டலில் எனக்கும் அமிர்தராஜுக்கும் அவரது நண்பர் அறை ஒழுங்குசெய்திருந்தார். பைகளை வைத்துவிட்டு, நேரடியாக அவரை பார்க்கப்போனோம். மணி இரவு பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அமிர்தராஜின் நண்பரும் அவரது தந்தையையும் சந்தித்தோம். அவரது தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர்களுக்கு எனது தாத்தா வருகையின் தூதன் பத்திரிகையின் ஆசிரியர் தேவதாசன் அவர்கள் தான் திருமுழுக்கு கொடுத்தார்கள் என்பதை கூறினார்கள். எதேச்சையாக ஒரு முக்கிய ஆளுமையை சந்தித்திருக்கிறோம். இதுவும் கடவுளின் செயலே.

 

அவர்கள் பேசுகையில் தங்களுக்கு 10 ஏக்கர் நிலத்தில் வெறும் பனை மரங்கள் மட்டும் நிற்பதாக கூறினார்கள். அவைகள் பயனற்று வீணாக போவது மனதுக்கு வருத்தம் அளிப்பதாக கூறினார்கள். பனைத் தொழிலாளிகள் இன்று கிடைப்பதில்லை, ஆகவே நுங்கு கூட பறித்து விற்க முடியாமல் இருக்கிறது என்று சொன்னார்கள். எப்படி இவைகளை பயனூள்ளதாக மாற்றமுடியும் என்று கேட்டார்கள். குறிப்பாக நுங்கை பத்திரப்படுத்தமுடியுமா எனக் கேட்டார்கள். சொல்லத்தெரியவில்லை. யோசிக்கவேண்டும் எனக் கூறினேன்.

 

ஆனால் ரசாயனியில் நான் பெற்ற அனுபவத்தை அவருக்கு கூறினேன், பீகாரிலிருந்து வந்து கள் இறக்குகிறவர்களுக்கு மும்பையில் நல்ல கூலி கிடைப்பதால் அவர்கள் தொடந்து அங்கு வந்து பணியாற்றுகிறார்கள். மேலும், அது லாபகரமாக இருக்கும் என்றும் கூறினேன். ஆனால் பீகாரிலிருந்து ஆட்களைக் கூட்டிவருவதிலுள்ள சிரமங்கள் மற்றும் யாவும் குறித்தும் பேசினோம். குமரியிலிருந்து செல்லும் பனைத்தொழிலாளர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக சம்பளம் கேட்கிறார்கள் எனும் புகார் கூட உண்டு. ஆனால், அவர்கள் அனைவரும் சம்பாதிக்கும் எண்ணத்துடன் செல்பவர்கள்.  கூலி “குடுவை”க்கு என்றே பேசப்படும். சீசனுக்கு மாதம் நாற்பத்தி ஐயாயிரம் வரை வருமானம் பார்க்கிறவர்கள் உண்டு. ஆனால் அது தனது வியர்வையின் கடைசி துளியையும் சிந்தி சம்பாதிக்கும் பணம்.

குடிப்பழக்கம் பனைத்தொழிலாளர்களை மிகவும் பலவீனமானவர்கள் ஆக்குகிறது. நினைத்தபடி பல மரங்களை ஏற முடிவதில்லை. ஆகவே தொழில் செய்தாலும் போதிய வருமானமோ போதிய அளவு பதனீரோ சேகரிக்க இயல்வதில்லை. குடிப்பழக்கம் இல்லாத துறையே தமிழகத்தில் இல்லை.

 

நாங்கள் அங்கிருந்து புறப்படும்பொழுது தனது தோட்டத்திற்கு கண்டிப்பாக செல்லவேண்டும் என அன்பு கட்டளை இட்டார். அமிர்தராஜுக்கு வழி தெரியும் அவர் கூட்டிச் செல்லுவார் என்றார். அந்த சந்திப்பு மின்னல் போல இருந்தது, மகிழ்ச்சியின் கணமாகவும் இருந்தது.

 

நாங்கள் புறப்படும் வேளையில் அமிர்தராஜ் என்னிடம், தான் சற்று பிந்தி வருவதாக கூறினார். நான் முந்தி வந்தது மிக நல்லதாக போய் விட்டது. அருமையான மெத்தை அட்டகாசமான அறை, வெள்ளை போர்வை இட்டு மிக நேர்த்தியாக வைத்திருந்தார்கள். குளித்துவிட்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அழைக்கவேண்டியவர்களை அழைத்தேன். கரத்தில் கொசு கடிப்பது போல் ஒரு உணர்வு. அறைக்குள் கொசு இல்லை. வேறு எப்படி என ஆராயத்துவங்கினேன். கட்டிலின் இடுக்கிலும் மெத்தையின் ஓரங்களிலும் சிறிதும் பெரிதுமாக எண்ணற்ற மூட்டைப்பூச்சிகள். அமிர்த்தராஜ் மூட்டைக்கு மிகவும் பயப்படுவார். இதைப் பார்த்தாரென்றால்  உறங்கவே மாட்டார். எனக்கே பயமாக தான் இருந்தது. ஆகவே ரிசப்ஷனை அழைத்தேன். வந்து அறை மாற்றிக்கொடுத்தார்கள். அனைத்தும் சுமூகமாக நடைபெறவும் அமித்தராஜ் வரவும் சரியாக இருந்தது. இன்னும் ஒரே ஒரு இரவு மட்டும்தான். என எண்ணியபடி படுக்கச் சென்றேன்.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (79)”

 1. Logamadevi Annadurai Says:

  சுப்பிரமணியபுரம் குறித்த உங்கள் பார்வை அற்புதம். palm project ன் அனைத்து சாத்தியங்களையுமே விவரித்துவிட்டீர்கள், பெண்களுக்கு ஆண்களுக்கு சிறுவர்களுக்கு, சந்தைப்படுத்துதல், information center ,அருங்காட்சியகம் என்று அனைத்தையும்.!!!!!!
  இவை நடைமுறைப்படுத்தப்பட்டால் அப்படியே உங்கள் பதிவுகளை பின்பற்றினால் போதும் வேறு reference ஏதும் தேவையே இல்லை!!!!!!!!!!

  இந்த பயணத்தில் நீங்கள் பல ஆளுமைகளை சந்தித்தீர்கள் அவை எதுவுமே தற்செயல் இல்லை எல்லாம் இறைச்செயல்.

  காருண்யா பல்கலையில் உணவுபதப்படுத்தும் துறையினர், நுங்கு பதப்படுத்தவும் அதன் அலமாரி வாழ்வை (shelf life) அதிகப்படுத்தவும் உதவுவார்கள் என நான் நினைக்கிறேன். food biotechnology துறையில் பல மென்மையான உணவுகளை இப்படி அவர்கள் பதப்படுத்துவதை நான் நேரில் கண்டிருக்கிறேன்

  கள்ளுடன் தொடர்புள்ளதால் பனைதொழிலாளர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள் கூடவே ””தாயன்புடன் ”” பல்வேறு மதுவகைகளும் அனைத்து தொழிளார்களுக்கும் தமிழகத்தில் கிடப்பதால் இது நம்மைப்போன்றவர்களால் எதுவுமே செய்யமுடியாத ஒரு துயர்.

  தமிழகம் எனும் அட்டகாசமான அருமையான மாநிலத்திலும் இப்படி நாம் நசுக்கி ஒழிக்கவேண்டிய பல மூட்டைப்பூச்சிகள் இருக்கின்றன. அவற்றிடமிருந்தே நீங்கள் பனைகளை காப்பாற்ற மன்றாடிக்கொண்டிருக்கிறீர்கள்

  விரைவில் முடிந்துவிடுவீர்களோ என்னும் அச்சத்தை அளிப்பதாக உள்ளது நீங்கள் எழுதியுள்ள ‘’ இன்னும் ஒரே ஒரு இரவு ‘’ என்னும் வாக்கியம்
  அன்புடன்
  லோகமாதேவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: