பனைமரச்சாலை (80)


பனைகளின் வீடு

காலை எழுந்தபோது எனது கையில் இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கிறது எனும் எண்ணம் மின்னி ஒளிர்ந்தது. இந்த நாளை எப்படி செலவளிக்கப் போகிறோம்? முடிந்த அளவு பயனுள்ளதாக செலவளிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டோம். ஹோட்டலில்யே  காலை உணவை முடித்துகொண்டு புறப்பட்டோம். அந்த நாள் எங்களுக்கு என்ன ஒழுங்கு செய்திருக்கிறது என்பதை அறியாமல் அந்த நாளை எப்படி அனுபவிப்பது எனும் கேள்வியுடனே பயணம் துவங்கியது. தூத்துக்குடி கடக்கும் முன்னே அமிர்த்தராஜ் தனது நண்பனை பார்க்கும்படி ஒரு மருத்துவமனைக்குச் சென்றார். புதிய நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

ஃபிரான்ஸில் நடைபெற்ற சூழியல் மாநாட்டில் எனது சகோதரி ஓலையில் செய்த கைப்பட்டைகளை வழங்கும்போது.

ஃபிரான்ஸில் நடைபெற்ற சூழியல் மாநாட்டில் எனது சகோதரி ஓலையில் செய்த கைப்பட்டைகளை வழங்கும்போது.

ஃபிரான்ஸில் வைத்து நடைபெற்ற 2015ஆம் ஆண்டு சூழியல் மாநாடு எனக்கு ஒரு பெரிய திறப்பாக அமைந்தது. எனது சகோதரி தான் அதில் கலந்துகொள்ளுவதாகவும் தனக்கு ஓலையில் தனித்துவமாக ஏதேனும் செய்து தரும்படி கேட்டார்கள். பொதுவாக அவர்களின் வெளிநாட்டு பயணங்களின் போது நான் அவர்களுக்காக ஓலையில் செய்த புக் மார்க் இவைகளை கொடுத்து விடுவது வழக்கம். இந்த முறை சற்று வித்தியாசமாக ஏதேனும் செய்ய வெண்டும் என திட்டமிட்டு, “ரிஸ்ட் பாண்ட் போதுமா எனக்” கேட்டேன். அக்கா சரி என்றார்கள். அது மிகப்பெரிய வெற்றி அடைந்த ஒரு வடிவமைப்பாக மாறும் என நான் அப்போது சற்றும் நினைத்திருக்கவில்லை. அது பல்வேறு வகைகளில் எனக்கு பல இடங்களில் நண்பர்களை பெற்றுத்தந்தது. அப்படித்தான் தூத்துக்குடி எனக்கு அறிமுகம் ஆயிற்று.

தூத்துக்குடி நான் இதற்கு முன் வந்திருந்தாலும் இது எனக்கு புதிய இடம் தான். கடந்தமுறை தூத்துக்குடி ஸ்பிக் நகர் வந்தபோது திருச்சபைக்கான ஒரு பயிற்சிப்பட்டறையை நடத்தினேன். அது ஒரு ஆச்சரியமாக ஒருங்கு செய்யப்பட்ட நிகழ்வு. அப்போது நான் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு குருத்தோலை பவனிக்காக தயார் செய்த கை பட்டைகைளைக் குறித்து பதிவு இட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உதவி ஆயராக இருக்கும்  ஆண்ட்ரூஸ் கிறிஸ்டோபர் என்னை அழைத்தார். ஐக்கிய இறையியல் கல்லூரியில் என்னோடு படித்த ஜெர்ரி குரியன் என்பவர் அவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். அவரே முதன் முதலில் தான் சார்ந்திருக்கும் சிரியன் கத்தோலிக்க திருச்ச திருச்சபைக்கான கைப்பட்டகளை பயன்படுத்தியவர். அவரைப் பார்த்து எனக்கும் சில கை பட்டைகள் வேண்டும் என்று தான் ஆண்ட்ரூஸ் கேட்டார்.

பனை ஓலை பயிற்சிக்கான அழைப்பிதழ், சி எஸ் ஐ ஸ்பிக் நகர் ஆலயம்

பனை ஓலை பயிற்சிக்கான அழைப்பிதழ், சி எஸ் ஐ ஸ்பிக் நகர் ஆலயம்

அவர் கேட்டபோது என்னிடம் போதுமான அளவு கை பட்டைகள் இல்லை. இந்தியாவிலும் ஒரு சில வெளிநாடுகளிலும் இருக்கும் என் நண்பர்களுக்கு மட்டும்  சுமார் 5000 கைபட்டைகளை செய்து வைத்திருந்தேன். எனது நண்பர்கள் அனைவருக்கும் கொடுத்து போக மீதி என்னிடம் அவருக்கு கொடுக்க போதுமான அளவு இருக்குமா என தெரியவில்லை. உதவியாளர்களின்றி நானே அவைகளை செய்ததாலும், ரசாயனியில் போதுமான அளவு ஓலைகள் கிடைக்காததாலும் அனேகருக்கு என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. குறைந்த பட்சம் எப்படியாவது ஒரு இருநூறு கை பட்டைகள் கிடைக்குமா என்றார். முயற்சிக்கிறேன் என்றேன். அப்பொழுது தான், உங்களிடம் ஓலை இருக்குமென்று சொன்னால் ஏன் நாம் ஓலைகளைக்கொண்டு உங்கள் திருச்சபையிலேயே ஒரு நிகழ்சியை ஒழுங்கு செய்யலாமே எனக் கேட்டேன். ஒத்துக்கொண்டார்.

என்னுடன் வின்ஸ்டன், 15 வருடங்களுக்கு முன்பு

என்னுடன் வின்ஸ்டன், 15 வருடங்களுக்கு முன்பு

நான் நாகர்கோவில் சென்றேன். முகநூல் வழி சந்தித்த ரெங்கிஷ் அவர்களை அழைத்தேன். ஒரு நிகழ்ச்சி இருக்கிறது போகலாமா என கூப்பிட்டேன். வருகிறேன் என்றார்கள். ரெங்கிஷ்  அவர்களை நான் சத்தித்தபோது எனது கல்லூரி தோழன் வின்ஸ்டனையே நினைவு படுத்தினார். முகம் தான் வேறுபாடே ஒழிய வேறு மாற்றங்கள் ஒன்றூமில்லை. நாகர்கோவில் மத்திய வர்க்க வார்ப்புரு. நடை உடை பாவனை எல்லாமே ஒன்றுபோல. ஆகவே, நெருங்கிவிட்டோம். அவருக்கு எனது பனை மர பிரியம் ஆச்சரியமளிப்பதாக இருந்திருக்கிறது, எனக்கு அவரது புகைப்பட திறமை மேல் அபார நம்பிக்கை. பிற்பாடு பனைமரச் சாலையில் அமிர்தராஜுடன் நான் பயணிக்கும்போது அவர் தான் என்னிடம் கூறினார், “அமிர்தராஜை விட சிறந்த புகைப்பட கலைஞர் உங்களுக்கு கிடைக்கமாட்டார் என”.

ஸ்பிக் நகர் ஆலயம் ஓலை பயிற்சிப் பட்டறையில்

ஸ்பிக் நகர் ஆலயம் ஓலை பயிற்சிப் பட்டறையில்

நாங்கள் முந்தைய நாள் இரவே ஸ்பிக் நகர் சென்றோம். அங்கே போதகர் எங்களுக்காக காத்திருந்தார். இரவு, அனைத்து ஒழுங்குகளையும் சரி பார்த்துவிட்டு மறுநாள் நிகழ்ச்சியை நடத்தினோம். ஆலய வளாகத்திலேயே அனேக பனை மரங்கள் நின்றன. பதினைந்து வயது சிறுவர்கள் துவங்கி அறுபது வயது பாட்டிவரை உற்சாகத்துடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அதன் பின்பு ஆலய அலங்காரத்திலும் குருத்தோலைகளை அவர்கள் மிக அதிகமாக பயன்படுத்தியதை காண முடிந்தது. குருத்தோலை சார்ந்த  பயிற்சி சீர்திருத்த திருச்சபையில் நடப்பது இதுவே முதல் முறை. ஆகவே தூத்துக்குடி பனைமரச்சாலையில் முக்கிய இடம் பிடித்தது. ஆனால் இம்முறை போதகர் தனது பணிச்சுமை காரணமாக என்னை சந்திக்க இயலவில்லை. ஸ்பிக் நகரை கடந்து செல்லும்போது அவரை நினைத்துக்கொண்டேன்.

ஓரமாக நிற்பவர், போதகர் ஆண்ட்ரூஸ்

ஓரமாக நிற்பவர், போதகர் ஆண்ட்ரூஸ்

திருச்சபையில் இன்றும் இயற்கையுடன் ஒன்றித்து உயிர்ப்புடன் இருக்கும் ஒரே பண்டிகை குருத்தோலை  திருநாள் தான். பனையோலைகள் இல்லாத நாடுகளில் கூட ஆப்பிரிக்காவிலிருந்தும்  ஆசியாவிலிருந்தும் ஓலைகளை சிலுவைகளாக தருவிக்கிறார்கள். ஆனால் இந்த ஓலை சிலுவைகளை தயாரிப்பவர்கள், ஓலைகளின் பாரம்பரியம் போன்றவை எவரும் அறியாதது. அவைகளை ஒழுங்குபடுத்தி கூறும் நிறுவனங்களோ மத தலைவர்களோ நம்மிடம் இன்று இல்லை. இல்லையென்று சொன்னால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் குருத்தோலை ஞாயிறை நம்பியே தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.

திருமறை சார்ந்து குருத்தோலை ஞாயிறை அணுகினாலே நமக்கு பல உண்மைகள் தெரியவரும். புதிய ஏற்பாட்டில் காணக்கிடைக்கும் நான்கு நற்செய்தி ஆசிரியர்களும் இயேசுவின் எருசலேம் இறுதி பயணத்தை குறிப்பிடுகிறார்கள். யோவான் நற்செய்தி நூல் இவைகளில் தனித்துவமானது. இந்திய சமய சிந்தனை மரபிற்கு மிக அருகில் வந்து நிற்கும் ஒரு ஆக்கம் என குறிப்பிடுவார்கள். அவ்விதம் தனித்துவமான ஒரு ஆக்கத்தில் மட்டுமே இயேசுவின் பயணத்தில் பெருந்திரளான மக்கள் குருத்தோலைகளை எடுத்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டு போகிறார்கள். பெத்தானியா எனும் பகுதியில் இருந்து இயேசு எருசலேம் நோக்கி புறப்படுகிறார் என மக்கள் அறிந்து கொள்ளுகிறார்கள். அவரை எதிர்கொள்ள குருத்தோலைகளுடன் புறப்படுகிறார்கள்.

மறுநாள் திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள்

இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று,

குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய்,

“ஓசன்னா! [4] ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!

இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!”

என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். (யோவான் 12: 12 – 13 திருவிவிலியம்)

 

இப்பகுதியையே நான் எனது மாதிரி ஆராதனைக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டது. இதில், பெத்தானியா எனும் கிரேக்க வார்த்தைக்கு ‘பேரீச்சைகளின் வீடு” (பனைகளின் வீடு) என பொருள் கொள்ளலாம்.  இயேசு பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு வரும் வழியிலேயே மக்கள் குருக்தோலைகளை பிடித்துக்கொண்டு செல்லுவது பதிவிடப்பட்டிருப்பது ஒரு முக்கிய ஆதாரம். அப்படியானால் பேரீச்சை பனை சார்ந்து வாழுகின்ற மக்கள் அங்கே வாழ்ந்திருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. அந்த வாழ்விலிருந்தோர் அனைவரும் அவருக்கு பின்சென்றனர் என்பது உறுதியாகின்றது. அது ஏன் என்பது முக்கிய கேள்வி.

இயேசுவின் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் சமய ரீதியானது என்பது நாம் அறிந்ததே. ஆனால் மிக முக்கியமான குற்றச்சாட்டு ராயனுக்கு வரி கொடுப்பது தவறு என இயேசு போதித்தார் என்பதே.

15 பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.

16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.

17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்” என்று அவர்கள் கேட்டார்கள்.

18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?

19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.

20 இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார்.

21 அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

22 இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.

மத்தேயு 17: 25 திருவிவிலியம்

இந்த திருமறைப்பகுதியே  பெரும்பாலும் கவனிக்கப்பட்டு எடுத்தாளப்படும் பகுதி. இப்பகுதியில் இயேசு மிக அழகாக தம்மை கேளி கேட்பவர்களின் வாயை அடைக்கிறார் என்பதுவே திருவாக்கை ஆழ்ந்து நோக்குபவர்களின் கருத்தாக இருக்கிறது. என்னைப்பொறுத்தவரையில், இன்னும் சற்று ஆழமாக இந்த கெள்விகளுக்குள் நுழைவோம் என்று சொன்னால், இன்னும் முக்கிய விடைகள் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இயேசு, சமயம் சார்ந்த பல தீமைகளில் இருந்து மக்களை மீட்க வந்தார் என்பது உண்மை. ஆனால் சமயமும் அரசும் இணைந்து அரங்கேற்றிய தவறுகளையும் அவர் சுட்டிக்காட்ட தவறவில்லை.

இயேசுவிடம் இக்கேள்விகளை ஏன் முன்வைத்தர்கள் என்பது ஒரு முக்கிய கேள்வியாக எனக்கு படுகிறது. ஆன்மீக குருவிடம் சமயம் சார்ந்த கேள்விகளை விடுத்து இவ்வித கேள்விகள் எழுவதற்கு வலுவான காரணங்கள் இருக்கவேண்டும் இல்லையா? இயேசு பலஸ்தீனா முழுவதும் சுற்றித்திருந்த காலம். தனது அவதானிப்புகளை ஒரு அடிப்படை மனிதராக அவர் நிகழ்த்தியிருக்கிறார். அவரது பேச்சுக்கள் யாவும் ஒருவகையில் விவசாயியின் பார்வையில் இருந்து எழுவதை நாம் காணமுடியும். அவரது அவதானிப்புகள் சமயம் தாண்டிய சமூக பார்வையாக விரிந்த கணத்தில் இரண்டையும் கோர்த்து கேட்கப்பட்ட கேள்விகளே நாம் மேலே பார்த்தது.

மீண்டும் அவரிடம் வரி சார்ந்த ஒரு கேள்வி முழுமையாக வேறு சூழலில் எழும்போது அதன் பின்னணியம் இன்னும் துலங்குகிறது.

24 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர்.

25 அவர், “ஆம், செலுத்துகிறார்” என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்டார்.

26 “மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், “அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.

27 ஆயினும் நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்றார். (மத்தேயு 17: 25 திருவிவிலியம்)

முன்னதில் ஆலயத்தில் எந்த ஒரு சொரூபமும் கணப்படக்கூடாது என்கிற மோசேயின் கட்டளை மீறப்பட்டிருக்கிறதை, உலக ஆட்சி, உலக பணம் கோவிலினுள் வருவதை இயேசு இடித்துரைக்கிறார், பின்னதில், வரி என்பது பிறருக்கானது எனும் எண்ணத்தை கூட ஆலயம் சார்ந்தோர் மாற்றி, வரி விதிக்கின்றனர் என அவர் மென்மையாக தனது சீடரிடம் பகிர்ந்து கொள்ளுகிறார்.

உண்மை என்னவென்றால், இயேசு வாழ்ந்த காலம் இஸ்ரவேலர், யூதர்கள் ரோமருக்கு அடிமைகளாக இருந்தனர். சமயம் அந்த அடிமை வாழ்விற்கு அனைவரையும் பழக்கி விட்டது. ஏனெனில், சமய் தலைவர்களுக்கோ அல்லது சமயத்தை முன்னிறுத்துபவர்களுக்கோ எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் வரி வாங்குகிறவர்களாக, தங்கள் வாழ்வை மட்டும் நோக்குகிறவர்களாக இருந்துவிட்டனர். அதற்கு இணையாக ரோமருக்கு வரி தண்டுபவர்களை அவர்கள் பாவிகள் என நியாயம் தீர்த்தனர். இயேசுவோ சமயம் பாவிகள் என தீர்த்தோரிடமெ பழகினார். அவர்களின் நிலையை ஆழ்ந்து அவதானித்தார். சமயம் கடவுளை விட்டு நீங்கியும், மக்களை சுரண்டி வாழ்வதையும் கண்டுகொண்டார். இதை அவர் பேசியது சீடர்களுக்கு புரிந்ததோ இல்லையோ, அவரை அண்டி இருந்தோருக்கும் அவரை எதிரியாக பாவித்த மறை நூல் அறிஞர்களுக்கும் பரிசேயரும் நன்கு அறிந்திருந்தனர்.  ஆகவே தான் மக்கள் அவரை நெருங்கினலும், ஆன்மீக வாதிகளும் அவரை அரசுக்கு விரோதமனவர் என்றே குற்றம் தீர்க்க முயலுகின்றனர்.

பெத்பகே என்ற ஊருக்கு அத்திக் காயின் வீடு என்பது பொருள். நற்செய்தி நூல்களில் பெத்பகே பெத்தானியா ஊர்களை குறிப்பிடும்போது, இவ்வூர்களில் பேரீச்சை அத்தி விளைகிறதை நாம் யூகிக்கலாம். இயேசு இப்பயணத்தில் கழுதையில் வேறு ஏறுகிறார். இவைகள் யாவும் சாதாரண குடியானவர்களுடைய வாழ்வைக் குறித்துச் சொல்லுகிறது. அவர்கள் வாழ்வில் வரி என்பது எத்துணை கடினமானதாக இருந்திருக்கும்? இருபுறமும் வரி எனும் சுமையால் வருத்தப்பட்டு  பாரம் சுமப்பவர்களை அவர் அழைத்தார் என்பதையும் அவர் அளித்த இளைப்பாறுதல் அரசுக்கு விரோதமான செயலாகவும் திருக்கோவிலுக்கு எதிரானதாகவும் பார்க்கப்பட்டதை இன்று பெரும்பாலோனோர் மறந்து விடுகின்றனர்.

பேரீச்சை பனைகளில் ஏறிய பனைத் தோளிலாளர்களே அவரை எதிர்கொண்டு குருத்தோலைகளை பிடித்தனர். அவர்களாலேயே பேரீச்சை மரம் எற முடியும். அவர்களே அன்று மிகவும் பாதிக்கப்பட்டோராய் நலிவுற்று வாழ்ந்ததை திருமறையில் நாம் காண்கிறோம். இயேசு அவர்களின் சூழலை உணர்ந்து அவர்களோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார். இரண்டாயிரம் வருடங்களாக திருச்சபை அவர்களை தான் உதாசீனம் செய்து வருகிறது; அதுவும் கரங்களில் குருத்தோலைகளைப் பிடித்தபடி.

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (80)”

  1. Logamadevi Annadurai Says:

    பாஸ்டர் 15 ஆண்டுகளுக்கு முன்பும் பனையின் அருகிலேயே இருக்கிறீர்கள்?ஒரு பாதி பனையும் மறுபாதி நீங்களுமாக அர்த்தனாரீஸ்வரரைபோலவே இருக்கிறது அந்த புகைப்படம்
    குருதோலை குறித்து ஏதும் அறியாத மாற்று மதத்தவளாகிய எனக்கு உங்கள் பதிவில் நிறைய தகவல்கள் கிடைத்தது.
    கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள்,, அன்புக்காக, எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே கடவுள் என்று கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு சிலுவையில் சொல்கிறார்.
    தேவனை தரிசிக்க வேண்டுமெனில் முதலில் இருக்கிற இடத்தை விட்டு புறப்பட வேண்டும். பின் வழியில் உள்ள தடங்கல்களை தடைகளை சோதனைகளைக்கண்டு மனம் தளராமல் இருக்கவும் வேண்டும். அதன் பின்னரெ தேவன் குழந்தயாகவோ ஒளியாகவோ நட்சத்திரமாகவோ தென்படுவார் என்று ஒரு வசனத்தைப்படித்தேன். உங்களது பயணத்தில் தேவன் உங்களுக்கு பனையாகவே தெரிகின்றார்., பனையின் மீள் வாழ்வு வெகு அருகிலேயே உள்ளது பாஸ்டர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: