பனைமரச்சாலை (81)


பனைகளின் அடைக்கலம்

எங்கள் பயணம் இன்னும் சற்று தொலைவு வந்த போது, முட்புதர் காடுகளுக்குள் ஒரு குடிசையைக் கண்டேன். அமிர்தராஜுக்கு கைகாட்டிவிட்டு சடாரென உள்ளே புகுந்தேன். அமிர்தராஜ் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எதற்கு நான் உள்ளே செல்லுகிறேன் என அறியாமலே என்னை அவர் தொடர்ந்தார். எனது உள்ளுணர்வு மிகச்சரியாக அந்த பனைத்தொழிலாளியின் வீட்டிற்கு முன் என்னை அழைத்துக்கொண்டு வந்தது. பனையோலையால் செய்யப்பட்ட சிறிய குடிசை, பனை சார் பொருட்கள் வீட்டின் முன் இருந்தன. யார் இருக்கிறார்கள் எனப் பார்த்தோம்.

பனைத்தொழிலாளியின் குடிசையின் முன்பு

பனைத்தொழிலாளியின் குடிசையின் முன்பு

சுமார் 15 வருடங்களுக்கு முன்பும் நான் பனைமரங்களைத்தேடி திண்டுக்கல் சென்றிருக்கிறேன். தமிழ் நாடு கல்லுடைப்போர் சங்க தலைவராக இருக்கு திரு ஞானமணி அவர்கள், திண்டுக்கல் அருகிலிருக்கும் ஒரு இடத்தை கை காட்டினார்கள். நான் தனியாக அந்த இடத்திற்குச் சென்றேன். அங்கே சந்தித்த பனைத் தொழிலாளர்கள் வாழ்ந்த வீடுகள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே இங்கும் இருக்கின்றன. பனைத் தொழிலாளர் வாழ்வில் நான் கவனித்த ஒன்று உண்டு அது, அவர்கள் பணி நேரத்தில் நே ரம் தவறாமையைக் கடைபிடிப்பார்கள், தேனியாக பறந்தோடி வேலை செய்வார்கள் ஆனால் அவர்களை யாரேனும் தேடிச் சென்றால் மிகவும் மகிழ்ந்துவிடுவார்கள்.

கடந்த பல்லாயிரம் வருடங்களாக அறுபடாத ஒரு நெடுந்தொடர்பை பனைதொழிலாளர்கள் அப்படியே கடைபிடித்து வருகின்றனர். உடலுழைப்பச் செலுத்தினால் மற்ற தொழில்களைவிட இலாபம் நிறைந்த இத்தொழில் அனேகருக்கு பெரிய வரப்பிரசாதம். கால மாற்றத்தில், பனைத்தொழில் தனது சாதி அடையாளத்தை கடந்து செல்லும் என்றே நான் கணிக்கின்றேன். ஒன்று, அது கார்ப்பரேட்டுகள் கரங்களுக்கு செல்லலாம். அல்லது சிறிது சிறிதாக பல்வேறு மக்கள் இதை தங்கள் வாழ்வதாரமாக கொள்ள வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் எனது நாண்பன் ஒருவன் பங்களாதேஷ் சென்றபோது அங்கிருக்கும் வணிகவளாகத்தில் பனம்பழத்தை விற்பனைக்கு வைத்திருந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பியிருந்தான்.. ஆகவே, தரிசு நிலங்களிலும்  பயன்படுத்தா நிலங்களிலும் பனை மரங்கள் நட்டு வளர்ப்பது அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் தடுக்கும், சூழியல் மேம்படும், நிலத்தடி நீர்மட்டம் உயரும், வேலை வாய்ப்புகளும் பெருமளவில் உயரும்.

சுண்ணா பெட்டி

சுண்ணா பெட்டி

ஒரு நடுத்தர வயது பெண்மணி அந்த குடிசையில் இருந்தார்கள். பனைமரங்களைத் தேடி வந்திருக்கிறோம் என்று கூறி விட்டு அவர்களுக்கு பனைத் தொழிலாளி என்ன முறை வேண்டும் எனக் கேட்டோம். தனது கணவனார் பனைத்தொழிலுக்கு செல்லுவதாக கூறினார்கள். நாங்கள் அங்கிருந்த அருவாபெட்டியின் மேல் ஈர்க்கப்பட்டு அங்கேயே நின்றோம். அருவா பெட்டியை, தென்னம் பாளையை கொண்டு செய்திருந்தார்கள். தனித்துவமான ஒரு வடிவமைப்பு இது. மழையில் நனைந்தாலோ அல்லது வெயிலில் காய்ந்தாலோ எவ்வகையிலும் பாதிப்படைவது இல்லை. அதற்கு உள்ளே, சுண்னாம்பு பெட்டி இருந்தது. அரிவாள் வைக்க சிறு தடுப்பால் தனித்த அறை பிரித்து வைக்கப்பட்டிருந்து.  பார்ப்பதற்கு இரண்டு தோணிகளை கவிழ்த்து வைத்து செய்தது போல இருந்தது அருவா பெட்டி.

அருவா பெட்டி

அருவா பெட்டி

உள்ளிருந்த சுண்ணாபெட்டி தான் முக்கிய கதாநாயகன். சுண்ணா பெட்டி வேண்டும் என்று அமிர்த்தராஜ் தேடிக்கொண்டிருந்தார். நாங்கள் ராமேஸ்வரத்தில் இருந்து வரும் வழியில் ஒரு இடத்தில்,  அமிர்தராஜ் ஒரு அழகான சுண்ணா பெட்டியை வாங்கினார். சுண்ணா பெட்டி என்பது சுண்ணாம்பு வைக்க பயன்படும் ஓலையில் செய்யப்பட்ட பெட்டி. நானே அப்போது தான் கவனித்தேன். டையின் அடிபாகம் போல சற்று கீழிறங்கி மேலேறும் ஒரு வடிவமைப்பு அதில் காணப்பட்டது. மேலும், உறுதியாக வேறு பின்னப்பட்டிருந்தது. ஒரே குறை என்னவென்று சொன்னால், அதின் ஓரங்கள் நாரினால்   பின்னப்படாமல் பிளாஸ்டிக்கால் பின்னப்பட்டிருந்தன. சுமார் முக்கால் அடி உயரமும், அரை அடி அகலமும் கொண்ட இந்த பொருளை எப்படி கருப்பட்டி அல்லது வேறு பொருட்களை பொதிய பயன்படுத்தலாம்  என்பதே அமிர்தராஜுடைய எண்ணமாக இருந்தது.

ஓலைகளைக் கொண்டு இயற்கை பொருள்களை பொதிவதோ அல்லது பனை பொருட்களை பொதிவதோ காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு வழக்கம். ஓலைகளின் நெகிழும் தன்மை மற்றும் உறுதியால், சுமார் ஆறு மாதங்கள் வரை பொருட்களை மிக நல்லமுறையில் பொதிந்து பாதுகாக்க முடியும். அனேகர் யோசித்துகொண்டிருக்கும் விஷயம் இது. ஒன்று போல பொருட்களை பொதிந்து கொடுக்கும் திறமை உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓலைப் பெட்டிகள் செய்தால் அனேகர் அவைகளை வாங்கி பயன்படுத்த ஆயத்தமாக இருக்கிறார்கள். தமிழக அரசு கூட, தனது நெகிழி எதிர்ப்பு அலையினூடே பனை ஓலைகளில் செய்யப்பட்ட பொருட்களை ஊக்குவிப்பது அனேகருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும்.

அங்கிருந்து புறப்பட்ட பின்பே அமிர்தராஜ் நாம் அடைக்கலாபுரம் வந்துவிட்டோம் என்றார்.  எனக்கும் அடைக்கலாபுரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால் அடைக்கலாபுரத்தின் எப்பகுதியில் நிற்கிறோம் என என்னால் யூகிக்க முடியவில்லை. வழியில் பதனீர் விற்றுக்கொண்டிருந்த ஒரு இடத்தில் அவர் நிறுத்தினார். எனக்கு தெரிந்தவர்கள் இங்கு உண்டு, நாம் அங்கு சென்று பதனீர் குடிக்கலாம் என்று சொன்னேன். அமிர்தராஜ் என்னை சற்று வித்தியாசமாக பார்த்தார். மும்பையில் இருக்கும் பாஸ்டருக்கு, அதுவும் கன்னியாகுமரியைச் சார்ந்தவருக்கு எப்படி அடைக்கலாபுரம் தெரியும் என்பது அந்த பார்வைக்கு அர்த்தம்.

ஓலை பட்டையில் பதனீர் குடிக்கும்போது, அடைக்கலாபுரம்.

ஓலை பட்டையில் பதனீர் குடிக்கும்போது, அடைக்கலாபுரம்.

அமிர்தராஜை ஒத்துக்கொள்ள வைப்பது சுலபமல்ல. எனக்கும், பதனீர் குடித்தால் நன்றாக இருக்கும்போல இருந்தது. ஆகவே அங்கிருந்த ரோட்டோர கடையில் அமர்ந்தோம். வெயிலுக்கு சாய்வு ஏற்படுத்தியிருந்தார்கள். கடையில் கருப்பட்டி, கற்கண்டு பனங்கிழங்கு யாவும் வைத்திருந்தார்கள். அடைக்கலாபுரம் பனைப் பொருட்களுக்கான ஒரு முக்கிய மையம். பல்வேறு குடிசைகள் அமைத்து பனை சார்ந்த உண்ணும் பொருட்களை தயாரிக்கிறார்கள். சுத்தமான பொருட்கள் தயாரிக்கிறார்கள் என நம்பலாம்.

கடந்த ஜனவரி மாதத்தில், பனை ஓலையில் குருத்தோலை ஞாயிறுக்காக கைபட்டைகளை செய்யவேண்டும் என நான் ஆலோசித்தபோது, ஜானி தமிழ்நாடு வாங்க, இங்கேயே நாம் ஓலைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார். நாங்கள் நாகர்கோவிலிலிருந்து திரு நெல்வேலி சென்று, அங்கிருந்து  தூத்துக்குடி போனோம். போகும் வழியில் பனை மரங்கள் செறிந்திருந்த ஒரு கிராமத்தைக் கண்டு  அதற்குள் நுழைந்தோம்.  ஆனால் அங்கே நாங்கள் நினைத்தது போல ஓலைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் போயிருந்த நேரம், பொங்கல் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது.  காய்ந்த ஓலை ஒரு மட்டைக்கு இருபத்தி ஐந்து என விற்றுக்கொண்டிருந்தார்கள். பொங்கல் பானைக்கு தீ வைப்பதற்காக அந்தநாளின் முக்கிய வியாபரமாக பனையோலை இருக்கிறது என நேரடியாக கண்டுகொண்டோம். பச்சைஓலைகளை எடுத்து மிதித்து, காயவைத்து அவைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி விற்பனைக்கு எடுத்துச் செல்லுவார்கள். பிற்பாடு, தூத்துக்குடி வந்து அங்கிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சென்றால் அனேக பனைமரங்கள் இருக்கும் என்று ஜானி கூறினான்.  அப்படித்தான் அடைக்கலாபுரத்தை கண்டுபிடித்தோம்.

பட்டையில் ஊற்றி பதனீர் குடித்த பின்பு  அங்கிருந்து சற்று தொலைவுதான் சென்றிருப்போம், நான் அறிந்த குடும்பத்தினர் நடத்தும் கருப்பட்டி தயாரிக்கும் தொழிற்கூடம் வந்தது. உடனேயே வண்டியை நிறுத்தினோம். முகமூடி அணித்திருந்ததால் பெரியவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. சற்று நேரத்தில் அவர் மகன் வந்தான். பிரகாஷ் என அழைத்தேன். பிரகாஷ் யார் தன்னை அழைக்கிறார் என திடுக்கிட்டார். அமிர்தரஜும் திடுக்கிட்டு, எப்படி இவருக்கு இந்த ஊரில் உள்ளவரின் பெயரைத் தெரியும் என யோசித்தார். சற்று நேரம் கழித்து உள்ளே சென்றோம். ஒருபுறம் கருப்பட்டி காய்ந்து கொண்டிருந்தது மற்றொருபுறம் புதிய பதனீர் காய்ப்பதற்காக  காத்திருந்தது. பிரகாஷின் மனைவி இருந்தார். எப்படி சந்திரா இருக்கிறே என்று கேட்டேன். பிரகாஷின் அம்மா, ஃபாதர் வாங்க என்றார்கள்.

பதனீர் வேண்டுமா எனக் கேட்டார்கள். அமிர்தராஜ் ஆடிப்போய்விட்டார். பதனீர் வங்கி குடித்தோம். அப்போது எங்களைத்தேடி ஹாரீஸ் பிரேமின் புல்லெட்டில் அவரும்  மைகேலுமாக வந்தார்கள். புல்லட் புத்தம் புதிதாக இருந்தது. ஹாரீஸ் எங்களது புல்லட்டைப் பார்த்துவிட்டு, அழுக்கடைந்த எங்கள் வண்டிகளைக் காட்டி,  “இது தெரிஞ்சிருந்தா நானும் வண்டிய கழுவாமலே கொண்டு வந்திருப்பேம்லா” என்றார். அவர்களது அறிமுகமே அட்டகாசமாக இருந்தது. “உன்னைதான்யா இவ்வளவுநாளா தேடிக்கொண்டிருந்தோம்” என அழைத்து அரவணைத்துக்கொண்டோம். மைக்கேலும் ஹாரீசும் இப்படித்தான் எங்கள்  நட்பு வட்டத்திற்குள் அமைந்தார்கள்.

அனைவருக்கும் இலவச பதனீர் அன்று கிடைத்தது. அமிர்தராஜ், இது தெரிந்திருந்தால் விலைகொடுத்து பதனீர் வாங்கியிருக்கவேண்டாமே என்று கண்களால் பேசினார். நான் சொல்லுவதை எங்கே நீ கேட்கிறாய் என்று நான் பதிலுக்கு பார்த்தேன். ஆளுக்கு ஒவ்வொரு திசை நோக்கி திரும்பி சிரித்துக்கொண்டோம்.

ஹாரீஸ், மைக்கேல் மற்றும் நான்

ஹாரீஸ், மைக்கேல் மற்றும் நான்

ஹாரீஸ் ஒரு புகைப்பட கலைஞர் மற்றும் கிட்டாரிஸ்ட். நகைச்சுவை எழுத்தில் தனித்தன்மை வாய்ந்தவர். கிறிஸ்தவர்களுக்குள் எழுதுபவர்கள் பெரும்பாலும் பரவசத்தில் மூழ்கி எழுதிக்கொண்டிருக்கையில், இவரின் எழுத்தோ நம்மை சிரிப்பில் முழ்கி விடச் செய்யும் தனித்தன்மை வாய்ந்தது. என்ன பிரச்சனை என்றால் வட்டங்களுக்குள் மட்டும் எழுதுகிறார். மைகேல் திருவாய் மலர்ந்தால் அப்புறம் நமக்கு வயிற்று வலி உறுதி. சிரித்து சின்னாபின்னமாகிவிடுவோம். அட்டகாசமான ஒரு குழு அமைந்தது என எண்ணியபோது தான் எனக்கு தமிழகம் தழுவிய ஒரு பயாணம் அமைத்தால் என்ன என்று தோன்றியது.

தமிழக எல்லைகளை ஒரு கோடாக வரைந்தோம் என்று சொன்னால் அது கடற்கரையில் ஒதுங்கிய ஒரு மாலை போலிருக்கும். அப்படி பனை மரங்களை தன்னில் அணிகலனாக கொண்ட தமிழகத்தை ஒரு முறை சுற்றி வந்தால் என்ன என நினைத்தேன். தமிழகத்தை சுற்றி வர குறைந்தது 15 நாட்கள் பிடிக்கும். என்னோடு அனைவரும் ஒருசேர வர இயலாது என்பது நிதர்சனம். ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நண்பர்களை இணைத்து ஒரு பயணத்தை அமைக்கலாம் என என்ற திட்டம் உறுதியானது. பனைமரச் சோலை கண்டிப்பாக செயல் வடிவம் பெறும் என உறுதி பூண்டேன்.. உடனேயே, இன்னும் வீடு போய் சேரவில்லை அதற்குள்ளே அடுத்த திட்டமா? என மனது கடிந்து கொண்டது.

ஆனால் எண்ணத்தை மனதில் வைத்துக்கொள்ள முடியவில்லை, ஹாரீசிடம் சொன்னேன், அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாகுங்கள் என. கண்டிப்பாக வருகிறோம்  என்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் 100 மோட்டார் சைக்கிள்கள்களைத் திரட்டவேண்டும். மாவட்டங்களில் உள்ள பனை ஆர்வலர்கள்,  பனை சார்ந்து செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள், பனை சார்ந்து இயங்கும் தன்னார்வலர்கள் எல்லாம் சந்திக்கவேண்டும் என்றும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் மக்களை சந்தித்து பனை மரத்தின் பயன்களை எடுத்துக்கூறவெண்டும் என்பதும் திட்டம். அப்படியே ஹாரீஸ், ஒரு பனை சார்ந்த புகைப்பட கண்காட்சியும் நாடத்துவோம் என்றேன். முடியுமா என்றார்கள். ஏன் முடியாது என்றேன். ஓலையில் நான் செய்த படங்கள் ஒரு புறமும் பனை மரங்களின் தனித்தன்மைகளை விளக்கும் ஒரு புகைப்பட கண்காட்சியும் நடத்தலாமே என்றேன். கண்டிப்பாக செய்யலாம் என்றார்.

பனங்கிழங்கு பயிர்

பனங்கிழங்கு பயிர்

பிரகாஷுடைய நிலத்தில் பனங்கிழங்கு பயிர் செய்யப்பட்டிருந்தது. ஹாரீசும் அமிர்தராஜும் விழுந்தடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். ரசாயனியில் கிலோ 80ரூபாய் வரை பனக்கிழங்கு விற்கிறது. தமிழகத்தில் பனக்கிழங்கின் விலை அதில் பாதி தான் இருக்கும் என எண்ணுகிறேன். ரசாயனியில் அதில் சப்ஜி செய்து சாப்பிடுவதாக சொல்லுகிறார்கள். பனை சார்ந்த உணவுகள் செய்வது எப்படி என ஒரு சமையல் குறிப்பு புத்தகமும் வெளியிடலாம் என்றே தோன்றுகின்றது.

அங்கிருந்து புறப்பட்டு செல்லும் வழியில் அடைக்கலாபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் ஒரு இருந்த பெட்டிகடையில் அழகிய பனை மர பெஞ்சு செய்து இட்டிருந்தார்கள். இரண்டு பனங்கம்புகளை ஒன்றாக நெருக்கி அமரத்தக்கதாக  அமைத்திருந்த விதம் அழகாயிருந்தது. எளிய தொழில்நுட்பம் மலிவான விலைக்கு கிடைத்த கிராம மக்களுக்கேற்ற அமரும் அமைப்பு அது.

பனைமர அமரும் இருக்கை, அடைக்கலாபுரம்

பனைமர அமரும் இருக்கை, அடைக்கலாபுரம்

அடைக்கலாபுரம் திருச்செந்தூரிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரமே உள்ளது. இன்றும் பனைத்தொழில் மிக உயிர்ப்புடன் இருக்கும் ஒரு கிராமம். மீண்டும் வரத்தூண்டும் அன்பு மற்றும் உபசரிக்கும் பாங்குள்ள மக்கள். மீண்டும் இங்கு வரவேண்டும் என எண்ணிக்கொண்டேன். பனைக்கும் அடக்கலம் அருளும் ஊர் வேறு யாருக்கு தான் அடைக்கலம் அளிக்காது?

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: