பனைமரச்சாலை (82)


மங்கல கற்கண்டு

போகிற வழியில் அனேக விஷயங்களை பேசிக்கொண்டோம். கள்ளைப்பற்றி பேசுகையில் ஹாரீஸ் வாயடைத்துப்போனார். ஒரு பாஸ்டர் கள்ளைப்பற்றி பேசுவதை முதன் முதலில் பார்க்கிறேன் என்றார். திருநெல்வேலி போதகர்கள் பனை பற்றி பேசினாலேயே அவர்களுக்கு கல்தா கொடுத்துவிடுவார்கள் என்று சொல்லவே,  மைக்கேல், “நாங்கெல்லாம் கள் குடிக்கமாட்டோம் பாஸ்டர், வெறும் ஆப்பம் மட்டுமே சாப்பிடுவோம் என்றார்”. ஹாரீஸ் வெடித்துச்  சிரித்தார்.

நாங்கள் அங்கிருந்து செல்லும் வழியில் ஒரு குடிசையில் இருந்து புகை வந்துகொண்டிருந்தது, ஹாரீஸ் மற்றும் மைக்கேல் வந்தபோது அடைக்கலாபுரம் பிரகாஷ் குடும்பத்தினர், கருப்பட்டி காய்த்து முடித்துவிட்டிருந்தனர். ஆகவே எங்கேயாவது கருப்பட்டி காய்க்கும் நேரத்தில் நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எங்களுக்கு புகை ஒரு வழிகாட்டியாக இருந்தது. நாங்கள் அந்த குடிசைக்கு சென்றபோது ஏமாற்றமாக இருந்தது, அங்கு யாரும் இல்லை. ஆனால் அந்த பனந்தோப்பில் அனேக  காரியங்களை அன்று பார்த்தோம். பனைமரத்துக் கிளி, பாதிக்கு மேல் தண்டு உடைந்தும் திடமாய் நிற்கின்ற  பனைமரம், பனை மர வேர்களால் சூழப்பட்ட சிறு ஊற்று. அந்த ஊற்றில் நீர் எடுக்க வாகாக அமைக்கப்பட்ட பனந்தடியாலான ஒரு அமைப்பு, பனையோலை வேய்ந்த குடிசை, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கோ ஆயிரம் ஆண்டுகளுக்கோ வித்தியாசம் ஏதும் தெரியாத ஒரு அமைப்புக்குள் நின்றுகொண்டிருக்கிறோம் எனும் உணர்ச்சி எங்கள் அனைவருக்குள்ளும் ஊடுருவி சென்றதை உணர முடிந்தது.

பனை வேர்களால் சூழப்பட்ட நீரூற்று, அடைக்கலாபுரம்

பனை வேர்களால் சூழப்பட்ட நீரூற்று, அடைக்கலாபுரம்

மணி ஒன்றை நெருங்கிவிட்டது, திருச்செந்தூர் சென்று சாப்பிடலாமா என்று முதலில் நினைத்தோம், பிற்பாடு, பதனீர் வேறு இப்போது தான் குடித்திருக்கிறோம், அது சரிவராது ஜெபக்குமாருடன் இணைந்தே சாப்பிடுவோம் என்று சொல்லிக்கொண்டோம். வசதியான ஆட்களுக்கு தான் செலவு வைக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் விதி வலியது எனபதை பிற்பாடுதான் உணர்ந்து கொண்டோம்.

நாங்கள் வரும் வழியில் ஒரு பனந்தோப்பில் அனேக மரங்கள் ஓலைகள் நீக்கப்பட்டு வித்தியாசமாக காணப்பட்டது. பனந்தும்பு  எடுக்க வேண்டி, பனைமரத்தோடு இணைந்து இருக்கும் மட்டையின்  அடிப்பாகத்தை கத்தியால் கீறி எடுத்திருந்தார்கள். ஓரு நாள் முன்பு நடைபெற்றிருக்கலாம். புத்தம் புதிதாக வெள்ளை வேளேரென்று மேல் பாகம் வெளுத்திருந்தது. எப்படி என்று பார்க்கும்படியாக வண்டியை நிறுத்தினோம். அனைவருக்கும் அது ஒரு அரிய காட்சியாக தென்பட்டது என்பது அவர்கள் கண்களிலிருந்தே தெரிந்தது. மகிழ்ச்சியுடன் அதை கூர்ந்து பார்க்கத் துவங்கினோம். அமிர்தராஜும் ஹாரீசும் தங்கள் புகைப்படக் கருவிகளால் அந்த காட்சியை சுட்டு தள்ளிக்கொண்டிருந்தனர். ஆம் அரிய ஆவணம் அது.

குணசீலனுடன், உடன்குடி பேருந்து நிலையம்

குணசீலனுடன், உடன்குடி பேருந்து நிலையம்

உடன்குடி வந்தபோது எங்களுக்கு வரவேற்பு அளிக்க குணசீலன் வேலன் அவர்கள் காத்து நின்றார். அரசியலில் தீவிரமாக இயங்குபவர், சூழியல் போரளி, சமூக ஆர்வலர் என பன்முக தன்மை கொண்ட ஆளுமை. அமிர்தராஜுடைய நண்பர். கூடன்குளம் போராட்டத்தில் அமிர்தராஜுடன் கைகோர்த்தவர். மதிய உணவு சப்பிடுவோம் என அடம்பிடித்தார். அதற்கு ஜெபக்குமார் அண்ணனை தயார் செய்து வைத்திருக்கிறோம் என்று கூறினோம். குணசீலன் தொய்வில்லாமல் தொடர்ந்து இயங்குபவர். வேறொரு நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டியவர் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். ஆகவே அவரது நேரத்தை நாங்கள் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. சர்பத் வாங்கி தந்தார். அடுத்தமுறை இங்கு வருவீர்கள் என்றால் உங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய ஆயத்தமாக இருக்கிரேன் என்றார். தமிழகம் தழுவிய எனது பயணத்தை காலமே நிர்ணயிக்கிறது என கண்டுகொண்டேன். மீண்டும் ஒரு குடிகாரரின் சந்திப்பு அந்த நட்ட நடு நிசியில் நடைபெற்றது. வாழ்க பாரதம், வளர்க தமிழ்க் குடி.

கருப்பட்டி

கருப்பட்டி

தமிழகத்தின் மொத்த கருப்பட்டியிலும் உடன்குடி கருப்பட்டி தான் முதல் தரம் வாய்ந்தது என சொல்லுகிறார்கள். வறட்சியான பகுதியில் இருந்து பெறப்படும் பதனீரின் சுவை அதிகமாக இருக்கும். அதனால் இருக்கலாம். எப்படி இருந்தாலும் காய்க்கும் தன்மையிலோ சேர்மானங்களிலோ வித்தியாசம் இருக்காது என்றே நம்புகிறேன். மதியம் இரண்டு மணிக்கு வந்ததால் எங்களால் கருப்பட்டி தயாரிக்கும் இடங்களுக்கு போக முடியவில்லை.  மீண்டும் ஒருமுறை வந்து கருப்பட்டி தயாரிப்பதை ஆவணப்படுத்தவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் பதம் வந்துவிட்டதா என்பதை உறுதி செய்ய ஒவ்வொரு வித முறைகளை கையாளுகிறார்கள். குமரி மாவட்டத்தில் தேங்காய் எண்ணை விடுவது வழக்கம்.

காந்தி கருப்பட்டி மேல் தீரா விருப்பு கொண்டிருந்தார்.  ஆலைகளுக்கு எதிராக கிராம பொருட்களை முன்னிறுத்துவதற்கு பனை ஒரு முக்கிய அடையாளமாக அவருக்கு இருந்தது. பனை சார்ந்து அவர் உதிர்த்த பொன்மொழிகளால் அவருக்கு பதனீர், கருப்பட்டி மற்றும்  பனைபொருட்கள் மீதான அசைக்க முடியா நம்பிக்கை தெரிகிறது. மார்த்தாண்டம் ஒய் எம் சி ஏ அவருக்கு கருப்பட்டியை அறிமுகம் செய்திருக்குமா?

“பதநீரைத் தேனுக்கு ஒப்பான இனிய வெல்லமாக மாற்ற முடியும். இவ்வெல்லம் கரும்பு வெல்லத்தை விடச் சிறந்தது. கரும்பு வெல்லம் இனிமையானது. ஆனால் பனைவெல்லமோ இனிப்பும், அதைவிட சுவையும் உடையது. இதில் பல உலோக உப்புகள் உள்ளன. மருத்துவர்கள் என்னிடம் வெல்லம் சாப்பிடச் சொன்னார்கள். அதனால் நான் எப்பொழுதும் பனை வெல்லமே சாப்பிடுகிறேன். ஆலைகளில் கூட உற்பத்தி செய்ய முடியாத முறையில் இயற்கை, இந்தப் பொருளை உண்டாக்கியிருக்கிறது. இவ்வெல்ல உற்பத்தி குடிசைகளிலே நடைபெறுகிறது. பனைகள் உள்ள இடங்களில் இதை எளிதில் உற்பத்தி செய்யலாம். ஆந்திராவில் ஆயிரக்கணக்கான பனைகள் உள்ளன. அங்கு ஒவ்வொரு கிராமத்திலும் இவ்வெல்லம் தயார் செய்யப்படுகிறது. இந்த நாட்டிலிருந்து ஏழ்மையை விரட்ட இது ஒரு வழி. இது ஏழ்மைக்கு மாற்று மருந்தாகவும் அமையும். (மகாத்மா காந்தி )

மணப்பாடு நாங்கள் வந்தடைந்தபோது ஜெபக்குமார் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்றார்கள். நான் என்னிடமிருந்த ஆந்திரா கருப்பட்டியை அனைவருக்கும் பகிர்ந்து அளித்துக்கொண்டிருந்தேன். ஒருவித காப்பி மணம் வருவதாக தீய்ந்து போன மணம் வருவதாக குறிப்பிட்டார்கள். ஆனால் சுவைக்கு பஞ்சமில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கும் கருப்பட்டிகளை ஒரு சேர எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். தனித்தன்மைகளை கண்டு பதிவு செய்யவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தினேன்.

ஹாரீஸ் “பாஸ்டர் கற்கண்டு எப்படி செய்வார்கள்” என்று கேட்டார். நானும் இதுவரை நேரில் பார்க்காத ஒன்று. ஆனால் கற்கண்டோடு எனக்கிருந்த உறவைச் சொல்ல ஆரம்பித்தேன்.  கிறிஸ்மஸ் நேரங்களில் பாடல் பாடி கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுவது வழக்கம். அப்படிச் செல்லுகையில் ஒருவர் பனங்கற்கண்டு எங்களுக்கு கொடுத்தார். தேன் வண்ணத்தில் ஓலி ஊடுருவும் தன்மையுடன்  இருபது முதல் ஐம்பது கிராம் அளவு பெரிதாக அந்த கற்கண்டு இருந்தது. நான் அதுவரை அவ்வளவு பெரிய கற்கண்டை பார்த்தது இல்லை.அவர் ஒரு தொண்டு நிறுவனத்தின் இயக்குனராக செயலாற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்து இரண்டு கிலோ கற்கண்டை வாங்கிக்கொண்டு நான் படித்துக்கொண்டிருந்த ஐக்கிய இறையியல் கல்லூரிக்குச் சென்றேன். ஜனவரியில் எனக்கு பிறந்த நாள் ஆகையால், கற்கண்டை இனிப்பாக அனைவருக்கும் கொடுக்கலாம் எனும் எண்ணத்தில் எடுத்துச் சென்றேன். இந்திய மரபுப்படி பிறந்தநாளைக்  கொண்டாடுகிறேன் எனச் சொல்லி எல்லாரும் என்னை கொண்டாடிவிட்டார்கள். கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் ஞானா ராபின்சன் அவர்களை அன்று எனது அறைக்கு அழைத்து வந்து இனிப்பைக் கொடுத்தேன். மகிழ்ந்து போன அவர்கள் ஜெபித்து என்னை வாழ்த்தினார்கள். அதன் பின்பு, எப்போதும் பிறந்தநாளுக்கு கற்கண்டு வழங்குவதையே வழக்கமாக கொண்டிருந்தேன்.

கற்கண்டு

கற்கண்டு

கற்கண்டு இன்று ஒரு மங்கல பொருள். மங்கல பொருட்கள் யாவும் காலத்தால் முந்தையவை மற்றும் அரிதானவை கூட. அவற்றிற்கான பொருள் தொல்பழங்காலத்தில் இருந்து வருகிறது. தினையும் தேனும் கொடுத்து விருந்தோம்பல் செய்தவர்கள், தேன் அரிதானபோது தேனுக்கு பதிலாக கருப்பட்டியோ கற்கண்டோ கொடுத்திருப்பார்கள். கற்கண்டு சிறந்த மருந்தும் கூட. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணத்தக்க இனிப்பு. சுவைக்க சுவைக்க நாவில் தேன் ஊறிக்கொண்டே  இருக்கும். அரைமணி நேரத்திற்கும் மேலாக கரையாமல் நாவில் சுவை தந்தபடி இருக்கும்.

மார்த்தாண்டம் பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றியபோது, நான் தங்கியிருந்த கோட்டவிளை வளாகம் தனது விரிவான பணிகளை குறைத்திருந்தது. அங்கிருக்கும்போதுதான் மார்த்தாண்டத்தை அடுத்த கம்பிளார் எனும் பகுதியில் கற்கண்டிற்கான தனி பிரிவு செயல்பட்டுக்கொண்டிருந்ததை அறிந்தேன். கோட்டவிளையில் கற்கண்டு விளைவிக்கும் பாத்திரங்கள் இருப்பதைப் கண்டு, கற்கண்டு பிரிவுக்கு பொருப்பாளரக இருந்த நெல்சன் அவர்களை விசாரித்தேன். அவர் கற்கண்டு தயாரிப்பைக் குறித்து எனக்கு விளக்கமாக கூறினார்.

கற்கண்டு தயாரிக்கும் பதனீரில் சுண்ணாம்பு அதிகம் இருக்கக்கூடாது. ஆகவே தெளித்து வடிகட்டியே பதனீரை காய்க்கவேண்டும். பதனீர் சூடானதும் சூப்பர் பாஸ்பேட் எனும் வேதியல் கலவையை 100 லிட்டருக்கு நூறு கிராம் என்ற அளவில் சேர்க்கவேண்டும்.  முதல் கொதிநிலை வந்தவுடனே, ஒரு வெள்ளைத்துணியில் வைத்து வடிகட்டி மீண்டும் காய்ச்சவேண்டும். கொதி நிலை 108 டிகிரி வந்தவுடன் இறக்கி நூல் பின்னப்பட்ட பாத்திரங்கள் மண்ணில் புதைந்திருக்க அல்லது உமிக்குள் புதைந்திருக்க, காய்ச்சிய பதனீரை ஊற்றவேண்டும். எக்காரணம் கொண்டும் ஊற்றப்பட்ட பாத்திரம் அசையக்கூடாது. அப்படி நாற்பத்தி ஓரு நாள் அசையாமல் வைத்திருந்தால் முதல் தரமான கற்கண்டு கிடைக்கும். மீண்டும் இதில் எஞ்சிய  பதனீரை சேமித்து மீண்டும் காய்த்தால் இரண்டாம் தரமான கற்கண்டு கிடைக்கும். இவற்றிலும் எஞ்சும் பதனீரை எடுத்து, கொப்பரை தேங்காயிலிருந்து எண்ணை எடுக்கும் செக்குகளுக்கு கொடுத்துவிடுவார்கள். எண்ணையின் தரமும், பிண்ணாக்கின் தரமும் மேம்படும் என்பது அனுபவத்தில் அறிந்த உண்மை என அவர் சொன்னார்.

குமரி மாவட்டத்தில்  பழங்கால முறைப்படி கற்கண்டு தயாரிக்கும் சூட்சுமம் ஒன்று உண்டு. கருப்பட்டிக்கு எப்படி பதனீர் காய்ப்போமோ அது போலவே காய்த்துவிட்டு, பருவம் வந்ததும் மண் பானைக்குள் ஊற்றிவிடவேண்டும். பிற்பாடு உடைத்த புளியம்பழங்களை காம்போ விதைகளோ நீக்காமல் பானைக்குள் இட்டு மூடி வைக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்பு எடுத்துப்பார்த்தால் கற்கண்டு உருவாகியிருக்கும். கொஞ்சம் பதநீர் ஊறலும் இருக்கும். அதை கூப்பனி என்பார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் உள்ளே இடப்பட்ட புளியம் பழங்கள் யாவும் காய்த்த பதனீரில் ஊறியதால், அவற்றின் புளிப்பு சுவை மாறி, தித்திப்பாக மாறிவிடும். ஓருமுறை கோட்டவிளையில் நாங்கள் அதை முயற்சித்தோம். நாம் இன்று சாப்பிடுகின்ற பேரீச்சம் பழத்தின் சுவைக்கு ஒப்பாக அது இருக்கும். மழை நேரத்தில் சிறுவர்களுக்கு அதை உண்ணக்கொடுப்பார்கள். ஒருவேளை மழை நேரத்தில் சளி பிடிக்காமல் இருப்பதற்காக கொடுப்பார்களோ என்னவோ.

மற்றொரு முறையும் உண்டு, கொறடு என உள்ளூரில் அழைக்கப்படும் செடியை வெட்டி இலைகள் உதிர்ந்த பின்பு கூப்பனி (காய்த்த பதனீர்) இருக்கும் பானைக்குள் போட்டிவிடுவார்கள். இச்செடியின் நரம்புகளில் பற்றிப்பிடிக்கும் கற்கண்டே பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்திய கற்கண்டு ஆகும். கற்கண்டை வெயிலில் காயவைத்து சேமித்தால் பல நாட்களுக்கு கெடாமல் இருக்கும். கற்கண்டு தயாரிக்க அதிக நாட்கள் பிடிக்கும் என்பதே ஒரே பிரச்சனை. ஆனால் உற்பத்தியைப் பொறுத்தவரையில் ஒரே அளவு பதனீரிலிருந்து கிடைக்கும் கருப்பட்டியைவிட கற்கண்டு அதிகமாகவும், விலை கருப்பட்டியைவிட மும்மடங்கும் இருக்கும்.

இவைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, குறிப்பாக ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ய தடை இருப்பதற்கு காரணம் இவற்றினுள் இருக்கும் நூல் அல்லது  கொறடுச் செடியின் காம்புகள். புளி இட்டு பெறும் கற்கண்டு அளவில் மிகச்சிறிதாக பரல் போல காணப்படும். ஆகவே எவ்வகையிலும் அவைகள் ஏற்றுமதிக்கான தன்மையை பெறவில்லை. சில நேரங்களில் பானையை உடைத்து கற்கண்டு எடுத்த கதைகளும் உண்டு.

பனங்கற்கண்டை உருவகிக்கவேண்டுமென்றால் மிக எளிது. தேனை படிகம் ஆக்கினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். சுவையும் மணமும் நிறமும் ஓளி ஊடுருவும் தன்மை கூட அப்படியே, ஆனால் இறுகிப்போய் உறுதியாக இருக்கும். கடந்த 10 வருடங்களாக மும்பையில் இருப்பதால் எடுத்து வருவது இல்லை. இனிமேல் தொடர்ந்து எப்போதும் கைக்கெட்டும் தொலைவிலேயே வைத்துக்கொள்ளவேண்டும். தெளி தேன் துளி அது.  மங்கல வாழ்வின் அடையாளம் மற்றும் பனையுடன் உள்ள உறவின் சான்று அது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (82)”

 1. Logamadevi Annadurai Says:

  மத போதகர்கள் ஏன் கள்ளைக்குறித்து பேசக்கூடாட்து? நான் ஈனாலஜி எனும் வைன் அறிவியலை பல ஆண்டுகளாக கல்லூரியில் பயிற்றுவிக்கிறேன் அதில் “wine , a drink or a medicine or a beverage or a hard drink ,what matters is the dosage!!!” என்று சொல்லப்படுகின்றது. அது எல்லா பானங்களுக்குமே பொருந்தும் அல்லவா?
  பாஸ்டர் இந்த பனைப்பயணம் கடவுள் மற்றும் காலம் நிர்ணயித்தது.

  கற்கண்டு செய்யும் மூன்று முறைகளையும் அழகாக விளக்கி இருக்கிறீர்கள். anaerobic fermentation போல இருக்கிறது படிக்கையில்.
  எந்த நுண்ணுயிரி இதை நடத்துகிறது என்று தெரிந்து கொண்டால் ஆய்வகங்களில் தரமான, ஏற்றுமதிக்கு தக்க கற்கண்டை சுலபமாக தயாரிகலாம்.
  சித்தமருத்துவத்தில் பெண்மலடு நீங்க – கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங் கற்கண்டு, ஏலக்காய், நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும்.-என சொல்லப்படுகிறது.
  இன்னும் பல மருத்துவ குணம் கொண்|டது நம் palm candy.
  பனை வேர்களால் சூழப்பட்ட ஊற்றும்,பனந்தும்பிற்காய் வெட்டப்பட்ட பனைகளும் பனை பெஞ்சுகளும் உங்களைக் கண்டடைகின்றன. ஜெயமோகன் சார் சொல்வது போல “ நீங்கள் தேடுவது
  உங்களைத்தேடுவதாக”

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: