பனைமரச்சாலை (83)


மணப்பாடு –  பனைமரச்சாலையின் கீற்று

கரத்தில் பணம் இல்லாதிருந்ததால் பெரிய அக்காவிடம் கேட்டிருந்தேன்.  எனது வாழ்வில் பணத்தேவைகளுக்கு எப்போதும் நம்பிச் செல்லலாம், எப்படியாவது ஒழுங்குசெய்து கொடுத்துவிடுவார்கள். ஒன்று எனது பணத்தேவைகள் பெரிய அளவில் இராது, இரண்டாவது அக்கா என்மீது வைத்திருக்கும் அன்பினால் நான் கேட்பதை கொடுத்துவிடுவார்கள். அக்கா எனக்கு பணம் அனுப்பியிருந்ததாக அமிர்தராஜ் சொன்னார். அவரது வங்கி இலக்கத்தைதான் நான் அவர்களுக்கு கொடுத்திருந்தேன். பணம் வந்துவிட்டதும் பசியெடுக்க ஆரம்பித்தது. என்னோடு இதுவரை பொறுமையோடு வந்த அமிர்க்ட்தராஜ், சூழலை நன்கு உணர்ந்து அதற்கேற்றார்போல் தன்னை ஒடுக்கிக்கொண்டது பெரியவிஷயம். அந்த வேலையில் ஜெபக்குமார் தந்து சகலையோடு காரில் வந்தார்.

எங்கள் முன்பதாக இரண்டு காரியங்கள் முடிவெடுக்க இருந்தன.  ஒன்று, நாங்கள் உடனடியாக உணவு உண்ணச் செல்லவேண்டும். மணப்படு பகுதியி உணவு விடுதி தேடிப்போனால், ஜெபக்குமார் பர்சுக்கு வேலைவைக்கும்படியான உணவு விடுதி ஏதும் அருகில் இருக்காது, இரண்டாவது, பசியை யோசித்தால் நாங்கள் மிக முக்கியமாக கருதியிருக்கும் மணப்பாடு பெண்கள் கூட்டுறவு சங்கம் நடத்தும் ஓலைப் பொருட்களைப் எங்களால் பார்க்க இயலாது. என்ன செய்யலாம் என யோசித்த போது, உணவை தியாகம் செய்வதுதான் உசிதமாக பட்டது. சரி யாருக்கு வழி தெரியும் என்று கேட்டார்கள். நான் ஒருவரை ஒருவர் பார்த்தேன், எவருக்கும் வழி தெரியவில்லை என்பது புரிந்தது. அனைவருமே முதன் முதலாக வருபவர்கள். ஆகவே, நானே களத்தில் இறங்கி வழி காட்டுகிறேன் என முன்னால் சென்றேன்.

1997அம் வருடம் முதல் நான் இங்கு வந்துகொண்டிருக்கிறேன். பேருந்து வசதி இல்லாத இடம். முதன் முறை வந்த போது சுமார் முண்று மணி நேரம் காத்திருந்த பின்பே பேருந்து கிடைத்ததை நினைவு கூர்ந்தேன். வின்ஸ்டனுடன் அவனது தங்கையின் திருமணத்தின்போது இங்கு வந்து ஒருசில பொருட்களை வாங்கிச்சென்றிருக்கிறோம்.  நான் மும்பையிலிருந்ததால்,  ஒரு நபரை அழைத்து இந்த கூட்டுறவைக் கண்டு, உதவி பெறலாம் என முயற்சித்தபொது, அது செயல்பாட்டில் இல்லை என பதில் வந்தது. ஆகவே நானே நேரில் வரவேண்டும் என நினைத்து, கடைசியாக ஒரு வருடம் முன்பு ஜானியுடன் வந்தபோது கூட்டுறவு மூடியிருந்தது, பொங்கல் நேரமானபடியல் விடுமுறையாக இருந்திருக்கலாம். அன்று நாங்கள்  இரண்டு மணி நேரம் கத்திருந்தே நாகர்கோவில் பேருந்தை பிடித்தோம். சாலைகள் மிகக்கேவலமாக இருந்தன.

இத்துணை ஒதுக்குப்புரமான இடத்தில் இருந்தாலும் பனை ஓலைகளில் செய்யும் கலைப் பொருட்களுக்கு, உலக  அளவில் மணப்பாடு ஒரு முக்கிய மையமாக காணப்படுகிறது. பாரத பிரதமர் ஜவகர்லால் நேரு உட்பட அனேக முக்கிய ஆளுமைகள் வந்து சென்ற இடம்.  ஐரோப்பா உட்பட, அனேக நாடுகளுக்கு பனை ஓலைப் பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. சிறந்த தரம் மற்றும் குறைந்த விலையே காரணம். அங்குள்ள பொருட்களின் தரத்திற்கு அவர்கள் சொல்லுகின்ற விலை மிகவும் குறைந்தது என நேரில் செல்பவர்கள் உணர்ந்துகொள்ளுவார்கள். ஆனல், இதே பொருட்கள் வெளியே வாங்கி விற்கும்போது, விலை பன்மடங்காக உயர்வதை நாம் கண்டுகொள்ள முடியும்.

பனையோலை பூ தோரணம்

பனையோலை பூச்செண்டு

உதாரணத்துக்கு எனது அனுபவத்திலிருந்து ஒன்றை மட்டும் நான் சொல்லுகிறேன். பனை ஓலையில் செய்யப்பட்ட தோரணம் ஒன்றை நான் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாக வாங்கினேன், கோவையில் இருக்கும் எனது மூத்த சகோதரியின் மகன் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, எப்படியிருந்தாலும் இதன் விலை சுமர் 700 ரூபாய் வரை இருக்கும் என்றான். ஓலையின் வசீகரம் அப்படிப்பட்டது. எளிய பின்னல் தான், உட்கார்ந்த இடத்தில் இருந்தே கைகள் பழகி விட்டால், ஒரு மணி நேரத்திற்குள் ஒருவர் ஒன்றைச் செய்த்துவிடலம். ஆனால் அந்தத் தோரணம் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.

இருபது வருடத்திற்கு முன் நான் வந்தபோது, ஓலைகள் உள்ளூரிலெயே கிடைக்கும் வசதிகள் இருந்ததை காண முடிந்தது, இன்றோ, பனை மரங்கள் நின்ற பகுதிகளில் புதிய கட்டிடங்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக சுற்றுலத்தலமாக மணப்பாடு வளர்ச்சியடைவதைக் காணமுடிந்தது.

நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட பனையோலைப் பொருட்கள்

நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட பனையோலைப் பொருட்கள்

நாங்கள் சென்று சேர்ந்தபோது, நல்லவேளையாக கூட்டுறவு திறந்தே இருந்தது. முன்பு போல் ஆட்கள் வந்து ஓலைகளை திண்ணையிலிருந்து பின்னிக்கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை. எவ்விதமான மாற்றம் நிகழ்ந்தது என தெரியவில்லை, ஆனால் நிர்வாகம் நொடின்ட்து போயிருக்கிறது எனப்தில் சந்தேகம் இல்லை. மும்பையிலிருந்தும் கூட ஆட்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்லுகிறார்கள். ஆனால் கட்டிடங்கள் பாழடைந்தும், செயலூக்கம் இன்றிய்ம் கானப்பட்டது. நாங்கள் உள்ளே நுழைந்தபோது இரண்டே இரண்டு பெண்கள் அமர்ந்து அலுவலகப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார்கள். உள்ளே சென்று பொருட்களைப் பார்வையிடலாமா என்று கேட்டோம். ஆம் என்று சொன்னர்கள். அதன் பின் நடந்தது ஆச்சரியமளிக்கும் உண்மை.

உள்ளே சென்றவர்கள் அனைவரும் அரண்டு போனார்கள். எதை பார்ப்பது எதை விடுவது என ஒருவருக்கும் தெரியவில்லை, ஓலையில் இத்தனை கைவண்ணங்களா என கண்கள் விரிய பார்த்தார்கள். ஓவ்வொருவரும் ஒரு பொருளை எடுத்து ஆச்சரியத்தில் கூவ மற்றவர்கள் அனைவரும் அந்த பொருளைப் பார்க்க ஓடினார்கள். தங்கப்புதையல் கிடைத்தது போல அவர்கள் முகங்கள் மின்னுவதை என்னால் காணமுடிந்தது. ஆம், ஓலையின் வாசீகரம் அப்படிப்பட்டது. நளினமான அதன் வடிவங்கள் எந்த முனியின் தவத்தையும் கலைத்துவிடும் அழகு கொண்டது. அமிர்தராஜும் ஹாரீசும் எதை புகைப்படம் எடுக்கவேண்டும் என திணறிக்கொண்டிருந்தார்கள். அனைவரின் முகத்தில் தெரிந்த ஆனந்தமே என்னை திக்குமுக்காடவைத்தது. இதற்கிடையிலும் எனக்கு, நான் முன்பு பார்த்த பல பழய பொருட்கள் காணவில்லை என்பது உறைத்தது.

பல்வேறு வண்ணங்களில் ஓலைகள் பின்னப்பட்டு பெரிய நெகிழி பைகளில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காற்று புகாதபடி ஓலைகளை பாதுகாத்து வைத்தாலே அவைகள் கெடாமல் இருக்கும். ஓலைகளின் முதல் எதிரி காற்றிலுள்ள ஈரப்பதம் தான். குருத்தோலைகளில் ஈரப்பதம் உள்ள காற்று பட்டால் அவைகளில் ஒருவித பூஞ்சை பற்றிக்கொள்ளும். காற்று புகாமல் வைத்துக்கொள்ளுவதே சிறந்தது. அல்லது அடிக்கடி கரத்தில் எடுத்து பயன்படுத்தும் பொருளாக இருக்கவேண்டும். பூஞ்சை வந்துவிட்டால், அது அழகிய தந்த நிற ஓலையை மஞள் நிறமாக மாற்றிவிடும், அதுவும் பூஞ்சை அப்பிக்கொண்ட இடங்களில் மட்டும் நிறம் மாறி தெரியும். அது ஓலைப்பொருட்களின் அழகை சிதைத்துவிடும். ஆகவே பூஞ்சை தொற்றாமல் இருக்கும்படியாக ஒரு தனித்துவமான புகை போடும் முறையைக் கடைபிடிப்பார்கள்.

வண்ணக்கலவையில் உருவான சிறு ஓலைப் பெட்டிகள்

வண்ணக்கலவையில் உருவான சிறு ஓலைப் பெட்டிகள்

மார்த்தாண்டத்தில் உள்ள  பனைத்தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்திற்கு ஓலையில் தொப்பி செய்யும் ஒரு பிரிவு உண்டு. வேறு சில ஓலைப்பொருட்கள் செய்தாலும் முக்கியமாக ஓலைத்தொப்பிகளை மார்த்தாண்டத்தில் இவர்களே செய்தார்கள். தமிழகமெங்கும், ஓலையில் தொப்பி செய்யும் வேறு இடத்தை நான் இதுவரை அறிந்தது இல்லை.  ஓலையில் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு புகை வெளியேறாத ஒரு அறைக்குள் வைப்பார்கள். மாலை வேளையில் சாம்பிராணி போடுவதுபோல், நெருப்பை மூட்டி அதற்குள் சல்பர் என்ற வேதிப்பொருளைப் போடுவார்கள். போட்டுவிட்டு கதவை அடைத்துவிடுவார்கள். இரவு முழுவதும் அந்த அறையில் புகை முலை முடுக்கெல்லம் பரவி, ஓலையில் ஈரப்பதம் ஏறாமல் தடுத்துவிடும். அதன் பின்பு அவ்வளவு எளிதில் பூஞ்சை ஓலைகளில் பிடிக்காது. எனது அனுபவைத்தைப் பொறுத்தவரையில் நன்றாக காயவைக்கப்பட்ட ஓலை தண்ணீர் கசிவு படவில்லையென்ரு சொன்னால் நீடித்து உழைக்கும். தண்ணீர் ஊற்றி பயன்படுத்தினால் கூட வெயிலில்  நன்கு காயவைப்பது பூஞ்சையை தவிர்க்கும்.
மிகச்சிறந்த கைவினை கலைஞர்கள் மணப்பாடில் இருந்தாலும்,  மணப்பாடு கூட்டுறவு சங்கம் இத்தனை தூரம் தாக்குப்பிடித்தது, அதன் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளின் ஊக்கத்தால் தான் என்பது எனது கணிப்பு. இன்னும் உள்நாட்டு சந்தையில் ஓலைகளால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவாரில்லை. உள்நாட்டில் இப்படிப்பட்ட பொருட்கள் வாங்கக் கிடைக்கிறது எனும் தகவல் கூட  அனேகருக்குத் தெரியாது. இவைகளை எப்படி பிரபலப்படுத்தலாம்?  எப்படி மக்களுக்கு இதன் சந்தை வாய்ப்புகளை எடுத்துக்கூறி, இன்னும் அனேகர், இத்தொழிலின் மூலம் பயன் பெற செய்ய முடியும் என்பதை யோசிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வாழ்வளிக்கும் தொழில் இது. வீட்டில் இருந்தபடியே அவர்கள் இதை முன்னெடுக்கும் வாய்ப்பு உள்ளது. எப்படி இதைச் நாம் பரவலான மக்கள் கவனத்தைப் பெறும்படி செய்ய முடியும் என யோசித்தேன்.

ஓலையில் செய்யப்பட்ட பலதரப்பட்ட பொருட்கள்.

ஓலையில் செய்யப்பட்ட பலதரப்பட்ட பொருட்கள்.

என்னைப் பொறுத்தவரையில் திருவிழாக்கள் நடைபெரும்  நேரம், சீன பொருட்களை  புறக்கணித்து மாற்றாக ஓலைப்பொருட்களை முன்னிறுத்தலாம்.  மேலும் திருவிழா நேரத்தில் ஒழுங்கு செய்யும்  அலங்காரங்களுக்கு  பதில்  ஓலைகளில் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் ஏற்றது என்பது எனது உறுதியான எண்ணம்.  மணப்பாடு பகுதியில் ஆழ வேரூன்றியிருக்கும் கத்தோலிக்க திருச்சபை, இதற்கான ஒரு முயற்சியை எடுத்தால், அதன் மூலம், அனேகர் பயன் அடைவார்கள் என நினைக்கிறேன். திருவிழா காலத்தில், ஓலையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி அவைகளை ஆலய அலங்கரிப்புக்கு தொடர்ந்து  பயன்படுத்தினார்கள் என்று சொன்னால், ஒரு ஐந்து வருடத்தில் பல்வேறு கத்தோலிக்க திருச்சபைகளில் இருந்து நினைப்பதற்கும்  அதிகமான வணிக வாய்ப்புகள் குவியும். ஓலையில் பணி செய்வோரின் தேவைகள் தானாகவே அதிகரிக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள், எப்படியாவது தங்கள் ஆலயத்திலும் இவ்விதமான அலங்காரங்களை முன்னெடுக்கவேண்டும் என பிரயாசப்படுவார்கள். மீண்டும், மணப்பாடு வரும்போது பங்கு தந்தையை சந்தித்து இவ்விதமான ஒரு முயற்சியை முன்னெடுக்க அவரிடம் கோரிக்கை வைக்கவேண்டும்  என நினைத்துக்கொண்டேன்.

ஓலைப் பொருட்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஆசை தீர்ந்த பாடில்லை, அமிர்தராஜ் கணக்கில்லாமல் வாங்கிக்கொண்டே போனார். எப்படி கொண்டு போவீர்கள் எனக் கேட்டேன், “அதற்கு தான் ஜெபக்குமார் அண்ணன் கார் இருக்கிறதே” என்றார். ஜெபக்குமாரோ, “அதெல்லம் எனக்குத் தெரியாது, வீட்டில் யாரேனும் எடுத்தார்கள் என்று சொன்ணால் நான் பொறுப்பில்லை என கைவிரித்துவிட்டார்.” அமிர்தராஜ், தான் எதற்கும்  எதற்கும் சளைத்தவரல்ல என்பதையும், தான் எதை கண்டும் அஞ்சும் நெஞ்சத்தவரும் அல்ல எனபது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு,  “அக்காவிடம் நான் பேசிக்கொள்ளுகிறேன்” எனக் கூறியபடி மனம்போல வாங்கினார் . ஜெபக்குமார், அவரது சகலை, ஹாரீஸ் என அனைவரும் ஓலைப் பொருட்களை வாங்கி வாங்கி குவித்துக்கொண்டிருந்தனர். எனக்கு அந்த காட்சி மன நிறைவளிப்பதாக இருந்தது. ஓலை பொருட்களுக்கான விருப்பம் மக்கள் மனதில் இன்றும் இருப்பதற்கான சான்று அது.

ஓலைகளில் பொதியப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் வித்தை தெரிந்தால் கண்டிப்பாக ஒரு பெரிய பாய்ச்சலை  நிகழ்த்தலாம். இயற்கை சார்ந்த பல்வேறு அழகிய வடிவமைப்பை பெற்றுக்கொள்ள, ஓலையை விட  சிறந்த பொருள் ஏதும்  நம்மிடம் இல்லை. அதனை வடிவமைக்கும் கலைஞர்கள் நமக்குத்தேவை. தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும்,  ஓலைக் கைவினைஞர்களை முடிந்த அளவு பயன்படுத்தினாலே, பல்வேறு சாத்தியக்கூறுகளை நாம் எளிதில் கண்டடையலாம்.

குருத்தோலைகள் இன்று கிடைப்பது அரிதாகி வருகிறது. சாயம் நல்லபடி பிடிக்கவேண்டுமென்றால், குருத்தோலை தான் பயன்படுத்த வேண்டும். தற்போது குருதோலைகள் எவ்விதம் மணப்பாடிற்குள் வருகின்றன, எங்கிருந்து பெற்றுக்கொள்ளுகிறார்கள். பனையேற்றம் இல்லா சமயங்களில் ஓலைகளுக்கான தேவைகளை எப்படி சந்திக்கிறார்கள், இவைகளை ஒருங்கிணைப்பது யார்?  என பல்வேறு கேள்விகள் மனதிற்குள் இருந்தாலும் அப்போது ஒன்றும் வாயில் வரவில்லை. வண்ண கலைக்கூடத்திற்குள் நிற்கும் சிறு பிள்ளைகள் போலவே குதூகலத்துடன் ஆச்சரியப்பட்டுக்கொண்டு நின்றோம். அங்கிருந்த பொருட்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு நிறம், வடிவம், என காணப்பட்ட அனைத்தும்
தனித்தன்மை கொண்டது. ஆரங்கள், மாலைகள், பூக்கள், பூச்செண்டுகள், பூச்சாடிகள், சிறிய மற்றும் பெரிய பெட்டிகள், பென்சில் எடுத்துச் செல்லும் ஓலை பெட்டி, பல்வேறு பயன்பாட்டுக்கான ஓலை பொருட்கள், டிரே, மேஜையில் டீ வைப்பதற்கான ஓலையில் செய்யப்பட்ட சிறிய பாய்கள், குப்பை போடுவதற்கு என ஓலையில் செய்யப்பட்ட கண்ணைப்பறிக்கும் அழகு குப்பைத்தொட்டிகள். இன்னும் எண்ணிலடங்கா பொருட்கள் அங்கே இருந்தன.

ஓலை என்பது பனை மரத்தைப் படைத்தக் கடவுளின் ஆகச் சிறந்த ஒரு வடிவமைப்பு. அதன் வாசனை, அழகு, மென்மை, நேர்த்தி, நெகிழும் தன்மை மற்றும் நீடித்த உழைப்பு யாவும் மகளை அதன் பால் சுண்டி இழுக்கும் வசீகரம் கொண்டது. பனைமரம் குறித்த புராண கதை ஒன்றில், பிரம்மா மனிதனுக்கு உதவும் ஒரு மரத்தைப் படைத்தார் என வரும் பகுதியை வாசித்தபோது எண்ணிக்கொண்டேன், திருவிவிலியத்திலும் மனிதனைப் படைத்தபோது ஏற்ற துணை வேண்டும் என அவர் பெண்ணைப் படைத்தார், இந்திய மனங்களுக்காக கடவுள் பனை மரத்தைப் படைத்திருக்கிறார். உலகின் சரிபாதி இன்னும் பெண்களை தங்களின் சரிபாதி என எண்ணத் தவறிவிடுகிற வேளையில், எஞ்சியிருப்போர் பனையை இலகுவில் புரிந்துகொள்வார்களா என்ன? என்றாலும் பனையின் மேன்மையைச் சொல்லுவதே நமது கடமை. சிறுக சிறுக நாம் முயன்று பார்த்தால், ஒருவேளை பனையோலைப் பொருட்களுக்கு, மிகப்பெரிய சந்தை வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. பனைமரச்சாலையில் நான் எண்ணியபடி இந்த இடத்திற்கு வந்தது மன நிறைவளிக்கும் அனுபவமாக இருந்தது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (83)”

  1. Logamadevi Annadurai Says:

    எத்தனை எத்தனை பனை பொருட்கள்!!!!!1நாங்கள் பெண்கள் அங்கு வந்திருந்தால் கடையை காலி செய்யும் அளவிற்கல்லவா வாங்கி குவித்திருப்போம்!!!!அந்த பனைப்பெட்டியும் அதன் வர்ணமும் கொள்ளை அழகு பாஸ்டர்.
    கோவில்களில் அர்ச்சனைத்தட்டுக்களாக பனைப்பொருட்களை விற்க துவங்கினாலே போதும் பனையின் சந்தப்படுத்தலின் வெற்றி துவங்கிவிடும் ஆதாமிற்கு ஏவாள் போல மனிதனுக்கு பனையை சொல்லி இருகிறீர்கள் அது மிக அழகாக பொருத்தமானதாக இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: