பனைமரச்சாலை (84)


சொக்கன்குடியிருப்பு

பனைமரச்சாலையில் பசி ஒரு பொருட்டல்ல என்பதை எங்களுக்கே எங்களுக்கான நியதியாக வகுத்துக்கொண்டோம். ஹாரீஸ் காலையிலிருந்தே பனைக்குளம் செல்லவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தார். பனைக்குளம் பனைகளால் சூழப்பட்ட ஒரு இடம், விதம் விதமாக படம் எடுத்துக்கொள்ளலாம் என சொல்லிக்கொண்டார். பனையும் குளமும் இணைத்த பெயர், அந்த ஊரையே கற்பனை செய்து கொண்டேன். மிகவும் அழகாக இருக்கும் என்றே தோன்றியது. புகைப்பட கலைஞர்களின் கண்கள் கலைக்கண்கள் இல்லயா?. குளத்தை சுற்றி நிற்கும் பனைமரங்கள் அருகில் நின்று நாம் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுக்கவேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது.

மணி நான்கைத் தாண்டிவிட்டிருந்தது.  இனிமேல் நாம் செல்ல வேண்டிய இடம் சொக்கன் குடியிருப்பு என்றார் அமிர்தராஜ். அமிர்தராஜின் நண்பரின் தோட்டம் அங்கே இருந்தது. நேற்று இரவு சந்தித்த நண்பருடைய அழைப்பின்பேரில் அங்கே செல்லுகிறோம் என்று அமிர்தராஜ் சொன்னார். மறுக்க முடியவில்லை. ஆகவே பனைக்குளத்தை தவிர்த்து சொக்கன் குடியிருப்பு போவதாக முடிவெடுத்தோம். ஆனால் சொக்கன்குடியிருப்பு பனைத் தோட்டம் ஒரு உற்சாக சுரங்கம் என்பதை நாங்கள் அப்போது அறியவில்லை.  எங்கள் இணைந்த பயணம் அத்துணைச் செறிவான ஒன்றாக அமையும் என்பது நாங்கள் கனவிலும் நினைத்திராத ஒன்று.

சொக்கன்குடியிருப்பு போகும் வழியில் ஒரு பெரிய கடையைப்பார்த்து நிறுத்தினோம், அங்கே டீ மற்றும் சர்பத் மட்டும்தான் இருத்தது, வடை ஏதும் இல்லை. பிஸ்கட் வைத்திருந்தார்கள், ஒரு சிலர் டீயும், பிறர் சர்பத்தும் குடித்தோம். சற்று தெம்பு வந்தது.  அங்கிருந்து புறப்பட்டு செல்லும் வழியில் ரோட்டோரத்தில் இருந்த ஒரு பனைக்குடிலைப் பார்த்து நிறுத்தினோம். பனைத்தொழிலாளியின் வீடு தான், பதனீர் கிடைக்குமா என்றோம்? இல்லை என்றார். காலையில் மட்டுமே கிடைக்கும் என்றார்கள். ஜெபக்குமார் “கள்ளாவது வாங்கித்தரக்கூடாதா என்று வேடிக்கையாக” கேட்டார், அதற்கென்ன, அவருக்காக அதையும் கேட்டுப்பார்த்தேன், அதுவும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் கள் கிடைக்குமிடங்கள் இன்றும் உண்டு, ஆனால் அவைகள் இரகசியமாக வைக்கப்படவேண்டிய உண்மைகள். பெரும்பாலும் ஒவ்வொரு பனைத்தொழிலாளியும் தனக்கான சக்தியை கள்ளிலிருந்தே பெறுவார். அது  ஒரு ஊக்க மருந்து போல, சர்க்கரை உடனேயே இரத்தத்தில் கலந்து அவர் செலவளிக்கின்ற உழைப்பை ஈடு செய்யும். ஆனால்,  இன்று மிக எளிதாக  அவர்களைக் கண்டுபிடித்து வழக்கு பதிவுசெய்துவிடுவார்கள்.  பனைத்தொழிலாளி கூட டாஸ்மாக்கில் தான் தனக்கான பங்கை தேடிக்கொள்ளவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

நாங்கள் செல்லும் வழியில் மீண்டும் ஒரு இடத்தில் பனைமரங்கள் வெட்டுண்டு கிடந்தன. அனைவரின் முகமும் கலவர பூமியை கடந்து வந்ததுபோல ஆயிற்று. அமிர்தராஜ் அந்த இடத்தில் நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  ஓரு மெல்லிய  துக்கம் எங்களுள் இழையோடியது. உள்ளூரில் நிகழும் மரணம் போல, ஊரில் முக்கியமான ஒரு பெரியவர் காலம் சென்றதுபோல, மரணம் நிகழ்ந்த தெருவுக்குள் செல்லும் அமைதலோடு இறுதி அஞ்சலி செலுத்தியபடி அந்த இடத்தைக் கடந்துபோனோம். பனைமரங்களின் மரணம், தவிர்க்க முடியததாக பனைமரச்சாலையில் தொடர்ந்து வருவதை வேதனையுடன் கவனித்து வருகிறேன். இதே நிலை நீடித்தால் இன்னும் ஐம்பது வருடங்களில் நம்மால் நினைத்தாலும் மீட்டெடுக்க முடியாத இழப்பு நோக்கி அது நம்மை உந்தி தள்ளிவிடும் என்பதை ஏனோ மறந்துவிடுகிறோம்.

பனை, உயர்ந்த வானம் மற்றும் ஆழக்கடலின் பின்னணியில் பனைமரச்சாலை குழுவினர்

பனை, உயர்ந்த வானம் மற்றும் ஆழக்கடலின் பின்னணியில் பனைமரச்சாலை குழுவினர்

இன்னும் சற்று தொலைவு சென்றபோது எங்களுக்கு முன் சென்ற ஜெபக்குமார், தனது காரை நிறுத்தினார், என்ன என்று விசரித்தால், பனை மரத்தின் பின்னணியில் தூரத்தில்  தெரியும் கடலும் அமைந்த மேடான பகுதி அது. சாலையின் நடுவில் நாங்கள் நிற்க ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஆம் மூன்று புல்லட்டுகள் சேர்ந்து சாலையில் நிற்கும் படத்தை எடுப்பது தேவை என்று சொல்லிக்கொண்டோம்.  நான் அமிர்தராஜ் மைக்கேல் மற்றும் ஹாரீஸ் இணைந்து நிற்கும் அழகிய புகைப்படம் அது. ஒன்றாய்த் துவங்கிய பயணம் இரண்டாய் மூன்றாய்ப் பெருகியது கடவுளின் ஆசி என நிறுவும் சாட்சி அது. இன்னும் பெருகி, பல்லாயிரக்கணக்கான தமிழக மக்களை பனை மர வேட்கைப் பயணத்தில்  ஒன்றிணைக்கும் என்பதன் சாட்சி அது.

ஒரு சிறு தடுமாற்றத்திற்கு பின்பு அமிர்தராஜ் சொக்கன்குடியிருப்பிலுள்ள தனது நண்பரின் தோட்டத்திற்கான வழியை கண்டுபிடித்தார். தோட்டத்தின் முன்பு நாங்கள் சென்றபோது, வாசலிலேயே எங்களை ஒரு வடலி பனை வரவேற்றது.  ஆ னால் அந்த பெரிய இரும்புக்கதவில் ஒரு பூட்டும் இருந்தது. பனை மரத்தின் அருகே நாங்கள் நிற்க, உள்ளிருந்து காவலர் ஒருவர்  மிகப்பெரிய  வெள்ளை மீசையுடன், வெள்ளை வேஷ்டி வெள்ளைச் சட்டை அணிந்து வெளியே வந்தார். அமிர்தராஜ் செல்பேசியில் தனது நண்பனை அழைத்து தோட்டத்தின் முன்பு தான் இருக்கிறோம் எனக் கூறி,  காவலரிடம் கொடுத்தார், அந்த பெரிய கதவு எங்களுக்காக திறக்கப்பட்டது. பனைமரச்சாலையின் உச்சகணத்தின் வாசல் எங்களுக்காக திறக்கப்படுகிறது என்பது அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. திரளான பனைமரங்களும், கொல்லா மாவுகளும் என  கண்களை மயக்கும் ஒரு கனவு தோட்டத்திற்குள் நுழைந்து போல இருந்தது. பனைமரங்கள் மட்டுமே பெருவாரியாக இருக்கின்ற ஒரு தோட்டத்தை அங்கு தான் கண்டேன். நான் நினைத்ததையே ஜெபக்குமாரும் சொன்னார். பனை சார்ந்த ஒரு அழகிய சுற்றுலா மையமாகும் அமைப்பு கொண்டிருந்த தோட்டம்.

பனைமரத்தோட்டம், சொக்கன்குடியிருப்பு

பனைமரத்தோட்டம், சொக்கன்குடியிருப்பு

எங்கள் வாகனங்களைப் பனைமரத்தின் அடியில் நிறுத்திவிட்டு அந்த பனை தோட்டத்தின் அழகில் மூழ்கினோம். பனைக்குளம் எங்கள் எண்ணங்களிலிருந்து பின்நோக்கிச் சென்றது.  நாங்கள் காத்திருக்கையில், தோட்ட காவ லாளி சொன்னார், முதலிலேயே சொல்லியிருந்தால் அனைத்து ஏற்படுகளும் செய்திருப்போமே. ஆனால் எங்கள் பயணத்தில் அது எளிதல்ல, எங்கே நேரம் அதிகமாகும் என்பது எங்களுக்குத் தெரி யாது. ஆகவே தான் அமிர்தராஜ்  அதைக்குறித்து தனது நண்பரிடம் கூட விரிவாக பேசவில்லை என்று நினைக்கிறேன். அனைத்தும் சித்தமானபோது, அந்த காவலாளி எங்களை  அந்த தோட்டத்தின் மிக உயர்ந்த பகுதிக்கு அழைத்துக்கொண்டு போனார்.

தோட்டம் அழகாகத்தான் இருக்கிறது, ஆனால் இங்கே வேறு சிறப்பாக வேறு என்ன இருந்துவிடப்போகிறது என நான் எண்ணியிருக்கக்கூடாதுதான். அந்த எண்ணத்தை புறந்தள்ளும் விதமாக நாங்கள் பார்த்த காட்சி அமைந்திருந்தது.   மாலை ஐந்து மணிக்கு படரும் கண் கூசாத ஒளியில் எங்களை ச் சூழ்ந்திருக்கும் ஒரு பனையுலகை கண்டுகொண்டோம்.  சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனைமரங்களே பிரா தானமாக நின்றன. தூரத்தில் பல கிராமங்களுக்கு நீர் வழங்கும் மிகப்பெரிய புத்தன் தருவைக்குளம் கடல் போல் விரிந்து கிடந்தது. சுற்றுவட்டாரத்திலேயே மிக மே டான ஒரு பகுதியில் நின்று இயற்கை வண்ணந்தீட்டிய வானத்தையும் பனைமரங்கள் உருவக்கிய கரும்பச்சை காட்டையும் பார்த்துக்கொண்டிருந்தோம். கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும்  கிடைக்காத பேரனுபவம் அது. பனைமர உச்சியில் இருக்கும் ஒரு சிலிர்ப்பு எங்கள் அனைவருக்குள்ளும் கண நேரத்தில் பரவியது. வானமளவு உயர்ந்து நிற்பது போல நாங்கள் நின்ற இடம் உயர்ந்து இருந்தது. ஓரு புகைப்படம் எடுத்தால் முக்கால் பங்கிற்கு அதிகமாக வனமே தெரியும்படியான அழகிய நிலக்காட்சி. சொல்லிழந்து, பேச்சிழந்து, மெய்மறந்து அந்த மாபெரும் இயற்கை காட்சி முன்பு எளியவர்களாக நின்றிருந்தோம். வேகமாக வீசிய குளிர்ந்த காற்று எங்கள் சோர்பை எல்லம் பிடுங்கி வீசி ஏறிந்தபடி சென்றது, தறிகெட்ட ஒரு பேருவைகை எங்களை ஆட்கொண்டது.

சொக்கன்குடியிருப்பு தோட்டத்திலிருந்து

சொக்கன்குடியிருப்பு தோட்டத்திலிருந்து

அந்த காவலர் எங்களிடம் சொன்னார், இதற்கே நீங்கள் அசந்துபோனால் எப்படி, இன்னும் அழகிய காட்சிகள் இருக்கிறது வாருங்கள் என்று. சில நேரம் நாம் தான் சிலரை தவறாக எண்ணிவிடுகிறோம். அந்தக் காவலாளி  மிக உயர்ந்த ரசனை உள்ளவராக இருக்கிறார் என்பதை அந்த நாளில் நான் அறிந்து கொண்டேன். ஒரு தேர்ந்த சுற்றுலா தலத்தின் வழிகாட்டிபோல அவர் செயல்பட்டார். மிக முக்கிய பகுதிகளையே அன்று அவர் எங்களுக்கு காண்பித்தார் எனவும், அவரோடு பேசினால், இன்னும் அனேக பல தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தோன்றியது.  தோட்டத்தின் மறு வாசலுக்கு செல்லும் பாதை வேறு மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கம் பள்ளம் என செம்மண் பாதை வளைந்து நெளிந்து செல்லுவது, மனது கூச்செறியும் அழகிய காட்சி. பனைமர பித்து கொண்டவன் ஒருவன் இங்கு வருவானென்று சொன்னால், இந்த மண்ணே எனக்கு போதும் என ஏங்கி இங்கேயே தங்கிவிடுவான். ஆனால் அங்கிருந்த ஒரு கணம் கூட அந்த இடத்திற்கான திட்ட வரைவுகள் ஏதும் என் மனதில் உதிக்கவில்லை, அந்த அளவிற்கு, அப்பகுதியின் அழகு என்னைக் கட்டிபோட்டது. சொக்கன் குடியிருப்பு என்பதற்கு சிவ பெருமான் குடியிருக்கும் இடம் என்பதே பொருள். சொக்கன்குடியிருப்பு, சொக்க வைக்கும் அழகுடனேயே இருந்தது.

அவர் எங்களைத் தோட்டத்தின் மேற்குப் பகுதிக்கு அழைத்துச் சென்றபோது இதை விட பெரிதாக என்ன பார்க்கப்போகிறோம் என்றே எண்ணத்தோன்றியது. ஆனால் அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் கடல் தெரிந்தது. ஓரு புறம் அழகிய நன்னீர் ஏரி, மற்றொருபுறம் வங்காள விரிகூடா, விரிந்து பரந்து இருந்தது.  நாங்கள் காண்பது கனவா இல்லை நனவா என கிள்ளிப்பார்த்துக்கொண்டோம். ஜாஸ்மினுடைய தம்பி என்னை ஒரு முறை மிடாலம் கடலுக்கு அருகில் உள்ள ஒரு தோப்புக்கு அழைத்துச் சென்றான்.  பனை மரங்கள் அதிகம் இருக்கும் இடம் என்று அந்த இடத்தை குறித்துச் அவன் சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால் நாங்கள் அங்கே சென்றபோது ஒரு சேர பனை மரங்களையும் அரபிக்கடலையும் பார்த்தோம். அதற்கு இணையான தருணம் இது.  ஓருவரை ஒருவர் பார்த்து கண்கள் விரிய சிரித்தோம். பித்தேறும் மனநிலையில் தான் அனைவரும் இருந்தோம். ஹாரீஸ் கூட பனைக்குளத்தை மறந்திருப்பார் என உறுதி கொள்ளலாம்.

ஆனால் ஜெபக்குமார் மற்றும் அமிர்தராஜின் பத்திரிகையாளர் கண்ணுக்கு அப்பகுதியில் நடைபெறும் சுரண்டலும் தென்பட்டது. செம்மண் கொள்ளை நாங்கள் நின்ற இடத்திற்கு அருகில் உள்ள தோட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.  வெறும் மூன்று அடி அளவு மண் மட்டுமே எடுக்க அனுமதி பெற்றுக்கொண்டு 30 அடிக்கும் அதிகமாக மண்ணைச் சுரண்டியிருக்கிறார்கள். அது அங்கே நின்ற பல பனை மரங்களை காவு வாங்கியிருக்கிறது. ஆம், பெற்ற மண்ணைச் சுரண்டும் மனநிலை மனிதனுக்குள் எப்போதோ நுழைந்துவிட்டது. இந்த காட்சியால் நாங்கள் உற்சாகம் வடிந்து சமநிலைக்குத் திரும்பினோம். காவலர் விடுவதாக இல்லை. அய்யா இன்னும் ஒரு இடம் இருக்கிறது, வாருங்கள் வேகமாக செல்லலாம் என்றார்.

நாங்கள் திரும்பி,  தோட்டத்தின் வாசலுக்கு வந்தபோது மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. குலை குலையாக நுங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்தது, ஒருவர் அவைகளை சீவிக்கொண்டு இருந்தார், என்ன ஏது என்று புரிந்து கொள்வதற்குள் எடுத்து சாப்பிடுங்கள் உங்களுக்குதான் என்றார்கள். அனைவரின் பசிக்கணமும் விழித்தெழுந்தது. இதற்காகவே பட்டினி கிடக்கலாம் என்று தோன்றியது. ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தோம், பெருவிரல் நகக்கண்கள் வலிக்குமளவு நான் சாப்பிட்டேன், ஜெபக்குமார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று திரும்பியவர், நுங்கில் பாதி வாய்க்குள்ளும் மீதி அவரது சட்டைக்குள்ளும் சென்றது. நுங்கு சாப்பிடுவதும் ஒரு கலை தான். நுங்கின் மீது,  மாறாக் காதல் கொண்டு, இருகரங்களாலும்  முகத்திற்கு நேரே எடுத்து உதடுகள் விரித்து அழுத்தி கொடுக்கு பிரஞ்சு முத்தமே, சரியான வகையில் நம் அதை கையாளும் மந்திரம். இல்லையென்றால், கை மூட்டுவழி, கன்னத்தின் வழி அதன் நீர் ஓடி சொட்டி நம்மை நனைத்துவிடும். உதடு மற்றும் பெருவிரல் தவிர மற்ற  எதுவும் ஈரமாகக்கூடாது எனப்து தான் நுங்கு குடிக்கும் போது உள்ள சவால். பல்வேறு போட்டிகள் வைப்பது போல நுங்கு தின்னும் போட்டியும் ஒன்று வைக்கலாம். நனையாமல் நொங்கெடுக்கும் போட்டி.

பசியாறி களைப்புமாறி இருக்கையில், காவலர் எங்களை மீண்டும் அழைத்தார், வாருங்கள் அடுத்த இடத்திற்கு போகவேண்டும். இனிமேல் என்ன இருக்கப்போகி றது என நினைத்து அவரைத்தொடர்ந்தோம். ஓரு நூறு மீட்டர் தொலைவுக்கு நடந்துபோய், மீண்டும் ஒரு தனி யாருக்கான தோட்டத்திற்குள் அவர் நுழைந்தார். சிறிய தோட்டம், தோட்டத்தில் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அழகாக பேணப்பட்டுமிருந்தது.  சாலையிலிருந்து மேடேறி செல்லும் சரிவில் இருந்தது. மேட்டில் ஏறும் வரை என்ன பார்க்கப்போகிறோம் என எங்களுக்குத் தெரியாது ஆனால் மேடு முடிந்தபின்போ நாங்கள் கண்டது ஒரு காவிய தாடகம்.

மனதை மயக்கும் குளத்தின் அருகில், சொக்கன்குடியிருப்பு

மனதை மயக்கும் குளத்தின் அருகில், சொக்கன்குடியிருப்பு

ஆம் தோட்டத்தின் உச்சியிலிருந்து நாங்கள் பார்த்த அதே குளம் தான் ஆனால் குளத்தினுள் பனை மரங்கள் செழிப்பாக நின்றுகொண்டிருந்தன. தண்ணீர் சிறு அலையாக வந்து பனைமரங்களின் பாதங்களை வருடிச்சென்றது. பனைமரத்தின் கெண்டைக்கால்கள் வரை, முழங்கால் வரை கூட நீர் நிறைந்து இருந்தது. தண்னீருக்குள் பனை மரம் இருக்கும் அழகை யாராலும் பார்த்துத் தீர இயலவில்லை. இங்கேயே தங்கிவிடலம் என்று தான் அனைவருமே எண்ணினோம். ஆனால் அனைவருக்கும் கடமைகள் இருந்ததால் எங்களால் அங்கே அன்று தங்க முடியவில்லை. கண் குளிரும்படி நீர்நிலையைப் பார்த்தபடி அங்கிருந்தோம்.  சிறு பேச்சு பேசி சிரித்தோம், வாழ்வில் என்றும் மறக்க இயலா உச்சக்கட்ட தருணமாக  எங்களை நெகிழ்வாக்கிக் கொள்ள உதவும் கணமாக அது இருந்தது.

தோட்டத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கே எங்களின் அடுத்த திட்டம் என்ன என ஜெபக்குமார் கேட்டார்கள். அவருக்கு அடுத்த கட்ட நிகழ்ச்சிக்குப் போகவேண்டும். ஹாரீசும் மைக்கேலும் கூட வேறு திட்டம் வைத்திருந்தார்கள். பிரியும் நேரம் என்பதை உணர்ந்தோம், எங்கள் கனத்த உணர்ச்சிகள் வெளியே தெரியாதபடி சூரியன் தன்னை மறைத்துக்கொண்டான். இருள் கவ்வியது. நானும் அமிர்தராஜுமாக மீண்டும் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (84)”

  1. Logamadevi Annadurai Says:

    மிக அருமை பாஸ்டர். உங்களை அறியாமலேயே இந்த பயணம் நிறைவுறும் வேளையில் பனையைக்குறித்த positive ஆன எத்தனை காட்சிகளும் விஷயங்களும் தொடர்ந்துவருகின்றன கவனித்தீர்களா?
    3 பைக்குகளில் நீலப்பிண்ணனியில் பனைகளும் நீங்களும் இருக்கும் இந்த படத்தையே பனைமரச்சாலை புத்தகமாக வெளிவருகையில் முன்அட்டையிலோ அன்றி பின்னட்டையிலோ அச்சிட்டு விடலாம். நீருக்குள் வளர்ந்திருக்கும் பனைகளின் அருகில் நண்பர்களாய் இருந்து மகிழ்ந்து சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படமும் மிக அருமை
    சொக்க வைக்கும் பதிவுதான் இதுவும்!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: