பனைமரச்சாலை (85)


காவல்கிணறு

பனைமரச்சாலையில் நானும் அமிர்த்தராஜும்

பனைமரச்சாலையில் நானும் அமிர்த்தராஜும்

அமிர்தராஜும் நானும் இணைந்து அந்த இருண்ட சாலையில் பயணித்தோம். ஒரு இடத்தில் வந்தவுடன், பாஸ்டர் இனிமேல் ரோடு கொஞ்சம் மோசமாக இருக்கும் என்றார். காவல் கிணறு தான் அமிர்தராஜுடைய சொந்த ஊர். ஆகவே, அங்கே சென்றுவிட்டு நான் உங்களுக்கு வழிகாட்டுவேன், நீங்கள் அங்கிருந்து கன்னியாகுமரி செல்லலாம் அல்லது என்னுடனே தங்கிக்கொள்ளுங்கள் என்றார். நான் இல்லை இன்றிரவே நான் கன்னியாகுமரி செல்லவேண்டும் என்றேன்.  அப்படியானால் நான் நாளை காலை உங்களோடு சேர்ந்து கொள்ளுவேன் என்றார். திட்டம் உறுதியானது. உடைந்து நொறுங்கியிருந்த சாலைகளில் மெதுவாக பயணித்தோம். காவல் கிணறு வருவதற்கு இன்னும் இருபது கிலோ மீட்டரே இருக்குமிடத்தில் பெட்ரோலுக்காக நிறுத்தினோம். சற்று ஓய்வு தேவைப்பட்டதால் இளைப்பாறி செல்லலாம் என யோசித்தோம். நான் அழைக்கவேண்டியவர்களை எல்லாம் அழைத்து அருகில் வந்துவிட்டேன் எனக் கூறினேன். ஒழுங்கு செய்ய வேண்டியவைகள் அனைத்தும் ஒழுங்காய் இருக்கிறதா எனக் கேட்டு சரிபார்த்தேன்.

அப்போது அங்கே பெட்ரொல் நிரப்பும்படியாக வந்த இரண்டு இளைஞர்கள் எங்களைப்பார்த்து ஆச்சரியப்பட்டு பேச்சுக்கொடுத்தார்கள். பனைமரங்களின் நிலை அறிய மும்பையிலிருந்து பயணம் செய்கிறேன் அமிர்தராஜ் சென்னையிலிருந்து என்னுடண் இணைந்திருக்கிறார் என்றேன். எங்கள் ஊரிலும் பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது, என்றார்கள். கிடைத்த தருணத்தை வீணாக்காமல் பனை மரத்தின் அருமை பெருமைகளைக் கூறி காப்பாற்ற முயற்சியை மேற்கொள்ளுங்கள் எனக் கூறினோம். திட்டமிடாமலேயே இப்படி ஒரு நிகழ்வினை நிறைவு செய்ய முடியுமென்றால் திட்டமிட்டு, மக்களைக் கூட்டி பனை காக்கும் முயற்சியை மேற்கொண்டால் அது பெருந்திரளான மக்களைச் சென்றடையும் இல்லையா என யோசித்தேன்.

அமிர்தராஜ் கிளம்புவோம் என்றார். அதில் ஒரு உறுதி தெரிந்தது, வரவேற்புக்கான திட்டங்களை அதற்குள் ஒழுங்குபடுத்திவிட்டாரோ?. மெல்ல பயணித்து காவல் கிணறுக்கு இன்னும் மூன்று கிலோமீட்டர்களே இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி, ஏ டிஎ ம் மிலிருந்து எனக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொடுத்தார். அப்புறம் தான் சொன்னார், காவல்கிணறில் உங்களுக்கான வரவேற்பு அளிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள், நீங்கள் முன்னால் செல்லுங்கள் என்றார். இதுவும் பயண திட்டத்தில் இல்லாதது. எங்கள் பயணத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் இடம் மாறிக்கொண்டே வந்தது, நாங்கள் எப்போது காவல்கிணறு வருவோம் என்பது எங்களுக்கே தெரியாத உண்மை. நான் திட்டமிடுகையில் கூடங்குளம் அருகிலுள்ள இடிந்தகரை வழியாக பயணிக்கவேண்டும் என்றே எண்ணியிருந்தேன். மாலை ஆறரை அல்லது ஏழு மனிக்குத்தான், நாங்கள் காவல்கிணறு நோக்கி புறப்படுகிறோம் என்பதே உறுதியானது. அதற்குள் எப்படி, ஒரு வரவேற்புக்கான ஆயத்தம் செய்தார்கள்? புரியவில்லை. அமிர்தராஜுடைய ஏற்பாடு தான் என நினைத்துக்கொண்டேன்.

நான் காவல்கிணறு வந்தபோது மூன்று வாலிபர்கள் எனது வகனத்தை பேருந்து நிழற்குடை அருகில் ஓரங்கட்டினர். இருபதிற்கும்  அதிகமான ஆண்கள் கூடியிருந்தனர். நான் ஆச்சரியப்படும்படியாக கத்தோலிக்க திருச்சபையின் பங்கு தந்தையும் வந்திருந்தார்கள். பங்கு தந்தை எனக்கு சால்வையிட்டு ஆரத்தழுவி அணைத்துக்கொண்டார். இளைஞர் மன்றம் சார்பில், இன்னும் பல்வேறு நபர்களும் சால்வை அணிவித்தனர். அங்கு கூடியிருந்தது பெரும்பாலும் கத்தோலிக்கத் திருச்சபையைச் சார்ந்த இளைஞர்கள். பங்குதந்தை குறிப்பிடும்போது, காவல் கிணறு இளைஞர் மன்றம் தான் இன்று என்னை இங்கு அழைத்து வந்தனர். குறிப்பாக தம்பி கிறிஸ்டோபர் அனைத்து பொறுப்புகளையும் முன்னெடுத்து இளைஞர்களை ஒருங்கிணைத்தார், ஆகவே இளைஞர்களுக்கான உரையை  ஆற்றுங்கள் என்றார். ஒரு பங்கு தந்தையின் ஆகச்சிறந்த முன்மாதிரியாக அவர் காணப்பட்டார். இளைஞர்களை ஒன்றிணைப்பது சுலபமல்ல. பொங்கி பிரவகிக்கும் அவர்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவது சாத்தியமும் அல்ல, ஆனால் அற்பணிப்போடு இருக்கிறவர்களுக்கு அது கைகூடும் என்பது, எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

நான் பேசியபோது, தமிழக மாநில மரமாகிய பனைமரம் சமய அளவுகோலின்படி கிறிஸ்தவர்களுக்கும் முக்கியமான ஒரு மரம். இஸ்ரவேலர் எகிப்தியர் கைக்கு தப்பியோடி பாலும் தேனும் ஓடுகின்ற கானானைத் தேடிச் செல்கையில் அவர்கள் இளைப்பறிய இடம் ஏலிம் என அழைக்கப்படுகிறது. அங்கே தான் 70 பேரீச்சை மரங்களை இஸ்ரவெலர் காண்கின்றனர். அங்கே 12 நீரூற்றுக்களும் இருந்தன. ஏழு அல்லது எழுபது எனும் வார்த்தைகள் திருமறையில் பயன்படுத்தப்படும்பொழுது முழுமையான எனம் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறதைக் காண்கிறோம். அப்படியானால் பேரீச்சை மரங்கள் ஒரு முழுமையான வாழ்விற்குச் சான்றாக ஏலீமில் நின்றிருக்கின்றன என்பதை காண்கிறோம். 12 நீரூற்றுகள் என்பது ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் தனித்துவமான இடங்களை பெறும்படி மோசேயால் செய்யப்பட்ட ஒரு ஒழுங்கு என்பதை நாம் அறியலாம்.

எப்படி  இஸ்ரவேலருக்கு பேரீச்சை மரங்களோ அது போலவே நமக்கும் பனை மரங்கள் முக்கியமனது. நமது உணவிற்கான வேட்கையில், கலாச்சாரத்திற்கான வேட்கையில், இயற்கையோடு ஒன்றித்த வாழ்விற்கான வேட்கையில், பனைமரம் முதன்மையாக நம்முன்னால் நிற்கிறது. ரோம அரசிலிருந்து  தமக்கு விடுதலை வேண்டும் என கொடும் வரிகளினால் துன்புற்றிருந்த யூத மக்களே, குருத்தோலைகளைப் பிடித்து இயேசுவுக்கு எதிர்கொண்டு போனார்கள். விடுதலை பெறவேண்டி  வந்தவர்கள் அனைவருமே இயற்கையோடு வாழ விழைந்தவர்கள் தாம், ரோம அரசோ அதை உணராமல், சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தது. சமய தலைவர்கள் தங்களுக்கான வருமானங்களைப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.  ஆகையினால், இயேசு தனது பணி மக்களைச் சர்ந்தது மாத்திரம் அல்ல முழு படைப்பையும் உள்ளடக்கியது என உணர்ந்து எருசலேமைப் பார்த்து கண்ணீர் உகுக்கிறார். ஆனால் ஆன்மீக தலைமை பீடமான எருசலேமோ சுரண்டலினால் கொழுத்து, எப்போது யாரை பலிகொள்ளலாம் எனக் காத்திருக்கிறது.

நாம் இன்று கொண்டாடுகிற குருத்தோலை பவனிக்குப்பின்னால் இயேசுவை முன்னிறுத்தி நின்ற பேரீச்ச மர தொழிலாளிகள் நமம்து மனக்கண் முன் விரிகிறார்கள். திருச்சபை, இயேசுவோடு நின்றவர்களை விடுத்து, பரபாசோடு சேர்ந்துகொள்ளுகிற ஒரு காலகட்டத்தில் நாம் வாழுகிறோம். இன்றைய நமது குருத்தோலை பவனிகளை எண்ணிப்பாருங்கள். குருத்தோலைகளிலான அலங்காரம் நம்மை சுற்றியிருக்க, களிப்புடன் நாம் குருத்தோலை பண்டிகையைக் கொண்டாடுகிறோம், எப்போதாவது, பனைத் தொழிலாளிகளை நாம் குருத்தோலை ஞாயிருடன் தொடர்புபடுத்தி பார்த்திருக்கிறோமா? குருத்தோலை பண்டிகையை களிப்புடன் கொண்டாட நமக்கு ஓலை தரும் நபரை மறந்து விட்டு நாம் கொன்டாடும் குருத்தோலை ஞாயிறு எவ்வகையில் பொருளுள்ளதாக முடியும். சமூகத்தின் கடை மட்டத்தில் இருந்த பெரீச்சை மரம் சார்ந்து வழும் மக்களுடன் இயேசு இருந்திருக்கிறார் எனும்போது, பனைத்தொழிலாளிகளுடன் நாமும் கைகோர்ப்பது அவசியமில்லையா?

திருச்சபையில் பனை மரங்கள் இல்லாத போது, குருத்தோலை பவனி செல்லுவது, திருச்சபை மீண்டும் ஒருவித சுரண்டலை முன்னெடுக்கிறது என்பதற்கு அடையாளம். திருச்சபை வளாகங்களில் குருத்தோலை ஞாயிறு அன்று ஒரு பனைமரக் கன்றாவது நடுவோம். குளக்கரைகள் ஏரிக்கரையோரங்கள் மற்றும் தரிசு நிலங்களில் பனை மரத்தினை வளர்ப்போம். என்று கூறிவிட்டு நான் எடுத்துச் சென்றிருந்த ஓலைப்பொருட்களை காண்பித்தேன். ஓலைகளுக்கான பயிற்சியளித்து மக்கள் பொருளுள்ள ஒரு குருத்தோலை ஞாயிறை அனுசரிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் எனக் கோரினேன்.

இன்று நம்முன்னால் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கு கேள்வி யார் பனை ஏறுவார் என்பது, அந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன், நம்மிடம் இருக்கும் ஓலைகளை பயன்படுத்த முயற்சிப்போம். குருட்தோலை ஞாயிறு பனையையும் மானுடத்தையும் இணைக்கும் ஒரு தன்னிகரில்லா நாளாக நாம் கோண்டாட முயற்சிப்போம். அதுவே சிறந்த வழியாக நம்முன்னால் இருக்கிறது. இன்று எஞ்சி இருக்கின்ற ஓலைகளையும் நாம் பயன்படுத்த தவறிவிட்டோமென்று சொன்னால், பிற்பாடு நாம்மால் ஒருபோதும் மீளமுடியாத இருளுக்குள் சென்று விடுவோம்.

ஏன் கிறிஸ்தவம் குறித்து மட்டும் பொது இடத்தில் நின்று பேசுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம், நான் அடிப்படையில் ஒரு போதகர், என்னை வரவேற்றதும் ஒரு கிறிஸ்தவ பாதிரியார், இருக்கும் இடத்தை தூய்மையாக்குவதே நாம் செய்யத்தக்க சிறந்த பணி. அதுவே நம்மை பண்படுத்தும் ஆயுதமக கொள்ளவேண்டும், நம்மை மறைத்து பிறறைக் குற்றப்படுத்துவது ஒருபோதும் நமக்கு உதவாது. பனை சார்ந்த தொழில் மீண்டுவர திருச்சபை தனது கரங்களை நீட்டட்டும், திருச்சபை ஒரு முன்மாதிரியாக திகழட்டும், குருத்தோலை ஞாஉரு அன்று ஓலைகளை நிரம்ப பயன் படுத்துங்கள்; அப்படியே, பெரிய வெள்ளியன்று பனையோலை பட்டையில் கஞ்சியை கொடுக்கும் பரம்பரியத்தையும் விடாதீர்கள். ணன் மும்பையில் இருக்கும் ரசாயனி என்ற பகுதியில் நானே ஓலைகளை சேகரித்து திருச்சபையினர் பனம்பட்டையில் கஞ்சி குடிக்க ஏற்ற வழிவகை செய்தேன். அது நம்மால் கூடுவது தான்.  என்னையும் எனது பயணத்தையும் பொருட்டாக கருதி கூடிவந்திருக்கிற ஒவ்வொரு இளைஞர்களுக்கும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன், குறிப்பாக தம்பி கிறிஸ்டோபருக்கும் பங்கு தந்தை  அவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

நான் பேசி முடிந்தபோது பங்கு தந்தை சொன்னார்கள், மிக முக்கியமான திருமறை சார்ந்த அவதானிப்புகளைக் கூறியிருக்கிறீர்கள், திருச்சபை ஏன் பனை மரத்தை காக்க களமிறங்கவேண்டும் என நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.  நாங்கள் இதுவரை பெரியவேள்ளி அன்று கஞ்சியை பட்டையில் ஊற்றி வழங்கும் பாரம்பரியத்தை நிறுத்தவில்லை, ஆனால் இனிமேல் பொருளுணர்ந்து அதை தொடருவோம், ஆயினும், குருத்தோலை பண்டிகை அன்று பனைத்தொழிலாளிகளை கவுரவிக்கும் விதமாக ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணுகிறேன், கண்டிப்பாக முயற்சிகள் எடுப்போம் என உறுதி கூறினார்கள். மேலும், கருப்படி சார்ந்த இனிப்புகளை குருத்து ஞாயிறு அன்று வழங்கவும் திட்டமிடலம் என்று நினைக்கிறேன் என்றார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபை, இந்திய கலாச்சாரத்தை பேணுவதில் கிறிஸ்தவத்திற்குள் முதன்மை இடம் வகிக்கிறது. பெரும்பாலும் அவர்களின் திருவிழாக்கள் உள்ளூர் பழக்கவழக்கங்களின் நீட்சி தொடருவதைக் காணலாம். பிற கிறிஸ்தவர்கள் பாரம்பரியங்களைக் கைவிட வேண்டும் என்று சொல்லும்போது, மரபிலிருந்து  துண்டித்து புதிய சடங்குகளை மேற்கொள்ளுவதையே குறிப்பிடுகிறார்கள் என நாம் புரிந்து கொள்ளலாம். கத்தோலிக்க திருச்சபை, பனை மரத்தினைக் காக்கும் முயற்சியை முன்னெடுத்தால், அது மிகப்பெரிய தாக்கத்தை சீர்திருத்த திருச்சபைக்குள் ஏற்படுத்தும் என நான் உள்ளூர நம்புகிறேன்.

கிறிஸ்டோபர், தனது நண்பர்களை அழைத்து, குளத்தின் ஓரத்தில் பனை விதைகளை நடுவதைக் குறித்து பேசினார். இத்தனை அருமையான ஒரு மாற்றத்திற்கான களம் அங்கிருக்கும் என நான் சற்றும் நினைக்கவில்லை. ஓரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல, தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு சிறு கூட்டமாக காவல்கிணறு இளைஞர்கள் எனது கண்களில் ஒரு நம்பிக்கை கீற்றாக தென்பட்டார்கள்.

வெம்பாரிலும் இங்கும் எனக்கு இடப்பட்ட சால்வைகள் வைக்க என்னிடம் இடம் இல்லை, அமிர்தராஜிடம் அவைகளைக் கொடுத்துவிட்டேன். என்னைப்பொறுத்தவரையில், சால்வைகள் மற்றும் மாலை மரியாதைகள் மீது எனக்கு எந்த பெரிய கவர்ச்சியும் கிடையாது, அவைகளினின்று ஒதுங்கி ஓடவே நான் முயற்சிப்பேன், ஆனால், பனமரச் சாலையில், மாலைகளோ, அல்லது சால்வைகளோ முக்கிய கூறியீடாக விளங்குகிறது. அவைகள் தனிமனிதருக்கான சால்வைகள் அல்ல, பனைத்தொழிலாளர்களை  முன்னிறுத்தும், பனை மரங்களை காப்பாற்ற முயலும் ஒரு சமூகத்தின் உணர்வெழுச்சிகள். இதுவரை கொடுக்கத்தவறிய மரியதைகளுக்கான பரிகாரம். எங்களையும் இப்பணியில் இணைத்துக்கொள்ளுகிறோம் என மனமுவந்து முன்வரும் அற்பணிப்பு என்பதாகவே ஏடுத்துக்கொள்ளுகிறேன்.

நான் அங்கிருந்து  புறப்படும்போது ஒரு நாற்பத்தைந்து  வயது மதிக்கத்தக்க மனிதர் என்னிடம் வந்து, நீங்கள் மெதடிஸ்ட் போதக ராக மும்பையில் இருக்கிறீர்களா? அப்படியானால் போதகர் ரெத்தினமணி ஐயா அவர்களை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் அவர் மெதடிஸ்ட் தமிழ் போதகர்களில் மூத்தவர் மற்றும் எனது மாவட்ட கண்காணிப்பாளராக இருக்கிறார் என்றேன். அப்போது அவர், முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, எனது அம்மா, போதகர் ஹாரீஸ் அவர்களின் வீட்டில் உதவி செய்வதற்கக சென்றிருந்தார்கள், அப்போது நானும் உடனிருந்தேன் என்றார்கள். ஆச்சரியமாக இருந்தது. மெதடிஸ்ட் திருச்சபை ஏதாகிலும் ஒன்றை சந்திக்கவேண்டும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் மெதடிஸ்ட் திருச்சபையின் தொடர்புடைய அந்த மனிதரைக் கண்டபோது மனம் நெகிழ்ந்து விட்டது.

இரவு மணி ஒன்பதரையைக்  நெருங்கிக்கொண்டிருந்தது, அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறி விடை பெற்றோம். அமிர்தராஜ்    என்னை காவல்கிணறு நாற்கர சாலையில் கொண்டு விட்டார். நேரே போனால் நீங்கள் கன்னியாகுமரி போகமுடியாது, அஞ்சு கிராமம் அருகே நீங்கள் திரும்பி கன்னியாகுமரி சாலையைப் பிடிக்கவேண்டும் என்றார். எனக்கு அஞ்சுகிராமம் மிக நன்றாக தெரியும், நீங்கள் கவலைப்படாதீர்கள். நாளைக் காலையில் மறக்காமல் வந்துவிடுங்கள், எனக் கூறி விடைபெற்றேன். வண்டி வழியில் ஏதும் பிரச்சனை செய்யுமா என தெரியாது, கடைசி கணத்தில் எதுவும் தவறாகிவிடக்கூடாது என வேண்டுதல் செய்தபடி  தனித்த எனது பயணம் தொடர்ந்தது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (85)”

 1. Logamadevi Annadurai Says:

  திட்டத்மிட்டு தொடர்ந்த பயணத்தில் திட்டமிடாத சந்திப்புகள், வரவேற்புகள், நம்பிக்கைகள், உதவிகள்!!! where there is will there is a way!!!
  பனை சார்ந்த ஆன்மீக பயணம் என்பதால் இறையருளும் வருகின்றது உங்களுடன் பாஸ்டர்.
  உங்களுக்கு நேரடியாக தரப்படும் அனைத்து பராட்டுக்களும் பெருமைகளும் உண்மையில் பனைக்கான மறைமுக பாராட்டுக்களே!!!
  இளைஞர்கள் முன்னிலையில் பனை குறித்தும் கிருஸ்தவம் குறித்தும் நீங்கள்ஆற்றிய எழுச்சி உரை கட்டயாமாக பலம் அளிக்கும்
  இனியாவது குருத்தோலை ஞாயிரு வெரும் சடங்காக இல்லாமல் பனையின் வளர்சிக்கும் பனைத்தொழிலாளர்களின் வாழ்வு மேம்பாட்டிற்குமான வழிகாட்டும் திருநாளாகட்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: