பனைமரச்சாலை (86)


இறுதி இரவு

அந்த இரவு பயணம் மிகவும் தனித்தவனாக உணர்ந்தேன். இந்த நாளில் தான் எத்தனை எத்தனை சம்பவங்கள் நடந்துவிட்டன? கடவுளின் அருளின்றி இத்தனை பன்முகப்பட்ட அறிதல்கள் ஒரே நாளில் சாத்தியமாகாது. காலை முதல் உடனிருந்த ஹாரீஸ், மைக்கேல் இருவரையும் நினைத்தேன், மகிழ்ச்சியை மட்டுமே எங்கள் பயணத்தில் வாறியிறைப்பதற்காகவே வந்தவர்கள் அல்லவா அவர்கள். ஜெபக்குமர், தனது முக்கிய பணிகளுக்கிடையில், எனது பயணத்தை உயர்த்திப்பிடிக்க எடுத்துக்கொண்ட அத்தனை சிரமங்களையும் நான் அறிவேன். உள்ளம் நிறைந்து ததும்பியது. அமிர்தராஜ் இன்றி நான் இல்லை எனும் அளவிற்கு இப்பயணத்தில் அவன் எனக்காக செய்தவைகள் அனைத்தும் கண்களின் முன்னல் வந்து சென்றன.  அனைத்தையும் நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்கொள்ளும் ஆற்றல் அவரிடம் இருந்தது, சிறுமையைக் கண்டு சினம் கொண்டு பொங்கும் அறச்சீற்றமும் காணப்பட்டது. அமிர்த்தராஜ் மட்டும் இல்லையென்று சொன்னால் எனது பய்ணமே மிக தனித்ததாக ஆகியிருக்கும், அதை விரிவாக்கவேண்டும் எனும் எண்ணம் என்னுள் நுழைந்திருக்காது. பனைமரச்சாலை ஒரு போராட்ட வடிவமாக மாறியதில் அமிர்தராஜின் பங்களிப்பு முக்கியமானது.

எவரும் இல்லாத அந்த சாலையில் இரவுப்பொழுதில் தனியாக பயணிப்பது சுகமாக தான் இருந்தது. பல்வேறு நினைவுகள் என்னை சூழ்ந்து மோதியது. எவைகளைப் பார்த்தேன், யாரோடு பேசினேன் என்ன கற்றுக்கொண்டேன், இனிமேல் என்ன செய்யப்போகிறேன் என ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கடுக்கான நினைவுகள் அலைபோல எழுந்த வண்ணம் இருந்தன. நான் கடந்துவந்த பாதைகளை எண்ணிப்பார்க்கும் போது, நான் திட்டமிட்டவைகளை விட மிக அதிகமக விளைவுகளை அது எனக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை அறிந்தேன். எண்ணிப்பார்த்திராத அளவிற்கு நண்பர்களை சேகரித்திருக்கிறேன். பனை மரத்தை முன்னெடுக்கும் பணியில், நான் கண்டிப்பாக முன்னகர்ந்திருக்கிறேன் என்பது மனநிறைவளிப்பதாக இருந்தது.

திடீரென பின்னால் இருந்து யாரோ ஒலியெழுப்பும் சத்தம் கேட்டு மீண்டும் நினைவுக்கு வந்தேன். கனவிலிருந்து விழித்தெழும் கணம் போலவே அது இருந்தது.  காவல்துறையில் பணியாற்றும் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் என்னை தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். என்ன என்று கேட்டேன், வண்டியை ஓரமாக நிப்பாட்டுங்கள் என்று சொன்னார். வண்டியை நிறுத்தினேன், எனது பை சற்று சரிந்திருப்பதாகவும், எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்துவிடும் போல காணப்பட்டதால், ஆகவே அதை நேராக வைத்துவிட்டு செல்லுங்கள் எனக்கூறி எனக்கு உதவி செய்தார்கள். மேலும் நான் எங்கிருந்து வருகிறேன் என கேட்டார்கள், எனது பயணத்தின் நோக்கத்தைச் சொன்னபோது, மிகவும் மகிழ்ந்துபோய், தனது தொலைபேசி எண்ணை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள், வழியில் ஏதேனும் உதவி தேவை என்று சொன்னால், கண்டிப்பாக அழையுங்கள் நான் இருக்கிறேன் என்றார்கள். காவல்துறை எனது நண்பன் என்ற வாசகம் என்னுள் மினிச் சென்றது. அவர், தனது ஊர் வந்தபோது விடைபெற்று சென்றுவிட்டார். முகம்  தெரியாதவர்களின் உதவி பனைமரச்சலையை பயமற்ற பயணமாக மாற்றியிருந்தது இறுதிவரைக்கும்.

நான் பயணித்து சென்று சேர்ந்த இடம் இருள் கவிந்து இருந்தது, இனிமேல் சாலைச் செல்லாது என்பதாக காணப்பட்டது. குழம்பிப்போய்விட்டேன். இந்த இரவு வேளையில் வழி கேட்பதற்கு யாரிடம் செல்ல முடியுமென யோசித்தேன். அமிர்த்தராஜிடம் வீராப்பக பேசி எனக்கு வழி தெரியும் என கூறிவிட்டு இரவு பத்துமணிக்கு மேல் வழி தவறி நிற்பது வெட்கமாக இருந்தாலும், வீடு போய்ச் சேரவேண்டுமே என்ற எண்ணமே முதன்மையாக இருந்தது. என்றாலும் பரவாயில்லை என மீண்டும் வந்தவழியில் திரும்பி யூகித்து ஒரு பாதையை  தேடி கண்டுபிடித்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தேன். காட்டுவழியில் செல்லும்போது, இந்த இடத்கையல்லாம் நான் பர்த்ததில்லையே என நினைத்துக்கொண்டேன். இறுதியாக ஒரு இடத்தில், புரோட்டா கடை திறந்திருந்தது. கொலைப் பசியிருந்தாலும் எங்கும் நிற்க முடியாது, முதலில் அறைக்குச் செலவேண்டும், பிற்பாடு தான் நான் எதையும் யோசிக்க முடியும். கன்னியாகுமரியில் உள்ள சி ஏஸ் ஐ கெஸ்ட் காவுசில் எனக்கு அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகவே கன்னியாகுமரி செல்லும் வழி எப்படி என கேட்டேன், அந்த கடைகாரர் சொன்ன திசை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திசைகள் முழுமையாக மாறிவிட்டது. ஆனாலும் அவர் சொன்ன பாதையைத் தொடர்ந்தேன். சுற்றி வளைத்து எப்படியோ கன்னியா குமரி வந்துவிட்டேன்.

நான் அங்கே சென்றபோது, எனக்கு அறை ஒழுங்காகியிருக்கவில்லை, ஆனால், நல்லவேளையாக குமார் அண்ணன் இருந்தார்கள். எனக்கு சிறு வயது முதலே அவர்களைத் தெரியும். அப்பா வருடத்துக்கு ஒருமுறை எங்களை எல்லாம் குடும்பத்தோடு கன்னியாகுமரி அழைத்துச்செல்லுவார்கள், அங்கே நாங்கள் பாடி, ஜெபித்து, தங்கி மீண்டு வருவோம். அப்பா முழுமையாக எங்களோடு பேசி சிரித்து தன்னை இலகுவாக்கி செலவிடும் நாள் அது. அப்போதில் இருந்தே குமார் அண்ணன் அங்கே உதவியாளராக இருந்தார். அவருக்கு என்னை நன்றாகத் தெரியும். ஆகவே, அவரிடம் அறை வேண்டு என நான் கேட்டபோது, போதகரை தொடர்புகொள்ள சொன்னார்கள். என்னிடம் செல்பெசியில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. நீங்களே அழையுங்கள் என்றேன். மணி 10.30 ஆஇ தாண்டி விட்டிருந்தது. போதகர் எனக்கஎன ஒரு சிறப்பான அறையை ஒதுக்கிக் குடுத்தார்கள். இரவு உணவு கிடைக்குமா என்றேன், உடனே போனால் கிடைக்கும் என்றார் குமார் அண்ணன். அரைக்குச் சென்று உடனே மொபைலைச் சார்ஜில் இட்டேன். கிழே வந்து இரவு உணவை முடித்தபோது மணி பதினொன்றைத் தாண்டிவிட்டிருந்தது.

திரும்பி வந்து அறையில் படுத்தபோது தூக்கம் வரவில்லை. பல்வேறு அழைப்புகள் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தையும் செய்துவிட்டே படுக்க முடியும். ஆகவே ஒன்றும் குறைவுபடாமல் பார்த்துப் பார்த்துச் செய்தேன். முடிவில் நடு நிசியில் ஜாஸ்மினுக்கு அழைத்து கன்னியாகுமரி வந்துவிட்டேன் எனக் கூறினேன். வீட்டிற்கு வந்திருக்கலாமே என்று சொன்னாள். இல்லை அது முறையாகாது, கன்னியாகுமரியிலிருந்து வருவதுதான் சரியாக இருக்கும், நாளை நீங்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் வரவேண்டும் எனக் கூறினேன். குழந்தைகளையும் கண்டிப்பாக அழைத்துக்கொண்டு வா என்று சொன்னேன். சரி என்று சொன்னாள். அவளிடம் எப்போது இறுதியாக பேசினேன் என நினைவு இல்லை. அவள் அழைக்கையில் நான் வண்டி ஓட்டாமல் இருந்தால் மட்டுமே அவளது அழைப்புகளை எடுத்து பேசியிருக்கிறேன். நான் பத்திரமாக கன்னியாகுமரி வந்து சேர்ந்ததற்காக அவள் இப்போது கடவுளுக்கு தனது பிரார்த்தனையில் நன்றி கூறிக்கொண்டிருப்பாள்.

முடிவுறா பயணம்

முடிவுறா பயணம்

எனது வண்டி எனக்கு ஞாபகம் வந்தது. எட்டு வருடங்கள் என்னோடு இருந்தது மட்டுமல்ல, எனது பனைமரச்சாலையின் முக்கிய துணைவனக என்னை சுமந்து வந்த அந்த வாகனம் உண்மையிலேயே முக்கியமானது. பழையவைகளை தூக்கி வீசும் காலத்தில், நான் அதனை நம்பி களமிறங்கியபோது என்னை கைவிடாமல் இம்மட்டும் என்னோடு இணைந்து பயணித்தது மட்டுமல்ல, எனது நம்பிக்கைக்கு உரியதாக காணப்பட்ட எம் எஸ் எல் 8537 மட்டும் என்னுடன் இல்லையென்று சொன்னால், அது சாத்தியமாகியிருக்குமா என தெரியவில்லை. குண்டுகள் குழிகள், வெம்மைகள் என மூவாயிரம் கிலோமீட்டர்கள் என்னோடு வந்த எனது ஆருயிர் தோழன், காட்சன் சாமுவேலின் மூத்த உறுப்பினர். ஐம்பது வருடங்களுக்குப் பின்னும், மிகவும் இளமையுடன் அது எனது பயணத்தை முன்னெடுத்தது பெரும் ஆச்சரியம். நாளை இன்னும் ஒரு நாள் என்னைக் கைவிடாது இருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

பையிலிருந்து பிதுங்கி  வெளித்தெரிந்த ஓலைகளைப் பர்த்தேன். ஆச்சரியமாக இருந்தது, பொருட்டென கருதப்படாமல், அனேகரால் புறந்தள்ளப்பட்ட இந்த ஓலைகள் என்னை என்ன மாயம் செய்து வசீகரித்திருக்கின்றன? ஓலைகள் இன்றி, ஒரு நாளும் என் வாழ்வில் செல்லாது என நான் நினைகுமளவு கடந்த ஐந்து வருடங்களாக ஓலைகளுடனேயே தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஈர்ப்பு, என்னை இன்றும் விடாது பற்றியிருப்பது ஆச்சரியமானது.

சிறிய ஓலைச் சுவடி புத்தகத்தை எனது முதல் ஆட்டோகிராப் புத்தகமாக்கியது துவங்கி, ஓலையில் செய்த புக் மார்க், வாழ்த்து அட்டைகள், திருமண அழைப்பிதழ், எனது விலாச அட்டை, மிகப்பெரிய உருவப்படங்கள் ஓலையில் செய்யும் அளவிற்கு அதில் ஒரு ஈர்ப்பு விசை இருக்கிறது. சமயம் சார்ந்து நான் உருவாக்கிய போதகர்களுக்கான கழுத்துப் பட்டை, பெண்கள் கூடுகைக்கான ஓலை பேட்ஜ் மற்றும் குருத்தோலை பவனிக்கான  கை பட்டைகள் என ஒவ்வொரு நாளும் ஓலை தனது பயன்களை எனக்கு புதிதாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. எனது கல்லூரியின் ஆய்வறிக்கை கூட ஓலை பாயைக்கொண்டே நான் அட்டையிட்டு சமர்ப்பிக்குமளவு, ஓலை என்னுடன் நெருங்கியிருக்கிறது.

ஜெயமோகன் அவர்களுடைய ஓலைசிலுவையைப் படித்தபின்னால், நாமும் ஏன் ஓலையில் சிலுவை செய்யக்கூடாது என நினைத்து எனது பயணங்களில் ஓலைகளை எடுத்துச் செல்லுவது வழக்கம். உடன் வரும் பயணிகளுக்கு ஓலைச் சிலுவையைக் கொடுத்தால் அவர்கள் மிகவும் மகிழ்ந்து அதை வாங்கிக்கொள்ளுவதைப் பார்த்திருக்கிறேன். ஓலைக்கும் புனிதத்திற்கு, ஆன்மீகத்திற்கும் அத்தனை பொருத்தம்.

ஓலைகளே எனது சிறகுகள். கட்டற்று நான் பறக்கும் வானத்திற்கு எளிய ஓலைகளே சிறகுகளாக நின்று என்னை மேலெழுப்புகின்றன. எனது வாசிப்பிற்கான சுவடிகளும் ஓலைகளே, அவைகளே எனது ஆன்மீகம், வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறை இவைகளை எடுத்துக்கூறுகின்றன. ஓலைகளே எனது நண்பன். எனது தனிமையையும், துயரையும் அவைகளை விட்டால் நான் வேறு எவருக்கும் சொல்ல இயலாது. என்னோடு வாழ்வில் மிக அதிக நேரம் செலவிட்டது ஓலைகள் தாம்.

சீக்கிரம் உறங்கினால் தான் காலையில் எழும்பமுடியும், கண்களை தூக்கம் தழுவுமுன்பதாக கடவுளுக்கு நன்றி கூறுவது எனது கடமை. ஜாஸ்மினைப்போல, நானும் எனது பங்கிற்கு அந்த இடத்திலிருந்து மன்றாட்டை ஏறெடுக்க ஆரம்பித்தேன். எப்படி என்னால் இவ்வளவு தூரம் பயணம் செய்ய முடிந்தது, ஒன்றுமே இல்லாமல் எனது பயணத்தை துவக்கி இன்று அனேகருக்கு ஒரு உந்துசக்தியாய் உயர்ந்து நிற்க அருட்கொடையை அளித்த என் அண்டவருக்கு நன்றி கூறினேன். எனது பயணம் முழுக்க எனக்கானவைகளையும், உதவி செய்பவர்களையும் எனக்கு ஆயத்தம் செய்த்தது கடவுளின் கருணைக்காக நன்றி கூறினேன். இவ்வுலகத்தில், அனேகர் தங்கள் வாழ்வை அற்பணித்து பணியற்றிக்கொண்டிருக்கும் வேளையில், பனை பணிக்காக கடவுள் என்னை தெரிந்து கொண்டதற்கும், எனது பயணத்தை சிறப்பாக நிறைவுறச் செய்த்ததற்கும் நன்றி கூறினேன். என்னால் தனித்து செய்ய இயலாதவைகளை திறம்படச் செய்யும்படியாக எனக்கு கடவுள் அவ்வப்போது அளித்த நல்ல உறவுகளுக்காக அவருக்கு நன்றி கூறினேன்.

கண்களில் தூக்கம் ஏறி சொக்குகையில்,  சாலைகள் பின்னோக்கி நகர்ந்து கோண்டிருந்தன, மக்கள் புன்னகையுடன் என்னைக் கடந்து போனார்கள் பனைமரங்கள் எனக்கு எதிர்கோண்டு வந்துகொண்டிருந்தன, குருத்தோலை கற்றையை நான் இறுக பற்றிக்கொள்ள, கடவுள் என்னை அணைத்து ஆசியளித்தார். அவரது மார்பே எனக்கு அடைக்கலம் என கண்ணயர்ந்தேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (86)”

 1. Logamadevi Annadurai Says:

  மனம் கனத்துக்கிடக்கிறது.பனைமரச்சலையின் பயண இறுதிக்கு வந்துவிட்டீர்கள் எனருதான் தோன்றுகிறது. புகைப்படங்களும் அந்த உணர்வுக்கு வலுசேர்ப்பது போலவே தனிமையை அறிவித்தவாறு இருக்கின்றன
  உதவிய நண்வர்களின் வரிசையில் ஏன் இன்னும் ஒருபடி மேலேயே போய் உங்கள் பைக்கை மூத்த உறுப்பினர் என்றுசொன்னதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. உங்கள் பனைமரச்சாலையின் வழியே நான் அறிந்துகொண்ட பாஸ்டருக்கு உயர்திணை அஃறிணை வேறுபாடெல்லாம் இல்லையே!!!
  எந்த பயணமாயினும் ஒருகட்டத்தில் ஏதேனும் ஒர் இடத்தில் அது நிறைவுரும் அல்லவா? எனினும் இது ஒரு மகத்தான இறையருள் துணைநினற பயணமாகையால் அழியா ஆவணமாகிவிட்டது உங்களின் பதிவுகள்
  குடும்பத்தை குழந்தைகளை தேக நலனை பொருளாதரா மேம்பாட்டை இப்படி எதையுமே கருத்தில் கொள்ளாமல் சென்ற பயணம்ல்லவா?

  ஓலையே உங்கள் சிறகுகள், சிலுவை, நண்பன், தெய்வம் ,காதலி, ஏன் ஓலைதான் நீங்கள், நீங்களே ஓலை. வேறு என்ன சொல்ல?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: