பனைமரச்சாலை (87)


பின்னணியில் இருந்தவர்கள்

காலை ஆறரை மணிக்கு எழுந்தபோது பரபரப்பாக இருந்தது. இந்தநாளையும் காணசெய்த ஆண்டவருக்கு நன்றி கூறி, இம்மட்டும் காத்தவர் இனிமேலும் காத்து வழிநடத்த வேண்டினேன். அனைத்தும் நேர்த்தியாக சித்தமாக இருக்கிறதை அறிந்து கடவுளுக்கு துதி பலிகளை ஏரெடுத்தேன். எனது தேவைகளை அறிந்து என்னை ஊக்குவித்த நண்பர்களை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர்கள் தங்களை வெளிப்படுத்த நினைக்கும் நண்பர்கள் அல்ல, ஆனால் அவர்களின்றி இப்போது நான் துணிந்து களத்தில் இறங்கியிருக்கமாட்டேன் என்பதால் சொல்லுகிறேன்.

பனைமரங்களைத் தேடி  பயணிப்பதைக் குறித்து பலமுறை நான் யோசித்திருக்கிறேன், சிறு பிரயாணங்கள் பலவும் பனை தேடுதலில் நான் செலவிட்டிருக்கிறேன் என்றாலும், 3000 கி மீட்டர் தொடர் பயணம் எனது கற்பனைக்கு அப்பாற்பட்டது. பொருட்செலவு என வருகையில், என்னால் தனித்து அதை எதிர்கொள்ள முடியாது என்பது தான் உண்மை.  மேலும், இப்பயணத்தில் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால், எனக்கு துணை நிற்கும் நண்பர்கள் வேண்டும். ஆகவே நண்பர்களின் உதவியை நாடினேன். அனேகர் உதவி செய்வார்கள் என்று தெரிந்தும் தேவைக்காக மூன்றுபேரை மட்டும் தெரிந்துகொண்டு எனது நிலையை எடுத்துச் சொல்லலாம் என  முடிவுசெய்தேன். குறைந்த செலவினத்துடன் நான் திட்டமிட்டிருக்கும் இந்த பயணத்திற்கு அனேகரை தொந்தரவு செய்வது ஏற்புடையதாக இராது. மேலும், எனது பணியை ஊன்றி கவனித்து அதனை தொடர்ந்து ஊக்குவித்தவர்களையே தெரிவு செய்தேன்.

பயணம் குறித்து நான் எண்ணியவுடனேயே எனது நினைவுக்கு வந்தவர் மும்பையில் எனக்கு அறிமுகமான குமார் வால்டர்ஸ் அவர்கள் தான். நான் போதகர் ஆவதற்கு முன்பு மும்பையிலுள்ள பாண்டுப் எனும் பகுதியில் வாழும் பாலியல் தொழிலாளிகளுக்காக உழைக்கும் லுத்தரன் தொண்டு நிறுவனமான ‘ஸ்னேக சாகர்” எனும் நிறுவனத்துடன் இணைந்து பணி செய்தேன். சுமார் முன்று மாத காலம் தொடர் உழைப்பால் நிறைந்த நாட்கள், மனநிறைவை அளித்த நாட்கள். தெருவோரக் குழந்தைகளை பேணிக்காப்பது எனும் எண்ணத்துடன் துவங்கப்பட்ட நிறுவனம், பாலியல் தொழிலாளர்களும் ஒருவகையில் சமூகத்தால் தெருவில் வெளியேற்றப்பட்டப் பிள்ளைகளே என உணர்ந்து அவர்களுக்காக பணியாற்றினார்கள். பாலியல் தொழிலாளிகள் வாழும் சோனாப்பூர் பகுதியில் நான் சென்றபோது 15 நாட்கள் கடும் ஒவ்வாமையினால் அலைக்களிக்கப்பட்டேன். ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் சூழ்நிலைக் கைதிகளாக அனேகம் பெண்கள் வாழும்போது அங்கிருந்து என்னால் எனது உடல்நிலையைக் காரணம் காட்டி விலக முடியவில்லை.

அப்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டி, ஒரு புது இடத்தை தேடி இறுதியாக பத்லாப்பூர் அருகில் ஒரு இடத்தை தெரிவு செய்தார்கள். மிக அதிக பொருட்செலவு செய்து ஒரு கட்டிடத்தை அங்கே நிற்மாணிப்பது எனவும், தெருவோரக் குழந்தைகளுக்கும், தங்கள் வாழ்வை மாற்ற எண்ணுகின்ற பாலியல் தொழிலாளர்களுக்கும், அது ஒரு பாதுகாக்கப்பட்ட இல்லமாக இருக்கும் எனவும் திட்டமிடப்பட்டது. முப்பத்து ஐந்து நாட்களுக்குள் அங்கு நான்கு கட்டிடங்கள் கட்டவேண்டும். எனது நிறுவனத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் அவர்கள், என்னிடம் அங்கிருந்து கவனித்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார்கள்.  இரவுபகலாக நான் அங்கிருந்து வேலைகளை கவனித்துக்கொண்டேன். பெரும்பாலும் வேலை தடைபடாது இயங்க நான் அனைத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத சிவில் மற்றும் எலக்ரிக்கல் பணிகளில் தடங்கல் வராது நான் செயல்பட்டதை கவனித்த குமார் வால்டர்ஸ்   எனக்கு நண்பரானார்.

மும்பையில்,  நான் நடத்திய முதல் ஓலை கண்காட்சியில் குமார் வால்டர்ஸ் (வருடம் 2011)

மும்பையில், நான் நடத்திய முதல் ஓலை கண்காட்சியில் குமார் வால்டர்ஸ் (வருடம் 2011)

குமார் அவர்கள் கர்நாடகாவைச்,  சேர்ந்தவர்கள்,  அங்கு எழுப்பட்ட கட்டிடங்களுக்கு இரும்பு கூரைகளை செய்ய வந்திருந்தார்கள். மிகப்பெரிய இரும்பு தூண்களை இணைத்து வெளிநாடுகளுக்கும், பெருநகரங்களுக்கும் அனுப்பும் பணியை செய்து கொண்டிருந்தார்கள்.  பனைஓலையில் செய்த எனது படங்களை பார்த்தவர்கள் இன்னும் என்னுடன் நெருங்கிப்பழகினார். என்ன தேவையென்றாலும்,  என்னைக் கேட்கவேண்டும் என அன்பு கட்டளை இட்டார். அதன் பின்பு, மும்பையில், எனக்கு எந்த பொருளாதார நெருக்கடி எழுந்தாலும், அது எனக்கு ஒரு பொருட்டல்ல என என் உடனிருந்து நிரூபித்தவர் அவர். ஒருவேளை அவர்கள் மட்டும் இல்லையென்று சொன்னால், இந்த பயணத்தை நான் யோசித்திருக்கவே மாட்டேன்.

ராஜேந்திர ராஜன்

ராஜேந்திர ராஜன்

ராஜேந்திர ராஜன் மும்பையில் நான் முதலில் பணியாற்றிய திருச்சபையின் அங்கத்தினர். திருச்சபையில்  காண்பதற்கு அரிதான ஒரு நேர்மை அவருக்குள் உண்டு. என் மீது தனித்த அன்பு வைத்திருப்பவர். பனை சார்ந்த எனது தேடுதலை புரிந்துகொண்ட, திருச்சபையின் விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களில் ஒருவர். எனது தனித்துவமான பயணத்திற்கு அவர் துணை நிற்பதாகவும்,  என்ன தேவையோ அதை எனது கணக்கில் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.

ரமேஷ் எனது சொந்த ஊரான நாகர்கோவிலை அடுத்த பெருவிளை கிராமத்தைச் சார்ந்தவன். ஒன்பதாம் வகுப்பு முதல் நாங்கள் உற்ற தோழர்கள். பள்ளிக்கூடம் செல்லும்போதும் ஆலயத்திற்குச் செல்லும்போதும், கிரிக்கெட் விளையாடுகையிலும், ஆற்றில் நீந்தி குளிக்கையிலும்  எங்கள் நட்பு நெருக்கமடைந்தது. பள்ளிகூட நாட்களுக்குப் பின்பு எங்களுக்குள் பெரும்பாலும் தொடர்பே இல்லை. ஆனாலும், எங்களுள் அதே சிறுவர்கள் பட்டாம் பூச்சியாக சிறகடித்துக்கொண்டிருக்கிறார்கள். ரமேஷ் ஜெர்மனி போவதற்கு காரணம் எனது மன்றாட்டு தான் என்பது எனக்கும் அவனுக்கும் தெரிந்த உண்மை. எங்கள் கண்கள் பேசியபின்பு தான் வார்த்தைகளே வெளிவரும் எனும் அளவிற்கு எங்கள் உள்ளம் ஒன்றிணைந்திருந்தது.

ரமேஷ்

ரமேஷ்

காணாமல் போன அவனை முகநூலில் தான் கண்டெடுத்தேன். பள்ளிக்கூடத்தில் படிக்கையில் ரமேஷ் மிக அழகாக ஓவியம் வரைவான், தற்போதைய பணி சுமைகளினால் அவனால் ஓவியத்திற்கு நேரம் கொடுக்க முடியாததால், அவன் அந்த திறமையை முன்னெடுக்கவில்லை. ஆனால் நான் பனை ஓலைகளில் செய்யும் படங்களைக் கவனித்து எனக்கு கருத்து தெரிவிப்பான். நேரமின்மையால் பொதுவாக பேசிக்கொள்ளுவது இல்லை. ஒருநாள் முகநூலில் என்னோடு பேசிக்கொண்டிருக்கையில், நான் எனது திட்டத்தைக் கூறினேன். தலைகால் புரியாத கொண்டாட்ட மனநிலைக்குப் போய்விட்டான். நானே நினைத்தாலும் திட்டத்தை கைவிட முடியாது எனும் நிலைக்கு என்னை கொண்டு வந்து விட்டுவிட்டான்.

இவர்களுடன் ஜேம்ஸ் குழுமங்களின் தலைவரான டாக்டர். ஜேம்ஸ் பிரேம் அவர்களையும் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். எனது பெரியம்மா மகளான டாக்டர் செனிகா அவர்களை திருமணம் செய்தபோது பிரேம் அத்தான் எங்களுக்கு ஒரு கதாநாயகனாகவே தெரிந்தார். அவரைக் குறித்து கேள்விப்பட்ட ஒவ்வொரு விஷயங்களும் ஆச்சரியமூட்டுபவை. நான் அறிந்த வகையில் பியானோ, அக்கார்டின் மற்றும் கிட்டார் ஒருசேர வாசிக்கத் தெரிந்த மனிதர் அவர்தான். அவர் வருகின்ற இடங்களில் சிரிப்பைத் தூவிச்செல்லுவது அவரது வழக்கம். ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய அவர், திருமணத்திற்குப் பின்பு மருத்துவ கல்லூரியில் பயின்று மருத்துவரானார். சுனாமி ஏற்பட்ட அன்று மாலையில் நான் குளச்சலில் இருந்தேன், ஜேம்ஸ் மருத்துவமனை பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்ட விதத்தை நேரில் கண்டேன். ஒரு வகையான போர்கால நடவடிக்கை அது. மருத்துவமனை வளாகம் முழுக்க மக்கள் நெருக்கியடித்து கிடந்தனர். அவர்களுக்கான உணவும் அங்கே ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.

அப்பாவின் இறுதி நாட்களில் ஜேம்ஸ் மருத்துவமனையிலேயே வைத்து கவனித்துகொண்டது, எங்களால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாத உதவி.ஓலையில் நான் செய்யும் படஙளை அவர் மிகவும் விரும்பியதால் அவர்கள் பிறந்த நாளுக்கு நான் ஒரு படத்தை பரிசளித்தேன். மேலும் அவர்கள் திருமணத்திர்கு முன் வைத்திருந்த பைக் புல்லட் தான். அவர்களுக்குக் பைக் ரேஸ் செல்லுவதில் மிகவும் விருப்பம் என்பதும் நான் அறிந்தேன். ஆகவே  எனது பயணம் துவங்கும் முன்பே அவர்களிடம் பேசினேன்.

என்ன என்ன உதவி வேண்டும் என கேட்டார்கள். நான் சொன்னேன், நான் அங்கே வரும்போது என்னை வரவேற்க நீங்கள் வரவேண்டும் என்று சொன்னேன். வேறு எந்துவும் வேண்டுமா என்று கேட்டார்கள், பேனர் மற்றும் மாலைகள் ஏதும் எனக்கு வேண்டாம் நீங்கள் மட்டும் வந்தால் போதும் என வேண்டுகோள் வைத்தேன். ஏன் அப்படி சொன்னேன் என தெரியவில்லை, ஆனால் எனது வாழ்வின் முக்கிய கணத்தில் அவர்கள் உடனிருக்கவேண்டும் என நான் நினைத்து அப்படிச் சொன்னேன்.

எனது பயணம் முழுக்க என்னை அவர்கள் தொடர்ந்து வந்தார்கள். நான் வரும் நாளை எதிர்நோக்கி இருப்பதாக கூறினார்கள். நான் வேம்பார் வந்தபோது, தனது ஜேம்ஸ் கல்லூரியின்  தொடர்பு அதிகாரியின் எண்ணைக்கொடுத்து எனது தேவைகளுக்கேற்றவிதமாக நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தச் சொன்னார்கள். சொக்கன் குடியிருப்பில் இருக்கும்போது நாளைக் காலை எனக்கு முன்னால் செல்ல ஒரு கார் வேண்டும் என்றேன்., அது கடைசி நேர மாறுதல், ஆனாலும் சளைக்காமல் அதையும் ஏற்பாடு செய்தார்கள். ஒரு தொடர்பு எண்ணைக்கொடுத்து தொடர்புகொள்ளச் சொன்னார்கள். நான் தொடர்புகொள்ளும் முன்பே அந்த நபர் என்னை அழைத்து எனக்கு என்ன வேண்டும் என கேட்டார்கள். காலை எட்டுமணிக்கு என்னை அழைத்துச் செல்ல வரவேண்டும் எனக் கேட்டேன். சரி வருகிறேன் என்றார்கள்.

டாக்டர். ஜேம்ஸ் பிரேம், பனை ஓலையில் நான் செய்த படம்

டாக்டர். ஜேம்ஸ் பிரேம், பனை ஓலையில் நான் செய்த படம்

நான் கன்னியாகுமரி வந்தபிறகுதான்  அவர்கள் என்னிடம், தற்போது தவிர்க்க முடியாத வேலையாக  சென்னையில் இருப்பதால் தன்னால் வர இயலாது என்று கூறினார்கள். ஆனால் எனக்காக அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் நாளை தைரியமாக நீங்கள் போகலாம் என்றும் குறிப்பிட்டார்கள். எனக்கு அவர் சொன்னதை கிரகித்துக்கொள்ளும் மனநிலை இல்லை. அத்தான் வரவில்லை என்று சொன்னால், எப்படி? மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இப்படி ஆகும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. ஆனால் எனக்குத் தெரியும், அவர்கள் எனது பயணத்தை மிக தீவிரமான ஒரு செயல்பாடாக கருதினார்கள். ஆகவே நாளை எனக்கு ஏதேனும் இன்ப அதிர்ச்சியை அவர் அளிக்கலாம். என்று எண்ணிக்கொண்டேன்.

இந்த வரிசை ஆச்சரியமளிக்கும் பன்மைத்தன்மை கொண்டது, சொந்த ஊர், உறவினர், திருச்சபை அங்கத்தினர் மற்றும் ஒரே தேசத்தவர் என பல்வேறு பின்னணியில் இவர்கள் என்னோடு கை கோர்த்தனர். அதுவே இந்த பயணத்தின் வெற்றியாக நான் கருதுகிறேன். அமைப்புகள் நிறைந்த உலகில், தனிமனிதனாக நிற்கும் ஒருவனை ஊக்கப்படுத்த பல்வேறு பின்னணியங்களிலிருந்து முன்வருவது குறிப்பிடத்தகுந்த செயல்பாடு என்றே கருதுகிறேன்.

காலை வேளையில் அனைத்து கடமைகளையும் முடித்து, நான் சாம் ஜெபசிங், அமிர்தராஜ், மற்றும் ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி அனுப்பும் நண்பர்களின் வரவுக்காக காத்திருந்தேன். மணி 8 ஆகிவிட்டது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (87)”

  1. Logamadevi Annadurai Says:

    பாஸடர் அவர்கள் எதிர்பார்த்து எதுவும் உதவவில்லை எனினும் இது உங்களின் சுபாவம் மற்றும் இந்தஃ மகத்தான பணிக்கு அவர்களும் என்ன பங்காற்றினார்கள் என்பதை வாசகர்களும் தெரிந்து கொள்ளவேண்டுமில்லையா? நன்றியை இப்படி தெரிவிப்பது மிகவும் நெகிழ்சியான ஒன்றல்லவா? எழுதில் அதுவும் இதுபோன்ற வரலாற்றுசிறப்பு மிக்க ஒரு ஆவணத்தில் பதிவுசெய்யவேண்டியவையே உங்களின் இந்த நண்பர்களின் பணி மற்றும் உதவிகள் அனைத்தும்
    பாலியல் தொழிளாளிகளுக்கான உங்களின் பணி பனைப்பணியைபோலவே மிக சிறப்பானது. காயம்பட்டவர்களுக்காகவும், தொலைந்துபோனவர்களுக்குமாகவே உங்களை நியமித்திருக்கிறார் இறைவன்
    கதவைத் தட்டியது உங்களின் அத்தானா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: